???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் 0 இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் 0 தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் 0 டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா 0 டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி! 0 தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி 0 அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு 0 சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப்! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   18 , 2019  00:56:47 IST


Andhimazhai Image

நம்புவதற்கு சற்று சிரமமாகத்தான் எனக்கே இருக்கிறது. ஆனால் அது நடந்தது,.  சற்றேறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன் அண்ணாசாலையில் -இப்போது உள்ள தி பார்க்  நட்சத்திர ஓட்டல் அருகில்- நடந்து சென்று கொண்டிருக்கிறேன் . கையில் ஒரு நோட்புக்.

தாய் வார இதழில் துணை ஆசிரியர் வேலை. எந்த நேரத்திலும் பேனா நோட்டோடு அலர்ட்டாக இருப்பது அவசியம். நான் சினிமா இலக்கியம் சமூக செய்திகள் பேட்டிகளை வாரம் 12 பக்கமாவது எழுதி பேரெடுக்கும் தீராப்பசியில் திரிந்து கொண்டிருந்த நேரம். சாப்பாடு பசி பொறுத்த படி நடக்கிறேன். எவரிடமும் கைநீட்டி விடக் கூடாது என்ற வைராக்கியம் வேறு.

வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கொரு சேதி தரும் என்ற கனவில் போய்க் கொண்டிருந்தேன் . அட என்னடா வம்பு? என் அருகாமையில் ஒரு கார் உரசுகிற வாக்கில் நின்றது. அலறி திட்ட வாயெடுப்பதற்குள் கார் கதவு திறக்க என் அனுமதி இல்லாமலே காருக்குள் அடைபடுகிறேன். கார் விர்ரென வடபழனி நோக்கிச் செல்கிறது. கதவு திறக்க எதிரே இயக்குனர் எஸ் பி முத்துராமன் . வாங்க ராசி என்கிறார். காரில் கடத்தி வந்தவர் சிரித்தபடியே நகர்ந்து மேக்கப் போட செல்கிறார் .

யார் அது என்கிறீர்களா?
அவர் ஒரு எளிமையான நடிகர்
பெயர் ரஜினிகாந்த் .
ஆமாம் சூப்பர் ஸ்டார்
படம் மிஸ்டர் பாரத்

அன்று முழுவதும் அவரோடு இருந்து உண்டு பேசி மகிழ்வாக ஒரு கவர்ஸ்டோரி செய்து விட்டேன்.
சத்யராஜ் கூட நடிப்பு தான் என்றாலும் அன்று அவருக்கு காட்சி இல்லை. படப்பிடிப்பு நேரம்போக தேவையில்லாமல் பேசுவது தவிர்க்க கர்ச்சிப்பால் முகத்தை மூடிக் கொண்டு ஏதோ ஒரு பெஞ்ச்சில் படுத்து கண்ணை மூடிக் கொள்வது அவர் வழக்கம். ஆனால் அன்று அது நடக்கவில்லை நான் பேனாவுக்கு வேலை கொடுத்த படி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன். உண்மையில் படப்பிடிப்பின்போது ஒரு நடிகரை இப்படி கேள்வி கேட்டு அவரின் வேலையை கெடுப்பது நியாயம் இல்லை. ஆனால் இந்த சூழலை விரும்பி அவரே ஏற்றுக் கொண்டதால் அந்த நாள் இலகுவாக கடந்து கொண்டிருந்தது.


 திடீரென இரண்டு பஸ்கள் வந்து நின்றது, அதிலிருந்து திமு திமு வென்று வந்து இறங்கியவர்கள் சட சட வென ரஜினிகாந்த் காலில் விழுந்து வணங்கி எழுந்தனர்.


வேண்டாம் என தடுத்துப் பார்த்தார். நடக்கவில்லை. தூத்துக்குடியில் இருந்து   வந்த ரசிகர்கள். அதில் பெண்களும் அடக்கம். அவர்களை உபசரித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து சிரித்தபடி அனுப்பி வைத்தார்.
 

எனக்கு எப்படி இருக்கும்? நான் கேட்டு விட்டேன். இப்படி காலில் விழுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?


சட்டென மறுத்தார். நிச்சயமாக இல்லை. பெத்த அம்மா அப்பா காலில் விழலாம். தெய்வத்துகிட்ட விழலாம் . வேற யார்கால்ல வேணும்னா குரு கால்ல விழலாம் . நியாயம். என் கால்ல விழறதுல எனக்கு இஷ்டமில்ல. சொன்னா கேக்க மாட்டேன்றாங்க. இனி கடுமையா இந்த விஷயத்துல இருக்கப் போறேன் என்று உணர்ச்சி வயப்பட்டு சொன்னார். அதில் உண்மை இருந்ததை என்னால் காண முடிந்தது.


