அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 74 - சூடிய பூச்சரம் வானவில் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   20 , 2018  13:32:30 IST

மனசுக்குப் பிடித்த கேஸட் (1) ஒன்றைத் தயாரிக்கலாம். முதலில் மனசுக்குப் பிடித்த என்றால் என்ன அர்த்தம்..? பாடல்களை முன் பின் அடுக்குகிற மந்திரக் கூடம் தான் கேஸட் என்பது. இப்போது பென் ட்ரைவ்களில் மெமரி கார்டுகளில் கணிப்பொறிகளின் உயர்தரமாய்ப் பகுபட்டிருக்கும் உள் அகங்களில் ஆயிரக்கணக்கான பாடல்கள் சாரிசாரியாய்க் கொட்டிக் கிடக்கின்றன. ஏன் இதனை இப்போது இங்கனம் எழுதிக் கொண்டிருக்கிற இந்தக் கணிப்பொறியிலேயே அப்படித் தான் ஏ ஸோன் வீ ஸோன் என இரண்டு தனி அடுக்ககம். அவற்றில் கேட்பதற்கும் பார்ப்பதற்குமாய்ப் பாடல்கள் பல்லாயிரம். 
 
 
ஒரு பன்னிரெண்டு பாடல்களைத் தேர்ந்தெடுக்கிறதில் உள்ள ஆகச்சிறந்த சிரமம் எத்தனை பெரியது தெரியுமா.? அன்றைய காலம் எங்களுக்கு எதுவுமே தெரியாது. சினிமா முதலில் வியப்பு. இசைத் தட்டுகளும் வானொலியும் படங்களுக்கு அப்பால் பாடல்களை நகர்த்திக் கொண்டுவந்தன. பாடல் வரிகளும் குரல்களும் பின்னாலுறைகிற இசையும் வாழ்வின் எல்லாத் தருணங்களையும் நிரப்பின. மனம் எப்போதும் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கவிரும்புகிற பாடல் விரும்பியாகவே தன்னை செய்துகொண்டது.
 
 
சிறகில்லாமல் பறக்க முடியும் எனப் பல்லாயிரக்கணக்கானோரை நம்பச் செய்தது மட்டுமல்ல அதை நிரூபணம் செய்ததும் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் தான். கேஸட்டுகள் ஒருவகையில் அவரவர் ரசனா வினோதங்களின் வெளிப்பாடுகளாய்த் தோற்றமளித்தன. உன் கேஸட்டுக்கும் என் கேஸட்டுக்குமான வித்யாசம் உனக்கும் எனக்குமான வித்யாசங்களின் அடிப்படை என்று நம்பினார்கள்.அப்படித் தான் இருக்கவும் செய்தார்கள். பன்னிரெண்டு பாடல்களைக் கொண்ட ஹெச் எஃப் சிக்ஸ்டி கேஸட் ஒன்றைத் தயாரிக்கிறதென்பது எத்தனை சிரமம் எனப் போகப் போகக் காணலாம். முதலில் பொதுவன மலர்களாய் வருகை புரிகிற பாடல்களுக்கும் தனித்த உறவாடல்களாய் அவற்றை மாற்றிக் கொள்கிற மனிதர்களுக்குமான பரிவர்த்தனையைப் பார்ப்போம். எப்படி நிகழ்கிறது இது..?
 
 
 
என்னிடம் ஒரு எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஹிட்ஸ் கேஸட் இருந்தது. அந்தக் கேஸட்டை நானென் பதினாலாவது வயதில் தயாரித்தேன். தயாரித்தேன் என்றால் எழுதிப் பட்டியலிட்டு கடையில் கொடுத்து வரிசை மாறாமல் பதிந்துவைத்தேன். மிக சமீபத்தில் அந்தக் கேஸட்டின் பாடல் வரிசையைப் பற்பல பாடல்களிலிருந்து எழுதி அடித்து என்னவோ மிலிட்டரிக்கு ஆளெடுக்கிறாற் போலக் கறார் கட்டுப்பாடுகள் எல்லாம் வைத்துக் கொண்டு, பல பாடல்களை நீங்கள்லாம் வேற கேஸட்டுல வாங்க என்று அவற்றில் பலவற்றை சமாதானம் செய்து சிலவற்றை நிராகரித்து, பலவற்றை ஜோஜோ கொட்டித் தூங்கவைத்து விட்டு இந்தக் கேஸட்டைத் தயாரித்திருக்கிறேன். அதன் முழு ப்ராஸஸூம் இப்போது நினைவில்லை என்றாலும் கூட எவற்றையெல்லாம் பரிசீலித்த பிற்பாடு அந்தப் பன்னிரெண்டு பாடல்களைத் தேர்வெடுத்திருக்கிறேன் என்பது கச்சிதமாய்ப் புரிகிறது.நம்புவீர்களா.? நானூற்று முப்பத்து நாலு பாடல்கள் அத்தனையும் பாலு ஜானகி பாடிய தமிழ்ப் பாடல்கள். அவற்றில் இருந்து பன்னிரெண்டு மட்டும் செலக்டட்.மற்றவை ரிஜக்டட்..
 
