???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 9 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   09 , 2019  04:33:27 IST


Andhimazhai Image

ஆழ்வார்பேட்டை என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது டிடிகே சாலையில் உள்ள ஒரு கோயில். அதன் அருகில் உள்ள ஒரு ஆல மரம். ஆல மரத்தின் அருகே வலதுபுறம் ஒரு படிக்கட்டு மேல் ஏறி சென்றதும் மேலே இருக்கும் ஒரு அழகான இருப்பிடம். அந்த இருப்பிடத்தின் நாயகன் ஜெயகாந்தன் அவர்கள்தான். அந்த இடத்தில்தான் அவர் எப்போதும் மாலையில் அமர்ந்து நண்பர்களிடம் பேசுவார், எழுதுவார், மகிழ்வாக இருப்பார்.

 

பொதுவாக இலக்கியம் பற்றியும் அரசியல் பற்றியும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் பற்றியும் பேசிக் கொண்டிருப்பார். வட்டமேசை மாநாடு போல் இருக்கும். புதியவர்கள் வருவார்கள், யார் என்று கேட்க மாட்டார். அமர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம்.  முடிந்தால் விவாதத்தில் பங்கு கொள்ளலாம் ஏனென்று கேட்க மாட்டார்.

 

 

ஒருமுறை அப்படித்தான் நான் கவிஞர் அறிவுமதி உடன் சென்றிருந்தேன். எண்பதுகளின் தொடக்கம் அது.  அப்பொழுது அவர் மிகவும் வீரியமாகவும் செம்மையாகவும் சமூகத்தைப் பற்றிய கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு நாள் மாலை இவ்வாறாக நிகழ்ந்தது.  ஒரு தமிழ்ப் பற்று கொண்ட ஒருவர் அவரிடம் வந்தார்.  வணக்கம் என்றார்.  நலமாய் என்றார் பிறகு செந்தமிழில் பேசிக் கொண்டிருந்தார்… அப்போது அவர் மகிழ்ச்சியாக இருந்த நேரம். ஜெயகாந்தன் அவர்கள் திடீரென்று, கேள்வி கேட்டவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்: ‘ உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?’

 

அவர் மகிழ்வாக ஆமாம் என்றார.

 

’ பிள்ளைகள் இருக்கிறதா?’

 

அவர் உடனே. ‘இல்லைய்யா’ என்று சொன்னார. ஜெயகாந்தன் சிரித்துக்கொண்டே ’ எப்படி இருக்கும்? ‘  என்றார் உடனே எல்லோரும் சிரித்து விட்டார்கள். வந்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை. 

 

உடனே ஜெயகாந்தன் , “தமிழ் எனக்கு மூச்சு தான்.  நான் அதை நேசிப்பவன் தான் ஆனால் எல்லா இடத்திலும் அதை பேச வேண்டும் என்ற கட்டாயம் இல்லை குடும்பத்தில் இருக்கிற பெண்கள் இடத்திலும் முக்கியமாக  உறுப்பினர்களிடமும் அவ்வாறு பேசுவது என்பது உகந்ததாக இருக்காது முக்கியமாக பள்ளியறையில் துயதமிழ் பயன்படாது தம்பி,”  என்று அவர் சொன்னார். எனக்கு கொஞ்சம் அப்போது சங்கடமாக இருந்தது.  இவ்வாறுதான் அவர் அப்படிச் சொல்லியிருக்க வேண்டுமா என்று நினைத்தேன் ஆனால் உண்மையில் அவர் சொல்லிய கருத்து என்பது சிந்திக்க கூடியதும் நடை முறையில் பயன்படுத்த வேண்டியதும் ஆகும் என்பதை நான் உணர்ந்தேன்.

 

கடலூர் மஞ்சக்குப்பத்தில் பிறந்த அவர் ஐந்தாவது வகுப்போடு தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டவர். சென்னையில் வந்து அச்சு கோர்க்கும்  பணியாற்றி, பின்பு சிறுகதை உலகிற்கு சக்கரவர்த்தியாக திகழ்ந்தார் என்பது வியப்புக்குரிய நிகழ்வு.

ஐந்தாவது வகுப்பு கூட படித்து முடிக்காத ஜெயகாந்தன் பின்னாளில் உலகத்தின் தமிழ் இருக்கும் இடமெல்லாம் உயர்ந்து நிற்கிற மனிதராக மாறியதற்கு  காரணம் அவர் முதலில் கம்யூனிஸம் என்ற ஒரு அடிப்படைக் கொள்கையை புரிந்து கொண்டதனால் என்பதுதான்.