அதன் பிறகு நிறைய முறை அவரோடு உரையாடும் சந்தர்ப்பமும் உணவருந்தும் சந்தர்ப்பமும் வாய்த்தது. எனக்கு அதிகமான பிடித்த இயக்குநர் மகேந்திரன் அவர்களோடு நிறைய நாட்கள் செலவழித்திருக்கிறேன். அவரை கேட்காமலே அவர் படப்பிடிப்புக்கு சென்று அவருடன் இருப்பது வழக்கம்.


அப்படி ஒரு நாள் உத்தண்டி மகாபலிபுரம் கடற்கரை சாலையில் ‘கை கொடுக்கும் கை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. சென்றேன். பேசிக்கொண்டிருந்தேன். அன்று ரஜினிகாந்த் ஒரு சேரில் அமர்ந்து கொண்டிருந்தார். ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் நீரில் ஒரு குடம் மிதந்து கொண்டு போவது போலவும் அதில் ஒரு தாமரைப்பூ மிதந்து போவது போலவும் எடுக்கச் சொல்லிவிட்டு டைரக்டர் அன்றைய காட்சிக்கான வசனம் எழுத எத்தனித்தார்.


என்ன நடக்கிறது என்று கவனிக்காமல் சூப்பர் ஸ்டாரை உட்கார வைத்துவிட்டு குடம் மிதப்பதை எடுக்கிறார் என்ற கோபத்தில் டைரக்டரை சத்தம் போட்டு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார் தயாரிப்பாளர் . விஜயகுமார்.


சட்டென கோபம் கொப்பளிக்க எழுந்த ரஜினிகாந்த் நேராகச் சென்று, “ மிஸ்டர் விஜயகுமார் ‘மகேந்திரன் டைரக்டருக்காகத்தான் நான் டேட் கொடுத்தேன். அவர் என்ன பண்ணணும்னு நீங்க சொல்லாதீங்க. என்ன எப்போ எடுக்கணும்னு அவருக்குத் தெரியும். நான் வந்ததும் என்ன வச்சுத்தான் காட்சி எடுக்கணும்னு அவசியம் இல்லை. நான் அப்படி நினைக்கிற ஆளும் இல்ல. மகேந்திரன் சார் கிரேட் டைரக்டர் . அவருக்கு எல்லா காட்சியும் முக்கியம். நடிகர்னா வெயிட் பண்றதுக்கும் சேர்த்து தான் சம்பளம் வாங்கறோம். டைரக்டரோட உரிமையில யாரும் தலையிடறத நான் விரும்பலை. உங்களுக்கு பிரச்சனைன்னா விட்டுடுங்க இந்தப் படத்தை நான் பாத்துக்கிறேன்’என்று பதிலுக்கு சொற்களை சூடாகப் பயன்படுத்த ஒருகணம் அந்த இடம் வேர்த்து விறுவிறுத்து நின்றது. அமைதியான சூழல் பரவலானது.


உண்மையில் இயக்குநர் மீது ரஜினிகாந்த்  வைத்திருந்த நேசம் புரிந்தது. சும்மாவா? முள்ளும் மலரும் அச்சாணி அல்லவா?


1985 ஜனவரி 17 எம்ஜிஆர் பிறந்த நாளில் எனக்கு திண்டிவனத்தில் திருமணம் நடந்தது. சில நாட்கள் கழித்து கண்டிப்பாக வீட்டுக்கு வரவேண்டும் என்று சொன்னதால் மனைவியோடு அவரது போயஸ் கார்டன் வீட்டிற்குப் போனேன். உதவியாளர் வரவேற்றார். சத்யநாராயணாவும் இருந்ததாக நினைவு.  சுவரில் மாட்டப்பட்டிருந்த ராகவேந்திரா படத்தை பார்த்துக் கொண்டிருந்த சமயம் மாடிப்படிகளில் படபடவென்ற வேகமாக இறங்கி வந்து வாங்க வாங்க வணக்கம் என்று சொல்லி அமர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார்.


 என் மனைவி சாதாரணமாக அமர்ந்திருந்தார். அவர் குடும்பமே எம் ஜி ஆர் பக்தர்கள். அவர் படம் தவிர வேறு எவர் படமும் அதிகம் பார்ப்பதில்லை. ஆனால். எதிரில் இருப்பது புகழ்மிக்க நடிகர். நான் சூழலை சமாளித்துக் கொண்டிருந்தேன்.


சட்டென என்ன வேணும் சொல்லுங்க என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மறுபடியும் ஆர்வமாக்க் கேட்டார். ஒண்ணும் வேணாம் சார் நீங்க திருமணம் முடிந்ததும் வரச்சொன்னீங்க வந்திருக்கேன் என்றேன். அவர் மறுபடியும்  கேட்டார் என்ன வேணும் சொல்லுங்க என அழுத்திக் கேட்க நீங்க வற்புறுத்தறதுனாலே கேக்கறேன். ரெண்டு காபி குடுங்க என்றேன். அவர் நிஜமா என என்னையே உற்றுப் பார்த்துக் கேட்டார். காபியா ? என்று. நிஜம் காபி பரிமாற்றத்தோடு வீடு வந்து சேர்ந்தேன்.


