அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 89 - ஆனந்தம் எனும் யாழ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   19 , 2018  13:00:43 IST


Andhimazhai Image
வர் பெயர் நிஜமாகவே என்னவோ சேகர் என்று வரும் என்ற அளவில்தான் ஞாபகம் இருக்கிறது. அவரை பாவா என்று தான் அழைப்போம். ஒரு காலகட்டத்தின் கதாநாயகன் பாவா. இந்த அத்தியாயம் வெறுமனே பாவா பற்றியது அல்ல. லாரல் இருந்தால் ஹார்டி, டாம் என்றால் ஜெர்ரி. அதுதானே நியதி. அந்த இரண்டாவது கதாபாத்திரத்தின் பெயர்தான் டோனி. பாவாவிற்குத் தொழில் ரீதியிலான கொடுக்கல் வாங்கல்களை நிர்வகித்துத் தரவும் தானே நேரில் சென்று நின்று கலெக்சன் செய்தால் மரியாதையாக இராது என்பதற்காக அவருக்குப் பதிலாக வசூல் செய்வதற்கு பாவா ஏற்பாடு செய்துகொண்ட பார்ட் டைம் வசூல் ராஜா தான் டோனி. ஆனால் வேலை கொடுத்தவரைப் போல அவரை ஒரு கணம் கூட உணர விட்டதில்லை. அவரும் அப்படி எதையும் தனிப்பெருமையாய் எதிர் பார்க்கிறவரில்லை என்றாலும் டோனி அவரை அடிக்கடிக் கழற்றி மாட்டினான்.
 
 
எது எதற்குத்தான் சண்டை வரும் என்றே தெரியாது. ஒரே ஒரு வாக்கியத்தை வைத்து ஒரு மனிதனைப் பூட்டித் திறப்பது போல் படுத்தி எடுத்து விளையாடி மகிழ்ந்தார் பாவா. அது என்ன வாக்கியம் தெரியுமா? "இவனுக்குள்ள இப்டி ஒரு விஷயம் இருந்திருக்கு பாரேன்."
 
 
மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண வாக்கியம் போலத் தோன்றும். திரி நுனியிலிட்ட தீ பரபரவென்று பரவி அணுகுண்டு மொத்தமும் வெடித்துச் சிதறுகிறாற் போல் எப்போது அதைச் சொன்னால் டோனிக்குக் கோபம் வரும் என்று பாவாவுக்கு நன்றாகத் தெரியும். எங்களுக்கெல்லாம் ஒரு விலையில்லாக் கேளிக்கை அவர்கள் தினமும் நடத்துகிற நாடகம். 
 
 
யாரிடமாவது கோபக்கனலாகி உணர்ச்சி மேலிடத் தன் சுய பெருமையைத் தானே பகிர்ந்து தன்னை நிரூபித்துக் கண்கள் ததும்ப நிற்பான் டோனி. எங்கள் யாரின் உதவியையோ உடனிருத்தலையோ எதிர்பார்க்க மாட்டான். அப்போது பார்த்து இவங்கிட்ட இப்பிடி ஒரு விசயம் இருந்திருக்கு பாரேன் என்பார் பாவா. அந்த சூழலின் இறுக்கம் மொத்தமும் தளர்ந்து போய்விடும். நாங்கள் எல்லாரும் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோமோ டோனி அதை நல்ல முறையில் எடுத்துக் கொள்ள மாட்டான். பாவா மீது பாய்வான். எனக்கொரு நாள் வராதயா போய்டும் என்று அடிக்கடிக் கறுவுவான். ஒரு நாள் அப்படி ஒரு நாள் வந்தேவிட்டது.
 
