???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி 0 அ.ம.மு.கவை அங்கிகரித்தது தேர்தல் ஆணையம்! 0 இனி 24x7 நேரமும் NEFT பரிவர்த்தனை செய்யலாம்! 0 டெல்லியில் தீவிபத்து: 32 பேர் உயிரிழப்பு 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 20- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   25 , 2019  05:32:42 IST


Andhimazhai Image
 
எதற்காக இந்த இசையை கொண்டாட வேண்டும் என்று எனக்குப் புரிவதே இல்லை. நம் உணர்வை வெளிப்படுத்துவதற்கு பேச்சு மொழி போதாதா என்ன? எதற்காக வாழ்க்கையில் பாடல்? அது ஏன் திரைப்படத்தில் தவிர்க்க முடியாமல் போனது? அதைத் தவிர்த்து விட்டு வரும் மேலை நாட்டுப் படங்கள் சக்கை போடு போடுவதும் அதுதாண்டா நமக்கும் வெள்ளைக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் . நாம ஆடிப்பாடி ஓவரா எல்லாத்துக்கும் இடம் கொடுக்கிறதாலதான் நாம இன்னும் சரியா வளரலை என்று பேசுகிற இளைஞர் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.
 
 
பல்வேறு கருத்துக்கள் உலா வந்த போதிலும் ஆன்மாவோடு தாயின் பரிசுத்த நிலையில் பேசி உறவாடுவது இசை. அதனூடாக பாடல். இதை உலகம் ஒப்புக்கொள்ள யாதொரு தடையும் இல்லை.
இந்தியத் துணைக் கண்டத்தில் இசையில் மக்கள் ரசனையை வாழ்க்கையை தன்வசமாக்கிக் கொண்டு கோலோச்சியவர் பலர் உள்ளனர் என்றால் தமிழகத்தின் இசை முகவரி என்று அழைக்கத் தகுதியானவர் இளையராஜா . 
 
 
இசைஞானி என்று உலகம் அவரை கொண்டாடுகிறது. அன்னக்கிளியில் துவங்கி இன்று சைக்கோ படம் வரை ராஜா ராஜாதான். அவரின் இசை படத்தின் மையப்புள்ளி யாக மாறி விடுகிறது. சமீபத்தில் அவர் இசைத்த மிஷ்கின் படப் பாடல் ஒன்றை கேட்க நேர்ந்தது. 
 
 
அட டா என்ன விதமான இசை ஒழுங்கு. மென்மையாக ஒரு கிட்டாரில் துவங்கி படிப்படியாக தளித்தும் இசைக்கருவிகள் இணைந்தும் ஒரு பரவசமான உலகத்தை மனதில் விரியவைக்கிறார்.ஒரு சமயம் வானத்தில் கூட்டமாக பறந்து செல்லும் வண்ணப் பறவைகளின் அழகியலை இசையில் உருவாக்குகிறார்.
 
 
வண்ணங்களை குழைத்து நேர்த்தியான ஓவியன் வர்ணஜாலங்களோடு மனதுக்குள் ஊடுருவிச் சென்று இரகசியமாய் வரையும் அற்புத ஓவியம் போன்று இசைக்கோர்வைகளின் மூலம் சிருஷ்டிக்கிறார். நாடி நரம்புகளின் வழியாக பயணப்பட்டு உணர்வு சிகிச்சை செய்து வாழ்வின் உன்னத தருணங்களை உருவாக்குகிறார். அந்தப் பாடலில் கிராம தெருக்கூத்துகளில் பயன்படுத்தும் தாள ஒலியை ஒரே ஒரு இடத்தில கையாண்டு அட சபாஷ் என புருவத்தை வியக்க வைக்கிறார். என்னாச்சு இந்த ராஜாவுக்கு பத்து பதினைந்து நிமிடங்களில் ஒரு படத்தின் ஐந்தாறு பாடல்களுக்கு மெட்டு போட்டு அசத்தும் அசாத்திய திறமை கொண்ட ராஜா எங்கே போனார் என்று கேட்டவர்களுக்கு இதோ நானிருக்கிறேன் என்று இந்தப் படத்தின் பாடல் அமைந்துள்ளது. 
 
