???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 30- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   10 , 2020  06:42:53 IST

எத்தனை காலம் மாறினாலும், மாறாத ஒன்று - பணம், செல்வாக்கு உள்ளவரை மதிப்பதும், துதிப்பதுமே! என்னதான் குணம், இருந்தாலும் அது உலகில் பெரும்பாலும் எடுபடுவதில்லை.


 
பணம் அதிகாரமாக மாறுவதும், அடுத்தவரை எள்ளி நகையாடி உழைப்பை உறிஞ்சுவதும் மாறுவதே இல்லை. பருவ நிலைகள் மாறும், ஆனால் இந்த பொருள் விதி மாறுவதாகத் தெரிவதில்லை...


 
இதை இவ்விதமாக எண்ணத் தூண்டியதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. எனது கிராமத்து வாழ்வியலும், உறவும் கற்றுக் கொடுத்த பாடங்கள்...


 
இதை ஒட்டி உணர்ந்து எனக்கு ஆறுதலை தந்தவர் 'தமிழரசு' பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய சாமி. பழநியப்பன். இவர் யார் தெரியுமா?கவிதைகளிலும், திரைப்பாடல்களிலும் கண்ணிய மொழியில் காலூன்றிய அழகியல் பாடலாசிரியர் பழநிபாரதியின் தந்தை.
 
எப்போதும் எளிதாக எதையும் எடுத்துக் கொள்கிற அவர்தான் கண்ணதாசனைப் போலவே கவிஞர் கா. மு. ஷெரீப் என்ற திரைப்பாடலாசிரியரை ஒருநாள் இப்போது அண்ணாசாலை இருக்கிறதே அதன் அருகிலுள்ள நடைபாதையில் பேசிக்கொண்டே நடந்துபோனபோது காதில் விழுந்த பாடலைச் சுட்டிக்காட்டி நினைவுபடுத்தினார்.


 
அந்தப் பாடல் என்ன தெரியுமா?


 
"பணம் பந்தியிலே -
குணம் குப்பையிலே -
இதை - பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே!
பிழைக்கும் மனிதனில்லே!"


 
- என்ற பாடல் தான். எஸ்.எஸ். ராஜேந்திரன், எஸ்.என். லட்சுமி குடும்பத்துடன் அனாதையாக நடந்துபோகும்போது வரும் பின்னணிப் பாடல் - கே.வி. மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் உருகிப் பாடியிருப்பார்.
 

 
இதை கண்ணதாசன் எழுதினார் என்றுதான் அப்போது பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். தத்துவம் என்றால் கண்ணதாசன் தானே எழுதுவார் என்கிற எண்ணம். அதை மாற்றிக் காட்டிய பாடலாசிரியர் கவிஞர் கா.மு. ஷெரீப்.


 
அடிபட்டு நொந்து சொந்தபந்தம் உதவாத சூழலில் இந்தப் பாடல் நமக்கு மிகப்பெரிய பாடமாகத் தெரியும். எனக்கு அப்படிதான் தெரிந்தது. அதுமுதல் ஷெரீப்பை பார்த்துவிட வேண்டுமென எண்ணிக் கொண்டிருந்தேன். அது நிறைவேறியது சிறிது காலம் 'ஜனரஞ்சனி' வார இதழில் பணியாற்றியபோது கிடைத்தது. அது அனேகமாய் 1986, 87 என்று நினைவு.


 
பேட்டிகள் எடுத்து அனுப்புகிற கடமை, ஜனரஞ்சனி - கோயம்புத்தூரிலிருந்து லாட்டரி சீட்டு நடத்தும் அதிபர் எஸ். எஸ். மணியன் இதைக்கொண்டு வந்தார். கோவையில் விக்னேஷ்ராஜா பொறுப்பாசிரியராக இருந்தார். நான் சென்னையில் திருவல்லிக்கேணி போஸ்ட் ஆபீஸ் எதிரே உள்ள ஒரு சிறிய அலுவலகத்தில் இருந்து எழுதிக் கொண்டிருந்தேன்.


 
அப்போது கவிஞர் கா. மு. ஷெரீப்பை பேட்டி எடுக்க தேடினேன்... அட... கடைசியில் வெகு அருகாமையில் எல்லீஸ் சாலை அருகே பச்சையப்ப செட்டித் தெருவில் குடியிருந்ததை அறிந்தேன். நிறையே கேள்விகளோடு தயார் பாணியில் போனேன். வீட்டு வாசலில் சீதக்காதி பதிப்பகம் என அழகாய் எழுதப்பட்டிருந்தது. காலடி சத்தம் கேட்டு 'வாங்க' என்று குரல் வந்தது. உள்ளே நானும், காமிராமேன் ஜெயமோகனும் போனோம்.


