???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 50 - இரண்டு ராஜாக்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   02 , 2017  01:20:50 IST


Andhimazhai Image

இளையராஜாவும் பாரதிராஜாவும் எனத் தொடங்கி எத்தனை பேட்டிகள் கதைகள் சுற்றிச் சுற்றிப் பின்னப்பட்ட நட்பின் கதை அது. சிந்தித்தால் உச்சத்தில் இருக்கும் இருவர் அது நடிகர்களாக இருந்தாலும் சரி நடிகைகள் இயக்குனர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும் தொழில்முறை பங்காளிகளாகவும் வெளி அறிவிக்காத பகையாளிகளாகவும் உதட்டின் புன்னகையோடு கடந்து விடுகிற பழுப்பு உலகம் தான் சினிமா.. இங்கே நிரந்தர பகையோ பங்கோ இருப்பதில்லை.அவற்றை எல்லாம் மீறி சில வெற்றிகரமான கூட்டணிகள் வெகுகாலம் தொடர்ந்து வருவது நிகழும். அதுவே அபூர்வாச்சர்யமாகப் பார்க்கப்படுகையில் இந்திய அளவில் இப்படி ஒரு இயக்குநர் மற்றும் இசை அமைப்பாளர் இருவரின் நட்பு அசாத்தியமானது தான்.

 


பாரதிராஜா படங்களில் இளையராஜா இணைநதியாகவே தன் எண்ணங்களை எல்லாம் செயல்படுத்தினார். சர்வ சுதந்திரத்தோடு ஒரு இசை அமைப்பாளன் நினைப்பதை எல்லாம் செயல்படுத்த வாய்ப்புக் கிட்டுவது அரிதிலும் அரிதல்லவா..? ஒரு படத்தை எடுத்துக் கொண்டால் பத்துப் பாடல்கள். இன்னொரு படத்தில் இரண்டே பாடல்கள்.ஒரு படத்தில் பாலசுப்ரமணியம் கிட்டத்தட்ட எல்லாப் பாடலையும் பாடினார் என்றால் அடுத்த படத்தில் அவருக்குத் தெரியாமலேயே வெளியீட்டு விழா நடக்குமளவுக்கு எண்ணியதெல்லாம் நிகழ்த்திப் பார்க்கும் இரண்டு ராஜாக்களாகவே வலம் வந்தார்கள்.


பாரதிராஜாவின் கண்களால் இளையராஜா படத்தைப் பார்த்தார்.இளையராஜாவின் மனசால் பாரதிராஜா இசைக்கான தேவையை வரைந்துகொண்டார். கிட்டத்தட்ட இருபத்து நாலு படங்கள் மொத்தம் எழுபதுக்கு மேற்பட்ட பல்வகைமைப் பாடல்கள் சொல்லிக் கொள்ளும் படியாக எனும் அளவீட்டைத் தாண்டி போற்றிப் பூக்கள் கொண்டு அர்ச்சிக்கத் தக்க அளவிலான பின்னணி இசை என்னதான் இல்லை இந்தக் கூட்டணியின் வெற்றிகரத்தினுள்..?

 


1977 முதல் 1992 வரையிலான முதல் பதினைந்து ஆண்டுகாலம் இத்தனையும் நடந்தது.அனேகமாக எழுபது சதவீதத்துக்கு மேற்பட்ட படங்கள் வெற்றிக்கோட்டை அனாயாசமாகத் தாண்டின,நாடோடித் தென்றல் வெளியானது 92இல். அத்தோடு பாரதிராஜா இளையராஜா கூட்டு உடைந்தது.கடந்த கால் நூற்றாண்டுகளாக இரண்டு ராஜாக்களின் படங்கள் வேறு வேறாகப் பகுபட்டுக் கிடந்தாலும் கூட முந்தைய பதினைந்து ஆண்டுகளில் உருவான அந்த எழுபது பாடல்கள் தற்போது பொன்வைர ஞாபகங்களாய் திரை இசை ரசனை வானின் சகல மேகங்களாகவும் கலைந்தும் பெருகியும் தொடர்கின்றன.