 
என்ன…  ராஜாவின் உலகத்தில் வேறு எவரும் சென்று ஆளுகை செய்ய இயலாது. சில சமயம் பாடல் சூழலை சரியாக விளக்கத் தெரியாத இயக்குநர்களுக்கும் கூட தானே சொல்ல நினைப்பதை உள்வாங்கி உயர்ந்த வெற்றிப் பாடல்கள் தந்ததுண்டு.கவிஞர் கபிலன் சொற்களுக்கு உயிர்கொடுத்து கேட்பவரை அழகான பைத்தியம் ஆக்கி உள்ளார் ராஜா. இப்படி துவங்குகிறது அந்தப் பாடல் வரிகள். 
 
‘உன்ன நெனச்சி நெனச்சி உருகிப் போனேன் அழகா..?
நெஞ்ச உதைச்சி உதைச்சி பறந்து போனா அழகா? ‘
 
அட போங்கப்பா இந்தப் பாடல் இருபது வருடத்துக்கும் மேலாக நம்மை விட்டு அகலாது ஒட்டிக்கொண்டு வாழப் போகும் இன்னொரு உறவு.கேட்டுப் பாருங்கள் அதன் உன்னதம் உணர முடியும்.
 
 
இளையராஜா 1979இல் எனக்கு அறிமுகம். அப்போது நான் மாநிலக் கல்லூரி மாணவன். எனது நண்பன் அல்போன்ஸ் ராஜா நந்தனம் கல்லூரி மாணவன். அவரது உறவினர் இளையராஜா குடும்பத்தினர். நண்பனின் அண்ணன் துரைசாமி கிட்டார் சொல்லித் தரும் ஆசிரியர். அவர் வீட்டிற்கு இளையராஜாவின் தாயார் அடிக்கடி வந்து போவது வழக்கம் . கங்கை அமரன், பாஸ்கர் வந்து போவதுண்டு. அதன்மூலம் மெதுவாக இளையராஜா அறிமுகம் கிடைத்தது.
 
 
அதன் தொடர்ச்சியாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடத்திய தாய் வார இதழில் துணை ஆசிரியராக சேர்ந்தது முதல் இளையராஜாவைப் பார்ப்பது, பேட்டி எடுத்து வெளியிடுவது என தொடர்பு நீண்டது. சகஜமாக எதையும் பரிமாறிக் கொள்கிற இடத்தை அவர் எனக்குத் தந்தார். 
 
 
தாய் வார இதழில் இசை குறித்து ரசிகர்களுக்கு விமர்சன போட்டி வைக்க தபால்கள் வந்து மலைபோல் குவிந்தன. அதில்  தேர்ந்தெடுக்கச் சொல்லி இரண்டு கோணி மூட்டை தபால்களை பிரசாத் ஸ்டுடியோவில் கொட்டி தேர்ந்தெடுக்கச் சொல்ல மலைத்துப் போய் என்னய்யா இது இவ்வளவு பேரா என்று திகைத்து நின்று பிறகு குனிந்து எடுத்து தேர்வு செய்து தந்தார். அந்த மலைப்பான ரசிகர்கள் இன்னும் உலகளாவிய நிலையில் இருக்கின்றனர்.
 
 பத்திரிகை காலத்திற்குப்பின் கமல்ஹாசன் படங்களுக்கு உதவி இயக்குநராகப் பயணித்த சம்பவங்கள் முற்றிலும் வேறானவை. எழுத்தாளன் சினிமாவுக்கா? என்று வினவினார். காரணம் அப்போது எவரும் அப்படி துறை மாறி வந்தவர்களை சினிமா அதிகம் வரவேற்காத காலம். குறிப்பாக பத்திரிகையாளராக இருந்து வந்தால் சொல்லவே வேண்டாம் பரிகாசம் செய்து பரணில் ஏற்றி விடுவார்கள். நல்ல காலம் எனக்கப்படி எதுவும் நிகழ்வதில்லை.
 
