அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பட்னாவிஸ் துணைமுதல்வர் - பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 75 - காதலுக்கு ஆயிரம் ஜன்னல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   27 , 2018  10:13:47 IST


Andhimazhai Image
சிப்பியும் முத்தும் இருக்கிற பாடல் எத்தனை முறை கேட்டாலும் ஏன் சலிக்கவில்லை..? இப்படியான பாடல்கள் புதிர்களைப் போல அவற்றின் விடை அறிந்த பிற்பாடு அலுத்திருக்க வேண்டாமா..? எல்லாம் இசை செய்கிற ஜாலம் எனலாமோ?
 
 
தனனனான தனனனான தன்னா...
 
 
என்றுவிட்டு ஒரு சின்ன ஜெர்க் காட்டப்படும். அதாவது ஸ்ரீதேவி சொன்ன சந்தத்துக்கு மெய்யாலுமே கமலானவர் வரி சிக்காமல் திணறுவார். கொஞ்ச நேரத்தில்  ரதியும் நாடும் அழகிலாடும் கண்கள் என்று தொடர்வார். கமல்ஸாரா கொக்குஸாரா..? பின்னால் கண்ணதாசன் என்ற பெருங்கவியும் எம்.எஸ்.விஸ்வநாதரும் செய்து காட்டிய வித்தகம் என்றாலும் இந்தப்பாடல் மற்றவற்றில் இருந்து தனித்ததனாலேயே உயர்ந்தோங்கி ஹிட் ஆனது. மற்றபடி இதனைப் பலமுறை கேட்க  நேர்கையில் சலிக்காமல் எப்படி இருக்கிறது என்பதன் சூட்சுமம் தெரிந்தே அவிழ்க்கும் பழகிய புதிரின் விடையை மீறிய அவிழ்கண வெம்மைக்கான தேடல் பற்றியது என்பது ரசம்.
 
 
இங்கேதான் சொக்கநாதன் என்ற உலகம் அறியாத மாமேதையின் வருகை நியாயமாக நிகழ வேண்டியிருக்கிறது.
 
 
விஸிலாலே சிலை செய்து உனக்காக வைப்பேன் என்று சொல்லத் தக்க விஸில் மேதை அவன். முதன் முதலில் அவனைப் பார்த்த போது ஹிஸ்டரி படிக்கும் ராம்ஸின் பள்ளி நண்பன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான். படிய வாரிய தலைமுடி கண்ணில் பெரிய ஃப்ரேம் போட்ட கண்ணாடி என்று  பாக்யராஜ் அல்லது தனுஷ் மாதிரியான நடிகர்களின் பாத்திர அறிமுகக் காட்சியில் திட்டமிட்டு ஒரு ஒப்பனை இத்யாதிகளோடு வருவார்கள் அல்லவா அப்படி அறிமுகமானான். என்னவோ ஒரு அம்சம் அவனை பெருங்கூட்டத்தில் தனிக்கச் செய்தது.என்ன பேசினாலும் சின்னதொரு புன்னகைவெட்டோடு ஆரம்பிப்பான். எல்லாம் இருக்கட்டும். சிலரைப் பார்த்த மாத்திரத்தில் பிடிக்கும். அப்படியானவர்களைத் தான் வேற்று காலக்ஸி காரர்கள் மத்யஸ்தத்துக்கு அழைக்கத் தேர்ந்தெடுப்பார்கள் என்று ஜோ சொல்வான். ஜோ முக்கியமில்லை இந்த அத்தியாயம் சோக் என்கிற சொக்கநாதனுக்காக நேர்ந்துவிடப்பட்டது.
 
 
நாமெல்லாம் என்ன செய்வோம்..? தேடி வந்த ராம்ஸ் இல்லை என்றான பிற்பாடு ஒரு அன்னியக் கல்லூரியில் வேறு யாரையும் மருந்துக்குக் கூடத் தெரியாது என்ற நிலையில் கிளம்பி வெளியே நடப்போம் அல்லவா..? அட் லீஸ்ட் ஒரு காலைக்காட்சிக்காவது செல்வோமே தவிர ஆள் தெரியாத அன்னியஸ்தானில் எப்படி  இருப்போம். அவன் இருந்தான். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல மூன்றாவது நாள் வந்து அதே ஒரே படுக்கை வசம் சாய்ந்து கிடத்தப்பட்ட வேம்பு மரத்தின் முதுகின் மீது சம்பிரமமாக அமர்ந்து கொண்டான். எங்களில் அவனுக்கு ஸ்னேகம் தோன்றிய நபர்களைப் பார்க்கையில் எல்லாம் புன்சிரித்தான்.
 
