???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை! 0 சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல் 0 போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம்: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை 0 அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 7 மணிநேரம் விசாரணை! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் 0 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக நடிகை கரீனா கபூரை நிறுத்த கோரிக்கை 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் – 67 - தன்னியல்பின் அபூர்வம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   22 , 2017  01:19:02 IST


Andhimazhai Image

சித்ரா தமிழுக்கு வந்தது எண்பதுகளின் மத்தியில். உண்மையில் அப்போது ஒரு கூடுதல் குரலாகத்தான் நிகழ்ந்திருக்க வேண்டியது. அந்த நேரத்தில் பூவே பூச்சூடவா என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார் சித்ரா. சின்னக்குயில் பாடும் பாட்டுக் கேக்குதா குக்கூ குக்கு கூ கூ என்று பாடியதில் தமிழ் உணரும் செவிகள் அனைத்தும் கிறங்கின. தத்தமது மனங்களைத் தொடுத்து மாலையாக்கி சித்ராவின் கரங்களில் தந்த பிற்பாடே திருப்தி கொண்டன. சித்ராவின் குரல் தமிழகத்தின் தேவையாக மாறியது. வேறு யாரையும் விட எடுத்த எடுப்பிலேயே முக்கியமான தவிர்க்க முடியாத குரலாக மாறிப் போனார் சித்ரா.

 

சித்ராவின் குரலின் தன்மையைப் பார்க்கலாம். பாலசுப்ரமணியம் எனும் எஸ்.பி.பீ ஸ்ரீனிவாஸ் எனும்பீபீஎஸ் இந்த இரண்டு பெரும்பாடகர்களின் குரல்களை உற்று நோக்கினால் மிக மிக லேசான இடங்களில் தெலுங்கு வாசனையை உணர முடியும். பல பாடகர்களிடமும் இந்த ஆந்திர வாசனை கன்னடத் தன்மை ஜேசுதாஸ் குரலில் ஒரு மலையாள வித்யாசம் இருக்கும். இந்த வரிசையில் கேரளத்துச் சித்ரா முழுவதுமாகத் தமிழகத்துச் சித்திராவாகவே மாறியதுதான் அவரது குரல்விசேடம்.

 

இளையராஜா உள்பட எல்லோருடைய ஆதர்ச வரிசைகளிலும் சித்ராவுக்கு உறுதியான தவிர்க்க முடியாத இடம் வழங்கப்பட்டது. அவர் வகைமை எண்ணிக்கை வேகம் ஆகிய மூன்று அம்ச இயங்குதளங்களிலும் சோடை போகவில்லை. அதிகதிகப் பாடல்களைத் தென்னகமெங்கும் பாடினார். அதே நேரத்தில் பலவிதமான பாடல்களையும் பாடியவர் ஆனார்.

 

சித்ராவின் இசைப்பயணத்தில் அவர் மீது வைக்கப்படுகிற முதல் விமர்சனமாக இது இருக்கும். அதாவது சித்ரா ஒரே குரலில் ஒரே தொனியில் பாடுபவர் என்று. இதுவே அவரது ஆளுமையின் வெளிப்பாடாகவும் புகழப்பட்டது. அத்தனை எளிதாகச் சிதைந்துவிடாத பொற்குரல் சித்ராவினுடையது எனவும் சொல்ல முடிந்தது. பெண்குரல்கள் நடுக்கமுறுமே தவிர சிதைந்து வேறொன்றாக மாறுவதில்லை. வெகு அபூர்வமாக இரண்டு அல்லது மூன்று குரல்காலங்களாகச் சிதைவுற்ற பெண் பாடகக் குரல்கள் இருந்திடக் கூடும். என்றாலும் பெரும் பொதுவில் அப்படி ஆவதில்லை. இதில் பாட வந்த முதல் தினத்தின் அதே குரலாக இன்றளவும் மாறாதொருமித்து திகழ்கிற குரல் சித்ராவினுடையது.

 

ஒரு குரலில் மேலான தன்மை என ஒன்றிருக்கும். பாலசுப்ரமணியத்தின் குரல் எப்படியானாலும் பிசிறேதுமற்றுக் குழையும். வேண்டுமென்றே அவராகப் பிசிறடிக்கப் பாடினால் கூட அதன் ஐஸ்க்ரீம் தன்மை அப்படியே தொடர்வதைக் கண்ணுறலாம். அந்த வகையில் மொழியை உலர்த்திப் பாடுவது சித்ராவின் சிறப்புத் தன்மை அல்லது தனித்தன்மை எனலாம். ஒவ்வொரு சொல்லுக்கும் இயல்பான ஈரத்தன்மை மேலும் அது ஒலிக்கிற இடம் சார்ந்த ஈரத்தன்மை இவ்விரண்டில் எது மிகுதியோ அதுவே நிலைக்கும் உதாரணத்துக்கு செம்பருத்தி என்று சொல்லவேண்டிய மலரின் பெயரை ச்செம்பருத்தி என்று சொல்வதுண்டு. சொல்லச் சொல்ல என்பதில் இரட்டிக்கையில் இயல்பாக அதன் கனம் கூடும். இதெல்லாம் மொழியின் முன் தேவை மற்றும் இயல்பின் அழகு.