 

அவர் சொல்கிறார் 'உலகத்தில் எந்த அரசியலும் சரி எழுத்தும் சரி மார்க்சியத்தை அழித்துவிட்டு இறுதி வெற்றி பெற இயலாது என்பதுதான்.

 

1946 இல் சென்னையில் குடியேறிய ஜெயகாந்தன் சிபிஐ கட்சியில் சேர்ந்தார் .அங்கு ஜீவானந்தம் பாலதண்டாயுதம் ,எஸ் ராமகிருஷ்ணன் ,போன்றவர்களோடு பழகினார் .அவர் எழுத்துக்கள் ஜனசக்தி ,சரஸ்வதி ,தாமரை ,சாந்தி ,மனிதன் ,சக்தி, சமரன் போன்ற இதழ்களில் முதலில் வெளி வந்தன.

 

அவருக்கு பிடித்தமான பயணம் என்று சொன்னால்  கை ரிக்சாதான்.

ரிக்சாவில் அடிக்கடி அவர் ஆழ்வார்பேட்டை வருவதை நான் பார்த்திருக்கிறேன் . அவர் அதில் சவாரி செய்வதில் என்னவோ மிகவும் பிரியமாக இருந்தார் .

ஒருமுறை நான் நடிகை காந்திமதி அவர்களைப்  பார்த்து பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்.

என் ஆதர்ச காதலன்  ஜெயகாந்தன் அவர்கள்தான் என்றார்.  ஆச்சரியமாக இருந்தது அப்போது நான் தாய் வார இதழில் காந்திமதி அவர்களை அழைத்துக்கொண்டு ஒரு சாலையில் பூ விற்க வைத்து, ஒரு நாள் முழுக்க அனுபவங்களை பார்த்து எழுதும் கட்டுரையை எழுதினேன். அப்போது அவர் பகிர்ந்துகொண்டதுதான் இது. ஜெயகாந்தன் எவ்வளவு கம்பீரமான எழுத்தாளன் என்பதை அவர் படத்தில் நடிக்கிற போது அவரிடம் பேசியபோது தெரிந்து கொண்டேன் என்றார்.

 

ஜெயகாந்தன் அவர்களின் செருக்கு ,திமிர் ,ஞானம்- எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் அவரிடம் அதிகமாக இருந்தது.

 

 ஞானச்செருக்கு உள்ள ஜெயகாந்தனிடம் எனக்கு ஒரு பிணக்கு நிகழ்ந்தது . தாய் வார இதழில் நான் துணை ஆசிரியராக இருந்தேன் . ஒவ்வொரு வாரமும் ஒரு சிறப்பிதழ் தலைப்பு எடுத்து வெளியிடுவது உண்டு. அப்படி ஒரு சமயம் சிறுகதை சிறப்பிதழ் தயாரிக்க வேண்டியிருந்தது .

 

அதன் பொறுப்பாக நான் பணியாற்றினேன் .சிறுகதை என்று சொன்னால் ஜெயகாந்தனை விட்டுவிட்டு வெளியிட இயலாது .ஜெயகாந்தன் அவர்கள் புதிதாக ஒரு கதை எழுதும் சூழலிலும் இல்லை .'எழுத்தாளன் என்பவன் எப்போதும் எழுதி இருக்க வேண்டிய அவசியம் இல்லை '

'என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

 

எனவே அவர் மேல் அதிகமாக பற்றுக்கொண்ட நான் அவரை கேட்காமலேயே அவருடைய  பழைய சிறுகதையை எடுத்து  வெளியிட்டு நன்றி என்று போட்டு பிரசுரித்து விட்டோம் . தாய் இதழும் வந்தது . வலம்புரிஜான் அந்த சிறுகதைக்கான தொகையை ஜெயகாந்தன் அவர்களுக்கு அனுப்பி வைத்தோம் . ஆனால் அவர் உடனே திருப்பி அனுப்பிவிட்டார் .

 

வேறு வழியில்லாமல் நான் ஜெயகாந்தன் அவர்களிடம் சென்று பணிவாக நின்றுசொன்னேன் .

 

மன்னித்துக் கொள்ளுங்கள் உங்கள் கதையை நான்தான் விரும்பி போட்டேன் என்றேன்.

 

'இருக்கட்டும் அதனாலென்ன கொல்லைப்புறம் வழியாக வந்து நீ சிறுகதை போட்டிருக்கிறாய் . மக்கள் படித்திருக்கிறார்கள். அவ்வளவுதான்… உன் நோக்கம் நிறைவேறி இருக்கிறது. பிறகு எனக்கு  பணம் அளிக்க வேண்டிய நிர்பந்தம் எங்கே வந்தது .போய்விடு .' என்று அன்போடும் கண்டிப்போடும் சொல்லிவிட்டார் …

 

அப்படி கோபமாக சொன்னால் தானே ஜெயகாந்தன்…?

