அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பட்னாவிஸ் துணைமுதல்வர் - பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 87 - ரஜினியின் பாடல்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   29 , 2018  20:41:34 IST


Andhimazhai Image
னேகமாக ஆகாயம் மேலே பாதாளம் கீழே என்று ஆரம்பிக்கிற பாட்டோ அல்லது என்னடா பொல்லாத வாழ்க்கை என்ற தப்புத்தாளங்கள் படத்தின் பாட்டோதான் பதவிக்கு வந்திருக்க வேண்டும். நுட்பமாகத் தொடங்குவதானால் ரஜினியின் பாடல்கள் என்ற பெரும் அத்தியாயத்தின் முதல் சில பாடல்களில் மூன்று முடிச்சு படத்தில் வில்லன் பாடுகிற மனவினைகள் என்ற பாடல் அதுவும் எம்.எஸ்.விஸ்வநாதன் சொந்தக் குரலில் பாடியது அதைத் தொட்டுத் தான் தொடங்க வேண்டி இருக்கும். ஆனால் ரஜினியின் பாடல்கள் என்கிற பெரும் ஞாபகத்தைத் திறந்து தருகிற பாடல் என பில்லா படத்தின் மை நேம் இஸ் பில்லா பாடலைத்தான் சொல்வேன்.
 
 
எம்ஜி.ஆர் வில்லனாக சில படங்களில் வேஷம் கட்டி இருக்கிறார். அவற்றிலும் கூட தன்னைத் தொடர்ந்து வழிபடுகிறவர்களின் புனித நம்பகங்களைச் சற்றும் குலைத்து விடாமல் பார்த்துக் கொண்டார். எடுத்த எடுப்பிலேயே எதிர் நாயகனாக மானுட வெறுப்பு என்கிற உளவியலுக்குள் தன் வேடத் தொடர்ச்சி மூலமாகத் தென்படத் தொடங்கி பிற்பாடு நாயகன் ஆனது ரஜினிக்கு வாய்த்த வித்யாசம். அவரை வெறுப்பதாக எண்ணிக் கொண்டே பெரும் எண்ணிக்கையிலான ரசிக மனசுகள் விரும்பத் தொடங்கி இருந்தன. பிறகு தான் மெல்ல அவர் நாயகனானார். அவருக்கு வில்லனாக நடிப்பது நடிகர்களுக்கு மாபெரிய சவாலாக ஆனது. ரகுவரன் சத்யராஜ் தொடங்கி வெகு சொற்ப சிலரே அப்படி சோபித்தனர்.
 
 
ப்ரியா படத்தில் சுஜாதாவின் கனவுக்கண்ணன் வேடத்தில் கணேஷாகத் தோன்றினார் ரஜினி.வஸந்த் என்று அதில் வருபவரைப் பார்த்தால் இன்றைக்கும் சுஜாதா தொடங்கி எஸ்.பி,முத்துராமன் வரைக்கும் யாவரையும் வெறுப்போம். அது வேறு கதை.ப்ரியா படத்தில் நடிகை ப்ரியாவாக ஸ்ரீதேவி அவருடைய காதலனாக அம்பரீஷ் தனியே ரஜினிக்கு ஒரு மலேசிய காதலி என்றெல்லாம் அளவு சட்டையைத் தொலைத்து விட்டு ஆல்டரேசன் டெய்லரிடம் அவஸ்தைப்படுகிற புதுமாப்பிள்ளை போல அவருக்கு மூன்று நான்கு பாடல்கள் வழங்கப்பட்டாலும் ஸ்டீரியோஃபோனிக் இசையின் துவக்கப் படமாக ப்ரியா அமைந்தது. அதன் பாடல்கள் காலம் கடந்தன. ஜேசுதாஸ் பாடிய ரஜினிக்கான பாடல்கள் மென் சோகமும் குழைதலுமாக நாளும் வசீகரித்தன.
 
