???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை! 0 சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல் 0 போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம்: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை 0 அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 7 மணிநேரம் விசாரணை! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் 0 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக நடிகை கரீனா கபூரை நிறுத்த கோரிக்கை 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 62 - மேடை பாடல் ஞாபகம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   நவம்பர்   15 , 2017  05:10:33 IST


Andhimazhai Image
ஏன் பாடல்களைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்? திரைப்படத்தின் கதை என்பது நூறாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கையில் திரைப்படத்தை ஒரு குழந்தையைப் போல் தன் மடியில் கிடத்திக் கொஞ்சிய ஒரு முதியவளின் ஆதுரம் அல்லவா பாடலின் ஸ்தானம்? படத்தில் மௌனம் உடைந்து உரையாடலாகவும் பாடலாகவும் இரு சந்ததிகளாய்க் கிளைத்தபோது, ரசிகர்கள் வசனங்களை வெகு இயல்பாகத் தங்கள் வாழ்வெங்கும் பற்றிக் கொண்டார்கள். ஆனால் பாடல்களுக்குத்தானே தங்களை ஒப்புக் கொடுத்தார்கள்? இதில் ஆழ்ந்தால், பாடல் என்பதன் மீதான பிடிமானப் பிடிவாதங்களுக்குப் பின்னே ரசனையைத் தாண்டிய பெரும் சமூகத்தின் கூட்டு நியாயம் புரிபடும். 
 
 
"திருமணம் ஆகிவிட்டதா?" என்று ஒருவரிடம் கேட்கலாம். "ம்" என்றதும் அடுத்த கேள்வி, "காதல் திருமணமா? அரேஞ்ச்டு மேரேஜா?" என்பது. "காதல் திருமணம்" என்று சொல்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். உடனே அதன் பின்னே இருக்கக் கூடிய ஒரு கதையைக் கேட்கப் பரபரக்கும் மனம், "இல்லையே அரேஞ்ச்டு மேரேஜ்" என்று ஒரு வேளை பதில் வந்திருந்தால், "ஓ" என்று அத்தோடு முடித்துக் கொள்ளும். இங்கே என் கேள்வி. "லவ் கம் அரேஞ்ச்டு" என்றால் கூட அந்தக் கதையை எதிர்பார்க்கிற நாம், ஏன் அரேஞ்ச்டு மேரேஜின் பின்னே ஒரு கதை இருப்பதை ஒத்துக் கொள்ளுவதில்லை? உண்மை அதுவல்ல. அரேஞ்ச்டு கல்யாணத்தின் பின்னால் இருக்கும் கதையை, நாம் கேட்க வந்தது அதுவல்ல என்பதால்தான் அதன் மீதான பற்றுதல் குறைகிறது. போலவே, பாடல்கள் திரைப்படங்களுக்குள்ளேயே, கதையின் கிளைகளால் தம்மைச் சுற்றிக் கொள்ளுகின்றன. திரைப்படங்களுக்கு வெளியேயும் பாடல்கள் தொடர்பற்ற பல கதைக் கண்ணிகளைத் தம்மைச் சுற்றிலும் வெகு இயல்பாகப் படர்த்திக் கொள்ளுகின்றன. 
 
 
ஒரு சூழல் வாய்க்கையில், ஒரு சொல்லைக் கூடச் சிந்தாமல் ஏற்கனவே ஆரவாரத்துடன் ஆடிக் கொண்டிருக்கிற குழந்தைகளுடன் தானும் போய்ச் சேர்ந்து கொள்ளுமே மேலும் ஒரு குழந்தை, அதைப் போலத்தான் பாடல்கள் மனிதர்களையும் மனங்களையும் அவர்தம் வாழ்வின் தருணங்களையும் கட்டித் தழுவிக் கொள்ளுகின்றன. மேலும், உளிபட்டுச் சிதறாத பாறையை வெடியிட்டுச் சிதற்றுவார்களல்லவா, அது போலத்தான் வசனங்களைக் கொண்டு நகர்த்த வேண்டிய திரைக்கதையின் திசையில் ஆங்காங்கே பாடல்களைப் புகுத்திக் காணற்கினிய அனுபவமாக்கினர். இப்படியாக, பாடல்கள் கதைக்குள் கதையாக, சன்னத இன்பமாக, ஞாபகங்களில் தேங்குகின்றன.
 
