அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பட்னாவிஸ் துணைமுதல்வர் - பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 79 - தோதான பாடல்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   27 , 2018  14:37:49 IST


Andhimazhai Image
பாடுதல் வானோர் வரம். இந்த ஜென்மத்துக்கு மேலெழுதப்பட்ட பூர்வபல ஜென்மங்களின் புண்ணிய மொத்தம். ஜாதகத்தில் ஒரு கட்டத்தில் குயில் முகம் தென்படுகிற விசேஷம். கூட்டத்தில் தனிக்கச் செய்யும் வித்தகம். என்னதான் பிறந்ததிலிருந்து சங்கீதம் கற்றுக் கொண்டாலும், குரல் கூடுதல் வைரம். நல்வரம்.
 
 
சாஸ்திரிய சங்கீதம் ஒரு முறை, தானாய்த் தோன்றுகிற பாட்டுக்காரர்கள் இன்னொரு வகை. பேருந்தை வியர்க்க வியர்க்க ஓடித் துரத்தி ஏறி விடுகிற மூன்றாவது முறை ஒன்று உண்டு, அதுதான் அந்தந்தப் பாடகர்களோடு சேர்ந்தே பாடுவது. கோரஸ் பாடுவது போலல்ல. கோரஸ் என்பது அட்ஜஸ்ட் ஆகிப் பாடுவது அல்லவா? இதை எதிர் கோரஸ் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதாவது அட்ஜஸ்டே ஆகிவிடக் கூடாது. டேப் ரிக்கார்டரில் ஒலிக்கிற எஸ்.பி.பி.யை நிஜத்தில் பாடி மிஞ்ச வேண்டும். 
 
 
 
"மாய ஜாலமென்ன" இந்த ஒரு வார்த்தையை "ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்" பாடலில் எஸ்.பி.பி எப்படிப் பாடுவார் என்று ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். "நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்" பாடலில் அதை அடுத்து வரும் "பெண்ணே" என்பதை ஜெயதேவ் எப்படிப் பாடுகிறார் என்பதை ஒரு கணம் கற்பனை செய்யுங்கள். மனோ மனோத்தனமாக ஒலித்தோங்குகிற பாடல்களில் ஒன்றான "வழ்ணச் சிந்து வழ்ந்து விளையாடும்" இந்த வரியைச் சற்றே கவனியுங்கள். 
 
 
குரல் என்பது நுட்பம். கையாளுகையில் தோற்றுவிக்கிற வித்தியாசம். சுருக்கொப்பம் என்று சொல்லுவோமே "counter sign" எல்லா நோட்டிலும் வாத்தியார் போடுவாரே, வங்கி சலானில் காசாளர் இடுவாரே, அதுதான் counter sign. அது போலத்தான் ஒவ்வொரு பாடகர்களும் பாடுகிற பாடல்களைத் தனதாக்கிக் கொள்ளுகிற சிற்சில நுணுக்கமான இடங்கள். அந்த இடங்களை அவதானிப்பது, பிறகு அதை அப்படியே பிரதிபலிப்பது சாத்தியப்படுவது முதல் அம்சம்.
 
 
இரண்டாவது விடயம், மீட்டருக்குள் பாடுவது. ஒவ்வொரு சொல்லும் அதன் இயல்பிலோ குறுகியோ மிகக் குறுகியோ நீண்டோ அதிகதிகம் நீண்டோ பாடப்பட்டிருப்பதை உள்வாங்கி, அது அதனை அவ்வவற்றை, அப்படியே அங்கனமே பாடிப் பழகுவது. அடுத்தபடியாக, பாடல் பங்குபெறுகிற படத்தின் கதாபாத்திரத் தன்மை, கதைத் தேவை ஆகியவற்றுக்காக அந்தப் பாடலைப் பாடிய பாடகர் செய்து கொண்டிருக்கக் கூடிய சின்னச் சின்ன சமரசங்கள். ஒவ்வொரு பாடலின் திருத்தி அமைக்கப்பட்ட அகமுகத்தைக் கண்டறிந்து அதனை அப்படியே துல்லியமாய்ப் பிரதிபலிப்பது. 
 
