அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 91 - பிரதிகளற்ற அபூர்வம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   03 , 2018  12:58:47 IST


Andhimazhai Image
குடும்பங்களில் கல்யாணமோ காதுகுத்தோ எல்லோரும் சந்தித்துக் கொள்ள அது ஒரு காரணம். விசேஷம் என்று மொத்தமாய் ஓரிடத்தில் கூடுகிற வாய்ப்பு ஞாபகக் காட்டுப் பெருமழை. இப்படிச் சொன்னால் ஜிலீரென்று கிலி பிறக்கும். அத்தனை நெருக்கமாய் அத்தனை உறவுகளை மொத்தமே சொற்பசில தடவைகள்தான் பார்க்க இயலும் என்பது வாழ்வின் வினோதம். வாழ்வே வினோதமென்பதால் இதைத் தனியாகப் பெரிதுபடுத்தாமல் கடல் நோக்கி ஓடுகிறது நதி. 
 
 
ஒரு மாமா பய்யன், ஒரு சித்தப்பா பய்யன், குரல் வளமும் ரசனையும் இசைஞானமும் பாடல் தேர்வும் என இவற்றிலெல்லாம் தேர்ந்து ஆனால் கூட்டத்துக்குள் பலருள் ஒருவராக ஸ்விட்சு போட்டால்தான் எரிவேன் என்று அமைதி காக்கிற அணைந்த பல்பைப் போல ஒரு சூட்சும நிசப்தத்தோடு கலந்திருப்பார்கள். அவர்களை ஆக்டிவேட் செய்வதற்கென்றே சில பரந்த மனது டோன்ட் கேர் ஆசாமிகளும் இருப்பார்கள். அப்படி அவர்கள் செய்துவிடக் கூடாது என்று உள்ளே பரிதவித்தபடி வெளியே புன்னகையைப் பொய்ப்பித்தபடி நார்மலி அப்நார்மலாக இருப்பார்கள் வேறு சிலர். ஒரு பெரிய சித்தப்பாவோ மாமாவோ யாரோ ஒருவர் சங்கநாதம் போன்ற தனது குரலில் ஆகச் சிறந்த பழைய பாடலைத் திருப்பலி கொடுத்த அடுத்த கணம், அவரை "ஷட்டப்" என்று சொல்ல வேண்டியவர்கள் மாற்று உபாயமாக, "நம்ம ரகு நல்லாப் பாடுவானே", "நம்ம ஹரி பிரமாதமாப் பாடுவான்", "நம்ம விஷ்வா சூப்பராப் பாடுவான்" என்றெல்லாம் மன்னராட்சியை ஒழிக்கும் விதமாக மக்களாட்சியை ஏற்படுத்தி, மன்னருக்குப் பிடிக்காத பங்காளிப் பையனை முதல் பிரதமராக்கினாற் போல், "பாடேன்" "பாடுங்க" "பாடணும்" "ப்ளீஸ்" என்றெல்லாம் கண்களில் "சேவியர்" "சேவ் மீ" "எஸ் ஓ எஸ்" காட்டி மனசுக்குள் மௌனமாய்க் கதறியவுடன் பிகு  பண்ணாமல் அந்த ஃபெல்லோ ஆகப்பட்டவர் ஒரு அளவுக்கு நன்றாகவே பாடி வைப்பார்.
 
 
அவருக்கு முன்னால் பாடிய மாமா தாத்தாவை ஒன்றும் செய்ய முடியாதவர்கள் அவரை முள் படுக்கையில் கிடத்துவதற்காகவே "சூப்பர், பிரமாதம், ஆஹா, ஓஹோ" என்றெல்லாம் பாட்டை விடப் பெரிதாகப் பாராட்டி வைப்பார்கள். பாடிய பய்யன், "இதெல்லாம் கொண்டு போறதுக்கு எங்கிட்ட பேக்ஸ் இல்லை" என்று பரிதவிப்பான். அப்போது, குறிப்பால் உணர்ந்து கொள்ளாத அந்த முன்பாட்டுப் பெரியவர் வெட்கம் வெள்ளைப் பூண்டு, மானம் மாங்காய்த் தோல், ரோசம் ரோசாப்பூ, எதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை என்று அடுத்த பாடலுக்கு முன்பாக மூன்று நான்கு செருமல்களோடு ஆரம்பிப்பார். அதாவது அதே அங்கிள் அதே கூட்டத்தைத் தன் பாட்டால் சிதறடிப்பார்  .
 
