???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம்- 54 - சகல ஹாஸன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்.

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   06 , 2017  08:54:05 IST


Andhimazhai Image
மெட்டாலிக் குரல்களின் ப்ளூ வகைமையில் தென்னிந்திய நிலப்பரப்பில் மிகச் சொற்பமாகவே காணவாய்க்கிற உதாரணங்களில் ஒன்றெனவே ஏற்கனவே குறிப்பிடப்பட்ட வரிசையிலிருந்து அடுத்த பாடகரான கமலஹாசனை இந்த வாரம் பார்க்கலாம். நினைவில் கொள்க இதே பெயரில் ஒரு நட்சத்திர நடிகரும் உண்டென்பதை. ராஜா மற்றும் கமல், இருவருக்கான நட்பு, இருவரின் அடுத்தடுத்த திரைப் பிரவேசம் (வாலிபக் கமல் மற்றும் அன்னக்கிளி ராஜா), இன்னபிற இன்னபிறவெல்லாம் ஃபிலிம் நியூஸ்.
 
 
அவற்றைக் கடந்து நேரே பாடல்களில் சங்கமிக்கலாம். ஒரே ஸ்டேஷனிலிருந்து கிளம்பிச் செல்லும் விலகி ஓடுகிற இரு இருப்புப் பாதைகளைப்  போல் நாயகன் திரைப்படத்தில் இளையராஜா தான் பாடிய "தென்பாண்டிச் சீமையிலே" பாடலை கமலஹாசனைக் கொண்டு இரட்டிக்க வைத்தார். பாடி நடிப்பது நாடக தோஷம், சொந்தக் குரல் பிரயாண கனம் என்றெல்லாம் பார்க்கப்பட்ட எழுபதுகளுக்கு அப்பால் நிலைத்து எழுந்த சொந்தக் குரலில் பாடி நடிக்கும் உச்ச நட்சத்திரப் பரம்பரை ஒன்றின் அடுத்தடுத்த கண்ணிகளாக கன்னட ராஜ்குமார், கமலஹாசன், விஜய் ஆகியோரைக் குறிப்பிட முடிகிறது. இவர்களில் கமலஹாசன் குரலுக்கானது இந்த அத்தியாயம். 
 
 
இருவேறு பிரயோகங்களுக்காகவேனும், தன் குரலுக்கு பிரதிமாற்றுக் குரலாக இளையராஜா தேர்ந்தெடுத்திருக்கக் கூடும் என்றபோதும் தமிழின் மிக அபூர்வமான தனித்த இரு குரல்கள் பாடிய பாடல் என்கிற பெருமையுடன் நாயகன் திரைப்படத்தின் "தென்பாண்டிச் சீமையிலே" தன் ஒலிவாழ்வை நேர்த்தியது.
 
 
விக்ரம் அப்போதைய கமலின் அப்போதைய கனவுப் படம். "என் நாவலையெல்லாம் யாருமே சரியாப் படம் எடுக்கல" என்று அவ்வப்போது முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே இருந்த வாத்தியார் சுஜாதாவுக்குப் பேசி, விரிவு செய்து, எடுக்கப் போகும் திரைக்கதையை "இதை இப்ப எழுதுங்க" என்று தொடராக எழுதப் பணித்தார்கள். சுஜாதா எழுதிய விக்ரம் விஷுவல் கவிதையாகவே மலர்ந்தது. எதற்கும் அஞ்சாத வீரசிங்கமாக, நாடுகாக்கும் நவயுக சூரனாக கமலஹாசன் என்கிற விக்ரம் உருவானான். எல்லாம் ரெடி. அந்தப் படத்துக்கு ஒரு டைட்டில் சாங் தேவைப் பட்டது. மெட்டாலிக் ம்யூசிக் அனேகமாக முதல்முறையாக நேரடியாக இந்தியப் பயன்பாட்டில் நுழைந்தது அந்தப் பாடலில்தான். 
 
