???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான் 0 இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஐ தாண்டியது! 0 சென்னை பீனிக்ஸ் மால் சென்றவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல் 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

படித்த சுயமரியாதையுள்ள ஒரு இளைஞரை ( அவர் பெண்ணாகக்கூட இருக்கலாம்) முதல்வர் பதவியில் அமர்த்துவேன்!- ரஜினிகாந்த்

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   12 , 2020  02:56:49 IST


Andhimazhai Image

என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கும், எனது ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது பணிவான வணக்கம். கடந்த வாரம் மார் 5 சென்னையில் ரஜினிமக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களைச் சந்தித்து நான் நடத்திய ஆலோசனை தொடர்பாக, பத்திரிக்கைகளிலும் டெலிவிஷன் சேனல்களிலும் யூகத்தின் அடிப்படையில் பல செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றுள் பல விஷயங்கள் அடிப்படையற்றவை. இவற்றின் மீது டெலிவிஷன் சேனல்கள் விவாதங்களையும் நடத்தியுள்ளன. எனவே இந்த  ஆலோசனைக் கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? அரசியல் கட்சி துவங்கும் எனது நோக்கம் என்ன? இவை பற்றி எல்லாம் விளக்கமாக நானே தெளிவு படுத்திவிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.

 

 

2017 டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நான் அரசியலுக்கு வருவேன் என்று முதன் முதலாகக் கூறியபோது ‘ இங்கு சிஸ்டம் ( அமைப்பு) சரியில்லை முதலில் அதைச் சரி செய்ய வேண்டும்; என்று சொன்னேன். ஒரு நல்ல ஆட்சியைக் கொடுக்க வேண்டுமென்றால், வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் போதாது, இங்கு அரசியல் நடத்தப்படும் முறையிலும் மாற்றம் வர வேண்டும். அப்பொழுதான் ஒரு நேர்மையான, ஊழலற்ற, ஜாதி, மத சார்பற்ற ஆட்சியைத் தர முடியும். அரசியல் மாற்றம் இல்லாத ஆட்சி மாற்றம் என்பது மீன் குழம்பு  வைத்த பாத்திரத்தை கழுவாமல் அதிலேயே சர்க்கரை பொங்கல் செய்வது போன்றது.  ஆக இந்த அரசியல் மாற்றத்துக்காக நான் சில திட்டங்களை வைத்திருக்கின்றேன்.

 

 

அதில் முக்கியமான மூன்று திட்டங்களில் ஒன்று, கட்சிப் பதவி தொடர்பானது, பெரிய அரசியல் கட்சிகளில் மாநில நிர்வாகிகளில் துவங்கி, ஊராட்சிகள் வரை கிட்டதட்ட ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கட்சிப் பதவிகள் இருக்கின்றன. இந்த ஐம்பதாயிரம் பதவியிலிருப்போரின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என்று ஒரு பதவிக்கு சராசரியாக ஐம்பது பேர் என்று எடுத்துக்கொண்டாலும். அவர்களின் எண்ணிக்கை இருபத்தைந்து லட்சமாக இருக்கும். இவர்கள் அனைவரையும் திருப்தி படுத்த வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சியினருக்கு ஏற்படுவதால், பெரியளவில் ஊழல் நடைபெற வாய்ப்புகள் உருவாகின்றன. கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற்று தர கட்சிக்கும் பெரிய அளவில் உதவுவார்களே தவிர, தேர்தலுக்கு பிறகு இவர்களால் அரசுக்கும் மக்களுக்கும் தொந்தரவுதான் அதிகம். ஆகவே தேர்தல் முடிந்தவுடன் கட்சிக்குத் தேவையற்ற மற்ற பதவிகளை நீக்க வேண்டும். இதுதான் என்னுடைய முதல் திட்டம்.

 

பொதுவாகவே இந்தியாவில் சட்ட மன்றங்களிலும்,  பாராளுமன்றத்திலும் ஐம்பது ஐம்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பெரும்பான்மை உறுப்பினர்களாக இருகின்றனர். அந்த வயதுக்கு கீழே உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு இளைஞன் அரசியலில் பிரகாசிக்க வேண்டுமென்றால், அவர் ஒரு எம்பி, மகனாகவோ, எம் எல் ஏ மகனாகவோ, பணக்காரனாகவோ, செல்வாக்குள்ளவராகவோ இருக்க வேண்டும் என்கிற நிலை மாற வேண்டும். நல்லவர்கள், படித்தவர்கள், இளைஞர்கள் அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கி விடாமல், அரசியலில்  ஈடுபட முன்வர  வேண்டும். குறிப்பாக இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கபட வேண்டும். எனது கட்சியில் ஐம்பது வயதுக்கு  கீழே உள்ளவர்கள், ஓரளவு படித்தவர்கள், நேர்மையான தொழில் செய்பவர்கள் , அவர்கள் வாழும் பகுதியில் கண்ணியமானவர் எனப் பெயரெடுத்தவர்களைத் தேர்வு செய்து, 60 லிருந்து 65 சதவீதம் அவர்களுக்கு தேர்தலில் பேட்டியிட வாய்ப்பளித்து மீதியுள்ள 35-40 சதவீதத்தில் வேறு கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காத நல்லவர்கள். ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ. ஏ. எஸ், ஐ. பி. எஸ் இவர்கள் விருப்பப்பட்டு நமது இயக்கத்தில் சேர விரும்பினால் அவர்களுக்கு வாய்ப்பளித்து, இவர்கள் அனைவரையும் சட்ட மன்றத்திற்கு அனுப்பி அதிகார சூத்திரத்தை கையில் எடுத்துக் கொள்ளும் படி செய்ய வேண்டும். அதற்கு நான் பாலமாக இருக்க வேண்டும்.  இந்த நோக்கத்தை அடைவதற்கு கடந்த 45 வருடங்களாக நான் திரையுலகில் ஈட்டிய புகழ், தமிழ் மக்கள் என் மீது செலுத்திவரும் பேரன்பு, அவர்களுக்கு என் மேல் இருக்கும் நம்பிக்கை அனைத்தும் உதவுமென நம்புகிறேன். இது எனது இரண்டாவது திட்டம்.

