???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 14 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   14 , 2019  05:49:10 IST


Andhimazhai Image

மகாகவி பாரதியாரைப் போல் ஏன் ரவீந்திரநாத் தாகூர் இல்லை?

 

ஜெயகாந்தனைப் போல் ஏன் பொன்னீலன் இல்லை?

 

சுதந்திர காலகட்டத்தில் பாரதியார்  வெகுண்டெழுந்து விடுதலைக்காக எழுதிய கவிதைகள் நமக்கெல்லாம் தெரியும் . ஆனால் அதே காலகட்டத்தில் வாழ்ந்த தாகூர் மட்டும் ஏன் மென்மையான போக்கை தன்னுடைய கவிதைகளில் கொண்டு வந்தார்?

 

இந்த கேள்வி  என்னை தூங்க விடாமல் செய்தது.

 

சிபிஐ கட்சியின்  கலை இலக்கிய பெருமன்றத்தில் ஆர்வமாக பங்கு கொண்ட ஜெயகாந்தன் உடைய வீரிய பேச்சாற்றல், பொன்னீலன் அவர்களுக்கு ஏன் பொருந்தவில்லை?

 

எதற்காக மென்மையான போக்கு என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அந்த கேள்விக்கு விடையாக ஒரு நாள் டி பி ஐ (பள்ளி கல்வித்துறை  யில்) பணியாற்றிய கலாமணி என்கிற நண்பர் ஒரு நாள் அலுவலக நிமித்தமாக வந்த பொன்னீலன் அவர்களை நேரடியாக சந்திக்க வைத்தார். திக்கு முக்காடிப் போனேன்.

 

கூடவே நந்தனம் கலைக் கல்லூரியில் படித்த கம்யுனிஸ்ட் கட்சி நண்பன் அல்போன்ஸ் ராஜா இருந்தான். முதல் சந்திப்பு  ஏடா கூடமாக கேட்டு வைக்காதே என்று எச்சரித்து வைத்தான்.

 

ஒன்றும் பேசாமல் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன். கலாமணி என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார். ‘’ தாமரை இதழில் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார் மாநிலக் கல்லூரியில் படித்த தமிழ் படித்த நண்பர்,’ என்று சொல்லிவிட்டு  தேநீர் வாங்கி கொடுத்தார்.

 

 கலா மணி DPI  வளாகத்தில் ஒரு நேர்த்தியான இலக்கிய வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். அவருக்குப் பின்னால் எப்போதும் ஒரு குட்டி மந்திரி சபை இருக்கும். அப்போதும் இருந்தது.

 

தேநீர் உடன் பிஸ்கட்  சேர்ந்தது. பொதுவாக பேச்சு இருந்தது. எனக்கு என் கேள்வி முக்கியமாகப் பட்டது. எந்த நேரத்தில் கேட்டு அசர வைப்பது என்று துடித்துக் கொண்டிருந்தேன்.

 

இலக்கியம் பேசினார்கள். அரசியல் பேசினார்கள்  நட்பை விசாரித்து கொண்டார்கள்.  கூட்டம் கலைகிற சூழல். போச்சுடா என்று நினைத்து கொண்டு பதறிய சமயம் பொன்னீலன் என்னை அழைத்து பேசத் துவங்கினார். ஆகா வசமாக அவர் சிக்கினார் என்று மகிழ்ச்சி யில் துள்ளி குதித்தேன்.

 

 என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று அவர் என்னை கேட்டார் . நான் தமிழ் இளங்கலை படித்து விட்டு  எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றேன். உங்களுடைய ஊற்றில் மலர்ந்தது படித்து விட்டேன் என்று பெருமிதமாகச்  சொன்னேன்.

 

 

அப்படியா எந்த ஊர் என்றார். திருவண்ணாமலை அருகில் ஒரு சிறிய கிராமம் என்றேன். அப்படி என்றால் கலை இலக்கிய பெருமன்றம் அங்கே சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் என்றார். ஆமாம் எங்கள் ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் அவர்கள் முகில் வண்ணன் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறார் .அவரிடம் படித்த மாணவர்களிடம் இலக்கியம் குறித்துப் பேசுவார் என்று சொன்னேன் .

