???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 21- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   02 , 2019  06:13:34 IST


Andhimazhai Image

இயற்கையின் வினோதங்களை என்னவென்று சொல்வது? கொடுப்பது போல் எடுப்பதும் எடுப்பது போல் கொடுப்பதும் வாழ்வின் சூட்சுமங்களை அவ்வளவு சென்ற மாதம் அக்டோபர் 30 திருவனந்தபுரம் விமானத்தில் நாசர், கமீலா, ரவித்தம்பி, கிரி ஆகியோருடன்  நண்பர் நடிகர் பாலாசிங் மகள் திருமணத்திற்கு காலையில் பயணித்து இறங்கி அங்கிருந்து இரண்டு மணி நேரம் காரில் பயணித்து தமிழ்நாடு எல்லையில் தொடுமிடம் கலியக்காவிளையில் சி எஸ்சி சர்ச்சில் பெருத்த மழையினூடே திருமண நிகழ்வில் பங்கு கொண்டோம்.

 

பாலாசிங் கோட் சூட் போட்டு பெருமிதம் பொங்க மகளுடன் நடந்து வந்தார். ஆனால் மூன்று வாரங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் விஜயா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி மறைந்தார் என்பது எவ்வளவு பெரிய அநீதி? அவரின் மகளின் திருமணத்திற்கு சென்ற பின்தான் தெரிந்தது அவர் ஒரு கிறித்துவர் என்று. அவர் ஒரு நாளும் தன் அடையாளத்தை காண்பித்துக் கொண்டவரல்லர். இப்படியும் சொல்லலாம் அடையாளங்கள் குறியீடுகள் கண்டு நட்பு கொள்ளாத மனம் உடையவர்களாக இருந்தோம்.

 

பாலாசிங்கை முதன்முதலில் நான் சந்தித்தது தேயிலைக்காடான ஊட்டி மலைப் பிரதேசத்தில்தான். 1978 என்று கருதுகிறேன் . தேநீர் என்ற படப்பிடிப்பில் நடிப்பு சான்ஸ் கேட்டு புகைப்படம் எடுத்து நீட்டினார். கூடவே நேஷனல் ஸகூல் ஆஃப் டிராமாவில் நடிப்பு சர்டிபிகேட் காட்டினார். அட அப்போதே அவரிடம் சொன்னேன். ஒரு ஓம் பூரி, திலகன் இடத்தை பிடிப்பீர்கள் என…

 

 தேநீர்படம் எழுத்தாளர் செல்வராஜ் -இன் தேநீர் நாவலை நாவலை வைத்து இயக்குனர் ஜெயபாரதி டைரக்ஷன் செய்து கொண்டிருந்தார். அதில் நான் உதவி இயக்குனர். கம்யூனிஸ்ட் நண்பர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட படம். நான் மாநிலக்கல்லூரியில் படித்தபடியே விடுப்பு எடுத்துக் கொண்டு பணி செய்த படம். அந்தப் படத்தில் பாலாசிங்குக்கு வாய்ப்பு தர இயலவில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்தப்படம் ஒரு ஷெட்யூலுக்கு மேல் வளரவில்லை.

 

பிறகு அந்தப்படம் பல ஆண்டுகளுக்குப்பின் ஊமை ஜனங்கள் என்ற பெயரில் வெளி வந்தது. வேடிக்கை என்னவென்றால் புதிய வார்ப்புகளின் கதாநாயகன் பாக்யராஜின் இரண்டாவது படம் தேநீர்தான். ஊட்டி படப்பிடிப்போடு பாக்யராஜ் நடிப்பு முடிந்தது. அதற்கு மேல் அரை வைத்து எடுக்க முடியாமல் நடிகர் சந்திரசேகரைவைத்து கொஞ்சம் கதையை மாற்றி எடுத்து முடித்தனர்.

