???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் 0 இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் 0 தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் 0 டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா 0 டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி! 0 தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி 0 அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு 0 சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப்! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 6 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   20 , 2019  03:12:17 IST


Andhimazhai Image

அதிர்ச்சியும் மகிழ்வும் ஒரே சமயத்தில் சில சமயம் கிடைத்துவிடும்., அப்படியான மகிழ்வான அதிர்ச்சிதான் மு, மேத்தா அதாவது முகமது மேத்தா..

 

என்ன மகிழ்வு?

 

வானம்பாடி இயக்கத்தில் மிகவும் எளிமையான கவிதைகளால் இளைஞர்களால் ஈர்க்கப்பட்ட புதுக்கவிஞர் மு.மேத்தா. இவர் மேத்தா என்பதை விட புதுக்கவிதைகளின் தாத்தா என்று பேரன்போடு அழைக்கப்படுபவர்.

 

 

எளிமைக்கு மறு பெயர் மு. மேத்தாதான். அவரால் தான் இன்று பலர் புகழ் பெற்ற கவிஞர்களாகப் பின்பற்றி வாழ்கின்றனர்.

 

அவரின் ’கண்ணீர்ப் பூக்கள்’ லட்சக் கணக்கானோருக்கு தேசிய கீதம் ஆகிப் போனதை எவராலும் மறுக்க முடியாது.

 

அவரின் தலைமையில் பல சமயம் கவிதை அரங்கேற்றியதும், அவரோடு இலக்கிய வாழ்வு கடந்ததும் மறக்க இயலாத மாண்புச் சான்றுகள்..

 

சரி.

 

அதிச்சி என்றேனே? அது எது? . அப்படி மனதில் மிக உயர்வான இடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டவர்- நான் மாநிலக்கல்லூரியில் படிக்கும்போது எனக்குப் பாடம் சொல்லித்தரும் பேராசிரியராக வந்ததுதான்.

 

அதில் என்ன அதிர்ச்சி இருக்கிறது? .. அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் புரியும்.

 

வான்நிலா வைகறைப் பொழுதுக்குப் பின்னும் காலாற உடன் நடைபழகும் உணர்வு அது!

 

எண்பதுகளின் தொடக்கம் அது. இளையராஜா அவர்களுக்குப் பாடல் எழுதி விட்டு அந்த அனுபவத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டார். சரி என தலையாட்டி சினிமா பற்றி, இளையராஜா பற்றி ஏதாவது கதை கேட்டு காலத்தை கடத்தி விடலாம் என்று நினைத்தோம்.

 

’சார் இளையராஜா எப்படி சார் உங்களுக்கு மெட்டு போட்டு பாட்டு எழுத சொன்னார். சொல்லுங்க சார்’’ என்று சுவாரஸ்யமாக ராகம் தீட்டினால் . சற்றென சுதாரித்துக்கொண்டு  No என்பார்.

 

‘’சார் ..ப்ளீஸ்’’ என்பேன்.

 

‘’NO means No..’’ என்று கறாராக சொல்லி  பாடம் நடத்த துவங்கிவிடுவார்.

 

பாடம் நடத்துவதில் கறார் பேராசிரியர். ஆனால் வகுப்பு முடிந்ததும் நண்பன் போல் பழகுவர். தேநீர் வாங்கிக் கொடுப்பார். இப்படி இந்தக் கூட்டத்தில் அடிக்கடி பொன் செல்வகணபதி சேர்ந்து கொள்வார்.

 

‘ஏன் சார் இவ்வளவு கெடுபிடியாக வகுப்பில் உள்ளீர்கள்’ என்று  கேட்டேன். அதற்கு அவர் இப்படியாகப் பதில் அளித்தார்.

 

‘’அரசாங்கம் எங்களுக்கு ஊதியம் தருவது உங்களுக்கு ஆசானாக இருந்து கற்றுத் தரத்தான்.. தப்பிப் பிழைக்க அல்ல...’’என்பார்.

 

அதனால்தான் மு. மேத்தா ஆனந்த அதிர்ச்சி..

 

பலமுறை வீட்டிற்குச் செல்வேன். வீடு என்பதை விட அவர் ஒரு புத்தக அறைக்குள் சிக்கிக்கொண்ட மனிதர் போலவே- ஏராளமான புத்தகங்களின் மத்திலேயே வாசம் கொண்டிருந்தார்.

