???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான் 0 இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஐ தாண்டியது! 0 சென்னை பீனிக்ஸ் மால் சென்றவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல் 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரஜினி அரசியல்: ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   12 , 2020  01:15:11 IST


Andhimazhai Image

ண்டி வண்டியாக கட்டுரைகள் எழுதியும், மணிக்கணக்கில் தொலைக்காட்சிகளில் விவாதம் பண்ணியும் பின் வரும் இரண்டு கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை. ரஜினி எப்போது கட்சி ஆரம்பிப்பார்? ஆரம்பித்தால் ஆட்சியைப் பிடிக்க முடியுமா?

 

அரசியலைத் தவிர்த்துவிட்டு நிர்வாகவியல் மற்றும் தலைமைப் பண்பு கோணத்தில் இதுவரை தமிழக அரசியலுக்கு வந்த வென்ற / வெல்லமுடியாத நடிகர்களின் பயணத்தின் மூலமாக ரஜினியின் அரசியலை  இக்கட்டுரையில் அலசலாம்.

 

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு-குறள் (காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை -மு.வ உரை)

 

இது வள்ளுவர் சொல்லும் தகுதி.

 

உலகம் முழுவதும் உள்ள பல்துறை சார்ந்த வெற்றியாளர்களை ஆராய்ந்த மால்கம் கிலாட்வெல்( Malcolm Gladwell)  என்கிற புகழ் பெற்ற ஆய்வாளர், ஒருவர் வெற்றியாளர் ஆவதற்கு சில பொது விதிகளை Outliers  என்ற தன் புகழ்பெற்ற நூலில் வகுத்துள்ளார். அதில் முக்கியமானது இதுவாகும்:

 

எந்த துறையாக இருந்தாலும் அதில் வெல்வதற்கு பத்தாயிரம் மணி நேரம் அத்துறையில் பயிற்சி தேவை. இந்த பயிற்சி என்பது உங்களுடைய திறமைகளை எந்த அளவுக்கு  அதிகரிக்கமுடியுமோ அந்த அளவுக்கு பயிற்சி செய்வது (deliberate practice) என்று கிலாட்வெல் கூறுகிறார்.

 

சிவாஜிராவாக ஆரம்பித்து ரஜினிகாந்த் ஆகி சூப்பர்ஸ்டார் ஆன நிகழ்வும் மால்கம் கில்ட்வெலின் நூலான Outliers  விதியின்படி விளக்க முடியும்.

 

இனி தமிழகத்தின் அரசியலில் நுழைந்த நடிகர்கள் சிலரைப் பற்றிப் பார்க்கலாம்.

 

காங்கிரஸில் இருந்துவிட்டு 1953-ல் திமுகவில் இணைந்த எம்ஜிஆர் 1962-ல் எம்.எல்.சி ஆனார். 1967 -ல் தேர்தல் அரசியலில் பங்கேற்று எம்.எல்.ஏ. ஆகி கட்சியின் பொருளாளராக பதவி உயர்வு பெற்று பின் கட்சியின் தலைமையோடு மனக்கசப்பில் புதுக்கட்சி கண்டார்.

 

அக்டோபர் 1972-ல் கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர். ஜூன் 1977ல் முதல்வராகிறார். இதே காலகட்டத்தில் அவர் நடித்த 17 படங்கள் வெளியாகி ‘எம்.ஜி.ஆரின்’ பிம்பத்தை மக்கள் மனதில் திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தின. புதுக் கட்சி ஆரம்பித்த 1972 ஆம் ஆண்டில் சங்கே முழங்கு, நல்ல நேரம் , ராமன் தேடிய சீதை , நான் ஏன் பிறந்தேன் , அன்னமிட்ட கை மற்றும் இதய வீணை என்று ஆறு படங்கள் வெளியாயின. அது தற்செயலா அல்லது உச்சத்தில் இருக்கும்போது கட்சி ஆரம்பிக்க வேண்டுமென்ற திட்டமிடலா என்ற கேள்விக்கு விடையில்லை. ஆனால் 1973ல் எம்ஜிஆரின் இரண்டே இரண்டு படங்கள் மட்டும் தான் வெளியாயின. எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றங்கள் திறம்பட இயங்கின. ஒரு கட்சியின் கிளைகள் போன்று செயல்பட்ட மன்றங்களுக்குப் போதுமான நேரத்தை எம்.ஜி.ஆர் செலவழித்ததால் கட்சியின் பொறுப்புகளைத் தாண்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இருமுறை (1957-1959, 1961- 1963) பதவி வகித்துள்ளார். அவர் தயாரித்த மூன்று படங்களும்  நாடோடி மன்னன் , அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன்  மிகப் பெரிய கமர்ஷியல் வெற்றி படங்கள். தமிழ் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் தகுதியின் அடிப்படையில் முதலிடம் எம்.ஜி.ஆருக்கு தான். மக்களின் நாடித் துடிப்பு பற்றிய புரிதலும், கட்சியை நடத்தும் திறனும் அவருக்கிருந்தாலும், எம்.ஜி.ஆர் 1953 - 1977 ஆண்டுகளுக்கு மத்தியில் சுமார் 42,000 மணி நேரங்கள் அரசியலுக்காக செலவழித்திருக்கக்கூடும் என்பதையும் மறந்து விட முடியாது.

