அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 85 - பெருங்கலைஞனின் நடனம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   15 , 2018  13:30:24 IST


Andhimazhai Image
இந்த உலகம் எப்போதும் மழையைப் பற்றிப் பேசுவதை விரும்புகிறது. அதன் உக்கிரமான வருகையின் போதும் பழிப்பதை எவருமே விரும்புவதில்லை.மழை சார்ந்ததே மண்ணின் வாழ்க்கை. மழைவருகை ஒரு செய்தி போலத் தோன்றினாலும் கூட அந்த வருடத்தின் நிறைதலுக்கான அச்சாரம் அதுவே. வராமற் போன மழைகளின் கதை எருக்கம் பால் கசிகிற மணத்தோடு கருவேல முள்மரங்கள் எரிகிற மணத்தோடு பொசுங்குகிற சதையின் அருகாமை போலக் கமழ்கிறது. மழையின் தப்புதல் பற்றிய கணக்கேட்டை உரக்கப் படிப்பதற்கும் விவாதிப்பதற்கும் யாருமே விரும்புவதில்லை.
 
 
தொடர்ச்சியாக மழை கைவிடுகிற ஊர் அழியும் என்பது நியதி. ஆக மழை என்பது கடவுளின் மொழி. பஞ்சம் பிழைத்தல் என்பது பயணமல்ல. மனிதர்கள் தங்களைக் கைவிட்ட நிலத்திலிருந்து வேறு திசைகள் தேடிப் புறப்படுகிற நகர்தல். நினைவில் ஒரு ஊரை நிரந்தரமாக அதன் வீதிகளை மாந்தர்களை திருவிழாக்களை ஏன் பொய்க்காத முந்தைய மழைகளை இன்னபிறவற்றை எல்லாமும் தேக்கி வைத்துக் கொண்டு நாளும் அங்கே மறுபடி திரும்ப முடியாதே என்கிற அல்லாட்டத்தோடு கழித்துக் கொண்டிருப்பது பெருவாதை. ஒரு குழந்தையைப் பெற்றவர்கள் அணைப்பதற்கும் பிறர் அணைப்பதற்கும் இடையிலான வித்யாசம் என்ன சாதாரணமா..?
 
 
மழை நேரடியாக மனிதனிடமிருந்து எதையுமே எதிர்பார்ப்பதில்லை. மாறாக எப்போதைக்குமான விதிகள் மனித வாழ்வை நோக்கிச் செலுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை மனிதன் கைவிடும் போதெல்லாம் ஒரு மௌனமான நீதி நிலை போலவே தப்புகிறது மழை. 
 
 
காணவாய்த்த ஒரு சித்திரத்திலிருந்து இதன் உபகதையைத் தொடங்கலாம்.. மழை கொட்டிக் கொண்டிருந்தது. மழை என்றால் கண்ணைத் திறக்க முடியாத அளவுக்கு. இமைகளோடு சண்டி செய்யும் மழை. மழைக்கு உகந்த நேரம் ஒவ்வாத நேரம் என்று எதுவும் இல்லை. இந்த உலகம் தோன்றியதிலிருந்து இந்த நொடி வரைக்கும் இன்ன இடம் என்று இல்லாமல் இந்தப் பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்தத்தையும் நனைத்துதான் இருக்கிறது மழை. மழையின் அபாரம். ஒரு வருடத்தின் எல்லா தினமும் எதாவது ஒரு இடத்திலாவது பெய்து கொண்டுதான் இருக்கிறது மழை. ஒரு தினத்தின் எதேனும் ஒரு நொடியை மாத்திரம் நகர்த்திப் பிடித்து இந்த நொடி மழையற்றது என்று சொல்ல யாராலும் இயலாது. அந்த ஒரு நொடி இந்தப் பிரபஞ்சத்தின் எந்த ஒரு இடத்திலும் மழையே இல்லை என்று அறுதியிட முடியுமா என்ன? மழை என்பது பெருந்தெய்வம். மழைக்கானது யாவும். எத்தகைய ராஜவாழ்வும் மழையின் கதையில் ஒரு உப திருப்பம். இப்படிச் சொல்லிப் பார்க்கிறேன். மழை என்பது பெரிய நீர்.
 
 
மழை சதா பெய்து கொண்டே இருக்கிறது. மழையும் மொழியும் ஒன்று, புரிபவர்க்கு அது பாசம், புரியாதோர்க்கு அது மௌன விரதம். மழையற்ற எதுவும் வீண். 
 
