???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் – 59 – சக்கரவர்த்தி எம்ஜி.ஆர். 1 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   24 , 2017  03:19:32 IST


Andhimazhai Image
எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டின் தலைவர். என் தந்தையின் ஆசான் எம்ஜி.ஆர். எங்கள் பால்ய காலத்திலிருந்தே எம்ஜி.ஆரை அவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும் என்பதில் அப்பா உறுதியாக இருந்தார். அப்போதெல்லாம் நடிகர்களை வீடுகளில் ஒருமையில்தான் விளித்துச் சுட்டுவார்கள். எம்ஜி.ஆர் தமிழ் நாட்டின் முதல்வர் ஆகும் முன் எண்ணற்ற படங்களில் நடித்த முதலிடத்தில் இருந்த நடிகர் என்பது வியப்புக்குரிய செய்தியாகவே இருந்தது. என் அப்பாவிடம் சதா எம்ஜி.ஆர் பற்றிய கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பேன். அவற்றில் பெரும்பாலானவை பொருளற்ற கேள்விகளாகவே இருக்கும். எம்.ஜி.ஆர் ஏன் மெட்ராஸிலேயே இருக்கிறார்..? ஏன் மதுரையில் இருப்பதே இல்லை என்றாற் போல என் கேள்விகள் அத்தனையையும் பொறுமையாகக் கையாண்ட அப்பா எம்ஜி.ஆர் எனும் பிம்பத்தை ப்ரியமும் மரியாதையுமாக எனக்குள் குழைத்துக் கட்டினார்.
 
 
 
சிவாஜி மீதான ரைவல்ரி இருந்து தானே தீரும். அப்பா அதில் வித்யாசம். சிவாஜியின் நடிப்பை பொதுவாகப் புகழ்சொற்களால் கடந்து விடுவார். அதுவும் அப்போதைய நிகழ்காலத்தில் சிவாஜி இன்னமும் நடித்துக் கொண்டிருந்த காலம் என்பதால் அவரது புதிய படங்களைப் பற்றியெல்லாம் எதுவும் பெரிதாய்ப் பேச மாட்டார். இதெல்லாம் எண்பத்து ஒன்று எண்பத்து இரண்டு மற்றும் எண்பத்து மூன்று ஆகிய ஆண்டுகளில். அதாவது என் நாலு ஐந்து ஆறு வயதுகளின் ஞாபகங்கள். என் அந்த வயது குறித்து எனக்கு நினைவில் இருக்கிற ஞாபகங்கள் அனேகமாக என் ஞாபகவாழ்வின் ஆதிச்சுனைகளாக ஊற்றெடுக்க வல்லவை. எம்ஜி.ஆர் எனும் ஒரு மனிதரைச் சுற்றிச் சுழல்வது தற்செயலல்ல. என் தந்தையிடமிருந்து எனக்கு மேலெழுதித் தரப்பட்ட சந்ததிப் ப்ரியங்கள் அவை.
 
 
அந்தக் காலம் திரைப்படங்களாலும் பாடல்களாலும் நிரம்பித் தளும்பிற்று. நான் பிறந்தது சம்மந்தமூர்த்தித் தெரு. அதனருகே அப்போது சாந்தி எனும் ஒரு தியேட்டர் உண்டு. அதிலிருந்து கிளைக்கிற மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் தற்போது சென்னை சில்க்ஸ் என்று எழுந்திருக்கிற இடத்தில் இந்தியாவின் மாபெரும் தங்கம் என்றொரு தியேட்டர் இருந்தது. ந்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் இருக்கிற தெருவில் இன்னமும் அசைக்க முடியாமல் சென்ட்ரல் தியேட்டர் நடைபோடுகிறது. இப்போது அண்ணாமலை என்றாகி இருக்கிற தியேட்டருக்கு பூர்வாஸ்ரமப் பேர் கல்பனா டாக்கீஸ். அதிலிருந்து நாலைந்து இலக்கங்கள் முந்தைய விலாசத்தில் ஒரு ஸ்டோர் வீட்டில் குடியிருந்தோம். அங்கேதான் ஸாராகிய நான் தவழ்நிலையிலிருந்து எழுந்து தத்தி நடை பழகியதெல்லாம் நிகழ்ந்தது.
 