 
அடக்க மாட்டாமல் கேட்டே விட்டான் மூவேந்தன். அலோ பாஸ் ராம்ஸ் எதுனா காஸ் எதும் தர்ணுமா.? தினமும் இப்டி டிவோசனலா வந்து விடாப்பிடியா உக்காந்துட்டு போறீங்களே..?"
 
 
அதெல்லாம் இல்லை என்றவனிடம் இல்லை சகோதரா ஒருவேளை அவன் காஸ் தர வேண்டி இருந்து அதை வசூலிக்கணும்னு நீங்க இப்டி காவல் காத்தா அது வேஸ்ட்டு. ஏன்னு கேக்குறீங்களா என்று ஒரு பாஸ் விட்டான். நான் கேக்கலையே என்ற ந்யூட்ரல் புன்னகையைக் கடந்துகொண்டே இல்லை பாஸ் ஏன் சொல்றேன்னா அவன் அப்டி கடன் தரவேண்டி இருந்தா நீங்க இங்க வந்து உக்கார்றதை எப்டியாச்சும் அவன் தெரிஞ்சிட்டிருப்பான். அப்பன்னா பத்து நாளைக்காச்சும் இந்தப்பக்கமே வரமாட்டான். இது நியதி. இதுல ராம்ஸ் கேக்கவே வேணாம். சரியான டால்டா என்றான்.
 
 
அவன் அதற்கு இல்லைங்க எனக்கு அவன் காஸெல்லாம் தரத் தேவை இல்லை என்று மாத்திரம் சொன்னான். திடீரென்று ஒரு மழைவருகை அப்போது ரெண்டாவது அவர் தான் முடிந்திருந்தது. காலை 11 மணி வாக்கில் ஒதுங்க இடமில்லாமல் முகப்புக் கட்டிடத்திலிருந்து பின் பக்கம் இருந்த முதல் வருடக் கிளாஸ்கள் நடக்கிற இடம் நோக்கி ஓடினோம். டிமிக்கி சுற்றிக் கொண்டிருந்த நாலைந்து பேர் தான் கடைசி கிளாஸ் மாணவர்கள் கம்பைன் க்ளாசுக்காக சென்றிருக்க காலி வகுப்பில் அமர்ந்தபடி அதற்குப் பின்னதான மழையை ரசித்தபடி பேசத் தொடங்கினோம்.
 
 
பிஸிக்ஸ் அஷோக் நான் ரம்பா என்று அன்போடு அழைக்கப்பட்ட சிவசு அப்புறம் நாலாவதாக அந்த மேற்சொன்ன அதே சொக்கநாதன்.
 
 
நான் கேட்டேன்.. ஏங்க இன்னைக்காச்சும் உங்க ப்ளாஷ்பாக் என்னானு சொல்லுங்க என்றதும் அவன் கூச்சமும் வெட்கமுமாய் சொல்றேன் என்று தன்னை அகழ்ந்தான்.
 