 

நான் சிறிது நேரம் தயங்கினேன் . உன் மேல் கோபம் இல்லை என் எழுத்து மக்களுக்கானது என்பதை சுட்டிக் காட்டி விட்டாய் என்று கம்பீரமாக சிரித்தார்.

 

மறுபடியும் எங்கள் தாய் வார இதழுக்கு ஒரு சிறுகதை எழுதி கொடுங்கள் என்று கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே 'போ பிறகு பார்க்கலாம்' என்றார் .

பிறகு அவரிடம் புதிதாக ஒரு சிறுகதை வாங்கி வெளியிட்டோம் என்பது செய்தி.

 

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் கதை வசனம் ஒரு புத்தகமாக பின்னாளில் வெளிவந்தது .

 

அதைப் பார்த்து பலர் கதை திரைக்கதை வசனம் எப்படி அமைப்பது என்பதை தெரிந்து கொண்டார்கள் .

 

ஒருமுறை அவர் சோவியத் கலாசாரக் கழகத்தில் பேசினார் .அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பேசி கொண்டிருந்தார்.

 

கம்யூனிசக் கொள்கையை பேசிக்கொண்டிருந்த ஜெயகாந்தன் திடீரென காங்கிரசை ஆதரித்துப் பேசுகிறார் . சூழ்நிலை மாறுகிறது .

 

அவர் கேட்டார் .'என்ன தவறு?  கம்யூனிசம் தான் பேசிக் கொண்டிருக்க வேண்டுமா ?

 

கம்யூனிஸம் உட்படுத்திய ஜனநாயகத்தை உருவாக்கிய நேருவின் அரசியலை பேசுவதில் எனக்கு ஒரு தயக்கம் இல்லை என்று அவர் பேசினார் .

 

எந்த இடமாக இருந்தாலும் சரி மண்ணுக்கு தகுந்தார்போல் கம்யூனிசம் மாறவில்லை என்று சொன்னால் அது எப்படி பிழைக்கும் என்று தெளிவாகப் பேசினார் .

 

எதைப் பற்றி பேசினாலும் தைரியமாகவும் சரியாகவும் பேசுகிற ஆற்றல் உண்டு என்பதுதான் ஜெயகாந்தன் .

 

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்று பாரதியார் சொன்ன வார்த்தைகள் ஜெயகாந்தன் அவர்களின் வார்த்தைகளுக்கு சரியாகப் பொருந்தும் என்று கருதுகிறேன். அவர் கம்யூனிஸத்தில் இருந்து வெளியே வந்த பிற்பாடு,  சம்பத் அவர்கள் துவக்கிய தமிழ் தேசிய கட்சியில் இருந்தார்.  இந்திய தேசிய காங்கிரஸ் மீது பற்றுக் கொண்டிருந்தார். இதெல்லாம் அவருடைய அரசியலில் பின்னால் நடந்த நிகழ்வுகள் ஆனாலும் அவர் கம்யூனிஸத்தை எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை.

 

 ஒரு இலக்கியவாதி தன்னுடைய சமூக அரசியலில் எவ்வாறெல்லாம் உடன்படாமல் போகலாம் என்பதற்கு  அவர்களே ஒரு சான்று.  ஒரு இலக்கியவாதி அரசியல் கட்சியில் தொடர்ந்து தலையாட்டிக் கொண்டு இருக்க இயலாது என்பதற்கு கவியரசு கண்ணதாசன் அவர்களும் ஒரு சான்று. பின்னாளில் வலம்புரிஜான் அவர்களும் இதே நிகழ்வில் தான் சிக்கிக்கொண்டார் எனவே ஒரு இலக்கியவாதி அரசின் கட்டுப்பாட்டில் எல்லாவற்றையும் ஆமாம் என்று தலையசைத்து கொண்டிருக்க இயலாது என்பதை ஜெயகாந்தன் அவர்கள் வாழ்வும் நமக்கு சொல்லித் தருகிறது.

 

 200 சிறு கதைகளுக்கு மேல் எழுதி உள்ளார் ஜெயகாந்தன் .

