ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உணர்வை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புரிந்து கொள்ள வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஏழு பேர் விடுதலை தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘7 தமிழர்கள் விடுதலை குறித்த பரிந்துரை மீது 522 நாட்களைக் கடந்தும் ஆளுனர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு எந்த விதமான நியாயமும் இல்லை. இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் தாமதிப்பதன் மூலம் ஆளுனர் எதையும் சாதிக்க முடியாது. கடந்த காலங்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பலரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதம் செய்ததால், அவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. தமிழக ஆளுனரின் காலவரையற்ற தாமதமும் அத்தகையதொரு சூழலுக்கு தான் அழைத்துச் செல்லும்.
எனவே, ஆளுனர் தேவையற்ற தாமதம் செய்யாமல் அரசியலமைப்புச் சட்டப்படியான அவரது கடமையை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யும்படி ஆளுனருக்கு தமிழக அரசு நினைவூட்ட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.