அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 40 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   20 , 2020  16:07:29 IST

நேர்மறையான செய்திகளைச் சொல்வது எப்போதும் வாழ்வின் பயணத்திற்கு உதவும் என்று நம்புகிறவன்.
 
எனது பயணத்தில் எனக்கான அனுபவங்களை நான் அவ்விதமாகவே பார்க்கிறேன். கமல் அவர்கள் ஒரு நடிகராக இருந்தாலும் பன்முகத் தன்மை கொண்டவராகவே தென்பட்டார்.
 
அவரிடம் எழுத்தாற்றல், சிந்தனை, செயல்பட எடுத்துக் கொள்ளும் முனைப்பு, அதே சமயத்தில் திரையுலகில் சக போட்டியாளர்களை வென்றெடுக்கிற வியூகம் ஆகியவை  தனித்தன்மைகள்.
 
எனக்கொரு சந்தர்ப்பம் என்பதாகத்தான் நான் அவருடன் பயணப்பட்டேன். அடிப்படையில் குடும்ப உறவுகளை அதிகம் பெற்றிராத நான் சமூக எண்ணங்களின் வெளிப்பாட்டுச் செயல்களில் அன்பின் பெருக்கை அடைந்தேன்.
 
கிராமங்களும், கரம்புகளும் நிறைந்த இச்சமூகத்தில் உள்ளவர்கள் பலரும் அவருக்கு ரசிகர்களாக இருந்தார்கள். அதற்கு பொறுப்பாக இருக்கும் உச்சபட்ச நட்சத்திரம் கமல் என்பதால் அவரிடம் ஈடுபாடுள்ளவர்கள் வெறும் ரசிப்புத் தன்மையோடு தன் வாழ்வை கழிக்கக் கூடாது என்று கருதி- அவர்கள் நற்பணி மன்றத்தில் கமல் சார் கேட்டுக் கொண்டதற்கிணங்க- அவர்கள் மத்தியில் இலக்கியம் – சமூகம்- தமிழ் சார்ந்த கருத்துக்களோடு பயணப்பட்டேன்.
 
ஏதோ ஒரு காரணத்தால் நற்பணி மன்றம் கலைக்கும் சூழல் வந்தது. அது ஏன் நடந்தது என்பது கவலைக்குரிய செய்தி. அந்த தருணத்தில் நான் . இவ்வளவு நாட்கள் தொடர்ந்து வந்த ரசிகர்களை விட்டு விடக் கூடாது என்று சொல்லி நற்பணி இயக்கமாக  செயல்படக் கூறினேன்.
 
எவரையும் இழக்காமல் இயக்கமாக மாற்றி சமூகச் செயல்பாடுகளில் இளைஞர்களை மாற்றி வாழ்வை உயர்த்த வேண்டும் என்றேன்.
 
நம்பமாட்டீர்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஏ.வி. எம் அரங்கில் ‘ இந்திரன் சந்திரன்’ படப்பாடல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்படியே பாதியில் நிறுத்திவிட்டு ஏவிஎம் சரவணன் அறையில் அமர்ந்து யோசித்து- மன்றத்தை மாற்றியமைக்கும் தீர்மானம் ஏற்பட்டது.
 
அடுத்த 48 மணி நேரத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவகத்தில் கமல் சாரிடம் ரசிகர்கள், தலைவர்கள் குவிந்தனர். இந்தக் காட்சி ‘ நாயகன்’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சி போல் அவர் மாடியில் நின்று கையசைக்க, கீழே பல நூறு ரசிகர்கள் உணர்ச்சி மயத்துடன் காணப்பட்டனர்.
 
இயக்கம் துவங்கியது. என்னை கமல்சார் பார்த்துக் கொள்ளச் சொன்னார். அப்போது அவரின் எண்ணமறிந்த உண்மைத்தன்மை உணர்ந்த நான் அவரையே இயக்கத் தலைவராக இருங்கள். இது பின்னாளில் பெரிய மாற்றம் வர பயன்படும் என்று உறுதியாகச் சொன்னேன்.
அதற்கான தகுதியும், மன உணர்வும் அவருக்கு எப்போதுமே இருந்தது.
 
அன்று இயக்கத் தலைவர் ஆகி உறுதி மொழியையே ஏற்படுத்தி பிற நிர்வாகிகளுடன் சத்தியபிரமாணம் ஏற்றுக் கொண்டார்.
 
தொண்ணூறுகளில் தமிழகத்தில் இதற்கு முன்பு வரை எவரும் இப்படியாக அமைப்பு, உறுதிமொழி, நிர்வாகத்திட்டங்கள் செயல்படுத்தினார்கள் என்று சொல்ல இயலாது.
 