 
இது ஊடகங்கள் ஒன்றான காலம். சினிமா முன் பலவற்றை அழித்துத் தகர்த்துப் பலவீனப்படுத்தித் தான் மட்டும் கோலோச்சி அரசாண்ட அதே இடத்தில், இன்றைக்கு சினிமாவுக்குப் பிந்தைய பல ஊடகங்கள் "வா ஒன்னையும் சேத்துக்கறோம், எல்லாரும் வெள்ளாடலாம்" என்று வேறொரு புதிய ஆட்டத்தை ஆடுகின்றன. "ஏய் பெரிய ஆளு பா" என்று  மரியாதையான ஒரு புதிய இடம் சினிமாவுக்கு இன்று இருக்கிறது. ஆனால், அது முன்பிருந்த ஒரே இடம் அல்ல. காட்சி ஊடகம், அச்சு ஊடகம், வானொலி, இணையம், தொலைக்காட்சி என எல்லாமும் எல்லாவற்றிலும் இடம்பெயர்ந்து இடம் பிடித்து, வேறொரு காலத்தில், "நீ பெரிய ஆளு பா" என்று இப்போது சினிமாவிடம் சொல்லும்போது, "நாங்களும் இருக்கோம் தெரியுதில்ல" என்கிற தொனி அதில் தொனிக்கிறது. முன் சொல்லப்பட்ட அதே சொற்கள்தான் எனினும், மிக லேசாய் ஒரு உள்ளுணர்தல் வித்தியாசம் இல்லாமல் இல்லை. 
 
 
எது வரினும் ஒருபுறம் மாறா உறுதியுடனும், இன்னொருபுறம் சூழலுக்கேற்ப நெகிழ்ந்தும் குழைந்துமாய் எல்லா ஊடகங்களையும் இணைக்கிற வெகுசில புள்ளிகளில் இன்றியமையாத முதற்பெரும் புள்ளியாகப் பாடல் எனும் வஸ்து சிறந்து தொடர்கிறது யதேச்சையல்ல. பாடலின் வரிகள் ஆன்மா. அதன்  குரல்கள் அதன் உடல். அதன் இசை அதன் உயிர். இடை மௌனங்களும் உடனொலிகளும் ஏற்ற இறக்கங்கள். பாடலின் பிறப்பென்பது அதன் வருகை. அதன் தோன்றுதல் என்பது அதன் ஆளுமை. விடுபடுதல் என்பது அதன் ஞாபகம். மேற்சொன்ன அத்தனையும் மானுட வாழ்க்கைக்கும் பொருந்தும் என்பது பாடல் கலை தனிக்கிற அபூர்வத்தின் சூட்சுமம். இதுவன்றிப் பிற எல்லாக் கலைகளும் மனிதனுக்கு அடங்குவதிலும், இசை மாத்திரம் மனிதனை அடக்குவதிலும் இருவேறு நதிகள்.
 
முன் பழைய காலத்தினுள் சஞ்சரிக்கலாம். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும்தான் முதன்முதலில் மேடைக் கச்சேரிகளைச் செய்து பார்த்த சினி இசைஞர்கள். எப்போதாவதுதான் நிஜங்களே வந்து மேடையில் நிஜமாய்த் தோன்றுவது நடக்கும். உண்மையில், மேடை இசை என்பது வெவ்வேறு விகிதாச்சாரங்களில் நிழலும் நிஜமும் சந்திக்கிற, சங்கமிக்கிற சாத்தியங்களே. இதில், நிழல்களின் அபாரம் அந்தந்த நேரத்து அபூர்வமாகித் தாற்காலிகச் சூரியன்களாக, க்ஷண நேரம் ஒளிர்ந்து மறையும் மின்மினிகளாக, எந்த விதமான நிலைமாற்றமும் இல்லாமல், ஒப்புக்குச் சிப்பாய்களாகவே கரைந்து, கலந்து, மறைந்து போனவர்களின் சொற்களற்ற கதைகள் ஏராளம்.
 
 
இசை நிகழ்ச்சிகளைப் பற்றி இதில் பார்க்கலாம். 
 