 

பாலாசிங் பழக எளிமையானவர். பார்த்ததும் நட்பு கொள்ள ஏதுவானவர். அலட்டிக் கொள்ளாத புகழ் தன்னை சிறைப்படுத்தாமல் பார்த்துக்கொண்ட சிறந்த மனிதர், தேநீர் படம் நின்று போனதும் நான் மீண்டும் கல்லூரியில் படிக்கக் சென்று விட்டேன். பிறகு படிப்பு முடிந்து தாய் வார இதழில் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்களிடம் உதவி ஆசிரியராக சேர்ந்த பின் முதன் முதலில் பாலாசிங்கை பேட்டி எடுத்துப் போட்டேன். அதன் பிறகு நாசர் பாலாசிங்கை வரவழைத்து அவதாரம் படத்தில் தனக்கு வில்லனாக அறிமுகம் செய்தார். அதில் அழுத்தமான கதாபாத்திரம். நடிப்பின் பல எல்லைகளைத் தொட்டிருக்க வேண்டிய பாலாசிங் சிறு சிறு வேடங்கள் தாங்கி நடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

 

 சினிமாதான் என்றில்லாமல் சின்னத்திரை, குறும்படங்கள், தொடர்கள், நாடகங்கள், கல்லூரி மாணவர்களின் திரைமொழிப் படங்கள் என தனது பரப்பை விரிவுபடுத்திக் கொண்டு உற்சாகமாகவே இருந்தார்.

 

அதுமட்டுமல்ல பரீக்ஷா நாடகத்தில் ஞாநியோடு இருந்தார். மலையாளம் கன்னடம், தெலுங்கு, தமிழ் என மொழிகள் தாண்டி நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார் . நட்புக்காக சிலருக்கு தயாரிப்பு மேற்பார்வையும் பார்த்தார்.

 

ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சொந்த ஊரான கலியக்காவிளைக்கு போய் விடுவார். தனது ஆசிரியை மனைவி பிள்ளைகளுடன் மகிழ்வாக காலம் தள்ளுவார். சென்னைக்கும் சொந்த ஊருக்குமான பயணத்தில் சினிமாவை சீரியஸாக எடுத்துக் கொண்டு எவரிடமும் வாய்ப்பு கேட்காமல் விட்டு விட்டார். ஒருமுறை நான் ஏன் பாலா பெரிய டைரக்டர்களிடம் சென்று அறிமுகம் செய்து கொண்டு சிறந்த கேரக்டர்களை கேட்கக் கூடாது என்று கேட்டேன்.

 

என்னால் எவரிடமும் சென்று வாய்ப்பு கேட்க இயலாது. நடிப்பதைப் பார்த்து வாய்ப்பு வரட்டும்  என்று சாதாரணமாக சொல்லி விடுவார் . இந்தியன், புதுப்பேட்டை படங்களில் கேரக்டர் ரோலில் நடித்து புகழ் பெற்றார்.

 

அவரிடம் உள்ள அழுத்தமான நடிப்பு மொழியை பயன்படுத்த எண்ணி அவருக்கென திரைக்கதை எழுது அவரை நடிக்க வைத்தேன். நெசவு நெய்யும் நெசவாளி தாத்தாவாக படம் முழுவதும் சட்டை போடாமல் நடிக்க வைத்தேன். கூடவே சவால் விட்டு நடித்த குழந்தை நட்சத்திரம் லட்சுமியோடு கிராமிய வாழ்வியலை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் .

 வறுமை, பாசம், தனிமை, சோகம், முதுமை, எழுச்சி என பல்வேறு நடிப்பின் நுட்பங்களை கையாண்டு நடித்தார். கிராமியச்சூழலை உள்வாங்கி நடித்த அவரின் திறமைக்கு விருது கிடைக்குமென நினைத்தேன் . ஆனால் அவரின் பேத்தியாக நடித்த லட்சுமிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்தது. ஒன்றை இங்கே குறிப்பிடுவது அவசியம் . இவரின் அழுத்தமான நடிப்பால் கதை அழுத்தத்தால் அந்த ஆண்டின் சிறந்த குடும்ப நெறிமுறைக்கான சிறந்த படம் விருது கிடைத்தது. அடடா படத்தின் பெயரை சொல்லவே இல்லையே . படம் வண்ணத்துப்பூச்சி. இது தமிழக அரசின் பரிந்துரையில் எட்டாண்டுகளுக்கும் மேல் பள்ளி கல்லூரிகளில் படம் திரையிடப்பட்டுக் கொண்டு வருகிறது. வண்ணத்துப்பூச்சி 2 எடுக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். ஏனோ அது தள்ளிக் கொண்டே போனது. பாலாசிங் கேட்டுக் கொண்டே இருந்தார். இதில் நான் இருக்கிறேன்தானே என்று.

