???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு 0 சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20,000 கோடி: பிரகாஷ் ஜவடேகர் 0 ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நிபந்தனை பிணை 0 தென்மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னையில் மழைக்கு வாய்ப்பு 0 காட் மேன் வெப்சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு! 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி –2-இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   16 , 2019  01:13:11 IST


Andhimazhai Image

பெரியாரைப் பார்த்தவன் நானில்லை ஆனால் பெரியார் தாசன் மூலம் நான் பெரியாரின் சுயமரியாதை, பெண்ணியம் அறிந்திருக்கிறேன்.

 

பள்ளிப் பருவத்தில் தெருக்கூத்துக்குப் பிறகு மணிக்கணக்கில் அமர்ந்து கேட்டிருப்பது பெரியார்தாசன்  பேச்சைத் தான். எங்கள் கிராமத்துக்கு அருகே உள்ள பெரிய ஊரான கீழ்பென்னாத்தூரில் வந்து பேசியதைக் கேட்டிருக்கிறேன்.

 

பேச்சு என்றால் அது பேச்சு. செந்தமிழ் நடைபழகும். பாமரத் தமிழ் கூத்தாடும். கிருபானந்த வாரியார் குரலில் பேச்சு மாறும். எம். ஆர். ராதா பாணியில் சாட்டை வீசும்.

 

மகாபாரதம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், இறைபட்டியல் என எல்லாவற்றையும் தொட்டுத் தடவி பேசுகிற பன்முக ஆற்றல் கொண்டவர்தான் பெரியார்தாசன்.

 

இவர் கூட்டத்தில் வந்து பேசுகிறார் என்றால் சினிமா தியேட்டரில் இரவு இரண்டாம் காட்சி ரத்தாகிவிடும். படம் பார்க்க..ஈ காக்கா கூட போகாது.. எனக்கு பெரிய மகிழ்ச்சி. ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது பெரியார்தாசனிடம் பரிச்சயம் ஏற்பட்டது.

 

எனது திருமணம் சுயமரியாதை திருமணம். அதை அவர்தான் முன்னின்று நடத்தினார். அந்தத் திருமணத்தில் பாரதி பதிப்பகம் வாயிலாக நான் எழுதிய ‘வசந்த நினைவுகள்’ என்ற நூலை வெளியிட்டேன். அதை விமர்சித்துப் பேசியதும் பெரியார் தாசனே.

 

எனது வாழ்வின் முக்கிய அங்கம் எதுவானாலும் நூல்களை வெளியிட்டு விட்டு  நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். ஏதோ ஒரு தெற்கத்தி ஊரில் கூட்டத்தில் பேசிவிட்டு பஸ் ஸ்டாண்டிலிருந்து திருமண மண்டபத்துக்கு நடந்தே வந்து சேர்ந்தார் பெரியார் தாசன்.

 

ஒல்லியான உருவம்.. தடித்த குரல்..எளிமையான பழக்கம். எவரிடமும் எளிதில் பழகக்கூடியதன்மை. தெருக்கூத்தை நான் பலமுறை அவரோடு அமர்ந்து பார்த்திருக்கிறேன். கிண்டலும் கேலியுமாக பேசுவார் அதில் சமூக அக்கறை அத்து மீறாமல் இருக்கும்.

 

சமீபத்தில் தற்போதைய மேடைகளில் நாவால் நவின்மிகு உரையாற்றுகிற மதிமாறன் எனக்கு நினைவுபடுத்தினார்.

 

“வீட்டுக்குகொரு மரம் நடுங்கள்.

என்கிறாய் தாயே.!

அப்படியே செய்கிறோம்.

ஒரு மரம்

நடுவதற்கு

ஒரு வீடு தா.!”

 

என்று பெரியார் தாசன் நீங்கள் எழுதிய கவிதையை மேடைகளில் பெருமிதமாய் சொல்வார் . அதன் மூலம் உங்களை அறிவேன்’’ என்றார்.

 

இது எண்பதுகளில் சாவி வார இதழில் சுதந்திர தின இதழில் நடுப் பக்கத்தில் வந்த கவிதை. இது அலிட்டாலியா கே.வி ராஜாமணி அவர்கள் சாவிக்கு அனுப்பி வைத்தார். அதனால் வந்தது.

 

எஸ்.அறிவுமணி கவிதைகளையும் பெரியார் தாசன் மேடைகளில் பயன்படுத்துவார். இன்னும் சொல்லப்போனால் கவிப் பேரரசு வைரமுத்துவின் பல ஏற்றங்களுக்குக் காரணம் பெரியார் தாசனின் மேம்பட்ட உரை என்று சொல்லலாம்.

 

பெரியார்தாசன் நல்ல படிப்பாளி. அதில் என்ன ஆச்சரியம். எனலாம். அவர் பச்சையப்பன் கல்லூரியில் 34 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியவர். சேஷாசலம் தான் அவர் இயற்பெயர்.

 

நடந்து செல்வதில் அதிகம் நாட்டம் கொண்டவர். டீ, பன் அல்லது கிடைக்கும் எளிய உணவில் மகிழ்ச்சி அடைபவர்.

