???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8,78,254 ஆக அதிகரிப்பு 0 தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது 0 இந்தியா உண்மையாகவே நல்ல நிலையில் உள்ளதா? ராகுல் காந்தி கேள்வி 0 பள்ளி மாணவா்களுக்கு காணொலி பாடங்களை பதிவேற்றித் தர உத்தரவு 0 அரசு பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 31 வரை தடை தொடரும் 0 இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம் 0 மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு 0 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டலத்தில் 96.17% பேர் தேர்ச்சி 0 நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கு கொரோனா பாதிப்பு 0 தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு 0 தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு 0 கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது 0 நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 5 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2019  06:16:21 IST


Andhimazhai Image

தெரியாத ஊரில் சென்று முகவரி கேட்டால் தெரியாது என்று சில பேர் சொல்லமாட்டார்கள். தெரிந்ததுபோல் ‘’இப்படி வலது பக்கம் போய் இடது கை திரும்பினா கோயில்வரும் அங்கு  யாராவது கேளுங்கள் சொல்வாங்க..’’ என்று விளக்கமாய் சொல்லு நகர்ந்து விடுவார்கள்.

 

கடைசியில் அங்கே போய் கேட்டால் ‘’அயய்யய்யோ அது இங்க இல்லீங்க... பின்னாடி. போகணும்..’’ என்று முதலில் முகவரி கேட்ட இடத்திற்கே அனுப்பி விடுவார்கள். ‘அட..முதலில் துவங்கிய இடத்தின் அருகிலேயே நாம் தேடி வந்த முகவரி இருக்கும்.

 

‘’காலக் கொடுமையடா’’ என்று தலையில் அடித்துக் கொள்வோம். தெரியாது என்று சொல்வதில் என்ன வெட்கக் கேடு என்று எனக்குத் தெரியவில்லை.

 

எனது வாழ்க்கையும் அப்படி சிக்கி திக்குமுக்காடியது.

 

பள்ளி தாண்டி, கல்லூரிக்கு சென்று படிக்க ஆசை ...அப்பா தறி நெய்பவர் நான் தமிழ் படிக்க வேண்டுமென்றேன். அவரோ அதெல்லாம் தெரியாது. நம்ம ஊர்ல படிச்ச சிவராமன் இருக்கார். அவர்தான் முடிவு செய்யணும் என்று மாநிலக் கல்லூரி சேரும் விண்ணப்பத்தை அவரிடம் கொடுத்தார்.

 

சிவராமன் கடினமாய் படித்து முன்னேறியவர். பிற்காலத்தில் வழக்கறிஞர், சென்னை நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு ஒரு பழக்கம் உண்டு தான் சொல்வதை எவரும் மறுக்கக்கூடாது.

 

அந்த சிக்கலில் நான் அப்போதே சிக்கிக் கொண்டேன். அவர் முன்பு வாங்கிய மார்க் லிஸ்டைப் பார்த்துவிட்டு,  பி.எஸ்.சி தாவரவியல் படி என்று பரிந்துரைத்தார்.

 

தமிழிலக்கியம் படிக்க வேண்டும் என்று  நினைப்புக்கு சோதனை அவரால் வந்தது. வேறு வழியின்றி மாநிலக் கல்லூரியில் சேர்ந்து - ஷெனாய் நகர் அரசு  மாணவர் விடுதியில் தங்கி படிக்கவும் துவங்கினேன்.

 

திரு.வி.க பார்க் தொடங்கி அமைந்தகரை, பெண்கள் கிறித்துவக் கல்லூரி,  காயிதே மில்லத் கல்லூரி, அண்ணாசாலை வழியாக சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டு தாண்டி மாநிலக் கல்லூரியை பேருந்து வந்தடையும் வழியெங்கும் எனக்கு தாவரங்கள் கண்ணில் பட்டு எதிரியாகத் தென்படும்.

