???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி 0 கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி கிணற்றில் இறங்கியுள்ளார்: டிடிவி தினகரன் 0 காலியானதாக அறிவிக்கப்பட்டது ஒசூர் தொகுதி 0 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றி தமிழக அரசு உத்தரவு 0 விஜயகாந்த்தின் உடல்நலம் விசாரித்தார் பியூஷ் கோயல் 0 உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை! 0 அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு 0 அதிமுக-வுடன் பணத்திற்காகவே பாமக கூட்டணி:மு.க.ஸ்டாலின் 0 பாஜக தலைவர் அமித் ஷா வருகை திடீர் ரத்து! 0 செயல்பாட்டாளர் முகிலன் மாயம்: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு 0 திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை 0 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை 0 ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராவதில் மீண்டும் விலக்கு கேட்டார் ஓ.பி.எஸ்.! 0 அமித்ஷா இன்று சென்னை வருகை! 0 பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மீட்கத் தீவிரமாக முயல்கிறோம்: தொலைத்தொடர்பு அமைச்சகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 52 - வித்யாசமாய் ஒரு சாகரம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்.

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   22 , 2017  06:17:48 IST


Andhimazhai Image

அக்காவின் வகுப்புத் தோழர் இளங்கோ. அவர்கள் கல்லூரி முதலாம் ஆண்டு படித்த போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அவர்கள் படித்தது பி.எஸ்.ஸி கணிதம்.அக்காவும் அவரும் போட்டி போட்டுக் கொண்டு படிப்பார்கள்.இளங்கோ அண்ணன் பேசுவது அவருக்கே கேட்காது என்று ஒரு தடவை கிண்டல் அடித்தேன். அக்கா என்னிடம் கடிந்து கொண்டார். ரொம்ப நல்லவண்டா தம்பி கண்ணா (இளங்கோவின் வீட்டில் அவரை அப்படி அழைப்பார்கள்).

 

இளங்கோ அண்ணனும் நானும் மணிக்கணக்கில் பேசுவோம். அவருக்கு ராஜா என்றோரு நண்பர். அவரது சிறுவயதுத் தோழர் கிருஷ்ணா தான் என் அக்காவின் கணவர். ஆக என் அக்காள் கணவரின் நண்பர் ராஜாவின் நண்பர் இளங்கோ என்றும் சொல்லலாம்.

 

ராஜாவுக்கும் இளங்கோவுக்கும் இடையே மொத்தம் பத்து வித்யாசங்கள் இருந்தால் அதிகம். அப்படி ஒருங்கே சிந்திக்கும் நண்பர்கள் சொற்பசாத்தியம்.எழுத்தாளர்கள் சுபாவைப் பற்றி எந்த விஷயத்தைக் கடக்க நேர்ந்தாலும் ஏனோ கண்ணா ராஜா இருவரின் நினைவுகளும் வரும். இன்று நேற்றல்ல இருபத்தைந்து வருடங்களாக ஒத்த சிந்தனையும் ரசனையும் கொண்ட நண்பர்கள். இருவருமே நல்ல இசைப்ரியர்கள்.அடிப்படையில் ஓவியர்கள். ராஜா வரைந்த ஒரு இளையராஜா ஓவியத்தை நான் வரைந்தது என்று என் கல்லூரிகாலத் தோழிகளிடம் காட்டிப் பொய்யாய் என் டீஆர்.பியை ஏற்றிக் கொண்டிருக்கிறேன். பிறகு அதனாலேயே வெறி வந்து ஒரளவுக்கு பென் ட்ராயிங் எனும் சவாலான வரைதலுக்குள் கொஞ்ச காலம் திரிந்தேன்.

 

கண்ணாவின் வீட்டில் அவரது அறை அமைதியாக இருக்கும். ஒரு ஓரத்தில் கட்டிலுக்கு எதிர்ப்புறம் ஸ்டடி டேபிள் என்றெல்லாம் பிரித்தறிய முடியாத மேசை. அதன் மீது துணி விரிப்பு.ஒரு ஓரத்தில் கேஸட்டுக்கள் இன்னொரு பக்கம் புத்தகங்கள் வரிசையாக இருக்கும்.பார்க்க அத்தனை அழகாக இருக்கும். என் வாழ்வின் முதல் முதலில் எனக்குக் காணக்கிடைத்த ஆதர்ஸ அறை கண்ணாவினுடையது. அவர்கள் வீட்டில் டீவீக்கு மேல் அழகாக துவைத்து அயர்ன் செய்யப்பட்ட கைக்குட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கும். அவரது தந்தை ஒரு ஆசிரியர்.அவரது அறையும் அதன் லேசான இருளுடன் கூடிய ஞாபகம் ஒரு கறுப்பு வெள்ளை சித்திரமாக எனக்குள் இப்போதும் மெல்ல உயிர்பெறுகிறது. ஞாபகத்தின் பொய்யாத் தூரிகைக்கு ஒப்பேது?