அத்தகைய மாண்புமிகு பாடல்களில் உள்ளுறையும் ஆச்சர்யங்கள் பல பாரதிராஜாவின் சரித்திரத்தில் வணிகரீதியில் நன்றாகப் போகாத வெகுசில படங்களில் நிழல்களும் உள்ளிடப்படுகிறது என்றாலும் எனக்கு அந்தப் படம்தான் மிகவும் பிடித்த பாரதிராஜா படம்.நிழல்கள் சுய இரக்கத்தின் காவியம். ஏதுமற்றவர்களின் கூடுகை. நிராகரிப்பின் வாசஸ்தலம். சோகச் சித்திரக் கதை. வான் பார்க்கும் அந்த ராஜசேகர் எத்துனை அழகு எனச் சொல்லாமல் இருக்க முடிவதில்லை. எழுத்தொன்றையும் அறியாத குழந்தையும் ஒரு ஒழுங்கான முகத்தை வரைவதற்கு உண்டான சாத்தியம் போலவொரு  நூலாம்படை நடனம் போன்ற சன்னமாயொரு காதல் நிழல்கள் படத்தின் உட்சொருகப்பட்ட எபிஸோடுகள் இன்றைக்கும் மனசைக் கனக்கச் செய்யும். "வானம் எனக்கொரு போதிமரம்..." குறித்து ஏற்கனவே பகிர்ந்தாயிற்று.


"பூங்கதவே தாழ்திறவாய்..." ஒரு க்ளாசிக்கல் ரொமான்ஸ் அயர்ச்சி. பாடிய குரல்கள், படமாக்கப்பட்ட விதம், எல்லாமுமாய்ச் சேர்த்துத் தேனில் தவறிவிழுந்த வெண்ணெய் போல் கலந்தபின்னும் தனிப்பதை ஆட்சேபிக்க வேண்டியதை மறந்து அதிசயிக்க வேண்டியதாயிற்று. "மடை திறந்து தாவும் நதியலை நான்..." சாகாவரப் பாடல். எங்கனம் "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..." பாடல் கண்ணதாசனுக்கு என்று எழுதிவைக்கப் பட்டதோ அவ்வண்ணமே ராஜாவுக்கான பாடலாகப் பலகோடிப் பேர் பலகோடி முறை கண்கள் திறந்திருப்பதை மறந்திருப்பதறியாமல் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இருக்கிறார்கள். இருப்பார்கள். மடை திறந்து தாவும் நதியலைதான் பாடலை பாரதிராஜா படமாக்கிய விதம் அட்டகாசம். முழுவதுமாகப் பின்னால் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான பலவீனமும் உற்சாகமும் கலந்த மேலோட்டமான நகர்தல்களைப் பாடல் முழுவதற்கும் பயன்படுத்தி இருப்பார். முகங்கள் முகங்கள் சந்திரசேகர் வாய்ப்புக்காக பாடிக் காட்டும் போது அந்தப் பாடலை ரசிக்கும் பெயரற்ற முகங்களின் க்ளோஸ் அப்பயனுறுத்தல்கள் வாழ்வின் அபத்தத்தை எதிர்பார்த்தலின் விழியேந்தல்களாக வகைப்படுத்தி நகர்ந்தேறும். நிழல்கள் பாரதிராஜாவின் வெரைட்டி, அலைவுறு மனம், எதிலும் போதாமை, உச்சபட்சப் படைப்புத்திறனைப் பிரியமாக மாற்றுதல் ஆகியவற்றுக்கெல்லாம் முதல்தர சாட்சியம்.

பாரதிராஜா மற்றுமொரு இயக்குனர் என்று சொல்லவே இயலாது.அவரது முதல் படமான பதினாறு வயதினிலே இந்தியாவைத் தமிழ்த்திரை நோக்கித் திரும்பிப் பார்க்கச் செய்தது.பெருவாரி மக்களின் ஏற்பும் கலையும் ஒருங்கிணைகிற புள்ளி தான் கலையின் ஆக முக்கியமான நகர்தல் என்ற வகையில் முந்தைய பல இயக்குனர்களை விடவும் மிக முக்கியமான படங்களைப் படைத்தவர் பாரதிராஜா.அவருடைய பதினாறு வயதினிலே படம் உருவாக்கிய அன்பின் மத்யம பிம்பம் சோப்புக்குமிழி போலக் கலைந்துவிடாமல் கற்சிலையை விட உறுதியானதாகக் காலம் கடந்து நிரந்தரிப்பது அவருடைய திறனுக்குச் சான்று.


பாடல்களின் இயக்குனர் பாரதிராஜா.பாடல்களை முந்தைய தலைமுறை இயக்குனர்கள் தனியாவர்த்தனமாய் உருவாக்கிப் படங்களின் நடுநடுவே ஒட்ட வைத்தார்கள் அல்லது பாடல்களுக்காகவே கதையைத் திருத்தி வளைத்து நெளித்துப் பட்டி பார்த்தார்கள்.இந்த இரண்டையும் மிகத் தைரியமாக மறுதலித்த முதல் இயக்குனர் என்று பாரதிராஜாவையும் அடுத்த சிலராக மகேந்திரன் பாலுமகேந்திரா ஆகியோர்களையும் சொல்ல முடியும்.ஏக காலம் என்றாலும் கூடப் 16 வயதினிலே தான் முதல் வெளிச்சம்.சிறுபொறி கொண்டு பெருவனம் எரித்த இரண்டு ராஜாக்கள் இளையராஜா மற்றும் பாரதிராஜா.


செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா கோரஸ் எனப்படுகிற உடனொலிகளை இசையிடை மௌனங்களை எல்லாம் மனனத்திற்குள் ஏற்றி அழகுபார்த்த முதற்பாடல்.அன்னக்கிளியில் கத்தி சுழற்றிய இளையராஜா 16 வயதினிலே படத்தில் உச்சபட்சம் தொட்டார்.செந்தூரப்பூவே செந்தூரப்பூவே பாடல் அத்யந்தத்தின் எல்லா பூக்களையும் ஒருங்கே மலர்த்தித் தந்தது.முன்பு நிகழ்ந்தே இராத புத்தம் புதிய ஒன்றெனவே இந்தப் பாடல் நிகழ்ந்தது.இன்னும் சொல்வதானால் ஒரு பாடல் இத்தனை தூரம் மனங்கொத்துமா என்ற ஆச்சர்யத்துடனேயே இதனை எல்லோரும் விரும்பினார்கள்.அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த அனைவருக்கும் பொதுப்ரியமாகவே செந்தூரப்பூவே பாடல் மாறிற்று.இத்தனைக்கும் செந்தூரப் பூ என்ற ஒன்று இல்லாமலர்.எழுதிய கங்கை அமரனுக்கே வெளிச்சம் எந்தத் தோட்டத்தில் பூக்கும் என்ற ரகசியமிதே படத்தின் மஞ்சக்குளிச்சி அள்ளி முடிச்சி பாடலாகட்டும் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலாகட்டும் படத்தின் செல்வாக்காலும் செந்தூரப்பூவே பாடலின் பெருவெளிச்சத்தின் உபநிழலினூடேயே தப்பிப் பிழைத்தன.

          வாலிபமே வா வா படத்தில் இடம்பெற்ற அபூர்வமான குரலிணைத்தலில் ஜேசுதாஸ் மற்றும் ஷைலஜா இணைந்து பாடிய பொன்வானப் பூங்காவில் தேரோடுது பாடலை எத்தனை பேருக்கு நினைவிருக்கும்..?.மிதமான கிறக்கத்தோடு விரிந்து செல்லும் பாடல்.அட்டகாசமான உற்சாகத்தை மனதில் பெயர்க்கவல்லது.இந்தப் படம் வெற்றி பெறாததால் இந்தப் பாடலும் அதனோடு சேர்ந்து பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை போலும்...இந்தப் பாடலின் இணைப்பிசைக் கோர்வையில் ஒரு குழுவொலி இடம்பெறும்.தந்தானத் தானா என்று இன்றும் சலிக்காத ரசனைப்பெருக்கம் இந்தப் பாடல்.               

அழகே உன்னைக் கொஞ்சம் கண்கள் எழுதவா எனத் தொடங்கும் பாடல் முன்னரெப்போதும் நிகழாத ஒரு அற்புதத்தைப் போலவே உருவெடுத்தது.பி.சுசீலாவுடன் மலேஷியா உருகிப் பாடிய இந்தப் பாடலின் பின்னணி இசையாகட்டும் புலமைப் பித்தனின் வரிகளாகட்டும் மெல்லிய போதையின் நனவுமீட்சி போன்றதொரு உடலுருவும் அனுபவமாகவே மொத்தப் பாடலும் தாலாட்டும்.விடவும் விடாது கடந்தும் செல்லாது போலவொரு துன்ப இன்பம் இந்தப் பாட்டின் சாரம்.மறக்கவே முடியாத பாடல் இது.

கிழக்கே போகும் ரயில் படம் பாரதிராஜா பார்த்துப் பார்த்துப் பண்ணிய ஒரே படம்.முதல் படம் பெரிதாக வெற்றி பெற்றால் அடுத்தது உட்கார்ந்துவிடும் என்று சொல்லப்பட்டது.திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டதில் வெறியாகி பாரு என்ன பண்றேன்னு எனக் கிளம்பியவர் எந்த விதத்திலும் பதினாறு வயதினிலேவுடன் ஒப்பிடப் படுவதையும் தகர்க்க வேண்டும் மேலும் குறையாத ஓட்டமும் வெற்றியும் பெற்றே தீர வேண்டும் என்று உருவாக்கினார்.


எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா இந்தப் படத்தில் அறிமுகமானார்.வாழ்ந்து வந்த நவ வாழ்க்கையைச் சட்டென்று உதறி கிராமத்தின் அடையாளமான அரிதாரமற்ற நிசதேவதையாகவே வலம் வந்தார்.பரத நாட்டிய அபினயங்கள் புரிவது போலெல்லாம் பாடல்களில் தோன்றினாலும் படத்தின் ஆன்மா அதன் கதையின் துல்லியத்தில் இருந்ததால் தப்பியது.பெரிதாகவே வென்றது.
          