 

 

சிரித்துக் கொண்டார் . நல்லது என்று சொன்னார். தேனீர் என்ற திரைப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றேன்.

 

டி செல்வராஜ் அவர்களின் தேனீர் நாவல் தானே அந்த படம் என்றார். ஆமாம் என்றேன் .

 

யார் கதாநாயகன் என்றார்

 

பாக்யராஜ் அவர்கள் நடிக்கிறார்கள் என்று சொன்னேன்.  மிகச்சிறப்பு.. குடிசை படம் எடுத்த ஜெயபாரதி தானே என்றார் ஆமாம் என்றேன்

 

நம் ஆட்கள் எல்லாம் கலை இலக்கியங்களை மாத்திரமல்லாமல் திரைப்படத் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் சொல்லிக்கொண்டு இருந்தார். ஆமாம் என்றேன் . பேச்சு  தொடர்ந்து கொண்டிருந்தது ஆனால் நான் கேட்க வேண்டிய கேள்வி என்னை முட்டித் தள்ளியது எல்லாம் சரி சார் நான் கேட்க வேண்டியதைக் கேட்டு விடுகிறேன்…. என்றேன்.

 

நண்பன் வேண்டாம் என சட்டை பிடித்து இழுத்தான்.

 

பார்த்து விட்டார்.

 

’ஏன் எல்லாரும் ஜெயகாந்தன் போல் வேகமாகவும் கோபமாகவும் வாழ்க்கையில் செயல்படவில்லை?

 

அப்படி செய்திருந்தால் இன்னும் சில காலங்களில் இந்த நாடு கம்யூனிஸ்ட் நாடாக  மாறிவிடும் ஏன் இந்த எழுத்தாளர்கள்  மென்மையாக இருக்கிறார்கள்?” என்று கேட்டேன். சின்ன வயசு… வேகமாக இருந்தேன் என்பதால் இந்த கேள்வி.

 

கலாமணி சிரித்துக் கொண்டு இருந்தார்

 

அவருக்கு

இது தெரிந்திருக்கக் கூடும் .இது போல புரட்சிகரமாக பேச ஆரம்பிக்கிறவர்கள் பின்னால் வள்ளலார் போல் அமைதியாகி விடுவார்கள் என்று. ஆனால் பொன்னீலன்  அவர்கள் அமைதியாக  அதற்கு விளக்கமளித்தார்.

 

 ”எல்லோரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை அவரவர்கள் தளத்தில் இருந்து கொண்டு மக்களுக்கும் சமூகத்திற்கும் சரியான பணியை செய்வது தான் வாழ்வின் உயர்ந்த அடையாளம்,” என்றார்.

 

அது அப்போது எனக்கு சரியெனப் படவில்லை .

 

மனக்குறையுடனே திரும்பினேன். என் மனக் குமுறலை யாரிடம் சொல்லி நிவர்த்தி செய்து கொள்வது என்று எனக்கு புரியவில்லை .

 

சோவியத் நாடு பத்திரிகையில் திகசி அவர்களை சந்தித்து புலம்பினேன். அவர் புன்னகையுடன் ஏதோ சொல்லி என்னை சமாதானப்படுத்தினார். அவர் தந்தையின் இடத்தில் இருந்து என் போன்றவர்களை அணுகுகிறவர்.

 

சீக்கிரம் புரட்சி நடந்து விடும். அதனால் கம்யூனிசக் கருத்துக்கள் வலுப்பெறும். இந்த நாட்டில் ஏழ்மை விலகும் என்று நான் கருதி பயணப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது. பிற்பாடுதான் தெரிந்தது மெல்ல மெல்லத்தான் யாவும் மாறும் என்று. நம் மண்ணுக்கு என்று ஒரு கொள்கையும் கலாச்சாரமும் இருக்கிறது. கல்வி பொதுமையாக இல்லை.  மாற்றம் என்பது அவ்வளவு லேசான தில்லை என்பது எனக்கு தெரியவந்தது.