 
நன்றாகப் பாடுவது என்பது தன் குரலின் சுயத்தை உருவாக்குவதா அல்லது வேறொருவரைப் பிரதிபலிப்பதா? முன்னது சரி, பின்னது பிழை என்றெல்லாம் சொல்லவே முடியாத இரண்டு சரிகள். ஏனென்றால் பாடுவதென்பது பிறவி வரம் மற்றும் வென்றெடுக்கும் ஞானம். இந்த இரண்டுக்குமிடையிலான முரண் இதன் கூடுதல் அழகு. பாடப் பாட ராகம் என்பது சரிதான், ஆனால் இனிமை? எஸ்.பி.பி தன் குரலில் "பாட்டு" என்று ஒரு தடவை சொன்னால் அது பாட்டை விடச் சிறப்பல்லவா? விடாமல் பழகிப் பாடல்களை வெற்றி கொண்டவர்களும் பலர் உளர். இதில் அவரவர் சமர்த்து, அவரவர் லாவகம். 
 
 
சென்னையின் ஒரு ஒண்டுக்குடித்தனத்திற்கு நண்பர் சில புத்தகங்களுக்காக என்னை அழைத்துச் சென்றார். நாங்கள் பார்க்கச் சென்றவர் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் டாக்டரேட் முடித்தவர். கீழே ஒற்றை அறையாக அவரது அலுவலகம். மேலே அவர் வீடு போலும். நாங்கள் அங்கே ஒரு மணி நேரம் இருந்திருப்போம். அவர்கள் இருவரும் தீவிரமாக எனக்கே கேட்காத ஒரு ஸ்தாயியில் பேசிக் கொண்டிருந்தார்கள். மாடியில் அவர் வீட்டிலிருந்து ஒரு ஆண் குரல் (அனேகமாக அவர் பையனாக இருக்க வேண்டும்) அவ்வப்போது தன் அம்மாவிடம் பேசுகிற சத்தம் எனக்குக் கேட்டது. இவனை எனக்குத் தெரியுமே, இவனை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது. பிறகு அது எங்கேயோ கேட்ட குரல் என்பது புரிந்தது. பிறகு அது மிகவும் பழக்கப்பட்ட குரல் என்று புரிந்தது. இன்னும் அடுத்த முறை கேட்டபோது, "டேய் டேய் ஒன்ன எனக்குத் தெரியும்டா" என்று உள்மண்டையைச் சொரிந்து கொண்டேன்.
 
 
பிறகு, சட்டென நினைவுக்கு வந்தவனாய், "பேசறது உங்க பையனா?" என்று கேட்டேன். அவர் ஆமாம் என்று தலையசைத்தார். "மிமிக்ரி பண்ணுவாரா?" என்று கேட்டேன். சிரித்துக் கொண்டே, "இல்லங்க, அவன் சொந்தக் குரலே அதான்" என்றார். அங்கே அதுகாறும் எனக்கு மெல்ல நினைவுக்கு வந்து பின் பூத்த அந்தத் தாமத மலர், அந்தப் பையனின் குரல், தொண்ணூறு சதவிகிதத்துக்கு மேல் நடிகர் பிரசன்னாவினுடையதாக இருந்தது. பிரசன்னாவின் குரல் மிகத் தனித்துவமானது. அவரது ஆளுமையின் அடிநிலமாக ஒலிக்க வல்லது. பூநாகம் என்பார்களே, அது போல மென்மையும் உறுதியும் மிக்க ஒரு அபூர்வம். அதற்குப் பிறகு பிரசன்னாவைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அந்தப் பையன் ஞாபகம் வரும். 
 