 
 
அந்த வீட்டிலிருந்து வெளியேறினால் எதிர்ப்புறம் பெரிய மதில் சுவர் இருக்கும். சிம்மக்கல் மெயின் ரோடு நோக்கிச் செல்லும் அதில் அரசியல் கட்சியினரின் சின்னங்கள் தலைவர்களின் படங்கள் என வரையப்படும். அடிக்கடி என்றில்லாவிட்டாலும் நாலைந்து மாதங்களுக்கு ஒரு முறை அவற்றில் மாற்றம் ஏற்படும். அவற்றை வரையும் போது ஓவியத்தூரிகையின் கோடுகள் நாடறிந்த தலைவர்களின் முகங்களாக மாறுவதை அங்கேயே கால்கடுக்க நின்று ஆறேழு சுள்ளான் குட்டியர்கள் வேடிக்கை பார்ப்போம். அஃப்கோர்ஸ் என் பாட்டி மேற்பார்வையில்தான் நானும் பார்ப்பேன். அப்படி ஒரு தினம் முழுவதும் வரையப்பட்டு சாயந்திரத்தோடு நிறுத்தப்பட்டு அடுத்த தினம் பகலில் பூர்த்தியான பிரம்மாண்டமான நடிகர் திலகம் சிவாஜியின் ஓவியம் ஒன்றின் இருவேறு நிலைகள் இன்னமும் மனதுக்குள் ஆழமாய்ப் பதியனாகி இருப்பதும் தன்னிஷ்டத்துக்குக் கனவுகளில் வந்து போவதும் நடக்கிறது.
 
 
எதாவது காரணத்துக்காக வீதிகளில் குழாய் கட்டிப் பாடல்கள் ஒலிபரப்பப் படுவது வழக்கம். முன்பிருந்த சம்மந்தமூர்த்தித் தெருவாகட்டும், அடுத்த கல்பனா டாக்கீஸ் வீடாகட்டும் பாடல்களுக்குப் பஞ்சமே இல்லை. என் அடுத்த காலத் தலைவரான ரஜ்ஜினிகாந்தப் பாடல்களும் எம்ஜி.ஆரின் பாடல்களும், சிவாஜி இன்னபிறரின் பாடல்களும் சமபந்திசாங்க்ஸாகவே தெருக்குழாய்களில் வழிந்தோடிக் காதுட்புகுந்து இதயம் நிறைந்தது தான் முதல் இன்னிங்க்ஸ்.
 
 
எம்ஜி.ஆர் காலமான போது எனக்குப் பதினோராவது வயது. மரணம் எல்லாருக்குமானது என்பதை நம்பவே முடியாமல் நம்ப ஆரம்பித்தது அப்போதுதான். அருகாமையில் இல்லையே தவிர எங்கள் வீட்டுக்கு நெருக்கமான ஒருவரது மரணமாகவே தலைவரின் மரணத்தை உணர்ந்தோம். அப்பா அடிக்கடிக் கண் கலங்கி அழுவதைப் பார்த்து நானும் அக்காவும் சில சமயங்களில் அழுதிருக்கிறோம். பாட்டிக்கு பொத்துக் கொண்டு வரும். என்னத்துக்கு அழணும்,.? கடங்காரன் குழந்தைகளையும் எதுக்கு அழவைக்கறான் என்று அம்மாவிடம் போட்டுக் கொடுப்பாள். பாட்டிக்குக் காது கேட்காது.சப்தமாக சொன்னால் ஒரளவுக்குப் புரிந்து கொண்டு அது சரி என்பாளே தவிர எம்ஜி.ஆரை எதிர்த்து ஒரு வாசகத்தையும் சொல்லமாட்டாள்.
 
