அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 92 - அது ஒரு ஜிகினா காலம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   10 , 2018  18:56:47 IST


Andhimazhai Image

உண்மையை நிரூபிக்க வேண்டியதில்லை, பொய்யை நிரூபிக்க முடியாது, பொய்யோ உண்மையோ நிரூபிக்க முடியுமா என முயலுவதன் பேர் சந்தேகம், உண்மையோ பொய்யோ நிரூபித்த உடன் சந்தேகம் செத்துப் போகும். சில விஷயங்களை யாருமே நிரூபிக்க மெனக்கெடாமல் அனுபவிக்க இயலுகிறது. சூரியோதயம், மழை, ஞாயிற்றுக் கிழமை, தெறித்துப் பிச்சுக் கத்திக் கதறித் தன்னைத் துரத்தி  முந்திக் கொண்டோடத் துடிக்கும் ரயில், எதிர்பாராமல் கோயில் வாசலில் கிடைத்துவிடுகிற நெய்யொழுகும் பிரசாதப் பொங்கல், தனியாக சிக்னலில் நிற்கும்போது பக்கத்தில் வந்து நிற்கும் ஒரு "ஹாய் ஸ்கூட்டி", கைதவறிப் பந்தியில் வைக்கப்பட்டுவிடுகிற கூடுதல் ஸ்வீட் தொடங்கி வாய்தவறிச் சிந்தப் படும் முத்தத்தின் எதிர்பாராத வருகை உட்பட இந்த வாழ்க்கை நினைக்காமல் கிடைப்பவற்றுக்கு என ஒரு தனி ஃபோல்டர் போட்டு வைத்திருக்கிறது.


நேரே விஷயனுக்கு வருவோம். அவன் பெயர் ஆராய்ச்சி, இந்த அத்தியாயத்தின் எல்லா விஷயமும் அவன் பற்றியது என்பதால் அவன்தான் விஷயன். ஊர் சாத்தூர். ஆள் ஒல்லி. பேர் பி.பாலசுப்ரமணியன். ஊர் பேரைப் பெயர் பேரோடு சேர்த்துக் கொண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியன் என்றுதான் இன்ட்ரூஸ் ஆவான். ஒரு திரைப்படத்தில் நாம் எல்லோரும் பார்க்கக் கூடிய பலவற்றைப் பார்க்காமல் வேறு பலவற்றைப் பார்ப்பதற்கென்றே படங்களுக்கு வந்து செல்பவன். அவன் தரக் கூடிய ஜில் ஜிலேர் பரவசாதி அனுபவத்துக்கு ஒரு விள்ளல் உதாரணம் இங்கே :பாட்டி வடை சுட்ட கதை இருக்கிறதல்லவா, அதைப் பற்றி ஒருநாள் பேச்சு வந்தபோது, தன் சோபான மூஞ்சியைக் கொஞ்சம் சைன்ஸ் பண்ணிக் கொண்டு, சட்டெனக் கேட்டான், "காக்க எங்கயாச்சும் தனியா வருமா?" எல்லோருமே யோசித்தோம். கார்த்தி, "ஏன் தனியா வராதா?" என்றான். முரளி, "ஒன்ன மாதிரி சுயநல மனுஷங்கதாண்டா தனியா சுத்துவாங்க", உடனே அஷோக், "அதுக்கேண்டா நாய் மாதிரி நீங்க அடிச்சுக்கறிங்க?" கேள்வி எனும் உளியால் எங்களைப் பிளந்து தன் வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டுக் கிளம்பிச் சென்றான் ஆராய்ச்சி.


மூர்த்தி நாலைந்து தினங்கள் கழித்து, "அந்த காக்கா சீக்கரம் போயிருக்கும், இல்ல லேட்டா போயிருக்கும், ஒடம்பு சரியில்லன்னு லீவு போட்ருக்கும், இப்டி எதுனா நடந்திருக்கலாம்ல?" என்றான். "கரெக்ட்" என்றவன், "நரி பேசுறது காக்காய்க்கு எப்டிப் புரியும்?" என்று அன்றைய கேள்வியைக் கேட்டுவிட்டுப் போனான். எங்கள் ஏரியாவில் காக்கா வடைக் கதையைச் சொல்ல ஆரம்பித்தாலே எங்கே வந்து அன்றைய கேள்வியைக் கேட்டுவிடுவானோ என டெங்கு ஜுரம் போல் ஆராய்ச்சி பற்றிய பயம் பரவலாயிற்று. "உளுந்த வடையா, வெங்காய வடையா" என்கிற அளவுக்குப் போய், இனி கேள்விகளே இல்லை என்று அவனே வெறுத்துப் போகும் அளவுக்குக் கேட்டு முடித்தபின் அதே கதை மீதான தன் நக்கல்களை ஆரம்பித்தான் ஆராய்ச்சி.