 

 

 

வலம்புரிஜான் அவர்கள் ஜெயகாந்தன் மீதும் பொன்னீலன் ஜெயந்தன்  சு சமுத்திரம் ராஜம் கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் மீது மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தார் .

 

பொதுவாக கரிசல்காட்டு எழுத்தாளர்கள் மேல் அவருக்கு மிகவும் அலாதி பிரியம் உண்டு .

 

பொன்னீலன் அவர்களை பற்றி பேசும் போது “மென்மையாகவும் உறுதியாகவும் இருக்கிற மிகச்சிறந்த எழுத்தாளர் நாம் அவர்களை பயன்படுத்த வேண்டும்,” என்று அவர்கள் சொன்னது எனக்கு நினைவிற்கு வருகிறது.

 

 பொன்னீலன் எழுத்துக்களை பின்தொடர்ந்துகொண்டிருந்தேன். .அவருடைய ஊற்றில் மலர்ந்தது அதற்குப் பிறகு வந்த கரிசல், புதிய தரிசனங்கள் யாவும் என்னை மேலும் அவர் மேல் அன்பு கொள்ள செய்தது.

 

 புதிய தரிசனங்கள் 1994 இல் சாகித்ய அகாடமி விருது பெற்று அவருக்கு மிகப்பெரிய உயர்வைத் தந்தது .அவருடைய சிறுகதைகள் என்று சொன்னால் புதிய மொட்டுகள், தேடல், இடம் மாறி வந்த வேர்கள்  சொல்லலாம்.

 

அவருடைய திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற நூல் மிகவும் கவனிக்கத் தக்கது. ஒருமுறை வலம்புரி ஜான் அவர்களிடம் இந்த திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற வார்த்தையை சொன்னதும் அவர் உடனே சிரித்து விட்டார் .

 

”ஆமாம் உண்மைதான் நம்முடன் இருக்கும் ஆர் சி சம்பத் இதைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார் .

 

திருமணங்கள்
சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படுகிறது அப்படி என்றால்
அங்கே  ஒரு அசம்பாவிதம்
நடந்தால் எப்படி தப்பிப்பது-

 

என்பதை நினைவு படுத்திப் பேசியது இப்போதும் நினைவில் நிழலாடுகிறது.

 

 காலம் மெல்ல மெல்ல நகர்ந்தது. நான் வறுமையில் வாடிக் கொண்டிருந்த சமயம். எனது துணைவியாருக்கு ஆசிரியை பணி கிடைத்தால் நல்லது என்கிற சூழல் இருந்தது. துணைவியார் பொன்னீலனை உங்களுக்குத் தான் தெரியுமே போய் அவரை பாருங்களேன். ஆசிரியர் பணிக்கு தேர்வு நடக்கிறது அவரிடம் சென்றால் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார். நான் இதுபோன்ற பரிந்துரைத்து வேலை கிடைப்பதில் உடன்பாடு கொண்டவன் அல்ல. இருந்தாலும் வறுமை அவ்வாறு ஆக்கிவிடுகிறது.

 

அவரிடம் சென்று தயங்கித் தயங்கி நின்றேன். என்ன என்று கேட்டார்.

 

ஒரு முக்கியமான செய்தி என்று சொன்னேன்  . சொல்லுங்கள் என்றார். எனக்கு ...என்றேன் .

 

தேநீர் தானே வாருங்கள் என்று நாங்கள் முதல்முதலாகச் சந்தித்த அந்த மரத்தடியில் அழைத்துக்கொண்டு போய் ஒரு தேநீர் வாங்கிக் கொடுத்தார்.

 

படைப்பாளர்களுக்கு தேநீர் என்பதுதான் சத்துணவு. அதுதான் பெரிய விருந்தும் கூட. அப்படித்தான் நான் கேட்கிறேன் என்று நினைத்துக்கொண்டார் போலும் .அதை விட எனக்கு முன்பு நடந்த சம்பவம்தான் நினைவுக்கு வந்தது .கலாமணி அவர்களுடன் சந்தித்து அவரிடம் கேட்ட  முதல் கேள்வி  தான் நினைவுக்கு வந்தது .

