???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராகுலை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்மிருதி இரானி 0 கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு 0 மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு! 0 தமிழ்ப் படங்களில் பிகில் வசூல் சாதனை! 0 வடகிழக்கு மாநிலங்கள் குறித்த வதந்திகளை நம்பவேண்டாம்: இந்திய ராணுவம் 0 தமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை 0 சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது: நீதிமன்றம் 0 உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! 0 மாமாங்கம்: திரைவிமர்சனம் 0 வடகிழக்கு மாநிலங்களில் கொந்தளிப்பு தொடர்கிறது! 0 பிரிட்டன்: கட்சி தலைவர் பதவியிலிருந்து ஜெரமி கார்பின் ராஜினாமா 0 வடகிழக்கு மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது: பிரதமர் 0 திண்டுக்கல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை 0 பாஸ்போர்ட்டில் தாமரை: மத்திய அரசு விளக்கம் 0 குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த மாட்டோம்: பினராயி விஜயன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 17- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   04 , 2019  06:43:17 IST

எதை குறை என்று சமூகம் சொல்கிறதோ அதையே தன்னுடைய பலமாக ஆக்கிக் கொண்டு முன்னேறியவர்கள் பலர்.  ஆண் போல் திமிராக உள்ளார் என பேசப்பட்ட நடிகை பானுமதி. படுவேகமாகப் பேசுகிறார் என்று விமர்சிக்கப்பட்ட ரஜினிகாந்த்.  பிஞ்சு முகம் என்று அறிமுகத்தின் போது பரிகசிக்கப்பட்ட விஜய்.  அது போல் மூக்கு நீளமாக இருக்கிறது என்று எல்லோரும் கேலி பேசினார்கள். அதையே தன்னுடைய  பலமான அடையாளமாக்கிக் கொண்டு முன்னேறியவர்தான் நாசர்.

 

இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக மாறியிருக்கிறார். செங்கல்பட்டில் சாதாரணமாக ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து சென்னையில் வந்து திரைப்படத்தில் நுழைவதற்கு முன் தன்னை நாடகத்தில் நடித்து தயார்படுத்திக் கொண்டு, நிறைய தமிழ் இலக்கியங்களைப் படித்து  சிறுகதைகளைப் படித்து தன்னை தயாராக்கிக் கொண்ட பின்புதான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு செல்ல துவங்கினார்.

 

 நன்றாக நினைவிருக்கிறது. மயிலாப்பூரில் பாலசந்தர் ஆபீஸ் சென்று பார்த்து விட்டு 12B பஸ்ஸில் நானும் அவரும் நின்று கொண்டே வடபழனிவரை பேசிப் கொண்டே பயணம் செய்தோம்.  அதே மனநிலையும் ஆர்வமும் தான் சென்ற வாரம் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் விமானம் இண்டிகோவில் செல்லும் போது பேசிக் கொண்டே போன அனுபவத்தில் வெளிப்பட்டது.

 

என்ன ஒரு வித்தியாசம். அப்போது கோபம் அதிகம். இப்பொது குறைவு. அப்போது பிரம்மச்சாரி. இப்போது சம்சாரி. அப்போது நாடகம் கூத்து . இப்போது சினிமா. அப்போது பழைய ஆண்டிக் பொருள் ஆசை. இப்போது வீட்டிலேயே சேகரித்து இண்டீரியர் அலங்காரம் பாதுகாப்பு. அப்போது மேனேஜர் கிரி. இப்போது மனைவி கமீலா. கூடுதலாக இப்போது எழுத்தாளராக மாறியிருக்கிறார். விமான நிலைய காத்திருப்பில் அவர் எழுதிய 20 பக்கங்களை படித்துக் காண்பித்து விட்டார். 

 

சும்மாவா படைப்பாளர் என்றால்? நாசரிடம் ஒரு தேடல் எப்போதும் இருக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுற்றுப்புற சூழல் பற்றி யாரிடமாவது சொல்லிக் கொண்டிருப்பார். இலக்கிய மேடைகள் கிடைத்தால் ஓசோன் மண்டலத்தில் துளை விழுந்து விட்டது. அது மாசால்  ஏற்படுகிறது. செடிகள் நட்டு பசுமையாக்கி பூமியை காப்பாற்ற வேண்டும் என்று ஆவேசமாக செயல்பட்டுக் கொண்டே இருப்பார். அது குறித்து எழுதவும் செய்தார். நாசரின் கையெழுத்து பார்க்க ஓவியர் மருதுவின் கோடுகளைப் போல அழகாய் இருக்கும்.

