???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழி திணிப்பை அதிமுக அரசு ஏற்காது: அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 0 எஸ்.பி.பி சிகிச்சைக்கான மருத்துவக் கட்டண சர்ச்சை: எஸ்.பி.பி சரண் விளக்கம் 0 மனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன்: அனில் அம்பானி 0 திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு 0 புதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு 0 அதிமுக செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது! 0 வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் 0 வேளாண் திருத்த மசோதா சட்டமானது! 0 ராஜிவ் காந்தி சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு 0 பஞ்சாப்பில் விவசாயிகள் 3-வது நாளாக ரயில் மறியல் போராட்டம் 0 திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை: போலீசார் விசாரணை 0 பள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி 0 தமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று 0 ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் 0 பொருள் இருப்பு அதிகம் வைத்திருக்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அபராதம்: தமிழக அரசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 28- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   23 , 2020  23:50:49 IST

 ஒரு மொழி தன் வாழ்வின் அடையாளம் ஆவதும்., அதன்வழியாக ஒரு அமைப்பை உருவாக்கி பல படைப்பாளர்களையும் அடையாளம் காண்பித்து உயர்த்துவதும் தான் தனது வாழ்நாள் கொள்கை என்று விடாப்பிடியாக வாழ்கிறார் என்றால் அதில் என் மனதிற்கு அருகாமையில் ஒருவர் உண்டு.
ஒருவரா?


தமிழகத்தில் பலர் உள்ளனரே என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது .
ஆனால் தன் உடல்நிலை பாதிப்பிலும் தனது இயக்கத்தை நடத்துகிறவர் இவரைத்தவிர வேறு எவரும் இல்லை என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லலாம்.

 

அவர்-இவர்தான் சிறந்த படைப்பாளிகளுக்கு மாதம் தோறும் அன்னம் இலக்கிய விருது அளித்து கௌரவப்படுத்தும் இலக்கிய வீதி இனியவன். 1977 இல் இலக்கிய வீதி அமைப்பைத் தொடங்கினார்.  

 

இன்றுவரை விடாது  நடத்திக் கொண்டு வருகிறார்.
கவிஞர் தாராபாரதியை  தொடர்ந்து பிரபலப்படுத்திக் கொண்டிருப்பார்.
தாராபாரதியின் கவிதை ஒன்று மிகப் பிரபலம்.
 “வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும்
மூலதனம்”

 

இனியவன் அவர்களை நான் எண்பதுகளில் மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதிலிருந்து பழக்கம். அப்போது லயோலா கல்லூரிக்கு முன்பாக ஐக்கப் அலுவலகம் இருந்தது.
அதிலிருந்து வெளிவந்த மாணவர்கள் மாத இதழ் தேன்மழை இதழில் துணை ஆசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கே தான் திண்டுக்கல் பால்பாஸ்கர், மகிமைப்பிரகாசம், விழுப்புரம் என்ஜிஓ சின்னப்பன், செங்கல்பட்டு ஜோசப்ராஜா, வாலண்டினா, கடலூர் அந்தோணிராஜ், ஃபாதர் கிளாட், ஹென்றி டிபேன், பால்ராஜ் போன்றோர்கள் பழக்கமாயினர்.

 

 இன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் அவர்களை சந்திப்பதும் அரிது. பலர் தொடர்பில் இல்லை. அது ஒரு காலம்.


அரும்பு பத்திரிகையில் சிறுகதைக்கான பரிசு பெற்ற தெம்பில் இலக்கிய விதிக்கும் சிறுகதை எழுதி அனுப்ப அந்தக்கதை அம்மாத பரிசு பெற்றது. பிறகு அது இலக்கிய வீதி சிறுகதைகள் நூலாகவும் வெளிவந்தது.


 மாதந்தோறும் இலக்கியத்திற்கான முன்னெடுப்புகள் மதுராந்தகம் பகுதியில் நிகழ்த்தி ஆச்சரியப்படுத்தினார் இனியவன். பல சமயம் நான் அதில் கலந்து கொண்டு உரை நிகழ்தியும் உள்ளேன்.


சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இலக்கியச் சிந்தனை அமைப்பு மாதம் தோறும் வார மாத இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளை ஆய்வு செய்து சிறந்த சிறுகதை ஒன்று வெளிப்படுத்தி பரிசு தருவது வழக்கம். அப்படி ஒரு மாதத்தில் நான் சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தியவர்தான் களந்தை பீர்முகமது. இந்த செய்தியை சமீபத்தில் நெல்லையில் ராம்தங்கம் நடத்திய பொன்னீலன் 80 விழாவில் பீர்முகமதுவே நினைவுபடுத்தியது ஆச்சரிய பரிமாற்றம்.

 

ஏன் இதை சொல்கிறேன் என்றால் இனியவன் இதுவரை இலக்கிய வீதி மூலம் 112 எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அதோடு நிற்காமல் 127 கவிஞர்கள், 5 ஓவியர்கள், 23 இலக்கிய விமர்சகர்களை என பட்டியல் நீள்கிறதென்றால் அவரின் மனம், அவரின் பண்பு விடா முயற்சி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

 

இத்தனைக்கும் இனியவன் அடிப்படையில் ஒரு விவசாயி. ரெட்டியார் . வீட்டில் தெலுங்கு பேசுவார். வசதி உள்ளவர்தான். ஆனால் கிராமத்து எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் உயர வேண்டும் என்கிற வேள்வி அவருக்கு உறக்கத்திலும் உண்டு.
 

 

எழுத்தாளர் ராஜ்குமார், எஸ். குமார், அமுதவன், சங்கர நாராயணன்,  என்னையும் சேர்த்து ஏராளம் தாராளம் இனியவன் கண்டெடுப்புகளே. நான் பல முறை வேடந்தாங்கல் அவரது இல்லத்திற்கு சென்று உணவருந்தி, உரையாடி விட்டு வந்திருக்கிறேன்.

 

அது தொண்ணூறுக்கு முன் என்று நினைக்கிறேன். இனியவன் அவர்களைப் பார்த்துவிட்டு அதிகாலை  வேடந்தாங்கல் ஏரிக்கரையில் நடந்து போய்க்கொண்டே அந்த ஏரி மரக்கிளைகளில் வந்தமரும் வெளிநாட்டுப் பறவைகளை பார்த்து இரசிப்பதும், மெல்லிய சிலுசிலு காற்றில் ஊஞ்சல் ஆடிக்கொண்டு காதில் நுழையும் குருவி அணில் பறவைகள் ஒலி கேட்க அவ்வளவு சுகமாக இருக்கும்.

 

அந்த அனுபவம் பெறாமல் போனால் இந்த மனிதப்பிறவிக்கு அர்த்தமே இல்லை. இனியவன் வாழ்க்கையின் அடிப்படை மனிதநேயம் இங்கேயிருந்து தொடங்க இயல்பான வாய்ப்பிருக்கிறது. எங்கெங்கோ இருந்து வருகிற பறவைகளுக்கு தாய்நிலம் பிற வேடந்தாங்கல் போல் இலக்கிய உலகில் இனியவன் ஆகிவிட்டார்.
வேடந்தாங்கல் பற்றி நூல் எழுதியுள்ளார்.

 


அக்டோபர் தொடங்கி மார்ச் வரை பறவைகள் சீசன். பிள்ளைகளோடு பார்த்து விட்டு வருவது உத்தமம். நீண்ட காலம் கழித்து ஒருநாள் மாலைநேரம். மாலை என்றால் ஒன்றரை மணியிருக்கும் பாடலாசிரியர் முத்துக் கூத்தன் மகன் கலை வைத்திருந்த ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் திடீரென சந்தித்தேன். என்ன எழுதறதில்லையா பார்க்கவே முடியறதில்லே என்று கேட்டார்.