 

காலம் வாழ வேண்டிய கலைஞனின் நாட்களை சுருக்கி விட்டது. நாடகங்களின் மேல் பெரு விருப்பம் கொண்ட பாலாசிங் தமிழகத்தில் அப்படியொரு சூழல் அமையாதது கண்டு மிகவும் கவலை கொண்டார்.  மேற்கு வங்காளம் கன்னடம் பகுதியில் நாடகங்களை தொன்மையாகவும் பெருமையாகவும் வளர்த்தெடுக்கும் நிலை இல்லாது போனது தனக்கான இடம் சரிவரக் கை கூடவில்லை என்று சங்கடத்தில் நாட்களை தள்ளினார் .இங்கு வெகுஜன சினிமா, காமெடி நாடகங்கள் இது தவிர்த்து பரீட்சத்தமான கலைமேடைகளுக்கு இடமில்லை.

 

புகழ் வாய்ந்த நடிகர்கள் கூட நாடகம் அழியாமல் காக்க நாடகங்களில் நடிப்பதை பெருமையாகக் கருதினர். ஆனால் நாசர், பசுபதி, பாலாசிங் என விரல் விட்டுஎண்ணுகிற அளவில் நடைமுறை இருந்தது.

 

வண்ணத்துப்பூச்சி ஆரம்ப ஜடியா சமயம் குழந்தை நடிகர் ஶ்ரீலட்சுமியை வடபழனி ஒரு ஓட்டலில் ஒளிப்பதிவாளர் ஶ்ரீதரன், உதவி இயக்குனர் சலீம் அண்ணன்  உடன் டெஸ்ட் எடுத்து பார்த்தோம். எதற்கும் தாத்தாவுடன் லட்சுமியை சேர்த்து போட்டோ எடுத்துப்பார்க்கத் தோன்றியது.

 

சரி பாலாசிங்கை அழைக்கலாம் என போன் செய்தேன். அப்போதே ஐந்துமணிக்கு மேல். எந்த நடிகரையும் இப்படி அழைக்கவும் முடியாது. அப்படி அழைத்தால் ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள். ஏக வசனத்தில் திட்டித் தீர்த்து விடுவார்கள் .ஆனால் பாலாசிங் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் வந்தார். சட்டை கழற்றி வெறும் உடலுடன் பேத்தியுடன் கொஞ்சும் ஸ்டில்ஸ் எடுத்தேன்.    ஸ்டில்ஸ் சாதரண செல்போனில் எடுக்க, அடுத்த 10 நிமிடத்தில் ஶ்ரீலட்சுமி திருப்பூர் ட்ரெயினுக்குப் பறந்து விட்டார்.

 

பிறகுதான் கேட்டார் பாலாசிங் என்னை தாத்தா வேடத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வைக்கிறாயே அது சரியாக வருமா? வில்லன் பாலாசிங் என்றுதானே பார்ப்பார்கள், யோசித்துக் கொள் என்று எச்சரித்தார்.

 

 பாலா எனக்கு நம்பிக்கை உள்ளது நீ பேசாமல் நடி என்றேன். பாலாசிங் அப்போது ஸ்டில்லில் தோன்றிய காட்சியில் நம்பிக்கை துளிர்விட்டது. பாலாசிங் ஒரு கிராமத்து வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். அவதாரம் . வண்ணத்துப்பூச்சி இரண்டும்தான் அவரின் மனதிற்கு நெருக்கமான படங்கள் என்பது வரை உணர்ந்தவர்களின் வெளிப்பாடு.

 

எனது இல்லம் புகு விழாவில் இணைந்து எனது மகன் ராஜா திருமண நிகழ்வு என எப்போதும் எளிமையாக நடப்பைத்தாண்டி உறவாக மாறினார் என்பதுதான் நிஜம். நான் அழைக்கும் போதெல்லாம் பள்ளி கல்லூரி இலக்கிய நிகழ்வுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். நான் ஒருமுறை அவரின் கலியக்காவிளை வீட்டிற்கு நண்பர்களுடன் சென்றேன். அது ஒரு காலை நேரம். குளு குளு காற்றில் காலாற நடந்து கொண்டிருந்த பாலாசிங்கைப் பார்த்தோம்.