 

எம்.ஜி.ஆரைப் போல முதலில் யாரைப் பார்த்தாலும் ’என்ன சாப்பிடறீங்க? ‘ என்று  உபசரித்து விட்டுத்தான் பேசத் துவங்குவார்.

 

இப்போது மனைவி மல்லிகா அவர்கள் இல்லை. மறைந்து விட்டார். ஐந்து மகள்கள் வெவ்வேறு நாடுகளில் பயணப்பட்டு வாழ்வியல் புரிகிறார்கள்.

மு. மேத்தா பெசன்ட் நகர் வீட்டில் கவிதையோடு வாழ்கிறார். சற்றும் மனம் குலையாத திடம்.

என்ன அவரிடம் என்றால் புகழ் தேடி போகாத எளிமை. எவரிடமும் எதுவும் கேட்டுப் பெறாத நிலை.

 

முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் அவர்கள் மு.மேத்தா மீது அளவற்ற அன்பும் நட்பும் கொண்டிருந்தார். ஆனால் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை. பொருளாதாரம் மேம்பாடு அவரவர் அளவிற்கு இல்லை. ஆனால் அதற்கெல்லாம் அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

 

மனைவியின் தங்க வளையல்தான் ‘கண்ணீர்ப் பூக்கள்’ என்ற கவிதைத் தொகுப்பாக மாறியது. ஆனால் அதுதான் தமிழக வரலாற்றில், இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்று சாதனை படைத்தது.

 

முப்பது நூல்களுக்கும் மேலாக எழுதிய அவருக்கு சாகித்ய அகாதமி விருது ‘’ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ என்ற நூலுக்கு கிடைத்தது.

 

‘சோழ நிலா’- ஆனந்த விகடன் இலக்கியப் போட்டியில் நாவலுக்கு பரிசு பெற்றது. ’ஒரு தேசப்பிதாவுக்கு தெருப் பாடகனின் அஞ்சலி’ என்று அவரின் கவிதை நாடு கடந்து கவனிக்க வைத்தது.

 

அவருக்கு இருக்கும் பழக்கத்தில் தவிர்க்க வேண்டியது புகைப் பழக்கம். ஏனோ அது ஒட்டிக் கொண்டது. சிந்திப்பவர்களுக்கு இது தவிர்க்க இயலாமல் போய்விட்டதோ?

 

ஒரு முறை பல்லாவரம் தாண்டிய ஒரு மலைப் பகுதி. அங்கே கூடினோம். ஒரு நாள் முழுவதும் இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம்.  இன்ஸ்பெக்டர் பூபாலன், நர்மதா பதிப்பகம் ராமலிங்கம் , கவிஞர் பாஸ்கரதாசன் உடன் நானும் இருந்தேன். இப்படி பல சமயங்கள்... மு. மேத்தா பொடி வைத்துப் பேசி வெடிக்கச் சிரிக்க வைப்பார்.

 

மு. மேத்தா கலைஞரை உயர்த்திப் பேசி வாழ்கிற ஒப்பற்ற கவிஞர். அவரே திடுக்கிடும்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

 

டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர் முதல்வராக இருந்த நேரம்.

 

திடீரென மு. மேத்தா வீட்டிற்கு ஒளவை நடராசன் அவர்கள் தொலைபேசியில் அழைக்கிறார். ‘’ உங்களுக்கு ’ பாரதி தாசன் விருது’ அளிக்க எம்.ஜி.ஆர் கையெழுத்திட்டிருக்கிறார். உடனே பயோ டேட்டா கொடுத்தனுப்புங்கள். இன்று மாலை தமிழக அரசின் சார்பில் அவர் அறிவிக்க வேண்டும்’’ என்கிறார். ஒளவை நடராசன் அவர்கள் தமிழக செயலகத்தில் தமிழ் வளர்ச்சித்  துறையில் உயரதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

 

மு.மேத்தா நம்பவில்லை. ‘’அட போங்க.. நான் கலைஞர் ஆள் எனக்கெப்படி எம்.ஜி.ஆர் தருவார்’’ என்று கிண்டலாகப் பேசி தொலைபேசியை வைக்கப்போனார்.