இந்த சம்பவம் கேட்ட நண்பர்கள் சொன்னார்கள் நீ பிழைக்கத் தெரியாத ஆள். அவர் ஏன் மறுபடியும் மறுபடியும் கேட்டார் என்பது பின்னால் புரியாமலில்லை. அப்படி ஏதாவது பெற்றுக் கொண்டு வாழத் தலைப்பட வேண்டும் என்ற எண்ணம் அப்போது எனக்கில்லை. வறுமை தான் அப்போது. ஆனால் அது எனக்கானது. மகிழ்வோடு நான் கடக்க வேண்டியது. கடந்தேன் . அதுதானே வாழ்க்கை.  அவர் கேட்ட போது ஏதோ ஒன்று கேட்டிருக்கலாம். அவரும் தரக்கூடும். அதில் என்ன பொருளிருக்கும்?


பல சமயங்களில் புத்தகங்களோடு இருப்பார். ரஜினிகாந்த் உடன் படித்த நண்பர் பருவராகம் ரவிச்சந்திரன் இயக்கிய கன்னடப்படம் ஏகாங்கி(தனிமை) படத்தில் பணியாற்றிய போது நான் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது பேச்சு வாக்கில் சொன்னார். திடீரென்று ஒருநாள் ரஜினி  அவரையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு ஒரு ப்ளாட்டுக்குப் போனார். போன பின்பு தான் தெரிந்தது அது தனக்கு வாங்கித் தந்தது!  சாவியையும் கொடுத்து பிக்ஸட் டெப்பாசிட்டில் பணமும் போட்டு அதிர்ச்சி மகிழ்ச்சி கொடுத்து விட்டார் நண்பர் ரஜினி என்று நெகிழ்ந்தார். இதே போல்தான் நடிகர் விட்டல் ஒரு உதவிக் கதை சொன்னார். கேட்காமலே நண்பர்களுக்கு உதவுகிற எண்ணத்தில் ரஜினிகாந்த் முந்திக்கொண்டு தான் செய்கிறார்.


ஆன்மீகம் என்பது அவர் தன்னை எளிமையாக இலேசாக வைத்துக் கொள்ள முயலும் இடமாகத்தான் நான் கருதுகிறேன். அவர் எதிர்பார்க்காத உயரம் சமூகம் தரும் போது தன் கால்கள் தரையில் பதிந்திருக்க வேண்டும் என்பதற்கான சுயபரிசோதனையாகத்தான் இமய மலை ப் பயணம், தனிமைத் தேடல் மனசாந்தி என புரிந்து கொள்கிறேன்.


அவரிடம் உள்ள குணம் ஆராய்ந்த பின் முழுதாக நம்பி விடுவது . அதன் பயனை எதிர்கொள்வது.
ஒரு நாள் முழுவதும் அவருடன் பயணித்து கவர்ஸ்டோரி எழுதி உள்ளேன். மேக்கப் மேனில் துவங்கி புரொடக்சன் மேனேஜர் உதவி இயக்குனர் லைட்மேன் சகநடிகர்கள் என அனைவரிடமும் எளிமையாக அறிந்தவரோ அறியாதவரோ எவரைக் கண்டாலும் அங்கீகரித்துப் போகிற பக்குவத்தை தனது குணமாக மாற்றிக் கொண்டவர். அதிக கோபத்தால் வரும் விளைவுகளை உணர்ந்தவரால்தான் இந்தக் குணத்தை ஏற்க இயலும்.


ரஜினி இரண்டையும் தன் வாழ்வில் கண்டு கரையேறியவர். பாபா படம் வெளிவரும் சமயத்தில் ஒரு நிகழ்வு சத்தமில்லாமல் செய்தார். அதை சொல்வதில் ஒன்றும் தவறில்லை என்று கருதுகிறேன் . தனது குரலின் பலம் அறிந்த அரசியல் தலைமையாக மாற பாபா சமயத்தில் மக்கள் சக்தி தனக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்று பரிசோதனை செய்ய தயாரானார் . தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கேமிராக்குழு சென்று தியேட்டர்களில் படத்தின் ரியாக்‌ஷனை திரட்டியது. ஆனால் எதிர்பார்த்தபடி அமையவில்லை. அதை அவர் மனதில் சரிபார்த்துக் கொண்டிருக்கக் கூடும். அது இப்போது தனக்கு சாதகமான சூழலாக மாறுவதை உணரத் தலைப்பட்டு ஆன்மீக அரசியல் முன்னெடுக்கிறார். ரஜினி காந்த் அவர்களுடன் பழகிய காலத்திற்கு பின் 87 இல்தான் கமல்ஹாசன் அவர்களோடு பயணித்து பணியாற்றும் காலம் வசப்பட்டது.