 
"இன்னிக்கு அவன் வந்தா யாரும் பத்து பைசா கூட நகட்டாதிங்க. என்ன பண்றான்னு பாப்போம்" என்று ஒரு நாள் சொல்லி வைத்தார் பாவா. சற்றைக்கெல்லாம் வந்து சேர்ந்த டோனி, பத்து நிமிஷம் எதையெதையோ எங்களிடம் பேசிவிட்டு, "டீ சொல்லலாமா?" என்றான். முன்னேற்பாட்டின்படி பரணி மையமாய்த் தலையை மட்டும் அசைக்க, சட்டென்று கடைக்காரர் கம் மாஸ்டர் பக்கம் திரும்பி, "நாலு டீ" என்றவன், பாவாவைப் பார்த்து, "உங்களுக்கு சீனி கம்மியாத்தானே?" என்றான். அவரும் சொல்லேதுமற்று ஆமோதிக்க, "பாவாவுக்கு சீனி கம்மியா ஒரு டீ, மொத்தம் அஞ்சு" என்றான். காலம் காலமாய் எங்களை மேய்க்கும் அனுபவத்தில், கடைக்காரர், விரோதமற்ற குரலில், "காசு?" என்றதும், "இதோ" என ஜோபியில் கைவிட்டு மொடமொடப்பான நூறு ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினான்.
 
 
"இவனுக்குள்ளயும் இப்டி ஒரு விஷயம் இருந்திருக்கு பாரேன்" என்றாரே பார்க்கலாம். வழக்கமாக அப்படிச் சொன்னால் ஏன் எதற்கு எனப் பல கேள்விகளைக் கேட்டு எப்படியாவது ஒரு சண்டையில் அதைக் கொண்டுபோய் முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். அன்றைக்கு என்ன நினைத்தானோ கமுக்கமாய்ச் சிரித்துவிட்டு, நல்ல பிள்ளையாய் பேப்பர் படிக்க ஆரம்பித்தான். அவன் அடைகிற பதட்டத்தை முதல் முறையாகத் தான் அடைந்து கொண்டிருந்தார் பாவா. வெள்ளிக்கிழமைக்கு மறுநாள் வரவேண்டிய சனி, ஞாயிற்றுக் கிழமைக்கு முதல் நாளே வந்தாற் போல், நாங்கள் எல்லாரும் கிளம்பி ஒரு ரவுண்ட் போய் வருவதற்குள் இருவரும் ரெஃப்ரீயே இல்லாமல் பாக்ஸிங் போட்டுக் கொண்டிருந்தார்கள். சண்டை இடுகிறவர்களைப் பிரிப்பதுதான் நல்லது. ஆகவே பிரிக்கப்பட்டார்கள். "அதெப்படி அப்ப இனிக்கும், இப்பக் கசக்குமோ?" என்றான் டோனி. "சொல்லியிருக்கணும்லடா.. சொல்லியிருக்கணும்லடா" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் பாவா. "எடம் பொருள் ஏவல் பாத்துத்தானங்க சொல்ல முடியும்? சும்மா எடுத்த எடுப்புல சொல்ல முடியுமா?" என்றான் இவன். "சொல்லியிருக்கணும்டா.. எங்கிட்ட கேட்டிருக்கணும்லடா?" "ஒங்ககிட்ட எதுக்குக் கேக்கணும்? எங்கிட்டயே இருந்துச்சுல்ல?". "ஒங்கிட்ட இருந்தா எடுத்து நீட்டிருவியா? அது என்னோடது, எங்கிட்ட கேக்க வேணாம்?" 
 
 
அதாகப்பட்டது விஷயம் இதுதான். சைக்கிள் கடை மாணிக்கம் பாவாவிடம் வாங்கிய கைமாத்து நூறு ரூபாயை டோனி மணியார்டர் மூலம் தந்து விட்டிருந்தார். இந்த அசமஞ்சம் அதை டைம் பார்த்துக் கொடுப்பதற்காகத் தன் ஜோபியிலேயே வைத்திருந்திருக்கிறது. தனக்குத்தானே குழி வெட்டிக் கொண்ட பாவா, தன் காசு எனத் தெரியாமல் எழுபத்தெட்டு ரூபாய் வரை எல்லாருக்கும் எதையெதையோ வாங்கித் தந்து ஆனானப்பட்ட டோனியை செமத்தியாகப் பழிவாங்கிவிட்டதாக எண்ணி இன்புற்றுக் கொண்டிருந்தபோதுதான் அப்புராணி கடைக்காரர் மிச்சக் காஸை தட் மீன்ஸ் ட்வென்ட்டி ட்டூ ருபீஸ், டோனியிடம் தரப் போக, நியாயம் மற்றும் நேர்மை என்ற பெயரிலான தன் பேன்டின் இரண்டு பாக்கெட்டுகளிலும் விட்டுக் கொண்டிருந்த கையை வெளியில் எடுக்காத டோனி, "அங்க, அவர்கிட்ட குடுத்துருங்க" என்றபோதும்கூட, "ஐ" என்றுதான் நினைத்தார் பாவா.
 
