???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை 0 போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது 0 வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா? பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா?: தங்கம் தென்னரசு 0 தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 16- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   28 , 2019  06:38:57 IST


Andhimazhai Image

தலைவாழை இலை போட்டு  பலவகை உணவு வகைகள் பரிமாறி பசியை போக்கி பார்ப்பது விருந்தோம்பலில் தலையாயது. மனிதம் எங்கே மேலோங்கி இருக்கிறதோ அங்கே அந்த பண்பு மேலோங்கி இருக்கும்.

 

பாவலர் அறிவுமதியும்  நானும் தி நகர் கிருஷ்ணா தெருவில் உள்ள ஒரு வீட்டில் அமர்ந்திருந்தோம். அது மதிய நேரம்.  தலைவாழை இலை போட்டு தமிழ் உலகம்  இன்று போற்றிப் பாராட்டி தேடி ஓடும் சிறுதானிய உணவோடு அறுசுவை உணவிட்டு தனது துணைவியார் கரங்களில் பரிமாறச் செய்து நட்பு பாராட்டி நீண்ட  நேரம் இலக்கிய நயத்தையும் ஊட்டிக்கொண்டிருந்தார் ஒருவர்.

 

நம்பிக்கையின் மறு பெயர்தான் அவர். அவர்தான் அதற்கு இன்றளவும் சிறந்த எடுத்துக்காட்டு.அது வணக்கத்திற்குரிய சிவகுமார் அவர்கள்.

 

 மனித வாழ்வின் உன்னத நோக்கங்களையும் நெறி பிறழாத வாழ்வின் கூறுகளையும் ஒரு தந்தையைப் போன்று எடுத்துச் சொல்வார். எனக்கு பலமுறை அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

 

அன்று கூடுதலாக யோகாவும் மூச்சுப் பயிற்சியும் உடலுக்கு எவ்வளவு அவசியம் என்று சொல்லித் தந்தார். அதுதான் இன்று மனப்பயிற்சியாகவும் மாறியிருக்கிறது .

 

சிவகுமார் அவர்களை நடிகராகப் பார்த்தால் மகிழ்ச்சி . ஆனால் அவர் அதுமட்டுமல்ல நல்ல ஓவியரும்கூட. அவர் கைப்பட வரைந்த மகாத்மா காந்தி ஓவியம் பல பிரபலங்களிடம் உள்ளது.

 

நியாயமாக அவர் ஓவியராகப் போயிருந்தால் மருது , மணியம் செல்வன் போன்ற பிரபலங்களுக்கு போட்டியாளராக முன்னணியில் திகழ்ந்திருப்பார். ஆசிரியராகப் போயிருந்தால் தேசிய அளவில் சிறந்த ஆசிரியராக ஒளி வீசியிருப்பார்.

 

அப்போதே பேச்சாளராக மாறியிருந்தால் வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்களை விஞ்சி இருக்கக் கூடும்.யோகா நிலை அறிந்த பேராசிரியர் ஆகவும் அவரை பார்த்திருக்கலாம் .

ஆனால் சிவகுமார் எந்நிலையிலும் தன் குணநலன் குன்றா தந்தையாக இருப்பார் என்பது உறுதி. அதை சாதித்துக் காட்டிய நிலையில் அவர் பலருக்கும் வழிகாட்டி .

 

நேற்று அவருக்குப் பிறந்த நாள். குறுந்தகவல் அனுப்பினேன் . மறக்காமல் அலைபேசியில் மாலையில் தொடர்பு கொண்டு பேசினார் . இந்தப் பழக்கம் எத்தனை பேருக்கு திரைத்துறையில் உள்ளது? ..எதிரில் நின்றாலே பார்த்தும் பார்க்காதது போல் செல்வதுதான் பழக்கம்.  புகழும் பணமும் கண்ணை மறைத்து விடும். தான் என்கிற குணம் சிரசில் ஏறி நாட்டியம் ஆடும் போது பாவம் அதை எவ்விதம் கையாள வேண்டும் என்று தெரியாமல் பேசுவதும் நடப்பது மிக இருப்பர்.

