???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பழனிசாமி நீக்கத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் ஜெயகுமார் 0 பண்ருட்டி ராமச்சந்திரன்,செங்கோட்டையன், ஜெயக்குமாருக்கு புதிய பதவி! 0 சேதுமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்றமுடியாது: மத்திய அரசு 0 டிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் திடீர் விலகல்! 0 சந்திரபாபு நாயுடு செய்ததை போல தமிழக முதல்வரால் செய்ய முடியுமா?: அ. ராசா கேள்வி 0 20 பைரஸி இணையதளங்கள் முடக்கம்: தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை 0 அதிமுகவிலிருந்து கே.சி.பழனிச்சாமி நீக்கம் 0 பெண் பத்திரிக்கையாளர் அவமதிப்பு: மன்னிப்பு கேட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 சென்ற ஆண்டின் நகலாக இந்த ஆண்டு பட்ஜெட்: கமல் கருத்து 0 மா.அரங்கநாதன் இலக்கிய விருது! 0 தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக மனு தாக்கல் 0 குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு 0 பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவர் ராஜினாமா! 0 ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு வருவாய் அதிகரிப்பு: நிதி நிலை அறிக்கை 0 சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது - மத்திய அரசு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராகுல் காந்தி: காங்கிரஸை மீட்க முடியுமா?

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   29 , 2017  02:18:05 IST


Andhimazhai Image
முதல்முதலாக காங்கிரஸ்காரர்கள் சின்னதாகப் புன்னகைக்கிறார்கள். கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை அடுத்து, ஓரளவுக்கு நல்லபடியாக ஊடகங்களில் எழுதி இருக்கிறார்கள். அவரும் அங்கே தடுமாறாமல் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துத் திரும்பியிருக்கிறார்.
 
 
2004-ல் ராகுல்காந்தி நேரடி அரசியலுக்கு வந்து காங்கிரசின் எம்பி ஆனார். இன்று அவரது அரசியல் அனுபவம் 13 ஆண்டுகள். மத்தியில் பத்து ஆண்டுகள் ஆட்சிப்பொறுப்பில் காங்கிரஸ் இருந்தது. 2013-ல் கட்சியின் துணைத்தலைவர் ஆனார். 2014 தேர்தலில் கட்சியின் முகமாக அவர்தான் இருந்தார். ஆனால் மோடிக்கு அவரால் சுத்தமாக ஈடுகொடுக்கவே முடியவில்லை. பாஜக மிகவும் பெரும்பான்மையுடன் வென்று 2014ல் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. மிகமிக மோசமாக 42 இடங்களை மட்டுமே காங்கிரஸால் அந்த தேர்தலில் பெறமுடிந்தது.  மாநிலங்களிலும் நிலைமை மிக மோசம். கர்நாடகா, பஞ்சாப் தவிர பெரிய மாநிலங்கள் எதிலும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை.
 
 
சமீபத்தில் கோவாவிலும் மணிப்பூரிலும் அதிக இடங்கள் பெற்றாலும் அக்கட்சியால் ஆட்சி அமைக்கமுடியவில்லை. குஜராத்தில் சங்கர் சிங் வகேலாவும் சில எம் எம் ஏக்களும் பாஜகவுக்குத் தாவினர். அகமதுபடேலையே மாநிலங்களவைத் தேர்தலில் தேர்வாவதற்குத்  ‘தண்ணி’ குடிக்கவைத்தனர். பிஹாரில் மகாகூட்டணியை உடைத்துக்கொண்டு நிதிஷ்குமார் பாகஜ பக்கம் போய்விட்டார். அதிலும் காங்கிரஸுக்கு செய்வதற்கு ஏதுமில்லை!
 
 
2013-ல் ராகுல்காந்தி செய்த ஒரு காரியம் நினைவிருக்கலாம். திடீரென்று டெல்லி பிரஸ்க்ளப்புக்கு வந்த அவர் செய்தியாளர்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளைக் காப்பாற்றக்கூடிய ஒரு சட்டத்திருத்ததைக் கிழித்துப்போட்டார். அது அவரது காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டதே. ஆனால் அந்த சுறுசுறுப்பை அடுத்த ஓராண்டில் வந்த தேர்தலுக்குப் போதவில்லை! அவர் அளித்த தொலைக்காட்சி நேர்காணல்கள் அவரது ஆழமின்மையை வெளிப்படுத்தின. ஆனாலும் எவ்வளவு சக்திவாய்ந்த தலைவராக இருந்தாலும் மோடியின் வீச்சை எதிர்கொண்டிருக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஆனால் ராகுல்காந்தி, தயக்கமற்ற தலைவராக அந்த தேர்தலை எதிர்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பிரதமர் வேட்பாளராக மோடிக்கு எதிராக அவரை காங்கிரஸ் நிறுத்தியிருக்கவேண்டும்.
 