 

என்னுடைய மூன்றாவது திட்டம் கட்சித் தலைமையையும் ஆட்சித் தலைமையையும் தனித் தனியாக பிரிப்பது. அதாவது கட்சியை நடத்தும் தலைவர் வேறு, ஆட்சியை நடத்தும் தலைவர் வேறு. இந்த இரண்டையும் ஒன்றாகவே இணைத்துப் பார்த்து பழகிவிட்ட தமிழக அரசியலில் ஒரு மாற்று அரசியலை  கொண்டுவர வேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன். கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒரே நபரின் தலைமை எனும் பட்சத்தில், தேர்தல் ஜெயித்து ஆட்சி அதிகாரத்திற்கு வருபவரின் ஐந்து வருட ஆட்சியில் என்ன தப்பு நடந்தாலும், மக்களோ, கட்சி பிரமுர்களோ ஆட்சியாளரைத் தட்டி கேட்க முடியாது. அவரை பதவியிலிருந்து கீழே இறக்கவும் முடியாது. இதையும் மீறி கட்சியில் இருப்பவர்க்ள் தட்டிக் கேட்டல் அவர்களை பதவியிலிருந்து இறக்கி விடுவார்கள். அல்லது தூரமாக தள்ளி வைத்து விடுவார்கள். இந்நிலை மாற கட்சித் தலைமை மிகவும் வலிமையாக இருந்தால்தான் ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்யும்போது தட்டிக் கேட்க முடியும். தப்பு செய்தவர்களைத் தூக்கி எறியவும் முடியும். மேலும் மக்களுக்கு ஆட்சி கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் சரிவர  செயல்படுத்தும் படி பார்த்துக்கொள்ளும், கட்சி சார்ந்த விழாக்கள், கல்யாணம், காதணி போன்ற விழாக்களிலும் ஆட்சியாளர்கள் கலந்து கொள்ள வேண்டியது இல்லை.

 

ஆட்சி நிர்வாகத்தில் அவர்களின் முழுக்கவனமும் இருப்பதற்கு இது உதவும். ஆட்சி சிறப்பாக நடைபெற மக்கள் வளர்ச்சிப் பணியில் அனுபவம் வாய்ந்த பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுனர்களை தேர்ந்தெடுத்து ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்கி அவர்கள் பரிந்துரைக்கும் ஆலோசனைகளை அரசின் மூலம் செயல்படுத்தப்படுவதை கட்சி தலைமை உறுதி செய்யும். இதுவே எனது மூன்றாவது திட்டம்.

 

முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை. முதல்வராக என்னை நான் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. தமிழகத்தில்  உள்ள அனைவருக்கும் இதுபற்றி 1996  லேயே தெரியும். ஆக நான் வலிமையான  கட்சித் தலைமை  பொறுப்பை வகிப்பேன். எனது கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும்  நேர்மையும் , திறமையும் ஒருங்கே அமையப் பெற்ற தன்னம்பிக்கையுள்ள படித்த சுயமரியாதையுள்ள ஒரு இளைஞரை ( அவர் பெண்ணாகக்கூட இருக்கலாம்) முதல்வர் பதவியில் அமர்த்துவேன். அவர் தலையாட்டும் பொம்மையாக இருக்க மாட்டார். ஆட்சி நிர்வாகத்தில் கட்சி தலையிடாது அதே சமயம் தொந்தரவோ, அதிகாரமோ செய்யாமல் பார்த்துக் கொள்வோம். இதுதான் அரசியல். மாற்றத்திற்கான முக்கியமான திட்டங்கள். இதுதான் நான் விரும்பும் மாற்று அரசியல். உண்மையான ஜனநாயகம், என்னுடைய கனவு. இதற்காகத்தான் நான் அரசியலுக்கு வருகிறேனே தவிர பெயருக்காகவோ புகழுக்காகவோ பணத்துக்காகவோ பதவிக்காகவோ கிடையாது. ஊழலற்ற வளமான தமிழகத்தை உருவாக்க விரும்பும் தமிழக மக்கள் எனது நல்ல நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு இத்தகைய அரசியல் மாற்றத்திற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

 

வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ் நாடு! ஜெய்ஹிந்த்!!

 

-ரஜினிகாந்த்

 

(வெளியிடப்பட்ட அறிக்கை)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...