 

கல்யாண அகதிகளில் தொடங்கியது அவரது திரைவாழ்வு. நாயகன் படத்தில் கமலின் மருமகன் போலீஸ் வேடத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டவரானார். ’ஆவாரம்பூ’ தனி அடையாளம் தந்தது. ’தேவர்மகன்’,  ’குறுதிப்புனல்’, ’மும்பை எக்ஸ்பிரஸ்’ ,  ’அவ்வை சண்முகி’ என நீண்டாலும் ’மகளிர் மட்டும்’ படத்தில் கதாநாயகன் அந்தஸ்து கிடைத்தது. வி. சேகர் படங்கள் நாசருக்கு  பரவலான அங்கீகாரத்தை  பெற்றுத்தந்தது.

 

அவதாரம் படத்தை இயக்கும் போது அழைத்தார். பிறிதொரு சமயம் அவர் இயக்கும் படத்திற்கு வசனம் எழுத அழைத்தார். ஏனோ அவை கைகூடவில்லை. அவரின் முழு சினிமா ஈடுபாட்டை எவரும் குறை சொல்ல இயலாது. கமல் சார் அவரின் தேவதை படத்தை தியேட்டரில் பார்த்து விட்டு இடைவேளையில் பிரமித்து என்னிடம் பேசினார். மருது அவர்களின் ஆர்ட் டைரக்‌ஷன் பாகுபலிக்கு முன் பிரமிக்கப்பட்ட ஒன்று.

 

அபூர்வ சகோதரர்கள் படம் நந்தனம் ஒய் எம் சிஏ வில் படப்பிடிப்பு. நாசர் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார் . புலி அடித்து இறப்பதாக காட்சி. முகம் எங்கும் இரத்தக் கோடுகள். நாசர் பதைபதைப்புடன் இருக்கிறார். லேட் ஆகிறது.. போக வேண்டும் என்று காதைக் கடிக்கிறார். கமல் சார் படப்பிடிப்பில் இதெல்லாம் சாத்தியமில்லை. படப்பிடிப்பு முடிந்தால்  தான் போகமுடியும்.

 

நான் அந்தப்படத்தில் வசனம் சொல்லித்தரும் உதவி இயக்குநர் . என்னிடம் மெதுவாக ஒரு விஷயம் சொன்னார்.  தூக்கிவாரிப் போட்டது. அவருக்கு கமல்சாரிடம் எப்படி சொல்வது என்கிற தயக்கம்.

 

டைரக்டர் ’என்ன ராசி, நாசரிடம் அப்பப்போ ரகசியம் பேசுகிறாய்’ என கிண்டல் செய்தார். டைரக்டரிடம் மெதுவாக சொன்னேன். அவர் கமலை கைநீட்டினார். ஏனெனில் நாசரை வைத்து காட்சி எடுக்க வேண்டியிருந்தது. கமல் சாரிடம் சொல்ல ஏற இறங்கப் பார்த்து விட்டு அவர் பகுதியை சீக்கிரமாக குளோசப் காட்சி, ரியாக்‌ஷன்ஸ் எல்லாம் எடுத்து விட்டு அனுப்பினோம்.

 

புலி அடித்து இறக்கும் காட்சி இரத்த க்கறைகளை துடைத்து விட்டு அவசர அவசரமாக சென்றார். சென்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் செய்த செயல் என்ன தெரியுமா?  காதல் திருமணம்.

 

கமீலாவை மனைவியாக்கி கொண்ட செயலைத்தான் செய்தார். அன்று அவருக்கு இருக்கும் மனநிலையில் நடிக்க வந்ததே அவரின் திரைப்பற்றுதலை சொல்லலாம். எந்த நிலையில் இருந்தாலும் முடிவெடுத்து வாக்கு கொடுத்து விட்டால்  அதை காப்பாற்றுவார் . நான் ரொம்பவும் சிரமப்பட்டு கடன் வாங்கி சோழிங்கநல்லூர் பகுதியில் சிறிய அளவிலான வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து அந்த நாளில் அதாவது 2000 ஆம் ஆண்டு  துவக்கத்தில் நான் எழுதிய நூல்களை மொட்டை மாடியில் விழா எடுத்து வெளியிட்டேன். 