 
சொக்கநாதன் மதுரைக்கு அருகாமை வில்லேஜ் பையன். படிப்பது வேறொரு கல்லூரியில். தமிழ் நாடு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் அவருடைய காதல்ராணி படிக்கிறார். அவருக்கும் ஸாருக்கும் லவ்வாகி இரண்டு மாதங்களில் லேசாக லவ் பட்டம் கிழிந்து விட்டிருக்கிறது. அந்த வெறுப்பில் செமஸ்டர் முடியும் வரை கல்லூரிக்கு சரியாக செல்லவில்லை. அப்புறம் லவ் மறுபடி தன்னை துளிர்த்துக் கொண்டது என்றபோதும் ஸாருடைய படிப்பு அதாவது அந்த செமஸ்டர் ரிபீட் போட்டு விட்டார்கள். ஆர்சி எனப்படுகிற புனிதச்சிலுவை அது.அதனை மறுபடி தோன்றி நல்லொழுகி பூர்த்தி செய்து அட்டெண்டென்ஸ் சேகரித்து அப்பால் பரீட்சை எழுத வேண்டும். இதில் பாருங்கள் ரெண்டாவது தடவை வர வைத்து இன்புறும் கல்லூரி அந்த இரண்டாவது தடவை நீ ஒழுங்கா வந்தே 
ஆகணும் என்று எந்த கண்டீஷனும் போடுவதில்லை.வர்றியா வா..அட்டெண்டன்ஸ் வேணுமா வந்து உன் மூஞ்சைக் காட்டிட்டு போயிறு. முன்னாடியே நிக்காத புரியுதா என்று கடுமை காட்டும். இதென்ன லாஜிக்கோ என நம் ஸாரும் அப்படித் தான் எல்லாருக்கும் மூணு வருசம் எனக்கு மட்டும் நல்லாப் படிக்கிறேன்னு ஒரு வருசம் கூடுதலாப் படிக்க சொல்றாங்கப்பா..என்ன ஃபீஸ் மாத்திரம் கொஞ்சம் அதிகம் அப்பறம் ட்யூசன் வேற வைக்கணும் என்றெல்லாம் தன் மகனை முதல் தலைமுறை பட்டதாரியாக்கக் கனாக்கண்டபடி வயலில் விவசாயம் செய்கிற அப்பாவிடம் ஒன்றுக்கு இரண்டாய் ஃபண்ட் ரைஸிங் செய்து கொண்டு நாளும் கிளம்பி மதுரை வரும் துரை தன் லவ்வியைக் கண் கலங்காமல் கல்லூரி வாசலில் டாட்டா காட்டி விட்டு அப்புறம் எங்கே செல்வார்..? பாவப்பட்டவர்களுக்கான ரட்சகவிலாஸ் எங்கள் கல்லூரிதானே.? அதான் ராம்ஸைத் தேடி வருகிறாற்போல் அங்கேயே திரிந்து விட்டு மதியம் கேண்டீனில் புவ்வா சாப்டுவிட்டு 
அவ்வப்போது டீ காஃபி முறுக் இத்யாதிகளோடு இயற்கையை ரசித்துக்கொண்டு வாழ்க்கையை வியந்து கொண்டு...வெல்...திஸ் இஸ் தி ஸ்டோரி பேக்ட்ராப் ஆஃப் மிஸ்டர் சொக்கநாதன்.
 
 
நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும்..? ஏண்டா டேய்..ராம்ஸ் ஃப்ரெண்டுன்னா வெளில பார்த்துக்கடா...ஊர்ல இடம் இல்லாதவனெல்லாம் வந்து மேயுறதுக்கா எங்க காலேஜூ வெளில போடா அயோக்கியா அப்டியெல்லாம் திட்டி விட்டு வேர் இஸ் யுவர் ஐடி கார்ட் என எல்லோரையுமே கேட்பதைத் தன் முதல் வழக்கமாக வைத்திருக்கும் பிரின்ஸ்பாலிடம் கொண்டு போய் அவனை ஒப்படைத்திருக்க வேண்டாமா.? அதைச் செய்யவில்லை நாங்கள்.
 
 
அப்டியா பாஸ்...வெல்கம் டு அவர் காலேஜ் என்று எதோ அயல்நாட்டு டாக்டரை வெல்கம் செய்யும் மெடிகல் காலேஜ் ஃபாகல்டி மாதிரி அவனை வரவேற்றோம். அதன் பிற்பாடு அவன் எங்கள் ஜோதியில் தானும் ஐக்கியா ஆனான்.
 
 
அடுத்த வாரம் முழுக்க எங்களோடு சொக்கனும் சுற்றத் தொடங்கினான். கலைவாணி தியேட்டரில் முந்தைய வருட தீவாளி ரிலீஸ் படமான குருதிப்புனல் ஓடியது.நாங்கள் ஆவென வாய் பிளந்து பார்த்தோம். கைசுருக்காது செலவழிக்கிறவன் எந்தக் காலேஜாக இருந்தால் என்ன.? அடுத்த சில தினங்கள் எங்களைத் தன்னால் ஆனமட்டும் செலவாபிஷேகம் செய்து குளிரச் செய்தான் சொக்கநாதன்.
 
 
உன் ஆளப்பத்தி சொல்லுய்யா என்று இப்போது கேட்கிறார்களா எனத் தெரியவில்லை. ஒரு நண்பன் இன்னொரு நண்பனிடம் நட்பான புதிதில் இல்லாவிட்டாலும் ஒரு ஸ்ட்ராங்க் இடத்தை நட்பு அடைந்தபிறகு இதைக்கேட்க வேண்டும். அதான் லாபாயிண்ட். அப்படிக் கேட்டால் அதற்கு அந்த லவ்வநண்பனும் பதில் சொல்வான். இப்போது போல ஃபோட்டோ செல்லுகளெல்லாம் இல்லாத வெள்ளந்திப் பருவமன்றோ..? என் டைவா கண்ணு மூக்கு என்றெல்லாம் சுமாராக வர்ணித்து விட்டு அவளது குணங்கள் பற்றி விவரிக்க ஆரம்பிப்பான்.அது தான் கேட்ட் கேள்வியின் நிஜ அர்த்தம்.பிஸிகல்லி ரொம்ப பேச கூடாது அல்லவா..?
 