மாஞ்சோலைக் கிளிதானோ மான் தானோ வேப்பந்தோப்புக்குயிலும் நீ தானோ இவள் ஆவாரம் பூதானோ நடை தேர்தானோ..இந்தப் பல்லவி மூச்சுவிடாமல் பாட வேண்டியதாயிற்று. ஜெயச்சந்திரனின் பூர்ணம் ததும்பும் குரலும் சொற்களை உச்சரிப்பதில் கூடுதலாய்க் கடைப்பிடிக்கப் பட்ட தீர்க்கமும் இந்தப் பாடலைப் பெருவெற்றிப் பாடலாக்கிற்று. இன்றும் உற்று நோக்கினால் இந்தப் பாடலின் ஒரு சொல்லைக் கூட வழக்கத்தின் தேய்மானத்தோடு உச்சரிக்காமல் அழுத்தமும் திருத்தமுமாகவே ஒன்றை மற்றொன்றோடு பின்னிப் பின்னித் தோரணமாக்கிப் பாடி இருப்பதைக் கண்ணுறலாம். இன்னும் ஒரு பாடலைக் கூட இதே போல வகைமைப் படுத்த முடியாது.

மேற்சொன்ன பாடலுக்கு முழு எதிர்ப்பதமாகவே கோவில் மணி ஓசைதன்னைக் கேட்டதாரோ பாடல் உருவெடுத்திருக்கும்.தன் உள் நாக்கிற்கே தெரியாத வண்ணம் அத்தனை சொற்களையும் ஒரு ரகசிய மென்மையோடு அணுகி நகர்த்தி இருப்பார் மலேஷியா வாசுதேவன். வரவழைக்கப் பட்ட மென்மை என்பது நிசம்தான் என்றாலும் உருவாக்கப் பட்ட ஒன்று தான் இப்பாடல் என்றாலும் மழைக்கு நடுவே ஓங்கி அடிக்கும் சொற்ப கணத்தின் பொன்வெயில் தாரைகளைப் போலவே வாசுவின் ஒப்பிலாக் குரல் இப்பாடலை வனவனாந்திரங்களில் அலைந்து ஊர் திரும்புகிற சஞ்சாரியின் வீடடையும் தருணத்தைப் போல நேர்த்தி இருக்கும்.


பூவரசம்பூ பூத்தாச்சி பாடல் அந்த வருடத்தின் அதிரிபுதிரி.இரண்டு முறை கேட்பதற்கு நடுவில் சிலபல முறைகள் கேட்குமளவுக்கு அலுக்கவும் இல்லை சலிக்கவுமில்லை.ஜானகியின் ஜாங்கிரித் தன்மை ஓங்கிக் குழைகிற இந்தப் பாடல் இன்றும் தளராத வெற்றிகரத்தின் உதாரணம்.


திருப்பித் தர முடியாத அன்பளிப்பின் பெயர் காதலென்றும் சொல்லலாம்தானே? ஒரு ராஜா இன்னொரு ராஜா மீது உதிர்த்த காதலின் சான்று சிகப்பு ரோஜாக்கள். இந்தப் படத்தின் பின்னணி இசை இளையராஜாவின் ஆகச் சிறந்த கோர்வைகளில் ஒன்று.திறந்த வகை சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களின் திரைக்கதை அமைத்தலுக்கு ஒரு முக்கிய உதாரணமாக இன்றும் திகழ்வது இதன் திரைக்கதை. மலேஷியா வாசுதேவனின் சம்பூர்ணப் பாடல்.. "இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது..."

 

ஒரு கோரஸுக்கு உண்டான ஸ்தாயியிலேயே பாடலின் முழுத்தொனியையும் செலுத்தி இருப்பார் மலேஷியா. எந்த இடத்திலும் தன் குரலின் கிராமிய வழமை தென்படாமல் பார்த்துக் கொண்டிருப்பார்.சுருங்கச் சொன்னால் தன் சொந்தக் குரலின் கஸின் குரலிலேயே பாடல் முழுவதும் பாடியிருப்பார். நம்பிக்கையற்ற எதிர்வாதிகள்,


"காதல் ராஜாங்கப் பறவை..
தேடும் ஆனந்த உறவை..
சொர்க்கம் என் கண்ணிலே..." 


இந்த மூன்று வரிகளை மட்டும் தன் சொந்தக் குரலில் பாடிச் சரிபார்த்துக் கொள்ளவார்களாக.