 
தன் இறந்துபோன நண்பனின் குரல் போலவே இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக, யாரெனத் தெரியாத ஒருவனோடு மிக நெருக்கமாய் நட்புக் கொண்டு ஞாபகம் போற்றும் ஒருவரை நான் அறிவேன். குரல் என்பது ஒரு பகுதி உயிர். பேச்சு போனால் ஒரு பாதி மூச்சு போனதாக அர்த்தம். குரலென்பது உடல் தருகிற சத்தம் அல்ல, உண்மையில் அது மனம் இடுகிற முத்தம். ஒரு மனிதன் தான் உயிரோடு இருப்பதைத் தனக்குத் தானே சொல்லிக் கொள்வதற்காவது ஒரு மொழியும், குரலும், செவியும் அவசியம்.
 
 
குரலைப் பதிந்து நிரந்தரமாக்கியது மானுட விஸ்தரிப்புகளில் மகத்தானது. இன்றைக்கு நாம் சென்ற நூற்றாண்டின் பலரது குரல்களைக் கேட்க முடியும். ஆன்மாவுக்கு அழிவில்லை. அவர்களது சென்ற பிறவியின் மிச்சங்களாக குரலும் காணொளியில் ததும்பும் உருவங்களும் இருப்பதாகச் சொன்னால் யாராவது ஆட்சேபிப்பார்களா என்ன..?
 
   
என் கல்லூரி காலத்தில் மதுரா கல்லூரியில் படித்த முரளிக்கும் எனக்கும் ஒரு நெருக்கமான சினேகம் வந்ததற்குக் காரணமாக இருந்தவர் இளையராஜா.முரளிக்கு அப்படியே ராஜாவின் டிட்டோ குரல்.அதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் எந்த ஒரு வரியை வார்த்தையை என்ன நுட்பத்தோடு ராஜா பாடினாரோ அதே நுட்பம் வரைக்கும் தோண்டிக் கொணர்ந்து நம் வசம் சேர்ப்பான். சமர்த்தன். அவனை கல்லூரியில் ஏரியாவில் பலரும் இளையராஜா என்று கூப்பிடும் அளவுக்கு ராஜபாதி அவன். கல்லூரிப் படிப்பு முடிந்ததுமே வட இந்தியாவில் கன்ஸ்யூமர் ப்ராடக்ஸ் கம்பெனி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக சேர்ந்த முரளி கல்யாணத்திற்கு அப்பால் தான் மதுரை வந்தான். என்னைப் பார்த்ததும் முதல் கேள்வி கல்யாணம் பண்ணிட்டியா.? எஸ் என்றதும் வயிற்றில் குத்தி எங்கிட்ட ஏண்டா சொல்லலை என்றான். நீ எங்க இருக்கேன்னு தெர்லடா என்றதற்கு மறுபடி ஒரு குத்து அதெல்லாம் காரணமா..? நண்பன்னா காத்திருக்கணும்டா என்றான். ஜோக்ஸ் அபார்ட் அன்றைக்கு நெடுநேரம் பழைய ஞாபகத்தின் வீதிகளில் திரிந்தோம்.
 
 
ஒரு படத்திற்குப் போகலாம் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போன படம் தான் கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன். அந்தப் படத்தின் அத்தனை நட்சத்திரங்களைத் தாண்டி இரண்டு பேர் மனசில் நின்றார்கள். இல்லையில்லை மூன்று பேர். ஒருவர் ரகுமான். அடுத்தவர் ஐஸ்வர்யா ராய். மூன்றாமவர் தான் இந்த அத்தியாய நாயகர் ஷங்கர் மகாதேவன்.
 