 
கமல் எனும் நட்சத்திரம் மூலம் வந்ததால் மரியாதை யும் விமர்சனமும் மட்டுமே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அபூர்வ சகோதரர்கள் துவங்கி மைக்கேல் மதன காமராஜன், குணா, மகளிர் மட்டும், தேவர்மகன் , விருமாண்டி, சின்ன மாப்ளே., மக்கள்ஆட்சி போன்ற திரைப்படங்களின் போது இளையராஜா பாடல்களுக்கு மெட்டமைக்கும்போது அவர் அறையில் உடனிருந்து பார்த்து உணர்ந்த அனுபவம் கூடுதல். உண்மையாக சொல்லப்போனால் பதினைந்து நிமிடம் அல்லது அதிகம் முப்பது நிமிடங்களுக்குள் மெட்டமைத்து விடுவார். அவரின் தாளகதிக்கேற்ப பின்னால் சிறிய டேப்ரிக்கார்டரை வைத்துக்கொண்டு குறிப்புகளை பல்லவி சரணங்கள் என்று பகுப்பார் சுந்தரராஜன்.
 
 
 அவரே ஒரு இசையமைப்பாளர்தான். ஒரு நாளைக்கு பத்து பனிரெண்டு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இளையராஜாவைப் பார்த்து விட வேண்டும் என காத்திருப்பார்கள். இளையராஜா இசையமைக்க ஒத்துக்கொண்டாலே அந்தப் படம் பேசப்படும். படங்களும் வெற்றி பெறும். பட விளம்பரங்களில் இளையராஜா முக்கியத்துவம் பெற்றிருப்பார்.   எண்பதுகளில் தொண்ணூறு களின் காலம் இசை வெள்ளப் பெருமழை என்று சொல்லலாம் . 
 
 
பிரசாத் ஸ்டுடியோஸிலிருந்து ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு சில வருடங்கள் மாறினார். அப்போது ஒரு சமயம் பாடல் மெட்டு சம்பவம். அறையில் இயக்குநர் ஶ்ரீதர், கவிஞர் வாலி, கிரேஸி மோகன் உடன் நானும் இருக்கிறேன். திடீரென வாலி  ‘ராஜா நீங்க தெய்வாம்சம். இசைப்பிறவி. உங்களுக்குப் பிறகு இசை வாரிசு யார்?’ எனக்கேட்டு சூழலை மௌனத்திற்குள்ளாக்கினார். ராஜா புன்னகையோடு கடந்தார்.  ராஜாவுக்கு தனக்கான உணர்வாக இசையை பாமர மக்களும் கையாள வேண்டும் என்றெண்ணுவதால்தான் இன்றைய கால மாணவ மாணவிகளைச் சந்தித்து உரையாடல் இசை அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் .வேடிக்கையாக இருக்கும். சில நொடி மௌனங்களில் இசையாக்கும் ராஜா பல சமயங்களில் விளையாட்டாக விரல்களை நகர்த்தி வியக்க வைத்ததுண்டு. 
 
 
அபூர்வ சகோதரர்கள் படம் . கமல் சார் சிங்கீதம் சீனிவாசராவ்,  வாலி, ராஜாவின் பின்னால் சுந்தரராஜன், இவர்களுடன் நானும் பேடை வைத்துக்கொண்டு அமர்ந்து இருக்கிறோம். ஹீரோ ஓப்பனிங் பாடல். ராஜா சார் சிரித்துக் கொள்கிறார் . நல்ல கலைப் படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் கமலுக்கும் ஹீரோ ஓப்பனிங் பாடலா என்று. ஆனால் தேவை என்ன செய்வது? மெக்கானிக் ஹீரோ. யோசிப்பதை பார்த்துவிட்டு வாலி வெற்றிலை மடித்து வாயில் போட்டுக் கொண்டே சொல்கிறார். 
 
 
“ராஜா கைய வச்சா ராங்கா போனதில்ல. ஆர்மோனியப் பெட்டியில் கை வைங்க,’’ என்கிறார். அந்த வார்த்தைகளையே திருப்பிப் போட்டு ராஜா ‘ ராஜா கைய வச்சா ராங்கா போனதில்லே,’’ என்று ஆர்மோனியப் பெட்டியின் ராக கட்டைகளை அசைத்து பாடுகிறார்.
 