தொகுத்துப் பேசவிருப்பதைப் பகுத்துச் சொல்லுவதானால் பாரதிராஜாவின் பற்பலச் சாகாவரப் பாடல்களைப் பாடியவர் மலேஷியா வாசுதேவன் என்பதை நினைவில் நிறுத்துக. இந்தக் கட்டுரையில் அடிக்கடி ஸ்வாமி பேருக்கு ஒன்று (இளையராஜா) இல்லாவிட்டால் வாசுங்கற பேருக்கு ஒன்று என அர்ச்சனைகள் மாறி மாறி ஒலிக்கும். 


கமலின் குரலில் ஜானகியோடு சேர்ந்து ஒரு ஆசீர்வாதத்துக்கு ஒப்பான பாடல் "நினைவோ ஒரு பறவை..."  கதைப்படி நாயகனாகவும் வில்லனாகவும் இருவேறு பாத்திரங்களை ஏற்கிற படங்களிலும் தனக்கெனக் கமல் சில பாடல்களைப் பாடி இருக்கிறார். உதாரணம் - விருமாண்டி, ஆளவந்தான். கமலின் அதிதீவிர ரசிகர்கள் ஒரு பேப்பரை இரண்டாக மடித்து ஒரு பக்கம் கமல் நாயகப் பாடல்களை வரிசைப்படுத்தி வந்தால் இன்னொரு பக்கம் கமலவில்லப் பாடல்கள் வெகு சொற்பம் எனினும் அங்குதான் இந்தப் பாடல் இடம்பிடிக்கும். 

ஜெயிலில் கமல், படத்தின் பூர்த்தியில் தானும் தன் காதலுமாய்ச் சுவரில் எழுத முயன்றுகொண்டிருக்கும்போது மெல்ல உறைந்து அடங்கும் பின்னணி இசை ஒரு ராஜாவால் மட்டுமே இன்னொரு ராஜாவின் நெற்றியில் பதிப்பிக்கக் கூடிய முத்தம் என்பது அறிக.
சத்தியம் செய்து சொல்லுகிறேன். டிக்டிக்டிக் அநிருத் காலத்தில் வெளிவந்திருக்க வேண்டிய படம். ஜி.வி.ப்ரகாஷ்குமார் போன்ற ஒரு ஹீரோ சர்வசத்தியமாக ஏற்றிருக்க முடியாத ஒரு பாத்திரம். முப்பது வருடம் முன்கூட்டிச் சிந்தித்ததாலேயே தோல்வி அடைந்தது. உண்மையில் ஒரு சர்வ ஒழுங்குடனான திரைக்கதை மற்றும் படமாக்கலை நிராகரித்த பாவத்துக்காய் "அஞ்சாதவன் அடங்காதவன்" போன்ற படங்களுக்குத் தன் பின்னங்கழுத்தைக் கடிபடக் கொடுக்கிறான் தமிழன்.

மொழுமொழு என்று தொப்பி வைத்துக் கொண்டு ஒரு மொட்டை வில்லன் வருவார். அவர் பெயர் ஓபராய். அவருக்கு ஒரு இசை. ராஜகரிசனம். இன்னும் ஒரு முழுமையான ஆல்பம் இந்தப் படம். பெண்களுக்கான இட ஒதுக்கீடு எண்பது சதவிகிதங்களுக்கு மேல் வழங்க நேர்ந்த திரைப்படம் இது.


சற்றே பெரிய உதடுகளுடனான, இடமாற்றம் செய்து வைக்கப்பட்டதைப் போன்ற கண்களுடனான, வேறார்க்கும் வாய்க்காத புன்னகையுடனான, சற்றே காலத்தின் பழுப்பேறிய தந்த நிறத்திலான, கனா என்று பொருள்படக் கூடிய சொப்னா மிக லேசான நடனத்துடன் கூடிய க்ளப் டான்ஸ் வகைமைப் பாடல், "நேற்று இந்த நேரம்.. ஆற்றங்கரை ஓரம்..  உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு தென்றல் செய்த ஜாலங்கள்.. ஆஹா..." என்று தன் ஒப்பிட முடியாத குரலால் இந்தப் பாடலைப் பாடிய லதா ரஜினிகாந்த், இதற்கப்பால் இதே ராஜாவின் இசையில் அன்புள்ள ரஜினிகாந்த் மற்றும் "வள்ளி" திரைப்படங்களில் மீண்டும் சில பாடல்களைப் பாடினார் என்பது கூடுதல் தகவல். அதிகமாய் ஒரு வார்த்தை கூடத் தேவையில்லை. கனவில் படரும் கொடி போன்றதிந்தப் பாடல். கேட்கக் கேட்க நீண்டு கொண்டே செல்லும் இரவு ஒரு நெகிழி நாகம்.