 
மேற்சொன்ன மூன்றாவது அம்சத்துக்கு மாற்றாக ஓர் அம்சம் உண்டு. ஒருவேளை, குறிப்பிட்ட பாடல் நட்சத்திரத்துக்காகப் பாடப்படுமேயானால், தொடர்ச்சியாகத் தன் பாடும் குரலுக்கும், அந்த நட்சத்திரத்தின் உரையாடற் குரலுக்கும் சின்னச் சின்ன நம்பகக் கண்ணிகளைத் தான் அவருக்காகப் பாடுகிற எல்லாப் பாடல்களிலும் தொனி ஆதிக்கம் செய்வதை அந்தப் பாடகர் ஒரு உப உத்தியாகப் பயன்படுத்தி வந்திருந்தால், அதனை அப்படியே பிரதிபலிப்பது. 
 
 
ஐந்தாவதாக, தன் குரல் அதன் பிடிமானத்தின் ஓங்குதல் நேரம், குரல் வீழும் நேரம், இவை பற்றிய சமரசமற்ற சுய பரிசோதனையை ஒருவர் செய்து கொள்ளுவது அவசியம். பாடல் எனும் விசித்திரப் பித்து மற்றெந்தக் கலைகளை விடவும் தனியாக யாவரையும் மயக்க வல்லது. நீச்சல் தெரியாதவன் நீரில் கால் நனைக்க அஞ்சுவான். ஆடலறியாதவன் கைகால்களை அசைக்க நாணுவான். சண்டை அறியாதவன் யுத்தம் எனும் சொல் கண்டு மயங்குவான். பேசத் தெரியாதவன் ஞானி போலவே தானும் மௌனிப்பான். சற்றேறக்குறைய சகல ஜீவராசிகளும் தனக்குப் பாடத் தெரியுமென்றும், பாட வருகிறதென்றும் நம்பத் தலைப்படுவார்கள். 
 
 
இதெப்படி நிகழ்கிறது? பிடித்த பாடலைத்தான் பாடுகிறோம். பலமுறைக் கேட்டதால்தான் அது பிடிக்க முடியும். அவரவர் பாடும்போதும் அந்தப் பாடகரின் குரலிலேயே அது கேட்கிறது, அல்லது அதன் பக்கத்து இருக்கையில் போய் அமர்ந்து கொள்ள அது விரும்புகிறது. இங்கே, உண்மையாகவே ஒரு பாடலை எங்கனம் எவ்வாறு பாட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளாமலே அதைப் பலகாலம் பாடி முடித்துவிடுகிறோம். 
 
 
தன் குரலுக்குத் தோதான பாடல்கள் எவை என ஒவ்வொருவரும் ஒரு தனித்த பட்டியலைத் தயாரித்துக் கொள்ள முடியும். யாவர்க்கும் எளிதான பாடல்கள் என்று இன்னொரு பட்டியலும் உண்டு. இரண்டையும் கலந்து அடித்தால் கலோக்கியல் லோக்கல் பாகவதர் உடனே ரெடி. முரண்பட்ட குரல்களை முயன்றுகொண்டே இருப்பது ஒரு போதும் பலன் தராது, போலவே முரண்பட்ட பாடல்களையும் முயல்வது தீது. உடன்பட்டால்தான் பாடல், முரண்பட்டால் அது வெறும் கூச்சல். 
 
 
ஒரு யேசுதாஸ் பாட்டு, ஒரு டி.எம்.எஸ் பாட்டு, ஒரு இளையராஜா பாட்டு, ஒரு கோரஸ் பாட்டு, என்பது மாமிசக் கத்தி கொண்டு மலர் பறிப்பதற்கு ஒப்பானது. ஒரே பாடகரின் பாடலைத்தான் கேட்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஆனால் ஒரே பாடகரின் பாடல்களைப் பாடிப் பழகுவது உசிதம். இன்னும் உப உப உபாயம் ஒன்று உண்டு. மலேஷியா பாடிய ரஜினி பாடல்கள், மனோ பாடிய ரஜினி பாடல்கள் என்று இன்னும் குறுக்கி யோசித்தால் துரிதகான ப்ராப்தி நிச்சயம். 
 