அவரின் படங்களில் துணை இயக்குனராக இருந்து கொண்டே இயக்கத்தின் செயல்பாடுகள், ‘ மய்யம்’ ஆசிரியராக பணியாற்றிக் கொண்டே சமூகத்திலும், இயக்கத்திலும் திரைத்துறையிலும் அவரின் மேன்மைக்கான காலங்களாக மாற்றுவதில் அதிக ஈடுபடு காட்டினேன்.
 
‘ மைக்கேல் மதன காமராஜன்’ படப்பிடிப்பு காலையிலிருந்து மாலை ஏழு வரை- அதற்குப்பின் ‘ மய்யம்’ அலுவலகம் செல்வேன். அங்கு இப்போது இயக்குனராகவுள்ள நண்பர் சந்தோஷ் ஈஸ்வரமூர்த்தி ( மனசெல்லாம்) ரா.குணசீலன், சீனுவாசன் மற்றும் அலுவலர்கள் காத்திருப்பார். அவர்களுக்கான படைப்புகளை பார்த்து சரி செய்வதும், அடுத்து செய்ய வேண்டிய பணிகளை சரிபார்த்துவிட்டு பத்து மணிக்கு மேல் வீட்டுக்கு போவேன்.
 
எழுதிவிட்டு உறங்கி மீண்டும் படப்பிடிப்புக்கு செல்வேன். இயக்கம் இலக்கிய சமூக ஈடுபாடு வேண்டுமென்பதற்காக சமூகத் தலைப்புகள் கொண்டு கல்லூரி, பள்ளி பேச்சுப் போட்டிகள், பட்டிமன்றம், இலக்கிய மாணவ அரங்கமெல்லாம் நடத்த ஏற்பாடு செய்தோம்.
 
இன்னொரு வேலையும் செய்யத் தொடங்க திட்டமிடப்பட்டது. ஊரெங்கும் நூலகங்கள், மாணவர்கள் முன்னேற்றத் தேவையான படிப்பகங்கள் கிரிக்கெட் விளையாட்டுகள் உதவிகள் என திசைகள் புதிதாக நிர்மாணித்தோம்.
 
சரி இதை விடுங்கள். கமலின் உதவும் எண்ணம் என்பதற்கு சான்று இது. மோகன் ஸ்டுடியோவில்  ஜி. என். ரங்கராகன் இயக்கத்தில் ‘ மகராசன்’ என்ற படப் பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
 
அந்த சமயம்  திருநெல்வேலி, நாகர்கோவில் பெருமழைவெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த சேதி கேட்டு உதவ வேண்டும் என்று சொன்னதும் கமல் சார் பல லட்சங்களை எடுத்துக் கொடுத்து போய் உதவுங்கள் என்றார்.
 
அப்போது தலைமை நிர்வாகியாக இருந்த ரா. குணசீலன் அவர்களுடன் சென்று பாய், தலையணை, அடுப்பு, அரிசி, பருப்பு என வாழ்வியல் பொருட்களை நேரடியாக லாரிகளில் எடுத்துச் சென்று உதவியது இன்னும் கண்ணில் நிழலாடுகிறது.
 
எழுத்தாளர்கள் பலரையும் கெளரவிக்க  ராஜலட்சுமி அறக்கட்டளை விருது என்று துவக்க யோசனை சொன்னதும் அவர் ஆழ் மனதிலிருந்த ஆசை சரியென வெளிப்பட்டு விமர்சையாக அரங்கேறியது.
 
எழுத்தாள ஜாம்பவான் ஜெயகாந்தன், வல்லிக் கண்ணன், என பல ஆளுமைகள் மேடையேறினர். மருத்துவர் காந்திராஜன், த. ராமலிங்கம். வழக்கறிஞர் சந்திரசேகரன், இயக்குநர் திருமலை, ஸ்ரீராம் சர்மா, ஜான்தன்ராஜ். போன்ற பலர் இதில் பங்கு கொண்டது நினைவு கூறத்தக்கது.
 
என்ன சங்கடம் என்றால்? கமல் சார் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரி இருப்பார். அது அவரின் தனிப்பட்ட குணம். அதை தவறு என்று சொல்வதற்கில்லை.
 
ஆனால் அதை எல்லோரும் சரியாக எடுத்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. அதனால் பலர் பலவிதமாக புரிந்து கொண்டு பேசுவதை நான் அதிகம் காண்கிறேன்.
 
யாரும் வெற்றிகாண வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறபோது கமல் அவர்களுக்கும் அந்த நிர்ப்பந்தம் உண்டு என்பதை நானறிவேன்.
 
