???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி! 0 சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம்! 0 ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை! 0 ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி 0 ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி! 0 குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு 0 வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 0 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 0 சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் 0 மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? கார்த்தி சிதம்பரம் கேள்வி 0 ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் 0 ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிறப்புக் கட்டுரை: ரமலான் : வயிறும், மனதும் நிறைந்த நாட்கள் - மணா

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   15 , 2018  06:19:27 IST


Andhimazhai Image

 

“ சார்.. நில்லுங்க.. இங்கே சாப்பிட நல்ல ஹோட்டல் எங்கே இருக்கு?’’- ஹிந்தியில் இதைக் கேட்ட மனிதருக்கு நடுத்தர வயது. வட இந்திய உடை. பார்ப்பதற்கு அகலம் குறைந்த நடிகர் நானா படேகரைப் போலிருந்தார். அவரைச் சுற்றி மூட்டை, முடிச்சுகளுடன் அவருடைய குடும்பம்.

 

தூரத்தில் ராமேஸ்வரம் கோபுரம் தெரிந்தது. அதிகாலையில் மணிச்சத்தம் எங்கோ அதிர்ந்தது. மெல்லியக் கடலோரக் குளிர்க்காற்று வந்து எங்களைத் தொட்டுவிட்டுப் போனது.

 

நானும், நண்பரும் அப்போது தான் பேருந்திலிருந்து இறங்கியிருந்தோம்.

நண்பருக்கு ஹிந்தி தெரியும் என்பதால் அவருக்குப் பதில் சொன்னார்.

 

‘’ நல்ல ஹோட்டல் இருக்கு.. சைவ ஹோட்டல் தானே?’’

 

கேள்வி கேட்டவரிடம் பதற்றம் தெரிந்தது.

 

‘’ சைவம் தான்.. ஆனா ஒரு கண்டிஷன். நாங்க சாப்பிடுற ஹோட்டலில் முஸ்லிம்கள் யாரும் வேலை பார்க்கக் கூடாது’’

-சட்டென்று பயணக்களைப்பை மீறிய கறாரான குரலில் இதைச் சொன்னபோது அந்தவிதமான பதிலை அதிகாலை நேரத்தில் நாங்கள் எதிர்பார்க்க வில்லை.

 

நண்பர் திருப்பிக் கேட்டார்.

‘’ ஒரு ஹோட்டலில் உணவு நல்லாயிருக்குமா, இல்லையான்னு நாங்க சொல்ல முடியும்? அங்கே முஸ்லிம்கள் வேலை பார்க்குறாங்களா இல்லான்னு எல்லாம் நாங்க சொல்லமுடியாது. எங்களுக்கும் அதெல்லாம் தெரியாதுங்க..’’-மரியாதையுடன் பதில் சொன்னார் நண்பர்.

 

கேள்வி கேட்டவரின் முகம் மாறியது.

‘’ இல்லை.. ஒரு ஹோட்டல் சமையல் ரூமில் ஒரு முஸ்லிம் வேலை பார்த்தாக் கூட நாங்க அங்கே சாப்பிட மாட்டோம்.. தெரிஞ்சுக்குங்க…’’

 

  • சொன்னதும் என்னுடன் வந்திருந்த நண்பர் நிதானமாக அவரிடம் மென்மையாகச் சொன்னார்.

‘’ இவ்வளவு நேரம் நீங்க பேசிக்கிட்டிருக்கீங்களே.. நானும் முஸ்லிம் தான்..’’

  • சொன்னதும் கேள்வி கேட்டவருடைய முகம் பல கோணத்தில் மாறியது.

 

மீனவர் பிரச்சினையைப் பற்றிய ‘துக்ளக்’ இதழுக்கான ‘கவரேஜூக்காக’’ நாங்கள் ராமேஸ்வரம் போயிருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது.

உடனிருந்த அந்த நண்பர் ஜஹீர்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பழகி வரும் நண்பர். அவருடைய அப்பா பாஷா மதுரை நீதிமன்றத்தில் பணியாற்றியவர். பெரிய குடும்பம். எல்லோரும் கூட்டுக் குடும்பமாக மிகவும் நெரிசலாக இருக்கும் டவுன்ஹால் ரோட்டிலுள்ள வீட்டில் வசித்து வந்தார்கள்.

 

அவரவர் நம்பும் நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுத்தால், யாரும் நெருங்கிப் பழகி நட்புக்கு உயிர் கொடுக்க முடியும் என்பதற்கான சான்றைப் போலிருந்தது அவர்களுடைய குடும்பம்.