 

’’அட என்ன கவிஞன்பா.. நீ நம்பலைன்னா உன் நம்பிக்கையான ஆள் அனுப்பு உறுதி செய்கிறேன்’’ என்றார்.

 

நானும் கவிஞர் பாஸ்கரதாசனும் மேத்தாவுடன் இருந்தோம்.

 

‘’சார்.. தன் விவரக் குறிப்புதானே..குடுங்க. என்று எடுத்துக்கொண்டு மு.மேத்தாவின் தூதுவராக தலைமை செயலகத்துக்கு சென்றோம்.

 

உண்மையிலேயே எங்களுக்கு  திகைப்பு. காரணம் .அந்த ஆண்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட 7 பேர்களில் 6 பேர் அதிமுக சார்பு கவிஞர்கள். கடைசியாக மு. மேத்தா பெயர். இவர் கலைஞர் சார்புடையவர்.

 

எம்.ஜி.ஆர் இறுதி முடிவுக்குப் போனது அதில் பலரின் பெயர் இருந்தது. ஆனால் அதையெல்லாம் தவிர்த்து விட்டு முதல்வர் எம்.ஜி.ஆர்

 மு. மேத்தாவுக்கு தரவும் என பச்சை மையில் எழுதி கையெழுத்திட்டதை பார்த்ததும் திகைத்துவிட்டோம். இப்படியும் ஒரு முதல்வரா என்று.

 

அன்றிரவு ‘பாரதிதாசன் விருது’ அறிவிக்கப்படுகிறது. அதற்காக நன்றி பாராட்டி ஒரு போஸ்டர் ஒட்ட திட்டமிடப்பட்டது.

 

யார் ஒட்டுவது?

 

எங்களை விட்டால் வேறு யார்?  நானும், சில நண்பர்களும் இரவில் சென்னை தெருக்களில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தோம்.

 

ஸ்டெல்லா மேரீஸ்  கல்லூரி சுவரில் ஒட்ட ஒருவர் பின்னாலிருந்து’’ என்ன பண்றீங்க’’ எனக் கேட்க.

 

’’முதல்வருக்கு நன்றி’’ படிக்கத் தெரியுமில்ல படிங்க’’ என்றேன், பெருமிதத்துக்குக் காரணம் விருதுபெறுகிறவர் எனது பேராசிரியர் மு. மேத்தா. நான் எம்.ஜி.ஆர் நடத்திய ’தாய்’ வார இதழில் பணியாற்றிய துணை ஆசிரியர் என்கிற பெருமிதம் இரண்டும் கலந்து அப்படி பேச வைத்தது.

 

அந்தப் பேச்சு அடுத்த அரைமணி நேரத்தில் தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்து பெஞ்சில் அமரவைத்து மிரட்டியது.

 

காரணம். நான் ஒட்டிய இடம் ’ சுவரொட்டி ஒட்டாதே’ என்று எழுதப்பட்ட இடம்.

 

’’என்ன என்று கேட்டவர்  போலிஸ் இன்ஸ்பெக்டர்’’.

 

மின்சாரம் கட் ஆகியிருந்தது. பூட்டி வைக்கப்பட்டிருந்த  கைதிகள் இருவர் ‘’சார் பீடி...பீடி இருந்தா கொடுங்க’ என்று அனத்திக் கொண்டு இருந்தனர்.

 

போதாக்குறைக்கு எலி ரெண்டு குறுக்கே ஓடி பீதி கிளப்பிக் கொண்டிருந்தது.

 

எத்தனையோ முறை காவல்நிலையத்திற்கு நிகழ்ச்சி சார்பாக சென்று கம்பீரமாய் வந்தது உண்டு. ஆனால் இப்படி வந்து இருட்டில் அவஸ்தைப்பட்டது இதுவே முதல்முறை..

 

இன்ஸ்பெக்டர் பயமுறுத்தவில்லை என்றாலும்-பயமாகத்தான் அப்போது இருந்தது.

 

அவர் இன்ஸ்பெக்டர் என்று தெரிந்திருந்தால் ஸாரி ஸார் இங்க ஒட்டக் கூடாது. போயிடறோம்’ என்று சொல்லியிருந்தால் அவர் இதை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்.