 
அந்தப் பாடல்களை நான் முழுவதுமாக இளையராஜா என்ற இசையமைப்பாளரின் ஹிட் லிஸ்ட்களில் இருந்து மாத்திரமே எடுத்திருக்கிறேன். 1976இல் ராஜா அறிமுகமாகிறார். நான் 77இல் தான் பிறக்கிறேன். இந்த கேஸட் தயாரிக்கப் பட்ட ஆண்டு 1991. அதாவது ராஜாவின் முதல் பதினைந்து ஆண்டுகள் வரையிலான பாடல்சாத்தியங்களை உட்கொண்டது என் தயாரிப்பு. சரிதானே..? இதில் நான் 90 ஆமாண்டு வரைக்குமான பாடல்களை கவனத்தில் கொண்டு ஒருவழியாகப் பன்னிரெண்டு பாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். எந்த விதத்திலும் இவற்றை செப்பனிடக் கூட இன்றளவும் என் மனசு தயாராக இல்லை. அதே ஒரே பிடிவாதம் தான் பாடல்கள் என்ற வஸ்து மீது எனக்கு இன்றும் இன்னமும் இருக்கிறது.. என் ஆச்சர்யம் என்னவெனில் மற்ற எல்லாருக்கும் நான் என்ற ஒருவன் இத்தனை ஆண்டுகாலத்தில் எத்தனையோ மாறிமாறி வெவ்வேறு நான்கள் உற்பத்தியாகிக் கொண்டே சென்றிருப்பது எனக்கே தெரியும். ஆனாலும் இந்தப் பன்னிரெண்டு பாடல்களைக் கையில் கொண்டிருக்கிற நான் என்பவன் ஒரே அதே நானாக இருக்கிறேன். எத்தனை பேருக்கு இது சாத்தியம் எனத் தெரியவில்லை. நானே நானாக ஒரு நான்.
 
            
 
அன்புள்ள ரஜினி காந்த் படத்தில் வருகிற இந்தப் பாடல் அமானுஷ்யமான சந்தோஷத்தைப் படர்த்துகிறது.தே.....ன் எனத் தொடங்கும் பொழுதில் சற்றே நீட்சியடைகிற முதற்சொல் நமக்குள் நிறைவதற்குள் மெல்ல முதல் வரி முழுவதுமே படர்ந்து விடுகிறது.மேலதிகமாக அடுத்த வரியின் முதற்சொல்லான பூந்....தேனே தேனே வா என்பதும் அதையே தொடர்ந்து நிகழ்கிறது.பல்லவி முடிந்து சுருண்டு மறுபடியும் அதே இசையின் தொடக்கம் அலாதித் தழுவலாய் நேர்கிறது.நூறு ராகம் நெஞ்சோடுதான் என்றாகையில் என்னவோ ஒரு கலங்கலும் அன்பின் பெருக்கமுமாய்க் குழைகிறது மனசு. 
 
நின்று நிதானித்து ட்விஸ்ட் எனப்படுகிற சுழலிசையாக இதன் பின்னணி இசையை மிக மெல்லிய தாள நகர்வாகக் கொண்டு செல்வார் ராஜா.குழலின் இசைத்தலும் மெல்ல ஒரு லாகிரியாய் விரியும்.நானும் கம்பன் தான் கொஞ்சும் போது ஹோ கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது தேவ தேவி என்னோடு தான் எனும் போது நமக்குள் காய்ச்சல் அடிக்கும்.அது காதலின் காய்ச்சிய பதமல்லவா..?
முதல் சரண முடிவில் வேக இசையை இடையிசையாகப் படர்த்துவார் ராஜா.இந்த டெக்னிக் நல்ல முறையில் ஒர்க் அவ்ட் ஆகி இருக்கும்.அதாவது படகின் விரைதலை வெளிப்புறத்திலிருந்து நோக்குங்கால் வேகமாய்ச் சிறகடிக்கிற இசையாகவும் அதையே உள்ளே இருந்து நதிப்பரவலைக் கண்ணுறுகையில் மெல்லிய தாள மயக்க இசையாகவும் இருவேறு அணுகல்களில் சமபூர்த்தியாக மனம் அமைதியுறும். இரண்டாவது சரணத்தை ஒட்டுகையில் வேகமான குழலிசை பட்டவர்த்தனமான சார்ந்தொழுகுதலை முன்வைக்கும்.ஏறி இறங்கும் ஜிக்ஜாக் தன்மை மெல்ல நம் ஆழ்மனதுக்கு மாற்றம் செய்யப்பட்டு அதன் மீது இரண்டாவது இசைப் பட்டி போல் ஒட்டிக் கொள்கிறது.பாடிய விதம் உயிரைக் குரலாய் முன்வைத்து நனைக்கிறது.
 