 

வீட்டுக்குப் போனால்- நிறையக் குழந்தைகளுடன் வீடே ஜே ஜே என்றிருக்கும். போனதும் நன்றாக உபசரிப்பார்கள். நெருக்கமாகப் பேசுவார்கள்.

 

தொழுகையில் அவ்வளவு அக்கறை காட்டுவார்கள். வீட்டில் உருதுமொழியிலும், தமிழிலும் பேசுவார்கள். வழக்கறிஞர்களும், அதிகாரிகளுமாய் இருந்த வீட்டில் வியாபாரம் செய்ய வந்த நண்பர் ஜஹீர்.

 

வீட்டுக்கு அருகிலேயே கடை. தண்ணீரை உறிஞ்சும் மோட்டார்கள் விற்பனையில் இருந்தாலும், காமிரா வைத்திருந்தார் ஜஹீர். புகைப்படங்கள் எடுப்பதில் அவ்வளவு அடர்ந்த விருப்பம்.

 

எண்பதுகளில் இருந்தே நான் பத்திரிகைகளில் பணியாற்றத் துவங்கிவிட்டபோது பல கட்டுரைகளுக்காகத் தமிழகம் முழுக்க அலைந்தபோது காமிராவுடன் உடன் வந்திருக்கிறார் ஜஹீர்.

 

அரசியல் பிரச்சாரத்தின்போது ஒரு நடிகர் எங்களுக்கு முன்னால் சட்டென்று உடையை மாற்றி பிறந்த நாளை நினைவுபடுத்தி அதிர்ச்சி கொடுத்தபோது, அதே அதிர்ச்சியோடு என்னைச் சின்னதாக ஒரு கிள்ளு கிள்ளிவிட்டுச் சாட்சியாக அமர்ந்திருந்தவர் ஜஹீர்.

 

எப்படியெப்படியோ பயணித்திருக்கிறோம். பல மாநாடுகளுக்குப் போயிருக்கிறோம். ஒரு மாநாட்டின் போது நடந்த கலவரத்தைப் புகைப்படம் எடுத்தபோது தொண்டர்கள் திரண்டு வந்து ஜஹீரைத் தாக்கினார்கள்.அவர் வைத்திருந்த காமிராவைப் பிடுங்கி உடைத்தார்கள்.

 

என்னதான் நடந்தாலும் சர்வ சாதாரணமாக அதை எடுத்துக் கொண்டு ‘’ அடுத்து எங்கே போகலாம்ப்பா’’ என்று சகஜமாகக் கேட்பார் ஜஹீர்.

 

கோவையில் மதக்கலவரம் மூண்டிருந்த நேரம். தகிப்பில் இருந்தது கோவை. உஷ்ணமாக இருந்தன பல  பகுதிகள். சிலர் இறந்திருந்தார்கள். பலர் காயம்பட்டிருந்தார்கள். காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது.

அங்கங்கே தடுப்புக் காவல்கள்.

 

நானும், ஜஹீரும் போயிருந்தது ‘துக்ளக்’ பத்திரிகைக்காக.

முஸ்லிம்கள் இருந்த பகுதிக்கு முதலில் போனோம். கெடுபிடிகள் இருந்தாலும், அங்கிருந்த முஸ்லிம்களுடன் உருதுவில் பேசி பாதிக்கப்பட்ட முஸலிம்களைப் பேசும் மனநிலைக்குக் கொண்டு வந்தார். பதற்றம் பரவிய அவர்களுடைய முகங்களைப் புகைப்படங்கள் எடுத்தார்.

நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார்கள் முஸ்லிம்கள்.

 

இந்துக்கள் அதிகம் இருக்கிற பகுதிக்குப் போனபோது கொந்தளிப்பு. காவித்துண்டு போட்ட இளைஞர்களின் பேச்சில் வெப்பம். போனதும் சந்தேகித்தார்கள்.

 

பத்திரிகையைச் சொன்னதும் பேசினார்கள். எங்கள் பெயரைக் கேட்டார்கள். அருகில் இருந்த ஜஹீரை விசாரித்தபோது அவருடைய பெயரைச் சொன்னார்.

 

‘’ முஸ்லிம்.. இவரை அழைச்சுட்டு வந்திருக்கீங்களே…’’ கொதிப்பானார் ஒரு இந்து இளைஞர்.