 
ஆனால் 2019 தேர்தலில் அப்படி பிரதமர் வேட்பாளரை காலியாக இருக்கவிடாது காங்கிரஸ். ராகுல்காந்தி கட்சியின் தலைவராக விரைவில் தெரிவு செய்யப்படுவார் என்றும், பிரதமர் வேட்பாளர் யார் என்று கட்சி அறிவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இல்லையென்றால் கடைசி நேரத்தில் ப்ரியங்கா காந்தி முன்னிறுத்தப்படலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.
ஆனால் இவ்வளவு பலவீனமான நிலையில் இருக்கும் கட்சியை ராகுல் காந்தியால் வெற்றியடையச் செய்ய முடியுமா?
 
 
சமீபத்தில் நடந்த பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பெரும்பாலானா பாஜக தலைவர்கள் ராகுல்காந்தி காங்கிரசை வழி நடத்தும் வரைக்கும் நாம் கவலைப்படவே வேண்டியதே இல்லை என்றனர். இது நக்கல்தான்! 2014 தேர்தல் பிரச்சாரங்களில் ராகுல்காந்தியின் பிரச்சாரப்பேச்சுக்களை மோடி, “ இளம் தலைவர் அவர் இப்போதுதான் பேசக்கற்றுக்கொள்கிறார்” என்று மிக எளிதாகப் புறம்தள்ளினார். ஆளும் கட்சி ராகுலை தனிப்பட்ட முறையில் பல்வேறு பட்டப்பெயர்களால் கிண்டல் செய்கிறது. முட்டாள் என்றும் விருப்பமே இல்லாமல் அரசியலுக்குள் தள்ளப்பட்டுள்ளார் என்றும் தோல்வி அடைந்த வாரிசு என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
 
 
ஆனால் ராகுலும் பலநேரங்களில் இப்படித்தான் நடந்துகொள்கிறார். திடீரென பலநாட்கள் காணாமல் போய்விடுகிறார். முக்கியமான எதிர்க்கட்சிப் போராட்டங்களின் போது வெளிநாட்டுக்குச் சென்றுவிடுகிறவர் என்று அவருக்குப் பெயர். இப்போது அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் உரைகள், செய்தியாளர் சந்திப்புகளில் பேசியபோது காங்கிரஸ் திமிர்த்தனமாக இருந்ததுதான் 2014 தேர்தலில் தோற்கக்காரணம் என்றும் வாரிசு அரசியல் பற்றியும் பல்வேறு கொள்கை உருவாக்கல்கள் பற்றியும் தெளிவாகப் பேசியிருக்கிறார். 2019 தேர்தலில் கட்சி முடிவெடுத்தால் பிரதமர் வேட்பாளராக இருப்பேன் என்று அவர் சொல்லியிருப்பது முக்கியமான கருத்து. அவரது தயக்கத்தை முதல்முதலாக உதறியிருக்கிறார்!
 
 
 “2019 தேர்தலில் குன்ஸாக ஒரு கணக்குபோட்டால் இப்போது பாஜக நீண்டகாலமாக ஆளும் மாநிலங்களான குஜராத், மத்தியபிரதேசம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெல்லவேண்டும். அடுத்ததாக தமிழ்நாடு, ஆந்திரம், இரு  மாநிலங்களிலும் கூட்டணிக்கட்சிகளுடன் இணைந்து அதிக இடங்களைப் பிடிக்கவேண்டும். இரு மாநிலங்களிலும் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிச்சயமாக 200 இடங்களைத்தாண்ட முடியும். மேற்குவங்கம், ஒரிஸா ஆகிய மாநில சூழல், பீகாரில் நிதீஷின் அரசியலால் கிடைக்கப்போகும் கூட்டணிக்கட்சி இடங்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது இதற்கான வாய்ப்பு இருக்கவே இருக்கிறது,” என்று நம்பிக்கையுடன் விளக்கம் தருகிறார் ஒரு காங்கிரஸ்காரர். ஆனால் பாஜகவோ 2024 தேர்தல்தான் தங்களுக்குச் சிரமமாக இருக்கலாம் என்று எதிர்காலத்தில் பெரும் நம்பிக்கையுடன் கண்ணைக் குவித்துள்ளது!
 
 
தொடர்ந்து பல ஆண்டுகளாக சமூக ஊடங்களிலும் பொதுவெளியிலும் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகும் தலைவராகவே ராகுல் காந்தி இருந்துவருகிறார். கட்சிக்குள்ளும் ஜனநாயகத்தைக் கொண்டுவரும் அவரது நடவடிக்கைகள் தோல்வி அடைந்தே இருக்கின்றன. தொடர்ந்து குறிவைக்கப்படும் ஒரு மனிதருக்கு கொஞ்சமாவது மூச்சுவிடவும் அவகாசம் வேண்டும். அமெரிக்காவில் கிடைத்திருக்கும் நல்ல பெயர் அவருக்குத் திருப்புமுனையாகக் கூட அமையலாம். யார் கண்டது? 47 வயதில் இருக்கும் ராகுல்காந்திக்கு இனியும் அரசியல் பாதை கரடுமுரடாகவே இருக்கும் இருப்பினும் அதில் இளைப்பாற சின்னதாக இப்படி ஒரு நிழல்கூடவா இருக்கக்கூடாது?
 
 
- நமது செய்தியாளர்
 
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...