![]() |
நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 38 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்Posted : திங்கட்கிழமை, ஏப்ரல் 06 , 2020 18:52:44 IST
நெற்றியில் திருநீறுப்பட்டை முகத்தில் புன்னகை. ஸ்கூட்டரில் பயணம், அவ்வப்போது கொஞ்சம் புகைப்பழக்கம், எழுத்தில் பெண்மனதை உருக்கி எடுக்கும் ஆற்றல் எனப் பலவிதமான காட்சிகளாக என் மனதில் விரிபவர், வேறு யாருமல்ல எழுத்தாளர் பாலகுமாரன்தான்.
பாலகுமாரன் அவர்களை நான் சில சமயம் படித்து அறிந்திருந்தாலும் நேரில் பார்த்ததில்லை. அவரை முதலில் சந்தித்தது “ தாய்’ வார இதழ் அலுவலகத்தில்தான். நான் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எனக்கு அப்போது இருபத்தோரு வயது இருக்கக்கூடும். ஆசிரியர் வலம்புரிஜான் என்னை அழைப்பதாக ‘ மணி’ சொன்னார். உள்ளே போனேன். ஆசிரியர் அறையில் ஒருவர் அமர்ந்துள்ளார். வலம்புரிஜான் அவர்கள் ‘ இவர்தான் பாலகுமாரன்’ நமக்கு ஒரு தொடர் எழுத இருக்கிறார். அவரிடம் கதை கேளுங்கள்’ என்று சொல்லி அறிமுகம் செய்தார்.
பாலகுமாரன் சிரித்தார். நானும் வணங்கினேன். எழுத்தாளர் என்பது என்னைப் பொருத்தவரையில் மதிக்கத்தக்க உயர்ந்த ஆளுமையாளர். அவ்விதமாகவே பிறகு சில நிமிடங்களில் ‘ சொல்லுங்க சார்.. என்ன மையப்புள்ளி கதைக்கு.? ‘ என்றேன்.
அவர் கொஞ்சம் விரிவாகச் சொன்னார். எனக்கு அப்போது சரியாகப்படவில்லை எனக் கென்னமோ இது உங்க சொந்தப் பிரச்சனையை வெளிப்படுத்தி யாருக்கோ சேதி சொல்வது போல் உள்ளது. தாயில் இது வருமா எனத் தெரியவில்லை. வேறு சமூகம் சாந்த கதை உள்ளதா’ என்று கேட்டேன்.
எனக்கு வாசகர்களை மேம்படுத்தக் கிடைக்கும் வாய்ப்பும், சக்தியும் உள்ள எழுத்தாளர் ஏன் பெண்களுடன் அல்லல்படுகிற ஒரு ஆண் கதையை சொல்ல வருகிறார். இதைவிட சமூகப் பொருளாதார உணர்வு , உரிமை சிக்கல்கள் உள்ளதே. இதை இவர் மேம்பட எழுதலாமே – என்கிற என் கண்ணோட்டத்தோடு ’வேறு கதை உள்ளதா’ என்று கேட்டேன்.
பாலகுமாரன் பதிலேதும் சொல்லாமல் வலம்புரிஜான் அறைக்குச் சென்றார். அரைமணி நேரம் கழித்து என்னை ஆசிரியர் மீண்டும் அழைத்தார். “ ராசி..பாலகுமாரன் மீண்டும் அதையே எழுத வேண்டுமென்று ஆசைப்படுகிறார். எழுதட்டுமே. அனுமதியுங்களேன்’.
” சார்.. அது..அவங்க வீட்டுப்.. பிரச்சனை போல் உள்ளது..”
“ சொன்னார். நீங்கள் மறுத்ததில் தவறென சொல்ல மாட்டேன். ஆனால் எழுத்தாளர் உள்ளக் கிடக்கையும் முக்கியம்தானே. உறவுச் சிக்கல்களும் சமூகத்தின் அங்கம்தானே” என்றார்.
” சரி.. சார்.. இதுவும் புரிகிறது என்றேன். அங்கேயே வெள்ளைத்தாளில் ‘ என்றென்னும் அன்புடன்” என்று எழுதி,' இந்த இதழிலேயே விளம்பரம் செய்யுங்கள் . அச்சுக் கோர்க்க ‘ சகாயம் ‘ அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்' என்றார்.