 

அண்ணாவால் அறிமுகப்படுத்தப்பட்ட சிவாஜி திமுகவிலிருந்து ’ திருப்பதி கணேசா’ விவகாரத்தால் விலகினார். காமராசர் மேலுள்ள பற்றால் காங்கிரஸில் இணைந்தார். இந்திரா காந்தியும் சிவாஜியை மாநிலங்களவை உறுப்பினராக்கி (1982)அழகு பார்த்தார். காங்கிரஸில் தொடர்ந்து வந்தாலும் முழு நேர தமிழக காங்கிரஸ் தலைவர்களோடு அவர் ஒட்டவில்லை.

 

ஒரு முறை ராஜீவ் காந்தி சென்னை வந்திருந்த போது  ராஜ்பவனில் வைத்து சந்தித்த சிவாஜி தமிழக காங்கிரஸ் தலைவர்களை பற்றிய குறைகளை சுட்டிக் காட்டியும் அதற்கு ராஜீவ் காந்தி போதுமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற வருத்தம்  சிவாஜிக்கு இருந்ததாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு பிந்தைய தமிழக அரசியலில் அதிமுக பிளவுபட்டு நிற்க,  ஜெ தலைமையிலான அணியோடு கூட்டணி வைத்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் என்று பேசப்பட்டு வந்தது. இந்த முடிவை ஏற்காத சிவாஜி 10, பிப்ரவரி , 1988 ல் தனிக் கட்சி தொடங்கினார். 21, சனவரி, 1989 ல் சட்டமன்ற தேர்தல் நடந்தது. ஆனால் எதிர்பார்த்தமாதிரி தேர்தலில் ஜெ.வோடு கூட்டு வைக்காமல் ஜி.கே.மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது.

 

 “அரசியலில் வெற்றிடம் இருக்கிறது”

‘’ உங்களை மக்களுக்குத் தெரியாதா? நீங்க போனாப் போதும். சுலபமா ஜெயிச்சிடலாம்”

-   இன்றைக்குச் சில இடங்களில் கேட்கிற குரல்கள் அன்றைக்கும் கேட்டன சிவாஜி கணேசனுக்கு முன்னால்.

 

1987 அக்டோபரில் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் மறைந்ததும் அ.தி.மு.க பிரிந்திருந்தது. ஜெயலலிதா தலைமையில் ஒரு குழுவும், ஜானகி வீரப்பன் குழுவும் நேர் எதிராக நின்றன.

 

ஜானகி தலைமையிலான ஆட்சி குறுகிய காலத்திற்குள் கலைக்கப்பட்ட நிலையில் தான் காங்கிரஸிலிருந்து விலகிய சில எம்.எல்.ஏக்களுடன் ‘’தமிழக முன்னேற்ற முன்னணி” கட்சியைத் துவக்கினார் 1988 ல்.

 

ஜானகி அணியிலிருந்த சில தலைவர்கள் கட்சியைத் துவக்குவதற்கு நம்பிக்கை கொடுத்தார்கள். அந்த அணியுடன் தேர்தல் கூட்டணி முடிவாகி சிவாஜிக்கு ஒதுக்கப்பட்டது 50 தொகுதிகள்.

 

பெரும் நம்பிக்கையுடன் அப்போது இருந்தார் சிவாஜி. தேர்தல் பிரசாரத்தின் போது திரளான மக்கள் கூடினார்கள். ஆரவாரித்தார்கள். சூழ்ந்து கொண்டு பாசம் காட்டினார்கள்.