 
ஒரு மாபெரும் மனிதத் திரளில், ஓரமாய்த் தங்களது இடத்தை உறுதி செய்து கொண்டு, மெல்ல மெல்ல ஒவ்வொரு பாடலாய், அந்தச் சூழலின் மீது இசையாலான அழகிய ஆசீர்வாதம் ஒன்றை நிகழ்த்துவார்கள். ஏதோ அவர்களின் ஒட்டுமொத்த இசையையும் விலைக்கு வாங்கினாற்போல் அந்த இசை நிக்ழ்ச்சி பெருந்தன்மையோடு அனுமதிக்கப் படுமே ஒழிய, பல இடங்களில் சூழலையும், பாடலையும் ஒருங்கே நிர்வகிக்க இயலாமல் அந்த விசேஷ வீடு திணறும். காற்றுப் போதாமையும், தம்மை நோக்கி வெறிக்கும் கண்களற்ற கண்களை எதிர்கொள்ள முடியாமலும் அணிந்து வந்த ஒப்பனை மெல்லக் கரைய, பாட வேண்டிய மணி நேரத்தைப் பாட வேண்டிய, பாட இயலுகிற பாடல்களின் எண்ணிக்கையால் வகுத்து வைத்திருப்பார்கள். இசைக்குழுவில் எல்லோருக்கும் தெரியும் அன்றைய நிகழ்வில் எத்தனை பாடல்கள் இயலும் என்று, ஒன்று கூடலாம் குறையலாம். நீங்கள் எப்படியோ தெரியாது, நான் கவனித்திருக்கிறேன். இன்னும் நான்கு அல்லது ஐந்து பாடல்கள்தான் எனும்போது, அவர்கள் அனைவருக்கும் ஓர் உற்சாகம் கிளம்பும். கடைசி இரண்டு பாடல்கள் அந்த உற்சாகம் டபுள் ஆகும். 
 
 
உழைப்பையும், திறனையும் ஒருங்கே நிரூபிக்கத் தேவைப்படுகிற கலைகளே நிகழ்த்துக் கலைகள் ஆகும். அந்த வகையில் திரைப்படத்தில் ஒரு பாடல் பதிவு செய்யப்படுவதில் பல வசதிகள் உண்டு. உதாரணமாக சின்னதும் பெரியதுமான பகுதிகள் தனித்தனியே பாடி ஒட்டவைக்க இயலும். கச்சேரிகளில் அப்படி இயலாது. பாடியவர் தொடங்கி, அந்தந்த வட்டாரத்துப் பாடகர்கள் வரை ஒருங்கே பாடவேண்டும் என்பது மேடைக் கச்சேரியின் நியதி. அதனால்தான் சில பாடல்களைச் சில பாடகர்கள் முதல் முறை திரைப்படத்துக்காகப் பாடின உணர்வை மேடைக்கச்சேரிகளில் உருவாக்க முடியாமல் தடுமாறுகின்றனர். தனக்குச் சொந்தமான ஓர் இடத்தை விற்றுவிட்டு. அங்கேயே வேலைக்குச் சென்றாற்போல் அல்லவா பாடிச் சிறந்த ஒரு பாடலை சுமாராகப் பாடுவது என்பது. 
 
 
திருமண வீடுகளில் கச்சேரிகளை நினைவு தெரிந்த வயதிலிருந்தே ரசித்துக் கிளர்ந்திருக்கிறேன். எந்த அளவுக்கு என்றால் திருமணப் பத்திரிக்கையில் குறிப்பு : நிகழ்வில் ஸோ அண்ட் ஸோ குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடைபெறும் என்று குறிப்பிட்டிருந்தால் போதும், அடுத்த வீட்டுக்கு வழங்கப்பட்ட பத்திரிக்கையென்றாலும் அங்கே போய் முதல் ஆளாய்ச் செல்வேன். நான் மட்டும் இல்லை, முதல் இரண்டு வரிசைகளுக்குள் தலையை முன்புறம் இழுத்து, முழங்காலுக்குப் பக்கத்திலே கையை ஊன்றித் தாங்கி, இசையென்னும் இன்ப வெள்ளத்தில் லயித்துக் கொண்டிருக்கும்போது ஆழ்மனசின் உள்மனசு ஒன்று சொல்லும், உன்னைப் போல் ஒருவன் இங்கே இருக்கிறான் என்று. சுற்றிலும் பார்த்தால் சேகர், பரணி, அல்லது மாலன் யாராவது ஒருவர் அமர்ந்திருப்பார்கள். இதில் உற்சாகமாகி, "பக்கத்தில் வாடா" என்றால் "உஸ் உஸ் ம்யூஸிக்" என்று "உன்னை விட நான் பெரிய ரசிகனாக்கும்" என்பான். பிற்பாடு, "ரொம்பப் பண்றடா" எனும்போது, "பாதி பாட்ல எப்டிய்யா வரது?" என அங்கலாய்த்துக் கொள்வான். இதைச் சொல்லும்போது ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுப்பான் பாருங்கள், தானே எழுதி, இசையமைத்து அதைத் தானே பாடவும் செய்யும் ஒருவர் கூட அப்படி ஒரு எக்ஸ்ப்ரஷன் தர முடியாது. "ஏய் ஸாரிய்யா மன்னிச்சுடுய்யா" என்று பலவாறு கெஞ்சினால் கொஞ்சம் பெரிய மனசு செய்வான். இத்தனை மன்னிப்பும் கேட்டபிற்பாடு இதய தாமரை ரேவதி போல் சைக்கிளின் முன்பக்கம் ஏறிக்கொள்ளுவான். நான் கார்த்திக் ஆகி, மாங்கு மாங்கென்று பெடலை மிதிப்பேன். 
 
