???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -3 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -2 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -1 -அருள்செல்வன் 0 இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி! 0 இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு 0 உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் 0 தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு 0 பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம்! 0 எஸ்.வி.சேகர் யார்? அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார்?: முதலமைச்சர் 0 டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை: உயர்நீதிமன்றம் 0 மகிந்த ராஜபக்சவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து! 0 சிவில் சர்வீஸ்- தேர்வான தமிழ் மாணவர்களுக்கு கி. வீரமணி வாழ்த்து அறிக்கை! 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 39 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   13 , 2020  09:29:29 IST

 வாழ்க்கையை வளமாக அமைத்துக் கொள்ள வேண்டும். அதில் தான் ஒருவரின் வெற்றி இருக்கிறதென்று சொல்லக் கேட்டிருக்கிறேன். எனது வாழ்க்கை அவ்வாறெல்லாம் நடந்ததில்லை. நான் என்னவாக ஆக வேண்டுமென்று நினைக்க எனது வறுமையும் குடும்பச் சூழலும் விடவில்லை.
 
எல்லாம் போகிற போக்கிலேயே அமைந்துவிட்டது. பள்ளிக் காலத்தில் ஆசியர்களின் வழிகாட்டலில் பேசவும் எழுதவும் துவங்கினேன். அது கல்லூரிக் காலத்தில் தொடர்ந்தது.
 
அதன்பின் பத்திரிக்கைப்பணி அது என்னவோ எனக்கு அதில் அயற்சி ஏற்பட- அதனினும் சிறந்த ஒரு இடம் வேண்டுமென திருமணத்திற்குப்பின் பல ஆண்டுகள் இலக்கியப் பாதையில் கடந்து போனேன்.
 
அந்த தருணத்தில்தான் நான் சற்றும் எதிர்பாராத அழைப்பு. அழைத்தவர் கமல்ஹாசன். நோக்கம் அவர் ‘ மய்யம்’ என்ற பத்திரிகை நடத்த ஆசிரியர் தேடிய சமயம். அவரின் உதவியாளர் மனோஜ் எனது வீட்டிற்கு வந்து ‘ கமல் சார் அழைப்பதாக" சொன்னார்.
 
அதற்கு முன்பு வரை நான் சந்தித்ததுமில்லை. சந்திக்க எண்ணியதுமில்லை. அதற்கு காரணம் என்னவென்றும் அறியேன். அவர் அழைக்கும் போது சரியாக வெள்ளிக்கிழமை. ஒளியும் ஒலியும் தூரதர்ஷனில் ஒளிபரப்பிக் கொண்டிருந்த நேரம்.
 
அப்போது அந்த நேரம் என்பது மிகப் பெரிய பொக்கிஷம். வேறு எந்த சேனலும் ஆதிக்கம் செலுத்தாத காலம். புதுப்பட பாடல்கள் ஒளிப்பரப்பாகும். அதற்காகவே அனைவரும் காத்திருப்போம்.
 
எனவே முடியாது என்று சொன்னேன். அப்போது எனது துணைவியார் அழைத்தால் செல்வது மரபு என்று அனுப்பி வைத்தார். சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் கஸ்தூரி ரங்கா சாலையில் இருந்த கமல் வீட்டிற்குச் சென்ற பொழுது துண்டு கட்டிக் கொண்டு இருந்தார். போய் நின்றதும் “ வாங்க” “ நாம் இப்போ என்ன பண்றோம்னா” என்று செயல் திட்டத்தைப் பேச ஆரம்பித்துவிட்டார்.
 
எனக்கோ சங்கடம் “ சார் நான் வேலை செய்ய  வரவில்லை” .
 
“ ஏன்?"
 
“ அது பிடிக்கவில்லை.
சினிமாவுக்கு உதவி இயக்குநராகப் போகப் போகிறேன்”.
 
“ போனால் போச்சு.. முதல்ல ஒரு வருடம் வேலை செய்ங்க” என்றார்.
 
“ நான் முழுமையாக ஈடுபாட்டோடு செய்வேன் பிறகெப்படி விடுவீர்கள்!”
 
“ நான் கமல்... தெரியுமில்ல.. சொன்னதை செய்வேன்”
 
ஆனாலும் நான் மறுதலித்தேன். சிறிது நேரம் என்னை அமைதியாகப் பார்த்துவிட்டு.
 
” நீங்க வர்றீங்க “ .. என்று சொல்லி அன்றே பம்பாய்க்கு விமானத்தில் பறந்து விட்டார்.
 