பல படங்கள் அவருடன் நான் பயணித்திருக்கிறேன். எனக்கெப்போதும் தனி இடத்தை அவர் அளிப்பார். ஏனெனில் நான் எனக்கான பயனைவிட அவருக்கு ஏற்றது எது என்பதை மட்டுமே எண்ணி செயல்படுவேன்.
 
ஒரு சம்பவம் சொல்லலாமா என்று தெரியவில்லை. இருந்தாலும் பழுதில்லாமல்  சொல்ல முனைகிறேன்.
 
‘ குணா’ படம் ஷூட்டிங்கிற்கு கிளம்ப வேண்டும். கடைசி நேரத்தில் இயக்குனராக சந்தான பாரதி நியமிக்கப்படுகிறார். அப்போது கொடைக்கானலில் ஆர்ட் டைரக்டர் மகேந்திரன் சர்ச் செட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
 
இதன் தயாரிப்பாளர் டி. என். எஸ். என்கிற ராஜ்கமல் பிலிம்ஸ் மேனேஜர். அவருக்கு கமல் சார் படம் நடித்துக் கொடுக்கிறார். ஆனால் எல்லாவற்றையும் முடிவெடுத்து கமல் சார்தான் செயல்படுகிறார். அது அவரது கலை ஈடுபாடு.
 
படப்பிடிப்புக்கு  டிக்கெட் போட்டாயிற்று. எல்லோரும் கிளம்ப வேண்டும். எல்லோருக்கும் சம்பளம் பேசி அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு சென்று விட்டார்கள்.
 
படப்பிடிப்பு நாற்பது நாட்கள் கிட்டத்தட்ட நடத்த திட்டம். என்னுடன் ஆர். எஸ். சிவாஜியும் இயக்குனர் குழுவில் பணியாற்றுகிறார்.
 
ரயிலுக்கு கிளம்ப இன்னும் இரண்டு மணி நேரமே. நான் டி. என். எஸ். இடம்  “ சார்  கொஞ்சம் அட்வான்ஸ்  குடுத்தீங்கன்னா.. வீட்ல கொடுத்துட்டு போவேன்’ என்று கேட்கிறேன்.
 
உடனே  அவர் ‘ ஏன்யா என் தாலிய அறுக்கிறீங்க. பணம் பணம்னு” என்கிறார். ஒரு வேளை கமல்சாரிடம் அதிகம் நெருக்கம் உள்ளவன்  என்பதால் இருக்குமோ தெரியாது.
 
’ சாரி சார். எனக்கு பணம் வேண்டாம்’  என்று சொல்லிவிட்டு என் மனைவியிடம் எங்காவது கடன் வாங்கித் தருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன்.
 
இரண்டு வார படப்பிடிப்பு நடந்திருக்கும். இந்த செய்தி  கமல்சாருக்கு தெரிந்திருக்கிறது. ஒரு நாள் டி.என். எஸ் சாரை அழைத்து ‘ நான் குருவி மாதிரி ஆட்களை சேத்துகிட்டிருக்கேன். கலைச்சி விட்டுடாதீங்க’ என்று பட்டும் படாமலும் சொல்லிவிட்டார்.
 
கொடைக்கானல் பொழுதுகளில் அதற்கு பின்பு எனக்கு அட்வான்ஸ் சம்பளம் சிறிது தரப்பட்டது. வேண்டாமென்று மறுத்தேன். சுயமரியாதை கெட்டு வாழ்வது எனக்கு உடன்பாடில்லை.
 
அதற்குபின்  காலம் கனிய யாவும் யதார்த்தத்தின்  ஒரு பகுதியாக மாறிவிட்டது. டி.என். எஸ் சார் இப்போது பார்த்தாலும் மதித்துப் பேசுவார்.
 
எதற்கு சொல்ல வந்தேன் என்றால் கமல் சார் எப்போதும் வெளிப்படையாக பேசத் தயங்காதவர். நல்லவர்களை சிறந்தவர்களை இழக்காதவர்  என்பதே!.
 
இரண்டு வருடங்கள் ‘ மய்யம்’ இதழ் வந்தது. பின் அது பல காரணங்களால் தொடர இயலாமல் போனது.
 
பலவருடங்கள் வெளிபடுத்த இயலாத பல செய்திகளைப் பரிமாறிக் கொண்ட தருணங்கள் உண்டு.
 
நான் தேவர் மகனுக்கு பின் வெளியேறி ஒரு படம் இயக்கினேன். அதில பல சிரமங்கள். இருக்கட்டும். மீண்டும் எனக்கு படம் இயக்க வாய்ப்பு கேட்டுப் போனேன். அவரும் தருவதாகத்தான் இருந்தார். ஆனாலும் ஏனோ விருமாண்டியில் பணியாற்றச் சொன்னார். பாடல் பதிவுகள், லொக்கேஷன் சர்ச், புகைப்படமெடுக்கும் படப்பிடிப்பு என உடன் இருந்தேன். ஒரு சங்கடம் ஏற்பட அதோடு விட்டு விலகிவிட்டேன்.
 