அதை நான் வாங்கிக் கொண்டு, ‘ வாழ்த்துக்கள் சார்.. திறம்பட செய்யுங்கள்” என்று கைகுலுக்கிவிட்டு அகன்றேன். ஆனால் அந்தத் தொடர் தாயில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் பெரிதும் பாராட்டு பெற்றது.
இப்படியான தருணத்தில் அறிமுகமான பாலகுமாரன் பிறகு ஏராளமான சமயங்களில் பழகி, பேசி, உறவான கதை இயற்கையின் நேர்மறைச் செய்தி!
மனித பலவீனங்களில் ஏறிசவாரி செய்து வெல்கிற யுக்திகளை நான் விரும்பாத நபராக நான் அப்போது இருந்தேன் இப்போதும் அவ்வாறு பயணித்ததே சிறந்தது என்று கருதுபவன்.
பாலகுமாரன் எவர் மனதையும் புண்படுத்த வேண்டும் என்றெண்ணாதவர். ஆனால் ஆண்மிகத்தின் தாக்கமும், உளவியல் சார்ந்த பெண்மனமும் அறிந்த அசகாய வித்தகர் என்பதும் அவரின் தனிப்பட்ட மேன்மைகள்.
ராஜேஷ்குமார் பாக்கெட் நாவலில் கொடிகட்டிப் பறந்த போது- பாலகுமாரனும் பாக்கெட் நாவலில் மாதம் தோறும் பரபரப்பாக வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருந்தார்.
பாக்கெட் நாவல் அசோகன், இருவரையும் தன்னிரு கண்களாகப் பாவித்து வாசகர்களை தன்பக்கம் இழுத்துக் கொண்டிருந்தார். இப்போது ஆண்ட்ராய்டு போனை இரயில் பயணம், பஸ் பயணம் காத்திருப்பு என எந்த இடத்தில் பார்த்தாலும் கையில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்களே. அதுபோல் பாக்கெட் நாவல்களை அதிகமான பேர்கள் பயன்படுத்தினார்கள் என்பது தான் எண்பதுகளின் அடையாளம்.
மாலன், சுப்ரமண்யராஜுவுடன் அநேக நேரம் நட்பு பாராட்டியதை மறக்கமுடியாது. அட்வான்ஸ் புக்கிங்கில் ‘ நாவல்’ எழுத வேண்டிய தருணத்தில் பாலகுமாரன் இருந்தார் என்பதும் – ஒரு நாளை எவ்விதமாய் எழுத்து – நட்பு – குடும்பம், உறவு- உறக்கம் என பகுத்துக் கொண்டு சதுரங்க வேட்டை ஆடினார் பாலகுமாரன் என்பதுதான் உண்மை.
சதுரங்க வேட்டை- என்பதை நேர்மறையாகப் பொருள் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் தன்னிடம் காலத்தை உதவ அழைத்துக் கொள்கிற யுக்தி, காலம் தன்னிடம் தேடி வரும்போது அதை பயன்படுத்த முனைகிற சாதுர்யம் இரண்டும் நூறு சதவிகிதம். சரியாகப் பயன்படுத்தக்கூடிய ஆற்றல் பாலகுமாரன் அவர்களுக்கு இருந்ததை நான் கண்டிருக்கிறேன்.
உதாரணத்திற்கு ஒரு சில சம்பவங்கள். இயக்குனர் சிகரத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். பிறகு வெளிவந்துவிடுகிறார். ‘ ஒரு உதவி இயக்குநர் பணி என்பது எத்தகையது- நான் எவ்வாறு எதிர்கொண்டேன்’ என்பதை குமுதம் வார இதழில் “ இதற்காகத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா? “ என்று எழுதி துறையில் தன்க்கிருந்த நெருக்கத்தை வாசகனுக்கு கடத்திய விதம் சிறப்பு.
பிறிதொரு சமயம்- ஒரு படத்திற்கு வசனம் எழுதுகிறார்- அண்ணா சாலையில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டது. நான் இயக்குநர் சார்பாக அவருக்கு உதவிக் கொண்டிருக்கிறேன்.
