???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிற்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 தற்காலிக நிறுத்தம் 0 காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம் 0 புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு 0 ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை 0 புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம் 0 அத்திவரதரை வழிபடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் 0 உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர் 0 அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! 0 இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி 0 ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம் 0 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 0 சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை 0 எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம் 0 நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 93 - ஏன் அவர் மேஸ்ட்ரோ [பகுதி-3] இசைவழி முத்தங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   17 , 2018  01:41:47 IST


Andhimazhai Image
அது வரைக்குமான இலக்கணங்களை மீறுவது புத்தம் புதிய செயல்முறையை தொடங்குவது எளிதல்ல. என்றாலும் ராஜா அனாயாசமாக அதனைச் செய்து காட்டினார். குரலும் உடனொலிகளும் இணைப்பிசையும் இடையிசைத் தோரணங்களும் எல்லாம் தனித்தனியே ஒன்று மற்றொன்றுக்கு வழிவிட்டுக் கொண்டிருந்த காலத்தில் ராஜா அவற்றைக் கலந்தார். இந்தச் சரளிவரிசையில் தான் எத்தனை ஆச்சர்யங்கள்..?
 
 
1. வந்தாள் வந்தாள் ராஜகுமாரி  #  ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
 
ரன்வேயில் விமானம் ஓடிக்கொண்டிருக்கிறது. மெல்ல சன்னல்விழிகள் தரை நோக்கிக் கொண்டிருக்கும் போதே தலை தெறிக்க ஓடி ஒரு புள்ளியில் தரையை உதறி சட்டென்று மேலேறி வானேகித் தன்னை ஒரு பறவை என நிரூபித்தபடி பறக்கத் தொடங்கும் ஆரம்ப கணங்களை இசைப்படுத்த முடியுமா..? முடிந்தது. இந்தப் பாடலின் பல்லவியும் சரணங்களும் வேறென்னவாம்..?
 
 
இசையும் குரலும் கலந்த பாடற்பொழிதலை முழுவதுமாய்க் கையில் பற்றினார் ராஜா. அப்படியான பாடல்கள் கருவி இசைக்கோர்வைகளின் துல்லியத் தனித்தலும் வேறொரு தளத்தில் குரல்களுமாய் ஒலித்தன. பஜனையின் கூட்டுக்குரல்களில் ஒன்றாகவே மனோவும் சித்ராவும் பாடி இருப்பார்கள். மொத்தப் பாடலுமே ஒரு தூறலுக்கு அடுத்த தெறித்தலாய் நிகழ்ந்து நிறையும்.
 
செந்தேன் செந்தேன் தேன் முத்தம் என்று 
தந்தாள் தந்தாள் நான் கொஞ்ச இன்று 
வந்தாள் வந்தாள் 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இந்த வரிகளை உதடு படாமல் உள்ளம் வருடிப் பாடுவார் மனோ.
 
 
 
பாடல் ஆரம்பிக்கிற கணம் எதிர்பாரா அயர்தல் .ராஜா பாடியவற்றில் இப்படியான பாடல்களை மாத்திரம் தொகுத்தால் தனி ரசமாய்த் திகழும். பாரம்பர்யத்தின் பிடிமானமும் புதியவற்றின் பங்களிப்புமாய்த் தேனில் கலந்த செர்ரிப் பழமாய் இனிக்கும்.  மேற்கத்தியக் கோர்வைகளையும் வீணையையும் கலப்பதில் மன்னன் ராஜா தானே..? அதற்கு நளினமான உதாரணம் இந்தப் பாட்டு. வீணை இசை மென் சோகமாய்ப் பெருகும் போதெல்லாம் அதன் அழுத்தத்தை லேசாய்க் குறைத்துத் தரும் உடனிசை இரண்டுமே சேராப் பகைமனங்கள் சேர்ந்தாற் போல் இயங்கி இருக்கும்.
 
அளவு தான் இசை என்பதில்லை என்றாலும் அளவாய் இசைத்தலின் சுவையை உணர்த்தும் நற்பாடல் இப்பாடல்.
 