 
ஆனாலும் அவன் ரசிகன். "எஸ்பிபி கலக்கிட்டாப்ல ஜேசுதாஸ் தான் கொஞ்சம் பரவால்லாம பாடினார்" என்று சர்டிஃபிகேட்டுகள் தருவான். ஒரே ஆள் ஒன்றுக்கு மேற்பட்ட பாடகர்களின் பாடல்களைப் பாடுவதில் அவனுக்கு உடன்பாடில்லை. "அது எப்படிய்யா முடியும்? அவங்களாலயே முடில?" என்பான். பல விசேஷ வீட்டுக் கச்சேரிகளுக்கு அவனோடு நான் போயிருக்கிறேன். தவறாமல் அவன் செய்கிற ஒரு காரியம் இன்றைக்கு நினைத்தால் வியப்பாய் இருக்கிறது. அது என்ன தெரியுமா? நிகழ்ச்சி முடிந்த சரியாகப் பத்தாவது நிமிடம் அவர்களை நெருங்குவான். நிகழ்ச்சியை நடத்தும் தலைவரைப் பார்ப்பான். தன் இரண்டு கைகளாலும் அவரது வலக்கரத்தைக் குலுக்கோ குலுக்கென்று குலுக்குவான். குலுக்கிவிட்டுத் தன் கைகளைத் தன்  சொந்த பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுவான். தலையையும், உடலையும், கைகளையும் குலுக்கியபடி பேசத் தொடங்குவான். பல ஜென்மாந்திரப் பழக்கம் போல் தோன்றும். மார்லன் பிராண்டோவுக்கு அப்போது வயது பதினாறுதான்.
 
 
பத்து நிமிடங்கள் நீடிக்கும் அந்தப் பேச்சு.அவன் பேசி முடிக்கும் போது அந்த நிகழ்ச்சி நடத்துனர் கள் குடித்த நரி போல ஆகி இருப்பார்.அப்படிப் பாராட்டுவான்.நின்று நிதானித்து ஒவ்வொரு பாடலாக கிட்டத்தட்ட ஏழெட்டு பாடல்களைப் பாராட்டிவிட்டு லேசாக சில குறைகளையும் கலந்து தெரிவித்து விட்டு நன்றி சொல்லி நடப்பான்.ஏன் மாலு....இதை நீ ஏன் நடத்துற ஆள் கிட்டயே சொல்றே..? அந்தந்த ஆட்கள் கிட்ட சொன்னா இன்னம் நல்லா இருக்கும்ல எனக் கேட்டதற்கு நீ வேற ரவீ..அதை மாத்திரம் செய்துடக் கூடாது. சிலர் நல்லா பாடினாங்கன்னு நாம பாராட்டப் போயி இதே கச்சேரில சுமாராப் பாடின ஒண்ணு ரெண்டு ஆட்களை அடுத்த தடவை கூப்டாம போயிர்றதுக்கு வாய்ப்பிருக்கு. எதையும் சூதா செய்யணும்டா என்றவனை உற்றுப் பார்த்தேன். இந்த வயசுக்கே இவ்வளவு அறிவாடா என்று அந்தப் பார்வைக்கு அர்த்தம்.
 
 
மேடையில் பாடுகிறவர்களால் எல்லாப் பாடல்களையும் பாடிட முடியாது. சாதகம் செய்து மறுபடி மறுபடி ஒத்திகை பார்த்து எத்தனை கடினங்களுக்கு அப்பால் அவர்கள் நிகழ்த்துகிற கலை என்பதைப் புரிந்துகொள்ளாமலேயே இதைப் பாடு அதைப்பாடு என்றெல்லாம் படுத்துவார்கள். சில கருவிகளை பயன்படுத்திய பாடல்கள் மேடைக்கு உகந்துவராது. அப்படியான விடுபடுதல்களைப் புரிந்துகொள்ளாமல் அனர்த்தினால் மேடையில் நிற்பவர்கள் நெளிவார்கள்.
 