 
 
மேற்சொன்ன பாடலின் செமி ட்விஸ்டிங். அதாவது அரைவெட்டு சுழல் தன்மை இப்பாடலின் அடித்தளம். முதல்வரி முடிகையில் மெல்ல முணுமுணுத்தாற் போல ஒரு இசைத்துகள் வரும். அது தான் இந்தப் பாடலின் குறளி. சரணத்துக்கு முன் இசை மலையேற்றம் போல் ஏக் தம்மில் அடித்துப் படர்த்துகிறது.
 
காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது...என்று பாலு
காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது என ஜானகி 
புது சங்கமம் சுகம் எங்கிலும் 
எங்கெங்கும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்
 
இந்த இடத்தில் படரும் அதே முணுமுணு மின்மினித் தன்மை அபாரம். இரண்டாவது சரணத்துக்கு முன்பாக அபாரமான இழைத்தலாக கிடாரிசை பெருகி ஒரு இடத்தில் மிக அமைதியாகித் துல்லியமாய் ஒலித்து அப்படியே சரணத்துக்குள் செருகுகிற இடத்தில் மறுபடி ஊசலாடும் தூளித் தன்மையுடனான மெல்லிசை வலுப்பெறும். அதிலும் முக்கியமாக.. 
நெஞ்சோடு ஊர்வலம் வர 
நீங்காமல் நாம் சுகம் பெற
என்றவரி இரட்டிக்கும் பாலுவின் சந்தோஷமும் ஜானகியின் பரவசமும் வித்யாசமஞ்சரியாய் நம்முள் பொங்கும். படமாக்கலும் இந்தப் பாடலின் ஆன்மா சிதையாமல் வரிவழி இசைநதி பெருகிடத் துணைவரும் ஆலோலவைரம் இந்தப் பாடல்.
 
 
நிறுவமுடியாத காதலின் அனர்த்தங்களை அவற்றுக்குண்டான இருளிலிருந்து அகற்றி வேறொரு இன்பமயமான ஒளிர்தலுக்குள் எறிவது மாயம். அதைச் செய்வது இளையராஜாவின் அசாத்ய திறன்களில் ஒன்று. இந்தப் பாடலின் துவக்க இசையில் வெட்டி வெட்டி ஒலிக்கும் ஒரே ஒரு துணுக்கை இன்றளவும் வியக்காமல் இருக்க முடியவில்லை. பாடிய குரல்களின் அபாரமும் இடையிசைத் தோரணங்களும் இப்பாடலை மென்வனவைரமாய் மின்னச் செய்கின்றன.அதிகாலை நேரமே பாடலின் அட்வெட்ஸ் பாடலாக இதனைச் சொல்ல முடியும். இப்பாடலுக்கும் அதற்குமான அர்த்தநியாயங்கள் பாத்திரசூழல் பேதங்கள் எல்லாவற்றையும் தாண்டிய இரண்டு ஒற்றுமைகள் ஒன்று இசைத்த ராஜா அடுத்தது பாடிய பாலுவும் ஜானகியும். 
 