தேன் கூட்டில் உள்ள 
தேன் யாவும் மனம் வேண்டிடாதோ 
 
எனும் போது அந்த வேண்டிடாதோவை குழலாலும் குரலாலும் ஒரே மீட்டருக்குள் அமர்த்தி ஜாலம் செய்திருப்பார் ராஜா.சரணங்களுக்கு இடையிலான இணைப்பிசையின் ஒரு நறுக்கு சிங்களத்து சின்னக்குயிலே என்ற பாடலின் இணைப்பிசை அதை உணரா வண்ணம் இன்னொரு வேறோன்றைக் கொண்டு வந்து முகிழ்த்துவது பேராச்சர்யமாக நிகழ்ந்திருக்கும். ராஜா உமா ரமணன் இணையின் குரல் கூட்டுச்சிற்பம் இப்பாடல்.
 
             
 
பாடலை உருவாக்குவதென்பது ஏன் சவாலாகிறது பிறர் முழுவதுமாய்க் கேட்கவுள்ள பாடலொன்றை துண்டு துக்கடாக்களாக தன் மனதின் அடியிலிருந்து சிந்தித்து அதை வெளிக்கொணர்வதென்ன சாதாரணமா..? இன்னது இன்னதாக வரும் என்று தெரிந்தாலே சிரமம். எதுவும்தெரியாத இருளைப் பெயர்த்தெடுப்பதென்ன சுலபமா..? சூலுள் குழந்தையை வார்த்துத் தருகிற சிற்பகாலம் என்றல்லவா கர்ப்ப காலத்தைக் கொள்ள வேண்டும்..? கடவுளின் அருகாமை எனச் சொன்னால் தகுமன்றோ இசையை இந்த இடத்தில் அழகான மஞ்சப்புறா பாடலை லேசாய் நினைவுக்குள் கொண்டுவாருங்கள். அதன் முழு ஓட்டத்திலும் ஒரு மணிச்சப்தம் தொடர்நதியாய்ப் பெருக்கெடுத்திருக்கும். மேற்காணும் முத்துக்காளை பாடலில் வெறும் துந்தணா சப்தத்தை கோலோச்ச வைத்திருப்பார் ராஜா.. ஜானகியும் பாலுவும் தங்கள் குரலால் ஆண்டிருக்கும் இந்தப் பாடலில் வருகிற கஞ்சிக் கலயமாய் சுடும் கெடும் கேட்பவர் மனம்.
 
 
 
மேற்காணும் கஞ்சிக்கலயத்தை பாடலின் மைய இழையை மீவுரு செய்தாற் போல் இந்தப் பாடல் தொடங்கும். இத்தனை மென்மையின் வலிமையைக் கொண்ட இன்னொரு பாடலாரம்பத்தை சுட்டுவது சிரமம். சுவர்ணலதா மனோ இணையின் குரல்பாவில் பொன்னிழை பட்டாய்ப் பாடலை நெய்திருப்பார்கள். சரண முந்தைய இசைத் துணுக்கு அத்தனை பலமாய் மனதை நெகிழ்த்தும். உடனொலி குரலின் தனித்துவம் அத்தனை பலமாய் நிகழும். ஓட்டமும் நடையுமாய் என்பார்கள் அல்லவா அப்படித் தான் இந்தப் பாடல் கேட்கும் நம்மை உடனழைத்துச் செல்லும். ஒன்று இரண்டு மூன்று என்று முறையாய் அளவாய் நிகழ்ந்து பெருகிச் செல்லும் பாடலின் உள் கட்டமைப்பு அலாதியாய் சிறக்கும். மனோ, சுவர்ணலதா இருவரின் சாகாவரப் பாடல் இது.
 
மெலிதாய் உருண்டோடும் நதியின் பரவலாய்த் தொடங்கும் இப்பாடல் மனோவும் ஸ்வர்ணலதாவும் பாடிய விதத்தாலே அமானுஷ்யமான உணர்தலைத் தரும். சின்ன கேவல் ஒன்றின் பாடல் சாட்சியமாய் இப்பாடல் முழுவதும் நகரும். உடனொலிகள் பலமாகவும் இணைப்பிசை சற்றே மந்தமாகவும் இணையும் அடுத்த இசை மிகப்பலமான ஷெனாய் ஆக மலரும். இப்பாடலின் நடுவாந்திரம் ஒலிக்கும் குரலின் ஓர்மை கூறத்தக்கது. தபலா ப்ரியர்களுக்கு நல்விருந்தாக இப்பாடல் தனிக்கும். சட்டென்று துப்பாக்கிகளின் முழக்கத்தை இசைநடு பிளத்தலுக்கு உபசப்தங்களாய்ப் பயன்படுத்தி இருப்பார். உடன் தொடரும் பலமான இணைப்பிசைக்கு நடுவே மிக மெல்லிய இழைதலாய் மழையின் துளிகளாய் மணிச்சப்தமும் ஷெனாயும் பெருகும்.
 
