அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பட்னாவிஸ் துணைமுதல்வர் - பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 82 - உப மல்லிகைகள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   05 , 2018  14:26:07 IST


Andhimazhai Image
ந்தக் குழுப் பாடல்களைப் பற்றி ஒரு தனி அத்தியாயமாவது எழுதேன் என்று என் கனவில் நானே ஒரு கதாபாத்திரமாக மாறி என்னை எப்போதோ அதட்டி இருக்கிறேன். அது தற்போதைக்கு ஞாபகம் வந்ததன் விளைவு இந்த அத்தியாயம். 
 
 
மதுரை அமிர்தம் தியேட்டர். வீட்டுக்குத் தெரியாமல் யாரிடமும் சொல்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையும் ஏமாற்றி நான் பார்த்த முதல் திரைப்படம், அதாவது மதுரை எனும் பாரினுக்கு வந்து. தட் இஸ் ""நடிகன்"", தி சத்யராஜ் பிலிம். கண் பிதுங்கி வாய் விரிந்து அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் படத்தின் முதல் பாடல் மலேஷியா பாடியது. ஒரு குழுப் பாடல். அதில் ஒரு நடனக் கலைஞராக வந்து நடனமே ஆடத் தெரியாத தன் நடனத்தை ஆடுவார் சத்யராஜ். கொஞ்ச நேரத்தில் ஊட்டிக்குச் சென்று கிழ மாஸ்டர் வேஷம் போட்டு மனோரமாவின் டோட்டல் பேமிலியை ஏமாற்றி இன்புறப்போவதை எண்ணி ஒரு குழுப் பாடல் பாடுவார். அது "ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ வேஷம் ஆரம்பம்" என்கிற பாடல். தன்னைத்தானே பலவாறு மெச்சிக் கொள்ளும் சத்யராஜ் "யாரை நான் தொட்டாலும் குத்தமில்ல" என்பார். ஒரு கணம் அந்த நேரம் பாடல் நிற்கும். இரண்டு சுந்தரி வதனங்கள் வெகு க்ளோஸ் அப் இல் காட்டப்படும். தொண்ணூறுகளின் இறுதி வரைக்கும் பல பாடல்களில் அவ்விருவரும் வலம் வந்திருக்கிறார்கள். அதற்குப் பின் காணாமல் போனார்கள். இவர்களைப் போல், கதம்பத்தில் மறைந்த உப மல்லிகைகள் எத்தனை எத்தனையோ. 
 
 
"ராஜாதி ராஜனிந்த ராஜா" எனும் பாடலில் வரும் பிரபுதேவா தான் எத்தனை அழகு. பின்னாளில் அதே கார்த்திக்கோடு நாயகனாய் அவரே நடித்ததும் இந்தப் பாடலை இசையமைத்துப் பாடிய அதே இளையராஜாவின் இயற்பெயரைத் தாங்கிய "ராசய்யா" எனும் படத்தில் நாயகனாய் நடித்ததும் பின்னர் நடந்த மேஜிக்குகள். 
 
 
குழுவில் நடனமாடுபவர்களின் செயற்கையான முக மலர்தல்களைக் கவனித்திருக்கிறீர்களா? யாரும் பராமரிக்காத வனத் தோட்டத்தின் தன் விருப்ப மலர்களை ஒத்தவை அவர்களின் முகங்கள். அவர்களைப் பொறுத்தவரை தனியே ஒரு பாட்டில் தோன்றிவிட மாட்டோமா என்பது அவர்களின் பெரிய கனவு. குறைந்தபட்சம் ஒரு வரிசை முன்னேறி விட மாட்டோமா என்பது மத்திமக் கனவு. இருக்கும் அந்த இடத்தை அப்படியே தக்கவைத்துக்கொள்ள மாட்டோமா என்பது அவர்களின் வாழ்வாதார இச்சை. இணையதளங்கள் இன்றைக்கு ஏற்படுத்தியிருக்கக் கூடிய ஒரு தனி நபர் மன நடுக்கம் இங்கே சொல்லத்தக்கது. சதா சர்வ காலம் எண்ணற்ற கண்கள் தங்களை உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக நம்புவது. எதையாவது வித்தியாசமாகச் சமைத்துத் தன் இணையத்தில் பரிமாறி விட வேண்டும் என்கிற நித்திய நடுக்கம், முடியாமற் போகையில் பெரிய நோய்மையைத் தருகிறது. அது போலவே தான் குழுவில் ஆடுபவர்கள் தாங்கள் தனித்துத் தெரியப் போகிறோம் அதற்கான முன் காரியமாகவே குழுவில் தோன்றுகிறோம் என்று எல்லோருமே நம்புவார்கள்.
 