 
இந்தியக் குரல்வானின் மதுரமயக்கங்களின் வரிசை என்பது ஒன்று. வெண்கலக்கிங்கிணிகளின் வரிசை வேறு. சில அபூர்வங்களுக்கு இரண்டிலும் இடமிருக்கும். அப்படி ஒரு குரல். அதை நான் முதலில் எங்கே எப்படிக் கேட்டேன்..? 1998இல் வெளியான ஷங்கர் மகாதேவனின் ப்ரெத்லெஸ் ஒரு அற்புதம். அதன் அழகே அதை அவர் வழங்கிய விதம்தான். அபாரமான கவன ஈர்ப்பை அடைந்தது ப்ரெத்லெஸ்.
 
 
ஒரே நேரத்தில் உப்புக்கருவாடு ஊற வச்ச சோறு பாடலும் சிட்டுப் பறக்குது குத்தாலத்தில் பாடலும் வந்து அதிரடித்தது. யார்றா இந்த ஷங்கர் மகாதேவன் என்று தேடாதோர் இல்லை. நான் நிசமாகவே அவரது ஒரு கன்னத்தைக் கடித்து விடலாம் என்று தேடினேன். அதிலும் சிட்டுப்பறக்குது குத்தாலத்தில் பாடலை மிக லேசான அதிகாரம் கலந்த குரலின் ஆதங்கத்தோடு பாடி இருப்பார் ஷங்கர்ஜி. அதற்கு முன்பு அந்த வகைமையில் வெகு சில மலேசியா பாடல்கள் மாத்திரமே சாட்சியமாய் இருந்தன.
 
 
செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம் என்ற அலைபாயுதே பாடல் ஷங்கரின் குரலை ஆணி அடித்துச் சித்திரமாய்த் தொங்கவைத்தது. ஜூன் ஜூலை மாதத்தில் ரோஜாப் பூவின் வாசத்தில் ஜூனியர் சூரியன் என்ற ப்ரியமானவளே பாடலும் தனித்துத் தொனித்தது. ஷங்கர் நம்பர்களில் மயங்கவில்லை. தான் பாடுகிற பாடல் ஹிட் அடிக்க வேண்டும் என்பதில் எத்தனமாய் இருந்தார். பெருவாரிப் பாடல்கள் சூப்பர் ஹிட்களே.
 
 
ரிதம் படத்தின் தனியே தன்னந்தனியே பாடல் ஒரு மித மெலடி மித பீட் கொண்ட செமி ப்ளூ வகைமைப் பாடல்.ஒரு ஆற்றாமையைப் பாடலெங்கும் படர்த்தவேண்டும். அதை கச்சிதமாய் செய்தார் ஷங்கர் மகாதேவன். ஷங்கர் மஹாதேவனின் பாடல்கள் அதன் வகைமை வித்தியாசம், ஷங்கரின் இசை நிபுணத்துவத்தை எடுத்து வைத்தபடியே நல்லொலி நிகழ்த்தின. அந்த வகையில், மற்ற எந்தப் பாடகரை விடவும் ஷங்கர் மஹாதேவனின் பாடல்கள் அவருக்கான ஒரு புகழ்ப் பிரதிநிதித்துவத்தை எல்லா நிலங்களிலும் கோரியபடியே இருந்தன. 
 
 
ஒவ்வொரு மொழியும் காலம் மற்றும் அதைப் பேசுகிற மக்களின் கூட்டு மற்றும் தனிமனித வெளிப்பாடு அவற்றின் ஊடான சிதைவு ஆகியவற்றை எல்லாமும் தன்னுள்ளே பிரதிபலிக்கும். எல்லாக் கலைஞர்களுக்கும் சொந்த மொழியில் ஒன்றெனவும் மற்ற மொழிகளில் பிறிதொன்று அல்லது பல எனவும் பரிமாண வித்தியாசம் இருந்தே தீரும். மொழியின் ஊடான அந்நியமறுதல் ஒரு கலைஞனின் மேதமைக்கான மிகப் பெரிய நற்சான்று. அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டார் என்று நடிகர்கள் அவ்வப்போது புகழப்படுவது உண்டல்லவா? அதைப் போலவே, மொழிக்குண்டான அட்சர நியமம் பிசகாமல் பாடுவதும் தனித்துப் புகழப்படும். 
 