 

தூத்துக்குடியில் துவங்கி சென்னை வரை சிவாஜியுடன் பிரசாரத்தின் உடன் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது அவருடைய அடர்ந்த நம்பிக்கையை உணர முடிந்தது. மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டிருந்தது அவருடைய பிரசாரம். சினிமா படப்பிடிப்புக்குக் குறிப்பிட்ட நேரத்தில் சென்று பழக்கப்பட்ட  சிவாஜி, பிரசாரத்திலும் அதையே கடைப்பிடித்தார். மக்கள் கூட்டத்தைக் காக்க வைக்க அவர் விரும்பவில்லை. சில இடங்களில் போதுமான கூட்டம் வராவிட்டாலும்,மேடை ஏறுவதில் தாமதம் காட்டவில்லை.

 

சினிமாவில பேசுவது மாதிரி அடுக்கு மொழி வசனங்களைப் பேசாமல் இயல்பாக சற்று ‘சென்டிமென்ட்” கலந்த மொழியில் இருந்தது அவருடைய பேச்சு. ஆனால் எல்லாக்கூட்டங்களிலும் எதிரே இருந்த மக்களிடம் கேள்வி கேட்டபோது பெருவாரியாக ‘’ஆதரிக்கிறோம் தலைவா” என்கிற குரல்கள் பரவலாகக் கேட்டன.

 

சிவாஜி வேட்பாளராகப் போட்டியிட்ட திருவையாறு தொகுதியில் மிகுந்த சொந்த உணர்வுடன் பிரசாரம் செய்தார். “நம்ம ஜனங்க இருக்கிற ஊர்லே உங்களை நம்பித்தாம்ப்பா நிக்குறேன்.. பார்த்துக்குங்க... என்னை ஏத்துக்குருவீங்களாப்பா?” என்று கை தூக்கியபோது ஒரே கைதட்டல்.

 

 பிரசாரம் முடிந்து சென்னைக்குத் திரும்பிய பிறகு வீட்டில் சந்தித்தபோதும் எப்படியும் முப்பது தொகுதிகளில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார். உடனிருந்த அவருடைய கட்சியினரும் அதையே மறுப்பின்றி ஆமோதித்துக் கொண்டிருந்தார்கள்.

 

ஆனால் தேர்தல் முடிவு அதிர வைக்கும் விதத்தில் இருந்தது. திருவையாறு தொகுதியில் அவரை எதிர்த்து நின்ற தி.மு.க.வேட்பாளர் துரை. சந்திரசேகரனை விடப் பத்தாயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று தோற்றதை அவரால் செரித்துக் கொள்ள முடியவில்லை. போட்டியிட்ட ஐம்பது தொகுதிகளிலும் கிடைத்த தோல்வி அவரை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளியிருந்தது.

 

சிலர் தன்னைத் தவறாக வழிநடத்திவிட்டதாகக் குற்றம் சாட்டினார். எதிர்பார்த்த இடத்திலிருந்து பொருளாதார உதவியும் கிடைக்காத நிலையில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை உதடு பிதுங்க அவருடைய முகம் பிரதிபலிக்கச் சொன்னார். குறிப்பிட்ட தொகையை இழந்ததைக் குறிப்பிட்ட அவர் மிக எளிமையாகக் கேட்ட கேள்வி.

‘’ என்னுடைய நடிப்பை அவ்வளவு

ரசிச்சாங்க இந்த ஜனங்க. ஆனா..

பிரசாரத்தில் நான் நடிக்கலையேப்பா.. என் மனசில் பட்டதைப் பேசினேன். ஏன் ஜனங்க என்னை ஏத்துக்கலைன்னு தெரியலையே..”

ஏறத்தாழ இருநூறு படங்களுக்கு மேல் நடித்த பிரபலத்தன்மை மட்டும்  அரசியலில் நிலைப்படுத்திக் கொள்வதற்கு உதவாது என்பதை சிவாஜி உறுதிப்படுத்தியிருக்கிறார்.”

- மேலே இருப்பது என்ன நடந்தது என்பதை சிவாஜியுடன் 1988ல் உடன் பயணித்த பத்திரிகையாளர் மணா எழுதி இருப்பது. (நூல்: மறக்காத முகங்கள், வெளியீடு -அந்திமழை)

 

1988ல் சிவாஜி முன்வைத்த அதே காரணத்தை 1996ல் முன்வைத்து தனிக்கட்சி ஆரம்பித்த ஜி.கே.மூப்பனார் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று அரசியல் பிரபல்யம் மட்டும் போதுமானதில்லை என்பதை நிரூபித்தார்.

 

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றதில் எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் விஜயகாந்த் இருப்பதாகச்  சொல்லலாம்.  14 செப்டம்பர் 2005 ல் கட்சி ஆரம்பித்தவர் 234 தொகுதிகளில் போட்டியிட்டு 27.64 லட்சம் வாக்குகளை அள்ளியது சாதனை தான் . 2011- ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 லட்சம் வாக்குகளை வாங்கி எதிர்க்கட்சித் தலைவரானார்.