 
 
ஒருமுறை மாத்திரமே நிகழ்வதன் பெயர் தான் பாடல். இரண்டாம் வருகை நிச்சயமாக இல்லவே இல்லை.இசையமைப்பாளனும் திரைப்படமும் அவற்றில் நடிக்கிறவர்களும் ஏன் பாடலை எழுதிய இசைத்த பாடிய அனைவருமே ஊடகங்கள் தாம். ஒரு பாடல் ஒருமுறை மாத்திரமே நிகழவல்லது.என்பதை ஒப்புக்கொள்ளாதவர்களைக் கேள்விப்புலி துரத்திப் பதில்சிங்கம் தின்னட்டும். ப்ரபஞ்சமும் இசையும் நிச்சயமாக அவர்களுக்கானதல்ல.
ஆன்மத்தின் சன்னிதியில் பிறந்துவருகிற புதிய தெய்வம் போலவே இந்தப் பாடல் தன்னைத் தொடங்கிக் கொள்கிறது.அதன் கருப்பொருள் காதல் என்பது மேலோட்டம்.உற்று நோக்கினால் இந்தப் பாடலின் வரிகளினூடாக நம்முள் வேறொரு பண்டம் நிரம்புவதை உணரமுடியும். காலம் கடந்த காதலின் முன்னே காதலர்கள் செய்யவேண்டியது வேறெதுவும் இல்லை என்பதும் ஒப்புக்கொடுத்தலின் மூலமாய்ச் சரணடைந்து மண்டியிடுவது பெரும்பிரார்த்தனை என்பதும் தான் அப்பண்டத்தின் உட்பொருள்கள். இந்தப் பாடல் முடிகிற இடத்தில் பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே என்று ஒரு வரி வரும். அத்தனை அழகான கமல்ஹாசனை இன்னொரு இடத்தில் காண்பதற்கில்லை. அனைத்து ஹாஸன்களிலும் அழகான ஹாஸன் அவரே.
 
 
 
 
இத்யாதிகளின் அந்தப்புரம் இந்தப் பாடல். உடனொலிகளுக்கான ராஜமரியாதை என்றால் தகும். அடுத்தவரின் கற்பனையில் உதிக்கிற ஒரு அனுமானத்தை உள்வாங்கித் தனதாக்கி வேறொன்றாக்கிப் படைத்து அவர் வசமே தருவது வரைக்கும் சினிமா என்பது பற்பல கண்ணறியாக் கண்ணிகள் கொண்ட பேரியந்திரம். அப்படியான சினிமா உருவாக்கத்தில் பாடல் என்று தொடங்குவதிலிருந்து வழமையின் எழுதப்பட்டு விட்ட பழங்கதை ஒன்று உண்டு. அவற்றை எல்லாம் உடைத்து எறிகிற பாடல்கள் ஆகச்சிறக்கும். பாடிய ஜானகியும் பாலுவும் இருவருமே தத்தம் குரல்களை உள்ளார்ந்து ஒலிப்பது இப்பாடலில் ஒரு உத்தி.தேனில் வண்டு எனும் போது உதடுகளைக் கைக்குட்டை கொண்டு பொத்தினாற் போன்ற பாவனையில் பாடினாற் போல் நமக்குத் தோன்றியது இதன் வெற்றி.லேசான அயர்ச்சியைத் தங்கள் குரல்களில் உறுதி செய்வதன் மூலமாக இளையராஜா உருவாக்க நினைத்த ஆழ்மயக்கத் தள்ளாட்டத்தை நேர்த்தியாக உண்டாக்கித் தந்தார்கள் பாடியவர்கள் இருவரும். இப்பாடல் பின்னணி இசையும் குரல்களும் வரிகளும் இசையும் உடனொலிகளும் என எல்லாமே மிகுந்தொலிக்க வல்ல ஒரு பாடல்.இப்படியான பாடல்கள் மொத்தத்திலேயே அபூர்வமானவையே. தமிழில் தான் இப்படியான பாடல்கள் அதிகதிகம் உண்டாக்கப்பட்டன. இப்படியான முயல்வுகளில் சட்டென்று நினைவுக்கு வரும் இரண்டு தில்லானா மோகனாம்பாள் படத்தில் வருகிற நலந்தானா..? இன்னொன்று கரகாட்டக் காரனில் ஊரு விட்டு ஊரு வந்து..
 
 
இந்தப் பாடலின் ஆரம்பம் அதாவது பாடல் தொடங்குவது வரைக்குமான முன் இசையைத் தனி ஆல்பமாகவே உணரலாம். அது தான் இளையராஜா...உடனொலிகள் நம்மை அழைத்துச் செல்லும் வரை என்னவோ முன்னறியாத வனாந்திர இருளின் ஏற்ற இறக்கங்களில் என்னவாவோமோ என்ற அச்சத்தோடு விரந்து கீழிறங்கக் கூடிய வாகனத்தைக் கச்சிதமாக ஒடு முடுக்கின் பின்னதான வரைகோட்டிற்கு உட்பட்டு அழகாக நிறுத்தித் தருகிற வன்மைமிகு வாகன ஓட்டி போலக் கொண்டு சென்று பாடலில் சேர்ப்பார் ராஜா.
 