 

எப்படியோ மூன்று  மாதங்கள் ஓடின. புல் பூண்டோடு காலம் தள்ளினேன். ஆனாலும் தமிழ் படிக்க வேண்டும் என்கிற ஆவல் இருந்தது. பள்ளி ஆசிரியர் கு.அரிகிரிட்டினன் அவர்களிடம் கேட்டேன். அவர் அப்துல்ரஹ்மான் பற்றி சொன்னார்.

 

உடனே ஒரு போஸ்ட் கார்டில் என்னை பற்றி எழுதி தமிழில் சீட் வேண்டும் என்றேன். அவர் உடனே ‘வாருங்கள். இங்கே உங்களுக்கு ஒரு இடம் உள்ளது ‘’ என்று பதிலுக்கு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பினார்.

யார் அந்த அப்துல்ரஹ்மான்?

 

எப்படி உனக்கு தெரியும்?-

 

என்று யாராவது கேட்டால் என்ன செய்வது? உடனே அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்துக்குச் சென்று தேடினேன்.’அட..ஆமாம்....பால்வீதி, நேயர் விருப்பம், இரண்டும் சிக்கின. படித்து முடித்த பின் ஒரு தெளிவு கிடைத்தது.

 

அவர் கவிதைகளில் ஒரு சந்தம், முரண் அழகு தெரிந்தது. குதூகலத்தில் உறக்கம் தொலைத்தேன். பின்னாட்களில் அவரிடம் நாம் பேசிப் பழகுதல் அவசியம் என்று மனம் ஓங்காரமாகச் சொல்லியது.

 

இன்னும் இரண்டு மாதங்களில் செமஸ்டர் வரப் போகிறது. இதற்குள் நாம் கல்லூரி விட்டு வெளியேற வேண்டுமென்று எண்ணி முதல்வரிடம் டி.சி கேட்கப் போனேன்.

 

முதல்வர் ராமச்சந்திரன் - நல்லவர். கண்டிப்பானவர். மாநிலக் கல்லூரி 2000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டது. பொதுவாக இளங்கலை மாணவர்கள் அந்தத் துறையின் தலைமை பேராசிரியரைக் கூட பார்க்க முடியாது. பிறகெப்படி முதல்வரைப் பார்க்க இயலும்? நான் அப்படியில்லை முட்டி மோதுவதில் தயக்கம் கொள்ளாதவன்.

 

முதல்வர் முன் நிற்கும் பியூன் விடுவேனா என்று அடம்பிடித்தார்.. போராடி உள்ளே போனேன்.

 

முதல்வர் எடுத்த  எடுப்பிலேயே ‘’கிளாஸ் இல்லியா?’’ என்றார்.

 

‘’இருக்கு சார். அது இந்த காலேஜ்ல படிக்க நினைக்கிறவங்களுக்கு!’’ என்றேன்.

 

’’என்ன சொல்றே?’’

 

என் துருப்புச்சீட்டை ஆயுதமாய் நீட்டினேன். அதில் அப்துல்ரஹ்மான் வார்த்தைகள் அவரை சுட்டு வீழ்த்தின. தமிழுக்கு இடம் எங்கே ? என்று..?

 

‘’நீ என்ன படிக்கிற இப்போ?’’

 

‘’பி.எஸ்.சி பாட்டனி’’

 

‘’நல்ல படிப்பாச்சே.. ஏன் தமிழுக்கு போகணும்கிற..’’

 

’’ எனக்குப் பிடித்த படிப்பு சார்..’’

 

தமிழ், பண்பாடு, மேன்மை என்று சொன்னதை பார்த்துவிட்டு ..’’சரி..போய்..இங்கேயே படி... நான் சீட் தரேன்’’ என்றார்.

 

அப்துல்ரஹ்மான் சொற்கள் கல்லூரி முதல்வரை சுட்டுப் போட்டு விட்டது.