 
எனக்கு நவ நாட்களின் நிகழ்த்து கச்சேரிகளில் நாட்டம் இல்லை. அதிலும் அற்புதமாக அந்தந்தப் பாடல்களைப் பாடிய கர்த்தாக்களே அதன் சுமாரான வடிவங்களைப் பாடும் போது அழுகையாக வரும். வேணாம் வேணாம் விட்டுருங்க என்று பழைய படத்து வில்லனிடம் கெஞ்சுகிற அபலை போலக் கெஞ்சத் தோன்றும். இதில் ஸ்தாயி தொனி ராகம் அதன் டெம்போ இத்யாதிகளை மாற்றிப் பாடுகிறேன் என்று தன் சொந்தக் கடப்பாரையால் பாடலெனும் வீட்டை யாரேனும் நொறுக்குவது கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று மனசு பதறும். சட்டென்று டீ.வீ சானலை மாற்றி போகோ அல்லது கார்ட்டூன் நெட்வர்க் பக்கம் போய் சாந்தமாவேன்.
                       
 
ஒள ஒள தாங்காட்டிக்கு மேடையில் தொடங்கி பிற்பாடு எங்கெங்கோ செல்லும் பாடல்களில் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் என்றாரம்பிக்கும் கோபுரவாசலிலே பாடல் ஒரு அமானுட இன்பத்தை மெய்ப்பிக்கும் மௌனக் கோலாட்டம். கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் என்றாரம்பிக்கும் பிள்ளை நிலா பாடலில் ராதிகாவின் ரிபீட்டட் புன்னகைக்கு நானும் என் சகாக்களும் ஒரு காலத்தில் அடிமைகளாயிருந்தோம். என்னடி மீனாட்சி என்று ஆரம்பித்து கமலகாஷக் காதல் இளவரசன் பெல் பாட்டம் பாண்ட் மற்றும் நெஞ்சோரம் ரெண்டு பட்டன் திறந்த டைட் சட்டை காம்பினேஷனில் ஆடும் பாடல் என் சின்னவயசின் அதகளம். அந்தப் பாடலை மறக்க முடியாததற்கு இன்னொரு காரணம் அம்மாவின் பேர் மீனாட்சி. எப்போது பாடினாலும் முதுகில் பளார் விழும். அதனால் என் அப்பர் துணை இல்லாமல் அதைப் பாட முடிந்ததில்லை. பின் நாட்களில் அதை அம்மா கேஷூவலாக எடுத்துக் கொண்டாள். எனக்குத் தான் இன்னமும் முதுகு ஜில் ஜிலீர் ஆகும்.
                   
 
அல்டிமேட் மேடைப் பாடல் என்றால் வசந்தம் பாடிவர வைகை ஓடிவர தான். இதை மாற்றிப் பாடியது எங்கள் பால்ய பிராயத்தின் சர்வ சகஜ விளையாடல்களில் ஒன்று. இப்போது பாட முடியாது. அடிப்பார்கள்.
                         
 
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஆட பாடல் ஒரு அற்புதம். வீரா படத்தின் அந்தப் பாடல் அந்த வருடம் முழுவதற்குமான ஹிட். எல்லாப் பாடல்களும் பாடல்கள் தான். சிலவற்றுக்கு மாத்திரம் தான் சின்னதொரு ஆன்மாவும் இருக்கும். அப்படியான பாடல் தனிக்கும். வேறொன்றாய் இனிக்கும். நம் மனசைப் பற்றிக்கொண்டு பறக்கும். ஒரு போதைப்பழக்கத்தின் மீதான பற்றுதலை நம் ஆன்மாவுக்குள் நேர்த்துகிற இப்படியான பாடல்கள் ஆண்டாண்டு காலங்கள் கழிந்தாலும் ரசிப்பதில் குறையொன்றுமில்லை என்ற அளவில் கானக்கடலாடல்.
                               