 

அதற்கு சினேகன் தொகுத்து வழங்கினார். மு மேத்தா, மாலன்,  எடிட்டர் லெனின்,  முத்துலிங்கம், மருது, ஜெயகிருட்டிணன், தங்கமங்கை,  ஆசிரியர் சக்திவேல் , இளம்பிறை, ஜெயபாஸ்கரன், பி எஸ் தரன், கிரி, வைரக்கண்ணு, ரெவித்தம்பி, பத்மாவிவேகானந்தன், தாய் இதழில் ஒன்றாகப் பணியாற்றிய நக்கீரன் கோபால், என நட்பு வட்டங்கள் சிறப்பு செய்தனர். 

 

நாசர் லேட்டாக வந்து சேர்ந்து கொண்டார். எனக்கு தர்மசங்கடம், ஊர் மக்கள் பலரும் வந்ததால் வழக்கமான நெருக்கடி. உணவு தீர்த்து போனது. சாப்பிட நாசர் கமீலா உடன் நண்பர்கள் அமர கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. பதட்டத்தை உணர்ந்த  நாசர் என் மனைவியை அழைத்து என்ன சாப்பிட இருக்கிறது கொண்டு வாங்க என்கிறார்.  

 

கொஞ்சம் பொறுத்தா எல்லாம் செஞ்சிடறோம் என்கிறார். அதெல்லாம் வேணாம் என்ன இருக்கு என கேட்க எனது மைத்துனி கௌரி புளி சாதம் மட்டும்தான் சார் இருக்கு என ‘அட டே சூப்பர் எனக்கு புளிசதம்னா உசுரு வேற எதுவும் வேணாம் என சொல்லி சாப்பிட்டு விட்டு நீண்ட நேரம் பேசிவிட்டு போனார்.  அவரே புளிசாதம் என்றதும் மற்றவர்களும் பேசாமல் பெருமையாக சாப்பிட்டு விட்டு சென்றனர். இதே குணம் இன்னும் மாறாமல் திருவனந்தபுரம் ரோடு கடையில் வடை டீ காரை நிறுத்தி இறங்கிப் போய் சாப்பிட நாங்களும் சேர்ந்து கொண்டோம். சூழலை உணர்ந்து தன்னை எளிமையாக்கி மகிழத் தெரிந்தவர்தான் நாசர்.

 

 ஒரு முறை செங்கல்பட்டில் இரவில் கலை இரவு நடந்தது. அதை விடிய விடிய பார்த்து விட்டு சென்னைக்கு பஸ்ஸில் வந்தோம். பத்தாண்டுகளுக்கு முன் பிரபலமான நேரம். கார் பங்களா என வசதியாக இருந்தாலும் இப்படி கிடைக்கும் நேரத்தில் மக்களோடு மக்களாக பயணிப்பதில் கொஞ்சம்கூட தயங்கியதில்லை.

 

 வங்காள மேடை நடிகர்களைப் போல் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் அவ்வப்போது மேடை நாடகங்களில் தோன்றுவதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளார்.

 

நாசருக்கு இன்னும் புரியாத குணம் உண்டு ஒன்று உள்ளது. எனில் சினிமா நடிகர்கள் மேல் ஏன் இத்தனை நம்பிக்கை. சினிமா வேறு. வாழ்க்கை வேறு என ஏன் புரிந்து கொள்ளாமல் உள்ளனர். அரசியல் என்பது திரையில் இருந்தா எடுத்துக் கொள்வது? தலைமைக்கு எப்படி அந்த இடம் சரியான தேர்வாக இருக்கும் ? என கேட்டுக் கொண்டே இருப்பார்.

 

பக்கத்து மாநிலம் கேரளா, ஆந்திரா, மே. வங்காளம் எல்லாம் எப்படி தெளிவாக உள்ளது என ஆதங்கப்படுவார். வேற வழி?

 

 தமிழ் சினிமாவுக்கென நடிப்பு புத்தகம் ஒன்றை நாசர் எழுதிக்கொண்டிருப்பதை பார்த்தேன். பேனாவும் ஃபைலுமாக படப்பிடிப்புக்கு செல்கிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதித்  தள்ளுகிறார். அடைப்புக்குறி போட்டு அங்கங்கே கமெண்ட் அடித்துக் கொள்வதைப் பார்த்தால் சோவின் நையாண்டி தென்படும்போல் தெரிகிறது.