 

பிறகு ஒரு வழியாக சில மணி நேரம் கழித்து மு.மேத்தாவுக்கு தகவல் போய் வெளியே வந்து விட்டோம்.

 

அதன் பிறகு மேத்தா சார்பில் பத்திரிக்கையாளர் கூட்டம் நிகழ்ச்சி நடத்த ஒருங்கிணைத்தது நான்தான். அதற்கு இந்த இன்ஸ்பெக்டரே வந்து பாராட்டியதும் வேறு கதை!

 

அவர் மாநிலக் கல்லூரியில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் சிறு கதைகள்-  நூலில் கிழித்த கோடு, பக்கம் பார்த்துப் பேசுகிறேன்' என்பது இலக்கியமானது.

 

வைரமுத்து சினிமாவில் வந்து புகழ் பெற்ற போது - இலக்கிய வட்டத்தில் அதிகப் புகழோடு இருந்த மு. மேத்தா ஏன் வைரமுத்து போல் வரக் கூடாது என்ற கேள்வி எழுந்தது.

 

அவர் அதற்கு பதில் சொல்லாது சிரித்துக்கொண்டிருந்தார். காரணம். அவரது எளிமை. மற்றொன்று மேத்தா ஒரு கல்லூரிப் பேராசிரியர். ஒரு கட்டுப்பாடும் பொறுப்பும் உண்டு.

 

எவரிடமும் சென்று வாய்ப்பு கேட்காதவர்..’அழுத புள்ளைதான் பால் குடிக்கும் ‘ கேளுங்கள் சார்’ என்று  சொன்னால் ‘’என் பசி அழுகையில் தீரக் கூடாது’ என்பார்.

 

சுருக்கமாய் சொன்னால் பிழைக்கத் தெரியாதவன் கவிஞன்.

 

பிறகு வைரமுத்து -இளையராஜா  பிணக்கு வந்த பின்பு-  இளையராஜாவின் பார்வை  மு. மேத்தா மேல் விழுந்தது.

 

அதன் பலனாக  நானூறுக்கும் மேலாக திரைப்பாடல்களை எழுத  முடிந்தது.

 

அதிலே குறிப்பிடத்தக்க பாடல் வரிகள்தான் ‘ராஜ ராஜ சோழன் நான்’ என்று பாலுமகேந்திரா படத்தில் பிரபலமானது.

 

கவிதாலயா நிறுவனம் எடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த ‘வேலைக்காரன்’ என்ற படத்தில் எல்லா பாடல்களும் மேத்தா எழுதினார். ’சோத்துக்குள்ள பாத்தி கட்டி’ என்ற பாடல்.

 

பாரதி படத்தில் பவதாரணி பாடி தேசிய விருது பெற்றது இவரின் பாடல் வரிகள்தான் .

 

‘’மயில் போல பொண்ணு ஒண்ணு’’

 

’பாடு நிலாவெ.. தேன் கவிதை’- என்ற பாடல் நெஞ்சில் பசுமையான பாடல் வரிகள்.

 

பாடலோடு நின்றிருந்தால் பரவாயில்லை ஒரு கவிஞன் திரைப்படம் தொடங்கி தயாரிப்பாளர் ஆகாமல் இருந்திருக்கலாம் ஆனால் இயற்கை வலியது.

 

‘தென்றல் வரும் தெரு’ என்ற படத்தை தயாரித்தார். கெளரி சங்கர் இயக்குநர். படத்தில் கிடைத்த அனுபவம் பொருளாதார பின்னடைவு.

 

இது இவருக்கு மட்டுமல்ல கவியரசர் கண்ணதாசனுக்கும் நிகழ்ந்ததுதான்.

 

கண்ணதாசன் அவர்களே இப்படி எழுதி உள்ளார் ‘’நான் கவலையில்லாத மனிதன்’ என்ற படத்தை தயாரித்தேன். ஆனால் அந்தக் கவலை தீர்வதற்கு பல ஆண்டுகள் ஆயின’ என்று.

 

இளையராஜா இப்போதும் மு. மேத்தா மீது மாறாத பற்று கொண்டவர். என்னை அடிக்கடி மேத்தா கேட்பார் ‘’ எப்படி  ‘ வண்ணத்துப் பூச்சி’ படம் எடுக்க முடிந்தது கஷ்டமாச்சே’’ என்பார்.

