அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   17 , 2020  13:44:20 IST

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் பல மொழிகளில் நடித்த நாகேஷுக்கு தேசிய விருது, மாநில அரசு விருது நம்மவர் படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. இதைத்தவிர தனது நடிப்பால் மக்களைக் கவர்ந்த ஏராளமான படங்களில் நாகேஷ் நடித்திருந்தும் ஏன் அவர் கொண்டுகொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
 
 
நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம் - கதாநாயகன், திருவிளையாடல் தருமி, அன்பே வா - காவலாளி, தில்லானா மோகனாம்பாள் என கண்ணில் அவரின் நடிப்பு நிழலாடுகிறது.
அவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது மகிழ்ச்சி - வாழ்நாள் சாதனை விருது ஃபிலிம் ஃபேர் தந்து கௌரவம் சேர்த்துக்கொண்டது.
 
 
நாகேஷ் தன் நடிப்பின் டைமிங், உடலசைவு, நடனம் - ஒல்லிக்குச்சி உடலால் அவர் செய்கிற சேட்டைகள் என தனக்கென தனி இடத்தை திரையுலகில் பெற்றார். நான் பத்திரிகையில் பணியாற்றியபோது நாகேஷை பேட்டிக்காக பலமுறை வீட்டுக்கும், அவருடைய தி. நகரில் உள்ள நாகேஷ் தியேட்டருக்கும் சென்று சந்தித்துப் பேசியுள்ளேன்.
 
 
நாகேஷ் தியேட்டர் பாண்டிபஜாரில் ஒரு பிரபல பள்ளி எதிரில் கட்டப்பட்டதால் தியேட்டர் திறக்க அனுமதி கிடைக்காமல் கஷ்டப்பட்டார். பின்னர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உதவியால் அனுமதி கிடைத்து திறக்கப்பட்டது.
 
 
1985 என்று கருதுகிறேன். அவர் ஆனந்த் பாபுவை ஹீரோவாக அறிமுகம் செய்து நாகேஷ் இயக்கிய படம். நாகேஷ் தியேட்டரில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி சக்கைப் போடு போட்டது.
 
 
நாகேஷைப் பார்க்கப் போனால் உடனே பாடும் வானம்பாடி பார்க்கவைத்துவிடுவார். கண்டிப்பு அல்ல அன்புதான். ஐந்து முறைக்குமேல் பார்த்துள்ளேன்.  அது ஹிந்தி ரீமேக்தான். பேண்ட் சர்ட்டுகளின் மேல் நடனம் ஆடும்போது மின்விளக்குகள் வரிசையாய் எரிவது போன்று காட்சிகள் மீது பிரமிப்பு அப்போது. ஆனந்த் பாபு மேல் வந்த பிரியம் நாகேஷின் ஆரம்பகால டான்ஸ் போல் உள்ளது என்பதால்தான்.
 
 
பிள்ளையை வெற்றிகரமான கதாநாயகனாக முதல் படத்தில் அறிமுகம் செய்த திருப்தி அவர் பேச்சில் அடிக்கடி புலப்பட்டது. ஆனால் பின்னாளில் அது ஏன் நிலைக்கவில்லை என்பது காலத்தின் கையில். அப்போது நடனத்தில் புகழ்பெற்ற கமல்ஹாசனை ஒப்பிட்டு பலர் பேசினர். இனி கமல் என்ன செய்வார்? ஆனந்த்பாபு கமலை விஞ்சிவிட்டார் என்றார்கள். காதுபடப் பலர் பேசியதை என்னால் நினைவுகூற முடிகிறது.
 
 
ஆனால் பல்திறமை கொண்ட ஆளுமை கமல்ஹாசன் அதையும் தாண்டி புதுப்பரிணாமத்தில் தன்னை புதுப்பித்துக் கொண்டு வெற்றிகரமாக இயங்கினார் என்பது நிதர்சனம்.  ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிசின் சாயலும், பிடித்தமும் நாகேஷுக்கு இருந்தது என சொல்லப்பட்டாலும் தனது தனித்த ஆழ்மன திறமை அவரை காத்தது.
 