 
யேசுதாஸ் மலையாளத்தில் பாடுவதற்கும், தமிழ் மற்றும் ஹிந்தியில் பாடுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா. ஒவ்வொருவருக்குமே தாய்மொழி தனி மொழி. நான் பந்தயம் கட்டி சொல்லுவேன், இந்திய அளவில் எந்த மொழியில் பாடினாலும் அதைத் தன் சொந்த மொழி என்று பாடுகிற சமர்த்தர் ஒருவர் உண்டென்றால் அது ஷங்கர் மஹாதேவன் ஒருவர்தான். 
 
 
சீர்காழிக்குப் பிறகு அவர் செய்த அதே சித்து விளையாட்டைத் தானும் செய்தவர் ஷங்கர், அதுவும் ஒரு இரு பாடல்களிலல்ல, ஒவ்வொரு பாடலிலும். எல்லாப் பாடகர்களுமே நிறையப் பாடல்களில் பாடிக் கொண்டே வரும்போது, கேட்பவர்களை உருக வைத்து, உறைய வைத்துக் கரைய வைத்துவிடுவார்கள். ஆனால், இந்த சீர்காழி, ஷங்கர் வகையறாக்கள் அதைச் செய்து காண்பிப்பதில் ஒரு வித்தியாசம் இருக்கும். ப்ரேக்லெஸ் வெஹிக்கிள் என்பார்களே, அதுபோல, நிறுத்தம் தேவையற்ற ஒரு ஓட்டமாக அங்கிங்கெனாதபடி எங்கும் இந்தப் பிரபஞ்சத்தோடு கோடித் துகள்களால் ஒரு தழுவல் நிகழ்த்தினாற்போல் கலந்து விடுவதான சாத்தியத்தை ஒரு பாடல் வழி முயன்று பார்ப்பது.. தன்னை மீறி, தன்னை மறந்து என்பதையெல்லாம் விட, உசித உபயம் ஒரு சொல் உண்டெனில், அது, "தன்னை அறியாமல்" என்று சொல்லுவதாக இருக்கும். 
 
 
இந்தத் தன்னையறியாமல் கரைவதை இன்னும் கொஞ்சம் பார்க்கலாம். பாடல் பதிவின் போது, தான் நிகழ்த்திய அதே அற்புதத்தைத் தானும் பிறர் போல் வேடிக்கைதான் பார்க்க முடியுமே தவிர, மறுபடியும் நிகழ்த்த முடியாது. அப்படியானவற்றை மேடையில் மறுபடி பாட நேர்கையில், அதை இந்த மேதைகள் கையாள்வது நன்றாகத் தெரியும் அளவுக்கு முன்பு நிகழ்ந்த ஒற்றை, பிரதிகளற்ற அபூர்வமாய்த் தனித்து நிகழ்கிறது. "ரிதம்" படத்தில், "தனியே தன்னந்தனியே" பாடல் அந்த வகையைச் சேரும். ஒரு கச்சிதமான ஷங்கர் மஹாதேவனின் அன்டர்ப்ளே இந்தப் பாடல். இத்தனைக்கும் இந்தப் பாடல் ஸ்தாயி கூடிக் கொண்டே போய் முடிய வல்லது. மகா சிரமம் பாடுவது. முயற்சி பயிற்சி இவற்றையெல்லாம் தாண்டி, தொடர்ந்து ஒரு வேலையைச் செய்து பழகிய பழக்கத்தின் மேதமை ஒன்று உண்டல்லவா, அப்படித் தொடர்ந்து பாடிப் பாடிப் பழகிய தன் குரலால், ஒரு சில ஆச்சரியங்களை எப்படி என்றே தெரியாமல் நிகழ்த்த முடியும். 
 