 
சிங்கப்பூரின் எழிலை போற்றுகிற அக்கரைச் சீமை அழகினிலே பாடல் மறக்க முடியாத ஒன்று. திரையில் ரஜினி காட்டிய அதீத உற்சாகத்தோடு ஜேசுதாஸின் பிரார்த்திக்கிற குரல் பொருந்தவில்லை என்றாலும் இரண்டு வெவ்வேறு அழகுகளாகத் தனித்தனவே ஒழிய அவற்றால் அந்தப் பாடலின் மாண்பு கெடவில்லை. ஹே பாடல் ஒன்று ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே பாடல்களும் ரஜினிக்கான ஜேசுதாஸின் நற்பாடல்கள் வரிசையில் இடம்பெறுகின்/றன.
 
 
பிற்பாடுகளில் ஒரு பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை (ராஜா சின்ன ரோஜா) சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது (நல்லவனுக்கு நல்லவன்) அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன (தர்மதுரை 1)அம்மா என்றழைக்காத உயிரில்லையே (மன்னன்) ஒரு பெண்புறா கண்ணீரில் (அண்ணாமலை)
என்ன தேசமோ (உன் கண்ணில் நீர் வழிந்தால்) எனப் பல பாடல்களை ஜேசுதாஸ் பாடினார். ரஜினிக்கும் அவருக்குமான பிணைப்பு மென் சோக மெலடி பாடல்கள்,. தனியாவர்த்தனப் பாடல்கள் சோகப்பாடல்கள். இவற்றைத் தாண்டி சில டூயட்களையும் ரஜினிக்காகப் பாடினார் ஜேசு. அவற்றில் எதிர்பார்க்கவே முடியாத ஒன்று மாசி மாசம் ஆளான பொண்ணு என்றாரம்பிக்கிற தர்மதுரை படப் பாடல் தான்.
 
 
மனோவின் ஜாலியான குரல் ரஜினிக்குப் பொருந்திற்று. மேலும் மனோவின் பெருவெற்றிப் பாடல்களில் பல ரஜினிக்கானவை. உழைப்பாளி முக்கிய படம்.பாண்டியன் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் மனோ மாத்திரமே ரஜினிக்காக படம் முழுவதுக்கும் பாடியது வரலாறு. உலகத்துக்காக பிறந்தவன் நானே என்ற உழைப்பாளி பாடலும் பாண்டியனா கொக்கா கொக்கா என்கிற பாடலும் ஒண்ணு ரெண்டு மூணு நாலு என்ற தர்மதுரை1 பாடலும் மனோகரமானவை.
 
 
தூரத்திலேயே கேட்டாலும் நம் ஆழத்தில் ஒலிப்பவை சிறப்பான பாடல்கள். அவற்றில் ரஜினி பாடல்களுக்குப் பெரும் பந்தமுண்டு. மலேசியா பாடிய ஆசை நூறு வகை பாடல் தொடங்கி தானந்தனக் கும்மி கொட்டி பாடல் வரைக்கும் எத்தனையோ ரஜினி ஹிட்ஸ் உண்டு. அவருடைய தனித்த குரல் ரஜினிக்கு ஒரு ப்ரியமான நாய்க்குட்டியைப் போலவே குழைந்து சேவகம் செய்தது எனச் சொன்னால் தகும்.
 
 
இளையராஜா தன் சொந்தக் குரலில் பாடிய உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி பாடல் ரஜினியின் வெள்ளந்தி ரசிகர்களை மை போட்டு மயக்கிற்று. ரஜினிக்குப் பொருந்தின அளவுக்கு ராஜாவின் குரல் நாஸர் உள்பட வெகு சிலருக்கே அத்தனை கச்சிதமாய்ப் பொருந்திற்று. பலருக்கும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளாமல் ராஜா பாடல்களாகவே இருந்தன என்பதும் உண்மை.
 
 
அருண்மொழி ஷங்கர் மகாதேவன் கார்த்திக் தொடங்கி ஏ.ஆர்.ரகுமான் வரைக்கும் ரஜினிக்கான பாடல்களைப் பாடுவதென்பது பாடக அவதாரத்தின் ஞானஸ்னானத் திருவிழா போன்றது. அந்த வகையில் புதுப் பாடகர்கள் வரை எல்லோரின் ப்ரியனாகத் திகழ்வது ரஜினி என்கிற மந்திரம். ரஜினியின் எல்லா பாடல்களுமே ஹிட் ஆகிவிடும் என்பது நம்பிக்கை மட்டுமல்ல. பெருமளவு நிசமும் என்பதால் அப்படி எல்லோரும் தேடலாம்.
 