 
 
ஆனந்த் பாபுவை தன் வாரிசாக கொண்டுவர வேண்டுமென்று ரொம்பவும் ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு அப்போது நான் சொன்னேன். திருப்பூர் அருகே உள்ள கொளஞ்சிவாடி செய்யூர் கிருஷ்ணா நாகேஸ்வரன்   27, செப்டம்பர் 1933-இல் பிறந்த நாகேஷ் எப்படியாவது முட்டிமோதி, எவரையாவது பிடித்து முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்ற வெறி இருந்தது. வந்தார். ஆனால் அடுத்த தலைமுறை அப்படி அல்ல. புகழ்வாய்ந்த, பணக்கார தந்தை நாகேஷுக்குப் பிறந்தவருக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அதுதான் வேறுபாடு. எங்கோ சிலர் விதிவிலக்கு என்றேன். அவரும், "ஆமாம் பசி அறிந்தவனுக்கும், அறியாதவனுக்கும் உள்ள வேறுபாடு" என்றார்.
 
 
 
அதன்பின் குடும்பத்தில் பல பிரச்சனைகள். தியேட்டருக்கு வருவார், போவார். பிறகு தியேட்டரையே கொடுத்துவிட்டார். இப்போது திருமண மண்டபமாக மாறிவிட்டது. இதேபோல இதன் அருகில் ராஜகுமாரி தியேட்டர் இருந்தது. அதில்தான் பகல் காட்சியாக 'அவள் அப்படிதான்' படம் பார்த்தேன்.
 
 
 
அந்த தியேட்டர் இப்போது பிக் பஜார் கட்டிடமாக மாறிவிட்டது. நல்லவேளை தி.நகர் டிப்போ எதிரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டர் மாறவில்லை. புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள். பிறகு நாகேஷை நான் பார்த்தது அபூர்வ சகோதரர்கள் படத்தின்போது தான். "என்னய்யா நீ இங்கே?" என்று அவர் வீட்டிற்கு போய் நின்றதும் கேட்டார்.
 
 
நான் உதவி இப்போது உதவி இயக்குநர் என்றேன். அது சரி. பேனா பிடிச்ச கை இப்போது டயலாக் சொல்ல வருதோ என்று கிண்டலாகச் சொன்னார். அப்போதெல்லாம் இப்போது போல பத்திரிகையாளர்களை சினிமாவில் வரவேற்கமாட்டார்கள். அதனால்தான் என்னைப் பார்த்து அவர் விமர்சித்துச் சொன்ன சொற்கள்.
 
 
நல்லவேளை மணிவண்ணன்  பலமுறை என்னை கூப்பிட்டார். ஜெயபாரதி, பாலு ஆனந்த் படங்களில் கொஞ்சகாலம் பணி செய்த அனுபவம். ஆனால் கமல் சார்தான் உதவி இயக்குனராக அப்படத்தில் அறிமுகம் செய்தார்.
 
 
கமல் சார் கதை சொல்ல அனுப்பினார் என்றேன்.
 
சரி சொல்லு என பவ்யமாக கையை கட்டினார்.
 
சார் என்ன சார் இது இப்படி கையை கட்டிக்கிட்டு என சங்கடப்பட்டேன்.
 
விடுய்யா... நீ கதை சொல்லு என்றார்.
 
 
கதை சொன்னேன்...
"வில்லன் குணாதிசயத்தை" கேட்டுவிட்டு,
ஏம்பா இது நல்லாவா இருக்கு. காமெடியனை வில்லன்னு சொல்லி காமெடி பண்றீங்க என்றார்.
 
 
மூணு வில்லன். டெல்லி கணேஷ், ஜெய்சங்கர், நீங்க. புதுமுயற்சி என்றேன்.  "ஓ அவங்களையும் விடலையா? வெளியில நல்லவனா யாரும் இருக்க கூடாது" என சிரித்தபடியே சொன்னவர். சரி விடு... கமல் சொன்னா அதுல அர்த்தம் இருக்கும். பண்ணிடலாம். கெட்டப் என்ன? யார் விக் மேக்கர்? ட்ரஸ் யார்? என இன்வால்வ் ஆகிவிட்டார்.
 
 
உண்மையில் நாகேஷ் ஓரு சீரியஸானவர். அனுபவங்களின் வெளிப்பாடு நகைச்சுவையாக மாறிப்போனது. நீண்டகால இடைவெளிக்குப்பின் நடிக்க வருவதால் அதிக கவனமும், ஈடுபாடும் அவருக்கு இருந்தது.
 
 
ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின்போதும் ஃபாரின் சிகரெட் பாக்கெட் இல்லாமல் மேக்கப் போடவேமாட்டார். ஆனால் அவர் அதை குடித்து நான் பார்த்ததே இல்லை. பிறகெதற்கு இந்தக் கெடுபிடியோடு அவர் ஒவ்வொரு நாளும் வாங்கினார் என்று எனக்குப் புரியவே இல்லை.
 
