அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 88 - அன்பென்னும் வெண்பா - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   12 , 2018  15:38:28 IST


Andhimazhai Image
ஏன் குரல்களைப் பற்றிப் பேச வேண்டும்? இசை என்பது உண்மையில் என்ன? என்னவாக நிகழ்கிறது? சப்தங்களும், நிசப்தங்களும், காற்றும், விரல்களும், கரங்களும், உதடுகளும் ஏன் கால்களும் கூட பயிற்சிக்குப் பின்னதான இசையை உருவாக்குகின்றன. இசை எங்கிருக்கிறது? அறுதியிடல் சாத்தியமா இசையைப் பொறுத்தவரை? இசை என்பது மனிதனுக்கு உணர வாய்க்கிற கடவுளின் ஆன்மா எனலாம்தானே. இசைக்கும் மனிதனுக்கும் ஒரு மூங்கிற்பாலம் போலத்தானே குரல் திகழ்கிறது? எரியத்தக்க எண்ணெயும் திரியும் விளக்கென்றாகுகையில் க்ஷணநேரம் தன்னை எரித்து அதை ஏற்றித் தருகிற ஒரு தூண்டுதல் போலத்தானே ஒவ்வொரு பாடலையும் அதனைப் பாடும் குரல்கள் ஏற்றி வைக்கின்றன. பெய்யெனப் பெய்தாலும் அத்தகைய மழையின் செய்ந்நன்றி அத்தனையும் பெய்யெனப் பகிர்ந்த அந்த உதடுகளுக்குத்தானே, அதன் பிந்தைய மனத்துக்குத்தானே சென்று சேர்வது தகும். போலவே, தன்னை ஒப்புக் கொடுக்கிற ஒவ்வொரு குரலும் பாடல்களின் சரித்திரத்தில் போற்றத்தக்க பெருமிதம் தானே?
 
 
ஒரு ஞாபகப் பறவையின் நிரந்தர அலைதல் போன்றதுதான் ஒவ்வொரு குரலின் நீட்சியும். இந்த உலகை விட்டு நீங்கிய பிற்பாடும், பிற கலைஞர்களை விடவும் மிக அருகாமயில் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போலத்தானே தோற்றமளிக்கிறார்கள் மறைந்தும் மறையாத பாடகர்கள். புலன் மயக்கமெங்கும் ஆங்காங்கே வெளிச்சம் தந்த குரல் நிலா ஒருவரைக் குறித்து ஒரு மொத்த அத்தியாயத்தை எழுதுவதில் தயங்கி ஒத்திப்போட்டுக் கொண்டே இருந்தேன். இந்த அத்தியாயம் அந்த அமரநிலாவின் பாடல்களை ஊடுபாவாக்கிப் பார்க்கலாம்.
 
 
"பெரிய மருது" என்று ஒரு படம். அதிலொரு பாடல். கேட்ட பொழுதில் என்னவோ செய்கிறது எனக்கு. அதை எப்படி வார்த்தைகளில் வரவழைப்பது. "வெடலப் புள்ள நேசத்துக்கு.. செவத்த புள்ள பாசத்துக்கு..." இரும்பைப் போல இறுக்கமான ஒரு நாயகன், கரும்பின் சாறு போல் அவனை இனிக்கத் தொடரும் ஒரு நாயகி. இதில் கண்களை மூடிக் கேட்கும்போதெல்லாம் கரைந்து போகிறேன், என்னை விட்டு நானே எங்கோ தொலைந்து போகிறேன், என்னைத் தேடித் தரச்சொல்லி என் கனவுகளில் நானே தேடி அலைகிறேன். எப்படி தொலைந்த குழந்தை திரும்பக் கிடைக்கும் கணத்தைச் சொற்களில் விரவிவிட முடியாதோ, எப்படி மருத்துவமனையிலிருந்து நோய்மை குணமாகி வீடு திரும்புகிற ஒருவர் முகம் காணும் கணத்தை எளிதில் வார்த்தைப்படுத்திவிட முடியாதோ, ஒரு நெடிய காலம் கழித்துப் பிரியமான ஒருவரின் எதிர்பாராத வருகையைச் சட்டென்று உள்ளச் செரிமானம் ஆகாமல், உடல் மனம் எல்லாம் கலங்கித் ததும்புகிற அவஸ்தையை எழுதியோ பேசியோ விளக்குவது பெரும் சிரமமோ, அது போலத்தான் சொர்ணலதாவின் குரல் பற்றி சொற்சித்திரம் வரைவதும்.
 