 
கன்னட ரஜினிக்குப் பொருந்தியது தெலுங்கு பாலசுப்ரமணியத்தின் குரல். ரஜினியின் பாடும் குரலாகவே பாலு திகழ்ந்தார். அவர் பாடிய மற்ற நடிகர்களுக்கான பாடல்களை விடவும் மற்றவர்கள் பாடிய ரஜினிக்கான பாடல்களை விடவும் தமிழ்த் திரை இசையின் பெருவெற்றிசரிதத்தில் ஆகச்சிறப்பான காம்பினேஷன் என்பதாக ரஜினி மற்றும் பாலு இருவரின் இணைதலை சொல்லலாம்.
 
 
எல்லோரும் எல்லோருக்காகவும் தான் பாடினார்கள். ஏன் எம்ஜி.ஆர் பாடலில் அறிமுகம் ஆனவர் தான் பாலு.அவருக்கு முன்பே ஜேசுதாஸ் ஜெயச்சந்திரன் ஆகியோரெல்லாம் எம்ஜி.ஆருக்குப் பாடி இருந்தார்களே... என்றாலும் எம்ஜியார் என்றாலே அவருக்கான பின் குரலாக டிஎம்சவுந்தரராஜனைத் தானே நினைக்கத் தோன்றுகிறது. அதைப் போலவே ரஜினிக்கான குரலாக பாலுவின் குரல் தான் இருப்பதில் சிறப்பது என்பதென் எண்ணம். கமலுக்கும் பாலு பாடி இருந்தாலும் கூட கமலுக்கான பொருத்தக் குரலோன் ஹரிஹரன் தான். இதெல்லாம் என் அபிப்ராயங்கள். முரண் கொண்டோர் மாற்றுக் கட்சி கண்டு இன்புற்றலைக.
 
 
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப்பாட்டே வாவா காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோ ஹோ நீங்காத ஆசை என்ற பாடலை ரஜினியின் சொந்தக் குரலில் பாடியிருப்பார் பாலு. அதாவது ஐஸ்க்ரீம் நனைந்த உதடுகளின் நிச நிறம் மறைந்து போகுமல்லவா அப்படி ரஜினியின் பாலுவின் குரல் வேறென்பதே மறக்கும்.
 
 
ஜானி படத்துக்காக மகேந்திரன் இயக்கம், அசோக்குமார் படமாக்கம், இளையராஜா இசை என அரிதான காம்பினேஷனில் ரஜினி பாலு பங்கேற்ற ஸ்னோரீட்டா பாடல் ஒரு அரிய வைரம். கேட்டால் அந்த நாள் கெடும்.அடுத்தடுத்த நாட்களும் கெடும் அந்தளவுக்கு இசைவழிமயக்கம் அந்தப் பாடல் நிகழ்த்தும்.
     
 
அடுத்த கணமே உடைந்து சிதறக் கூடிய குமிழித் தன்மை இந்தப் பாடலின் உருவாக்கத்தின் மைய இழையாக இடம்பெற்றிருக்கும். கதைப்படி தன் மிதமிஞ்சிய நம்பிக்கையைத் தனக்கு அறிமுகமாகும் ஒருத்தியின் மீது வைப்பான் நாயகன். அவளோ அடுத்த சில காட்சிகளில் கதையைச் சிதறடித்துக் கிளம்பிப் பறந்து செல்வதாகக் கதையின் நகர்தல் இருக்கும். இந்த இடத்தில் தன் பலஜென்ம ஜென்மாந்திரத் துணை அவள் தான் என்ற அளவில் தன் ஆனந்தம் ஷண நேரப் பட்டாம்பூச்சி என்பதை உணராமல் அவள் மீது நெய்யாய் உருகிப் பாலாய்க் கனிவான். அப்போது பாடுகிற பாடல் தான் இது. அந்தப் பாடலின் உருவாக்கத்தில் நாயகன் பாவனையில் முழு வாழ்வையும் வாழ்ந்து பார்க்கிறாற் போல அமைத்திருப்பார் மகேந்திரன். ரஜினியின் அதி அற்புதப் பரிமாணம் இந்தப் பாடலில் தென்படும். ரஜினியின் நடிப்புத் திறனுக்கான சாட்சியமாகவும் இதனைச் சொல்வது தகும். தன் அங்க அசைவுகளால் அந்தப் பாடலின் உயிராகவே அவர் மாறி இருப்பார்.
 