மேற்சொன்ன அத்தனை பாடல்களையும் கவனித்தால் அத்தனையும் துவக்க இசையால் வேறுபட்டவை. குரல்கள் லேசாய்ச் சாய்ந்தே ஒலிக்கும் பாடல்கள் இவை. மேலும் சிரிப்பும் சல்லாபமும் நிரம்பிய அதே நேரம் சந்தோஷத்தின் வரையறைக்குள் இயங்குகிற காதலின் உறுதிகாலப் பாடல்கள் இவை. எல்லாவற்றுக்கும் மேலாக வரிகள் எல்லாப் பாடல்களுமே வரிகளுக்காகத் தனியே கொண்டாடப் படுகிறவை. இத்தனைக்கும் அப்புறம் இவற்றை சொந்தங்கொண்டாட ஒரு ராஜா. துள்ளலிசைக் காந்தர்வன்.
 
 
 
ஒரு சிம்பனியின் ஆதிக்கத்துடனான இந்தப் பாடலின் தொடக்க இசை நம்மை ஒரு சட்டகத்துக்குள் நிலைத்தூன்றச் செய்கிறது.பாடல் முழுவதுமே தக்தக் தகதக் தக்தக் தகதக் என்ற நேர் சந்தத்திற்கானது.முடிவு வரைக்கும் நேரான இசைக்கோர்வைகள் அயற்சியைத் தரும் அபாயம் கொண்டவை. ஆனால் இப்பாடலுக்கு முன் பின்னாய் வேறொரு பாடல் கூட இப்படியான இசைக்கோர்வை நிர்ப்பந்தத்தை பூர்த்தி செய்தபடி நிகழவேயில்லை என்பது தான் ராஜா எனும் ஆச்சர்யத்தின் இன்னொரு எபிஸோட்.
 
 
 
 
 
இந்தப் பாடலின் தொடக்க இசை மலை உச்சியிலிருந்து உருண்டு வந்து கொண்டிருக்கிற மாபெரிய கற்பாறை நமக்குள் நிகழ்த்துகிற கண நேர அச்சத்திற்கு நிகரான அனுபவமாய்ப் பெருகவல்லது.தாளக் கருவிகளில் மிருதங்கத்தை தபலாவை ட்ரம்ஸை பறையை என எங்கே எவை ஒலிக்க வேண்டும் என்ற தீர்மானங்களுக்காகவே ராஜாவுக்கு மேலும் ஒரு தேசத்தை ஆளத் தரலாம். அல்லது இன்னுமொரு உலகத்தை.தகும். வெண்பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சு பாதங்கள் என்பதில் தொடங்கி பாலசுப்ரமண்ய அரக்கனின் குரலுக்கு வணங்காதார் யார்..?
சூடிய பூச்சரம் வானவில் தானோ..? 
 
 
இந்தப் பாடல் ஆரம்பகால ரஜினிக்கு அமைந்த முழுமையான மெலடிகளில் இன்றளவும் தன்னை அளவளவியபடி நிரந்தரித்துக் கொண்டிருக்கக் கூடிய வெகுசில பாடல்களில் ஒன்று. இந்தப் பாடலின் இடையே வரக் கூடிய மங்கள இசைக் கோர்வை பாடல் மையத்தை லேசாய் ஒட்டியும் விலகியும் செல்வது ரசம்.மெல்லிய இரயில் பயண அதிர்வாட்டம் ஒன்றாகப் பெருகும் இப்பாடலின் மைய இசையிழைகளும் ஒரு குரல் பாடிக் கொண்டிருக்கையிலேயே இன்னொன்றை அடுத்த லேயராக அதன் மீதே பயணிக்க வைத்தது அந்தக் காலத்தின் யாருமே செய்து பார்க்காத அரிய முயல்வு. இப்போது யாருக்கும் அப்படியெல்லாம் செய்யலாம் என்பதே தெரியாதென்பது வேறு விஷயம்.
 
 
இவற்றோடு இந்த 3 பாடல்களை (பொத்தி வச்ச மல்லிகை மொட்டு--பனி விழும் இரவு நனைந்தது நிலவு ; சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே) சேர்த்தால் மனசுக்குப் பிடித்த கேஸட் 1 தயார். இனிப் புலன் மயக்கத்தில் அவ்வப்போது மனசுக்குப் பிடித்த கேஸட்டுகளைத் தயாரிப்போம். 
 
 
(ஆத்மார்த்தி, தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி   அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...