 
அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ
வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ
வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ
வாச மல்லி பூத்திருக்கு வாக்கப் படக் காத்திருக்கு
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா
 
வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ
அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ
 
ஏகப்பட்ட ஆச வந்து இவ மனச தாக்குதையா
ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு ஏக்கம் வந்ததையா...
ஏகப்பட்ட ஆச வந்து இவ மனச தாக்குதையா
ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு ஏக்கம் வந்ததையா...
தோப்புக்குள்ள குருவி ரெண்டு சொந்தம் கொண்டு பேசுது
சொந்தமுள்ள நாமும் இங்கே ஜோடி எப்போ ஆவது
ஊருக்குள்ள பாக்கு வெக்க தேதி ஒண்ணு பாக்கணும்
ஊரடங்கிப் போன பின்னும் நாம மட்டும் பேசணும்
சந்தனத்த பூசவா என் ஜீவனே கூட வா
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா
 
வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ
 
மாமன் பெத்த மருது உன்ன மறந்திருக்க முடியலையே
மருகி மருகி உருகி கரஞ்சு வாட வெக்கிறியே...
மாமன் பெத்த மருது உன்ன மறந்திருக்க முடியலையே
மருகி மருகி உருகி கரஞ்சு வாட வெக்கிறியே...
மீசையுள்ள ஆம்பளைக்கு ரோஷம் ஒண்ணு போதுமா
மிச்சங்கள மீதங்கள நானும் சொல்ல வேணுமா
பச்சக் கிளி நெஞ்சுக்குள்ள மோகத் தீய மூட்டுற
பாசங்கள மூடி வெச்சு பாவலாவும் காட்டுற
வேட்டி கட்டும் மாப்பிளே புத்தி மட்டும் போகலே
கோவப்பட்டா லாபம் இல்லே சேந்துகிட்டா பாவம் இல்லே
 
வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ
வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ
வாச மல்லி பூத்திருக்கு வாக்கப் படக் காத்திருக்கு
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா
 
வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ
அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ
 
 
பதின் பருவத்து மன முகிழ்ச்சி உடனான ஒரு அபூர்வமான குரல் லதாவினுடையது. அழுகைக்கும் சிரிப்புக்கும் நடுவிலான ஒரு அசட்டு மலர்தலாய்ப் பிற குரல்களிலிருந்து தனிக்கத் தொடங்கும் சொர்ணலதாவின் கத்தரிப்பூக் குரல், ஆழ்த்திலும் உயரத்திலும் சகல திசை அகலங்களிலும் ஜாலம் செய்ய வல்லது, செய்திருக்கிறது. குறுகிய கால வாழ்தலுக்குப் படர்க்கை சித்திரம் போலப் பாடக் கிடைத்த பெரும்பாலான பாடல்கள் சூப்பர்ஹிட் வகையறாக்களாகவே அமைந்தன. ஒவ்வொரு பாடலையும் ஒரு கதை சொல்லி போல அணுகினார் லதா. 
 
 
மனோ - லதா பாடிய "மல்லியே சின்ன முல்லையே, "அன்பே வா அன்பென்னும் வெண்பா சொன்னேன் வா" ஆகிய பாடல்கள் இரண்டு மனோக்கள், இரண்டு லதாக்கள் ஒரே பிரபு - குஷ்பூவுக்குப் பாடியவை என்பது நம்ப முடியாத ரசம். "ஆட்டமா தேரோட்டமா" "போவோமா ஊர்கோலம்" என்கிற இரண்டு பாடல்களும் அந்த வருடத்து இரண்டு சூப்பர்ஹிட்டுகளான "கேப்டன் பிரபாகரன்" மற்றும் "சின்னத்தம்பி" படங்களுக்காக சொர்ணலதா பாடியவை.
 