 

‘’ இவர் நண்பர். புகைப்படம் எடுக்க வந்திருக்கிறார். இப்போ தான் முஸ்லிம் ஏரியாவுக்குப் போய்ட்டு வந்தோம். அப்போ அங்கே இருந்தவங்க இந்துவான என்னை ஏன் கூட்டிக்கிட்டு வந்தீங்கன்னு இவர் கிட்டே கேட்கலை. நீங்க இப்படிக் கேக்கிறீங்களே!’’- நான் சொல்லிச் சாந்திப்படுத்தியும் தணியாதபடி அவர்கள் இன்னொரு கேள்வி கேட்டார்கள்.

 

‘’ துக்ளக் பத்திரிகைக்காக இவர் எப்படி வரலாம்? சொல்லுங்க’’

என்று கேட்டபோது சற்று நிதானித்து அவர்களிடம் சொன்னேன்.

 

‘’ ஏன்? துக்ளக்’ங்கிற பெயரே ஒரு முஸ்லிமோட பெயர் தானே! அவர் பெயரில் பத்திரிகை வரலாம். அதுக்காக போட்டோ எடுக்கக் கூட முஸ்லிம் நண்பர் வரக்கூடாது என்றால் சொல்லுங்கள். நாங்கள் இப்போதே கிளம்பிவிடுகிறோம்’’ – என்று சொன்னதும் தணிந்து பிறகு பேசினார்கள். புகைப்படங்கள் எடுத்துத் திரும்பினோம்.

 

பல சாதிக்கலவரங்கள். கிராமத்துப் பிரச்சினைகள். அரசியல் பிரச்சாரப் பயணங்கள். எல்லாவற்றிலும் என்னுடன் மட்டுமல்ல, ஜூனியர் விகடன் ‘சௌபா’, மாரிமைந்தன் என்ற பெயரில் தராசில் எழுதிய பாஷா, பி.பி.ஸி.க்கு முன்பு ‘’அசைட்’ பத்திரிகையில் வேலைபார்த்த எல்.ஆர்.ஜெகதீசன், நண்பர் ஞாநி- இப்படிப் பலருடன் சென்று புகைப்படங்களை எடுத்துக் கொடுத்திருக்கிற ஜஹீர் புரொபெஷனல் புகைப்படக் காரர் அல்ல. நட்பினாலும், அன்பினாலும் அனைவருக்கும் உதவிக் கொண்டிருப்பவர் இன்றுவரை.

 

மூன்று மாதங்களுக்கு முன்பு ‘குமுதம்’’ இதழுக்காக மதுரையை அடுத்த மேலூருக்கு அருகில் உள்ள முன்னாள் அமைச்சர் கக்கன் வீட்டுக்குப் போனபோதும், சிறுகூடல்பட்டி கண்ணதாசன் வீட்டுக்குப் போனபோதும் கூடவே வந்து புகைப்படங்கள் எடுத்தவர் இதே ஜஹீர் தான்.

 

‘’ வாய்ய்யா’’ என்று மதுரைக்கே உரித்தான நெருக்கமான மொழியில் பேசிப்பழகும் ஜஹீரின் வீட்டுக்கு சும்மா போனாலே உபசரிப்பு களை கட்டும். அதிலும் ரம்ஜான்,பக்ரீத் என்றால் சொல்லவே வேண்டாம். பிரியாணியை அள்ளிப் பரிமாறி அதகளம் பண்ணிவிடுவார்கள்.

வயிறு மட்டுமல்ல, பிரியத்தால் மனமும் நிறைந்த நாட்கள் அவை.

 

‘’வாங்க மச்சான்.. மாப்ளே’’ என்று முஸ்லிம்களும், இந்துக்களும் ஒற்றுமை பாராட்டுவதும், உறவு சொல்லிக் கொள்வதும், பழகுவதும் தமிழகத்தில் வழிவழியாய் நீடிக்கிற தொடர்புகள். மதத்தை மீறிய உறவுகள்.

 

இந்த அந்நியோன்யமான உறவுகளின் மீது எந்த அடிப்படைவாதிகளும் எறிகிற கற்களும் சேதத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்றென்றும்.

 

அந்தவிதத்தில் மனசில் பசுமையான இலையைப் போல படர்ந்திருக்கிற ஜஹீருக்கு ரம்ஜான் வாழ்த்தைப் பரிமாறும் போது நிறைந்து போகிறது நெஞ்சம். அவரை நினைக்கிற போது உள்ளங்கையில் ஒட்டியிருந்து ஜம்மென்று மணக்கிறது பிரியாணியின் நறுமணம்.

 

இதே மாதிரி உங்கள் ஒருவருக்கும் உங்கள் மனதை நிறைத்த ஒரு முஸ்லிம் நண்பர் நினைவுக்கு வரலாம்.

 

 அன்பான ரம்ஜான் வாழ்த்துக்கள் !

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...