 

எழுதிகிட்டுதான் இருக்கேன் நீங்க பாக்கறதில்லை என்றேன்.
“மாறவேயில்லை அதே குறும்பு ராசி பேச்சில்” என்றார். நம் வாய் சும்மா இருக்குமா?  “நிஜத்திற்குப் பேரு குறும்பா? ’’பதில் தந்தேன்.
சிரித்து விட்டார். பிறகு இலக்கிய நிகழ்வு ஓரிரண்டில் கலந்த நினைவு.
 

 

ஆஹா இதைத்தான் நான் முதலில் சொல்லியிருக்க வேண்டும். விடுபட்டுப்போச்சு. ஒருநாள் கமலிடம் சேர்ந்த பின் என்ன ஆளையே பார்க்க முடியலை என்று ஆரம்பித்து காலையில் தொடங்கிய பேச்சு தி நகர், பரசைவாக்கம், ஆர்எம்வீ வீடு சுற்றி இரவு பெரம்பூர் அவரின் மகள் வீடு என்று நினைக்கிறேன் வெளிநாடு போன சமயம் வீட்டில் யாருமில்லை என்பதால் அங்கேயே பேசிப்பேசி தூங்கிவிட்டு மறுநாள் காலைதான் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
 

அட வீட்டுக்கு வந்தபின் தலைகீழ்.

“எங்க போனீங்க”

“ இனியவன் சார் கூட...’’

‘ஏன் அப்படியே போயிடவேண்டியதுதானே

உங்களுக்கு எதுக்கு குடும்பம்?’

 ‘’இல்ல ரொம்ப வருஷமாச்சு பார்த்து. அதான் ”

‘ஓ அடுத்த பத்து வருஷத்துக்கு பார்க்கமாட்டீங்களோ அத சேர்த்து பேசிட்டு வந்திட்டீங்களோ’

‘அட இது நல்லாருக்கே’ என்றேன்.

 

சிறிது மௌனத்திற்கிற்குப்பின் மனைவி சொன்னாள்.

‘எங்கியாவது போ

சொல்லிட்டுப்போ

நான் நிம்மதியா தூங்கணும்ல..’

இனியவன் சாரோடு கழித்த அந்த நாளில் அறிந்த நீதி.எங்கு போனாலும் சொல்லி விட்டுப் போகவது.

 

பிறகு ஒருமுறை ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்த கம்பன்கழகத்தில் பேச வைத்து அழகு பார்த்தார்.  நிஜமாகச்சொல்கிறேன், ஒரு படைப்பாளன் இன்னொரு படைப்பாளனை உயர்த்தி பெருமைப்படுத்தமாட்டான். ஆனால் இனியவன் படைப்பாளர்களை கொண்டாடிக்கொண்டே இருக்கிறார். அன்னம் விருது வழங்கி சிறப்பிக்கிறார். சென்ற ஆண்டு எனக்கு அன்னம் இலக்கிய விருது அளித்து கௌரவப்படுத்தினார். அண்ணன் அறிவுமதி இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

 

என்ன வருத்தம் என்றால் இப்போது பேசமுடியாத நிலை. எழுதிக் காண்பிக்கிறார் .அதுதான் அவரின் பேச்சுமொழி ஆகிவிட்டது.  அவர் இன்னமும் மாதாமாதம் விழா நடத்துகிறார். அவரின் எண்ணங்களுக்கு உறுதுணையாக மகள் வாசுகி., மருமகன், பேத்தி யாழினி வடிவம் தந்து பக்க பலமாக உள்ளனர்.

 “ அவருக்கு பக்கவாத பாதிப்பு, ஆரம்ப நிலை பார்க்கின்சனின் பாதிப்பு,  தொடர் மருத்துவத்தால் , மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளின் பாதிப்பு என்று அவர் படும் அவஸ்தை காணப் பொறுக்காமல் அவர் ஓய்வெடுக்கலாமே என்ற எண்ணம் எங்களுக்கு தான்.