 
மறக்க முடியாத மழை எனும் மூன்று சொற்களை யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். அவரவர் கதையின் பிரத்யேக மழைகள் திறந்து கொள்ளும். தாழியை உடைத்துக் கொண்டு திரண்டு வருகிற அமுதமல்லவா மழை. மழையின் பாடல்களை இங்கே பார்க்கலாம். அதற்கு முன்னால் சொல்ல வேண்டிய இன்னும் ஒரு மழையைச் சொல்லி மழையின் உறவேற்கலாம். 
 
 
மதுரையின் மாவட்ட மைய நூலகம் அமைந்திருக்கிற வீதி. தீபா - ரூபா என்று அங்கே இரண்டு பழைய திரையரங்கங்கள் இருந்தன. அந்தத் திரையரங்கில் ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்துவிட்டுப் படத்தின் பாதியில் எழுந்து வெளியேறிப் பள்ளிக்கூட நேரத்தைச் சரிசெய்வதற்காக வந்துகொண்டிருந்தேன். தியேட்டரிலிருந்து அதன் நுழைவாயிலுக்கே சிறிது தூரம் நடக்க வேண்டும். அதன் பிறகு சாலையில் நடந்து பேருந்து நிறுத்தத்துக்கு ஒரு அரை கிலோ மீட்டர் போக வேண்டும். நாலு எட்டு நடந்திருப்பேன். சடசடசடவென மழை எடுத்த எடுப்பிலேயே மத்தளம் அடிக்கத் தொடங்கியது. என்ன செய்வதெனத் தெரியாமல் எங்கு ஒதுங்குவது என்றும் புரியாமல் சூழ்நிலை திகைப்பாக மாற ஒரு கணம் அப்படியே உறைந்தேன். கண் முன்னால் நூற்றுக் கணக்கான தேர்வுகள் இருக்கும்போது எப்படி ஒரு மனிதன் குழம்புவானோ, அதுபோலவேதான் எதுவுமற்ற போழ்திலும் தேங்குவான். 
 
 
ஒரு நொடியில் எதிர்பாராத ஒன்றாக அது நிகழ்ந்தது. அந்தப் பெண்ணுக்கு ஒரு இருபத்தைந்து வயதிருக்கும். அந்த மழை அப்போது அங்கே பெய்துகொண்டிராவிட்டால், நானும் நீங்களும் எப்படி அந்த இடத்தைக் கடந்து நடந்து போவோமோ, அப்படி நடந்து போனாள் அவள். சிறு தயக்கமோ பதற்றமோ இல்லை, அவசரம் வேகம் இல்லவே இல்லை. மிக யதார்த்தமான நடைகளுடன் என்னைக் கடந்து சென்றாள். மழையோடு கலந்து செல்பவளின் பின்னால் செல்வதுதான் உசிதம் என்று முடிவெடுத்தேன். என்னால் அவளது நேர்த்தியோடு நடக்க முடியவில்லை. ஆனால் சமாளித்துச் சென்று கொண்டிருந்தேன். அவளது உடை மழையை யூகித்த முன் தீர்மானத்தோடு மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்தது. அவளது நடையை ஒரு ஞாபகமாக்கி எனக்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேமித்துக் கொண்டே நகர்ந்தேன். 
 
 
மாவட்ட மைய நூலகத்தைத் தாண்டியவள், எதற்கோ ஒரு கணம் என்னைத் திரும்பி நோக்கினாள். மனிதனுக்கு இயற்கை அள்ளித் தருகிற மாபெரிய கொடை மழை. மழையிலிருந்து நாம் வெளியேறுவதற்கும், நமை வருடிவிட்டு மழை வெளியேறுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு. பெருங்கதையாடல் ஒன்றின் பிடிவாதம் மிகுந்த ஒரு கதாபாத்திரத்தைப் போல அவளது தோற்றம் அமைந்திருந்தது. மழை மாத்திரம்தான் இந்த உலகத்தில் தன்னை விளையாடுகிறவர்களோடு தானும் சேர்ந்து ஆடுகிற ஒரே ஆட்டம். மழை நிகழ்கிறாற்போல் நம்மை நிகழ்த்துகிறது. அந்த முகத்தை என்னால் மறக்க முடியவே இல்லை. ஒரு பெருஞ்சலிப்புக்கு ஆளாகிறவரை அதற்குப் பின் அவளைப் பல தினங்களில் தேடியிருக்கிறேன். ஒருவேளை அவள் கிடைத்தால் அவளிடம் கேட்பதற்கான ஒரு அறிவார்ந்த கேள்வியை எனக்குள் பலவிதமாய்த் தயாரிக்க முனைந்திருக்கிறேன். எனக்குப் பிரியமான ஒரு கனவில் அவளை நான் சந்திப்பேன். சந்தேகத்துக்கு இடமின்றி என்னைப் பார்த்ததும் அவள் புன்னகைப்பாள். நீங்கள்தானே அந்த மழையில் என்னைக் கடந்து சென்றது எனக் கேட்கலாம். ஆனால் அதுவல்ல உத்தமமான வினா. நீங்கள்தானே அந்த மழையை என்னோடு பகிர்ந்து கொண்டது என்று கேட்பதே உசிதமாய் இருக்கும். அது கனவல்லவா? மனிதனுடைய கட்டுப்பாட்டுக்கு வெளியே நிகழும் கதையல்லவா கனா என்பது? நீங்கள்தானே அன்றைய மழை என்பதோடு என் உதடுகள் ஒட்டிக் கொள்ளுகின்றன. 
 