"படுக்கையில் பாம்பு நெளியுது..." என்கிற வரி எழுதிய, இசைத்த, யோசித்த, படமெடுத்த எல்லோருக்கும் கன்னமிரண்டையும் கிள்ளிக் கோடி முத்தம் தரலாம்தானே. இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் அதிசயம் குறையாத விழிரசம் ததும்பும் அதிரசம். காட்சி அனுபவம். அப்படி ஒரு மாதவி பிறகெப்படி ஒரு கமல் என்றாற்போல் நரகத்திலாழ்ந்து விரகத்தில் துடித்திருப்பார் உலகநாயகன். கதைப்படி அவர் ஒரு புகைப்படக் கலைஞர். இரண்டிரண்டு படங்களுக்கு நடுவே தன் ஏக்கத்தை பிரதிஷ்டை பண்ண கமலின் பார்வையால் மாத்திரமே சாத்தியம்.

கேட்லாக் வகைப் பாடல்களில் 75 முதல் 90 வரை மிக முக்கியமான பல பாடல்கள் உருவாக்கப்பட்டன. தொண்ணூறுகளுக்குப் பிற்பாடு வெறும் குழுப்பாடல்களாக எஞ்சிய இதே வகைமையின் நீர்த்த வேறொரு வகை செல்வாக்குப் பெற்றது. இவற்றில் இந்தப் பாடலுக்கு முக்கிய இடம் உண்டு. நின்று நிதானித்து ஒலிக்கக் கூடிய இதன் இசைக்கோர்வை நினைக்கையிலெல்லாம் மனத்தில் பெருகி ஒலிக்க வல்லது.


ஒரு கைதியின் டைரி உன்னி மேனனையும், உமா ரமணனையும் சேர்ந்து ஒலிக்கச் செய்து ஒரு பாடலைக் கற்பனை செய்த இடத்திலேயே தனித்துவத்தின் வெற்றி தொடங்குகிறது. பழக்கப்பட்ட நகரத்துக்குத் தன் ஒவ்வொரு வருகையின்போதும் புதிய வித்தை ஒன்றைச் செய்து காண்பிக்க நேர்கிற பெருநிலப் புகழ் மந்திரவாதி போலத்தான் பாரதி பாடல்களை அணுகினார் இளையவர். இதே படத்தின் இன்னுமொரு பாடலான "ஏபிஸி.. நீ வாசி"யும் ஹிட்தான் என்றாலும் முன்னது க்ளாஸிக்.

"என் உயிர்த் தோழன்" இளையராஜா என்றுதான் டைட்டில் போடுவார் இயக்குநர் இமயம். தமிழில் அபூர்வமான அரசியல் படங்களின் வரிசையில் பாரதிராஜாவின் என் உயிர்த் தோழனுக்கு நிச்சயம் இடம் உண்டு. கண்கட்டி விளையாடும் பிள்ளைவனக் கூச்சல் ஒன்றை எட்ட இருந்து பார்த்தபடி கடக்க நேர்கிற ஒருவன் கிடைத்த மட்டிலும் சேகரித்துக் கொள்ள முனைகிற இளமையின் உற்சாக ஆரவாரத்தை ஒரு ஒழுங்கான மெட்டின் உடலுக்குள் புகுத்தியிருப்பார் ராஜா. தன் ஏதோ ஒரு ஜென்மமாய்ச் சட்டெனக் கண்விழித்துத் தன் உயிர்த்திருத்தலை அறிவிக்கும் இந்தப் பாடல்.


இளையராஜா - பாரதிராஜா இருவரின் நட்பு பற்றிக் கொஞ்சூண்டாவது பேசித்தானே ஆகவேண்டும்? உப்புக் கரிக்கும்போதெல்லாம் ஞாபகத்தில் வந்தமரும் தூர உயர இனிப்பைப் போன்றதுதான் இந்த இரண்டு பேரின் நட்பும். முன்பே சொன்னாற்போல் முற்றிலும் முன்னர் முயலாத புத்தம் புதியதுகளை மாத்திரம் தந்தும் பெற்றும் கொண்டார்கள் இவர்கள் என்பதன் இன்னுமொரு சாட்சியம்  " ஹே.. ராசாத்தி..." 
முன்பே சொன்னாற்போல் அதேஷியா வாசுதேவன்.