 

ஆனால் சிவகுமார் அப்படி விட்டு விடுகிறவர் அல்ல. தொழிலை ஒரு விவசாயம் போல் பாவித்து குடும்ப  உறவுகளையும் நேசித்து ஒன்றை ஒன்று உரசிக் கொள்ளாமல் வாழத் தெரிந்தவர்.

 

எண்பதுகளில் துவங்கிய நட்பு இன்று வரை விரிசல் இல்லாமல் தொடர்கிறது.அப்போதெல்லாம் எம்ஜிஆர், சிவாஜி கதாநாயகன் என்றால் சிவகுமார் கதையின் நாயகன்.

 

தேவர் பிலிம்ஸ் ஆட்டுக்கார அலமேலு படத்தைப் பார்த்து பரிகசித்தவர்கள். ரோஜாப்பூ ரவிக்கைக்காரி பார்த்து அதிசயித்து விட்டார்கள்.  பதினாறு வயதினிலே இவரின் தாக்கம் என்று சொன்னால் தவறில்லை. சிந்து பைரவிக்கு நிகர் வேறு எது?

 

உன்னை நான் சந்தித்தேன் படத்துக்காக கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு . கே. ரங்கராஜ் இயக்குனர். முப்பது நாட்களுக்குள் படம் முடித்து விட்டதாய் நினைவு. அப்போது பத்திரிகையாளராகச் சென்றேன்.

 

ஒரு நாள் அவருடன்.கண்ணதாசன் பற்றி பேச்சு திரும்பியது. பல பாடல்கள் அவரை உயர்த்திய படல்கள் எனினும் அவரின் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றி பேசத் துவங்கினார்.

 

அவர் பேசத் துவங்கினால் எப்படி இருக்கும் என்றுதான் ஈரோடு புத்தக கண்காட்சியில் இப்போது பேசுவதைப் பார்த்தாலே தெரியுமே. பேசத் துவங்கினார். இந்து என்கிற சொல்லைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் கண்ணதாசன் அந்த நூலில் வாழ்க்கையின் அடிப்படை ஞானத்தைப் பற்றி அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார்.

 

ஆசைப்படலாம் அளவோடு.

ஆசை நம்மை மென்று தின்றுவிடக் கூடாது.

ஆசைக்கு அளவே இல்லை.

ஆசை பேராசையாக மாறினால் அதன் கையில் அகப்பட்டு அவதிப்படுவோம்.

பணம் புகழ் இரண்டும் தன்னை விஞ்சிய விட்டால் நரகம்.

நம் கட்டுக்குள் இருந்தால் சொர்க்கம்.

 

கண்ணதாசனின வாழ்வில் வந்த மிகப் பெரும் பொக்கிஷம் ’அர்த்த முள்ள இந்து மதம்’ என்ற நூல் என்று ஒரு பிரசங்கமே செய்துவிட்டார் .

சிவகுமார் எனக்கு எப்போதும் வாழ்வியல் ஆசான் தான். கல்யாண்குமார் என்றொரு எழுத்தாள நண்பர். அவர் ஜெயிலில் கேட்ட உண்மைக் கதைகளை புத்தகமாகப் போட பலரையும் நாடினார். அட எதற்கு சிரமம் நானே போடுகிறேன் என்று பேஜஸ் பப்ளிகேஷன்ஸ் என்று துவங்கி புத்தகம் அச்சிட்டு வெளியீட்டு விழா அண்ணா சாலை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடத்தினோம்.  நாணா தான் அட்டைப் படம். அதற்கு அழைத்ததும் முதல் ஆளாக வந்து அட்டகாசமாக பேசியவர் சிவகுமார் தான். அதில் மாலன் அறிவுமதி போன்றோர் கலந்து கொண்டனர். சிவகுமார் அப்போது வெள்ளி விழா நடிகர். வருவாரா?.. மாட்டாரா?.. என்று எண்ணிய காலம். சிவகுமார் சொல்லுக்கு மரியாதை தருபவர்.

 

சிவகுமார் என்னை கோபித்துக் கொண்ட சம்பவம் ஒன்று உண்டு. திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு சின்னத்திரையில் நடிகை ராதிகா கேட்டுக் கொண்டதற்காக சித்தி தொடரில் நடிக்கத் துவங்கிய காலம்.