 
செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
 
செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
 
ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஹே ஹே ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல
ஏ ஹே ஹே
எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சைக் கில்லுதே
அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள்
 
செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
 
பூமெத்தை போடுகிற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகிற பூவை எண்ணங்கள்
ஆ ஆ ஹே ஹே பூமெத்தை போடுகிற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகிற பூவை எண்ணங்கள்
தூவாதோ வாசங்கள் துள்ளாதோ எண்ணங்கள்
ஏ ஹே ஹே
வானெங்கும் ஊர்வலம் வாவென்னும் உன் முகம்
கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும்
 
செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
 
செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
 
 
 
கண்மணியே காதலென்பது கற்பனையோ பாடலை எத்தனை முறை சுவைத்தாலும் இனிக்கும். பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா..? பாடலும் கூட அளவெடுத்துச் செய்த வார்த்தைச் சிற்பம் தான். ரஜினிக்கான பாடல்கள் ரஜினியை நினைவுபடுத்துவதோ அல்லது நினைவைக் கிளர்த்துவதோ அல்ல., மாறாக அவை ரஜினிக்கு வேறொருவரான பாலு குரல் தந்த பாடலை ரஜினி பாடிய பாடல்களாக்கி நமக்குத் தருபவை. அல்லது ரஜினியின் பாடல்களாகி நமக்குள் வருபவை.அப்படி வந்த பாடல்களைத் தொகுத்தால் ரஜினி பாடல்கள் என்கிற தனித்த இசைப்பேழை ஒன்றாக அது மலரும். ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ பாடல் ஒரு சூத்திரத்தில் அடங்காத நன்மாலை அல்லவா..? அடி வான்மதி என் பார்வதி என்ற சிவா படப்பாடல் படபடக்கும் பட்டாம்பூச்சியைப் பாட்டில் பெயர்க்கும் முயற்சி எனலாம்.
 
 
அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்குது பாடலைக் கேட்டால் ரசம். பார்த்தால் கொஞ்சம் சரசமும் விரசமுமாய் வேறாகும்.மூன்று முகத்தில் நான் செய்த குறும்பு உண்டாச்சு கரும்பு பாடலை எப்படி வகைப்படுத்துவது..? அதன் ஆரம்பத்திலிருந்தே அள்ளித் தெளித்திருப்பார் பாலு. தேவாம்ருதம் ஜீவாம்ருதம் கண்ணா பாடலை வேறு ஸ்டைலில் குழைத்தெடுத்திருப்பார் பாலு. மாசி மாசம் தான் மேள தாளம் தான் ஊர்க்காவலன் பாடல் அட்டகாசத் தேன்மழை.
 
 
மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம் பாடல் சொன்னோமல்லவா..? நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் பாடல் ரசிகர்களின் வழித்தடமாய் மாறிய பாடல். ரங்கா படத்தில் வருகிற ஏம் பேரு ரங்கா உன்னுடைய பங்கா பாடல் அத்தனை ஸ்டைல் கொப்பளிக்கும்.
 
 
தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ்ப்பாட்டு என்ற பாடலை சிறுவயதிலிருந்தே வியந்திருக்கிறேன்.கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன் குரு சிஷ்யன் பாடல், ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான் தர்மதுரை பாடல், துடிக்கும் கரங்கள் படத்தில் பாலுவே ரஜினிக்காக இசையமைத்துப் பாடிய மேகம் முந்தானை பாடல் மறக்க முடியாத ஒரு நல்வரம்.
 