 
உடனே வாலி பேடை வாங்கி இதான் பல்லவி என்று எழுதி தருகிறார் .  “அண்ணே ஏன் வேற போலாம்,”. என சொல்ல, “அதல்லாம் இல்ல ராஜா இதான் பல்லவி ஹிட் ஆகலைன்னா கேளு,’’ என்கிறார். ராஜாவைப் பாராட்டி ராஜாவே இசையமைத்து அது வெற்றியானது என்றால் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் . எச்சூழலையும் தனதாக்கிக் கொண்டு அதில் நுண்மையான இசைப் பதிவுகள் உருவாக்கி வெற்றி பெறுவதில் அவருக்கு ஒரு தனித்த சுகம் உண்டு.
 
கமலும் ராஜாவும் சேர்ந்து கம்போசிங் செய்ய அமர்ந்தால் கம்போசிங் நடக்காது. இருவரும் தியாகராஜர் துவங்கி பீதோவான் மொசார்ட் என போய் நாட்டுப்புற பாடல்கள் பேசி கடைசியில் இருவரும் போன படங்களில் பயன்படுத்தாமல் விட்ட டியூன்கள் பற்றி இசை குறித்தான உரையாடல் பல மணி நேரம் நீண்டு கொண்டே போகும். அடுத்த நாள் தான் கம்போசிங் நடக்கும்.
 
 
ராஜாவின் வாழ்வின் நாட்கள் காலையில் ஆறு மணிக்கு வந்து அறையில் நுழைந்து ரமண மகரிஷி படத்தை வணங்கி விளக்கேற்றி விட்டு ஆர்மோனியத்தில் அமர்ந்து ஓரிரு படங்களுக்கு மெட்டமைத்து விடுவார். பிறகு அன்றைய படப்பாடலுக்குண்டான இசைக் குறிப்புகளை தாளில்தானே நோட்ஸ் எழுதுவார். அதை நகல் எடுத்து வந்து மியூசிஷியன்ஸ் வாசித்து பயிற்சி செய்வதற்குள் ஒரு படத்திற்கான மெட்டும் போட்டு விடுவார். பிறகு பாடலாசிரியர் உடன் சரிபார்த்தல். 
 
 
பதினோரு மணிக்கு  ரெக்கார்டிங் தியேட்டர் சென்று சவுண்ட் இன்ஜினியர் அறைக்குச் சென்று கிட்டார் ட்ரம்பெட் வயலின் மிருதங்கம் பிடில் தம்பூரா வீணை புல்லாங்குழல் சாக்ஸாபோன் வெஸ்டர்ன் இன்ஸ்ட்ருமெண்ட் என பாடலுக்குத் தேவையான வாத்தியக் கருவிகளை இசைத்து நேர்த்தியாக்குவார். 
 
 
பாடல் பாடுபவருக்கு பயிற்சி அளிப்பார். பிறகு டேக். அரை நாளில் ஒரு பாடல் பதிவாகும். மதியம் இன்னொரு பாடல். சொல்லப் போனால் பின்னணி இசையை  இரண்டரை நாள் மூன்று நாட்களுக்குள் முடித்த கதையும் உண்டு. புன்னகை மன்னன் படத்தில் முழுக்க வெஸ்டர்ன் எலக்ட்ரானிக்ஸ் பயன்படுத்தி ரெக்கார்டு பிரேக் செய்தார்.
 
 
ஒருமுறை விசிறி சாமியாரை தரிசிக்க இளையராஜா உடன் சென்ற அனுபவம் உண்டு. முற்றிலும் மாறுபட்ட ராஜாவின் பேச்சும் நுட்பமும் மனதில் படியவைத்துக் கொள்ள வேண்டியவை. இன்னும் மறக்க இயலாத ஒன்று.  மக்கள்ஆட்சி பட பாடல் கம்போசிங் கடற்கரை சாலை உத்தண்டி அருகே இளையராஜா வின் கெஸ்ட் அவுசில் நடந்தது. அப்போது ஆர் கே செல்வமணி, லியாகத் அலிகான், இராம வாசு உடன் இருந்தனர். என்னவோ பாடல் மெட்டு அமையவில்லை. மனம் சூழல் காரணமாயிருந்திருக்கலாம்.
 