 
"என்னடா எங்கிட்ட தராரு?" எனும்போது, "ஆமா, வாங்கிக்கங்க, சைக்கிள் கடை மாணிக்கம் ஒங்களுக்கு நூறு ரூபா தரணுமாம்ல, தந்தாரு" என்றபோது தன் மடியில் தானே விழுந்து "கோ"வென்று கதற விரும்பினார் பாவா. அதன் பின் தான் இந்த சொல்லியிருக்கணும், கலாம், கணும், கலாம் சண்டைகள். தன் சொந்தக் கோர்ட்டில் தன் வழக்கைத் தானே விசாரித்துத் தீர்ப்பும் சொல்லிக் கொள்ளும் தன்னிஷ்ட நீதிபதி போல் ஒரு தீர்ப்பை எழுதிவிட்டுக் கிளம்பினான் டோனி. "ஏங்கிட்ட நூறு ரூவா எப்பிடி வரும்? நீங்க யோசிக்க வேணாமா? பத்து ரூவாயே நீங்க குடுத்தாதான் உண்டு, என்னா பாவா?" என்று ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினான். 
 
 
அவன் போனபிறகு, தன் வழக்கமான குரலில் சொல்லி அதிசயித்தார் பாவா. "எப்டிச் சொன்னான் பாரேன், எங்கிட்ட எப்டி நூறு ரூவா இருக்கும்னு? இவனுக்குள்ளயும் ஒரு விஷயம் இருந்திருக்கு பாரேன்" என்றார். 
 
 
டோனி ஒரு பாடற் பித்தன், வார்த்தைச் சித்தன்.  ஒரு பாட்டை மூட்டை கிழிந்து உள்ளிருப்புக் கொட்டினாற் போல் திறக்க அவனால் மட்டுமே முடியும். எதாவது ஒரு சில வரிகளை மாத்திரம் பாடுவான். ஒவ்வொருவருக்கும் அப்படிச் சில வரிகளை வைத்திருப்பான். ரமேஷ் அண்ணன் வந்தால் மட்டும், "நம்மைப் போல எண்ணம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை" என்று பாடுவான். மாடிவீட்டு சாந்தியக்கா எப்போதாவது டீக்கடைக்கு வந்தால், "ஓம் சாந்தி ஓம்" என்பான். "எதுக்குடா என்னய பாத்து ஓம்னு சொல்றே?" என அந்தக்கா பல முறை கேட்டிருக்கிறது. பதில் சொல்ல மாட்டான். சாந்தியக்காவின் அப்பா மற்றும் அவரது அஸ்பெண்டு ஆகிய இருவரும் ஒரு முறை, "ஏன் ஓம் சாந்தி ஓம்னு சொல்றே" என்று கேட்டதற்கு "அது பாட்டுக்கு நடுவுல வர்ற வரி" என்றான். "அது தெரியும், அதுக்கு நடுவுல வர சாந்தி யாருடே" எனக் கேட்டார் சாந்தியக்காவின் அப்பா. அவரிடம், "பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?" என்றான். கடைகண்ணிக்கு ஒத்தாசைக்குப் போய்வருபவன் என்பதால் அத்தனை செல்லம். "எங்கப்பா கூட விட்ருப்பாரு, என் வீட்டுக்காரர எப்பிட்றா சமாளிச்ச?" என்று சாந்தியக்கா கேட்டது, "மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது" என்றதும் சிரித்துக் கொண்டே போய்விட்டதாகச் சொன்னான்.
 
 
வானவில்லை வாங்க பேரம் கடவுளோட பேசுவேன் ஓஓஓஓ...
 