 
 
முன் சொன்ன நனவின் கேள்விகளை அவளிடம் கேட்பதற்காகப் பலகாலம் பலவாறு முயலுகிறேன். அத்தனையும் அற்றுப் போன ஒரு தேவாதி கணத்தில் அவள் என் கன்னத்தைத் தட்டித் தன் பொங்குகிற கண்களால் சிரிக்கிறாள். நனவின் கபடமான வினா ஒன்றைக் கேட்டுவிடுகிறேன். அதெப்படி நீ பொழிந்து கொண்டே என்னோடும் வர முடியும் என்று. ஹும், ஏளனமாய் எனைப் பார்த்தவள் பதிலுகிறாள், நிலவமுதக் காலத்தில் உடல்கள் பிணைந்து இறுகக் கட்டிக் கொண்டபடி நடந்து வருகிற இணையரை நீ கண்டதில்லையா?, என்றவாறே மறைந்து போகிறாள். 
 
 
வாழ்வின் நடுநடுவே மழை, மழைகளின் நடுவிலே பல வாழ்வு.
 
'வாலி' படத்தில் சிம்ரனிடம் தன்னைப் புரிந்து கொண்டு, காதலை ஏற்கச் சொல்லி அஜீத் கெஞ்சும்போது ஒரு மழை வரும். 'காதல் கோட்டை' திரைப்படத்தில் மழை ஒரு முக்கியக் கதாபாத்திரமாகவே மின்னியிருக்கும். 'நாயக'னில் வேலு நாயக்கரின் முன்னால் மூடிய கையில் வண்ணப் பொடிகளுடன் ஒரு சிறுவன் நிற்பான். அதையொற்றிப் பொழியும் மழை அழகழகு. 'வெள்ளை ரோஜா' திரைப்படத்தில் சந்தேகப்பட்டுக் கல்லறையைத் தோண்டும்போது ஒரு மழை பொழியும். 'சிட்டிசன்' படத்தில் காணாமல் போன அத்துனை பேரையும் தோண்டி எடுக்கும்போது மழைதான் பின்புலம். 'தளபதி' படத்தில் தினேஷை ரஜினி கொல்வது ஒரு மழையில்தான். இந்த உலகின் எத்தனை கதைகளில் எத்தனை எத்தனை மழைகள். 
 
 
கஜேந்திரா என்கிற விஜயகாந்த் படத்தை நானும் நண்பன் ஆதியும் மதுரை ஜெயம் அதாவது பழைய நட்ராஜ் தியேட்டரில் சென்று பார்த்தோம். முடிந்து வெளியே வந்தால் கொட்டித் தீராமல் தொடர்ந்து கொண்டிருந்தது பெருமழை. அடுத்த ஷோவுக்கான கூட்டம் என்று பெரிதாக யாரும் இல்லாத போதிலும் படம் பார்த்தவர்களை உடனே வெளியேறுமாறு நிர்ப்பந்தித்ததை திட்டிக் கொண்டே வெளியே வந்தோம். சற்று முன்பு ராஜமரியாதையோடு அமர்ந்திருந்த சிம்மாசனங்களை சொடக்கிடும் நேரத்தில் இழந்துபோன அத்தனை மன்னர்களும் மழையில் நனைந்தபடியே வெளியேறி வந்தது முன்பு எப்போதும் நிகழாத ஒன்று.,
 