 
சொக்கநாதன் தன் காதலி பேர் சொல்வதற்கே வெட்கினான்.ரொம்ப நல்லவங்க..நல்லா படிப்பாங்க என்று மரியாதையாகவே மொழிந்தான்.அது எனக்கும் சிவசுக்கும்  பிறகு ஒரு நன்னாளில் வந்து ஜாயிண்டு ஆன ராம்ஸூக்கும் ரொம்ப பிடித்திருந்தது. நாமளும் நம்ம லவ்வரை இப்டிதான் சொல்லணும் மாப்ளே என்று கறாராக  என்னிடம் சொல்லி அதைத் தனக்கும் ஞாபகப்படுத்தவேண்டும் என்று கண்டிஷனும் போட்டான் சிவசு.
 
 
இர்றா கதையை டிஷ்டர்ப் பண்ணாதடா என்று அவனை அடக்கி விட்டு நீங்க சொல்லுங்க காதலன் ஸார் என்று உருகினோம்.
 
 
சரிங்க எப்டி உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சாங்க..? எப்டி அசத்துனீங்க என்று கேட்டேன். முகமெலாம் காதலின் பொய்யறியாப் பேருவகையைப் படர்த்தியபடி தனக்குள் இருந்த அபாரத்தை வெளிப்படுத்தினான் சொக்கநாதன்.
 
 
அதாகப்பட்டது காதல்ராணிக்கு ஒரு பாட்டு மிகமிகமிகப் பிடிக்கும்
 
 
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே.. என் கண்ணே
 
பூபாளமே.. கூடாதெனும்
வானம் உண்டோ சொல்…
 
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே
 
தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கை தான் என்ன.. சொல்……
 
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே
 
மேடையைப் போல வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன.. வா…
 
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே.. என் கண்ணே
 
பூபாளமே.. கூடாதெனும்
வானம் உண்டோ சொல்…
 
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே
 
 
தன் உதடுகளை ஒரு வாத்தியமாகவே மாற்றிக்கொண்டு உள்ளிருக்கும் ஆன்மாவிலிருந்து காற்றை ஒரு கட்டளை போலவே பிறப்பிக்கப் பழகியிருந்தான் சொக்கநாதன். அவனது அந்தப் ப்ரயோகத்தை வெறும் திறமை என்றெல்லாம் சொல்லி ஒரு வட்டத்துக்குள் அடக்கி விட முடியாது. அது ஒரு அபாரம். மிக மிக தனித்த ஒன்று அவனது விஸில்திறன்.
 
 
என்ன பிரமாதம் நான் கூடத்தான் என ஆரம்பிக்கிறீர்களா..? இந்தப் பாராகிராஃப் உங்களுக்காக..
 
 
வார்த்தைகளை விஸில் செய்யும் போது அது ஒரு மாதிரி லயத்தில் தொனிக்கும். அதுவே இண்டர்ல்யூட்ஸ் எனப்படுகிற இடையிசைக்கு இன்னொரு வகையான விஸிலாய் விரியும். இன்னும் நுட்பமாக அவனைக் கவனித்திருக்கிறேன். சில தனித்த பாடல்களில் உடனொலிக் கூட்டாக வருகையில் அதற்குத் தனியாக மூன்றாவது தொனியை பழகி இருந்தான் சொக்கன். அவ்வளவுதான் என நினைக்க வேண்டாம். புல்லாங்குழல் வருகையிலெல்லாம் கிட்டத்தட்டப்  புல்லாங்குரலாகவே அதை வசப்படுத்த நாலாவது மாயம் செய்தும் அசத்துவான்.
 
 
அசலான திறன் அவனுடையது. தன் காதலியை அவன் பாடலால் அபிஷேகம் செய்தான். அவளோ அவன் விஸிலைக் கேட்டதும் குயில் தன் இணையைப்  பார்த்துக் கிறங்கினாற் போல் தன்னுள் கிறங்கினாள். எங்களுக்காக தன் காதலிக்கு மிகவும் பிடித்த மன்றம் வந்த தென்றலுக்கு பாடலை பாடிக் காண்பித்தவன் எங்கள் கல்லூரியில் தஞ்சம் புகுந்ததற்கான நிசமான காரணத்தை வெட்கம் கலந்த காதல் வழிந்த குரலில் சொன்னான்.
 