அவர் விளிம்புநிலை மனிதர்களான கை வண்டி இழுப்பவர்கள்  ,வண்ணான்,  சிகப்பு விளக்கு தொழில் புரிவோர் ,இப்படி விளிம்புநிலை மனிதர்களைப் பற்றியே அவர் எழுதினார் என்றால்  விளிம்புநிலை மனிதர்களோடு ஒட்டி வாழ்ந்த பயனாகத்தான் அவர்  சிறுகதைகளில் அவர்களையே பாடுபொருளாக  எடுத்துக் கொண்டிருந்தார் .

 

அவரின் வியக்க வைக்கும் விஷயம் இன்னொன்று இருக்கிறது .

 

ஒரு முறை கமல்ஹாசன் அவர்களின் நற்பணி  இயக்க விழாவிற்கு அழைக்க வேண்டும் என்று கருதினோம் .அப்போது கமல்ஹாசன் அவர்கள் தயங்கினார்கள் .

 

இதற்கெல்லாம் ஜெயகாந்தன் வருவாரா என்று ?

 

நிச்சயமாக அழைக்கிறோம் வருவார் என்று சொன்னன்.

 

அப்போது கேகே நகரில் இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் வீட்டுக்கு எதிராக மூன்று அல்லது நான்காவது வீடு என்று கருதுகிறேன் வலதுபுறம் நேரில் சென்று போய் பார்த்து பேசி அழைத்தோம் .

ஜெயகாந்தன் ஆச்சரியமாக வருகிறேன் என்று சொல்லி விட்டார் .

 

ஆனால் அதற்கு முன்பாக அவர் கேட்டது, எதற்காக நான் வர வேண்டும் ? அப்பொழுது சொன்னேன்.கமல்ஹாசன் தன்னுடைய தாயாரின் நினைவாக ராஜலட்சுமி அறக்கட்டளை ஒன்று நிறுவுகிறார் அதில் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் போன்றவர்களை அழைத்து மரியாதை செலுத்தி உள்ளார். நீங்களும் அந்த இடத்தில் வந்து அமர்ந்து பேச வேண்டும் .

 

ஒரு நிமிடம் நிமிர்ந்து உற்று நோக்கி 'ஒரு நடிகர் இலக்கியத்தின் மேல் இவ்வளவு பற்று  கொண்டிருக்கிறார் என்றால் கண்டிப்பாக நான் வருகிறேன் ''என்றார் .

 

சொன்னது போல் வந்தார்.

 

மெரினா கடற்கரை அருகே உள்ள அண்ணா அரங்கம் என்று கருதுகிறேன் அதில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் கமல்ஹாசன் அருகில் அவர் அமர்ந்து கொண்டு தன்னுடைய கால் மேல் கால் போட்டுக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்திலிருந்து ஒரு ரசிகர் முதலில் காலை எடு   என்று சப்தம் போட்டார். உடனே ஜெயகாந்தன் அவர்கள் காலை உடனே எடுத்து விட்டார். வழக்கமாக அவர் அப்படிச் செய்கிறவர் அல்ல.

 

கமல் ஹாசன் அவர்களுக்கும் கூட்டத்திற்கும் ஒரு சங்கடம் ஏற்பட்டு விட்டது. மிகப் பெரிய ஜாம்பவான் எழுத்து சக்கரவர்த்தி ஜெயகாந்தனுக்கு இப்படி நிகழ்ந்து விட்டது என்று சங்கடப்பட்டார் கமல்ஹாசன்.  உடனே யார் அது அழைத்து வாருங்கள் என்று என்னிடம் சொல்ல நான் அப்போது பொறுப்பாளராக இருந்த குணசீலன் அவர்களிடம் சொல்ல ஒரு சில நிமிடங்களில் அப்படி குரல் கொடுத்தவரை அழைத்துக் கொண்டு வந்து ஜெயகாந்தன் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டது.  அந்த ரசிகர், என் தலைவன் அருகில் இப்படி ஒருவர் செய்யக்கூடாது என்று கருதினேன் உங்கள் மேல் மரியாதை குறைவு இல்லை என்று சொன்னார்.அந்த சத்தம் போட்ட இளைஞர் கால் குறைபாடு உள்ளவர். 

