அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பெட்ரோல், டீசல் விலை குறைப்பு! – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 0 ஆறு பேர் விடுதலை – முதலமைச்சர் ஆலோசனை! 0 தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை – வானிலை ஆய்வு மையம்! 0 சர்ச்சைப் பேச்சு: விளக்கம் அளித்துள்ள லியோனி! 0 ஐபிஎல் இறுதி போட்டியில் வெளியிடப்படும் அமீர் கானின் லால் சிங் சத்தா திரைப்படத்தின் ட்ரெய்லர்! 0 விவாதங்களை நடத்த அனுமதிக்கும் நிறுவனங்கள் மீது தாக்குதலை நடத்தும் பாஜக அரசு – ராகுல் காந்தி 0 நெஞ்சுக்கு நீதி: திரைவிமர்சனம்! 0 கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ விபத்து: புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி! 0 தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பிஏ-4 வகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி! 0 'பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டும்': ராகுல் காந்தி வலியுறுத்தல் 0 இன்று குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு! 0 கைது நடவடிக்கையை தடுக்க முன் ஜாமின் கோரும் கார்த்தி சிதம்பரம்! 0 குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்: பிரசாந்த் கிஷோர்! 0 பேரறிவாளனுக்கு ஏற்ற பெண் கிடைத்தால் உடனே திருமணம் செய்ய தயார்: அற்புதம்மாள் 0 மதுரை தம்பதிக்கு நடிகர் தனுஷ் சார்பில் வக்கீல் நோட்டீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 13 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   08 , 2019  14:51:57 IST


Andhimazhai Image

அண்ணா மேம்பாலத்துக்கு அருகில் தேனாம்பேட்டை காவல் நிலையம் அதற்கு எதிர்ப்புறமாக 500 அடி தாண்டி எல்லை அம்மன் காலனி என்ற ஒரு தெரு இருக்கிறது. அது 1977 க்கு பிறகு சினிமாவில் ஒரு முக்கியமான தெருவாக மாறிவிட்டது  .அதற்கு காரணம் பாரதிராஜா அவர்கள்தான். 16 வயதினிலே அப்பொழுது வெளிவந்த சமயம். என்னவோ தெரியவில்லை அப்பொழுது சுதந்திரம் வாங்கி விட்ட மாதிரி ஒரு குதூகலம் எங்களுக்கு.

 

மாநில கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம் .ச்76க்கு பிற்பாடு அவர் திரையுலகத்தில் செய்த கிராமிய மணம் கலந்த திரைப் புரட்சி. கிராமத்து மண்ணின் உணர்வுகளையும் எதார்த்த காட்சிகளையும் புதிய இசையமைப்பில் அவர் திரையில் கொண்டு வந்து சேர்த்தது இவ்விதமாகச் சொல்ல எனக்குத் தோன்றுகிறது. இப்போது நினைத்தால் அது கொஞ்சம் அதிகமாக கூட தெரியலாம்.

 

 புரட்சி என்கிற வார்த்தை அரசியலுக்கு ஆனது என்றாலும் கூட திரையில் ஒரு மாற்றத்தை விரும்பிய அவருடைய செயல் என்பது அப்போது எங்களுக்கு அப்படித்தான் சொல்ல தோன்றியது . இப்போது வேண்டுமானால் அது கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

 

திரையில் ஒரு மாற்றம் அல்லது எழுச்சி என்று நிச்சயமாகச் சொல்லலாம் . எடிட்டர் லெனின் அவருடைய படங்களில் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் மிக அருமையாக எடிட் செய்திருப்பார்.

 

அதாவது சிறிய சிறிய காட்சித் துண்டுகளாக அமைத்து அதில் ஒலியை ஏற்றி பார்க்கும்போது மிகப்பெரிய ஒரு மாற்றம் .அது ஒரு கிளர்ச்சி கூட அப்போது எழுந்தது என்று சொல்லலாம் .