 
கூட்டத்தில் நிற்பவர்கள், குழுவில் ஆடுகிறவர்கள், சினிமாவில் ஒரு நெடுங்காலத் தவமாகவே அவற்றைக் கொள்கிறார்கள். நடன உதவியாளர்கள், நடன இயக்குனர்களாக முன் வர விழைவது ஒரு நட்சத்திர விவசாயம். இதில் நாயகனாவது, இயக்குனராவது வேறு எதாவது என்பனவெல்லாம் தரையில் உருண்டு உடையாமல் கைக்குக் கிட்டிய குதிரை முட்டைகள் போன்றவை. இதில் யாரோ ஒருவர் வாழ்வாங்கு வாழ்ந்ததை சொல்லிச் சொல்லியே காற்றாகாரம் பருகிக் காத்திருந்து காத்திருந்து கனவுதிர்காலம் தீர்ந்தவர்கள் கோடிப் பேர். முகம் கொண்டு தோன்றுவது, ஒரே இடத்தில் ஓடுவதைப் போன்ற நிதர்சனத்தை மீறி, அந்தந்தப் படங்களைச் சொல்லி, அந்தப் படத்தில் அந்த இடத்தில் நான் வருவேன், இந்தப் படத்தில் இந்தக் கட்டத்தில் நானும் தெரிவேன் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளுவதன் மூலமாக சினிமா என்கிற காது கேளாத தேவதை, கண்கள் மூடி உறங்குகையில், வெட்டித் தள்ளுகிற எதிர்காற்றின் மத்தியில், தன் பலமிலிக் குரலால், அதன்
 கவனம் திருப்ப விழையும் பாவப்பட்ட கலைஞர்களின் கூட்டுப் பிரார்த்தனைகள்தான் குழுப் பாடல்கள். இதை யாராவது பார்ப்பார்கள், நம்மை அழைப்பார்கள், ஒரு வாய்ப்பைத் தருவார்கள், இதன் மூலமாக எதாவது கிட்டும் என்பதையெல்லாம் மனதுள் நிறுத்தியபடி நிகழ்த்தப்படுபவைதான் அப்படியானப் பாடல் நடுப் புன்னகைகள். எப்போதாவது, எங்காவது, யாராவது, எதாவது ஒரு பாடலின் நடுவே தோன்றிய உப நடிகர் ஒருவரை அடையாளம் கண்டுகொள்வார்களேயானால், அகடமி விருதுகளையெல்லாம் விடவும் அவை முக்கியமானவை.
 
 
"சந்திரலேகா"  ட்ரம் டான்ஸ் தொடங்கி, முந்தா நேத்துப் பய்யர் கௌதம் கார்த்திக் சார் பாடலில் உடன் ஆடியவர்கள் வரை நூறு ஆண்டுகளை நெருங்கப் போகும் இந்திய சினிமா வரலாற்றில் தெரிந்து கொண்டே தெரியாமற் போன, பெரும் பிரகாசமாய் ஒளிர்ந்து பிறகு மங்கி உதிர்ந்தணைந்த எத்தனை எத்தனை லட்சக் கணக்கான மாந்தர்களின் நிஜமாகாத கனவுகளின் செல்லப் பெயர் சினிமா என்பது. நாயகனை விடப் பொலிவோ உயரமோ இன்ன பிற எதுவுமோ கூடாமல் குறையாமல் வேண்டியது வேண மட்டும் எனப் பார்த்துப் பார்த்துப் பண்ணுவது பாங்கு.
 