 
 
எம்ஜி.ஆரின் திரைப்படங்கள் என் பதின்ம வயதுகளிலிருந்தே தரிசிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னைவிட என் தம்பி பாலாஜி அதிக எம்ஜி.ஆர் படங்களைப் பார்த்து அவைகளைப் பற்றி இது பார்த்ததில்லையா, அது பார்த்ததில்லையா என்றெல்லாம் என்னிடம் வம்பு செய்வான். திருநகர் வீட்டில் குடியேறிய பிறகு என் வெளி உறவுத் துறை அமைச்சகத்தின் பிரதான செயல்பாடாக சுற்றுப்பட்டு பதினெட்டு டெண்டுக்கொட்டாய்களுக்கும் என்னாலான அளவு ஸ்கூல் கட் அடித்து விட்டுப் படங்கள் பார்க்க ஆரம்பித்த போது ரஜினிக்கு ரெண்டு எம்ஜி.ஆருக்கு ஒன்று என்ற கணக்கில் என்னை நோக்கிப் பாயும் படங்களைப் பார்த்துக் களிக்கலானேன்.
 
 
இதற்கு வெகு நாட்களுக்கு முன்பாகவே முன் சொன்ன சிம்மக்கல் வீட்டில் அதற்கு முந்தைய சம்மந்த மூர்த்தித் தெரு வீட்டில் இருக்கும் போதே எங்கள் வீட்டு சொத்தான ஒரு ரேடியோ மற்றும் வீதிக்குழாய்களின் வழியே பற்பல பாடல்களை கேட்டு உய்த்திருந்தேன். என்னைப் பொறுத்தவரை சிம்பிள் ஃபார்முலா தான். எஸ்.பி.பாலு பாடினால் அது ரஜ்ஜினி. டீஎம்.எஸ் பாடினால் அது எம்ஜி.ஆர்.தட்ஸ் ஆல். இந்த ரெண்டு பாடகர்களின் பேர்கள் கூடத் தெரியாது. அந்த நடிகர்களின் பாடுவதற்கான குரல்கள் தான் அவை என்றே நெடும்பெரியகாலம் நினைத்துக் கொண்டிருந்தேன்.
 
 
எம்ஜி.ஆர் பாடல்களின் சக்கரவர்த்தி. சினிமாவில் அவர் அடைந்த உயரத்திற்கு இன்னொருவராக இருந்தால் சோஃபா மேலே கால் ஆட்டிக் கொண்டு ஃப்ரூட் ஜூஸ் குடித்தபடி ஓஹ்..இட்ஸ் ரியல்லி நைஸ் யார் என்று மூணு சீட்டு ஆடியபடி கடந்திருப்பார்கள். அதுவரை அது தான் ஆகமம். எம்ஜி.ஆர் செல்லுலாய்ட் ஞானி. அவரைப் பற்றிப் புனையப்பட்ட அத்தனை கதைகளும், நிஜங்களும் ஹேஷ்யங்களும், அசரீரிகளும், பெயரற்ற சாட்சியங்களும் இன்னபிற எல்லாமும் முன்வைக்கிற எம்ஜி.ஆர் குணாம்சங்களில் அவரது வள்ளல்தன்மைக்கு அடுத்து அனைவரும் ஒப்புக்கொள்ளும் அடுத்த விடயம் அவரது சினிமா ஞானம் மற்றும் அவர் அதில் காட்டிய ஈடுபாடு. எம்ஜி.ஆர் ஒரு சூப்பர்ஸ்டாருக்கு இருக்க வேண்டிய தொழில்சார் ஈடுபாட்டை இந்திய அளவில் கட்டமைத்த முதல் ஆளுமை.
 
 
அவரது பாடலகள் அனேகமாக சூப்பர்ஹிட் வகையறாக்களில் சோபித்தவையே. தத்துவம் காதல் அரசியல் சோகம் அன்பு எனப் பலதரப்பட்ட முன்வைப்புகளைக் கொண்டு நகர்ந்த கான நதிகள் அவை. சொல்ல ஆரம்பித்தால் எல்லாப் பாடல்களையும் சொல்லி வைக்கலாம். தகும். இந்திய அளவில் இத்தனை சூப்பர்ஹிட்டுக்களைத் தன் வாழ்காலத்தில் அனுபவித்த முதல் ஆளுமை தலைவர்தான்.
 
 
உலகம் சுற்றும் வாலிபன் படம் எம்ஜி.ஆரின் தன்மானத்தை உரசிப்பார்த்த காலகட்டத்தில் பல்வேறு இன்னல்களுக்கு அப்பால் வெளியாகி அதுவரைக்குமான மந்திரத்தை ரெட்டிப்பாக்கிய படம்.எம்.எஸ்.விஸ்வநாதனின் பேருரு.
 