 
இந்தப் பாடலைக் கவனிக்கலாம். கமலின் குரல் காத்திரமானது. அதன் தன்மை மிகுந்து ஒலிக்கக் கூடிய பாடல்களை மேலும் அதிகரித்துக் கொடுக்க வல்லது. போலவே, மெல்லின மெலடி வகையறாக்களை மேலும் மென்மையாக்கிக் குழைய வல்லது. சற்று சத்தமாக நினைத்துக் கொண்டாலே போதும், மனத்தின் ஆழத்தில் மெல்லக் கேட்கும். இந்த இடத்தில் மேற்சொன்ன விக்ரம் பாடலின் முதல் வித்தியாசம், அதன் புத்தம் புதிய மெட்டாலிக் இசை என்றால், அந்தரத்தில் கை பற்றி நடக்கும் இன்னொருவராக கமலின் குரலைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. போதும் பீடிகை.
 
 
இந்தப் பாடலை அதன் அத்தனை வரிகளிலும் விக்ரம் என்கிற பெயர்ச் சொல்லைத் தவிர்த்துக் கிட்டத்தட்ட எல்லா வரிகளிலும் முதல் அல்லது இரண்டாவது சொற்களின் உச்சரிப்பை லேசாக நீட்டி ஒலித்திருப்பார். இந்தப் பாடலில் வரும் "நான், இமயம், தீயை, வீரமே, சூடும்" இவற்றைக் கவனித்தால் இதை உணரலாம். 
 
 
தன் பேசுகிற குரலுக்கு அருகாமைக் குரலிலேயே பாடல்களை நிகழ்த்தினார் கமலஹாசன். "துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்" என்று யார் பாடினாலும் கமல் குரலிலேயே ஒலித்தது. ஏற்கனவே சொல்லப்பட்டது போலவே, "நினைவோ ஒரு பறவை" ஒரு அற்புதம். 
 
 
நினைவோ ஒரு பறவை எனும் முதல் வரியைத் திட்டமிட்டபடி ஒரு பெரும்பரப்பிற்கு இழுத்துச் செல்லும் குரல் விரிக்கும் அதன் சிறகை எனும் போது தன்னாலான அளவு நெடிதுயர்த்தும்.பறக்கும் அது கலக்கும் தன் உறவை....என்று முடிக்கிற இடத்தில் ஒரு சத்தியமான பிரார்த்தனையின் முழுமைக்குப் பின்னதான கச்சிதமான அமைதியைக் கொண்டு வந்து சேர்க்கும்.
 
 
பெ: நினைவோ ஒரு பறவை 
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை,
 
ஆ: நினைவோ ஒரு பறவை 
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை,...
 
 
ஆ: ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் 
அது என்ன தேன்,
 
உடன் ஒலிக்கிற எஸ்.ஜானகியின் குரல் வழமைக்குச் சற்றுக் குறுகியே ஒலிக்கும் படி ஏற்பாடாகி இருப்பதை உணரலாம்.ரோஜாக்களில் எனும் பொழுது ஏறி பன்னீர்த்துளி எனும் போது நிதானித்து வழிகின்றதேன் எனும் வரியில் இறங்கிக் குழைந்து அது என்ன தேன் எனும் போது மறுபடி நிதானித்து ஜாலவித்தை புரிந்திருக்கும் கமலின் குரல்.
 
பெ: அதுவல்லவோ பருகாத தேன் 
அதை இன்னும் நீ பருகாததேன்,
 
ஆ: அதற்காகத்தான் அலைபாய்கிறேன்  
 
கிட்டத்தட்ட ஸ்தூபி ஒன்றின் கூர்முனையின் உயரத்தைப் போல உயர்ந்து குறுகி வலுத்திருக்கும் குரல்.
 
பெ: வந்தேன்... தரவந்தேன்.....
 
ஆ: நினைவோ ஒரு பறவை 
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை.....
 
பெ: நினைவோ ஒரு பறவை.....
 
 
பெ: பனிக்காலத்தில் நான் வாடினால் 
உன் பார்வை தான் என் போர்வையோ
 
ஆ: அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் 
அதற்காகத்தான் மடிசாய்கிறேன்
 
பெ: மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான் இனி நான் தான்....
 
ஆ: நினைவோ ஒரு பறவை 
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை...
 
பெ: நினைவோ ஒரு பறவை 
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை.....
 