கொஞ்சம் கவனியுங்களேன். கருப்பும் வெள்ளையும் கலந்தாலும் தனித்துத்தானே தெரியும்? கடுகையும் அரிசியையும் சேர்க்கலாம், கலக்க முடியுமா? அப்படிச் சேர்த்தால் ஏற்புக்காகாத மூடியும் ஜாடியுமாய்த் தோற்ற விகாரம் காண நேரிடும் அல்லவா? மீறிச் சேர்த்தால், மொத்தமாய்ப் பொட்டலம் கட்டி மறைபொருளாக்கித் தனிக்கச் செய்வது தொலைத்தலுக்கு நிகராகாதா? வேறொரு அத்தியாயத்தில், "இது மாலை நேரத்து மயக்கம்..." எனும் பாடலில் நாம் கண்ணுற்ற ஒரு விடயம் சந்தோஷமும், அசௌகரியமும் இருவேறு குரல்களாய் ஒரே பாடலுக்கு பாய்ச்சப்படுவது. அதைவிட உத்தமம், "ஏ ராசாத்தி..." எனும் இப்பாடல். ஏனெனில் இந்தப் பாடல்வரிகள் ஒரு ரயிலைப் போல என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒத்த திசையில் விரையும் அதன் வேகமாகப் பாடிய குரலைக் கொள்ளுங்கள். இசையில்லாமல் பாடும்போதெல்லாம் நிறுத்துவிசை இல்லாமல் விரைந்தோடிச் சென்று பிறழ்ந்து சிதைவதை ஒத்த ஒவ்வாமையை நேர்த்தும் அதே பாடல், இசையெனும் தண்டவாளத்தில் ஒரு ஒழுங்கான பயணமாக மலர்வதி என்னவென்று வியப்பது? குரலின் உற்சாகமும், இசையின் மென்சோகமும் நன்றாக உணர்த்தப்பட்டபோதும் இருவேறு முட்களைப் போல நிரடாமல் ஒரு குழந்தையுன் பிஞ்சுக்கரப் பிடிமானம் போல் மாறியிருப்பதை இசைப்பூர்வ அதிசயம் என்றால் தகும். இப்போது ஒரு முறை இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு வாருங்கள்.

தெரிந்தவர்களை நலம் விசாரிப்பதைப் போல ஒரு குடையோடு எதிர்ப்படும் தோற்றங்களிலெல்லாம் ரேகா டீச்சரை எதிர்பார்த்து ஏமாறும் பல லட்சக் கணக்கானவர்களில் நானும் ஒருவன். இந்தியத் திரை வானில் கடலும் கடல் சார்ந்த பன்மொழிப் பல படங்கள் மலர்ந்திருக்கின்றன. 


ஒரு விருப்ப தெய்வத்தின் வாழுமிடம் போலத் தனித்து ஒளிரக் கூடிய வெகு சில அற்புதங்களில் ஒன்று கடலோரக் கவிதைகள். கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தக்கத் தன் சொந்தப் பிம்பத்தின் உலாவலாக மிகத் தைரியமாக சத்தியராசரால் முன்வைக்கக் கூடிய தகுதி வாய்ந்த கடலோரக் கவிதை நீர்மையின் பேரழகு. இசைக்குள் நீர் தெறிப்பதை உணரக் கேட்கும் மனம் நீராய்க் கசிந்து, பிரிந்து, பெருகி, ஒழுகி, களைத்துப் பின் குறுகி, உலர்வது வரை ஒரு பாடலில் சாத்தியம் என்றால், "கொடியிலே.. மல்லியப்பூ.. மணக்குதே மானே..."...

என் அரசவைப் பாடகர் ஜெயச்சந்திரன் என்பதை ஏற்கனவே பலமுறை எச்சரித்திருக்கிறேன். எல்லாப் பாடகர்களையும் பிடிக்கும் என்றாலும், என் இதயம் ஜெயச்சந்திரனுக்காக மாத்திரம் சேர்ந்து துடிக்கும்.

மிக லேசாகச் சாய்ந்தொலிக்கக் கூடிய பாடல்கள் சோக உருக் கொண்டிருந்தாலும் சரி, சந்தோஷத்தின் சாட்சியமானாலும் சரி, சன்னமான கிறக்கத்தை நேர்த்த வல்லவை. அந்த வகையில் இந்தப் பாடல் பயின்று பழகிக் கொண்டிருக்கும் புதிய சைக்கிள் ஓட்டியின் உடன் பயணிக்கிற பின் கேரியரில் அமர்ந்திருப்பவர் உடலிலும், மனதிலும் ஒருங்கே பெருகும் மிக லேசான ஊசலாட்டத்தை எப்போது கேட்டாலும் ஏற்படுத்தித் தரும். பல்லவியும், சரணங்களும் தனக்குள்ளாக முற்றிலும் சுருளும் நாடோடித் தன்மை கொண்ட இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் பாரதிராஜாவின் பெருந்திறனறியச் சிறுபொறி. கண்டிக்கத் தகுந்த  மலேசியா வாசுதேவன் , "அடி ஆத்தாடி.." எனத் தொடங்கும் ஒரு சோகப் பாடலை லாவகமாகப் பாடி மனசைத் திருடுவார். ஜாக்ரதை...