 

நான்’ தமிழ்த்துறையில் படிக்கப் போனேன்’’. நான்  நாற்பதுக்கும் மேலான பி.எஸ்.சி வகுப்பு மாணவர்கள் இருந்த இடத்திலிருந்து- தமிழுக்குப் போனால்  எட்டு பெஞ்சில் இரண்டு பேர். சீட் புல்லாகவில்லை. ஆர்ட் படத்திற்கு வந்திருக்கும் கூட்டம் போல் தென்பட்டது.

 

’’அட ராமா. இதென்ன கூத்து’’ முதல் பெஞ்சில் நான்கு பெண்கள். அதில் ஒருவர் திருமதி. திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்றபின் வந்து படிக்கிறார். பெயர் சீதாலட்சுமி. பின் பெஞ்சில் இரு ஆண்கள். என்னோடு சேர்த்தால் மூன்று பேர். என்னவோ காலம் போனது. பாதி நேரம் நான் அனைத்துக் கல்லூரி கவிதை, பேச்சு, கட்டுரை, நாடகம் என ஓடிவிடுவேன். பரிசுக் கோப்பைகளோடு திரும்பி வந்ததால் எனக்கு கல்லூரியில் மரியாதை கூடியது. கிட்டத்தட்ட 28 விருதுகள் வாங்கினேன்.

 

சரி. நம்மை திசை மாற்றிய தலைமைப் பண்பை எப்போது சந்திப்பது என்று அலைபாய்ந்து கொண்டிருந்தேன்.

 

சரியான நேரத்தை அண்ணன் பாவலர் அறிவுமதி ஏற்படுத்திக் கொடுத்தார்.அவர் அப்படி அறிமுகம் ஆனார் என்றால் ? கலைவாணர் அரங்கத்தில் நடந்த ஒரு கவியரங்கத்தில் வைரமுத்து, தமிழன்பன், பொன்மணி அறிவுமதி என கலந்து கொண்டு கவிதை அரங்கேற்றியதில் அறிவுமதி எனக்குப் பிடித்துப் போய் முதலில் ஆட்டோகிராப் வாங்கி- அவர் மனதில் இடம்பிடித்து ஒட்டிக் கொண்டேன். அவர் பற்றி எழுத நிறைய உள்ளது. அறிவுமதி ஒரு வேடந்தாங்கல்.

 

அறிவுமதி ஒரு நாள் ‘’வாணியம்பாடி போறேன். அங்கே  கவிராத்திரி நடக்கிறது. நீயும் வந்து கவிதை பாடு’ என்றார். விடுவேனா வாய்ப்பை சட்டென கூடப் பறந்து போய் பார்த்தேன்.

 

வாணியம்பாடி ஊருக்கு பெரிய சிறப்பில்லை பார்க்க ஆனால் அப்துல்ரகுமான் உள்ளாரே அதுவே போதுமானதாய் இருந்தது.

 

அங்கே சிறுகுறுந்தாடியுடனும் புன்னகையுடனும் அப்துல்ரகுமான் என்னுடன் கை குலுக்கினார். எந்தச் சொற்களால் என்னை தொட்டாரோ அவர் என்னை நிஜமாகவே தொட்டுக் கைகுலுக்குகிறார். பெருமிதம் பூரித்தது. நினைவுப்படுத்தினேன், போஸ்ட் கார்டை...  ‘இப்படி எவரும் என்னிடம் கேட்டதில்லை. அதனால் நீ மனதில் நிற்கிறாய்’ என்றார்.

 

இரவு கறுத்தது. நட்சத்திரங்கள் மினிமினுக்க வண்ணத்துப்பூச்சிகளின் கூட்டமாக  வட்டமாக நிலவொளியில் ஒன்று கூடினர். இளைஞர்களும் அனுபவ சாலிகளுமாக கூடினர். தமிழ் கவிதையின் மற்றொரு பரிமாணத்தை கவிஞர் அப்துல்ரஹ்மான் நிகழ்த்தியபடி இருந்தார்.