 

விஜயகாந்த் மேலும் முன்னேற முடியாமல் போனதற்கு உடல் நலக்குறைவும் 2016ன் தவறான கூட்டணியும்  காரணம். முதல் தேர்தலில் விஜயகாந்த் வாங்கிய ஓட்டுகள் கமலின் மக்கள் நீதிமய்யம் தனது முதல் தேர்தலில் வாங்கிய (15,75,640) வாக்குகளை விட 11.88 லட்சம் வாக்குகள் அதிகம். கட்சி ஆரம்பிப்பதற்கு பல வருடங்கள் முன்பே கட்சி கொடியை அவர் பிரபலப்படுத்த ஆரம்பித்துவிட்டார். 2000 - 2014க்கு இடைப்பட்ட காலத்தில் மிகத் தீவிரமான அரசியல் களப்பணியை நடத்தியவர் விஜயகாந்த்.

 

இந்த காலகட்டத்தில் விஜயகாந்த் சுமார் 26000 மணி நேரங்களுக்கு மேல் பணியாற்றியிருக்க கூடும் என்பது அவரோடு பயணித்தவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் கூற முடிகிறது.

 

இந்த பின்னணியில் ரஜினியின் அரசியலைப் பார்க்கலாம்.

1992லிருந்து ஊடகங்கள் ரஜினியின் அரசியலைப் பற்றி எழுதினாலும் , ரஜினி மூன்றே மூன்று முறைதான் தேர்தல் அரசியலில் தன் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். 1996. - 1998 ல் ஜெக்கு எதிரான நிலைப்பாடு. ஒன்றில் வெற்றி மற்றொன்றில் தோல்வி. 2004 ல் பாமக விற்கு எதிரான நிலைப்பாடு - தோல்வி

 

”இப்ப என்ன பார்ட்டி ஆரம்பிக்கலாமா? ...

தலைவா வாழ்க....

உட்காருங்கப்பா...பர்த் டே பார்ட்டி ஆரம்பிக்கலாம்னு சொன்னேம்பா...

எப்படியும் பார்ட்டி ஆரம்பிச்சுத்தான் ஆகணும், இமயமலைக்கு போலாம்னு பார்க்குறியா..உட்ருவமா நாங்க”

(படையப்பா (1999)

ஆர். சுந்தர்ராஜன் ரஜினியிடம்: அது என்ன நீங்க.. அரசியலுக்கு வர்ரங்கிறீங்க, வரலங்கிறீங்க... வரும்போது வருவங்கிறீங்க.. நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாதுங்கிறீங்க. மீறி எதாவது கேட்டா மேல கை காட்டறீங்க.. எதுக்கு நீங்களும் குழம்பி எங்களையும் குழப்பறீங்க. நீங்க வர்றீங்களா இல்லியா ? தெளிவா சொல்லுங்க...

ரஜினி : நான் அரசியலுக்கு வர்றேன், இல்ல வரல. அதுல உங்களுக்கு என்ன அக்கறை? உங்க வேலையை பார்த்துட்டு போய்ட்டே இருங்க...

 

ஆர்.சு : வரணும். உங்கள மாதிரி ஆளுங்க அரசியலுக்கு வரணும்னு ஜனங்க கேக்கறாங்க இல்ல. வந்து என்ன கிழிக்கறீங்கன்னு நாங்க பார்க்கணும்...

 

ரஜினி: நான் எப்ப வருவேன், எப்பிடி வருவேன்னு தெரியாது. வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் - இது ஒரு படத்துல யாரோ எழுதின வசனம். அத நான் பேசியிருக்கேன். அத நீங்க உண்மையா எடுத்துகிட்டா நான் என்ன பண்றது?

 

(குசேலன், 2008)

 

ரஜினியின் அரசியல் பற்றி விவாதிக்க வேண்டிய காலகட்டம் 31, டிசம்பர் 2017க்கு பிந்தையது தான் . ஆனால் இந்த 14 மாதங்களில் மற்ற கட்சியினருக்கு தேர்தலில் கடுமையாக போட்டி கொடுக்கக் கூடிய களப்பணிகள் எதையும் முன்னெடுக்க வில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று அறிவிக்கும் போது 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றிருந்த அறிவிப்பு , தற்போது ஒரு தேசிய கட்சி, ஒரு திராவிட கட்சியின் உடைந்த பிரிவு மற்றும் சிலருடன் கூட்டணி என்ற ஊகங்கள் கிசுகிசுக்கும்  வண்ணம் இருக்கிறது. ரஜினி வாயைத் திறக்கும் வரை இந்த கிசுகிசுவை ஆராய முடியாது. ஆனால் ரஜினியின் தேர்தல் கூட்டணி பற்றிய கிசுகிசுப்பிற்கு 1989ல் சிவாஜி கணேசன் தேர்தலை எதிர்கொண்ட கூட்டணியின் சாயல் இருப்பதாக விஷயமறிந்த அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