 

’இன்னொருவர் கால் மீது தான் நாம் கால் போடக்கூடாது. தன் கால் மேல் தான் போடுவது தவறல்ல அது ஒரு சுயமரியாதை என்று பெரியார் சொல்வது எனக்குப் பிடித்தமாக இருந்தது. அப்படித்தான் நானும் இருப்பேன். ஆனால் சமூகம் ஒரு மனிதனை தலைவனாக ஏற்றுக் கொண்டு மதிப்பதை இந்த நிகழ்வு எனக்கு சொல்கிறது. கால் எடுப்பதில் எனக்கு ஒரு சங்கடமும் இல்லை நான் சமுகம் மதிக்கிற தலைவனிடம் இருக்கிற பண்பை நான் புரிந்து கொள்கிறேன், என்று அந்த நிகழ்வில் ஜெயகாந்தன் சொன்னார் . ஜெயகாந்தனின் உயரமும் மனிதப் பண்பும் அந்த நிகழ்வில் தெரிந்தது.  ஜெயகாந்தன் அவர்கள் திரைப்படத்துறையில் காலூன்றி ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்து தேசிய விருதும் பெற்றவர் என்பது உங்களுக்குத் தெரிந்த செய்திதான். ஆனால்  புகழ்பெற்ற ப வரிசை பட இயக்குனர் பீம்சிங் அவர்கள் இரண்டு திரைப்படத்தை அவர் கதையை  வைத்து இயக்கினார் .

 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள் .  இரண்டும் பெருத்த வரவேற்பை பெற்றது .

காவல் தெய்வம் என்று ஒரு படம்.

படத்தின் கதை ஜெயகாந்தன் உடையதுதான் .

 

ஒருமுறை நாகேஷ் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன் . அபூர்வ சகோதரர்கள் படத்தில் சாப்பிடும் உணவு வேளை.

 

அவர் சொன்னார் 'ஜெயகாந்தன் எப்பேர்ப்பட்ட படைப்பாளி அவரிடம் தொடர்ந்து பயணிக்காமல் போய் விட்டேனே என்று வருந்தினார்.

 

யாருக்காக அழுதான் என்ற ஜெயகாந்தன் இயக்கத்தில் வெளியான படத்தில் நாகேஷ் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.

 

இளவேனில் அவர்கள் பலசமயம் ஜெயகாந்தனைப் பற்றி சொல்வார்.  இதய   ராணிகளும் இஸ்பேட் ராஜாக்களும் என்று ஒரு நாவலை ஜெயகாந்தன் அவர்களிடம் இருந்து 1983-ல் வாங்கி போட்டதாக எனக்கு ஒரு நினைவு .

 கே எஸ் சுப்பிரமணியன் ,பரிணாமன், எடிட்டர் பி லெனின் ,ராஜ்கண்ணன்  , ஜே கே  ,தங்கப்பன், யுஎஸ் எஸ் ஆர் நடராஜன், அறந்தை நாராயணன் போன்ற ஆளுமை   நட்பு வட்டம் அவருக்கு இருந்தது.

பின்னாளில் 2008 ரவி சுப்பிரமணியம் அவர்கள் ஜெயகாந்தனைப் பற்றி ஒரு டாக்குமென்டரி எடுத்தார் .

 

இசைஞானி இளையராஜா அவர்கள் தயாரித்தார். சிறந்த ஆவணம் அது.

 

சினிமாவுக்கு போன சித்தாளு ,ஜெய ஜெய சங்கர இரண்டும் எல்லோராலும் விமர்சனம் செய்யப்பட்டது .பேசவும் செய்யப்பட்டது .

 

முன்னால் சொன்ன சினிமாவுக்குப் போன சித்தாளு என்பது ஒரு திரைப்பட கதாநாயகனை கனவில் வைத்து வாழ்கிற ஒரு பெண்ணைப் பற்றிய கதை .

இரண்டாவது ஜெய ஜெய சங்கர என்பது ஒரு மதம் சார்ந்த ஒருவரைப் பற்றி எழுதினார் என்பதாக வந்த விமர்சனம்.

 

உன்னைப் போல் ஒருவன் என்ற திரைப்படமும் யாருக்காக அழுதான் என்ற திரைப்படம்தான்  அவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியது .

 

தமிழக அரசினுடைய சிறந்த படமாக யாருக்காக அழுதான் தேர்வு செய்யப்பட்டது .

 

ஜெயகாந்தனைப் பற்றி ஒரு வரியில் சொல்லவேண்டும் என்று சொன்னால் 70 களில் தொடங்கி இன்றுவரை சிறுகதை சக்கரவர்த்தி எனும் மகுடத்தை வேறு எவரும்  தொடக்கூட முடியவில்லை  என்பது தான் உண்மை .

 

எழுத்துக்கு மரியாதையாக அவர் உருவச்சிலையை தமிழகத்தில் யாராவது நிறுவினால் நான் அவரை வணங்குவேன்.

 

ரஷ்ய கவிஞன் ரசூல் கம்சதோவ் போல் ஜெயகாந்தன் புகழ் நிலைத்திருக்கும்.

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...