 

தலைப்பு தருகிறார் அதையொட்டி ஹைக்கூ கவிதைகளை அங்கேயே வாசிக்கிறார்கள். கைத்தட்டல்கள் இடைவேளியை நிரப்பிவிடுகின்றன. கஜல் கவிதைகளை அறிமுகம் செய்து வாசிக்கிறார்.

 

மொழியின் ஆளுமை, தனிப்பார்வை, அரசியல் நுட்பம் என்று களம் விரிகிறது. ஒரு இஸ்லாமிய கல்லூரியில் பேதமில்லாமல் தமிழ் கவி வளர்ப்பு எப்படி சாத்தியப்படுகிறது. அது ஏன் மற்ற இடங்களில் நிகழவில்லை  எனும்போது சட்டென புரிகிறது.

 

’’உள்ளத்தனையது மலர் நீட்டம்’’- அப்துல் ஒரு அழகிய தமிழ் புது மலர்.

 

கல்லறை என தலைப்பு சொல்கிறார். ஒருவர் எழுந்து ஹைக்கூ வாசிக்கிறார். ஐந்து நிமிடம்தான் எழுத..

 

‘’இங்கே மறந்தும் கைத்தட்டிவிடாதீர்கள்

 

மறுபடியும் எழுந்து

 

விடுவார்.

 

அரசியல்வாதி’’ ...என்று பொருள்பட பாடப்படுகிறது. கல்லறையில் உள்ள பேதங்கள் பற்றி தொடர்ச்சியாக பேசப்படுகின்றன. என் முறை வந்தது நானும் வாசித்தேன்.

 

‘’கவலையற்ற மனிதன்

 

 கல்லறைக்குள்

 

 இன்னொருவன்

 

 வரும்வரை’’

 

அவரவர் கோணங்களில் முரண் அழகான கவிதைகள் - பயிற்சிப்பட்டறை போல் தமிழ் கவிதை தடம் பதித்தது.

 

சாப்பிடப் பரிமாறுகிறார்.

 

மதுரை கிழக்கு  சந்தைப்பேட்டையில் மஹி (எ) சையத் அகமது, ஜைனத் பேகம் பெற்றோருக்கு பிறந்த சயத் அப்துல்ரஹ்மான் வாணியம்பாடியில்  கல்லூரிப் பேராசிரியராக இருந்து கொண்டு வாங்கிய சம்பளத்திற்கு வகுப்பு நடத்தினால் போதும் என்று இல்லாமல் எல்லோருக்கும் கவி வடிவம் புதிதாய் புனைந்து கற்றுத்தர என்ன அவசியம் நேர்ந்தது?

 

அதன்பின் அப்துல்ரஹ்மானை பல மேடைகளில், பல நேரங்களில் சந்தித்து உரையாடி இருக்கிறேன். பண்பட்ட நட்பு.

 29 ஆண்டுகள் அதே கல்லூரியில் பணி.

 

வாணியம்பாடிக் கவிதை வட்டத்தில் தனித்துவமாய் மலர்ந்து உருவகங்கள், உவமைகள், படிமங்கள்,  குறியீடுகள் மூலமாக அடர்த்தியான தமிழ் கவிதை ஓட்டத்தை பலருக்கும் கடத்தியவர்.

 

மார்க்சியக் கொள்கையும், திராவிட சிந்தனையும் கலந்த  அப்துல் ரஹ்மானுக்கு கலைஞர் தனி மரியாதை தந்தது காலம் நினைவு கொள்ளும்.

 

நாற்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். கவிதை, கட்டுரை, மொழி பெயர்ப்பு என களமாடினார். ஆலாபனை என்ற கவிதை நூலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றார் (2009). கலைஞர் விருது1997இல்.  அடுத்த இரண்டு ஆண்டில் கலைமாமணி, பாரதிதாசன் விருது பெற்றார். 2007ல் கம்பன் கழக விருது, பொதிகை விருது, ஆதித்தனார் இலக்கிய விருது பெற்றார். 2008 -இல் உமறுப்புலவர் விருதும் பெற்றார்.