 

எம்.ஜி.ஆர் 55 வயதிலும் , சிவாஜி 60 வயதிலும்  விஜயகாந்த் 53 வயதிலும் அரசியல் கட்சியை ஆரம்பித்தார்கள் இன்னும் கட்சியே ஆரம்பிக்காத ரஜினியின் வயது 69 முடிந்து 70ல்.

 

“ஒன்பது வருஷ அரசியல்ல நிறையவே கத்துக்கிட்டேன்.  இந்தச் சமூகத்துக்கு ஏதாவது பண்ணணும்னு முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தேன். ஆனா, ஒவ்வொரு முறையும் அரசியல் நன்றிகெட்ட தொழில்னு உணர்த்திக்கிட்டே இருந்துச்சு. தப்பே பண்ணாம நம்ம மேல குற்றம் சொல்லுவாங்க.

 

அதை மீடியா வேற மாதிரி கொண்டுபோகும்னு அதிக மன உளைச்சலைக் கொடுத்த நாட்கள் அவை. என்னைப்போல எமோஷனலானவர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது.

 

இப்போ அரசியல்ல எல்லாமே பணம்தான். உண்மையா நல்ல அரசியல் பண்ணணும்னு வருவோம்; ஆனா பண்ணமுடியாது. என் சொந்தத் தொகுதியில என்னைத் தோற்கடிக்கக் கோடிக்கணக்குல செலவு பண்ணுனாங்க. என்னைத் தோற்கடிச்சாங்க. அப்போ நான் ரொம்ப நொந்துபோயிட்டேன்.

 

தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள்னு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தால் யார்வேணாலும் அரசியலுக்கு வரலாம். முன்னாடி சொன்ன மாதிரி என்னைப்போல சென்சிட்டிவா இருக்குறவங்களுக்கு அரசியல் சரிப்படாது. கமல், ரஜினி என்னை மாதிரி இருக்கமாட்டாங்கன்னு நம்புறேன். என் நண்பர்களான ரஜினி, கமல் ரெண்டு பேருக்கும் என்னோட வேண்டுகோள் ஒண்ணுதான். அரசியல் வேண்டாம். ஐt’ண் Nணிt தீணிணூtட டிt.” என்று ரஜினிக்கு சிரஞ்சீவி விகடன் பேட்டி மூலம் வேண்டுகோள் விடுத்தது நினைவிருக்கலாம்.

 

வெற்றிடம் இருக்கிறது ஆட்சியைப் பிடிக்கலாம் என்று பல நண்பர்களும், வேண்டாம்  உணர்ச்சிவசப்படுகிற உங்களுக்கு ஒத்து வராது என்று வேறு பல நண்பர்களும் கூற, ரஜினி எதை நம்புவது என்று யோசனையில் இருக்கிறாரோ என்று சிந்தனை வருவதை தடுக்க முடியவில்லை.

 

ஆரம்பத்தில் சொன்னதற்கு வரலாம். உலகப் பிரசித்தி பெற்ற  மால்கம் க்லாட்வெலின் ஆய்வின் படி அரசியலில் வெற்றி பெற ரஜினி  பத்தாயிரம் மணி நேரம் களப்பணியாற்ற வேண்டும். ஆனால் வெற்றியின் விதிகள் தோற்று சிலநேரங்களில் அதிசயங்களை நிகழ்த்தும் மாநிலம் தமிழகம்.

 

ரஜினியின் அரசியல் பற்றிய யோசனை வரும் போதெல்லாம் பசுவய்யாவின் பின் வரும் கவிதை வரிகளும் ஞாபகத்துக்கு வருகிறது ( ஏனென்று புரியவில்லை).

 

வேட்டையாடத்தான் வந்தேன்

வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை

தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்

பின் வில்வித்தை

பின் வாள்வீச்சு

பின் குதிரை ஏற்றம்

பின் மற்போர்

நாளை நாளை என வேட்டை பின்னகர

ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்.

 

- அந்திமழை இளங்கோவன்  (அந்திமழை  மார்ச் 2020 )

 


 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...