 
தான் பாடிய அனைத்துப் பாடல்களுமே சூப்பர்ஹிட் பாடல்களாகவே பார்த்துக் கொண்டார் கமலஹாசன். திட்டமிட்டு உருவாக்கப்படுகிற கலையான சினிமாவில் எந்த ஒரு உபகலையின் வெற்றியையும் திட்டமிடமுடியாது என்கிற வினோதம் அதன் மீதான் ஈர்ப்பாகவும், வெறியாகவும் மாறுகிறது. "பாரு இந்தப் படம் இருநூறு நாள் ஓடும்" என்று ஆரம்பிக்கிற படங்கள் இரண்டொரு நாள் ஓடியதும் நடந்திருக்கிறதல்லவா?
 
 
கனியிருப்பக் கனியே கவர்ந்த ஹாசன் என்று சொல்லத்தக்க அளவில் தானும் தன் பேஸ் வாய்ஸுமாய் வெளுத்து வாங்கினார் பாடகர் கமலஹாசன். எஸ்.ஜானகியுடன் கமலஹாசன் பாடிய "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ஒரு முழுமையான மலையாளப் பாடல் என்று மலையாளிகள் ஒப்புக் கொண்டார்களா என்று எனக்குத் தெரியாது, நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். பார்த்துப் பார்த்துப் பண்ணப்பட்ட அத்தனை மலையாள வார்த்தைகளும் வேண்டுமானால் ஒரு பாலக்காட்டுப் பாடலாக அதை ஒப்புக் கொள்ளலாம். எனக்கென்னவோ ஜானகி கொஞ்சம் அடங்கி ஒடுங்கியே கமலுடன் பாடுவதைப் போல உணர்ந்திருக்கிறேன். தேவர் மகன் திரைப்படத்தின் "இஞ்சி இடுப்பழகி" உயரங்களின் உச்சங்களைத் தாண்டிற்று. குணா படத்தின் "கண்மணி அன்போடு காதலன்" பாடலும் சதி லீலாவதி படத்தின் மாறுகோ மாறுகோ பாடலும் இதே வகைமையின் வேறுசில பாடல்களே. உற்று நோக்கின் நிழல் ஒன்றை வார்த்து, அதற்கேற்ப நிஜத்தைப் போலச் செய்யும் பிரதியாட்டமாகவே சினிமாவைக் கொள்ள முடியும். உரையாடல்களுக்கு இடையில் கலந்தும் தனிக்கவல்ல பாடல்களில், உரையாடல்களின் பொழுது அடங்கியும், இடைமௌனங்களின் போது மிகுந்தும், அதனொரு இருண்மையில் நிசப்தமாகவும் நிகழவாய்க்கிற இசை பாடல்களின் பொழுது நேர்மாறலாகி ஒலிக்கிறது. எளிதாய்ச் சொன்னால் வசனத்துக்கு அடங்கிப் போகும் இசையாக முன்னும் பின்னும் நேர்வதும், வார்த்தைகளும் குரல்களும் ஒருங்கே தட்டுப் படுகிற இசை வகைமையாகப் பாடல்களைன் பொழுதும் நிகழ்வதை உணரலாம்.
 
 
கமல் தேர்ந்தெடுத்துப் பாடிய ரூபமற்ற பாடல்கள் பல.எந்தப் பொதுமைக்குள்ளும் சிக்கிவிடாத பாடலற்ற பாடல்களைக் கமல் பெரிதும் பாடினார்.கொம்புல பூவச்சுத்தி நெத்தியில் பொட்டு வச்சிக் கன்னிப் பொண்ணு கைமணக்கும் என்று ஆரம்பிக்கும் விருமாண்டி படப்பாடல் வேக வேகமான வசனங்கள் மற்றும் எள்ளலும் கிண்டலுமாய்த் தொனித்துச் செல்லும் பாடல் இது.இதற்கு நடுவே வரக் கூடிய ஒரு எக்காள ஒலி கமலின் குரலால் மாத்திரமே சாத்தியாகத் தக்கது.அதாவது கமல் எனும் அறியப்பட்ட குரலின் தனித்து ஒலித்தலும் அதன் பிரபலமும் கதாபாத்திரத்தின் பாடல் பின் குரலாகவும் வெளிப்படுவது மொத்தமாகவும் தனித்தனியாகவும் படத்தின் மற்றும் பாடல்களின் செல்வாக்குக்கும் சீக்கிரப் பிரபலத்துக்கும் உதவின என்பது நிசம்.திர்ருவையாத்த சொல்றியாக்கும் நீ என்று கோவை சரளாவிடம் சொல்லும் மாருகோ மாருகோ பாடலாகட்டும் மன்மதன் அம்பு படத்தில் நெடுவசனகவிதை ஒன்றை வாசிப்பதாகட்டும் கமல் தன் குரலின் ஆளுமையைத் தனியே தனக்கு அருகாமை நிகரில் பேணியபடி அதற்குத் தன்னாலான தோன்றல்வாய்ப்புக்களைத் தனியே பிரித்துச் செய்துதந்து பராமரித்து வருவதை அவதானிக்கலாம்.
 