 

இளையராஜாவின் அற்புதமான கிராமிய இசை; செல்வராஜின் கதை; அழகிய பாடல் வரிகள் இவையெல்லாம் ஒன்றுசேர்த்து நிவாஸின் காமிரா, பிற்பாடு கண்ணனின் காமிரா இவர்கள் எல்லாம் சேர்த்து பாரதிராஜா மிகச் சிறந்த அற்புதமான ஒரு காட்சித் தொகுப்பைத் தமிழகத்திற்கு தந்தார் என்பதை மறுப்பதற்கு இயலாது. பாரதி ராஜா தன் வருகையின் மூலமாக  பல இயக்குநர்களின் வருகைக்குக் கதவைத் திறந்து விட்டார் என்று சொல்லலாம் .

 

அதனால்தான் பாலச்சந்தரை இயக்குநர் சிகரம் என்று கொண்டாடுகிற அதே சமயத்தில் பாரதிராஜா இயக்குநர் இமயம் என்று உச்சியில் தலையில் தூக்கி வைத்து ஆடுகிற எண்ணத்தை உருவாக்கியது என்றால் அது உண்மையானதுதான் .

 

 அவருடைய புதிய வார்ப்புகள் தேவி பாரடைஸ் திரையரங்கில் வெளியானது. காலை 9 மணிக்கு டிக்கெட் தருவார்கள். ஆனால் அதற்கு முன்பாக வரிசையில் காலை 4 மணிக்கே வரிசையில் நிற்கிற பழக்கம் இருந்தது .

 

நான் அப்படி ஒரு முறை நின்று கொண்டிருந்தேன் .அதற்குப் பிறகு எட்டு மணிவாக்கில் பாவலர் அறிவுமதி அவர்கள் வந்து அந்த வரிசையில் நிற்பார்கள் . நான் குளித்து விட்டு மறுபடியும் வந்து சேர்ந்து கொள்வேன்.

 

அப்போது வெளிவரும் முதல் படம் முதல் காட்சியில் பார்த்து விடுவது என்பது எங்களுக்கு வழக்கம் .அப்படி அந்த படத்தை பார்த்தபோது  தியேட்டரில் நட்பானவர் தான் நடிகர் சந்திரசேகர், நடிகர் ஜனகராஜ் போன்றவர்கள்.

 

பாரதிராஜா என்றால் அப்போது எங்களுக்கு அவ்வளவு உயிர் நெருக்கமான உணர்வு .

 

 

ஒருமுறை எம் சி ராஜா ஹாஸ்டலில் மொட்டை மாடியில்  ஆண்டு விழாவில் நான் ஒரு நாடகம் எழுதி 'வசந்தம் வந்தது ' என்று அரங்கேற்றினோம். அப்போது அதற்கு உறுதுணையாக இருந்த வர் குடியேற்றம் சிகாமணி .

 

காலமெல்லாம் காதல் வாழ்க படத்தை இயக்கிய ஆர் பாலு அருகில் உள்ள நந்தனம் மாணவர் விடுதியில் இருந்தார்.

 

பாவலர் அறிவுமதி , திரைப் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் இயக்குநர் இமயம் பாரதிராஜா 3 பேரும் நாடகத்தைப் பார்த்துவிட்டு என்னை பாராட்டியது இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது .

 

பாரதிராஜா அப்போது பேசிய  வார்த்தைகள் இன்றுவரை எனக்கு நினைவில் நிற்கிறது. இந்த அண்ணாசாலையில் விவசாயிகள் கோவணம் கட்டிக் கொண்டு வந்து கேள்வி கேட்கிற அளவிற்கு நான் ஒரு படம் எடுப்பேன்.  ஏழைகளுக்கு முக்கியத்துவம் தராத இந்த நகரங்களை என்ன செய்வது என்று கோபமாக பேசிய வார்த்தைகள் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கிறது.

 

 பாரதிராஜா இயக்குநர் புட்டண்ணா கனகல் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட சூத்திரம் இன்று வரை அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது .

 

பாரதிராஜாவின் மிகப்பெரிய சாதுரியம் ஏற்கனவே புகழ்பெற்ற கதாநாயகன் கதாநாயகி போட்டு படமெடுக்காமல் தவிர்த்தது..