 
ஒரு பாடலை நூறாயிரம் முறைகள் தொடர்ந்து ஒலிக்கச் செய்து அதனோடு பாடுவதன் மூலமாக, நம்மால் அதில் தேர்ச்சி கொள்ள முடியும். இன்னும் உசித உபாயங்கள் சொல்வதானால், ஒரு பாடலை முழுவதுமாகப் பயிலவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. என் வழக்கப் பழக்கப்படி, ஒரு பாடலை மூன்று துண்டங்களாக நம்மால் உடைக்க முடியும். ஒன்று அதன் முகம், அதாவது அதன் பல்லவி. இரண்டு அதன் புறம், அதாவது அதன் கனவரிகள். மூன்று, அதன் உள்ளார்ந்த மென்வரிகள். பல்லவி நம் எல்லோருக்கும் தெரியும். அதென்ன, கனவரி, மென்வரி? 
 
 
"தோள்மேல தோள்மேல" என்னும் பாடலில், அதன் ஈற்று வரிகள் இப்படி வரும் "வீழ்ந்ததும் நல்லதே, தாகமாய் உள்ளதே". இதில் வரக்கூடிய "தாகமாய் உள்ளதே" உண்மையில் அவர் "தாஹமாய் உள்ளதே" என்று பாடியிருப்பார். இந்தப் பாடலின் சுருக்கொப்பம் அந்த "ஹ". இன்னொரு பாடலைக் கவனியுங்கள் "அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டித் தேரு". அது "பா"வா "வா"வா என்று லேசாய் கிறங்கடிக்கும்.. இன்னும் ஒரு பாடல், "சோகம் இனி இல்லை" பாடலில் "பாடும் பட்சி, நாங்கள் வாழும் கட்சி" இதில், சி, ஷி இவை இரண்டுக்கும் நடுவாந்திரம் ஒரு க்ஷி, அதற்கு முந்தைய ஒரு இடத்தில் அதை நறுக்கிப் பாடியிருப்பார். இவையெல்லாம் சூட்சுமங்கள். அந்த மென் வரிகளை மாத்திரம் எடுத்துத் தனியே நூறாயிரம் முறைகள் பாடிப் பழகுவது, பாடல் திறனை வளப்படுத்தும். மன உறுதி மிக அதிகம் தேவை, கேட்பவர்களுக்கு அதை விட அதிகம் இருக்கும் என்கிற புலமையும் முக்கியம். 
 
 
நான் நன்றாகத்தான் பாடுகிறேன் என்று ஒருவர் கிளம்பினால், இல்லை நீ நன்றாகப் பாடவில்லை என்று ஒரு நூறு பேர் திட்டுவார்கள். ஆனாலும், முதுகில் ரோப் கட்டப்பட்ட ஒல்லிப்பிச்சான் ஹீரோ, முகத்தில் திட தைரியத்துடனும், உள்ளே மனசு முழுக்க நடுக்கத்தோடும் சண்டை செய்வார் அல்லவா? சில சமயங்களில் காதல் செய்வார் அல்லவா? அப்படியாவது மற்றவர்களை அதிகாரம் செய்தாவது பாடும், பாடித் தொலையும் என்று அவர்கள் சொல்லும் அளவிலாவது தப்பித்துவிட வேண்டியது.
 
 
என்னோடு படித்த கரட்டாண்டி என்கிற மூவேந்தன், "மாப்ள, பாடு, பச்சமழ பூவு" என்பான். இதை ஒவ்வொரு முறை சொல்லும்போதுமே இரண்டு பாட்சாவாகி இருநூறு முறை சொல்லுவான். பாடிய பின்னாலும் சொல்லுவான் என்பதுதான் ஆறுதலற்ற நிஜம். அவன் சொல்வதைக் கேட்ட பிறகு சாட்சாத் அந்த எஸ்.பி.பி.யே தான் பாடும்போது அப்படிப் பாடித் தொலைத்துவிடக் கூடாது என்று அச்சமுறுவார். 
 