நானும் போக உத்தேசமில்லாமல் வீட்டில் ஏதோ இரு காரணம் சொல்லிவிட்டு  என் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன், ஓரிரு வாரம் சென்றிருக்கும். மீண்டும் மனோஜ் இரவு நேரம் வந்தார். விடாப்பிடியாக காரில் ஏற்றிக் கொண்டு சென்றார்.
 
ஏ. வி.  மெய்யப்ப செட்டியார் பள்ளியில் 'விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கிழமை’ பாடல் படப்பிடிப்பில் நடனம் ஆடிக் கொண்டிருந்தார் கமல்ஹாசன்.
 
இயக்குனர் எஸ். பி. எம் என்னனப் பார்த்துவிட்டு “ என்ன இங்கே? " என்றார் “ கமல் சார் கூப்பிட்டார்’ என்றேன். ஒரு நிமிடம் பார்த்துவிட்டு தட்டிக் கொடுத்து” பலே.. அவரே கூப்பிட்டாரா? எதுவும் பேசாம சரினு’ சொல்லு என்றார்.
 
குழப்பத்தில் நான் . எனக்கு எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்கி இருக்கப் பிடிக்காது. சுதந்திரமாக செயல்பட விரும்புகிறவன். பேசாமல் இருந்தேன்.
 
கே. ஆர் . விஜயா அம்மாவோடு நடித்துவிட்டு இடைவெளியில் என்னை நோக்கி வந்தார்.
 
” ராசி... நாட்கள் குறைவாக இருக்கு. நீங்கந்தான் மய்யம், பார்க்கணும். என்னன்ன பண்ணலாம்னு திட்டமிடுங்க. நாளைலருந்து வந்துருங்க. இவர் புரபொஸர் ராமு இவரும் இருப்பார்” என்று சொல்லிவிட்டுப் போனார்.
 
“ டீ சாப்பிடறீங்களா?’
என்றார்.
"இல்லை... சாப்பிடுவது இல்லை" என்றேன்.
 
“ ஓ.. அப்படின்னா நல்லது. வேற ஏதாவது குடுங்க” என்று ஒரு பணியாளரிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். எனக்கு புரியவே இல்லை. எப்படி இப்படியான உரிமையும், நம்பிக்கையும் அவருக்கு என்மேல் வந்தது என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை.
 
ஆனால் அதே நம்பிக்கை எனக்குள்ளும் இன்றுவரை நிறைந்திருக்கிறது. அன்று தொடங்கிய நட்பு இன்றும் பிசிறுதட்டாமல் மிளிர்கிறது என்பதே சிறப்பு.
 
ஏதோ ஒரு விதத்தில் என்மேல் அன்பு கொண்ட எழுத்தாளர்கள் கமல் சாரிடம் என்னைப் பற்றி சொல்லியிருக்கக்கூடும். ஏனெனில் நான் ‘ தாய்’ வார இதழில் ஐந்தாண்டு காலம் பம்பரம் போல் சுற்றிச் சுழன்றுபணியாற்றியது எனக்கான அடையாளமாக இருந்திருக்கக் கூடும் என்றும் கருதுகிறேன்.
 
“ டீ” சங்கதி சொல்லி விடுகிறேன். நான் கமல்சாரிடம்  'டீ’ வேண்டாம் என்று சொன்னதால் எப்போது பார்த்தாலும் ராசிக்கு ‘ டீ’ பிடிக்காது என்று அவரே முந்திக் கொண்டு சொல்ல ‘ டீ’ இல்லாமல் போய்விட்டது.    
 
இலக்கியவாதிகளுக்கு டீ தானே சொர்க்கம். அப்போது நான் ஒரு நாளைக்கு 10 டீக்கும் மேல் சாப்பிடுவது வழக்கம். அப்படிப்பட்ட எனக்கு ’டீ’ இடைக்காலத்தடை போல் ஆகிவிட்டது. இதை நீட்டிக்கவிடக் கூடாது என்று சொல்லி ஒரு நாள். “ சார். நீங்க கேட்கும்போது வெறுப்பில் டீ வேண்டாமென்றேன். ஆனால் நான் டீ குடிப்பேன். “ அப்படியா.. என சிரித்துக் கொண்டு கிரீன் டீ கொடுத்து ஆரம்பித்து வைத்தார்.
 
கமல்ஹாசன் என்ற கலைஞனுக்குள் உள்ள சிந்தனையும் , நேர்த்தியும் அறிந்து கொள்ள எனக்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அன்றைய சூழலில் நான் ஒத்துக் கொண்ட பணிகளைச் செய்வதில் எந்தக் குறையும் இல்லாமல் நிறைவாகவே செய்தேன்.
 