 

வெண்கலக் குரலாளர்களான சவுந்தரராஜன் மற்றும் கோவிந்தராஜன் ஆகியோரெல்லாம் தமிழின் இயல்புக்குச் சற்றே கூடுதலான அழுத்தத்தை சொற்களின் ஈரப்பதத்தை அதிகரித்துப் பாடல்களில் எப்போதும் புழங்கி வந்திருப்பதை இங்கே சுட்டலாம். மொழியை எப்படி வேண்டுமானாலும் அதன் சட்டகத்தை சிதைக்காமல் பாடல்வழிப் பயன்படுத்துவது பாடக இசையமைப்பாளர்கள் பலகாலமாய்ச் செய்து வருகிற வேலைதான்.

 

 

சித்ரா தனக்கென்று தனி உச்சரிப்பு பாணி கொண்டவர். உலர்தன்மையுடன் அவர் எல்லா சொற்களையும் அணுகுகிறார். மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளை அங்கனம் அவர் அணுகுவதில்லை. மாறாகத் தெலுங்கு தமிழ் கன்னடம் ஆகிய மொழிகளை இப்ப்டிக் கையாள்கிறார்.

 

செம்பருத்திப் பூவு சித்திரத்தைப் போலே அம்பலத்தில் ஆடுதிங்கே என்ற வரியில் வரும் சித்திரத்தைப்போல என்பதை சின்னதொரு அறியாமை கலந்து ஒலிப்பார் சித்ரா. கைவளையில் மாட்டுகின்ற உப்புக்கடல் மீனு கண்வலையில் மாட்டுகின்ற கன்னி இளமானு எனும் போது கடற்புரத்தின் கானமாய்ப் பொழிவார். இறங்கியும் ஏறியும் ஒலித்துச் செல்லும் அழகான குரல் சித்ராவினுடையது. அடி வான்மதி என் பார்வதி என்றாரம்பிக்கும் சிவா படத்துப் பாடலிலும் காலம் காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் என்கிற புன்னகை மன்னன் படப் பாடல் என் சின்னவயது ஆதர்சங்களில் ஒன்று. சித்ராவின் குரலை ரேவதியின் உபகுரலாகவே கருதுகிற அளவுக்கு நதியாவின் நிஜக்குரலாகவே நினைக்கிற அளவுக்கு ராதாவின் ரம்யமான குரல் என்றே நம்புகிற அளவுக்கு என் பால்யத்தின் அத்தனை தேவதைகளுக்குமான ஒற்றை ஒரு குரலாகவே சித்ரா நிகழ்ந்தார்.

                 

புன்னகை மன்னன் படத்தின் சிங்களத்துச் சின்னக் குயிலே எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மயிலே என்ற பாடல் ஒரு உற்சாகத் தீர்த்தவாரி. அன்றைய காலத்தை அதன் சாரல்காலம் என்றே விளிக்கலாம். அந்தப் பாட்டில் நனையாதவர்கள் ஒன்று சிறைவாசிகளாக இருக்கவேண்டும் அல்லது காதற்ற பாவிகளாக இருந்திடக் கூடும் அந்த அளவுக்கு திரும்புகிற இடங்களிலெல்லாம் ஒலித்தது சிங்களத்துச் சின்னக் குயிலே பாடல். காலகாலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் என்றபோது தமிழகமே அர்ப்பணம் என்ற சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லியது.சித்ராவின் குரலின் பெருவெற்றிக் காலம் என்றெல்லாம் தனித்து அறிவதற்கின்றிப் பாட வந்த தினம் முதலே சித்ரா பாடல்கள் கோலோச்சின.அதிகதிகப் பாடல்களைப் பாடுவதிலாகட்டும் அதே நேரத்தில் தன் முத்திரையைப் பதிக்கிற பாடல்களைத் தேர்வெடுப்பதிலாகட்டும் சளைக்கவே இல்லை சித்ரா.