 
"மாலையில் யாரோ மனதோடு பேச" என்ற பாடலை  லதாவின் குரல் ஒரு அகில உலகப் பாடலாக்கியது. மறுக்க முடியாத ஒரு உண்மையை இங்கே பகிர்ந்து வைக்கலாம். மேலும் உண்மைகள் எப்போதாவது சொல்லப் படுபவை. அவற்றைத் திறக்கையில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றாகக் கூடுதல் அர்த்தமௌனங்களை நேர்த்துகிற சில அரிதினும் அரிதான் உண்மைகளும் உண்டு. எம்எஸ்விஸ்வநாதன் என்கிற இழையில் தொடங்கி, இளையராஜா என்கிற இழையில் திரட்டி, ஏஆர்ரஹ்மான் என்கிற இழையிலும் தன் பாடல்களை மலர்த்திய ஒரு முழுமையான பாடகி சொர்ணலதா. தன்னை ஆசீர்வதித்த இந்த மூவரையும் குறைவேதுமின்றித் தன் பாடல்களால் தானும் ஆசீர்வதித்தார் லதா "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே.. என்னைக் கலி தீர்த்தே உலகில்" ஏற்றம் புரிய வந்தார் லதா. 
 
 
ரஹ்மானின் இசையில் ஒரு பெண் மைதாஸாகவே சொர்ணலதாவைச் சொல்ல முடியும். "போறாளே பொன்னுத்தாயி " பாடலுக்காகத் தேசிய கவனம் பெற்றார் சொர்ணலதா. ஹிந்தியிலும் இவர் பாடிய "ஹே ராமா யே க்யா ஹுவா", "முக்காலா முக்காபுலா",  "குச்சி குச்சி ராக்கம்மா",  "பூங்காற்றிலே உன் சுவாசத்தை", "எவனோ ஒருவன் வாசிக்கிறான்", "அஞ்சாதே ஜீவா", "காதலெனும் தேர்வெழுதி", "அக்கடான்னு நாங்க உடை போட்டா," "அந்த அரபிக் கடலோரம்", "உசிலம்பட்டி பெண்குட்டி" காலத்தைக் கிழித்தன லதாவின் பாடல்கள். "திருமண மலர்கள் தருவாயா", "அன்புள்ள மன்னவனே" - மேட்டுக்குடி 
 
 
இளையராஜா இசையில் "ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்" "நன்றி சொல்லவே உனக்கு" - உடன்பிறப்பு, "ஒனப்புத் தட்டு புல்லாக்கு" - சின்ன ஜமீன், "அந்தியிலே வானம்" - சின்னவர், "கண்ணே இன்று கல்யாணக் கதை கேளடி" - ஆணழகன், "காட்டுக் குயில் பாட்டுச் சொல்ல" "வெண்ணிலவு கொதிப்பதென்ன" - சின்ன மாப்ளே "மாசி மாசம் ஆளான பொண்ணு" - தர்மதுரை,  "நீதானே நாள்தோறும்" "கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வா வா" "ஊரடங்கும் சாமத்திலே" "மல்லிக மொட்டு மனசத் தொட்டு" - சக்திவேல் "ராக்கம்மா கையத் தட்டு" - தளபதி,  "என்னுள்ளே என்னுள்ளே", "மலைக்கோவில் வாசலில்", "மாடத்திலே கன்னி மாடத்திலே" 
 
 
எதிர்பாராத ஒரு வித்தியாசமாகத் தனிக்கக் கூடிய ஒரு சொர்ணலதா பாடல் என என் சாய்ஸ், "டைம்" என்னும் திரைப்படத்தில் "நான் தங்கரோஜா" இந்தப் பாடலைக் கேட்டாலே வேறு எந்த சொர்ணலதா பாடலில் கிடைப்பதைவிடவும் அதிக உற்சாகம் மனதில் தொற்றிக் கொள்ளும். ஒரு பதின் பருவத்து மலர்தலை வெகு அழகாகத் தன் குரலில் கொண்டுவந்திருப்பார் லதா. 
 