அதற்குப் பிறகு ராஜ்கமல் வாசம். ரஜினியோடு பழகும் சூழல் குறைந்தது.முக்கிய காலகட்டங்களில் நாயகனின் ஆலோசனை கேட்க வரும்போது தான் பேச முடிந்தது.ஒருமுறை நண்பர் ஆசைக்காக சிவாஜி கார்டனில் நடித்துக் கொண்டிருந்த ரஜினியிடம் போட்டோ எடுக்க அனுமதி கேட்டேன். இதில் என்ன தயக்கம் என அனுமதித்தார். அதோடு நான் நகர எத்தனிக்க ‘ஏன் நீங்க எடுத்துக்கமாட்டீங்களா என்று சொல்லி படம் எடுத்துத் தந்தார்.


எதிராளியின் எண்ண ஓட்டங்களை சுவீகரித்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் அவரது புகழ் பலம்.
சொல்ல மறந்து விட்டேன் பாருங்கள் அப்போது நடித்துக் கொண்டிருந்த படம் முத்து.அவருடைய பெருந்தன்மையுடன் கூடிய குணத்தை ஒரு நாள் அறியும் சந்தர்ப்பம்கிடைத்தது. அது அவருடைய கேளம்பாக்கம் பண்ணையில். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அவர் அங்கு வந்து சுற்றிப் பார்த்து விவசாயி வாழ்க்கை வாழ்வார்.

 

அப்படி ஒரு நாளில் ரஜினியின் உற்ற நண்பர் தெலுங்கில்மோகன்பாபு கதை கேட்க அந்த இடத்திற்கு வந்தார். மோகன்பாபு தன்னுடைய மகனை தெலுங்கில் நடிகனாக அறிமுகம் செய்ய கதை தேடிக் கொண்டிருந்தார் . நடிகர் விட்டல் மூலம் நானும் ரஜினி தோட்டத்துக்கு கதை சொல்லப்போனேன். முழுக் கதையையும் கேட்டு விட்டு எதற்கும் ரஜினியிடம் கதை சொல்லச் சொன்னார். ரஜினி ஒரே வார்த்தை சொன்னார். ‘இவர் என் நண்பர் எனக்கு ரொம்ப காலமாகத் தெரியும். நல்ல கதை சொல்லுவார் . உனக்கு பார்த்துக்க,’. என்று.


பிறகு  வாங்கசாப்பிடலாம் என அழைத்து ஒன்றாக உணவருந்தினோம். எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் நண்பனிடம் கூட ஒரு படைப்பாளன் சரியாக நடத்தப்பட வேண்டும் என்பதும் , நட்பு மேம்படச் செய்வதுமான மனப்பான்மை எத்தனை பேருக்கு உள்ளது!


மோகன்பாபு நிறைய பேரிடம் கதை கேட்டு கடைசியில் சிம்பிளான காதல் ஆக்‌ஷன் கதை ரெடி செய்து மலையாள டைரக்டர் ஷாஜி கைலாஷ் இயக்கி சரியாகப் போகவில்லை என்பது பிறகு அறிந்து கொண்ட செய்தி.


90 களின் வாக்கில் சினிமாவில் ஸ்ட்ரைக் வர தொழிலாளிகள் பட்டினியால் வாடக் கூடாதென்று கமலும் ரஜினியும் தன்னுடைய சொந்த நிறுவனங்களில் சொந்தப் படம் எடுத்தனர். கமல் மகளிர் மட்டும் எடுக்க ரஜினி கதை எழுதி வள்ளி படமெடுத்தார்.


சினிமா வில் நண்பர்கள் மட்டுமல்ல தனித்த பல கட்டங்களிலும் இருவரும் பரஸ்பரம் கலந்துரையாடிய பின்பே முடிவெடுப்பர் என்பது உள்ளங்கை மர்மம். எதிரெதிர் கோணங்களும் ஒரு புள்ளியில் துவங்கி வேறொரு புள்ளியியல் இணையக்கூடிய வையே..இந்தப் புரிதலே இருவரின் பயணத்திற்கு அச்சாணி.


தனி மனித வாழ்வின் ஆளுமை மிக்க ஒருவர் அரசியல் என்கிற சதுரங்கத்தில் எத்தகைய நகர்வுகளை நகர்த்துவர் என்பது உற்று கவனிக்க வேண்டிய தருணங்கள். எவ்வாறாயினும் ரஜினி தன் பலம் உணரும் சாமர்த்தியசாலி.

 

வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...