 

இளையராஜாவின் பித்தனான எனக்கு ஆல்பங்கள் பற்றியெல்லாம் அறிமுகம் கிடைத்தது அவர்கள் இருவரிடம் இருந்து தான். இரண்டு பேருமே அப்போது உருவாகி வந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை ரசித்தாலும் இளையராஜா மீது பக்தி கலந்த பித்துக் கொண்டிருந்தவர்கள். கண் மல்க சில பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறோம்.அப்போதுதான் தன் அடுத்தடுத்த ஹிட்களால் திரும்பிப் பார்க்க வைத்த வித்யாசாகரின் பல படங்கள் பெருவெற்றி பெற்றன.

வித்யாசாகரின் புதையல் கர்ணா பாடல்களை ராஜாவும் நானும் அல்லது கண்ணாவும் நானும் என இரு வேறு காம்பினேஷன்களில் அதிகதிகம் கேட்டது நினைவிலாடுகிறது. இன்னமும் ஆஸ்திரேலியாவில் ராஜாவும் திருவனந்தபுரத்தில் கண்ணாவும் அதே பாடல்களை விரும்பிக் கேட்டுக் கொண்டிருப்பதை சமீபத்திய நலவிசாரிப்புகளில் அறிந்தேன்.இனி வித்யாசாகரின் இசைக்குள் செல்வோம்.

 

வித்யாசாகரின் பாடல்கள் தீர்க்கமானவை. மென்மையான பாடல்களை கச்சிதமான விட்டுத் திரும்பி ஒலிக்கிற இசைக்கோர்வையாகத் தொடங்குவது வித்யாசாகருக்குக் கைவந்த கலை. அதே நேரத்தில் நதியின் இரண்டாம் கரைதொடலைப் போல ஓங்கி ஒலிக்கிற இசைக்கோர்வையில் தொடங்குகிற மென்மைப்பாடல்கள் மெல்ல மெல்ல குழைந்து பல்லவிக்குள் செலுத்தப்படுகிற சித்துவேலையையும் அனாயாசமாகச் செய்ய வல்லவர்.

 

வித்யாசாகர் பூமனம் படத்தில் அறிமுகமானார் என்றாலும் பல வருடக் காத்திருத்தலுக்குப் பிறகு வந்த ஜெய்ஹிந்த் மற்றும் கர்ணா ஆகிய படங்கள் அவரை நன்கு அறியச்செய்தன. மலரே மௌனமா....எனத் தொடங்கும் பாடல் அந்த வருடத்தின் முதலிடப் பாடல் என்பேன்.

 

1996 ஆமாண்டு வெளியான ப்ரியம் படம் பெரிதாகப் போகவில்லை.பாடல்கள் முன்பே வெளியாகி பைத்தியம் கொள்ளச் செய்தன. அத்தனை பாடல்களுமே ப்ரியம் படத்தில் பெரும் ஹிட்களாக உருப்பெற்றன. உடையாத வெண்ணிலா என்றாரம்பிக்கிற பாடல் தொடங்கி எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதினார். புதையல் படத்தில் தீம் தக்கு தக்கு தீம் ஒச்சம்மா ஒச்சம்மா, பூத்திருக்கும் வனமே உள்பட எல்லாப் பாடல்களுமே பெரிதும் ரசிக்க வைத்தன.நிலாவே வா படத்தில் இடம்பெற்ற நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் என்ற பாடல் இளையவர்களின் இன்றியமையாத கீதமாய் மாறிற்று. தில், அள்ளித் தந்த வானம், தூள், ஸ்னேகிதியே, ரன், பூவெல்லாம் உன் வாசம், வில்லன், கில்லி  ஆகிய படங்கள் வித்யாசாகரின் சூப்பர்ஹிட்ஸ்களில் சில.