 

ஏற்கனவே ஒரு கருத்தை வைத்திருக்கிற மக்களிடம் எடுபடாது என்று பூரணமாக உணர்ந்த பாரதிராஜா அவர்கள் புதிய இளைஞர்களையும் இளைஞர்களை வைத்து புதிய கற்பனையை வைத்து அவர் படம் எடுத்து வெற்றி பெற்றது தான் .

 

எம்ஜிஆர்  சிவாஜி இருக்கும் போதே பல வெற்றிப்படங்களை தந்தவர் பாரதிராஜா .

 

 பாக்யராஜ்  மணிவண்ணன் போன்றவர்களுக்கு எல்லாம் அவர் முக்கியத்துவம் கொடுத்தார் . பின்னாளில் பொன் வண்ணன் ராஜா சந்திரசேகர் அறிவுமதி பாரதி கிருஷ்ணகுமார் போன்றோர் களை சேர்த்துக் கொண்டார்.

 

 

 

எந்த புதிய கருத்து இருந்தாலும் யார் சொன்னாலும் தன்னுடைய கற்பனையில் அதில் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்துக்  காட்டியவர் பாரதிராஜா .

 

பாரதிராஜாவின் ரசனையை பாராட்டிக் கொண்டிருந்தாலும் என்னவோ ஒரு மனத்தடை மிதந்து கொண்டிருந்தது .கிழக்கு சீமையிலே படம் வெளிவந்த நேரம் தயாரிப்பாளர் தாணு அவர்கள் இந்த படம் பார்க்க என்னை அழைத்தார். போய் பார்த்தேன். பார்த்ததும் மனம் உருகி நின்று பாரதிராஜாவை பார்த்துவிட வேண்டுமென்று ஜெமினி அப்பார்ட்மெண்டில் இருக்கிற அவர் அலுவலகத்திற்கு சென்று போய் பார்த்தேன் .உட்கார்ந்திருந்தார் .நேரடியாக போய் கை குலுக்கி, ‘இதுதான் உங்கள் முதல் படம். உணர்வுகளை சரியாக கையாண்டு இருக்கிறீர்கள்  சத்யஜித் ரே அவர்களும் கையாண்டார்,’ என்று சொல்லி கைகுலுக்கி விட்டு வந்துவிட்டேன்.

 

சரசரவென படியில் இறங்கும்போது என் காதில் விழுகிறது 'என்ன இப்படி சொல்லிட்டு போறான்'என்று அவர் கேட்க பொன்வண்ணனும் சித்ரா லட்சுமணன் அவர்களும் எதையும் மறைத்து  பேசாமல் நேரடியாக பேசுபவர் இப்போது கமல்ஹாசன் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் உங்களுக்கு நல்லாத் தெரியும் தெரியும்  என்கிறார்கள்.

 

'தாய் 'பத்திரிகையில் எழுதிக் கொண்டிருப்பவர் தானே என்று சொல்வது என் காதில் விழுகிறது.

 

மனதுக்கு பிடித்த  படைப்பாளர்கள் மீதுதான் கோபமும் தாபமும் இயற்கையாக எழும் .அப்படித்தான் பாரதிராஜா மேல்  வந்ததும்.

 

இவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு இளைஞர்களை கவரும் விதமான வெறும் சாதாரண படங்களை எடுத்து விட்டாரோ என்ற பயத்தால் வந்த கோபம் தான் அது .

 

ஆனால் அவர் அதை சரியாக உணர்ந்து கொண்டார் ஒருமுறை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அலைகள் ஓய்வதில்லை  படத்தை எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு போட்டுக் காண்பித்தார். அவருடைய பாராட்டு சொற்களைப் போட்டு விளம்பரம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கக்கூடும். ஜெயகாந்தன் அவர்கள் படம் பார்த்து விட்டு அமைதியாக சென்றார். பின்னால் பாரதிராஜா சென்று கருத்து கேட்க ஒன்றும் சொல்லாமல் சிரித்துவிட்டுப் போனார்.