 


 

ஒரு ஃப்ளோவில் அந்தக் கதையை மூர்த்தி இப்படிச் சொல்ல ஆரம்பித்தான், "ஒரு ஊர்ல வயசான பாட்டி" இவன் உடனே படாரென்று சீனி வெடி போல் வெடித்தான், "எந்த ஊர்லயுமே வயசானாத்தான் பாட்டி" என்று. எதற்கென்றே தெரியாமல் கட்டி உருண்டார்கள். சில நாட்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு ஆராய்ச்சி வரக்கூடாது என்று நாங்கள் ஆர்டர் போடும் அளவுக்கு எல்லை மீறினான் ஆராய்ச்சி.


உண்மையிலேயே விசித்திரன். டி.ராஜேந்தரின் பாடல்களை விழி விரியப் பார்ப்பான். ஒரு படத்தைப் பார்த்துவிட்டு, "என்ன நாலு செட்டிங் கூடச் சரியில்ல", என்றுதான் விமர்சனத்தை ஆரம்பிப்பான். முதல் மரியாதை படத்தில் ஜிகு ஜிகு ஜிகினா செட்டிங்குகளுக்கு எங்கே போவது அய்யா? எந்தெந்த பாட்டில் விளக்கு அணைந்து அணைந்து எரியும் என்பதும் எந்தெந்த பாட்டில் வெள்ளி ஜிகினா ஆடைகளை அணிந்து ஆடுவார்கள் என்பதும் மனப்பாடம்.


"ஒரு நாயகன் உதயமாகிறான் பாட்டுல பாக்யராஜ் ஒரு ட்ரெஸ்ஸு போட்ருப்பாரு தெரியுமா?" என்றுதான் ஆரம்பிப்பான், "அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி பாட்டுல தியாகராஜன் அதே ட்ரெஸ்ஸதான் போட்ருப்பாரு, அதே மாதிரி ட்ரெஸ்ஸ உன்னை அழைத்தது கண் பாட்டுலயும் பூமாலை ஒரு பாவை ஆனதோ பாட்டுலயும் என்றும் சொல்லி மகிழ்வான்.டி.ராஜேந்தரில் தொடங்கி புதுப் பாட்டு படத்தில் ராமராஜன் வரைக்கும் எல்லோருடைய ஜிகினாவதாரங்களையும் தன் நுனிவிரலின் விரநுனியில் வைத்திருப்பான். சினிமாவை வெறும் கொண்டாட்டமாய் மாத்திரம் பார்க்கிறவன் பாக்கியவான். நம்புங்கள் ஸ்வாமி. அம்மா, தங்கச்சி, அக்கா என உறவுசொல்லி அழுகாச்சி பாடல்களை எந்தப் படத்தில் பார்க்க நேர்ந்தாலும் இரண்டாவது வினாடியில் தூங்க ஆரம்பித்துவிடுவான். ஒரு படத்தில் செந்தில் சொல்லுவாரே, "நீங்க வாசிங்க, நான் தூங்கணும்" என்று, கிட்டத்தட்ட அந்தச் சரகம்தான்.


சிவாஜிக்காக கண்ணதாசனின் எண்ணமத்தனையும் விஸ்வநாத இசையில் தன்னையே உருக்கி டி.எம்.எஸ் கதறிக் கொண்டிருக்கும் பல பாடல்களில் கும்பகர்ண குரூரத்தோடு குறட்டை சகிதம் தூங்கிக் கொடிருப்பான். அதில் அய்யாவின் எலைட் ஃபேவரைட் எது தெரியுமா? "ஏன் பிறந்தாய் மகனே" அமர்ந்த இடத்தில் புரண்டு வேறு படுப்பான். இவ்வளவு ஏன் இளையராஜா @ சாமி வந்து கண்ணைக் குத்தும் என்றாலும் கூட அவர் குரலிலான பல சோகப்பாடல்களின் போதெல்லாம்  போருக்குப் போய்விட்டு வந்த சிப்பாய் போல சுகமாய்த் தூங்கியிருக்கிறான்.