 
 
என்பது தனக்காகவே அவன் பாடிக் கொள்ளும் சுய ரிங் டோன். அவனுக்கு எல்லாவற்றையும் பாடல் வரிகளிலிருந்து சாட்சியம் செய்யத் தெரிந்திருந்தது மட்டுமல்ல பிடித்தும் இருந்தது. தொண்ணூறுகளில் தன் பதின்மத்தில் இருந்த ஒருவனாக அல்ல எப்போதும் எந்த வரிகளைக் கொண்டு யாரை மகிழ்விக்கலாம் என்று தன்னைத் தானே அவ்வப்போது அகழ்ந்து கொண்டே இருந்த ஞானக்கேணியாகவே திகழ்ந்தான் டோனி.
 
 
ஐந்து டீ க்ளாஸ்களைக் கம்பியோடு கொண்டுவந்து நாங்கள் அமர்ந்திருக்கும் மரத்தடியில் சப்ளை செய்வான், க்ளாஸைக் கொடுக்கும்போது, "எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்?" என்பான். அடுத்த கணமே, தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு லாலிபாப்பை எடுத்து, "மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான்" என்று பாவாவைப் பார்த்துச் சிரித்தபடியே ஓடுவான். ஜீன்ஸ் போட்டு யாராவது பெண்கள் எதிர்ப்பட்டால் அதற்கு ஒரு பாட்டு, "ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓர் இனம்தான்". ரொம்ப நேரமாக பஸ்ஸுக்குக் காத்திருந்தால் ஒரு பாட்டு, "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி". 
 
 
எந்த வரியை எதற்கெல்லாம் பாடுவான் என்றே தெரியாது. யாராவது பெரிய பொட்டோடு எதிர்ப்பட்டால், "குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்" என்பான். ரேசன் கடைக்காரர் யார் கடைக்கு டீக்குடிக்க வந்தாலும் ஒரு பாட்டு, "எல்லாருமே திருடங்கதான், சொல்லப் போனா குருடங்கதான்" இதில் ரேசன் கடை ஸ்டீஃபனிடம் டோனி கேட்ட ஒரு கேள்வி ஆகப் பிரபலம், "கைலி வாங்குறதுக்குக் கடைக்குப் போனா கைலி வாங்குவியா இல்ல கர்ச்சீஃப் போதும்னு வந்துருவியா?" இதற்காக ஸ்டீஃபன் டோனியை வெறியாட்டியது வேறு கதை. 
 
 
சக்தியுள்ள உனக்கெல்லாம் சத்தியத்தில் தவிப்பென்ன
காத்து இருப்பது எத்தனைப்பேரோ உன்னிடம் தோற்பதற்கு..
 
 
க்ரூப் ஒன் தேர்வுக்காக தன்னைத் தயாரித்துக் கொண்டிருந்த பாஸ்கர் இந்த வரிகளைக் கேட்ட பிறகு உண்மையாகவே படிப்பைத் தொடரலாமா வேண்டாமா என ஒருகணம்  குழம்பிப் பின் தெளிவார்.
 
 
அவனது அதிரி புதிரிப் பாடல் வரி எதுவென்றால் ஏரியாவில் எந்தக் குழந்தை அழுதாலும் சரி, "வளரும் பிறையே தேயாதே, இனியும் அளுது தேம்பாதே, அளுதா மனசு தாங்காதே, அளுதா மனசு தாங்காதே" என்று ராகப் பொட்டலம் கட்டுவான். அழுதுகொண்டோ, அழுகையை நிறுத்தியோ அந்தக் குழந்தை கடந்து போய்விடும், இவன் ஒரு மாதிரி ஆகிவிடுவான். உதடுகளுக்குள் இருந்துகொண்டு வரமறுக்கும் வார்த்தைகளுக்காகத் தவித்தபடி, லேசாய்க் கமல்கலங்கும்கண்ஹாஸனாகி ஒரு மாதிரி பாத்திரமாகவே மாறி இருப்பான். பிறகு, அவனை மீட்டெடுக்கப் பெரும்பொழுது ஆகும். 
 