 
அத்தனை பாடல்களும் தேன் என்றாலும் பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ என்ற பாடலை மறக்கவே முடியாது. இதைத் தொடங்கும் அந்தப் பச்சைக்கிளி என்ற சொல்லை மாத்திரம் நன்கு நிதானமாக கவனித்தால் எம்ஜி.ஆருக்காக ;லேசாக அதன் உச்சரிப்பை வன்மையாக்கி ஒலித்திருப்பார் சவுந்த்ரராஜன். ஒரு மலைப்பாதை இறக்கத்தில் சீறியபடி பிரயாணிக்கிற வாகனத்தின் உற்சாகத்தை இந்தப்பாடலின் துவக்கம் நமக்குள் பெயர்க்கும். இதன் துவக்கம் கமல் படமான சிம்லா ஸ்பெஷலில் விஸ்வநாதன் இசைத்தளித்த லுக் லவ் மீ டியர் பாடலின் தொடக்கத்தோடு பொருந்தியபடி விலக்கம் கொள்வதை ரசிக்க முடிகிறது. பெண் குரலில் பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ என்பதை லேசாக வழக்கத்துக் கூடுதலாக அழுத்தி இருப்பதை அத்தனை எளிதாகக் கடந்து விட முடியாது.,ராமச்சந்திர டச் அது. 
                     
 
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஒரு தேர்தல் சரித்திர வெற்றிக்குப் பின்னதான புன்னகை என் அப்பாவின் முகத்தில் அரும்பும். இதே படத்தின் அத்தனை பாடல்களுக்கு மத்தியில் இந்த ரெண்டு பாடல்களும் கொஞ்சம் செல்லம் அதிகம்தான்.
                     
 
எம்ஜி.ஆரின் இசை ரசனை அற்புதங்களைத் தனதாக்கிக் கொண்ட மேதமை மற்றும் ஆழ்ஞானம். உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் பாடலை சுசீலாவின் குரலில் எத்தனையோ இரவுகளின் நிறமற்ற மேனியில் ஒரு நூலாடையைப் போல் படர்த்திக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாடலின் இடை இசையோடு உடனொலியாளர்களின் மிகப் பலமான குரல்ஜாலம் மனதை என்னவோ செய்யும். பருவம் எனது பாடல் என்ற பாடலும் இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த மற்ற பாடல்கள்.
             
 
அன்பே வா எம்ஜி.ஆரின் ஒரு லைட்டர் க்ளாஸிக். உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பேவா என்று என்னதான் உருகினாலும் கூட ஒன்ஸ் எ பப்பா மெட் எ மம்மா இன் எ லிட்டில் டூரிஸ்ட் பஸ் என்னடி பாப்பா சொன்னது டூப்பா கன்னம் சிவந்தது வாட் இஸ் திஸ்..? 
பாடலை இப்போது உற்றுக் கவனித்தால் என்னடா ஓட்டவா நாராயணா என்று சூரியன் படத்தில் கலாய்ப்பாரே கவுண்டமணி அப்போது டென்ஷனாக புறப்படும் ஓமக்குச்சி நரசிம்மனைக் கொசு மருந்தடிச்சி கொல்லுங்கடா என்பாரே அந்த உடனாளி கருப்பு சுப்பையா மேற்கண்ட ஒன்ஸ் எ பப்பா பாடலிலும் தொடரும் நாடோடி ஓடவேண்டும் ஓடோடி என்றபாடலிலும் தென்பட்டுப் பரிமளிக்கும் நடன உப நடிகர் என்பதை அறியமுடியும். சினிமா யாரை எங்கே எப்படி ஆக்கும் என்பதற்கான சின்னதொரு மற்றுமோர் உதாரணம்.
                             