 

நான் சொன்னேன் ‘ ஆமாம் உண்மைதான். இலக்கியம் வேறு. சினிமா வேறு.. சினிமவில் இலக்கியம் இருக்கலாம் இலக்கியம் சினிமாவுக்கு சரி வராது ‘’ என்பேன்.

 

சினிமா முற்றிலும் வேறுபட்ட குணங்கள் கொண்ட வியாபாரக் கலைக் கூடம் .

 

அதனால்தான் இலக்கியம் மட்டும் பேசி உள்ளே வருபவர்கள் சில காலம் கழித்து  மனக் கஷ்டமடைந்து வெளியேறுகிறார்கள்.

 

மு. மேத்தாவுக்கு வானம்பாடி அமைப்பு போல் ’ தமிழ் கவிஞர் பேரவை’ என்ற அமைப்பை தொடங்கி நடத்த வேண்டும் என்று ஆசை’. அதற்காக எண்பதுகளில் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் எதிரே உள்ள கற்பகம் ஹோட்டலில் கவிஞர்கள் கூடினோம். அதில் சிற்பி, மீரா, பாலா. இரா.வேலுச்சாமி, அறிவுமணி, அறிவுமதி, காதல்மதி நான் உட்பட கலந்து கொண்டு தமிழ் அமைப்புக்கு பெயர் சூட்டி துவங்கினோம்.

 

அதில் எனக்கு செயலர் பதவி கூட கொடுத்தார்கள். ஆனால் ஏனோ அது தொடர்ந்து விரிவாக்கம் அடையாமல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

 

இவரின் சீடர்கள் என்றால் வசந்தகுமாரன், தேனி கண்ணன், பேராசிரியர் இளையராஜா என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம். கவிஞர் மேல் அவ்வளவு பற்றுதல் அவர்களுக்கு!

 

இப்படி நாடு முழுதும் நிறையபேர் சம்பாதித்து வைத்துள்ளார்.

 

எனவேதான் பேராசிரியர் இளையராஜா திருமணத்திற்கு மு.மேத்தாவோடு பழநி பாரதி, ராஜசேகர் உடன் சென்றோம்.

 

கும்பகோணக் குளத்தில் மீன்களுக்கு மு. மேத்தாவுடன் பொரி போட்டுக் கொண்டே பேசிய பேச்சு. எங்களுக்கான இலக்கியப் பொரி. இயற்கை மீது அலாதிப் பிரியம்.

 

சமீபத்தில் சிற்பிக்கு பிறந்த நாள் நிகழ்வு நடத்தியபோது அவர் பேசிய பேச்சு சிலேடை,  படிமம், தகவல் குணங்களோடு பொருந்தி பெருத்த கைத்தட்டல்களைப் பெற்றது.

 

 

 

அவரின் ஆளுமையை அவருடைய ஒரு கவிதையே இப்படி விளக்கும்:

 

 

‘’நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்

 

இறப்பினில் கண் விழிப்பேன்

 

மரங்களில் நான் ஏழை

 

எனக்கு வைத்த பெயர் வாழை’’,.

 

 

 

‘ஊர் வலம்’- என்ற கவிதை நூலுக்கு தமிழக அரசு பரிசு கிடைத்தது.

 

ஆனால் மு. மேத்தா இலக்கியப் பணிக்கு மேலும் உயர்வு கிடைப்பது அவசியம்.

 

வாழ்கிற போதே வரலாறு ஆக வேண்டிய வள்ளுவம் சார்ந்த கவிஞர் மு. மேத்தா.

 

நான் அவரோடு  தொடர்ந்து பயணிக்கிறேன் என்பதால் குறிப்பிடவில்லை.

 

’சொல்லுக்கும் செயலுக்கும் இடை வெளியற்ற  மகத்தான கவிஞர் மு. மேத்தா’.

 

அவரின் மாணவர் நான் என்பது செய்தி. ஆனால் அவரின் கவிதைக் காதலன் என்பது இலக்கிய வரலாறு.

 

இலக்கிய நிகழ்வுகளில் கடந்த  காலங்களை எண்ணுகையில் அவரின் உயர்வு மனித மாண்பு கல்வெட்டாய் மனதில் நிலைக்கிறது.

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...