மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதுடன், ஒன்றரை ஆண்டுகளாக காலியாக இருந்த சட்டப்பேரவைத் தலைவர் பதவியும் நிரம்பிவிட்டது. பா.ஜ.க.வைச் சேர்ந்த இராகுல் நர்வேக்கர் புதிய அவைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி கடந்த 3,4 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல் நாளில் அவைத்தலைவர் தேர்வு நடத்தப்பட்டது. அதில் எதிர்பார்க்கப்பட்டபடி ஆளும் கூட்டணியின் நர்வேக்கர் வெற்றிபெற்றார்.
மாநிலத்தின் மிக இளம் வயது முதலமைச்சராக எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தேவேந்திர பட்னாவிசைக் கொண்டுவந்தது, பா.ஜ.க. அதைப்போலவே இவரையும் 45 வயதில் பா.ஜ.க. தலைமை, அவைத்தலைவராக ஆக்கியிருக்கிறது. மற்ற பல மாநிலங்களிலும் இளையவர்கள் முதலமைச்சராக ஆகியிருந்தாலும், பேரவைத்தலைவர் பதவிக்கு மூத்த - அனுபவம் வாய்ந்த சட்டமன்ற உறுப்பினரையே நியமிப்பது நீண்டகால மரபாக இருந்துவருகிறது. ஆனால், இதையொட்டி பா.ஜ.க. தரப்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
இதைவிட இன்னுமொரு அம்சமாக நர்வேக்கரைப் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்படுவது, அவரின் கட்சித் தாவல் பற்றி!
இப்போதைய நிலைமையில், பா.ஜ.க.வுடன் சிவசேனா கூட்டணி எனச் சொல்லலாமா, கூடாதா என மற்றவர்களுக்கு தயக்கமான நிலைமைதான். ஆம் என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம் என்கிறாற்போல இருக்கிறது, அந்தக் கட்சியின் நிலவரம். ஆனால், பால்தாக்கரே காலம்வரை இரண்டு கட்சிகளும் இயல்பான கூட்டணியில் இருந்தன.
அந்த சூழலில், தன் தந்தை, அண்ணன், அண்ணி என மும்பை மாநகராட்சி கவுன்சிலர்களாக இருக்க, சிவசேனா கட்சிக் குடும்பத்தவரான இராகுல் நர்வேக்கரும் அந்த ஜோதியில் ஐக்கியமானார். இப்போதைய அரசியல்வாதியான ஆதித்ய தாக்கரேவுக்கு முக்கியத்துவம் தருவதற்காக, சிவசேனாவில் யுவசேனா தொடங்கப்பட்டபோது, 2010வாக்கில் அதில் இராகுலும் இணைந்துகொண்டார்.
சட்டமேலவை உறுப்பினராகவும் ஆன இராகுல், சிவசேனாவில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடிய பேச்சாளர்களில் ஒருவராக முன்னணிக்கு வந்தார். ஆதித்ய தாக்கரேவுக்கு நெருக்கவட்டத்தில் சென்றுவிட்ட அவருக்கு, அடுத்ததாக மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் இரண்டு முறை பேச்சு எழுந்தும் வாய்ப்பு தரப்படவில்லை.
அதிருப்தியடைந்தவருக்கு மாமனார் இராம்ராஜே நாய்க நிம்பல்கர் தரப்பில் ஆறுதல் கிடைத்தது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் சட்டமேலவைத் தலைவருமான அவரின் வலுவில், இராகுல் நர்வேக்கர் அந்தக் கட்சியில் இணைந்தார். தன் கூட்டாளியான ஆதித்ய தாக்கரேவைவிட்டுப் பிரிந்து தன்னுடைய பாதையில் நடைபோடத் தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போக, பேசிவைத்திருந்தபடி சட்டமேலவை உறுப்பினராக ஆக்கப்பட்டார், இராகுல்.
கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலின்போது பா.ஜ.க.வில் சேர்ந்து, கொலாபா தொகுதியில் வெற்றிபெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக ஆனார். வழக்குரைஞர் தொழில் பின்னணியைக் கொண்ட இராகுல், சிவசேனாவுக்குள் எழுந்திருக்கும் உண்மையான கட்சி யார் எனும் விவகாரத்தை, உள்ளடிகளை அறிந்தவர் என்பதால் சிறப்பாகக் கையாள்வார் என பா.ஜ.க. தலைமை கருதுகிறது.
வானளாவிய அதிகாரம் இருப்பதாக பி.எச். பாண்டியனால் விவரிக்கப்பட்ட- சட்டப்பேரவைத் தலைவர் பதவியில் நர்வேக்கருக்கு நல்லதொரு ஏற்றம். இப்போதைக்கு இதில் மாற்றம் இருக்காது என நம்பலாம்!