 
திரைப்படங்களின் ஊடாக மழை எனும் சித்திரங்களை நினைவில் கொள்வது போலவே தியேட்டர்கள் படவெளியீடுகள் சார்ந்தும் மழை பற்றிய நினைவுகள் தனியானவை.துள்ளித் திரிந்த காலம் என்ற படத்தை பார்த்து விட்டுத் திரும்பி வரும் வழியில் மதுரை என்கிற மகா நகரத்தின் எந்த வீதியிலுமே மின்சாரம் இல்லை.இருள் என்கிற ஒன்று நம்மைப் பின் தொடர்ந்து வரும்போது அது விளைவிக்கிற பயத்தின் அளவு பிரும்மாண்டமாகிறது. அன்றைக்கு திருநகரின் நாலாவது ஸ்டாப்பை தாண்டும் போது ஹே என்ற பெருங்கூச்சலோடு நகரத்தின் அனேக இடங்களுக்கு மின்சாரம் திரும்பியதை ஒரு சேர அனுபவிக்க முடிந்தது. என்னவென்றே தெரியாத ஒரு நிம்மதியோடு மிகுதி தூரத்தைக் கடந்தோம் நானும் மார்லனும்.
 
 
மிகச் சமீபத்தில் நானும் ஆதியும் ரங்கூன் என்ற படத்தை மதுரை வெற்றி திரையரங்கில் பார்த்து விட்டுத் திரும்பினோம். இத்தனைக்கும் அப்போது மணி மாலை நாலே முக்கால் தான்.அப்படி ஒரு மழை சென்ற வருடத்தில் அதற்கு முன்னும் பின்னும் மதுரையை நனைக்கவில்லை என்ற அளவுக்கு மாபெரிய தழுவலை நிகழ்த்தியது. மழையில் வாகனங்கள் முடக்கமாகித் தெருக்கள் பரபரத்து ஆங்காங்கே நகரம் உறைந்து நிற்பதென்பது முரண்பட்ட ஒரு பயத்தின் கோட்டோவியமாகத் தான் நிகழ்கிறது. ஏன் என்றே தெரியாத ஒரு திருப்பத்திற்கப்பால் எதேதோ வழக்கத்துக்கு மாறான குறுக்கு சந்துகளிலெல்லாம் காரைச் செலுத்தி வேற்று உலகங்களின் மாந்தர்களை எல்லாம் சந்தித்து ஒருவழியாக வீடு திரும்பும் போது ரங்கூன் என்ற ஒரு திரைப்படத்தை அல்ல இரண்டாவதாக அன்றைய மழை என்ற இன்னொரு படத்தையும் பார்த்து வந்தாற் போலத் தோற்றமளித்தோம்.
 
 
          
பொன்வானம் பன்னீர்த் தூவுது இந்நேரம் என்கிற பாடலைப் பேசியிருக்கிறோம், மழ கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே பாடலையும் பார்த்திருக்கிறோம். மழையின் பாடல்கள் பல. 
"ஈரமான ரோஜாவே.. என்னைப் பார்த்து மூடாதே"
"பொத்துகிட்டு ஊத்துதடி வானம்"
"மழைக்கால மேகம் ஒன்று மணி ஊஞ்சல் ஆடியது"
"மழை வருது மழை வருது குடை கொண்டு வா"
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு என்ற கமல் பாடல் எனக்குள் ஒருவன் படத்தின் இந்தப் பாடல் பார்க்க அத்தனை செழுமையாக இருக்கும்.
சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ என் சுவாசக் காற்றே வைரமுத்துவின் உளிச்சொற்கள் பாட்டுச் சிற்பம் இசைத்தூறலாய் மனம் கொத்தும்.
 
 
 
மழை என்பதன் பொதுத் தன்மையிலிருந்து விலகி மழை தன் தனித்த உலகத்தினுள் எங்கே எப்போது ஒருவரை அழைத்துச் செல்லும் என்பது யாராலும் கணிக்க முடியாத சூட்சுமம். மழை தன்னை உற்றுக் கவனிக்கிறவர்களுக்கு ஒன்றாகவும் மற்றவர்களுக்கெல்லாம் சாதாரணமாகவும் விளங்குகிறது. மழை பிடிக்கும் என்பது வெறும் வாக்கியம் அல்ல. அது ஒரு புதிய வழிபாட்டைப் பின்பற்றத் தொடங்குவதைப் போன்றது.
 
மழையைப் படமாக்குவதில் தான் எத்தனை எத்தனை வித்யாசங்கள்..?ஒரு போதும் ஒத்திகை பார்க்காத பெருங்கலைஞனின் நடனம் தானே மழை..?
 
 
 
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...