ஓர் இளைஞர் வருகிறார் படத்தில் வசனம் போதும் என அணுகுகிறார். பேச்சு அரை மணி நேரம் நீடிக்கிறது. முடிவு திரைக்கதை வசனமும் கூடுதலாக செய்ய முடிவாகிறது. ஒரு பெரும் தொகை. அதை முன்கூட்டியே பெறுகிறார். அடுத்த நாள் காலை. அதை ஒரு இடமாக மாற்ற வேண்டும் என்று தேடி போய் வாங்கிப் போடுகிறார்.
அந்தப்படம் அவருக்கு மனநிறைவை அளிக்காததையும் சொல்கிறார். ஆனால் பணம் அதிகம் கிடைக்கிறது. வேண்டாம் என்றால் வேறு எங்காவது போய்விடும்.
எதற்கு? அந்தக் கதையை முடிந்தவரை சிறப்பாகச் செய்வோம்’ என ஏற்றுக் கொள்கிறார். பிறகு இது படமாக மாறி கவனம் பெறவில்லை என்பது வேறு விஷயம்.
ஷங்கரோடு சேரும் போதும், கமல், பாக்யராஜிடம் சேரும் போதும் பரிமளிக்கிற பாலகுமாரனுக்கு யதார்த்ததை புரிந்து கொள்ளவும் தெரிந்திருக்கிறது.
“ நாம் விரும்பிச் சென்றால் பணம் குறைவு- மற்றவர்கள் நம்மை விரும்பிவந்தால் பணம் நிறைவு”. எண்பதுகளின் வெளிப்படை புரிதல்.
என்னை பல சமயம் கெட்டிக்காரனா இரு . எதையும் வெள்ளை மனசாக நம்பி ஓடுகிறாய் உதைத்துத் துன்பத்தை தந்து விடுவார்கள் எச்சரிக்கையாக இரு’ என்பார்.
நானோ “ அவரவர் குணம் அவரவருக்கு’ என்பேன்.
தத்துவம் பேசாதே!
பேச சக்தி வேண்டும் – சக்திதான் பணம் – பணத்தை தேடு என்பார்.
ஒருமுறை அவரோடு திருவண்ணாமலை விசிறி சாமியாரைச் சந்திக்கச் சென்றுள்ளேன்.
ஒரு பெண்கள் கல்லூரிக்கு நேர்முக கலந்துரையாடல் ஏற்பாடு செய்து அழைத்துப் போயிருந்தார்.
“ if you don’t mind நான் புகைபிடிக்கலாமா?” என கூட்டத்தின்போதே கேட்டார்.
மாணவிகள் ‘ மன்னிக்கனும் No smoke..” என்று கூச்சலிட்டனர்.
” நான் பிடிப்பேன் – அது என் மன ஓட்டம்” என்றார்
எல்லோரும் திகைக்க - “ இனி நான் தனியாக” என்றார். கூட்டம் கைதட்டி அடங்க ஐந்தாறு நிமிடங்கள் ஆனது.
கவிதைகளில் அதிக நாட்டம் கொண்டு துவக்கத்தில் எழுதி மகிழ்ந்துவிட பின்னாளில் அதில் சுவாரஸ்யம் காட்டாததோடு – ‘ என்னப்பா – கவிதையில் சொல்ல முடியும்...குறியீடுகள் போல் சொல்லிக் கொண்டு – என சலித்துப் பேசவும் செய்தார்.
காரணம் பாலகுமாரன் வாழ்வியல் பயணத்தில் – ஆன்மிகத் தடயங்களை பயணமாக ஏற்றுக் கொண்டு தனது நாவல்களில் எழுதித்தள்ளி – மன நிறைவு அடைந்தார் எனச் சொல்லத் தோன்றுகிறது.
72 வயதுக்கான பயணத்தில் 200 நாவல்கள் 100 சிறுகதைகள் , நாயகன், பாட்ஷா, குணா, புதுப்பேட்டை, ஜெண்டில்மேன் என்று வசனம் எழுதி கமர்ஷியல் வெற்றியாளராக மாறியதும் அவரின் தனித்திறன்.