 
வாலிபமே வா வா தேனிசையே வா வா என்ற பாடல் ரவீந்தர் ஜெயமாலினி இருவரில் ஒரு கட்டத்தில் யார் கவர்ச்சி என்பதில் போட்டியே வரும். அந்த அளவுக்கு ரவீந்தர் கவர்ச்சியின் ஆணுருவாகத் தனிப்பெரும் தோன்றல். அட ஆளைவிடு காதலுக்கு நேரமில்லையே ஜாதிமுல்லையே எனும் போது ஒரு கட் அண்ட் க்ளீன் ஆட்டம் போடுவார். ரவீந்தருக்கு ஆட்டத்தை விட ஆடும்போது தரவேண்டிய முகபாவங்கள் அத்துப்படி. அதில் அவரொரு மேதை. ஆகப்பெரிய ஆட்டக்காரர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு நிறைய க்ளோஸ் அப் வாங்கும் திறன் கொண்டிருந்தார்.
                 
நானொரு பூ பாளம்
நீயொரு பொய் நாகம்
தாமரையில் நீர்த்துளிகள்
ஒட்டுவதில்லை சட்டமுமில்லை.. 
 
 
இதொரு டாப் க்ளாஸ் மேடையாட்டப் பாடல். என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே என்றாகும் பாடலைக் கேட்டால் அந்த தினத்தின் மிச்சப்பொழுது அந்தப் பாடலின் வசமாகும். மலேசியாவின் சூது கவ்வும் பாடல் இது.
 
 
இந்த அத்தியாயத்துக்கு ஒரே ஒரு பாடல் தான். மேடைப்பாடல்களைப் பற்றிய பிரதிநிதித்துவத்துக்காக மேற்சொன்னவற்றைச் சேர்த்து ஒரே ஒரு பாடல். எஸ்.பி.பி பாடியது மெல்லிசை அரசனின் இசை. வசந்த ராகம் படத்துக்காக விஜயகாந்த் வாயசைத்தது. மேடைப்பாடல்களின் சக்கரவர்த்தி இப்பாடல்.
 
 
(முன் பல்லவி)
 
பாடாத பாட்டெல்லாம் பாடினேன்
ஆனாலும்
நான் தேடும்
பல்லவி
தாளாமல் வாடினேன் கண்ணீரில் ஆடினேன்.
 
(பல்லவி)
இதுவரை பாட்டைப்பிரிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது 
இதுவரை ஏட்டைப் பிரிந்த வார்த்தைகளுக்கொரு சரணம் கிடைத்தது.
இதுவரை பாட்டைப்பிரிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது 
இதுவரை ஏட்டைப் பிரிந்த வார்த்தைகளுக்கொரு சரணம் கிடைத்தது.
என்னுடைய பல்லவி கிடைத்தது
நல்லதொரு சரணம் கிடைத்தது
 
(இதுவரை)
 
வெவ்வெறு திசைகளில் ஓடம் ரெண்டு வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா
இவ்வாறு பிரிந்தது இங்கே இன்று சந்திக்க நேர்ந்ததம்மா என் கண்ணம்மா துன்பங்கள் தீர்ந்ததம்மா
நிஜமோ நிழலோ உனை நான் பார்த்தது
பிரிந்தோம் இணைந்தோம் விதிதான் சேர்த்தது
 
(இதுவரை)
 
மெய் தொட்டுத் தழுவிய மஞ்சள் நிலாவும் கைவிட்டுப் போனதம்மா என் கண்ணம்மா
முன்னாளில் விலகிய வெள்ளைப் புறாவும் இன்னாளில் தோன்றுதம்மா
என் செல்வம் மீண்டதம்மா
அடடா இதுதான் இறைவன் நாடகம்
உறவும் பிரிவும் மனிதன் ஜாதகம்
 
(இதுவரை)
 
 
 
மேற்சொல்லப்பட்ட பாடல் ஒரு வணிக சினிமாவிற்காக இசையமைக்க எழுதப்பட்ட பாடல். இதன் ஈற்றுவரிகளில் தெறிக்கிற ஞானத்தின் அபாரத்தை என்னென்பது..? மொழியின் வசீகரம் அதன் தொடக்கத்தை மாத்திரம் தான் அளந்து தீர்மானித்து அடக்கிக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். இவ்வளவு தான் அர்த்தம் என்று அறுதியிட முடியாத நீட்சி தமிழின் சிறப்பு. அதற்கு மேற்சொல்லப்பட்ட வரிகள் எடுத்துக்காட்டு.வாழ்க மேடைகள் பாடல்கள் ஞாபகங்கள்.
 
 
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்) 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...