‘ மய்யம்’ என்ற மாத இதழ்தான் அப்போது மிகப்பிரபலம். "அதில் 40  சதவிகிதம் கதை, கவிதை, உலக சினிமா என்று படிக்கும் வாசகர்களை மேம்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். வெறும் இரசிகர்களுக்கான படத் தகவல்களாக இருக்கக் கூடாது ‘ என்றேன்.
 
கமல் சார் “ நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன் “ என்று ஒப்புதல் வழங்கினார்.
 
அப்போது நான் சொன்னேன் ஹிண்டு , தினமணி தலையங்கம் போல் நீங்கள் மாதா மாதம் எழுத வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
 
‘ சரி’ என்று சொல்லி பொறுப்புடன் அவர் எழுதியதே சிறப்பாக அமைந்துவிட்டது.
 
சுஜாதா முதல் ராஜேஷ்குமார், அசோகமித்ரன், திலகவதி, சுப்ரமண்யராஜு, பாலகுமாரன் என்று அனைவரும் பிரத்யேகமாக எழுதிய சிறுகதைகளை வெளியிட்டோம்.
 
அச்சுக்கு செல்வதற்கு முன் எந்த வேலையிருந்தாலும் கமல் சார் ஒரு பார்வை பார்த்து விடுவார். ’ மய்யம்’ கடைகளில் விற்பனைக்கு இல்லை. அது மன்ற நிர்வாகிகளின் மூலம்தான் கிடைக்கும். அப்படித்தான் தனது ரசிகர்களை மேம்படையச் செய்ய வேண்டுமென்று விரும்பினார்.
 
அப்போது ஒருவருடம் ஆனதும் ஏதோ ஒரு  பிரச்சனை ‘ மய்யம்’ நின்றுவிட்டது. கமல்சார் ஆரம்பத்தில் சொன்ன சொல்லைக் காப்பாற்றினார்.
 
‘உன்னால் முடியும் தம்பி’ படம்  நடக்கும்போதே உடன் காரில் அழைத்துக் கொண்டு போய்விடுவார். எதற்குத் தெரியுமா? ‘ அபூர்வ சகோதரர்கள்’ திரைக்கதை எழுத – எங்கு சென்றாலும் உடன் நான் செல்ல வேண்டியதாகி விட்டது.
 
சொன்னது போல் ‘ அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் சிங்கிதம் சினிவாசராவ் அவர்களிடம் உதவி இயக்குனராக அறிமுகம் செய்தார்.
 
இரண்டு மூன்று நாட்களுக்கு முன் போட்டோகிராபர் துரை ஹாட் ஸ்டாரில் அபூர்வ சகோதரர்கள் டைட்டில் கார்டில் உன்பேர் பார்த்தேன்’ என்று அலை பேசியில் அழைத்துப்ப் பாராட்டினார்.
 
 அந்தப் படத்தின் குள்ள கமல் ‘ அப்பு’ வை  பரிசோதிக்கவே வீனஸ் ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்புகள் எத்தனை நாள் தெரியுமா?  அதில் தொடங்கி , பல எபெக்ட்டுக்காக பிசி. ஸ்ரீராமுடன் , கபீர்லால் இணைந்து செய்த சாகசங்கள் நிறைய. இன்னும் சொல்லப்போனால் ஒளிப்பதிவாளர் பணி சிறப்பு. இதை மறக்க இயலாது.
 
இந்தப் படத்தில் பிரபு தேவா “ ராஜா கைய வச்சா’   என்ற பாடலுக்கு மாஸ்டர் ஆனதும், அந்தப் பாடல் காட்சிக்கு இடம் தந்த பெருங்களத்தூர் ஸ்டெண்டர்டு மோட்டர் கம்பெனி மூடப்பட்டதும் செய்திகள்.
 
இந்தப்படம் பத்து நாளுக்கு மேல் படப்பிடிப்பு நடந்த பின் – நிறுத்தப்பட்டது. பஞ்சு அருணாசலம் அவர்கள் எடுத்தவரை மேனா தியேட்டரில் பார்த்துவிட்டு பேசாமால் போய்விட்டார்.
 
அடுத்த நாள் அனுபவமிக்க பஞ்சு சார் வந்து சொன்ன சில ஆலோசனைகள் படத்தின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது.
 
பேசியது என்னவோ பத்து நிமிடங்கள்தான் ஆனால் அவைகளை ஏற்றுக் கொண்டு புதிதாக எழுதப்பட்ட திரைக் கதை படத்தின் வெள்ளி விழா வெற்றிக்கு உறுதி செய்தது.
 
ஆரம்பத்தில் அனந்து அவர்கள் எழுத ஆரம்பித்தார். அதன்பின் கமல் சார் தானாகவே எழுத ஆரம்பித்தார். இந்தப் படத்தில் வசனத்திற்காக ‘கிரேஸி மோகன்’ அறிமுகம் ஆனார். அவர் நாடக உலகின் சிரிப்பு ஜாம்பவான். இப்படத்தில் எழுதுவது எத்தகையது என கற்றுக்கொண்டார்.
 