 

வித்யாசாகரின் பலமாக நான் முன்வைக்க விரும்புவது அவர் பாடலின் ஒவ்வொரு வரியும் கேட்கும் முதன்முறையே தீர்க்கமாய் புரியவேண்டும் என்ற நிதானத்துடனே தன் பாடல்களைப் படைத்தது தான். அவரது பாடல்கள் வரிகளைக் கொல்லாது கொடுமைப்படுத்தாது மாறாக உயிரும் உடலும் போல் உள்ளுறையும்.

மந்திரப் புன்னகை படத்தின் இந்தப் பாடல் என்னால் மறக்க முடியாத இன்னொன்று என்பேன். சுதா ரகுநாதனின் ஒப்பிலாக் குரல் இந்தப் பாடலை உயிரருகே ஒலிக்கச் செய்யும். இதே படத்தில் மேகம் வந்து போகும் என்ற இந்தப் பாடலும் மென்மையான கரையோரத் தண்ணீர்த் தழுவலைப் போல மனதை நனைத்து நிறைக்கும். இரண்டு பாடல்களையுமே அறிவுமதி எழுதியிருப்பார்.

தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல என்ற பசும்பொன் படப் பாடல் பல்லவி முடிகிற இடத்தில் அசாதாரணமாய் சுழன்றேறும் தேரோட்டப் பாதை போல் ஆகும் கேட்கின்ற மனது.

 

கனாகண்டேனடி எனத் தொடங்குகிற மதுபாலகிருஷ்ணனின் பார்த்திபன் கனவு படப் பாடல் ஆயிரக்கணக்கான முறைகள் கேட்கவைத்த பாடல்.

        

பூங்காற்று வீசும் பொன்மாலை நேரம் இந்தப் பாடல் மிஸ்டர் மெட்ராஸ் படத்துக்கா வித்யாசாகர் அமைத்த பாடல். சின்னச்சின்ன ஆசை பாடலின் மிக அழகான மறு உரு இந்தப் பாடல். சாயல் என்ற சரியான உச்சியில் நின்று கொண்டதால் தப்பித்திருக்கும் இந்தப் பாடல் நம் ஆன்மாவை மெல்ல நீவித் தர வல்லது. இதே பாடலின் அடுத்தடுத்த ஏற்ற இறக்கங்களை மாற்றி கரகாட்டக்காரன் படத்தின் மாங்குயிலே பாடலின் மைய இசையைக் கோர்த்து இன்னுமொரு பாடலாகவே அத்தித்தோம் என்ற சந்திரமுகி பாடலை அமைத்திருப்பார்.

மிஸ்டர் மெட்ராஸ் படத்தின் பிரபு கதாபாத்திரம் பாடும் தனியாவர்த்தனப் பாடல் இது. இதன் பல்லவி முடிந்து முதல் சரணத்தை நோக்கிப் பாயும் போது ஒரு கிளைச்சாலையில் இருந்து மெல்ல நெடுஞ்சாலையில் ஏறி அடுத்தடுத்த கியர்களுக்கு மாறியபடியே சீறிப்பாயும் எந்திரப்புரவிகளைப் போலவே அதிகரித்துச் செல்லும். அதுவே இரண்டாவது சரணத்துக்கு முந்தைய இணைப்பிசை ஒரு கோயிலின் தரிசனத்துக்குப் பின்னதான அயர்ந்த நடையின் திருப்தியையும் மயக்கத்தையும் ஒருங்கே படர்த்தும்.  எஸ்.பி. பாலசுப்ரமணியம் நாயகர்களுக்கான தனிப்பாடல்களின் சபாநாயகன் என்று சொல்வதற்கான சாட்சியமாகவும் சொல்லாண்ட சக்கரவர்த்தி என்று வாலியை நிறுவுவதற்கான சான்றாவணமாகவும் கீழ்க்காணும் பாடல் திகழ்கிறது. மறக்கவியலாத மாமணி

 

   பூங்காற்று வீசும் பொன்மாலை நேரம் காதோடு ஏதோ கூறாமல் கூறும்

   உச்சிவானம் எங்கும் ஓடுகின்ற மேகம் கிட்ட வந்து என்னைத் தொட்டுவிட்டுப் போகும்...

 

   (பூங்காற்று வீசும்)

   கோலம் இட்ட வீடு என்றும் கோயில் என்றாகும்.