நீயில்லாத நாளெல்லாம்
நெருஞ்சி முள்ளில் தூங்கினேன்.
நீண்ட நேரம் ராவெல்லாம்  
நெருப்பு மூச்சு வாங்கினேன்
 
பல்லவி நடுவே ஒரு இசை வரும். அது உலகளாவிய ஒலித்தலாய்ப் பெருகும். இசை ராஜனின் இசை வார்த்தலுக்கு இன்னொரு நல்மழைக்கால உதாரணம் இப்பாடல்.
 
 
5. என்ன வரம் வேண்டும் # நந்தவனத் தேரு
 
சுலோகத்திற்கு மாத்திரமே உருக்கொள்கிற தனித்த குழைதலும் உடனொலிகளின் பரவலுடன் குழுப்பாடல் போலத் தொடங்கும் இப்பாடல் ஒரு மனமிளக்கும் மருந்து. இரவில் கேட்டால் உறக்கம் வரும். பகலில் கேட்டால் பிழைப்புக் கெடும். மூடிய கண்களின் வழி நதி பிறந்தோடும். கன்னம் தாண்டுகையில் தான் அது கண்ணீர் எனத் தெரியும். ஏனெனத் தெரியாத பரவசத்தை பாடலாக்கினால் எப்படி இருக்கும்.,.? இப்படி இருக்கும்.
 
நேற்று இன்று என்றைக்கும் 
இங்கு உன்னோடு என்னுள்ளம் சங்கமம் 
ஒன்றல்ல ரெண்டல்ல இன்பங்கள் 
அதை சொல்லிட வந்திடும் உன் முகம்
நிலவும் இந்த நீரும் இரவும் அந்த வானும் 
காலம் முழுதும் காதல் வாழும் என்று சொல்லு
 
இந்தப் பாடலோடு உலகம் முடிந்து அடுத்த பாடலுக்கு அடுத்த உலகம் தான் தொடங்கும். நம்பினோர்க்கு இசை. நம்பாதவர்க்கில்லை அவ்வுலகம்.
 
 
 
 
நல்ல நாளாம் திருநாளாம் 
ஒளிக்கோலம் திருக்கோலம்..
 
இந்தப் பாடல் மலைக்கோயில் வாசலில் பாடலின் அட்வெர்ஸ் பாடலாக அதன் வெளிகளின் கோடிட்ட இடங்களை நிரப்பித் தந்தது. ஆரம்பம் பலமாகவும் இணைப்பிசை துல்லியமென்மையுடனும் அதன் அடுத்த இசைக்கோர்வைகள் மத்திமமாகவும் என முன் பின் கலைந்த மதிய வானத்து மந்தகாசம் போல தனிக்கும் இப்பாட்டின் பெரும்பலம் ஜானகியும் மனோவும் பாடிய விதம் அதிலும் மனோகரமெஸ்மெரிஸம் எத்தனை கேட்டாலும் அலுக்காத பேரிசை.  
 
 
 
இந்த நாள் மணநாள் முதல் நாள் சங்கம நாள் 
நல்ல இன்ப நாள் திருநாள் பெருநாள் மங்கல நாள் 
 
நின்று மெல்ல வலுத்துப் பொழியும் முழு தின மழை போல இந்தப் பாடல். இதன் இணைப்பிசையும் குரல்களும் ஆழம் ஒன்றில் தங்களைப் பொருத்திக் கொண்டு இயங்கி நிறையும். நின்று நின்று அடிக்கும் சாரலை இசைப்படுத்தினாற் போல முழுப்பாடலும்..
 
சொல்லேது மொழியேது 
நன்றியை நாளும் சொல்வதற்கு
 
இந்தப் பாடலிலும் இரண்டாம் நிமிடம் முப்பத்தி எட்டாம் வினாடியில் ஒரு பாடற்பிளவு வரும். இளையராஜா மட்டும் தான் இப்படியான சித்துவேலைகளைச் செய்திருக்கிறார் என்று காலரை நிமிர்த்திச் சொல்ல முடிகிறது. உலகத்தின் ஓர்மையாக ஒற்றை ராஜா.
 