 
இன்னும் ஒரு மறக்கவும் முடியாத நம்பவும் முடியாத பாடல் உண்டு. இந்தப் பாடல் தனக்குள் யாரும் அறியாத ஒரு சூன்யத்தின் திரைக்கதையை எழுதி வைத்திருந்தது. யாரும் எதிர்பார்க்காத அபத்தத்தின் யதார்த்தம். அந்தப் பாடலை முதலில் பார்க்கும்போது ஏனோ கண்கசியும், பிறகு கேட்கும்போதும் இன்னொரு வகையில் சொல்வதானால் இப்போது அந்தப் பாடல் இரண்டு தேவதைகளின் ஞாபகமாய் நமக்கெல்லாம் கிடைக்கிறது, "என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி". உன்னை நினைத்துப் படித்த பாட்டு என்று முதலில் மோனிஷாவுக்கும் பிறகு லதாவுக்குமாய்.
 
 
இப்போது பாடல்களிலிருந்து அவர் குரலுக்குள் திரும்பலாம். ஜானகியை விடவும், சுசிலாவை விடவும், சித்ராவை விடவும், சுஜாதாவை விடவும் தனித்த ஓரிடத்தில் லதாவின் குரலை இருத்திப் பார்க்க முடிகிறது, வரிசையற்ற வரிசையாய் பானுமதி, வாணி ஜெயராம் போன்ற குரல் அபூர்வங்களுடன் லதாவினதையும் பொருத்திப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு பாடலிலும் ஒரு சிறு இடத்திலாவது தன் கையெழுத்தை ஒத்த தனித்தலை நிகழ்த்தியிருப்பார் லதா. "வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான் வாடுறேன்" இந்த வாடுறேன் என்னும் சொல்லை அதற்கு முன்னும் பின்னுமாய் யார் சொன்னாலும் லதாவைப் போல் அல்லது அப்படி அல்லாது இரண்டு விதமாய்த்தான் சொல்ல முடியும். "பூமிக்கொரு பாரமென்று எண்ணியிருந்தேன், பூமுடிக்க யாருமின்றி கன்னியிருந்தேன்" கன்னியிருந்தேன் என்பதை லதா பாடுவதைக் கவனித்தால் உண்மையிலேயே அவர் உச்சரித்தாரா அல்லது நமக்கு அப்படித் தோன்றுகிறதா என்கிற தனித்த உணர்வு நிகழும்.
 
 
லேசாய் மிக மென்மையாய் விரிந்து தரக்கூடிய இயல்பு லதாவின் குரலுக்கு உண்டு. ஒன்று வேறாவது போன்றது அது. கொடுக்கையில் இருப்பது போல அல்லாது திரும்பத் தரப்படுகையில் அதே வேறாகக் கிடைக்குமே அர்ச்சனைப் பூக்கள் நிரம்பிய கூடை, அது போல நாம் அறிந்த சொற்கள் லதாவிடம் தந்து பெற்றுக் கொள்ளப்படும்போது வேறாகத் தனிக்கும். உதாரணத்துக்கு, "போங்க" எனும் ஒரு சொல், சரி, "வாங்க" எனும் ஒரு சொல் இவற்றை லதா பாடிக் கேட்டோம். சரிவது நீர்வீழ்ச்சியிலும், அலைவது காற்றடி கால மரங்களிலும், கரைவது கடலாடுகையில் மழை பொழிகையிலும் உபவரம். அது போலத்தான் லதாவின் குரல் செய்கிற இந்தச் சின்னஞ்சிறிய மாயங்கள். 
 