 

எனவே அவரிடம் ஒரு வேலை வேண்டும் என்று கேட்பது சங்கடமாக இருந்தது .

 

தகுதி இருந்தால் கிடைக்கட்டும் இல்லையென்றால் போகட்டும் என்று நினைத்துக்கொண்டு நான் எதுவுமே கேட்காமல் திரும்பி வந்து விட்டேன் .

 

என் மனைவி கேட்டார்.

 

”என்னாச்சு பார்த்தீங்களா?’’

 

”ம்ம்’’ என்றேன்.

 

”கேட்டிருக்க மாட்டீர்கள் தானே?’’ என்றார் .

 

பேசாமல் இருந்தேன். “நாட்டு நடப்பும் வீட்டு நடப்பும் தெரியாத எழுத்தாளர்களை வச்சிட்டு நாங்க என்ன பண்றது?’’ என்று தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்து விட்டார்.

 

தகுதியோடு ஒருவர் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற கம்யூனிஸ தத்துவத்தை கொண்ட ஒரு எழுத்தாளனிடம் என் மனைவிக்கு மாத்திரம் ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று எப்படி கேட்பது ?

 

அப்போது பொன்னீலன் அவர்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரியாக பணி செய்து கொண்டிருந்தார் .

 

பின்னாளில் எனது துணைவியார் தன் முயற்சியில் தானே தகுதி அடிப்படையில் ஆசிரியர் ஆகி பணி செய்கிறார் .

 

 

 

பொன்னீலன் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் சென்னைக்குள் நான் சென்று அமர்ந்து கேட்பது எனக்கு வழக்கமாக இருந்தது .

 

ஒரு முறை நான் தேனாம்பேட்டை சிக்னல் அருகில் உள்ள கிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ் பின்னால் உள்ள ஒரு வீட்டில் குடி இருந்தேன். அப்பொழுது அல்போன்ஸ்  ராஜா அவர்களுடன் பொன்னீலன் அவர்கள் என் வீட்டுக்கு அழைத்து வந்தேன். எனதுவேண்டுகோளுக்கிணங்க தேநீரும் சிற்றுண்டியும் சாப்பிட்டார் .

 

பல இலக்கிய செய்திகளை அப்போது அவர் பரிமாறிக் கொண்டார். எப்போதும் அவர் அதிர்ந்து பேசாத குணம் கொண்டவர் .அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய எனக்கு இருந்தது .

 

ஒரு எழுத்தாளர் என் இல்லத்திற்கு வந்து உணவருந்தி விட்டு செல்வது என்பது யாருக்கு வாய்க்கும்? பொன்னீலன் அவர்கள் இன்று வரை கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகவும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து கொண்டிருக்கிறார் . அவருக்கு வயது  எண்பது. படைப்பாளர்கள் எல்லோரும் நவம்பர் 16-ஆம் தேதி நாகர்கோவிலில் கூடி விழா எடுக்கிறார்கள் என்பது தனிச்சிறப்பு .

 

படைப்பாளர்கள் மாத்திரமல்ல அவர் தன்னுடைய கிராமத்திற்கு சுற்றியுள்ள பகுதிகளில்  இரத்த தான முகாம்களை நடத்தி முன்னோடியாக இருக்கிறார்.

 

எண்பதுகளின் துவக்கத்தில் இந்த தேசம் கம்யூனிஸ தேசமாக மாறி எல்லோரும் எல்லோருக்கும் கிடைக்கும் இலக்கை நோக்கிச் செல்லும் என்று நினைத்த கனவு இப்போது என்னிடம் இல்லை .

 

நான் அவரைப் பார்த்து இப்போது அந்த பழைய கேள்வியைக் கேட்க மாட்டேன்.

 

 அவர் தன் வாழ்நாள்  முழுமையும் படைப்புக்கும் படைப்பு சார்ந்த இளைஞர்களுக்கும் கரிசல் மண்ணுக்கும் உழைத்திருக்கிறார் .

 

நியாயத்தின் பக்கம் நின்று உழைத்திருக்கிறார் .வாழ்ந்து இருக்கிறார் என்பதே போதுமானது.

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...