 
அளவு பொருந்தாத ஒரு பாத்திரத்தையும் மூடியையும் கச்சிதமாகப் பொருத்துவது நம்ப முடியாததல்லவா. அதுவே ஒரு போரில் இரு வெவ்வேறு மனிதர்களின் கையில் இருக்கக் கூடிய கேடயங்கள் ஒன்றுக்கொன்று திடீரென்று உராயும்போது அப்படியே பொருத்திக் கொண்டு திரும்பத் திறக்க முடியாத அளவுக்கு இறுகப் பற்றிக் கொள்வதும் உண்டு. அப்படி நம்ப முடியாத ஒரு அபூர்வத்தைப் போல் இந்தப் பாடலில் ஒரு இடம் வரும். அதைத் தனியே கேளுங்கள் ப்ளீஸ். 
 
 
அது : "மீண்டும் வருவாள் நம்பினேன், அதோ, அவள், வரும் வழி தெரியுது. தனியே". இப்படியெல்லாம் பாட ஷங்கர் மஹாதேவனால்தான் முடியும் என்று நியாயமாகச் சொல்ல வேண்டும். இப்படியெல்லாம் பாட ஷங்கர் மஹாதேவனாலேயே முடியாது என்பதுதான் அவரது சிறப்பு. 
 
 
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
கிருஷ்ணா
 
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
 
கிருஷ்ணா
 
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
நிதம் காண்டின்ற வான் கூட நிஜமில்லை
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
 
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
 
கம்தநிஸ நித பம கம ரிகரிஸ
 
உன்னைக் காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
நளினி மோகண ஷியாமள ரங்கா
தீம் தீம் க்டதகதின்னா
நடன பாவ ஸ்ருதிலயகங்கா
க்டதகதின் தீம் தீன்னா
சரிவர தூங்காது வாடும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்
 
அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாடுவேன்
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன்
எதிர்பாராமலே அவன்
பின் இருந்து வந்து என்னை பம்பரமாய்
சுற்றி விட்டு  
உலகுண்ட பெருவாயில் எந்தன் வாயோடு
வாய் பதித்தான் 
இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாள் அடி
 
 
இதன் விஷுவல்ஸ் பார்த்தவர்களுக்கு அதிக விளக்கம் தேவையில்லை. ஒரு சிட்டிகை நளினம் கூடுதலாகத் தேவைப்படும் பாத்திரம், அதைக் குரலில் தருவது அசாத்தியம். தந்திருப்பார். ஒரு மெல்லிய சிநேகபாவமும், சரசமும், நிபந்தனையற்று தன்னை ஒப்புக் கொடுக்க விழைகிற உயிர்ப் பூர்வக் காதலும், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நாட்டுப்புறத் தன்மை சற்று அதிகம் தொனிக்கக் கூடிய அறியாமையும், இதையெல்லாமும் கூடவோ குறையவோ முடியாத ஒரு அபூர்வ இழைதலாக இந்தப் பாடலைத் தந்திருப்பார் ஷங்கர். 
 
 
இருப்பதிலேயே கடினம் எது தெரியுமா? அன்பின் வீழ்தலை வீழ்த்தியவரிடமே விலாவாரியாக விவரிப்பதுதான். மேலோங்கிப் பார்த்தால் முற்றிலும் அது தேவையற்றது போலத் தோன்றும், ஆனால் உன்னிப்பாக நோக்கும் போதுதான் அதன் தேவையும் அதுவும் வெவ்வேறு அல்ல என்பது புரியும். இதை நம்ப மறுப்பவர்களுக்கு, கடவுளை நோக்கி மனிதன் செய்கிற எல்லாமுமே பக்தியென்கிற ஒரு தேவையற்ற மாற்றற்ற ஒன்று என்பது புரியும். பயண கால வெறுமைக்குப் பாடல் என்பது மாற்றல்ல, பூர்த்தி. அதுபோலவே, வாழ்தலின் நிமித்தம் என்பது சென்றடையும் வரை, அதன் பேர் பக்தி, அடைவதன் பேர் முக்தி, அதன் பிறகு வேறேதும் இல்லை எனும் அளவுக்கு அதுவும் தானும் ஒன்றாவது அதன் உள்ளார்ந்த அர்த்தம். நம்ப மறுப்பவர்களுக்கு இதையே அறிவியல் பூர்வமாகவும் சொல்லலாம். அறியவும், யூகிக்கவும் முடியாத ஒரு பேரழிவில் தோன்றியதுதான் பிரபஞ்சத்தின் தொடக்கம். அழிவது தோன்றும், தோன்றியது அழியும் என்பது இரண்டு அடைப்புக் குறிகள், நடுவில் எதுவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்பதெல்லாம் நியதி. போதும். 
 