 
 சட்டென காமிராவை எடுத்து தனித்தனியாக போட்டோ எடுக்கத் துவங்கினார். எடுத்த போட்டோவை அடுத்த நாள் பிரிண்ட் செய்து கொடுத்தும் விட்டார். அன்று மதிய உணவு அவர் வீட்டில் பயிரிட்ட காய்கறிகளை வைத்து, அவர்மனைவி சமைக்க, பவதாரணி கார்த்திக் ராஜா யுவன் உடன் பரிமாற இனிதாக முடிந்தது.மியூசிக் அகாடமியில் அவரின் திருவாசகம் இசைக்கோர்வை விழா. வைகோ அவர்களின் உரை கேட்டு அதனூடே திருவாசகத்தை விடிய விடிய கேட்டுக் கொண்டே விடிந்தது புதுவித அனுபவம்.
 
 
ராஜா சிரிக்க சிரிக்கப் பேசிய அனுபவங்கள் உடனிருந்து அவரிடம் உள்ள கவியாற்றலை அறியும் வாய்ப்பு எத்தனை பேருக்கு வாய்க்கும்? அந்தச் சூழல் எனக்கு வாய்த்தது. விருமாண்டி திரைப்படத்தில் வரும் கொம்புல பூவைச்சுத்தி என்ற பாடல் அவர் சொல்லச் சொல்ல நான் சிறு தாளில் எழுதி நகல் எடுக்கப்பட்டது. வெறும்ஐந்து நிமிடத்துக்குள் நடந்து விட்டது.
 
 
பல சமயங்களில் முத்துலிங்கம், மு மேத்தா, பழநிபாரதி, வாலி, போன்ற தமிழ்கவிஞர்களோடு இலக்கியம் விவாதிப்பதுண்டு. எனது கவிதை நூல்களை வாசித்து கருத்துரைத்ததும் நெகிழ்வான சம்பவங்கள். ராஜாவின் வாழ்க்கை இளமையில் வறுமை. பிறகு திரை இசை எனும் வாழ்க்கை. பௌர்ணமிகளில் இறைமை.இப்படி தன் வாழ்வின் பெரும்பகுதி நகர்ந்து விட்டது. தனக்கான உறவுப் பயணத்தை தியாகம் செய்து விட்டு மீண்டும் இசைக்கெனவே வாழ்வை பயணிக்கிறார் .
 
 
தனித்த ஆல்பங்கள் அவரின் உயரம். ஒவ்வொரு வெற்று இயற்கை காட்சிகளும் இவரால் உயிர்பெற்று உலா வரும். படத்தின் பாடல்களுக்குள் குட்டி சிம்போனி வெளிப்படும். காற்றை கௌரவப்படுத்திய இளையராஜா வுக்கு மேஸ்ட்ரோ பத்மபூஷண் அடையாளங்கள் அல்ல. அவரின் பாடல்களை வாழ்க்கைத் துணையாக கொண்டு வாழ்கிற கோடிக்கணக்கான மக்களே முகங்கள் .
 
 
சென்ற ஆண்டு சேலம் ஏற்காடு பகுதியில் இளையராஜா ரசிகர்கள் ஏற்பாடு செய்த நிகழ்வுக்கு வைகைராஜா உடன் சென்று உரையாற்றினேன்  விடிய விடிய இளையராஜா பாடல்களை நுணுகி நுணுகி பேசி பாடி கொண்டாடியதை பார்த்தேன். டெஸ்லா கணேஷ், அடேங்கப்பா இசை நுட்ப திறனாய்வே செய்து விட்டார் பாமர மக்கள் முதல் உயர்ரசனை வரை முழுவதுமாக கொண்டாடப்படும் இசை இளையராஜா உடையது. காற்று இளையராஜாவின் இசையில் அடர்த்தியாவது மனத்திற்கு மகிழ்ச்சி. இளையராஜா வோடு நாமிருப்பது காலம் தந்த கொடை.
 
 
(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...