   கோயில் தன்னை நாடி வந்தால் வாழ்க்கை நன்றாகும்

   வேலைவாய்ப்பொன்று தேடினேன்

   தேடி நாள்தோறும் வாடினேன்

   தெய்வம் என்பாடு பார்த்தது

   இங்கு எனைக்கொண்டு சேர்த்தது

   வேதனை யாவும் சோதனை யாவும் நேற்றுடன் தீர்ந்தது

 

   (பூங்காற்று வீசும்)

 

   நானும் இந்த வீட்டைச் சேர்ந்த ஜீவன் என்றானேன்

   இங்கே உள்ள யாவரோடும் நானும் ஒன்றானேன்

   வீட்டில் சந்தோஷம் பொங்கவே

   பாட்டு என்னாளும் பாடுவேன்

   அன்பு பாராட்டும் யாருக்கும்

   நன்றி என்பாட்டில் கூறுவேன்

   பூமியில் நானும் நேரினில் காணும் சொர்க்கமே வீடுதான்...

   பூங்காற்று வீசும்...

 

பாடல்களை ஒரு ஊசி மருந்தைப் போல கேட்பவர்களின் நடுமனதில் ஆழச்செருகுவதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் வித்யாசாகர். இசையற்ற இசை கொண்ட ஒரு பாடல் துவக்கத்தைக் கூட அவரது பாடல்கள் கொண்டிருந்ததில்லை என்பது ஆச்சர்யம். மேலும் துவக்க இசையில் மிக மெல்லிய மந்திரத் தன்மையை ஆன்மீகத்தின் துழாவலைக் கொணர்வதும் வித்யாசாகரின் சித்துவேலைகளில் இன்னுமொன்று. இணைப்பிசையிலும் கூட அவர் கெட்டிக்காரர். இவற்றுக்கெல்லாம் மேலாகப் பற்பல தொழில்முறைப் பாடகர்கள் அல்லாத உபகுரல்களை முழுப்பாடல்கள் தந்து பரீட்சார்த்தம் செய்த வகையிலும் வித்யாசாகர் நிறைவான முயல்வுகளின் முகவரியானார்.

 

அன்பே சிவம் படத்தின் பின் இசை கூறத்தக்க சான்று. குரலையும் இசையையும் கொண்டு வந்து செருகிக் கலைத்ததன் மூலமாக மேற்கத்திய அமானுஷ்ய படங்களின் தீம்களைப் போன்ற ஒரு இசைக்கோர்வையை எடுத்துக் கொண்டு மெல்ல அதனுடன் ஒவ்வொரு வாத்தியமாய்க் கலைந்தும் குழைந்தும் பெருகியும் குழைந்தும் நீர்த்துமாக முன்பறியா பரவசத்தையும் நடுக்கத்தையும் ஒருங்கே சாத்தியப்படுத்தி இருப்பார் வித்யாசாகர். அன்பே சிவம் படம் முழுவதுமே மூன்று இசைக்கிளைத்தல்களைக் கையாண்டிருப்பார்.

கமலின் ஃப்லாஷ்பாக் காலத்திற்கான ஒரு கோர்வை மாதவனுக்கும் கமலுக்குமான சந்திப்புக்களின் போது அடுத்த கோர்வை கமலின் தனிமைக்கான மூன்றாவது கோர்வை என அவை அமைந்திருக்கும். இதன் வித்யாசம் முழுவதற்கும் ஒரு துளிச்சான்றெனவே இந்தப் படத்தின் தீம் இசைக்கோர்வையாக யூட்யூபில் கிடைக்கிற நல்லிசை விளங்குகிறது. அதன் சுட்டியைத் தொடர்பவர் சொர்க்கம் சேர்வர். இன்னமும் இந்தப் படத்தின் துவக்கத்தில் கமல் அறிமுகக் காட்சியில் குரலும் இசையும் பெருகும் ஜாலவேலையின் உச்சத்தையும் ஒருதடவை கேட்டுவிட்டால் சவுகர்யசுகசந்தோஷம்.