 

 

சிந்துபைரவி சித்ராவின் இசைக்கையெழுத்து. பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன் பாடல் மௌனத்தின் உக்கிரம்.  நானொரு சிந்து பாடல்  ஒரு அமைதியான போராட்டம். சித்ராவின் இசை வரலாற்றில் தவிர்க்க முடியாத தமிழ்ப் படமாக சிந்துபைரவி அமைந்தது. மனங்களை அபகரித்து மாயம் செய்தார் சித்ரா.நானொரு சிந்து பாடலை எப்போது கேட்டாலும் கண் கலங்கும். அந்தப் பாடலின் சூழலே நமக்குச் சொல்லி விடும். இயலாமையின் விரக்தியை சூழ்நிலைக் கைதியாக தான் நிற்க நேர்ந்ததன் சுய பரிதாபத்தை யாரிடமும் சொல்லாத ஒரு கதையின் ஆதிவேரை அசைத்துப் பார்க்கும் சுய நெருடலை தன்னைவிட்டால் தனக்கு யாருமே அற்ற தன் சூழலின் நிர்ப்பந்தத்தை தன்னைத்தானே ஆசீர்வதித்துக் கொள்வதற்காக இசையை சொற்களை ராகத்தை இன்னபிறவற்றை எல்லாம் கொண்டு தனக்குத் தானே நேர்ப்பித்துக் கொள்கிற ரசனையின் வருடலை இன்னபிறவற்றை எல்லாம் ஒரே ஒரு பாடலில் முன்பின் யாரும் நிகழ்த்தாத பேரற்புதமாக சிருஷ்டித்திருப்பார் சித்ரா.

 

உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது என் மனசதைக் கேட்டுத் தான் தவிக்குது என்றபாடல் நேராக மூலவர் சன்னிதானத்தில் உருகி நிற்கிற நெடுங்கால பக்தனின் பரவசத்தை ஒத்த உணர்தலைத் தந்தது. குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா பாடல் சின்னஞ்சிறுமனதாக்கிக் கிளர்த்தியது. வெள்ளிக்கொலுசு மணி போன்ற பாடல்கள் மிக அமைதியான நேரடியான நதி நகர்தல்களாய்ப் பெருகின.

 

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் என் காதில் கேட்டு என்று தொடங்கும் அண்ணா நகர் முதல் தெரு பாடல் ஒரு சர்க்கரைக்கட்டி.

 

 

வண்ண நிலவே வைகை நதியே என்ற இந்தப் பாடலின் சந்தோஷ வெர்ஷன் சித்ரா பாடியிருப்பார். அத்தனை அற்புதமான பாடல் இது. இதன் சோக வெர்ஷன் ஜேசுதாஸ் பாடி இருப்பார். இந்தப் பாடல் என் பதின் பருவத்தில் ஏனென்றே தெரியாமல் ஒரு பறவை இறகைப் போன்ற மென்மையோடு தனித்து இருந்தது.

 

வாவாவா வா கண்ணா வா பாடல் வேலைக்காரன் படத்தில் எனக்கு மிகவும் பற்றேற்றிய சித்ரா பாடல். அத்தனை வெண்மையாய் காஷ்மீரப் பனியும் அமலாவின் புன்னகையுமாக இரட்டை இன்பம் அந்தப் பாடல். கேட்போரைக் கவர்ந்திழுக்கிற காந்தவேலை சித்ராவின் கானம்.முன்பே வேறொரு எபிஸோடில் சொல்லி இருக்கிறேன். என் திருமண காலத்தில் அதிகதிகம் கேட்ட பாடல் இதுதானா இதுதானா எதிர்பார்த்த நன்னாளும் இதுதானா என்று ஆரம்பிக்கிற சாமி படத்துப் பாடல் சித்ராவின் நல்லிசைக்கொரு முக்கிய சான்றாவணம். என் வாழ்வாவணமும் கூட.

 

தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே என்ற இந்தப் பாடல் கடற்கரையில் சொற்ப நேரமே நீடித்திருக்கக் கூடிய மணல்வீட்டின் தோற்றத்தைப் பாடலாக்கினாற் போல சந்தோஷத் தற்காலிகம் ஒன்றை அழகாக வெளிப்பட்டிருக்கும். இளைய ராஜாவின் இசையில் ஜேசுதாஸ் சித்ரா இருவரின் கம்பீரமும் குழைதலும் இணைந்த குரல்கள் அசத்தி இருக்கும்.

 

 

புதுப்பாட்டு படத்தில் சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது என்ற பாடலை அனாயாசமாய்ப் பாடி இருப்பார் சித்ரா. ஒரு தனிமையைத் தன் குரலெங்கும் படர்த்திச் செல்வதைக் கலையழகோடு செய்ய சித்ராவால் மாத்திரமே இயலும்.