                        
கோடை தென்றல் மலர்கள் ஆட
 
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
ஓ… அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்ப தேனும் ஊறும்
 
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
 
மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
பொன் மயில் ஆடுது வெண்பனி தூவுது
பூமி எங்கும் சீராட்ட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
அன்னங்களின் ஊர்வலம்
ச க ரி ம க… ம ம ட ப நி… ட ச நி ரி நி…
சுவரங்களின் தோரணம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
 
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
 
மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னி
ஆற்றில் பொற்க்கோல் அலையாட
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
இயற்கையின் அதிசயம்
ச க ரி ம க… ம ம ட ப நி… ட ச நி ரி நி…
வானவில் ஓவியம்….
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
 
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
 
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்ப தேனும் ஊறும்
 
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
 
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
 
 
 
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஆட பாடலைப் பல்லாயிரக்கணக்கான முறைகள் கேட்டிருக்கிறேன். மனமிளக்கி வில்லை என்பதை விட மனநோய்மையைக் கட்டுக்குள் கொண்டுவரக் கூடிய அங்குசக் கூர்மை இந்தப் பாடல். எத்தனையோ முறை நான் இதன் வசமாகி இருக்கிறேன். இரண்டு விசயங்களுக்காக இந்தப் பாடல் மிக மிக முக்கியமானது. மடை திறந்து என்ற பாடல் இளையராஜா இசை அமைப்பாளராக முயற்சி செய்கிற சந்திரசேகரின் பாடலாக அமைத்திருப்பார். அதனை அவரைத் தவிர வேறாராலும் மிஞ்சவே முடியாது என்பது இந்தப் பாடலில் ரஜினிகாந்த் இசைப்போட்டி ஒன்றில் கலந்து கொண்டு வென்று இசை அமைப்பாளராக மாறிப் பெரும்புகழ் அடைவார். இந்தப் பாடல்கள் இரண்டையும் அருகருகே வைத்தால் ஒன்று உற்சாகத்தின் கொண்டாட்டம் என்று அமைந்திருக்கும். இன்னொன்று அமைதியின் ஆழ்யவ்வனம் என்று நிகழ்ந்தேறும். இது ராஜவரிசை. மடை திறந்து பாடலின் துவக்கம் ஆர்மோனியம் இங்கே பாடல் முடிவில் தன்னை இணைக்கும் அதே ஆர்மோனியம்.
 
 
அடுத்த விசயம்  கொஞ்சிக் கொஞ்சி பாடலில் ஆழமும் உயரமும் மாறி மாறி வரும். இசையின் இழைதலாகட்டும் குரலின் பயணமாகட்டும் எல்லாமே ஏறி இறங்கி ஏறி இறங்கி வித்தை காட்டும். இந்தப் பாடல் அந்த ஆண்டின் நம்பர் ஒன் ஆக அந்த வருடம் முழுவதும் ஆண்டது. பின் நாட்களில் வந்த காதலுக்கு மரியாதை படத்தின் என்னைத் தாலாட்ட வருவாளா பாடலின் மைய இழைதலும் மேற்சொன்ன கொஞ்சிக் கொஞ்சி பாடலின் அதே இழையின் இன்னொரு அலைதல்தான் என்பது கூடுதல் வசீகரம்.
 
 
ரஜினி எஸ்.பீ.பி. காம்பினேஷனில் எத்தனையோ பாடல்கள் வந்திருக்கின்றன. ஒவ்வொரு வரியையும் ஏன் சொல் ஒவ்வொன்றாக எடுத்தெடுத்து ரஜினிக்காகப் பாடுவார் பாலு.
குழைவதிலாகட்டும் கம்பீரமாகட்டும் மற்ற யாருக்கும் மெனக்கெடுவதை விடவும் தனக்குள் இருக்கிற ரஜினியை ஆக்டிவேட் செய்து தான் அவற்றைப் பாடுகிறார் பாலு என்று கூடத் தோன்றும். ரஜினிக்காகப் பாடப்பட்ட குரல்களிலேயே உத்தமக் குரல் பாலுதான்.
 
 
மற்ற எந்த நடிகர் பாடகர் காம்பினேஷனை விடவும் நேசகாம்போ ஆகவே ரஜினி பாலு இணையை சொல்ல முடியும் எனத் தோன்றுகிறது. பாலுவின் பாடல்கள் என்று தனித்தறிய முடியாததும் ரஜினியின் பாடல்கள் என்றாலே பாலுவின் குரல் வந்து தானாகவே ஆட்சிப்பொறுப்பை ஏற்பதும் அந்த இணையின் வசீகரம். ஒரே நிகழ்தலின் இருவேறு பரிணாமங்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ரஜினி இணைந்தளித்த பாடல்கள்.
 
 
 
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...