 
"பனி விழும் இரவு" என்கிற மௌன ராகம் பாடல் குழு நடனம் குழு உடனொலி இத்யாதிகளுக்கான முக்கியகானம். "சின்னச் சின்ன வண்ணக் குயில்" என்கிற மௌன ராகம் பாடல். நமக்கு ரேவதியைத் தெரியும், மோகனையும். எஸ்.ஜானகியைத் தெரியும், இளையராஜாவையும். இந்தப் பாடலை நன்கு அறிவோம், அதன் வரிகளையும். இதன் பின்னணி இசை நம்மை மயக்கி இருக்கிறது, படமாக்கப்பட்ட  விதமும். இதுவரை சொன்னவற்றைத் தாண்டி இந்தப் பாடலைப் பார்க்கலாம், என்ன இருக்கிறது? கூட ஆடிய உபதேவதைகளும், உடனொலி தந்தவர்களும். ஒரு பேச்சுக்கு அல்ல இந்தப் பாடல். இதுதான் பாடல். "மாலை சூடி.. ம்ம்ம் ம்ம்ம்... மஞ்சம் தேடி.. ம்ம்ம் ம்ம்ம்... பருவம் என்னும் கீர்த்தனம்"  எத்தனை முறை கேட்டிருப்போம், எத்தனை முறை கடந்திருப்போம், எத்தனை முறை முணுமுணுத்திருப்போம், எத்தனை முறை என்று எண்ணி இருக்கிறோமா? "ம்ம்ம்... ம்ம்ம்" உடனாடுபவர்களின் பாதங்களைக் கொண்டு, அவர்களின் கரங்களைக் கொண்டு, அவர்களுடைய முகபாவங்களைக் கொண்டு ஒரு பாடலைப் பாடுவது  என்பது, பிரசவ கால வேதனையின் பெருங்கூச்சலைக் கொண்டு ஒரு குழந்தையைக் கரங்களிலேந்திக் கணக்கற்ற முத்தங்களை அதற்கு வழங்குவதைப் போல.
 
 
"வெளக்கு வெப்போம் வெளக்கு வெப்போம்" - ஆத்மா
 
"ஏதோ மயக்கம் என்னவோ நெருக்கம்" - இதய தாமரை 
 
"ஓ மை லவ், ஓ மை லவ், கண்ணான என் கண்மணி" - இதய தாமரை
 
 
பாரதிராஜாவின் வெள்ளை உடை தேவதைகளுக்கென்று ஒரு தனித்த வரவேற்பு இருந்தது. "அபூர்வ சகோதரர்கள்" திரைப்படத்தின் "புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா பாடலிலும், பிற்பாடு "உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்" என்கிற பாடலிலும் உடன் ஆடியவர்கள் உற்றுக் கவனிக்க வைத்தார்கள். இவர்கள் வருவதும் எழுவதும் நின்று நிலைப்பது போல் நின்று நகர்வதும் பிறகு அகலுவதும் எப்போதாவது தென்படுகிற எரி நட்சத்திரத்தின் வீழ்தலைப் போல அல்லாமல் சதா சர்வகாலமும் நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு இயக்கமாகவே இவர்களது பற்றறுதல் நிகழ்ந்தேறுகிறது. 
 
 
சற்று பழைய பாடல்களில் சொல்ல வேண்டுமானால், "சாந்து பொட்டு சலசலக்க" என்கிற "சிவகங்கைச் சீமை" பாடலும், "பாச மலர்" படத்தின் "பாட்டொன்று கேட்டேன்" "வாராயோ தோழி" ஆகிய பாடல்களும் நினைவை நிரடுபவை. 
 
 
பிரபுதேவா, ராஜு சுந்தரம், லாரன்ஸ், முன்னதாக ஜான் பாபு, சம்பத் உள்ளிட்டவர்கள் கதையுள் கதையாகப் பாடல்களை அவ்வப்போது உருவாக்கித் தந்தார்கள். பிரபுதேவா குழுவில் ஜப்பான் குமார் என்று ஒருவருக்கு சொற்பகால ரசிகர் மன்றஙள் இருந்தன. பின்னாளில் பெரிதும் மிளிர்ந்த மயில்சாமி ஆரம்பத்தில் பல பாடல்களில் உப நடிகர் தான். மன்சூர் அலி கானுக்கு அப்படி ஒரு முன் கதை இருக்கும் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 
 
 
"வஞ்சிரம் வவ்வாலு மீனுதானா" பாடலில் அனாயாசமாக ஒரு முழு நடனத்தை மன்சூர் அலி கான் நிகழ்த்திய போது, அடடே எனச் சொல்லத் தோன்றியது. வில்ல மரம் என்றாலும் நடனக் கனியும் கனியும் என்று காட்டினார். 
 
 
"சின்ன முள்ளு காதலியல்லோ பெரிய முள்ளு காதலனல்லோ", "காசு மேல காசு வந்து", "ஓ மாமா மாமா" (மின்னலே) உள்ளிட்ட பாடல்களில் ஜப்பான் குமாரின் அட்டகாசங்கள் தனித்து மிளிர்பவை. 
 