நான் மலேசியா சென்றிருந்தபோது பலரும் சொன்னார்கள் “ மலேசியாவில் தியேட்டர்கள் மூடுகிற நிலையில் இருந்தது. வேண்டா வெறுப்பாய் போட்ட ‘ அபூர்வ சகோதரர்கள் படம்தான்  வசூலை அள்ளிக் குவித்ததோடு, மக்களை தியேட்டர் பக்கம் திரளாக இழுத்து வந்தது. அதனால்தான் கமல் சார் என்றால் மலேசிய மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்"
 
சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கப் பயணத்தின்போது நிறைய ஐ.டி அமெரிக்க வாழ் தமிழர்கள் வழி மொழிந்தார்கள்.
 
“ கமல் சார் என்றால் பர்பெக்‌ஷன். அவர் படங்களில் லாஜிக் , வசனம், டெக்னிக், நடிப்பு என எல்லாம் சரியாகப் பொருந்தி இருக்கும்’ என்று பாராட்டித் தள்ளி விட்டனர்.
 
இந்தப்படத்தில் என்னைத் தவற வெறும் தமிழ் அறிந்தவர் வேறு இல்லை என்பதால் வசனம் சொல்லித் தருவது, எடிட்டிங் குறிப்பு, எடிட்டிங் உதவி, எனத் துவங்கி டப்பிங் மிக்சிங், ரிரெக்கார்டிங் என அனைத்திலும் எனது பணியும் கவனமும் அதிகமானது.
 
நம்பமாட்டீர்கள், கமல் சார் என்னை நம்பியும், என் மீது உள்ள பொறுப்பும் என்கிற அளவில் முழுமையாக செயல்படவிட்டார். அது அவரின் நல்லெண்ணத்திற்கு ஒரு சான்று.
 
அட. போங்கப்பா . முதல் ஐந்து நாள் படப்பிடிப்பின்போது அசோசியேட் ஒருவர் ஒரு தவறு செய்துவிட- அது என்மேல் பழிவிழுந்தது. என்னை எல்லோர் முன்பும் கமல் சார் திட்டிவிட்டார். வந்ததே கோபம். பேடை கொடுத்துவிட்டு “ போதுமடா சாமி சினிமா’ என்று காஸ்ட்டியுமர் எம்.ஜி நாயுடு அறையில் அமர்ந்து டீ  சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
 
எம்.ஜி நாயுடு, நடிகர் ஜனகராஜ் இருவரும் ‘ கோபப்படதே  எல்லாம் தெரியும் சாருக்கு’ எனச் சொல்லி சமாதானம் செய்தனர். இந்த சினிமா சூழ்ச்சி நமக்கு புதிது. சிறிது நேரத்தில் யாரோ பின்னால் வந்து தொட்டார்கள்.  யாரெனத் தெரியாமல் ‘ யார் ? அது? ‘ என திரும்ப, எதிரே கமல் சார்.
 
பேசாமல் எழுந்தேன். அப்படியே என்னை அழைத்துக் கொண்டு போய் தோளில் கை போட்டபடி ‘உன் கோபம் நியாயம்’ எனக்குத் தெரியும். நான்கூட உன்னைப் போல் பல இடங்களில் சங்கடப் பட்டிருக்கிறேன். நீ தவறு செய்யவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்பதற்காகத்தான் நான் திட்டினேன். புரிந்துகொள்” என்றார்.
 
இந்தக் காட்சி மற்றவர்களுக்குப் புதிது. கமல் சார் வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால் மறுபரிசீலனைக்கே இடமில்லை என்று தயாரிப்பு நிர்வாகி நாச்சியப்பன்கூட பின்னால் சொன்னார்.
 
அதனால்தான் என்னை அவர் சமாதானம் செய்ய ஒரு மணி நேரத்திற்கு மேல் செலவு செய்கிறாரே என்று வியந்தனர்.
 
கமல் சாரின் குணத்தில் இதுவும் ஒரு பகுதி. தனக்கு சரியென்றுபடுகிற விஷயத்தில் எந்தவித எல்லைக்கும் சென்று சரிசெய்வார் என்பதே. அவர் இதனால்தான் உயர்ந்து என் மனதில் நின்றார். அப்படி சங்கடத்தோடு அமைந்து பின் உஷாராகி பல ஆண்டுகள் அவருடன் பயணித்தது சொல்லப்போனால் இன்னும் நேரம் தேவைப்படும்.
 
 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...