 

ஒரு முறை பெரம்பூர் தெரு ஒன்றில் அவரோடு  தெருமுனை கவியரங்கத்தில் கவிதை பாடப்போனேன்.

 

நான் இருப்பதோ செனாய் நகர் திரு.வி.க பூங்கா  அருகிலுள்ள  அரிசன நல மாணவர் கல்லூரி விடுதி. கூப்பிட்ட இடத்திற்கு போய் கவிதை, பேச்சு பேசுவது என்பது என்னவோ எனக்கு அலாதி ப்ரியம். உணர்வு என்றும் சொல்லலாம்.

 

பெரம்பூர் என்றதும் மேகலன், பாவெல், பாவேகோ, காதல் மதி, செந்தூரம் ஜெகதீஷ்,  இந்தக் கவிதைப் பட்டாளம் இல்லாமல் இருக்காது,..

 

அப்படி இந்தக் குழுவில் சிலரோடு கவிதைப்பாடப் போனால் வந்ததே மழை.. எங்கிருந்துதான் அந்த  மழை வந்ததோ, எல்லோரும், கடைவாசல்களில் ஒதுங்கி நிற்கத் துவங்கினர்.

 

கவியரங்கத்தின் பெயரே தெருமுனைக் கவியரங்கம்.. அது இப்போது தெருமழைக் கவியரங்கமாக மாறி விட்டது.

குளிரில் நடுங்கி ஒரு டீக்கடையில் ஒதுங்கினோம். மழை விடுவதாய் தெரியவில்லை. எங்களுக்கு அது பிரச்சனை இல்லை. எழுதிக் கொண்டுவந்த சமூகக் கவிதைக்கு வேலையில்லாமல் போய் விட்டதே என்ற கவலை.

 

அது என்னவோ இந்த கவிஞர்கள் எல்லாம்! தன்னுடைய கவிதையால்தான் சமூகமே தலைகீழாய்மாறப்போகிறது’ என்று நினைத்துக்கொள்கிறார்கள். அட...அந்த நினைவு எனக்கும் இல்லாமலா போய்விடும். மழை மேல் மகா கோபம் ஏற்பட்டது.

’எவன் கேட்டான் இந்த மழையை..கவியரங்கத்திற்குப் பின் வரக்கூடாதா?’’ என்று மனதிற்குள் பேசுவது போல் வெளியே கத்தி விட்டேன். ’’டீ குடித்துக் கொண்டிருந்த பெரியார் தாசன்..சட்டென குடிப்பதை நிறுத்திவிட்டு.

 

“ராசி..நாமளா , மழையான்னு ஒரு கை பார்த்து விடுவோம்”. என்றார். புரியாமல் விழித்தேன்.

 

“நாம மேடையா போட்டோம். தெரு முனையிலதானே நடத்துறோம். போற, வர மக்கள்தானே  கேட்டாங்க. இப்ப மட்டும் என்ன? ஜனங்கள்  அங்கங்க நிக்கிறாங்க..நாம கவியரங்கம் நடத்துவோம்” என்றார்.

அடுத்த சில நிமிடங்களில் டீக்கடை வாசலிலேயே மைக் செட் உருவானது. கவிதைகள் படித்தோம். ஆங்காங்கே  நிற்பவர்கள் வேறு வழியில்லாமல் கேட்டனர். நம்புங்கள் எளிய மக்களின் கைத்தட்டல்கள் மழையினுடே எங்கள் காதுகளை வந்தடைந்தது.

 

அதுதான் பெரியார் தாசன். எந்தச் சூழலையும் தன் வயப்படுத்துகிற ஆற்றல் கொண்டவர். அந்த நிகழ்ச்சிக்கு பின் நண்பர்கள் வீட்டில் தங்கி விட்டு - அதிகாலை வேளையில் பொடிநடையாய் விடுதி வந்து சேர்ந்ததும்- வேறு கதை.

 

பெரியார்தாசனும், வலம்புரி ஜானும் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பெரியார்தாசன் போல் பலரை உருவாக்க வேண்டும் என்ற ஆசையில்  நான் திரு.வி.க பூங்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் இலக்கிய நிகழ்வுகள் நடத்த  வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ‘தென்றல்’ என்ற அமைப்பு வைக்கலாமா என்ற யோசனை, இதை பெரியார் தாசனிடம் சொன்னோம்.

ஒரு நிகழ்ச்சியை அவரை வைத்து துவங்கினோம். பொழுது போக்குக்காக வந்து அமர்ந்தவர்கள் இதை முதலில் வேடிக்கையாகப் பார்த்தனர். பின் தமிழின் வாடிக்கையாளராகினர். பிறகு ‘சுவடுகள்’ என்ற அமைப்பையும் துவக்கினோம்.

என் நினைவுக்கு தெரிந்து மாநகராட்சியில் முறையாக அனுமதி வாங்கி நடத்தியது சென்னையில் இதுதான் முதன் முறை என்று கருதுகிறேன்.