 

தடாலடியாக செய்வதில் கமலைப்போல நாசரும் சளைத்தவர் அல்ல. சென்ற வாரம் நடிகர் பாலாசிங் மகள் திருமணம் கலியக்காவிளையில் நடந்தது.  கொட்டும் மழையில் சென்றோம். அங்கே 80 களின்போது உள்ள நட்புக் கூட்டம். ருத்ரன், நடிகர் சத்யா சுந்தர், இளையபாரதி,  பரீக்‌ஷா மீனாட்சி சுந்தரம் என திரண்டிருந்தனர். சிஎஸ்சி சர்ச்சில் மாலையில் நடந்தேறியது. கூட்டத்தில் சர்ச்சில் பாதர் நாசர் வந்ததை குறிப்பிட்டு மகிழ்ந்தார். இது போதாதா செல்பிக்கள் சூழ்ந்து கொண்டு இஷ்டத்துக்கு எடுத்து நாசரை வேறு மனநிலைக்கு கொண்டு போயினர். அதன்விளைவு ரிசப்ஷன் மேடை ஏறி இறங்க சுவையான பிரியாணி சாப்பிடாமல் திரும்ப வேண்டியதாகிவிட்டது.

 

 அடுத்த நாள் கமீலா சென்னை ஃபிளைட் ஏற நான் கிரி மட்டும் அவருடன் இருந்தோம். மாலை பம்பாய் விமானம் நாசருக்கு. திடீரென மலையாளம் ஜல்லிக்கட்டு பார்க்க ஆசை. நடிகர்ஆனந்த் தன் மனைவியுடன் வர ‘ஓ ஜல்லிக்கட்டு பக்கத்துல நியூ தியேட்டரில் . நான் போய் அரேஞ்ச் செய்கிறேன்' என்று போன ஐந்து நிமிடத்தில் சார் தியேட்டர் ஹவுஸ்புல் என்று செல்லில் பதற... டீ ஆர்டர் செய்ததை குடிக்காமல் தியாகம் செய்து விட்டு காரில் பறந்து போய் இறங்கினால் தியேட்டர் மேனேஜர் ஒருகுண்டை தூக்கிப் போட்டார். விஜய் நடித்த பிகில் அவுஸ்புல். ஜல்லிக்கட்டு படம் பார்க்க யாரும் வராததால் காட்சி ரத்து செய்தாச்சு சாரி சார் . என்றார்.

 

உடனே நாசர் என் பையன் ஃபைசல் வேற இது நல்ல படம் பார்க்கலாப்பான்னு கேட்டுட்டான். நல்ல படத்தை நாம் இப்போ பாக்கணுமே என்றார். எத்தனை டிக்கெட் வாங்கினா படம் போடுவீங்க அதை நான் இப்போ வாங்கிக்கிறேன் படம் ஓட்டுங்க என்றார்.

 

மேனேஜர் தியேட்டர் முதலாளியிடம் பேசிவிட்டு சார்20 டிக்கெட் வாங்கணும் எனவே, பணம் கைமாறியது. நம்பவே முடியாது, நாங்கள் ஐந்து பேர் மட்டும் படம் பார்க்க துவங்கினோம். இதை உடனே முகநூலில் பதிவாக போட்டேன்,. படம் முடியும் போது கூடுதலாக 11 பேர் வந்திருந்தனர். தியேட்டர் மேனேஜர் சீனிவாசன் 11 பேருக்கான டிக்கெட் பணத்தை திரும்ப நாசரிடம் கொடுத்து விட்டார். 

 

நாசரிடம் அடிக்கடி சமூகம் கலை நாடகம் குறித்து வெளிப்படையாக பேசும் சூழல் பலப்பல.  அவரிடம் வெளிப்பட்டது கொஞ்சம் வெளிப்படாதது நிறைய.  கொஞ்ச காலத்தில் நாசர் புது அவதாரம் எடுப்பார். இலக்கியம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம் என மக்கள் எதிர்பார்க்கலாம். வாங்க நாசர் நல்ல சமூக எழுத்தாளராக.

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...