 
சந்தோஷத்தின் அளவுகடந்த உற்சாகத்தையும் அதே நேரத்தில் நாயகத்துவத்தின் சவால்வெல்லும் சமமற்ற சுய போற்றுதலையும் ஒருங்கே குரல்வழி தோற்றுவிக்கிற பல பாடல்களைப் பாடி இருக்கிறார் கமல்.அம்மம்மோய் அப்பப்போய் மாயாஜாலமா...ஜப்பானில் கல்யாணராமன்.அம்மம்மம்மோ வந்ததிங்கு சிங்கக்குட்டி பேர் சொல்லும் பிள்ளை போட்டா படியுது படியுது சத்யா எதிலும் வெல்வேண்டா நம்மவர் ராம் ராம்...ஹேராம்.
 
 
ராஜா கைய வச்சா பாடலை பாலுபாடியும் கேஸட்டில் கேட்கலாம்.ஆனால் படத்தில் உன்னை நெனச்சேன் பாடலாகட்டும் வாழவைக்கும் காதலுக்கு பாடலாகட்டும் அண்ணாத்தை ஆடுறார் ஆகட்டும் எல்லாம் பாலு வசம் தரப்பட்டாலும் ராஜா கைய வச்சா பாடலை மட்டும் தான் எடுத்துக் கொண்டார் கமல்.ஒரு மறைமுக உரையாடலாக தன்னை பெரிதும் விரும்பித் தொடர்கிற ரசிகர்களுடன் தன் பாடல்களை நிகழ்த்த விரும்பினார் கமல்.
ராஜா கைய வச்சா பாடலின் நடன அபிநயங்களில் தெரியச் செய்த ஒரு நடனக் கலைஞனின் தேர்ச்சி அனாயாசத்தை தன் குரல் பாணியிலும் சின்னதொரு அலட்சியமாகவே உட்கொண்டு வந்திருப்பார் கமல். இதன் நீட்சியாகவே வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் கலக்கப் போவது யாரு பாடலைச் சுட்டலாம்.பொதுவாக பன்ச் டயலாகுகள் எனப்படுகிற சுயபோற்றி வசனங்களை முற்றிலுமாகத் தவிர்த்து விடுவதைத் தொடர்வழக்கமாகவே கொண்டிருக்கிற கமல்ஹாசன் தன் பாடல்களில் கதாபாத்திரப் பெருமையை பேசுகிறாற் போல் தன்னைப் பேசுவதை தடுப்பது இல்லை.மேலும் அத்தகைய பாடல்வரிகளைத் தன் உளமார்ந்த ரசிகர்களுக்கான சிறு பரிசுப் பொதியாகவே தரவிழைந்தார்.
 
(கலக்கப் போவது யாரு..?நீ தான்...)
எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன்
நண்பர்கள் நலம் காண
விழுவது போல் கொஞ்சம் விழ்வேன்
எனது எதிரிகள் சுகம் காண
உள்ளத்தில் காயங்கள் உண்டு , அதை நான் மறைக்கிறேன்
ஊருக்கு ஆனந்தம் கொடுக்க வெளியே சிரிக்கிறேன்
துயரத்தை எரித்து , உயரத்தை வளர்த்து
துயரத்தை எரித்து, உயரத்தை வளர்த்து
வாழ்வேன் நலம் காண்பேன்
 
(கலக்கப் போவது யாரு..?)
 