 
கோபத்தில் ஒரு மனிதன் தன்னையறியாமல் தன் பூட்டுக்கள் சிலவற்றைப் படாரென்று திறந்து கொள்வான். பெரும் சப்தம் இடையில் சின்ன மௌனமாக மாறிப் பிறகு மீண்டும் வேறொரு சப்தமாகத் தொடரும். சைக்கிளை மிக வேகமாக அழுத்திச் செல்லும்போது ஒரு கட்டத்தில் பெடலிலிருந்து காலை எடுத்தால், குறிப்பிட்ட தூரம் சைக்கிள் தொடர்ந்து ஓடும். அதுவரை கால் பெடலில் இருக்காது, அங்கு எதோ ஒன்று நிகழும், ஆனால் எதுவுமே நிகழாது. இதை சக்கரம், வேகம், உராய்தல் இவற்றுக்கான இடை மேலாண்மையாக நம்மால் புரிந்து கொள்ள முடியும். இதே விஷயம் தையல் மிஷினின் வேக கணம் ஒன்றிலும் அப்படியே பொருந்துவதை உணர முடியும்.
 
 
மேற்சொன்ன கோபத்துக்குப் பின்னதான அரிய மௌனத்தையும், அதற்கடுத்த சக்கர நிதானித்தலையும் ஒரு இடம் சொல்லுகிறேன், அங்கே நின்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். 
"சந்தனத் தென்றலை", இந்தப் பாடலில் "இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி; கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி" இதில் வருகிற இரண்டு கண்ணாடியையும், இருவேறு கண்ணாடிகளாகவே பாடியிருப்பார் ஷங்கர் மஹாதேவன். ஓடிக்கொண்டே போய் இந்தச் சரணம் முடிவது வரைக்கும் மலைநடு நதியாய்க் குதித்துக் குன்றி குறைந்து குறுகி அகன்று அருகி நெளிந்து வளைந்து சிதைந்து தணிந்து பெருகி உதிர்ந்தும் சேர்ந்தும் கரைந்தும் உறைந்தும் இன்னும் என்னவெல்லாம் ஒரே ஒரு பாடலின் நம்ப முடியாத அசாத்தியங்களோ, அவற்றையெல்லாம் போகிற போக்கில் அனாயாசமாய் நேர்ப்பித்தபடிக் கரைந்தோடும் இந்தப் பாடல் ஒரு கானநதி வந்து கலக்கிற குரலருவி.
 
 
காதலின் அபூர்வமான ஒரு ஆற்றாமையை இந்தப் பாடல் வழி சாட்சியம் செய்திருப்பார் ஷங்கர் மஹாதேவன். மருத்துவத்தில் சிறப்பு மருத்துவர்கள் என்று இருப்பார்கள் அல்லவா, அப்படி சிறப்பு நிலைப் பாடகராக ஷங்கர் மஹாதேவனைச் சுட்ட முடிகிறது. இசையெனும் பெரும் தெய்வத்தைத் தன் ஒவ்வொரு பாடலையும் பிரார்த்தித்தலின் மலர்ச் சொரிதலாகவே நிகழ்த்துவது ஒரு மகாதவம். அந்த வகையில் ஷங்கர் மஹாதேவன் மொழிகளுக்கு அப்பாற்பட்ட குரல்ஞானி. வாழ்க ஷங்கர் மஹாதேவன்.
 
 
 
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...