 

அரசு சார்பில் வஃப் போர்டு சேர்மனாகவும், தமிழ் வளர்ச்சி துறையிலும் பணியாற்றியது குறிப்பிட வேண்டியது.

 

அதிர்ந்து பேசாத அழகுமுக சிந்தனையாளர் அப்துல்ரஹ்குமான். கூர்மை வடிவமாய் சொற்கள் பட்டை தீட்டி வெளிவரும்.

 

நானிருக்கும் சோழிங்கநல்லூர் அடுத்துள்ள அக்கரை கடற்கரை அருகிலுள்ள ஒரு சாலையில் மிக அழகான வீட்டில்தான் கடைசிக் காலத்தில் இருந்தார்.

 

 

அவர் மறைந்தார்  என்ற சேதி கேட்டு ஓடோடிப் போய் அமந்த இடத்தில்  வைகோ, சீமான், நக்கீரன் கோபால், பிருந்தா சாரதி,  லிங்குசாமி, அறிவுமதி, இசாக் என மனம் வாழ நினைவு கூர்ந்தோம். வெளியூரிலிருந்தும் தமிழறிஞர்கள் வந்து அப்துல் ரஹ்மானை கண்டு  சென்றனர்.

 

அப்துல் ரகுமான் தனது வாழ்வின் போக்கை தனக்காகவே எழுதினாரோ எனத் தோன்றுகிறது.

 

’’காட்டுத்தீயைப் போல

 

நான் பற்றிக்கொண்டேன்

 

என்னை அணைப்பது  எளிதன்று.

 

 

புயலில் தத்தளிக்கும் படகும்

 நானே..

 

கலங்கரை  விளக்கும்

நானே ..

 

 

எந்த இடம் என்று

 

 தெரியாத இடத்திலிருந்து

 

நான் பயணம் புறப்பட்டேன்

 

பயணமும்

 

என் விருப்பமல்ல

 

நான் பயணியாக

 

படைக்கப்பட்டிருக்கிறேன்.

 

 

’’நான் போய்ச் சேருமிடம் எது

 

அதுவும் எனக்குத் தெரியாது

 

இந்த வாழ்க்கையில்

 

வீடுகளும் சத்திரங்களே! ’’

 

 

 

என்று தன்பயணத்தை எழுதிய இக்கவிதையின் முடிவில்

 

‘’நான் நேற்றின்

 

 சமாதியுமல்லன்.

 

இன்றின்

 

வீடுமல்லன்

 

நாளையின் குரல்

 

நான்

 

ஒரு மகா சமுத்திரத்தின் துளி

 

என்பதை அறிவேன்.

 

எனக்குள் சமுத்திரத்தின் மாதிரி இருக்கிறது

 

சமுத்திரமே இல்லை

 

துளி மீண்டும்

 

சமுத்திரத்தில் கலந்துவிட்டால்

 

 

காணாமல் போய்விடும்

 

துளியாய்ச்

 

சமுத்திரத்தைப் பிரிவதும்

 

மிண்டும் அதில் கலப்பதும்

 

என் விதியில்

 

எழுதப்பட்டுள்ளது’’

 

 

 

நான் என் சாகசங்களால் ஏழுகடல்களைத் தாண்டுவேன் என்று தன்னைப் பற்றிய வாழ்வியல் உணர்வைத் தீட்டிச் சொல்லியுள்ளது ஞானம் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.

 

ஜாதி , மதங்களைக் கடந்து தமிழ்க் கவிதைகளால் சமூகத்தை கட்டி ஆரத் தழுவிய அப்துல்ரஹ்மான் எனது மனதில் என்றும் நிழலாடுகிற நிஜம்.

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)

 

  

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...