வழிகளில் நூறு தடை இருந்தால் தான்
வாழ்கை ருசியாகும்
மேடுகள் கடக்கும் நதியினில் தானே
மின்சாரம் உண்டாகும்
காம்பினில் பசும்பால் கறந்தால் , அது தான் சாதனை
கொம்பிலும் நான் கொஞ்சம் கரைப்பேன் , அது தான் சாதன
சமுத்திரம் பெரிதா ? தேன் துளி பெரிதா ?
சமுத்திரம் பெரிதா ? தேன் துளி பெரிதா ?
தேன் தான் , அது நான் தான் 
 
(கலக்கப் போவது யாரு..?)
 
 
அண்ணவாடா தம்பிவாடா மாமன்வாடா மச்சான் வாடா...என்று தொடங்கும் பாடலை சந்திரபோஸ் இசையில் சரணம் அய்யப்பா படத்துக்காகப் பாடி நடித்தார் கமல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சவால் படத்தில் தண்ணியப்போட்டா சந்தோஷம் பிறக்கும் என்ற பாடலைப் பாடி இருக்கிறார் கமல்.சட்டக்காரி படத்தைத் தமிழில் எடுத்த போது மோகன் ஊர்வசி நடித்து ஓ மானே மானே என்ற பேரில் உருவானது.இதில் கமல் நடிக்கவில்லை ஆனால் பாடினார் பொன் மானைத் தேடுதே...என் வீணை பாடுதே 
 
 
உணர்வுப் பூர்வமான பாடல்களைக் கமல் குரலில் கேட்டவர் கரைந்து போனார்கள்.குணா மகாநதி போன்ற படங்களின் கதைக்களன் தனித்த வெறுமை சூழ்ந்த தன்மையது.அவற்றின் பாடல்கள் கமலின் கனத்த குரலின் அடித்தளத்திலிருந்து எடுத்து வார்க்கப்பட்ட பாடல்களாக அமைந்தன.
ஞாயிறு ஒளி மழையில் தேவராஜன் இசையில் அந்தரங்கம் படத்தில் கமல் பாடகராக அவதரித்த பாடல் இதுவே. சில பாடல்களைப் பாடுவதற்கு ஆகப் பொருத்தமான குரல் கிடைக்கவில்லை என்பதால் தானே பாடியிருக்கக் கூடும், அல்லது என்னதான் தேன் தடவிய குரல்கள் என்றாலும் தன் சொந்தக் குரல் கதாபாத்திரத்தின் துல்லிய அருகாமையில் ரட்சிக்கப் படுவதற்கான வாய்ப்பு சற்று அதிகம் என்பதாலோ தன் பாடல்களைத் தானே பாடினாரா கமல்? 
 
 
கதாபாத்திரத்தின் அறிதல் அறியாமையைப் பிரதிபலிப்பதற்கான நல்லதொரு வாய்ப்பும் பாடும்போது கிடைக்கும் விதவினோத பாத்திரங்களின் ஆன்ம உருவகத்தைக் கச்சிதமாகவே தன் குரலில் பிரதிபலித்தார் என்பதை மறுக்க முடியாது. சத்யா திரைப்படத்தில் விரக்தி, தீர்வின்மை, அவசரம், முரட்டுத்தனம், இல்லாப் போதாமை, வாழ்வின் நிர்ப்பந்தம், அத்தனையும் கலந்து பிசைந்த விட்டேற்றித் தனத்தை முன் வைத்தபடி பிரயாணிக்கிற "போட்டா படியுது படியுது" பாடல் ஒரு உதாரணம். 
 
 
"சொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே" என்று ராமக்குட்டியின் பின்னால் தானும் தன் குரலுமாய் ஓடும் சிங்காரவேலன் பாடல் இன்னொரு சான்று. "லவ் பண்ணுடா மகனே லவ் பண்ணுடா" என்று தன் ரசிக சொல் பேச்சுக் கேளா தம்பிகளின் நெடுங்காலப் பரவச விளித்தலான "ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா" என்றே ஒரு பாடலைத் துவக்கிப் பாட கமலஹாசனால் இயன்றது.
 