நாயகன் கிளை மேக்ஸ் காட்சி படப்பிடிப்பின் போது இருந்தேன். அப்போது அவரிடம் சில வார்த்தைகள்.
” நீங்க நல்லவரா கெட்டவரா?
தெரியலியேப்பா” – என்பது எவ்வளவு பெரிய வெற்றியைத் தந்தது தெரியுமா? .
குணா படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றிய சமயம்- கமல் – பாலகுமாரன் நடுவே நானாக மூன்று மாதங்களாக பயணப்பட்டது தனி அனுபவம்.
அதிலே “ அபிராமி.. அபிராமி” என்று பாலகுமாரன் எழுதியது- எத்தனை பேரின் மந்திரமாக மாறியது புரிகிறதா?
பாட்ஷாவில் “ நான் ஒரு முறை சொன்னா அது நூறு தடவை சொன்னமாதிரி” என்றெழுதிய பாலகுமாரன் யுக்தியை எப்படி சொல்ல?
இவ்வாறாகப் பயணப்பட்ட பாலகுமாரன்’ இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் இயக்குநராக மாறியதும் – அதன் பின் இயக்குநராக நீட்டித்துக் கொள்ளாததும் ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை தன் பலமான எழுத்தொன்றே தன்னை இருக்கும் இடத்தில் சக்கரவர்த்தியாக மாற்றும் என்கிற புரிதலின் காரணமாக இருக்கலாமோ என்னவோ?
நிறைய எழுதினார்- வீட்டிலேயே சாமியார் போல் அருள் பாலித்தார். நான் வீட்டிற்குச் சென்ற சில சமயங்களில் அவர் முழுதாக இறையுணர்வில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார் என்பதை உணர்ந்தேன்.
பேச்சு அவரின் ரசவாதத் திறன் பேசி- சொல்மருந்தாக மாற்றுவார். சாதி பேதங்கள் அதிகம் இருந்ததாக நான் அறியவில்லை. மனிதனின் சூட்சுமத்தை ‘ லபக்’ கென்று பிடித்துக் கொண்டு அதனோடு பயணிக்க கற்றுக்கொள்கிறார் எனதான் நான் புரிந்துகொண்டேன்.
காதலன் படவசனத்திற்கு தமிழக அரசு பெற்றார். கலைமாமணி விருது பெற்றார். குணா திரைப்படத்திற்கு நிறைய கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சினிமா எக்ஸ்பிரஸ் விருது கிடைத்தது.
கடற்பாலம், சுகஜீவனம் இரண்டும் சிறுகதைக்கான தமிழக அரசு விருது பெற்றது. இரும்புக்குதிரைகள், அண்ணாமலை செட்டியார் விருதும், மெர்க்குரிப்பூக்களுக்கு இலக்கியச் சிந்தனை விருதும் கிடைத்தது. அவரின் படைப்பில் ராஜேந்திர சோழனைப் பற்றி எழுதியது சிறப்பு வாய்ந்தது.
காதலும், அன்பும் பெருக்கெடுத்தோடும் எழுத்தாளராக பாலகுமாரன் அறியப்பட்டார் என்பதும், சமூகச் சூழலில் தன்னை விற்றுக்க் கொள்ளத் தெரியாதவனாக எழுத்தாளன் இருக்ககூடாது என்று பிறர்க்கு சுட்டிக் காட்டுபவராகவும் பாலகுமாரன் இருந்தார்.
பாலகுமாரன் பேச்சின் இடையே கொஞ்சம் ஜெயகாந்தன் வந்து போவதை – அவரோடு பயணித்தவர்கள் அறியக்கூடும்.
ஜே. கிருஷ்ணமூர்த்தியும், ஓஷோவும் சற்று அதிகமாக நெஞ்சில் படிந்திருப்பதையும் உணர்தல் கூடும்.
சொல் எனும் புல்லாங்குழலில் பலவித ஓசைகளை எழுப்பி வாசகனை வசீகரப்படுத்திய கண்ணன் – பாலகுமாரன் என்று சொல்வதில் எனக்கு கூடுதல் மகிழ்வே!
(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)
|
|