 
நம் சமூகத்தில் பாடலுக்கான இடம் என்ன? வாழ்வுகளுக்குள் நடனம் என்பதன் தேவை என்ன? கேரளாவில் மட்டும் கலக்கியிருக்க வேண்டிய "ஜிமிக்கி கம்மல்" தமிழகத்தில் வேர் வரையில் நீர் என்றாகிய மாயம் என்ன? பிரபலம் என்பது ஒரு வகை ஓய்தலை நோக்கிய நகர்தல் தானா..? வெளித் தெரியாமல் இருப்பது உண்மையில் சாபமா அல்லது வரமா? உப நடிகர்களாகவும், உடனொலி தருபவர்களாகவும், வாத்தியக்காரர்களாகவும், இன்னும் இன்னும் கண்ணுக்குத் தெரியாத மகா பெரிய நிகழ் தகவு ஒன்றின் ஊடு பாவுகளாய் இருந்து கொண்டு பிறகு இல்லாமற் போனார்களா அல்லது இல்லாமற் போவதன் மூலமாகத்தான் எஞ்சுகிறார்களா? எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், இவர்களெல்லாம் இருந்த, இருக்கிற இருக்கப் போகிற, அதே ஒரே சினிமாவில்தானே அவர்களெல்லாமும் இருக்கிறார்கள்?
 
 
"காதல் கோட்டை" திரைப்படத்தை இரண்டு பேரின் மழைக்களியாட்டம் கொண்டு ஆரம்பித்திருப்பார் அகத்தியன். மொத்த மழையையும் அறுவடை செய்த அஜித்குமார், தேவயானி ஆகியோருக்கு மத்தியில் சொற்பத் தூறலைக் கூட அந்தப் பாடலில் ஆடிய இருவரும் அறுவடை செய்யவில்லை என்பதுதானே நிஜத்தின் இன்னொரு புறம்? 
 
 
"கற்பூர முல்லை ஒன்று காட்டாற்று வெள்ளம் என்று"
 
"பாடும் நேரம் இதுதான் இதுதான்"
 
"தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தது" ஆகிய பாடல்களின் நடனங்களை விடவும் கோரஸ் ஒலிகளுக்காகவே இந்தப் பாடல்களைப் பெரிதும் விரும்பியிருக்கிறேன்.
 
 
அபத்தமாவது
அற்புதமாவது
கண்களனையது 
காட்சி
 
என ஒரு கவிதையில் எழுதியிருப்பேன். 
 
 
இரண்டு திருப்பங்கள்.
 
ட்ராக் பாடிக் கொண்டிருக்கும் பானுப்ரியாவை இந்த முழுப்பாடலையும் நீ பாடு என்று சொல்லுவார்கள், அந்த நேரத்தில் அந்தப் பாடலைப் பாட வேண்டிய எல்.ஆர்.ஈஸ்வரி வந்துவிடுவார். சும்மா ரிகர்சல் பார்த்தோம், ஒலதொலவாய், என்று சொல்லிவிட்டு பானுப்ரியாவின் மனசைக் கொல்வதைப் பற்றிச் சற்றும் கவலையில்லாமல் மறுபடி அவரை ட்ராக் பாட வைப்பார்கள். இது முதலாவது...
 
 
இது அடுத்தது... தன் ஒண்டுக் குடித்தன வீட்டில் நடந்தாலே கைகால் இடிக்கும் என்கிற வாழ்வாதாரம் தரும் நெருக்கடியை மீறி ஆர்ப்பரிக்கும் கடலலைகளுக்கு மத்தியில் யாருமற்ற ஒரு வனாந்திரப் பொன் பொழுதில், அதிர வைக்கும் இசையை ஒலிக்கச் செய்தபடி நடனவழி உடற்பயிற்சி செய்யத் தொடங்குவார் ஊர்மிளா. கண் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு சொக்கிப் போகும் சினிமா சுல்தான் ஜாக்கி ஷெராப் அவள் தன் படத்தில் உடனாடும் உபமல்லிகைகளில் ஒருத்தி என்பதை அறிகிற கணம் அவளை அப்படியே எடுத்து நட்சத்திர வானில் நாயகியாக்கி எறிவார். 
 
 
ஓவர் நைட்டில் மாறுவதன் பேர்தான் வாழ்க்கை.
 
 
இரண்டும்தான் சினிமா.
 
 
 
(வாரம்தோறும் வெளியாகும் புலன்மயக்கம் தொடரின் விடுபட்ட 82-ஆம் அத்தியாயம் இந்த வாரம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.)


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...