 

ஆனால்  இன்னும் அவர் மன ஓட்டத்துக்கு எங்களால் ஈடு கொடுத்து நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில் மூச்சு முட்டுகிறது” இப்படி சொன்னது இனியவனின் அன்பு மகள் வாசுகி. இது கவலைப்பட்டு சொன்ன சொற்கள் அல்ல. அப்பாவின் மனம் நோகாமல் அவர் எண்ணங்களை நிறைவேற்ற முயல்கிறோம் என்பதான மனசு.

 

இப்படி திருமணம் ஆகியும் தந்தையை புரிந்து கொண்டு உதவுகிற பெண்ணையும் குடும்பத்தையும் பார்க்க முடியுமா என்ன?

 

 சில ஆண்டுகளுக்கு முன்புதான் இனியவன் அவர்களுக்கு இப்படி பக்கவாதம் வந்து மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். நான் பார்க்கும் முன்னர் இயக்குனர் எஸ் பி முத்துராமன் வந்து பார்த்து விட்டுப் போனார் ். நானும் எனது கலை இயக்குனர் ஶ்ரீமன் உடன் சென்று பார்த்தோம் . அப்போது பேச்சில்லை. நான் பேச அதற்குப்பதிலாக எழுதிக் காண்பித்தார் . சில சமயம் சைகை. உறவுகளுக்கு புரிகிறது. அட கொஞ்ச நேரம் இருந்தால் எனக்கே புரிய ஆரம்பித்து விடும்.

 சூழலுக்கு அப்படியான சக்தி உண்டு.

 அவரிடம் அப்போது நான் கண்டது.

 

1. மன உறுதி.

2. விருந்தோம்பல்

3. நல்லெண்ணம்

4. எழுதுங்கள் என்ற ஊக்குவிப்பு

 

எப்படி இப்படி ஒருவரால் இருக்க முடியும்? எனில் தன்னை நேசிக்கும் ஒருவனால் அது முடியும் என்பதே சரி. இவர் இலக்கிய. வீதி அமைப்பின் தலைவர். அதுமட்டுமில்லாமல் இவர் 250 க்கு மேல் சிறுகதை எழுதி உள்ளார் .

 

மாணவன்குரல் - இதில் ஆரம்பத்தில் எழுத த் துவங்கி பொன்மனம் நாவல்எழுதி பரிசு பெற்றுள்ளார். கல்கி இதழில் விதியின் கை என்ற கதை எழுதி முதல்பரிசு பெற்றுள்ளார் . நா பார்த்தசாரதியின் குறிஞ்சி மலருக்கு ரசிகன்.

 

17  நாவல்கள் 2 வேடந்தாங்கல் கைடு. அழ வள்ளியப்பா பெயரில் குழந்தை எழுத்துக்களை ஊக்குவிக்கிறார். பாரதி, பாரதிதாசன் , நாமக்கல் கவிஞருக்கு நூற்றாண்டு விழா நடத்தி பெருமை பெற்ற இனியவன்  இன்றும் ஆர் எம் வீ அய்யாவுக்கு கம்பன் கழகத்தில் அயராது பணியாற்றுகிறார். அவரின் அடையாளம் எது? என்று யோசித்துப் பார்க்கையில் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

 

“விநாயகநல்லூர் எனும் சிற்றூரில் இருந்து அதிகாலை 05 மணி பஸ் பிடித்து இரவு 10 மணி வண்டியில் இரவு பகல் மழை வெயில் பாராது சென்னை வந்து படைப்பாளர்களைச் சந்தித்து, மதுராந்தகம் அழைத்து வந்து மாதந்தோறும் தவறாது நிகழ்ச்சி நடத்திய தனியாட்படை இலக்கியவீதி  இனியவன் தான் சிறப்பு அடையாளம்.”

 

தமிழகத்தில் எத்தனையோ அமைப்புகள் உள்ளன. தனித்த படையாக நின்று களம் காணும் இனியவன் போல் வேறு எவரையும் தோன்றவில்லை. கிராமத்து மண்ணில் தோன்றிய வேடந்தாங்கல் இனியவன்.

அட இலக்கிய வீதி இனியவன் என் நெஞ்சத்தைக் கிள்ளிய மனிதம்!.

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...