 
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகி என்பேன் என்ற பாடல் எம்ஜி.ஆரின் இன்னொரு வைடூர்யம். எதிலும் எப்போதும் தோற்காத உயருரு எம்ஜி.ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது. அதைத் தக்கவைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாது உயர்ந்தபின்னரான தன் உயரங்களை அவரே தீர்மானித்துக் கொண்டார். உலக அளவில் இப்படி ஏறுமுகமாக மாத்திரமே அமைந்த ப்ரொஃபெஷ்னல் கேரியர் கிராஃப் கொண்ட இன்னொரு மனிதரைக் கண்டறியவே முடியாது என்ற அளவுக்கு வாத்தியார் ராஜராஜராமச்சந்திரன்.
                     
 
வளைந்து திரும்புகையில் எம்ஜி.ஆரின் காதல் பாடல்கள் வழமைக்குப் பொருத்தமற்ற சற்றே வேகமான அனாயாசத்தைக் கொண்டதாகப் பார்த்துக் கொள்ளப் பட்டன. நான் பார்த்ததிலே என்று ஒவ்வொரு முறை தொடங்கும் போதும் நம் மனதின் அடி ஆழத்தில் ஒரு முள்ளைப் போல அல்லது அம்பைப் போல அந்தச் சொற்கள் செருகிக் கொள்ளும். எத்தனை முறை கேட்டாலும் அப்படித் தான். எம்ஜி.ஆரின் பாடல்கள் ஆண் குரல் ஆதிக்கப் பாடல்களாகவும், பெண் குரல் சற்றே இறங்கி இடம் தரும் பாடல்களாகவும் பார்த்துப் பார்த்துப் பண்ணப்பட்டன. நான் பார்த்ததிலே என்பதை சுசீலா உச்சரிக்கும் போது மேலுதட்டாலேயே கடந்திருப்பார்.
 
                             
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் ஒரு டக்கர்சாங். அடிமைப்பெண் படத்தில் பாலு பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் பிற்காலத்தில் தான் எனக்குள் அப்பீல் ஆனது. என்னளவில் அடிமைப்பெண் என்றால் எனக்குத் தெரிந்த ஒரே பாட்டு ஏமாற்றாதே ஏமாற்றாதே தான். காலத்தை வென்றவன் நீ பாடலை நெடு நாளைக்கு சினிமாப்பாடல் என்றே தெரியாமல் இருந்தேன். அப்புறம் தான் அறிந்துகொண்டேன் அடிமைப்பெண் பாடல்களில் அதுவும் ஒன்று என. முத்துக்கூத்தன் எழுதிய ஆடிவா ஆடிவா ஆடிவா பாடல் ரசமான கவித்துவத்தை பெருக்கெடுத்துத் தரும் நல்லதொரு பாடல்.. அரசக்கட்டளை படத்தில் அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஒரு எனர்ஜி சுரக்கும்.
 
"தடை மீறிப் போராட சதிராடிவா 
என் தமிழே நீ பகைவென்று முடிசூடிவா '' 
 
என்ற இரண்டு வரிகள் எம்ஜி.ஆருக்கான அரசியல் பின் தொடரிகள் அத்தனை பேரையும் ஆக்டிவேட் செய்யக் கூடிய பொலிடிகல் பாஸ்வேர்ட்களாகவே அமைந்தன. இன்று கேட்டாலும் மனசின் ரகசிய ஸ்தலங்களை உயிர்ப்பிக்கும் என்பதுதான் அந்த  முடிவுறா ரகசியங்களின் மந்திரப்புரவியின் பேரழகு.
 
 
என் பாட்டுக்கு அவன் தான் தலைவன் 
ஒரு குற்றமில்லாத மனிதன் 
அவன் கோயில் இல்லாத இறைவன்
 
மெல்லின ராஜஸ்வரம் இந்தப் பாடல். என்றும் இனிக்கும் அழகிய கானம்.
 
அவன் சோலை மலராய் சிரிப்பான் 
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான் 
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான் 
நல்ல கோடையில் குடையாய் விரிவான் விரிவான்...
அவன் சபையினில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல் வள்ளல் 
 
(இதன் ஈற்று வரியைக் கவனியுங்கள்.வாலியின் வாஞ்சை கலைஞரையும் எம்.ஜி.ஆரையும் சேர்த்துப் பார்க்கத் துடிக்கும் நட்புக்குருகும் நல்மனம் புரியும்.)
 
 
அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி
 
என்னைப் பாட வைத்தவன் ஒருவன் 
என் பாட்டுக்கு அவன் தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோயில் இல்லாத இறைவன்..
 