 
கமல் பாடிய பாடல்களில் இதை ஒரு முக்கியப் பாடல் என்பதில் எந்தத் தயக்கமும் இல்லை எனக்கு.
நீ நான் சிவம்
வாழ்வே தவம்
அன்பே சிவம்"
 
 
இந்தப் பாடலில் மானுட சாத்தியப் பாடுகளை மெல்ல மீறிட விழையும் தொன்மச் செறிவுடன் கூடிய பலம் வாய்ந்த பிரார்த்தனை முழக்கத்தைப் போலவே எடுத்தாண்டிருப்பார். இடவல மாற்றத்துடன் எத்திசையும் சாராத நடுக் கூர்மை மீதான கவன நிலைத்தலுடன் முழுப் பாடலையும் செலுத்திச் செல்வார். இந்த வித்தியாசத்தை ஒருமுறை அல்ல பலமுறை நண்பர்களிடம் சொல்லி வியந்திருக்கிறேன். 
 
 
பால்யத்தில் மாத்திரமே சில சொற்களை அவற்றுக்கான எந்த அர்த்தப் போற்றுதலும் இன்றி ஒரு இயல்பான தொனித்தலுடன் கையாள முடியும். ஒரு உதாரணத்துக்கு,  "எலே சபாநாயகம்" என்று குழந்தைகள் எளிதாக விளிக்கும். விஷயம் விளித்ததல்ல, அதன் தொனி. பெரியவர்களின் உலகத்துக்குள் குழந்தமைத் தொனி சாத்தியப் படுவதே இல்லை. இந்த இடத்தில் மறுபடி கமல். இந்தப் பாடலெங்கும் அன்பே சிவம் என்கிற சொற்கூட்டில் அன்பே எனும் சொல்லை ஒரு அழுத்தம் கூட்டி, சிவம் என்கிற சொல்லைத் தன் பால்யத்தின் குரலாலேயே பாடிக் கடந்திருப்பார். 
 
 
"கண்மணி அன்போடு காதலன்" பாடல் ஜானகி பாடல். கதைப்படி நாயகன் குணா ஒரு தேசமற்ற ராஜா (அதாங்க பைத்தியம்). அவன் சொல்லச் சொல்ல, நாயகி லட்டூ அதைப் பாடலாக மாற்றி ராகத்துடன் பாடுவார். "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டிப் புனிதமானது" ஒரு மலைக் குகையின் உட்புறம் அடங்கியபின்னும் தொடரும் எதிரொலித்தலைக் கொண்டுபோய் ஒரு ஒற்றைக் குழந்தையின் செல்லப் பிடிவாதமாய் அடுத்த வரிகளில் பயணிக்கிற விதமும் தன்மையும், தாழப் பறந்து நீரில் நனையாமல் மேலேறிச் செல்லுகிற பறவைகளின் இதற்கடுத்த சிறகசைப்பைப் போல் உருகத் தொடங்கும் பனிக்கூழ்க் கொப்புளங்களென தேனும் ஒயினும் தழுவினாற்போல் 
"அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்குப் புரியுமா" என்று லாலிகளை லல்லியிருப்பார் கமல். 
 
 
சாத்தானும் கடவுளும் போல் மிருகமும் கடவுளும் பாடல்களுக்கென்றே ஆன காம்பினேஷன். கண்ணதாச வாலிகளைத் தொடர்ந்து, வைரமுத்து அடிக்கடி எழுதிப் பார்ப்பார். ஆளவந்தான் திரைப்படத்தில் மனம் பிறழ்ந்த நந்தகுமாரின் சுய விவரணையாக "கடவுள் பாதி மிருகம் பாதி" பாடல் அமைந்தது. என் பதின்ம வயதில் எப்போதோ வார இதழொன்றில் தொடர்கதையாகக் கமல் எழுதிய "தாயம்" பைண்டு பண்ணி ஒரே புத்தகமாக வாசிக்கக் கிடைத்தது. அதன் சிதைக்கப்பட்ட மீவுருவாக்கம் ஆளவந்தானாகித் திரை கண்டது. அதை அப்படியே எடுத்திருக்கலாம் என்கிற ஆதங்கம் எனக்கு உண்டு. எழுதும்போது நந்து பாத்திரம் இத்தனைக் குண்டு புஷ்டியுடன் சஹ்ருதயர்களை பூச்சாண்டி பண்ணும் சிக்ஸ் பேக் ஸ்டெமினா கொண்டவனெல்லாம் கிடையாது. அவனொரு குழந்தை போன்ற தோற்றத் ததும்பல் கொண்டவன். போதும். இன்னும் சொன்னால் எனக்கு அழாச்சி வரும். 
 