 

  எந்த பந்தாவும் இல்லாமல் வரவேற்று எதிர்வீட்டில் உள்ள அண்ணன் வீட்டில் தயார் செய்த இட்டிலி சாம்பார் சகிதம் உபசரித்து அனுப்பினார் . தென்னை  மரங்கள் சூழ கட்டியுள்ள அழகிய வீட்டில் வசதியாக வாழந்திருப்பது அறிந்தேன். ஒரு மிராசுதாரர் போன்ற சூழலிலும் சென்னையில் சிறிய இடத்தில் நண்பர்களோடு எளிமையாக வாழ்ந்தது அவரின் பண்பை உணர்த்தியது.

 

 எனக்குத் தெரிந்து கே. கே நகரில் இருந்து போத்தீஸ் வழியாக பாண்டி பஜார் தேனாம்பேட்டை சிக்னல் வரை மாலையில் நடப்பதை ஒரு பழக்கமாக கொண்டிருந்தார். உடலைப் பேணிக் காப்பது அவசியம்  என  அவரின் உற்ற நண்பர் ருத்ரன் சொல்லியிருகக் கூடும். தனிமை என்பது ஒரு கடினமான பொழுது. அது பல்சமயம் மதுவால் நிரப்பப்படுகிறது என்பதை கண்ணதாசன் காலம் தொட்டு நடைமுறையானதோ என்னவோ இந்தக் கலைஞனுக்கும் அது பாடமாக அமைந்து விட்டது.

 

நடிகர் நாசரின் மேல் அளப்பறிய பற்று கொண்டிருந்தார். அவருடைய பொழுதுகளை ஓவியர் மருது,  இளையபாரதி, கிரி, தலைவாசல் விஜய், பசுபதி, கலைராணி, ஞாநி போன்ற கலைஞர்கள் சூழ்ந்தது என்பதை நானறிவேன். எதையும் பின்னாடி பேசாமல் நக்கலும் நையாண்டியாகப் பேசும் நகைச்சுவை, பாலாசிங் நண்பர்கள் மட்டுமே அறிந்த பலே பாலாசிங்.

 

விஜயா மருத்துவமனையில் கடைசி நாள் எவரையும் அனுமதிக்காத சூழலில் மனம் கேட்காமல் எனக்கு மிகவும் அறிமுகமான டாக்டரின் பரிந்துரையில் பாலாசிங்கை பார்த்தேன். எப்போதும் லாவணி பேசுகிற நண்பனின் குரல் இன்றி மூச்சு மட்டும் செயற்கை சுவாசத்தால் நீடித்துக் கொண்டிருந்தது. கைகளைத் தொட்டுப் பார்த்தபடி இருந்தேன். பாலாசிங் மரணத்தோடு போராட்டம் நடத்தியிருக்கக் கூடும்.  காலத்தின் கதவுகள் அப்போது திறந்துருந்தால் மீண்டும் நம்மோடு உரையாடி இருப்பார். அது ஏனோ நடைபெறவில்லை .வருத்தத்தோடு வெளியில் வந்து அவர் மகனிடம் பேசினேன்.

 

‘அப்பா மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்து விட்டார். மகள், மகனை  கரையேற்றி விட்டார். உடலைப் பேணி பார்த்துக் கொண்டிருந்தால் இன்னும் எங்களோடு வாழ்ந்திருக்கலாம். 67 வயது. எனது தந்தை பெருமைக்குரியவர். ‘ என்று தெளிவுடன் பேசி எமக்கு தைரியம் சொன்னார். ஒரு மகனை இவ்வளவு தெளிவுடன் வளர்த்தெடுத்த பாலாசிங் ஒரு நடிகனாக இல்லாமல் வெறும் புகழை மட்டும் விட்டு விட்டுச் செல்லும் பிரபலமாக இல்லாமல் ஒரு பெருமைக்குரிய தந்தையாக வாழ்ந்து விட்டு சென்றுள்ளார்.

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...