வாலி எழுதிய இந்தப் பாடல் எம்ஜி.ஆர் எனும் நாயகராஜன் திரைப்பயணத்தில் அவரது உள்ளும் புறமுமான குண அதிசயங்களைப் பற்றிப் பாடப்பட்ட கானங்களில் அழியாத ஓரிடத்தில் எங்கோ ஆழ தூர உயரத்தில் ஒரு கனவைப் போலவே நிலைத்து விரிகிறது. ஒரு அந்தரங்கமான மலர்தல். மனம் மட்டுமே சாத்தியப்படுத்தக் கூடிய பந்தத்தின் சொற்களை ஒவ்வொன்றாய்க் கோர்த்துக் கவிமாலையாய் ஆக்கித் தந்தார் வாலி.
                       
 
எம்ஜி.ஆரின் பாடல்களைத் தனித்து வகைமைப்படுத்தித் தருவது அவற்றின் உள்ளே இருக்கக் கூடிய வேகம் உற்சாகம் மற்றும் ஒரு மென் சோகம் ஆகியவற்றின் அபூர்வமான கலவைதான். அப்படியான ஒரு பாடல் தான் இதயக்கனி படத்தின் இன்பமே உந்தன் பேர் பெண்மையோ பாடல். புலமைப் பித்தன் எழுதிய பாடல். விஸ்வநாதன் இசைத்த இன்னுமொரு இன்னிசை இனிப்பாச்சர்யம். தொடக்க இசையே ஒரு ராகமாலிகை. இந்தப் பாடலைப் பாடிய குரல்கள் இரண்டுமே வலிந்து ஒலிக்கின்றன. வளைந்து ஏறக் கூடிய மாடிப்படிகளில் தாவிச் செல்லும்  செல்லப்ராணியைப் போலவே இந்தப் பாடல் தொடக்கத்தில் இருந்தே சுழன்று சுழன்று ஏறக் கூடியதாக இருக்கிறது. இன்பமே என்று எடுத்த எடுப்பிலேயே உயரந்தாவும் பாடலின் மைய இசை வழமைக்குச் சற்றுக் கூடுதலான விரைதலோடு பாடலின் பல்லவியை செலுத்துகிறது. இந்தப் பாடலின் சரணங்களுக்கு இடையிலான இடை இசையைக் கொண்டு அதன் பின்னும் பல அழியாத கானங்களைப் படைத்தார் விஸ்வநாதன். அவற்றில் மிக முக்கியமான ஒன்று எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் எனும் நினைத்தாலே இனிக்கும் படப் பாடல். 
   
 
''என் இதயக்கனி
நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி'' 
 
இந்த மூன்று வரிகளை சவுந்தரராஜன் செலுத்திச் செல்வதைப் பாருங்கள். ஒரு காதல் பாடலின் தேவைக்கு சற்றும் சம்மந்தமற்ற தீர்க்கத்தோடு நிலைப்பது புரிபடும்.
 
 
இதழே இதழே தேன் வேண்டும் எனும் ரசம் பொங்கும் காதல் பாடல் எஸ்.பி.பாலு பாடிய எம்ஜி.ஆர் ஹிட்ஸில் எனக்கு நிரம்பப் பிடித்த பாடல். இதன் இடையிசையில் விளையாடி இருப்பார் மெல்லிசை மன்னர். அதிலும் ஆனந்தப் பாடத்தின் அரிச்சுவடி என்ற வரிக்கு முன்பாக வரும் மிக லேசான இழைதலை எத்தனையோ முறை கிறங்கியிருக்கிறேன். 
   
 
நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற எனும் பாடல் எம்ஜி.ஆருக்கான ரசிகர் ஆந்தம். அத்தனையும் அன்பின் பாந்தம். அன்றைய காலத்தில் எதிர்க்கும் மனம் கூட இந்தப் பாடல்வழி அவரை வாழ்த்தும் சொற்களை ஏந்தும்.
 
 
எம்ஜி.ஆரின் பாடல்கள் தீராசாகரம்.மென்மேலும் மழை.தொடர்ந்து பார்க்கலாம்.
 
 
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...