இது ஒரு ளகரத்தின் பாடல். "கடவுள், உள்ளே, வெளியே, விளங்க, வளர்க்க" என்று திரும்பிய திசையெல்லாம் மிஸ்டர்.ள வருவார். என் தோளி ஒருத்தி ழ போட்டு இந்தப் பாடலைப் பாடுவாள். "நழ்ழா பாட்றேனா" என்றும் கேட்பாள். நான் அதற்கு என்ன சொல்வேன் என்பது சஸ்பென்ஸ். வேண்டுமானால் கடைசியில் சொல்லுகிறேன். 
 
 
கமலஹாசனின் பாடல்களில் எனைப் பொறுத்தமட்டில் மிகக் கடினமான முயல்வென்று சிங்காரவேலன் படத்தின் "போட்டு வைத்தக் காதல் திட்டம்" பாடலைச் சொல்லலாம். உச்சஸ்தாயி பாடல்களில் இது ஒரு முக்கியமான பாடல். இதைத் தகுந்த பயிற்சி இல்லாமல் அணுகவே முடியாது என்பதல்ல விஷயம். தகுந்த பயிற்சி இருந்தாலும் அப்படி ஒன்றும் பாடிவிடமுடியாது என்பதே விசேஷம். ஒரு உதாரணத்துக்கு, இந்தப் பாடலில் "ரஷ்யாவின் தங்கப் பாளம் நீதான்" என்று வரும் இடத்தைத் தூக்கத்தில் நடக்கிற ஒருவன் மொட்டை மாடித் தண்ணீர் டாங்கியின் மேலேறி நின்று கண் திறந்து பார்த்தாற் போல் (ஸ்ஸ்ஸ்... அப்பாடா) புருவ ரோமத்தின் நுனியில் வாள் நுனியொன்று முத்தமிட்டு விலகினாற்போல் பாடியிருப்பார் கமல்.
 
"ருக்கு ருக்கு ருக்கு" பாடலை வேறு எதோ ஒரு மாமியைப் பாட வைத்திருப்பார் கமல், தான் பாடியதாகப் பொய் சொல்லுகிறார் என்று என்னிடம் மறுபடி மறுபடி சொன்ன தியாகுவின் ஆழ்மனம் வரை அந்தக் கூற்றின் நம்பகம் புதைந்திருந்தது. தன் குரல்வளையை வைத்து கமல் எடுத்த பகீர் ரிஸ்க் இந்தப் படம். கூர்ந்து நோக்கினால், இந்தப் படத்தில் ஷண்முகி மாமிக்கு மிகவும் குறைவான வசனங்களே வழங்கப்பட்டிருப்பதை உணர முடியும். இதில் ரிஸ்கை ரிஸ்கால் பெருக்கினாற் போல் "ருக்கு ருக்கு ருக்கு" பாடல். கமலின் கம்பீரத்தை மாத்திரம் ஷண்முகியின் பெண் குரல் பிரதிபலித்ததே ஒழிய கமலை அல்ல என்பது இன்னும் ஒரு சிறப்பு.
 
 
தெனாலி திரைப்படத்தின் "ஆலங்கட்டி மழ தாலாட்ட வந்தாச்சா" என்ற பாடலை ஸ்ரீனிவாஸ் சுஜாதா மற்றும் குழந்தைகளுடன் கலந்து பாடிய கமல், தாமரையின் வரிகளில் சித்ராவுடன் இணைந்து ரஹ்மானின் இசையில் பாடிய "இஞ்சேருங்கோ இஞ்சேருங்கோ" பாடல் ரஹ்மான் ரசிகர்களுக்கும் கமலவிரும்பிகளுக்கும் ஒருங்கே பிடித்தமான பாடலாயிற்று. உல்லாசம் திரைப்படத்தின் "முத்தே முத்தம்மா" திரையில் கண்திறந்து கமலைத்தான் தேடவைத்தது. லேட்டஸ்டு முத்துராமலிங்கத்திலும் ஒரு க்ரூப் ஸாங்கை கமல் பாடியிருக்கிறார். 
 