 
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பாடியே தீருவேன் என்கிற குரல் சபதம் மிக முக்கியம். பாடப் பாட வரும் பாடல் வரம். தயக்கத்தை உடைப்பது எல்லாக் கலைகளுக்கும் அடிநாதம். இது டப்ஸ்மாஷ் காலம். சுமார்க்குரல் தேவதைகள் அதிகதிகம் தென்படக் கூடிய ரீடிஃபைன்ட் உலகம். கரோக்கி உண்மையிலேயே ஓர் அற்புதம். டேப் ரிக்கார்டரின் மீட்டரைத் துரத்திக் கொண்டு பாடுவது கரோக்கி அல்ல. அங்கே பழகிவிட்டு இங்கே பாடுவது சிலாக்கியம். 
 
 
உங்களுக்கு எஸ்.பி.பி மேல் பைத்தியம், ஆனால் பாகவதர் போலத்தான் பாட வருகிறது என வைத்துக் கொள்வோம். பாலுவை நம்பி, பாகவதரைக் கைவிட்டுவிடக் கூடாது. மாறாக, பாகவதரோடு பல மைல் தூரம் பயணிப்பது அவசியம். எது வருகிறதோ அதுவே நிஜம். 
 
 
மணிவண்ணன் என்றொரு நண்பன் கோரஸ் பாடல்களாக மாத்திரம் தேர்ந்தெடுத்துப் பாடுவான். கூட்டத்தில் ஒருவன் மீது வழக்குப் போட முடியாது என்கிறாற்போல் தப்பிப் பிழைப்பான். அவனிடம் தனிக்குரல் தனிப்பாடல் ஒன்றைப் பாடு என்றால் அத்தோடு காலாவதி ஆவான். மின்சாரம் அறுகிற காலங்களில் நாங்கள் அதிகதிகம் சொந்தக் குரலில் பாடுவோம். என் தம்பி பாலாஜி ஒரு கபடன். நானும் அக்காவும் மாறி மாறிப் பாடுவதைத் தடுப்பதற்கென்றே வருவான். தனுஷ் படத்து சைல்டிஷ் வில்லனைப் போலப் பல உபாயங்களை முயல்வான். அதிலொன்று வாய்தா வாங்குவது. "அன்னிக்கு ஒரு பாட்டு பாட்னியே சூப்பரா பாட்னியே" என்பான். தாமத மலர்ச்செண்டு என்றாலும் மனம் மகிழ்ந்து, 'என்னிக்கோ நல்லா பாடியிருக்கோமே, அந்தப் பாட்டை ரிப்பீட் வேற கேக்கறானே" என்று அதைத் தேடுவோம். எந்தப் பாட்டைச் சொல்லி "இதுவா?" என்று கேட்டாலும், "இல்லை" என்பான். உண்மையில் ஒரு பாடலை என்னிடமிருந்தே அவன் உருவாக்க விழைவான். இப்படிக் கண்ணைக் கட்டிக் கொண்டிருக்கும்போது கரண்ட் வந்துவிடாதா என்று நப்பாசைப் படுவோம். தன்னையறியாமல் அவன் சொன்னதிலிருந்து அருகாமையில் ஒரு பாடலைக் கண்டுபிடித்து விடுவேன். அதையும் இல்லையென்று மறுக்க வழியில்லாமல் ஒரு கட்டத்தில் ஒத்துக் கொள்வான். அவன் கண் கலங்குமளவுக்கு அந்தப் பாடலைப் பாடிவிட்டுத்தான் விடுவேன். அடுத்த முறை கரண்ட் கட் ஆகும்போதும் அதே உபாயத்தை முயலுவான். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்ய பாலாஜி.
 
 
கண்ணன் என்ற ஒருவன் மலேசியா பாடிய ஆசை நூறு வகை பாடலை மட்டும் நன்றாகப் பாடுவான். ஒரே ஒரு பாடலைத் தனதாக்கிக்கொண்டு தன்னாலான பேட்ரியாட்டிசமாக அதனைப் பாடிவிட்டு வணக்கம் கூடி அமைந்து கொள்வான். ரஜினி, மலேசியா இருவரைத் தாண்டி மூன்றாவது நிழலாக ஒரு குறளி மாதிரி கண்ணனின் நினைவு தான் எழுகிறது அந்தப் பாடலைக் கடக்க நேர்கையில் எல்லாமும் அதெப்படி என்றால் அப்படிப் பாடுவான். அதனால் வந்த அப்படி.
 