 

மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் படப்பிடிப்பு.என்னை கூப்பிட்டு அனுப்பினார். சென்றேன். இயக்குனர் சி ஜே பாஸ்கரிடம் அறிமுகப்படுத்தினார். ’நல்ல இலக்கியவாதி எழுத்தாளர் நல்ல அனுபவம் உள்ளவர் ‘என்றார்.

 

பிறகு இந்த தொடரில் வசனம் எழுது என்றார். ‘அய்யோ தொடரா அது சரிப்படாது சினிமா ன்னா ஒகே தொடர் என்பது நீண்ட அனுபவம்,’ என்றேன். ‘பைத்தியக்காரா இராமாயணம் மகாபாரதம் படிச்சிருக்கில்ல அப்புறமென்ன அதேமாதிரிதான். ஒரு நேர்கோட்டில் பல கிளைக் கதைகள். பேசாம எழுத வா ‘ என்று உரிமையோடு சொன்னார்.

 

நம்மைத்தான் நமக்குத் தெரியுமே.  திரைப் பட இயக்க பற்றுதலால் மறுபடியும் அந்தப் பக்கம் போகவேயில்லை.

 

ஆனால் இப்போது…சின்னத்திரை தாண்டி வெப்சீரிஸ் வந்து விட்டது.  நாளை வீட்டுக்கொரு தொலைக்காட்சி வடிவம் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

 

நான் கமல்ஹாசன் அவர்களிடம் பணியாற்றிய போது அடிக்கடி இல்லாவிட்டாலும் எப்போதாவது சந்தித்து விடுவேன் . சிவகுமார் ராஜபாட்டை எழுதிக் கொண்டிருந்தார்.

 

கமல் அவர்களுக்கு ஏதோ ஒரு சங்கடம் தன்னைக் குறித்த செய்தி பற்றி. கலைஞர்கள் உலகத்தில் இது நிகழ்வதுதான். ஆனால் நான் இருவரையும் அறிவேன்.

 

சிவகுமார் அவர்களிடம் கமல் அவர்கள் மேல் வைத்துப் பேசிய உயர்ந்த வார்த்தைகளை சொல்லியும் அதே போல் சிவகுமார் அவர்கள் கமல் மேல் கொண்ட உயர்ந்த கலை நேர்த்தியையும் சொல்லி அன்பை பரிமாறிக் கொள்ளும் சூழலுக்கு வித்திட்டேன்.  ராஐபாட்டை கமல் கரங்களில் நீண்ட காலம் தொட்டு உறவாடியது.

 

பல சமயங்களில் இதை நான் செய்வதில் கவனமாக இருப்பேன்.  நல்ல உறவுகளையும் நற்சூழலையும் உருவாக்குவதில் எனக்கெப்போதும் தீராப் பசியுண்டு.

 

சிவகுமார் பற்றி பல சமூக வலைதளங்களில் வர அதைப் பார்த்து உறங்காத இரவுகள் உண்டு. ஆனால்தனிமனித உணர்வில் அவர் எவ்வளவு மேம்பட்டவர் என்பதை காலம் கவனத்தில் நிச்சயம் கொள்ளும்.

 

ஒருமுறை நண்பர் நடிகர் நாசரின்  பிள்ளை விபத்துக்குள்ளாகி கேளம்பாக்கம் செட்டிநாடு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார் . சோகச் சூழல். பல பிரபலங்கள் வந்து பார்த்து ஆறுதல் சொல்லி சென்று கொண்டிருந்தனர். பல நாள் உடன் இருந்து பக்க துணையாக ரவித்தம்பி உடன் நானும் வந்து பார்த்து சென்றேன். அப்போது சிவகுமார் தன்னுடன் நடிகர் கார்த்திக்கையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார் .

 

நாசரைப் பார்த்து பேசி முடித்த பின்பு திரும்பிச் சென்றார். என்னைப் பார்த்தார். சிரித்தபடி கடந்து சென்றிருக்கலாம் . ஆனால் அதைச் செய்யாமல் அருகில் வந்து கார்த்திக்கிடம் என்னை எழுத்தாளர் இயக்குனர் என்றும் அறிமுகப்படுத்தி நெகிழ வைக்கிறார்.  அதோடு நிற்காமல் ‘இவர்தான் கார்த்திக் எனது மகன் என அறிமுகம் செய்து வைக்கிறார். கார்த்திக் அந்த சொற்களை மனதில் தாங்கி வணங்குகிறார்.