நிவாஸ் இயக்கிய கல்லுக்குள் ஈரம் படத்தில் நாயகனாக பாரதிராஜா நடித்தார். செமி கேமியோ கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் அப்படி பெரிய வெற்றிப் படம் எனச் சொல்வதற்கில்லை என்றபோதிலும் தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே பாடல் பரவலான கவனம் ஈர்த்தது. சிறுபொன்மணி அசையும் பாடல் ஒரு கல்ட் க்ளாஸிக் ஆக உருவானது.


அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் தமிழ்க் காதல் படங்களில் சேதி சொல்வதில் முக்கிய இடம் பிடித்தது. இளையராஜா தனது ஈடுபாட்டையும் அன்பையும் பாடல்களுக்குள் பொதிந்து தந்தார். பாரதிராஜாவுக்குப் போகத் தான் மீதி என்று சொல்லாமற் சொல்ல முயன்ற படங்களில் ஒன்று அலைகள் ஓய்வதில்லை. ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடல் ரேடியோ ஹிட்.தரிசனம் கிடைக்காதா காதல் ஓவியம் புத்தம் புதுக்காலை விழியில் விழுந்து ஆகிய பாடல்களும் அந்த வருடத்தின் இசைமுகவரியாய் இந்தப் படத்தை முன் நிறுத்தின. அலைகள் ஓய்வதில்லை படத்தின் ஜாலிப் பாடல் வாடி என் கப்பக்கிழங்கே கண்டனங்களோடு ரசிக்கப் பட்டது. இன்றும் ரசிப்புக்குரியதாகவே தொடர்கிறது.


விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே பாடல் ஒரு இசை அற்புதம்.சினிமாப் பாடலுக்கு என முன்வைக்கப் படும் எந்த நிர்ப்பந்தத்தையும் பூர்த்தி செய்யாமல் தன் இஷ்டத்துக்கு மலர்ந்த வனமலரைப் போல இந்தப் பாடல் ஓங்கி ஒலித்தது. பாரதிராஜாவின் மேகிங்குக்காகவே பாடல்கள் பலமுறை பார்க்கப்பட்டன. இளையராஜா தன் சொந்தக் குரலில் அப்போது தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பாடல்களை வழங்கத் தொடங்கி இருந்த நேரம். இந்தப் பாடலுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு பாடல்களுக்கான புதிய திசைத் திறப்பைத் தொடங்கிற்று.
   

கிட்டத் தட்ட காதல் ஓவியம் ஆல்பம் அலைகள் ஓய்வதில்லை படத்தின் அடுத்த அத்தியாயம் போலவே இசையுரு கொண்டதில் வியப்பில்லை.பாரதிராஜா படங்களின் பாடல்களிலேயே உன்னதமான பாரம்பரிய இசை ஒழுங்கோடு பார்த்துப் பார்த்து உருவெடுத்த பாடல்கள் இடம்பெற்ற படம் காதல் ஓவியம்.இந்தப் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆளுமை பேருருக் கொண்டது.வைரமுத்துவின் ஆவர்த்தனமும் பாடல்களெங்கும் வழிந்தது.வெள்ளிச்சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் நேரமிது பாடல் ஆன்மாவை நீவி அதன் முடிச்சுக்களை நேர்படுத்திற்று.


சங்கீத ஜாதிமுல்லை பாடலை இன்றைக்குக் கேட்டாலும் சிலிர்க்கிறது.தூரத்தில் ஏதோவொரு கண்ணாடி மரத்தின் கனி உடைந்து சிதறுகிறது.கேட்கக் கேட்கத் தீராத பேரின்பம் இந்தப் பாடல்.எஸ்.பிபாலசுப்ரமணியத்தின் ஐஸ்க்ரீம் சாக்லேட் குரலின் ஆச்சர்யங்களில் ஒன்று.


சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றிப் பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே வா வா ஆ
திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளினீர் வழியுமோ அது பிரிவதைத் தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விழிகளில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
திரைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும் இனி எந்தம் மயில் வரும்
ஞாபக வேதனை தீருமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆகிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராக தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
எந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராக தீபமே...

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னல் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் என்றும் உந்தன் பிம்பம் (2)
சிந்தும் சந்தன் உந்தன் சொந்தம்
தத்திசெல்லை முத்துச் சிற்பம் கண்ணுக்குள்லே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டுகொண்டும் இந்த வேஷமென்ன
ராக தீபமே...


ஒரு அத்தியாயத்தினுள் இரண்டு ராஜாக்களை அடக்கிவிட முடியாதல்லவா...பிறவற்றை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...