 
எதுக்குய்யா இந்த வேணாத வேலை என்று ஆனானப்பட்ட நானே அவனிடம் சொல்லும் அளவுக்கு அந்தக் காரணம் இருந்தது.
 
 
எதுவென்றால் தன் பிறந்த நாள் பரிசாக அந்தக் காதல்ராணி அவனிடம் தனக்கான அடுத்த பாடலை விஸில வேண்டுமெனக் கேட்டிருக்கிறாள். அவனும் சரித்தான் நீ கேட்டு நான் மறுத்தா விடுவேன் என்று கிளம்பி இருக்கிறான். அதுவோ சாதா பாடலல்ல.தாதா பாடல்.கடினமான ஒரு பாடல். எளிதாக பாடுவதற்கே ஆகாது. இதில் முழுவதையும் விஸிலில் பரிமளிப்பது ஆகச்சிரமம் இல்லையா.?
 
 
அவன் காதலை எடுத்தெடுத்துத் தன்னுள் நிரப்பி வழிந்து கொண்டிருந்தான். கேட்கவே இல்லை.எங்கள் கண் முன்னாகவே அந்தப் பாடலை அதன் ஒவ்வொரு வரியாக அவன் ப்ராக்டீஸ் செய்ய ஆரம்பித்தான். அப்போது அவனைப் பார்க்கையில் பாவம் யார் பெற்ற பிள்ளையோ இப்டி வாய் வலிக்க கஸ்டப்படுதே என்று உச்சு கொட்டினபடி இருந்தோம். அவன் சிரித்துக் கொண்டே விசிலைக் கைவிடாமல் இருந்தான். சரியாகப் பன்னிரெண்டாவது நாள் சரளமாக அந்தப் பாடலை ஒரு பிசகில்லாமல் பாடினான். ஸாரி விஸிலினான்.
 
 
அதில் பாருங்கள் ஸார்வாள்...அந்தப் பாடலின் நடுவாந்திரம் ஒரே ஆலாபனையாக இருக்கும்.கேட்கும் போதே நாமெல்லாரும் பாதி வித்வானாக மாறி விடுவோம்.அதை கர்னாடக சங்கீதம் துளியும் அறியாமல் எழுதி வைத்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக தனித்தனியாக ப்ராக்டீஸ் செய்தான். ஒவ்வொரு பூவாய் எடுத்துக் கோர்த்து மாபெரிய மாலையாய் ஆக்குவதைப் போலவே அந்தப் பாடலை சின்னத் துளிகளாய்ப் பகுத்துத் தன்னுள் நிறைத்துக் கொண்டான்.
 
 
முழுவதுமாக அவன் அந்தப் பாடலை முதல்தடவை விஸில் செய்த போது எங்கள் கல்லூரியில் ஆங்காங்கே அமர்ந்திருந்த மாணவர்கள் கிட்டத் தட்ட நாற்பது பேர் குழுமி நின்று கேட்டோம். கண்களை மூடி முழுப் பாடலையும் பிறழாமல் முடித்தவனைத் தூக்கி தட்டாமாலை சுற்றிக் கரவொலிகளால் அவனை அர்ச்சித்து கொண்டாடித் தீர்த்தோம். அதென்ன அந்தப் பாட்டு அப்படியான பாட்டு என்று கேட்கவே வேண்டாம். இதோ லிங்கு! சாமீ... 
 
 
 
சரியாக நாலு வருடங்கள் கழித்து ஒருநாள் ராம்ஸூம் நானும் பேசிக் கொண்டிருக்கும் போது எப்டிடா இருக்காப்ல விஸிலு என்றேன்..? உனக்குத் தெரியாதா என ஒரு கணம் நிதானித்தான். என்னவோ எனப் பார்த்தேன். சொக்கனுக்கு கல்யாணம் ஆய்டுச்சி. அவரு துபாய்ல வேலை பார்க்குறாப்ல இப்ப என்றான்.
 
 
ராணி தானே என்றேன்.
 
ஃபீஃபீஃபீ என்று விஸிலிலேயே ஆமோதித்தான்.
 
ஆமாமா இவரு பெரிய சொக்கநாதன் என்றேன் இருவரும் சிரித்துக்கொண்டோம்.
 
 
(ஆத்மார்த்தி, தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி   அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...