 
மாஸ்டரை அவன் சொற்குளிப்பாட்டுவது பிரமாதமாக இருக்கும். சாப்பாடு கொண்டு மாஸ்டரின் மனைவி வருகிற நேரம் பார்த்து, "ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்க" என்பான். இதைக் கேட்டதும் ஐந்து கிலோவுக்கு மிகாமல் வெட்கப்படும் அந்த அக்கா. இதுவே மாஸ்டர் வேறெங்காவது வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த அக்கா தென்பட்டால், "அடியேனின் குடி வாழ, நலம் வாழ, குடித்தனம் புக வந்தாள் மகாலக்ஷ்மியே" என்று பாடுவான். தன் இடுப்பில் இருபுறமும் கைகளைச் செருகிக் கொண்டு, "இது ஒன் வீடு இல்ல, எங் கட, அது என் மகாலச்சுமி, அதெப்படி நீ பாடலாம்" எனப் பொய்யாய்க் கோபம் காட்டி முறைப்பார். "மாஸ்டர் உங்களுக்குத்தான் நான் டப்பிங் குடுத்தேன்" என்பான், "நான் வெறும் பின்னணிப் பாடகர்" என்று உபதகவல் வேறு. அதிலும் திருப்தி அடையாததுபோல் தவிக்க விடும் மாஸ்டரிடம், "மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டித் தேரு" என்று விட்ட இடத்திலிருந்து, "ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்க" என்பான். 
 
 
வெளிநாட்டு வேலை லீவில் வரும் சுந்தரண்ணனைப் பார்க்கும் போது, "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா" என்பான். அதுவே, ராணுவத்தில் வேலை பார்க்கும் தாமஸுக்கு வேறு பாட்டு "இது நாட்டைக் காக்கும் கை; உன் வீட்டைக் காக்கும் கை, இந்தக் கை நாட்டின் நம்பிக்கை." 
 
 
எல்லோருக்காகவும் தன்னை ஒரு கொண்டாட்டத்தின் பகுதியாகவே மாற்றிக் கொண்டவன் டோனி. அவனிடம் எதெதையோ கண்டுபிடித்து, "இவனுக்குள்ள இப்டி ஒரு விஷயம் இருந்திருக்கு பாரேன்" என்று நாளெல்லாம் பொய் போற்றி மகிழ்ந்த பாவாவுக்கு, டோனி ஒரு மனித உருவிலான மனமிளக்கி வில்லை என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. எல்லோருடைய தினங்களிலும் தன்னிஷ்டத்துக்குப் புகுந்து ஒரு பாடலின் சின்னஞ்சிறிய விள்ளலைப் பொதிந்துவிட்டுத் திரும்பி வருகிற கபடமறியாத கிள்ளைப் பறவை போல டோனி எண்பது/தொண்ணூறுகளின் பாடல்களும் தானுமாய் விகசித்தான். 
 
 
அதற்குப் பிறகு நாங்கள் சிலர் மாத்திரம் அங்கேயே இருந்தோம். பலர் சிதறினோம். பாவா வட இந்தியாவில் செட்டில் ஆனார். டோனி ஒரு லிஃப்டு பொருத்தும் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக ஒருமுறை சொன்னான். வாட்ஸப் எங்களிருவரையும் இணைத்துத் தந்தது. அதில் ஒரு நாள் ஒரு ஆடியோ க்ளிப்பை அனுப்பியிருந்தான். மழலை ஓரளவு விடைபெற்ற பிற்பாடான பதின்மத்தின் குரலில், "கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை" என்று ஒரு பதின்மக் குரல் பாடுவது கேட்டது. பிசகேதும் இன்றி ஒரு அறிந்த பாடலை ஒரு புதிய குரல் வருடித் தருவதென்பது வரம். யாராக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தைப் புறந்தள்ள முடியாமல், அவன் எண்ணை அழைத்துக் கேட்டேன். "எம் பொண்ணுதான் ரவி, எட்டு வர்ஷமா கர்னாடிக் ம்யூஸிக் கத்துக்கறா" என்றான். "பிசிறே இல்லடா, பிரமாதமாப் பாடுது" என்றவன் ஆர்வ மிகுதியால், "எதனா டி.வி ஷோலயெல்லாம் கலந்துக்க வெக்கலாம்ல?" என்றேன். "தெரிஞ்சுகிட்டா போதும்பா, தெரியும்னு காமிச்சுக்கணும்னு அவசியம் இல்லன்னு சொல்லுச்சுய்யா" என்றான். 
 
 
"அதுக்குள்ளயும் இப்பிடி ஒரு விஷயம் இருந்திருக்கு பாரேன்" என்றேன். இருவரும் சிரித்தோம்.
 
 
 
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)

English Summary
Pulanmayakkam

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...