 

 அதற்கு காரணம் இல்லாமல் இல்லை அந்த படம் இந்து மதத்தையும் கிறித்தவ மதத்தையும் தூக்கி எறிந்துவிட்டு ஒன்று சேர்கிற மாதிரியான புரட்சி படம் தான் அது ஆனாலும் ஜெயகாந்தன் அவர்களுக்கு ஒப்பவில்லை அது பாரதிராஜாவுக்கு புரிந்து விட்டது.

 

 அந்திமந்தாரை, கடல் பூக்கள், கருத்தம்மா, வேதம் புதிது போன்ற படத்தை தந்தார்.  எல்லாம் தர முடிகிற அவர் ஏன் அவர் மனதில் இன்னும் ஒரு ஏக்கம் இருக்கிறது. என்ன என்று சொன்னால் குற்ற பரம்பரை என ஒரு எதார்த்தமான மண் சார்ந்த ஒரு படத்தை தர வேண்டும் என்கிற ஏக்கம்தான். ஒரு மிகச் சிறந்த கலைஞர்களான சத்யஜித்ரே, மிருணாள்சென் போன்ற இயக்குனர்கள் வரிசையில் கொண்டாடத் தகுதியான பாரதிராஜா, இன்னும்  செய்ய வேண்டும் என்று நினைக்கிற ஆதங்கம் இதுதான் என்று கருதுகிறேன்.

 

எனக்கும் பாரதிராஜா அவர்களுக்கும் நேரடியாக ஒரு சண்டை வந்தது . அது மனோரமா தியேட்டரில் தான் நடந்தது .

 

என்ன அந்த நிகழ்வு ?

 

என்று சொன்னால் படைப்பாளர்களுக்கும் பெப்ஸி அமைப்பாளர்களுக்கும் வேற்றுமை வந்த நேரம் .படைப்பாளர்கள் தனியாக சங்கம் அமைத்து  தன் உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள் .

 

ஊழியர்கள் தனியாக இயங்கி கொண்டிருந்தார்கள். நோக்கம் எது என்றால் ஒரு சிறந்த திரைப்படத்தை வருவதற்கான சூழல் தான். எல்லா மொழி காரர்களும் சேர்ந்து கொண்டு சிரமத்தை உண்டாக்குகிறார்கள் என்பதுதான் ஒரு பொதுவான கருத்தாக இருந்தது.

 

அப்போது நான் கமல்ஹாசனிடம் பணியாற்றி விட்டு தனியாக ஜெயராம், ரஞ்சிதா, கவுண்டமணி வைத்து தேவராஜ் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். டப்பிங் நடந்து கொண்டிருந்தது .நான் படைப்பாளர்கள் பக்கம் இருந்தேன். நான் பணியாற்றிய கமல்ஹாசன் அவர்கள் எதிர்நிலையில்   இருந்தார்கள் .

 

ஒரு பிரச்சனை வருகிறது கமல்ஹாசனை எதிர்க்க வேண்டும் என்று எல்லோரும் பேசினார்கள் .நான் கூடாது என்றேன். படைப்பாளர்களை அதிகமாக நேசிக்கும் அவரை விலக்க  கூடாது அவருக்கு புரியவைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னேன் .

 

அந்த பேச்சுவார்த்தையில் 'நீ தலைவனா நான் தலைவனா’ என்று அவர் கோபத்தில் சொல்ல, பேசுவதற்கு நியாயத்திற்கு யாராக இருந்தால் என்ன என்று சொல்ல பிரச்சனை பெரிதானது.

 

என்னை இயக்குநர் சுந்தரராஜனும்  அறிவுமதியும் இன்னும் சில இயக்குநர்களும் மாடியில் அழைத்து க் கொண்டு அறையில் அடைத்து வைத்து ஏன் இப்படி பேசுகிறாய் என்று சமாதானம் செய்கிறார்கள். தவறாக என் வார்த்தை புரிந்து கொள்ளப்பட்டது. கமல்ஹாசன் மேல் இருந்த கோபம் என் மேல் அப்போது பாய்ந்தது.