"அணு விதைத்த பூமியிலே" எனும் விஸ்வரூபம் பாடல்,  உத்தம வில்லனில் இரண்டு, தூங்காவனத்தில் ஒன்று, நளதமயந்தியில் "சூடுபட்டதா" என்கிற பாடல், மும்பை எக்ஸ்ப்ரசில் "எலே நீ எட்டி" என்கிற பாடல், ஆகியவை அதிகம் பேசத் தேவையற்ற கமல் பாடல்கள்.
 
 
இன்னும் சொல்ல வேண்டிய பாடல்கள் சில உண்டு. 
கார்த்திக் ராஜா இசையில் "காசு மேலே காசு வந்து" ஒரு ஜாலியான பாடல். யுவன் சங்கர் இசையில் "நெருப்பு வாயில்" எனும் புதுப்பேட்டை பாடல் தனிமையின் இருளையும் இரவுகளின் கருமையையும் கலந்தும் தனித்தும் தொனித்த பாடல். விருமாண்டி திரைப்படத்தின், "ஒன்ன விட" பாடல் சர்வ லட்சணங்களும் பொருந்திய ஒரு காதல் பாட்டு. இத்தனை கனமான குரலை வைத்துக் கொண்டு ஒரு குளத்தின் தரையில் படியில் தளத்தில் படிகளில் எல்லாம் இறங்கி ஒரு ஆழத்தின் நீர்ப் பரப்பில் காலைச் செருகுகிற கணத்தை ஸ்தாயியாக்கி அத்தனைக் கீழிறக்கி இந்தப் பாடலைப் பாட வைத்திருப்பார் இளையராஜா.எதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதற்கு முந்தைய குறுகுறுப்பை, சந்தோஷத்தின் பதற்றமாக்கி இந்தப் பாடலின் இசையில், பாடிய குரல்களில், வரிகளில் என அத்தனையிலும் படர்த்தியிருப்பார். 
 
 
உமா ரமணனுடன் "விழியோரத்துக் கனவு" என்ற பாடலை ராஜ பார்வைக்காகப் பாடியிருப்பார் கமல். என் ஆதங்கம் இந்தப் பாடல் கமல் ரசிகர்களாலேயே பெரிதும் போற்றப் படவில்லை என்பது. முரணிசை வகைமையில் முக்கியமான ஒரு பாடல் இது. அந்த வகையிலும் கமலின் குரல் மிக வேறொன்றாக இதில் வெளிப்பட்டிருக்கும்.
 
 
உச்சஸ்தாயி பாடல் கனகாத்திரப் பாடல் மிகச் சன்னமான குரலிலான பாடல் குழுப்பாடல் சென்னைத் தமிழ் மதுரைத் தமிழ் கொங்குத் தமிழ்ப் பாடல்கள் பெண்குரலில் பாடல் ஆங்கிலேய உச்சரிப்புடனான பாடல் எனத் தொடங்கிப் பலவிதமான பாடல்களைப் பாடி இருக்கிறார் கமல்.எந்த ஒரு பாடகருடனும் மல்லுக்கு நிற்காமல் தனக்கென்று தனிவனம் ஏகும் சிறப்பின் பறவைகள் கமலின் பாடல்கள் என்பதில் ஐயமில்லை.தமிழ்த் திரையின் சரிதத்தில் கமலின் பெயர் ஒரு பாடகர் என்ற தனியிடத்திலும் எழுதப்படும் என்பது அவர் குரலின் சிறப்பு.கமலின் பாடல்கள் என்பதில் கமலே பாடிய பாடல்கள் ததும்புவதற்கு மாத்திரமே இந்த அத்தியாயம். நினைவில் கொள்க, கமல் தோன்றிய பிறர் பாடிய பாடல்கள், கமலாட்டப் பாடல்கள் தனித்தனி அத்தியாயங்களாக மலரக் கூடும்.
 
Bigg Boss always unsize.
 
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்).
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...