 
படப்பிடிப்பில் நாகேஷ் - மனோரமா பேசிக்கொண்டதே இல்லை. ஏனிப்படி என்று நாகேஷைக் கேட்டதற்கு அவர் பேசாமல் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார். படத்தில் நாகேஷை அடித்துக் கொல்வது போல் சர்க்கஸில் படமெடுக்கும்போது மனோரமா படப்படப்பாகவும், மனச்சோர்வுடனும் காணப்பட்டார். அதேபோல் துப்பாக்கியால் சுடுகிற காட்சி எடுக்கும்போதும் சங்கடப்பட்டார். அந்த சங்கடம் நாகேஷின் மேல் கொண்ட அன்பு என்பது என்பது அரசல் புரசலாகக் காதில் விழுந்தது.
 
 
அபூர்வ சகோதரர்கள் டப்பிங்கில் ஒரு சம்பவம். ஏ.வி.எம் டப்பிங் தியேட்டரில். அந்த நிகழ்வு எனக்கும் நாகேஷுக்குமான ஆழமான புரிதலையும். மேன்மையையும் எடுத்துக் காட்டியது.
 
 
அது சம்பவம் தான். ஆனால் கொஞ்சம் கோபத்தோடு நடந்தேறியது.
 
நாகேஷ் டப்பிங் பேச வந்தார். இன்ஜினியர் அருகில் நான் அமர்ந்து லிப் சிங்க் பார்த்துக் கொண்டிருந்தேன்.
 
 
நாகேஷ், டெல்லிகணேஷ், ஜெய்சங்கர் மூவரையும் கைது செய்து அழைத்துக் கொண்டு போவது போல் காட்சி. அங்கு யாருக்கும் வசனம் இல்லை. ரீ ரெக்கார்டிங்கில் அந்தக் காட்சியை மேன்மைப்படுத்துவதற்காக நடக்கும் ஷாட் எடுக்கப்பட்டது. ஆனால் அதில் ட்ரவுசர் போட்டுக் கொண்டு சட்டையில்லாமல் வரும் நாகேஷ் அவர் நடந்துவரும்போது "வேறொண்ணுமில்ல... நீச்சல்குளம் திறக்க கூப்டுகிட்டுப் போறாங்க" என பேசுவேன் என்றார்.
 
 
படமெடுக்கும்போது அதில் பேச்சே இல்லை. ஆனால் அதில் நான் பேசுகிறேன் என்றார். அந்தப் படத்தில் கமல்சாரோடு ஒன் லைன் ஆர்டரில் துவங்கி முடிவு வரை கூடவே இருந்து பயணப்பட்டு எழுதியவன் என்பதால் அந்தப் படத்தில் குறிப்பாய் அந்தக் காட்சியில் இப்படி பேசினால் அந்தக் காட்சி காமெடியாகிவிடும். எனவே அந்த ஷாட்டில் எதுவும் பேசக்கூடாது என கூறினேன்.
 
 
 
ஆனால் நாகேஷ் விடுவதாக இல்லை. "நான் பேசுகிறேன். எடுத்துக்கொள் பின்னால் வேண்டாமென்றால் விட்டு விடலாம்" என்றார். நான் அதற்கெல்லாம் இடமில்லை என்று மறுத்து விட்டேன்.
 
 
எடுத்தால்தான் மேற்கொண்டு டப்பிங் பேசுவேன் என்றிருக்க நானும் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். டப்பிங் தடைபட்டு ஒரு மணி நேரம் ஆக, லஞ்ச் பிரேக் விடப்பட்டது. இது புகாராக கமல் சாருக்குப் போக கமல் சார்  அங்கு வந்து என்னை தனியாக அழைத்து என்ன ஆனது ? என்று கேட்டார். நானோ, அந்த இடத்தில் நாகேஷ் சொன்னது போல் பேசினால் – ஒரு வேளை அவரின் வசனம் சரி என்று தோன்றி வைத்து விட்டால் கதைக்கு முக்கியத்துவமான காட்சி அழுத்தமின்றி போய்விடும். நாகேஷ் சாரை மறுக்கவில்லை. படைப்பின் தன்மை இடம் தரவில்லை என்றேன். “ இந்தப் பதிலைக் கேட்டுவிட்டு தட்டிக் கொடுத்து விட்டுப்போய் விட்டார். 
 