 
ஒரு மரச் சேரில் கட்டம் போட்ட கைத்தறி லுங்கிக் கட்டிக் கொண்டிருந்தார். முழு பனியன் அணிந்து சிரித்தபடி வரவேற்று, என்ன சாப்படுறீங்க? என்று கேட்டார்.


 
நீங்கள் நம்ப வேணும், அப்போதைய சூழலில் ஒரு பத்திரிகையாளர் சந்திக்கப் போனால் முகமனும், உபரிசரிப்பும்தான் முதன்மை. இப்போது அப்படியா?


 
சூடான தேநீரோடு பேசத் துவங்கினேன்... "எப்படி சார் இவ்வளவு எளிமையா... கொஞ்சம் கூட பகட்டு இல்லாம".


 
அதைவச்சி என்ன பண்றது தம்பி! நாம யார்கிட்டயும் போய் நிக்கக் கூடாது. உழைக்கணும். எதுவாயிருந்தாலும் சொந்தக் கால்ல நிக்கணும். இது போதும் நமக்கு". எழுதிக்கொண்டு போன கேள்விகளை படித்து பார்க்க “ என்ன தோணுதோ... கேளுங்க”
என்றார்.

 “சாமி.  பழநியப்பன் கவிஞர் சொன்ன பிறகுதான் உங்க பாடல்கள் தேடிக் கேட்டேன்..
 
” வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இது தானடா? - பாடல்,
 
“ பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே”
பிறகு – “இருக்கும்  இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி-”
 
“அன்னையைப் போல் ஒரு
தெய்வமில்லை- அவள்
அடி தொழ மறுப்பவர்
மனிதனில்லை” –
இப்படி தத்துவமா எழுதியிருக்கீங்க –
இது கண்ணதாசன் பாட்டு  மாதிரியே இருக்கே?”
 
கா. மு. ஷெரீப் சிரித்தார்..“ கண்ணதாசன் இதுல நிறைய பேர் வாங்கிட்டார். அதனால நான் எழுதின இந்த வாழ்க்கை பலருக்கு தெரியலை. ஆனா கவியரசரே என்னை மிகவும் மதித்து பாராட்டிருக்கார். ஜெயகாந்தன் நிறைய விரும்பிப் பேசுவார்”.


 
” எப்படி பணம்தான் முக்கியம்னு சொல்றீங்க?”


 
“ முக்கியமா நினைக்குறாங்க என்பதுதான் அடிப்படை உண்மை. உலகத்தோட போக்கு அது. அதுக்கேத்த மாதிரி கதைகள் அமைஞ்சதால என் வாழ்வின் அனுபவங்கள் பாட்டா மாறியது”.
 
“ நானூறு பாடல்கள் மேல் எழுதியிருக்கீங்க” எங்க படிச்சீங்க?
“ நானா .. படிக்கவே பள்ளிக்குப் போகலை...அப்பா தனியா ஒரு வாத்தியார்கிட்ட இலக்கிய, இலக்கணம் கத்துக்க சொன்னார். அதான்  எனக்கு உதவியது.”
 
 
“கண்ணதாசன்  மாதிரி அரசியல், பத்திரிகை அனுபவம்”


 
“ஓ.. தெரியாதா உங்களுக்கு... ஒலி, தமிழ் முழக்கம் - ஆசிரியர் நான் தான், காங்கிரஸோட இணக்கம். வெள்ளையனே வெளியேறு இயக்கத்துல கலந்துகிட்டேன்... பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞரோட நட்பு. 1933ல் – பெரியார் நடத்துன 'குடியரசு’  பத்திரிக்கையில கவிதை எழுதினேன். சிவாஜி - பத்திரிக்கையில துணை ஆசிரியரா கொஞ்ச காலம். மா. பொ. சி நடத்துன செங்கோல்லயும். எழுதுவேன். சினிமா பாடல், கவிதை, புதினங்கள் எழுபதுக்கு அப்புறம் ஆன்மீகம் பக்கம் - வாழ்க்கை போற போக்குல போயிகிட்டிருக்கேன். ‘இப்ப சொந்த பதிப்பகத்துல - நூல்கள் வெளியிடுறேன்”. இப்படியாக பேச்சு பரவலாகப் போய்க் கொண்டிருந்தது. எளிமையாகவே வீடும் அவரும் தென்பட்டனர். எண்பதுகளில் அவரைத்தேடித் தேடிப்போய் பார்க்கிற சூழல்தான் இருந்தது. அவருக்கு தேடிப் போய் வாய்ப்பு கேட்கிற மனநிலை இல்லை.