ஏன் கார்த்திக்கை தெரியாதா புகழ் பெற்ற நடிகர் ஆச்சே என்கிறேன் . அதற்கு நடிகனாக அறிமுகம் இப்ப செய்யலை. ஒரு தந்தை தன் சக நண்பருக்கு தன் மகனை அறிமுகம் செய்கிறேன் என்றார். அப்போது கார்த்திக் தந்தையை உயர்த்தும் தனயனாக கைகட்டியபடி இருந்தார். மிகையற்ற சொற்களால் இங்கே குறிப்பிடுகிறேன். தந்தையும் மகனுக்குமான அழகியல் உருவான தருணம் அது. தந்தை மகற்காற்றுவதும் மகன் தந்தைக்காற்றுவதும் சாதரணமாக நிகழ்ந்து விடாது. வாழ்வில் உண்மையான உதாரணமான தந்தையாக வாழ்ந்து காட்ட வேண்டும். அதை கண்முன் வாழும் உதாரணம் சிவகுமார் .

 

சிவகுமார் அடிக்கடி சொல்வது. உண்மைக் கதை என்று சொல்லி மறைக்க வேண்டியவைகளை எல்லாம்  ஒரு கலைஞன் திரையில் சொல்லக்கூடாது்.

 

இன்னொன்றும் சொல்வார்.

 

எல்லோரும் நல்லவனாக இருக்க முடியாது  ஆனால் குறைந்த தவறுள்ளவனாக இருக்க வேண்டும். அந்தக் குறையும் சமூகத்தை பாதிக்கக் கூடாது என்பார் .

 

 எப்படி முடியும் என்பேன்.

 

எப்படி என யோசிக்கும்போதே அது முடியும் வழியைக் கண்டுபிடித்து விடும் என்றார்.

 

இவ்விதமான எண்ணம் கொண்ட சிவகுமார் அவர்களை ஈரோடு வரை அவர் வர காரணமானதில் எனக்கும் அணில் அளவு பங்குண்டு .

 

எப்படி? ஒருநாள் இரவு   பத்து மணி இருக்கும் கவிஞர் ஜீவபாரதி, ஸ்டாலின் குணசேகரன் அவர்களை  அறிமுகப்படுத்தினார் . பேசத் தவங்கினோம் .

 

தேனாம்பேட்டை சிக்னல் அருகில். பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டேயிருந்தோம்  . பார்த்தால் பேப்பர் கட்டுக்களை சைக்கிளில் எடுத்துக்கொண்டு பெல்லடித்துக்கொண்டு ஒரு சிறுவன் கடந்து செல்கிறான். விடிய காலை 5 15 . ஆஹா…விடிந்து விட்டது ஆட்டத்தை கலைத்து விடலாம் என முடிவுக்கு வந்து நன்றி தோழர் என விடை பெறும்போது சொன்னார்.

 

எங்களுடைய புத்தக கண்காட்சிக்கு சிவகுமார் வேண்டும் அறிமுகம் செய்து வைக்க இயலுமா என்றார். உடனே அதைச் செய்தேன். அன்று தொடங்கிய சிவகுமார் அவர்களின் சொல்லாண்மை திறம் ஈரோட்டுக்கு கிடைத்த கொடை.

 

ஸ்டாலின் சிந்தனைக்கு ஏற்ற மகுடம். சமீபத்திய கண்ணதாசன் விழாவின் போது பழநிபாரதி உடன் சந்திப்பு. சிவகுமார் கண்ணதாசன் பற்றி நெகிழ்உரை ஆற்றினார்.

 

நினைவாற்றலும் தகுதிசாற் மொழியாற்றலும் கைவரப்பெற்ற கலைஞனாக பரிமளித்த விதம் மற்றவர்கள் கூர்ந்து கவனித்து பின்பற்றத்தக்கது.

 

பாண்டி பஜாருக்கு அடையாளம் கிருஷ்ணா தெரு.

 

அந்த கிருஷ்ணா தெருவுக்கு  அடையாளம் தந்தவர் சிவகுமார். அவர்  திரை நடிகர் மட்டுமல்ல தந்தையும் தாயுமான மனித நேயர்.

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...