 

அதற்குப் பிற்பாடு பாரதிராஜா புரிந்து கொண்டு  தோள் மேல் கை போட்டுக் கொண்டு சகஜமாக அடுத்து சில மாதங்கள் பழகியது  நினைவிற்கு வருகிறது .

 

இன்னொரு சம்பவம் அதில் கமலஹாசன் அவர்களை எதிர்த்து நிறைய இயக்குனர்கள் கையெழுத்து போட்டு கொடுத்து இயக்குநர் பார்த்திபன் மூலம் பொக்கே கொடுத்து கமல்ஹாசனிடம் எதிர்ப்பு தெரிவித்தார்கள் .

 

அதில்  என் கையெழுத்தும் சிக்கிக்கொண்டது தான் விதி .

 

காரணம் என் படம் டப்பிங் முடித்து விட்டு மனோரமா தியேட்டர் வருகிறேன்  யார் கண்ணன் கையெழுத்து போடும் இடத்தில் மட்டும் காண்பித்து கையெழுத்து வாங்கி சென்று விட்டார் .

 

நான் பணியாற்றிய கமல்ஹாசன் மீது எதிர்த்து கையெழுத்து போட வைத்து விட்டீர்களே என்று என் மனம் சொல்லியதும் கமல்ஹாசன் அதற்கு பின்பு உணர்ந்து கொண்ட தும் வேறு கதை.

 

என் இனிய தமிழ் மக்களே என்ற சொற்களுக்கு தகுதியானவர்தான் பாரதிராஜா .

 

அந்த சொற்களுக்கு காப்பி ரைட் அவருக்கு த் தான்.

 

வேறு யார் அதை பயன்படுத்தினாலும் சரியாக இருக்காது .

 

தமிழ் உணர்வு என்று சொன்னால் அவர் தான் முந்திக்கொண்டு வருவார் .

 

நீங்கள் பார்த்திருப்பீர்கள் கிரிக்கெட் விளையாட்டு  சென்னையில்  நடைபெற்ற போது விவசாயிகள் பிரச்சினை உள்ள போது இது இங்கு தேவை இல்லை என்று போராடியவர் தான் பாரதி ராஜா.

 

இதே போல ஒரு சமயம் ஜெயலலிதா அவர்கள் ஆட்சி செய்தபோது  கர்நாடக அரசு காவிரி நீர் தண்ணீர் தர மாட்டேன் என்கிறது அப்படியானால் நெய்வேலியில் இருந்து நாம் ஏன் உங்களுக்கு மின்சாரம் தர  வேண்டும் என்கிற நிலைப்பாட்டை திரைப்பட அமைப்புகள் முடிவெடுத்தது அந்தபோராட்டத்துக்கு தலைமை தாங்கினார் பாரதிராஜா. அவர்களின் தலைமையில்  அனைவரும் பஸ்களில் சென்றோம். சென்ற வழியெல்லாம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சிறப்பான பாதுகாப்பும் உணவும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

 

 அப்போது நாங்கள் ஒரு வண்டியில் செல்கிற போது தங்கர்பச்சான், பாக்யராஜ், எஸ் ஏ சந்திரசேகர், சங்கர், பிரபு, தேவா, பி வாசு, லிங்குசாமி,

 ஏ எம் ரத்தினம் போன்றவர்கள் எல்லாம்  சகஜமாக பழகினோம். தமிழும் தமிழ் குறித்து பேசிக் கொண்டு சென்றோம் .  அவர் அவர்களுடைய படைப்புகள் குறித்தும் சில உண்மை சம்பவங்கள் குறித்தும் பேசிக்கொண்டே சென்றோம் கலந்துரையாடல் என்பது அப்போது எங்களுக்கு புதுமையாக இருந்தது. ஒருவரை ஒருவர் நெருக்கமாக புரிந்துகொள்ளக் கூடிய சூழலை பாரதிராஜா அவர்கள் அந்த நிகழ்வில் நடத்தி தந்தார்கள்.