 
முழுப்பாடலும் முடியும் போது எப்போதோ ஆறிப் போன ரணம் ஒன்று மறுபடி லேசாய் ஞாபகத்தில் திறந்து கொண்டாற் போல் பாடலின் பூர்த்தியின் போது எங்கென்றறியாத சின்னக் கீறலாய் மனம் தன்னையே நிரடித் தவிக்கும். ராஜாவின் இசைவழி முத்தம் இந்தப் பாடல்.
 
    
இஸ்லாமிய பண்பாடு தொனிக்கும் இப்பாடலெங்கும் மாபெரும் அன்பின் ஊற்றாக இடையிசையும் குரல்களும் வழிந்தோடும். சொல்ல முடியாத சிருங்காரமும் அதற்கு முன் பிந்தைய லேசாய்க் கலங்கும் மன அழுத்தமும் பொங்கும் குரலில் இப்பாடலை வழங்கி இருப்பார்கள். ஒருமித்த திசைவழியில் நகரும் படகு இடையிடையே காற்றுக்கு ஆடுகிறாற் போல் பாடலின் ஸ்வரக் கட்டு நெகிழ்த்தும். பாடல் முடிவடைகையில் கேட்பவர் மனதுள் அழுத்தமாய்ப் பற்றிக் கொள்ளும் பறவையின் ஞாபகம் போல இந்தப் பாடல்.
 
காதல் வானிலே காதல் வானிலே - ராசைய்யா 
ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே - எல்லாமே என் ராசாதான் 
புன்னை வனத்துக் குயிலே நீ - முத்துக்காளை 
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே - நந்தவனத் தேரு
 
மற்றும் அவதாரம் மோகமுள் படத்தின் பாடல்கள் யாவும் இந்த இடத்தில் சேர்த்து வைத்துக் கொள்வோம். 
 
முதலில் ஏன் அவர் மேஸ்ட்ரோ? 
 
ஏன் என்றால், மேற்காணும் இந்த அத்தியாயத்தின் எல்லாப் பாடல்களையும் அடுத்தடுத்து கேட்பவர்களுக்குச் சொல்வதற்கென்று தனித்த விசயங்கள் இருக்கின்றன. முழுமையான இசைமாற்றத்துக்கான புதிய கருவிகள் புத்தம் புதிய இசைக்கோர்வைகள் இணைப்பிசைத் தோரணங்கள் உடனொலிக் கூட்டுகள் என இத்தனை பாடல்களையும் உருவாக்கினார் ராஜா.
 
 
ஏன் என்றால்..
 
மேற்காணும் இந்த அத்தியாயத்தின் எல்லாப் பாடல்களுமே ஒரு மழைக்காலத்தின் அடுத்தடுத்த மழைகளின் தொடர்பற்ற தொடர்ச்சியை நமக்குள் நேர்த்துவதை உணர முடிகிறது.
 
 
ஏன் என்றால்.. 
 
இணைப்பிசை என்பதற்கான அதுவரைக்குமான இலக்கண இலக்கியங்கள் அத்தனையையும் தான் படைத்த பேருலகின் இணைப்பிசைக் கோர்வைகள் அத்தனையையும் மறுதலித்து விட்டு முழுவதுமான புத்தம் புதிய இணைப்பிசையை முன் வைத்தார் ராஜா என்பதால்
 
 
ஏன் என்றால்.. 
   
பாடல் வரிகள் பாடிய குரல்கள் உறுத்தாமல் மென் சோகத்தை அதன் விடாப்பற்றுதலை இறுதி வரைக்குமான உணர்வுகள் வழிந்தோடும் மன நதியோட்டங்களை முழுவதுமாக அல்லது முழுமைக்கு அருகாமையில் சாத்தியப்படுத்துகிற வேறாரும் செய்து பார்க்காத முன் பின் அற்ற புதிய முயல்வுகளைத் தொடர்ந்து தான் மட்டுமாய் முனைந்து கொண்டிருந்ததனால்
 
 
ஏன் என்றால்,
 
ஒரு இளையராஜா மேற்காணும் இத்தனை பாடல்களையும் ஒரே வருடத்தில் அடுத்தடுத்த படங்களில் அவற்றின் வணிக நிர்ப்பந்தங்கள் முன் தீர்மானங்கள் எல்லாவற்றுக்கும் இடம் கொடுத்தபடியே செய்து காட்டியதால்..
 
 
அவர் மேஸ்ட்ரோ!  அது 1995.
 
 
 
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...