 

கடற்கரையில் பல்லாண்டுகளாக கவிஞர் பொன்னடியான் ‘கடற்கரை கவியரங்கம்’ மாதந்தோறும் ஒரு நாள் நடத்துகிறார் என்பது பரவலாகத் தெரியும். அதில் கூட   கவி பாடியிருக்கிறோம். அதுவல்ல செய்தி..கூடுகிற இடங்களையெல்லாம் கூடிச் சிந்திக்க வைக்க வேண்டும் என்று விதையிட்ட பெரியார் தாசனின் உந்துதலே முதற்காரணம் என்பதுதான்.

 

பெரியார் தாசன் என்றாலே குட்டி எம். ஆர். ராதா என்றுதான் நினைப்போம். அவர் தைரியசாலி. எதற்கும் கண்கலங்காதவர் என்றுதான் நினைத்தோம்.

 

ஆனால் நட்பிற்கும் , காதல் உணர்வுக்கும் கண் கலங்குபவர் என்பதை அவர் வாழ்நாளில் நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

 

எதையும் பகுத்தறிந்து ஏற்க வேண்டும் என்கிற சிந்தனை மேம்பட்ட அவரை தமிழகமும், திராவிட இயக்கங்களும் மேலும் தூக்கி கொண்டாடியிருக்கலாமே என்று தோன்றியது.

 

சேஷாசலம்- பெரியார் தாசன் ஆனார்.

 பிறகு சித்தார்த்தன், ஆனார்-

அதன்பின்

அப்துல்லா பெரியார் தாசன், ஆகி

தன் வாழ்வை நிறைவு செய்தார்.

 

இந்து மதத்தில் உள்ள பல்வேறு பாகுபாடுகள் ஏன் என்பதுதான் அவரின் பெருங்கவலை.. அதை அறவே நீக்க- நிறைய பேசினார். என்னவோ தெரியவில்லை பிறகு ’பெளத்தம்’ நாடினார்.

 

பெரியாரும், அம்பேத்கரும் அவரின் இரு இதயத்துடிப்புகள். பிறகு இஸ்லாம் மார்க்கம் தேடிப் போனார். மெக்காவுக்கு  2010-மார்ச்சில் சென்று வந்தார்.

 

‘தம்மபதம்’ என்ற நூலை மொழிபெயர்த்தார். எம்மதம் ஆயினும் மனிதனை மனிதன் மதிக்க வேண்டும்- அது அல்லாத போது என்ன மனிதம் என்று கேள்வி எழுப்பி தன் வாழ்நாள் முழுவதும் அயராமல் வாழ்ந்தவர் பெரியார் தாசன்.

 

தனக்கேற்ற அங்கிகாரம் இல்லை என்று கருதாதவர் என்றாலும்- தனக்கு ஒரு மேடை போட்டு வெளிச்சம் காட்டியது சினிமா என்பதையும் ஒப்புக்கொண்டார்.

 

இயக்குநர் பாரதிராஜா ‘கருத்தம்மா’ படத்தில் நடிக்கவைத்தார். பெரியார் தாசனின் இயல்பான வாழ்வியல் அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியாகப் பொருந்திப் போனது. அதன்பின் 15 திரைப்படங்களில் நடித்துவிட்டார். ’காதலர் தினம்’ , ‘அழகி’, ’ஆனந்தம்’, ’அய்யா’, ’அறை எண் 305 கடவுள்’, ’வீரம்’ என்பவை குறிப்பிடத்தக்கன.

 

நான் இயக்கி வெளிவராமல் போன நடிகர் ஜெயராம் நடித்த ‘மிஸ்டர் தேவராஜ்’ என்ற படத்தில் பெரியார்தாசன் அவர்களை நடிக்க வைத்தேன்.

 

அவர் கடைசியில் நடித்த ஒரு ஆவணப்படத்தை சொல்லாமல் இருக்க இயலாது. அது மிக முக்கியமானது. ”பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ?” (2013).

 

ஆகஸ்டு 21, 1949ல் பிறந்த இவர் அதே ஆகஸ்ட் 19, 2013ல் 63 ஆண்டுகள் வாழ்ந்து நிறைவு செய்தார்.

வளவன்,சுரதா என்று தன் வாரிசுகளை உருவாக்கி வசந்தா எனும் துணைவியாருடன் வாழ்ந்த வாழ்க்கையின் நேரத்தைவிட - சமூகக் களத்தில் அவர் பேசிப் பழகிய நாட்கள் மிக அதிகம் என்பது வரலாறு.

 

எனது வாழ்வின் சில பிரதிகள் பெரியார் தாசனின் தாக்கம், என்றால்-தமிழகத்தில் இதே போல் ஆயிரக் கணக்கானோர் இவரது தாக்கத்தின் தனித்த பிரதிகளாக இருப்பார்கள் என்று நான் உறுதியாகச் சொல்ல முடியும்.

 

கிராமங்களில் பெரியாரையும், அம்பேத்கரையும் விதைகளாகத் தூவியது சேஷாசலம் என்கிற பெரியார்தாசன். அவரின் நிழல்களாக பலர். அந்த பலரில் ஒருவனாக நான் என்று எண்ணிக் கொள்வதில் பெருமிதம் உண்டு.

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...