 

தாயின் மணிக்கொடி படத்தில் இடம்பெறும் நூறாண்டுக்கு பாடல் ஒரு அற்புதம். சுருண்டு திரும்புகிற சுழலிசைப் பாடல்களில் பல்லவி சரணம் இணைப்பிசை முடிவிசை என எல்லாமுமாய் ஒரே மத்திய இசைக்கோர்வையை வைத்து அதகளம் செய்திருப்பார் வித்யாசாகர். ஜிப்ஸி பாடல்களின் வனத் தன்மை சற்று குறைவாக அதே நேரத்தில் நீர்ப்பரப்புக்களின் ஈரத்தன்மை சற்று மிகுந்தொலிக்கிற மழைவன அலைதல் இந்தப் பாடல்.தேவியும் கோபால்ராவும் அதிகதிகம் பாடியவர்கள் அல்ல என்பது கூடுதல் சர்க்கரை இந்தப் பாடலை எத்தனை ஆயிரம் முறைகள் கேட்டாலும் அது இன்னொரு முதல் முறையாகவே இனிக்கும்.

  

    நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா

    இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நானல்லவா

    இதழோடு இதழ் சேர்த்து

    உயிரோடு உயிர் கோர்த்து வாழவா...

    (நூறாண்டுக்கு ஒரு முறை)

    கண்ணாளனே கண்ணாளனே உன் கண்ணிலே என்னை கண்டேன்

    கண்மூடினால் கண்மூடினால் அந்நேரமும் உன்னை கண்டேன்

    ஒரு விரல் என்னை தொடுகையில் உயிர் நிறைகிறேன் அழகா

    மறு விரல் வந்து தொடுகையில் விட்டு விலகுதல் அழகா

    உயிர் கொண்டு வாழும் நாள் வரை

    இந்த உறவுகள் வேண்டும் மன்னவா .

    (நூறாண்டுக்கு ஒரு முறை)

    ஒ... இதே சுகம் இதே சுகம் என்னாளுமே கண்டால் என்ன

    இந்நேரமே இந்நேரமே என் ஜீவனும் போனால் என்ன

    முத்தத்திலே பல வகை உண்டு இன்று சொல்லட்டுமா கணக்கு

    இப்படியே என்னை கட்டிக்கொள்ளு மெல்ல விடியட்டும் கிழக்கு

    அச்சப்பட வேண்டாம் பெண்மையே எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே .

    (நூறாண்டுக்கு ஒரு முறை)            

 

தெலுங்கில் ஸ்வராபிஷேகம் படத்திற்காக தேசிய விருது பெற்ற வித்யாசாகர் மலையாளத்தில் வித்யாஜீ என்று அன்போடு விளிக்கப்படுகிறார். நிறைவான பல படங்களைத் தன் இசையால் வார்த்திருக்கிறார். அவைகளில் நிறம், தெய்வத்திண்ட மகன், நீலத்தாமரா, டயமண்ட் நெக்லேஸ், கிராமஃபோன், கீதாஞ்சலி  ஆகியன அவற்றுள் சில. தேவதூதன் படத்தில் ஃப்யூஷன் இசையில் பழமை கெடாமல்  எந்தரோ மகானுபாவலோ பாடலை மீவுரு செய்திருப்பார். அவசியம் கேட்பது உசிதம். இதே படத்தில் பூவே பூவே பாலப்பூவே பாடல் ஒரு ஜெயச்சந்திர மென்மழை. 

 

சென்ற ஆண்டு வெளியான ஜோமொண்டே ஸ்விசேஷங்கள் (2016) படத்தின் நோக்கி நோக்கி பாடல் ஒரு வசீகராபிஷேகம். புத்தம் குரல்களால் இந்தப் பாடலை ஒரு அணிகலனைப் போலவே செதுக்கி இருப்பார் வித்யாசாகர். தனது கையெழுத்தை மிக லேசாக மாற்றிக்கொண்ட எழுத்தாளனைப் போல தன் இசையை சமீபத்துக்கு மேலெழுதி நீர்த்துப் போகாத சாகரம் என்று அழுத்தந்திருத்தமாய்த் தன் கையெழுத்தாலேயே கல்வெட்டில் பொறித்திருப்பார் வித்யாசாகர். சென்றவருடத்தின் ஆகச்சிறந்த சூப்பர்ஹிட்களில் இது முதல்வரிசைப் பாடல் என்பதைக் கேட்டால் உணரலாம். அபே ஜோத்புர்கர் மெரின் க்ரகோரி இணையின் பாடலைக் கேட்டு மயங்குவீராக.

 

இசை என்பது பேரலை ஓயாப் பெரும் சாகரம். இந்தியத் திரை இசைமேதைகளின் வரிசையில் வித்யாசாகருக்குத் தனியோர் இடம் சாஸ்வதம்.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்).click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...