 
வாசல் அருகே சிட்டுக்குருவி ஒன்று பறந்துபோக, ‘ அய்யா உங்க சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமாங்கற பாட்டு வீட்டுக்கு வீடு பாடக் கேட்டிருக்கேன்’ என்றேன்.


 
"ஆமா டவுன் பஸ்ல வர்ற பாட்டு"... ஐயோ இயற்கை சார்ந்து எழுதுறது ஒரு இயல்பு. கவித்துவமாகவும் இருக்கும்.
 
"வானில் முழு மதியைக் கண்டேன்,
உலவும் தென்றல் காற்றினிலே
ஏரிக்கரையில்மேலே போறவளே பெண்மயிலே"
 
 
இப்படியாக  எழுதுறது ரசனை மட்டுமல்ல, நம்ம வாழ்வியல் சூழலையும் குறிக்கும் என்றார். உங்களை கொண்டாட மறைந்தது திரையுலகம்னு நினைக்கிறீங்களா?
 
"அட நீங்கவேற" என கொல்லென சிரித்துவிட்டார்.
 
சிறிது மௌன இடைவெளிக்குப் பிறகு யதார்த்தமாக...


 
"காலமாற்றம்.... சுரதா சொல்ற மாதிரி தூங்கும்போது கூட காலாட்டிக்கிட்டே இருக்கணும். இல்லன்னா செத்துட்டம்னு தூக்கிப் போட்டுடுவாங்க". நான் விழிப்பா இருக்கிறதில்ல. மனம் சொல்ற வழி எழுதுறேன். ஆன்மிகம் அழகியலாயிருக்கு போதும்’ என்றார்.


 
பின்னாளில் எஸ்.என். லஷ்மியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் பாட்டுக்கு (பணம் பந்தியிலே) நாங்க நடந்து போற காட்சி. ஆனா, கவி கா.மு. ஷெரீப் தான் பாடல்கள்ல உயிர் கொடுத்து நடந்தார் என்றார்.


 

முஸ்லீம் மதத்தில் இருந்து எழுதிய பாடல்களில் எவ்வித மதக் கலப்பும் இன்றி, பொதுவாழ்வின் நியதிகளை இவர்போல் எவர் காட்டியிருக்கக் கூடும்?


 
"இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அழைக்கின்றார் ஞானத் தங்கமே!" இந்த வரிகள் இன்னும் என்னை குத்திக் கிழித்துக் கொண்டுதான் இருக்கின்றன...


 
சீறாப் புராணத்தை எட்டு பாகங்களில் அவர் எழுதிய பணி, "காதல் வேண்டாம், கனகாம்பரம், காதலும் கடமையும் போன்ற சிறுகதை நூல்கள், ஆன்ம கீதம், மச்சகந்தி, இன்றைய சமுதாயம் போன்ற கவிதை நூல்கள், புதுயுகம், புலவர் புகழேந்தி போன்ற நவீனங்கள், அரசியல் கட்டுரைகள், ஆன்மிகம் என இவரது படைப்புகள் நீண்டு காணப்படுகின்றன.


 
திருவாரூர் மாவட்டம் தந்த கவிஞர். அபிவிருந்தீஸ்வரர். ஊர். காதர்சா ராவுத்தர், முகமது இப்ராகீத்தம்மாள் பெற்றோர். சென்னையின் அண்ணாசிலையருகே தன் வாழ்வை 1994 – ஜீன் 7-இல் நிறைவு செய்ய வேண்டித்தான் காலம் பணித்ததோ என்னவோ?


 
ஆகஸ்டு 11, 1914-இல் பிறந்த அவரை 2020லும் நினைவு கொள்ள வைத்திருக்கிறது என்றால் அது அவரின் படைப்புகளே! வாழ்வியல் யதார்த்தங்களே!


 
காலத்தைத் தாண்டி இப்போதும் பொருந்தும் வரிகள், சொந்த வாழ்வில் யாவருக்கும் விட, ஏன் எனக்கும்!
“ ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?”


 
அடடா...! பல மணி நேரம் அவரை சந்தித்துப் பேசியபோது அவரோடு சேர்ந்து செல்பி எடுக்கத் தோணாமல் போய்விட்டது... ஓ... அப்போதுதான் செல்பி ( தற்படம்) எடுக்கிற மோகம் இல்லையே!?

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...