 

அந்தரங்கத்தை எடுத்துவைத்து வழக்காடக் கூடிய தன்மையை சித்ராவின் குரலில் மற்ற யாரை விடவும் அதிகம் காணலாம்.நடிகையருக்கான தனியாவர்த்தனப் பாடல்களைப் பெரும்பாலும் சித்ரா அளவுக்கு சோபிக்க ஆளில்லை எனச் சொல்லும் அளவுக்கு எல்லோருக்காகவும் பாடினார் சித்ரா. ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டு தான்.கூத்தாடத் தூறல்கள் நீர்விட்டுத் தான் என்றாரம்பிக்கிர இதயத்தைத் திருடாதே படப் பாடலில் உருகுது மருகுது என ஒரு சமூகமே கொண்டாடித் திரிந்தது.அது சித்ராவின் தேவகானம். அக்னி நட்சத்திரம் படத்தில் அமலா ஒளியும் இருளும் கலந்த ஸ்ரீராமின் முத்திரை ஷாட்களில் அபிநயித்த நின்னுக்கோரி வர்ணம் என்றாரம்பிக்கிற சிலேடைப்பாடலை யாராலும் மறக்க முடியாது. அந்தக் காலகட்டத்தின் ஆந்த்தமாகவே அது அமைந்தது.குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ மூன்றாவதாக ஒரு குக்கூ சொல்வார் அது சித்ராவின் தனி டச். ஹூக்ஹூ என்றாற் போல அய்யோ தேனில் தவறிய ஐஸ்க்ரீம் போல.பலராலும் எடுத்தாளப்பட்ட மழை வருது மழை வருது குடை கொண்டுவா பாடல் ஒரு சித்ராற்புதம். மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ பாடல் ஒரு சோற்றுப்பதம். என்று கேட்பினும் உள்ளம் மலரும் மென்மையால் குழையும்.

 

நீ ஒரு காதல் சங்கீதம் பாடல் சித்ராவின் பேரைப் பல காலம் சொல்லும். அந்தப் பாடலை மனோவின் சித்ராவின் ராஜாவின் எனப் பிரிக்க முடியாதென்றாலும் சொத்தில் ஒரு பங்கு சகோதரிக்கு என்று சட்டமே உண்டல்லவா அப்படி சித்ராவைப் புறந்தள்ள முடியாது. இதழில் கதை எழுதும் நேரமிது என்ற பாடலைக் கண் மூடிக் கேட்டால் சித்ராவின் குரலும் சீதாவின் முகமும் ஒருங்கிணைந்த ஒரு ரூபம் வந்து போகும். பல காலப் பிரமிப்பு இந்தப் பாடல்.

 

மகராஜனோடு ராணி வந்து சேரும் பாடலை எப்போது எங்கே கேட்டாலும் நண்பன் ஆனந்த் ராஜ்குமாரின் நினைவு வரும். அந்தப் பாடலை உன்னிக்கிருஷ்ணன் மிக லேசாய் ராஜ்ஜனோடு ராணீ வந்து சேரூம் என்று பாடி இருப்பார். சிறுகூட்டுல உள்ள குருவிக்கு ஒரு நூறு ஆசை என்ற பாடல் ஒரு ரேடியோ ஹிட். ரெக்கை கட்டிப் பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் பாடலை சித்ரா அளவுக்கு வேறு யாராலும் பாடவே முடியாது. சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் ச்சம் ச்சம் பாடல் ஒரு ஹைலைட் பாடல். என் பதின்பருவத்தின் ஆசீர்வாதமாகவே இதனைச் சொல்வேன்.

   

சித்ராவுக்கு ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன.அவரது பிறமொழிப் பாடல்களுக்கென்று மறுபடி சில உலாக்கள் வரலாம். வருவோம். இப்போதைக்கு சொல்வதற்கு இன்னும் ஒரு பாடல். ஹ்ருதயா ஹ்ருதயா எனும் கன்னடப் படத்தில் டாக்டர் ராஜ்குமார் உடன் அவர் பாடிய ஹோ ப்ரேமதா கங்கையே எனும் பாடலின் சுட்டி இதோ.  நான் பல காலமாய் ரசிப்பது. யாரும் ரசிக்கலாம்.

 

 

சித்ரா அதிக (6) தேசியவிருதுகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் குரல். முழு நிலவு. அவரது பாடல்கள் ஒரு காலகட்டத்தின் மீது தேன் தூறல் நேர்த்துபவை. வாழ்க சித்ரா.

 

 

(ஆத்மார்த்தி, தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி   அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...