 
நாகேஷ் சாரோ மறுபடியும் டப்பிங் ஆரம்பித்ததும் அந்தக் காட்சியில் வசனம் பேச முற்பட்டார். நான் வேண்டாம் என்றேன். கமல் சார் வந்து போன பின்னும் இப்படி நான் பேசியதை புரிந்து கொண்டு டக்கென கையெடுத்து கும்பிட்டு “ டைரக்டர் குரு ஸ்தானம். நீங்க என்ன சொல்றீங்களோ அதை செய்கிறேன்” என்றார்.  நான் இதைத்தான் முதலில் இருந்து வேண்டாம் என்கிறேன் என்றேன்.
 
 
அதை சரியாக உணர்ந்த நாகேஷ் சார் அடுத்த காட்சிக்கு டப்பிங் பேசப் போனார். இது ஏதோ ஈகோவார் போல் மற்றவர்களுக்குப்பட்டது. ஆனால் படம் முடிந்து  வெள்ளிவிழா கொண்டாடி கமல் சார் அடையார் கேட் ஹோட்டலில் விருந்து வைக்கும்போது நாகேஷ் கமல் சாரிடம் “ இவன் பிடிவாதக்காரன் நல்லவன் யாருக்கும் வளைய மாட்டேன். எங்க கண்டுபிடிச்சே’ என்று மனதாரப் பாராட்டி கட்டிப்பிடித்து கொஞ்சியது- மிக உயர்ந்த கலைஞர்களின் பண்பை எனக்கு உணர்த்தியது. 
 
 
நிறைய நாகேஷிடம் பேச விஷயங்கள் இருந்தன. கலை , சமூகம் , காதல் என பல தரப்பிலும் பேச முடியும். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் படங்களில் அவர் நடிக்க நான் வசனம் சொல்லிக் கொடுக்க – நடிப்பது போல் பேசுவேன். திட்டுவார். “ நீ வசனத்தை சொல்லு நடிக்காதே” என்பார். சாதாரணமாகச் சொன்னால் “ எப்படிடா நடிக்கிறது. உணர்ச்சியோட பேசு” என்பார்.
 
 
நாகேஷ் அறிவுள்ள குழந்தை... சமயத்தில் அடம்பிடிப்பார். சீண்டினால் சினம் கொள்வார்.
 
 
வாலி பற்றியும் டைரக்டர் ஸ்ரீதர் பற்றியும் பேசும்போது நெகிழ்ந்துவிடுவார். உண்மையில் சொல்லப்போனால் பாலசந்தரால் முதன்மைப்படுத்தப்பட்டது போல் கமல் நாகேஷை நம்மவரில் பயன்படுத்தியிருப்பார். நாகேஷின் திறம் காமெடி அல்ல. உணர்வு மிகுந்த கலைஞனின் வெளிப்பாடு.
 
 
நாகேஷோடு பயணிப்பது கடினம். முன்பின்னாக எதிரொலிப்பார். உந்து விசைச் சக்தியில் தானே எதிர்வினை என்பதான சூத்திரமே நாகேஷ். தன்னையே பகடியாக்கி எழுச்சி பெறும் தந்திரம் அறிந்த மாகலைஞன் நாகேஷ். இவர்பற்றி விஜயா பதிப்பகம் வேலாயுதம் இவ்வாறாக நினைவு கூர்ந்தார். "கோவை ரயில் நிலையம் வரும்போது வரவேற்க நான் போனபோது நாகேஷும், ஜெயகாந்தனும் செய்த அரட்டை மறக்க இயலாதது."
 
 
ஓஹோ புரடக்ஷன்ஸ் பட காமெடி பாலையாவிடம் நாகேஷ் செய்கிற ஒரு காட்சிதான் இன்றளவும் கதை சொல்கிற படைப்பாளனின் அவஸ்தையாக முத்திரை பதிக்கிறது. நாகேஷ் கடைசி காலத்தில் இயக்குனராகப் பரிமாணிக்க  வேண்டும்- தொடர வேண்டுமென்று கருதினார். அவரிடம் எழுத்தாளர் பசுமைக்குமார் சில காலம் உதவி இயக்குனராக இருந்து செயல்பட்டார். சோஷலிச சிந்தனை கொண்ட  நாகேஷ் சுறுசுறுப்பான மேன்பட்ட கலைஞர். கலைவாணர் என் எஸ் கே வுக்கு கிடைத்த இடமும் உயர்வும் நாகேஷுக்கும் சமூகம் தர வேண்டும் என்பது எனது அவா.
 
 
அவரின் பட காட்சிகளும், நடிப்பும் நடிப்புக் கல்லூரிக்கு கலைக் களஞ்சியம். பல் திறமை வெளிப்பட எண்ணினால் நாகேஷின் நடிப்பை அலசி ஆராய்ந்தாலே போதுமானது.
 
 
(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...