 
"வெண்ணிலவு கொதிப்பதென்ன" அந்தக் கொதிப்பதென்ன உண்மையிலேயே கொதித்தது. பலமான தனித்தப் பேரோசைக் குறிப்புகளுக்கு மத்தியில் நின்று விளையாடக் கூடிய அரிய குரல் லதாவினுடையது. அதிகதிகம் பீட் இசைக்குறிப்புகள் இடம்பெற்ற பாடல்களை அனாயாசம் செய்தார் லதா. சொர்ணலதாவால் மாத்திரமே செய்ய முடிந்த மாயங்களில் இதுவும் ஒன்று. புன்னகை அரசி கேஆர்விஜயா, இளவரசி சினேகா, நடுவாந்திரத்தில் சொல்ல மறந்த ஒரு புன்னகை மந்திரிகுமாரி ஒருவர் உண்டு, அவர்தான் கஸ்தூரி. "அந்தியிலே வானம்" என்கிற பாடலில் இரண்டு சிரிப்பொலிகள் வரும் பாடல் முடிகிற தருணம், அந்த இரண்டை மாத்திரம் எடுத்து என் மனசுக்குள் உட்கார்த்தி வைத்திருக்கிறேன். நினைத்த மாத்திரத்தில் பொழியும் பிரத்தியேக மழையின் துளிகள் அவை. 
 
 
மற்ற எல்லாரை விடவும் மனோவுடன் நிறைய அழகிய பாடல்களைத் தந்தார் லதா. ஏசுதாஸின் குரல் மாத்திரமே லதாவின் குரலைத் தாண்டி ஒலிக்க இயன்றது. ஷங்கர் மஹாதேவன், ஹரிஹரன் உள்ளிட்ட எல்லாரின் குரல்களுடனும் ஒத்திசைந்து பயணிக்கத் தவறவில்லை லதாவின் குரல். ("சிட்டுப் பறக்குது குத்தாலத்தில்)
 
 
"புதுப்பட்டி பொன்னுத்தாயி" என்று ஒரு படம். தன்னைத்தானே கிள்ளிக் கொண்டாற்போல் எந்தவிதத்திலும் ஒத்துக்கொள்ள முடியாத ஒரு உலகத்தர பாடலை இதில் தந்திருப்பார் ராஜா. "உன்னை எதிர்பார்த்தேன்" பாடலில் "மன்னவா மன்னவா மன்னவா" என்று மூன்று முறை பாடியிருப்பார் சொர்ணலதா. ஒவ்வொரு முறையும் மின்பகிர்மானங்ககள் கூடிக் கொண்டே போய் ட்ரான்ஸ்ஃபார்மர்கள் வெடித்துச் சிதறும். "அடி ராக்கம்மா கையத் தட்டு" பாடலில் முழுவதுமாகவே ஒரு முறைப்பெண்ணின் உரிமைக் குறும்பைத் தன் குரல் வழி மானசீகங்களில் நேர்த்தியிருப்பார் லதா. 
 
 
"சொல்லிவிடு வெள்ளி நிலவே" ஒரு குரலில் எந்த அளவுக்கு ஆண்தன்மை மற்றும் பெண்தன்மை ஆகியவை இடம்பெற வேண்டும் என்கிற கச்சிதத்துக்கான சூத்திரமாகவே இந்தப் பாடலை நம்மால் சொல்ல முடியும். இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை, என்றபோதும் ஒரு பாடல் யூகிக்கப்பட்ட அதற்கான ஒளிதல் காலத்தைத் தாண்டி அடுத்த காலங்களிலெல்லாம் தப்பி எல்லாக் கலயங்களையும் எப்படி ஒரு மழை நிரப்புமோ அப்படித் தன்னை சாஸ்வதப்படுத்திக் கொள்ளுவது அரிதினும் அரிதான ஒன்று. இந்தப் பாடலை அதற்கு உதாரணமாக நிச்சயம் சொல்ல முடிகிறது.
 
 
சொர்ணலதா பாதிப் பூரணம். கலையின் விசித்திரம், சரித்திரமெங்கும் நெடுவாழ்வு ஆசீர்வதிக்கப் பட்டவர்களும் வெகு சீக்கிரத்தில் விண்ணேகியவர்களுமாகக் கலந்ததே அதன் இயல்பு. காண்கையில் சொர்ணலதா என்பது ஒரு திரை நட்சத்திரத்தின் பெயர் மாத்திரமல்ல, நிஜ நட்சத்திரத்தின் பெயரும் கூட. தன் குரலை மலர்களாக்கி நமக்குத் தந்த லதாவுக்கு இந்தச் சொல் மலர்கள் சிறு பூச்சொரிதல். வாழ்க அவரது பாடல்கள்.
 
 
 
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...