அந்தச் சூழலை உருவாக்கியவர்கள் யார் என்று தெரிந்தும் மீண்டும் வா என்று கமல் சார் அழைத்தும் நான் பிறிதொரு சங்கடம்  வர காரணமாகக் கூடாது என்று நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.
 
காலங்கள் மாறியது. நான்’ வண்ணத்துப்பூச்சி’ என்ற குழந்தைகள் படத்தை 2009ல் எடுத்து இயக்கினேன். அது தமிழக அரசின் இரண்டு விருதுகள் பெற்றது. டாக்டர் கலைஞர் அவர்களின் கரங்களால் விருது பெற்றேன். அப்போது மேடையிலிருந்தவர் கமல்ஹாசன் அவர்கள். உடன் ரஜினிகாந்த் அவர்கள். என்னை அன்பொழுக வாழ்த்திய கமல், அடுத்த நாள் அமைந்தகரை புத்தகக் கண்காட்சியில் அவர் பேச உடன் அழைத்துச் சென்றார். எல்லோருக்கும் ஆச்சரியம் மீண்டும் ராசியா? என்று
 
கமல் சார் அவர்கள் திரையுலகில் என்னை அறிமுகம் செய்து அரவணைத்ததை எப்படி மறக்க இயலும்?
 
அவரிடம் சேர்வதற்கு முன்பாக பாலு ஆனந்த்தின் ‘ ரசிகன் ஒரு ரசிகை’ என்ற படத்திலும் குடிசை ஜெயபாரதியின் ‘ தேநீர்’ ( ஊமை ஜனங்கள்) என்ற படத்திலும் ஒரு ஷெட்யூல் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன்.
 
அத்தோடு மட்டுமில்லாமல் கவிப்பேரரசு வைரமுத்துவுக்காக பாலசந்தர் படமெடுப்பதாக இருந்த ‘ பாரதியார்’ படத்திற்கு திரைக்கதை அமைக்க மூன்று மாத காலம் பாரதியார் நூல்களைப் படித்து ஆவணமாக்கி திரைக்கதையாக தொகுத்துத் தந்த அனுபவமும் உண்டு.
 
என்னதான் இருந்தாலும் கமல்சாரிடம் வந்த பின்தான் எனக்கு திரை இயக்கம் வெளிப்பாட்டுக்கான இடம் கிடைத்தது. 
 
எது எப்படி இருந்தாலும் கமல்சார் அவருக்கான பயணத்தில் நான் எப்போதும் நேர்மறைச் சிந்தனை கொண்டவனாகவே இருக்கிறேன்.
 
ஈரோட்டு மாநாட்டில் அனேகமாய் 1991 என்று கருதுகிறேன். ஆறுகள் இணைப்பைப் பற்றி பேசியது நினைவுக்கு வருகிறது. கோவையில் தங்கவேலு அவர்கள் நடத்திய நற்பணிமன்ற மாநாடு லட்சங்களைத் தாண்டிய ரசிகர்களால் பிரகாசித்தது.
 
கமல் சார் என்பது ஒரு சமூகத்தின் அடையாளம் என்பதை நான் எப்போதும் நினைவு கொண்டே சொற்களை விதைப்பேன்.
 
இன்று கமல்சார் –
 
மக்கள் நீதிமய்யத்தின் தலைவர்-
 
நம்மவர் –
 
கமல்ஹாசன் –
 
இன்னும் அவர் சொற்களுக்கான நியாயங்களை உணர்பவன்.
 
திட்டமிட்டு அரசியலுக்கு வந்து வெற்றிகண்ட புரட்சித்தலைவர் போல் – திரு. கமல்ஹாசன் அவர்களின் சூழல் இல்லை என்றாலும் – சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறை அவசியமானது என்பது எவரும் மறுப்பதற்கில்லை.
 
காலங்கள் மாறலாம். ஆனால் கருத்துக்களும், தேவைகளும் இன்று அவசியப்படுகிறது.
 
அரசியல் புதுமையான களம். அந்தக் களத்தில் தனது கால்களை அழுத்தமாகப் பதித்து- வெற்றிக்கான திட்டங்களுடன் பயணப்பட்டு வெல்வார் என்பது எண்ணம்.
 
எண்ணம் திண்ணமாக காலம் கையசைக்கட்டும்!
 
 
( வண்ணத்துப் பூச்சியின் நினைவுகள் இத்துடன் முடிவடைகின்றன. மீண்டும் பிறிதொரு சமயம் சந்திப்போம்)
 
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...