 

பாரதிராஜாவிற்கு பிற்பாடுதான் எல்லோரும் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்து பேசுவது சில செயல்களை செய்வது என்கிற ஒரு மாற்றம் வந்தது .

 

பாரதிராஜா அவர்களை ஏன் இந்த அரசு  ஒரு ராஜ்யசபா உறுப்பினராக நியமித்து பெருமைப்படுத்தக் கூடாது?

 

 பாரதிராஜாவின் கலை உணர்வைத் தாங்கி, அவரை தாண்டி ஒரு தலைமுறை வந்து விட்டது என்றாலும் அவரின் தாக்கம் இன்னும் குறையாமல் தான் இருக்கிறது அவரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படமாக எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது .

 

ஒரு சாதாரண கிராமத்து இளைஞன் தமிழ் திரையுலகை புரட்டிப்போட வரலாறு என்பது ஒரு சாதாரணமான நிகழ்வு அன்று .

 

சில மாதங்களுக்கு முன் தன்னுடைய பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களுக்காக படம் எடுப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்க சோழிங்கநல்லூர் பகுதிக்கு வந்து இருந்தார். என் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடம். அங்கு அவர் மேற்பார்வை செய்து கொண்டிருந்த போது என்னுடைய வண்ணத்துப்பூச்சி சிறுவர்கள் படத்திற்கான திரைக்கதை வசனம் புத்தகத்தை அளித்து பேசிக்கொண்டிருந்தேன். இதை என் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப் போகிறேன் என்று சொன்னார் .

 

சமீபத்தில் திரைப்பட இயக்குநர் சங்கத்தில் ஏகமனதாக தலைவராக ஆர்கே செல்வமணி அறிவித்ததும் உடனே மேடைக்கு சென்று கைகுலுக்கி வாழ்த்தினேன். ஏனோ தெரியவில்லை இது ஜனநாயக முறைப்படி இல்லை என்று சிலர் எதிர்ப்புக் குரல் கொடுக்க அவர் அந்தப் பதவியை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எதிலும் தான் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் தான் பாரதிராஜா பாரதிராஜா சொல்லுக்குள் ஒரு தமிழ் உணர்வு இருக்கிறது.

 

 இப்படி உணர்ச்சி வசப் படுவதும் உண்மையாக இருப்பதும் தான் அவரின் அடையாளம்.

 

மகளிர் மட்டும் திரைப்படத்திற்கு தமிழ் பேசுகிற மேற்பார்வையாளர் வேண்டும் என்பதற்காக பாரதி ராஜா அவர்களை கமல் சார் சார்பாக நடிக்ககேட்கப் போனேன் .பயங்கரமாக கோபித்துக் கொண்டார்.

 

பிறகு அதில் எஸ்  தாணு  அவர்கள் நடித்தார். பிறகு விருமாண்டி படத்தில் நடிக்க மதுரை மண் சார்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்க ப் போனேன். கமல் சார் கேட்கச் சொன்னார். சித்ரா லட்சுமணன் மூலம் மெதுவாக சொல்லி பாரதி ராஜா விடம் கேட்டு விட்டேன் .

 

'என்னப்பா நீங்க எல்லாம் தேவர்மகன் ஆயிடுவீங்க.  மண்ணுக்கு சொந்தக்காரர்கள் ஆகிய நாங்கள் வில்லனாக நடிப்பதா ?  சரியான நியாயம்.  பேசாம போ  'என்று அன்பாக கடிந்து கொண்டார்.

 

 அதோடு ஓடி வந்தவன் தான். அதற்கு பிறகு  பாரதிராஜா உடன்  பேசுகிற பல சந்தர்ப்பங்கள் வந்தது. சிரித்துக் கொள்வார்.

 

அவருக்கு எல்லோரும் திரும்பிப் பார்க்கக் கூடிய படத்தை தான் மறுபடியும் தந்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது.

 

துடிப்பு தான் பாரதிராஜா. அவரை வாழ வைப்பது தான் என் இனிய தமிழ் மக்களே என்ற சொல்.

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...