 
எனக்கு சுமாராகப் பாடவரும் என்பது ஒரு கூற்று. நன்றாகப் பாடுகிறீர்கள் என்று அவ்வப்போது சொல்லப்படுவேன். இது இன்னுமோர் நிஜம். இந்த இரண்டு வாக்கியங்களில் எதாவதொன்று மாத்திரம் நிசமாக இருப்பது தானே சாத்தியம். அந்த இரண்டாவது கூற்றை மெய்ப்பிக்க நான் செய்த ஆராய்ச்சியே இந்த அத்தியாயம். நான் மாத்திரமில்லை. ஒரு இயந்திரத்தை அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றி மறுபடி பொருத்துவதென்பது அந்த இயந்திரத்தின் உள் அமைப்பை வெளித்தோற்றத்தை எல்லாவற்றையும் கற்றுக் கொள்வதற்கான பால பாடம் என்று புரிந்து கொள்ளலாம். அப்படித் தான் யாரும் கற்பிக்காமல் அந்தந்தப் பாடலையே பாடமாக மாத்திரமல்ல ஆசிரியராகவும் கொள்வது தான் சற்றே கடினமான ஆனால் நூறு சதம் பலனளிக்கக் கூடிய பாட்டு கிளாஸ். அப்படித்தான் டேப் ரிகார்டரை ஒலிக்கச் செய்து மறுபடி மறுபடி அந்தந்தப் பாடல்களைப் பாடிப்பாடி நான் கற்றுக் கொண்ட அந்தக் குறிப்பிட்ட பிரத்யேகமான பாடல்வரிசையைப் பாடும் போதெல்லாம் எனக்கு வழங்கப்படுகிற முத்துமாலை தான் நன்றாகப் பாடுகிறீர்கள் என்கிற பாராட்டு.
 
 
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒருவரம் பாடல் முதல் சாய்ஸ். என் இனிய பொன் நிலாவே இரண்டாவது சாய்ஸ் சங்கத்தில் பாடாத கவிதை மூன்றாவது சாய்ஸ் என என் விருப்பப் பாடல்களை அதிகதிகம் பாடிக் கொண்டிருந்த நான் இயல்பாக மற்ற இரண்டையும் கைவிட்டு விட்டு பாலு பாடிய பனி விழும் மலர்வனம் பாடலை அதற்கடுத்தாற் போல உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் பாடலை அமைத்துக் கொண்டேன். அதிகம் கஷ்டப்பட்டு முயன்று பேர் வாங்கிய இன்னொரு பாடல் தங்கத் தாமரை மகளே.. அதில் ஒரே ஒரு இடம் மிக முக்கியம் இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க அதை ஒலை என்று கொதிக்க என்னும் அளவுக்கு வளைத்துப் பாடுவார் பாலு. அந்த இடம் தான் பேரும் போரும்.
 
 
சூப்பர் சிங்கர்களிலும், மொழி பேதமற்ற பல டி.வி சேனல்களிலும் உள்ளூர்களில் நடத்தப்படுகிற ஆடிஷன்களுக்கு வந்துவிட்டு, "ரிசல்டை ஃபோன்ல சொல்றோம்" எனச் சொல்லப்பட்டதை "எங்களுக்குத் தெரியாதாக்கும், நாங்களே ஒலலலாய்க்குத்தான் வந்தோம்" என நன்கறிந்த ரிசல்டைப் பற்றிய கவலையேதுமின்றி கேஷுவலாகக் கிளம்பிச் செல்லும் அந்தப் பலரையும் நாம் டி.வி. ஷோக்களில் சந்திக்க முடியாது. என்றாலும், நன்கறிவோம் நாம்தான் அந்தப் பலரும் என்பதை. பாடத் தெரியாத பாடகர்கள் என்று ஒதுக்குவதை விடவும், பாடலை ஆராதிக்கிற ரசிகர்கள் என்று உணர்வது நல்லது. வாழ்க ரசிகர்கள். வாழிய பாடல்கள்.
 
 
 
[ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்.]


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...