"செட்டிங் நாக்கு சால இஷ்டம், சோகம் காவல லேது" இதுதான் ஆராய்ச்சி. இந்த வாக்கியத்தை வி.கே.ராமசாமியின் குரலில் அவரது ஸ்டைலில் படிக்கவும். அதுல பாருங்க விஸ்வநாதன், நெறைய முறை கேக்கறதுக்கும், ரொம்ப சொற்பமா பாக்குறதுக்கும் வாய்ப்பிருந்த காலம் அது. அதுல இப்படியான பாடல்களைக் காது வழியாக் கேக்கும்போது கண் நெறைய ஜிகினா எடுத்திருக்கான் இந்தப் பய.சூரியகார்த்தி டாடி சிவக்குமாரும், சிவமூத்த குமாரர் சூர்யாவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பூ பெயர்களை கடமுட கடமுட என்று ஒப்பிப்பார்கள் அல்லவா அதுபோல நூற்றி இருபத்தேழு ஜிகினா பேன்ட் ஜிகினா சட்டை பாடல்களைப் பட வாரியாக, கதாநாயகன் வாரியாக ஒப்பிப்பான் ஆராய்ச்சி.  


எப்படம் யார் யார்வாய்க் கேட்பினும் அப்படம்
ஜிகினாட்ரெஸ் படம் காண்பதறிவு.


எங்களில் யார் எந்தப் படத்துக்குச் சென்று வந்தாலும் அதில் தன்னிஷ்ட ஜிகினா இடம் பெற்றிருக்கிறதா என்று கேட்பான். பத்திரிகை மார்க்கு பார்த்துவிட்டுப் படத்துக்குப் போன ஒரு காலம் இருந்ததல்லவா, அப்படி எங்கள் அபிப்ராயங்களைப் பெற்றுக் கொண்டதும் நேராகப் போய்விட மாட்டான். தனக்கென்று பிரத்யேக க்ராஸ் வெரிஃபிகேஷன் டீம் ஒன்று வைத்திருந்தான். நாலைந்து நம்பிக்கைக்குரியவர்கள் ஜாமீன் சொல்லி ஜவாப்தாரி ஆனால் மாத்திரமே தேட்டர் பக்கம் செல்லுவான். எடுத்த எடுப்பிலேயே அப்படி ஒரு பாடல் வந்து விட்டாலும் முழுப்படத்தையும் நன்றி கலந்த சந்தோஷத்தோடு பார்ப்பான். எதோ ஞாபக மறதியில் மாத்தி கீத்தி சொல்லி அப்படிப் பாடல் மட்டும் வரவில்லையென்றால் பற்களை நறநறத்தபடி நாக்கைப் பிடுங்கிப் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும்வரை திட்டுவான்.எங்கள் எல்லோருக்கும் வயிறெரியும் இன்னொரு செய்கை என்னவென்றால் அவனுடைய நாயினா. "டவுன்ல குரு தேட்டர்ல ராமராஜன் படம் புதுப்பாட்டு வந்திருக்காம், ஜிகினா பாட்டு ஸ்டில்லு போஸ்டர்லயே போட்ருக்கான், காசு குடு" என்று கேட்பான். மேட் இன் அன்புயா நாயினாவும் உடனே சலவைத் தாளாக நூறு ரூபாய் தந்தனுப்புவார். பய்யர் படம் பார்த்துவிட்டுத் திரும்ப ஆட்டோ வைத்து அனுப்பும் இந்திய அளவிலான முதல் நாயினா அவர்.


பெண் ஜிகினிகள் பாடல்களுக்குத் தனி நோட்டு போட்டு எழுதி வைத்திருந்தான் ஆராய்ச்சி.


எத்தனை வண்ணமயமான சினிமாவை நாங்கள் எல்லோரும் அனுபவித்தோம் என்று சொல்லத் தோன்றுகிறது. நினைவு தெரிந்து மன்மதன், வல்லவன் போன்ற படங்களில் சிலம்பரசன் கொஞ்சம் ஜிகினா உடைகளை அணிந்து தென்பட்டார். போக்கிரி படத்தில் "டோலு டோலுதான்" என்ற பாடல் ஒரு விஜயுதாரணம். என்னதான் இதையெல்லாம் சொன்னாலும் பழசு பழசுதான் என்று சொல்லத் தோன்றாமல் இல்லை.  


மிக மிக உற்சாகமானவன் ஆராய்ச்சி. அனேகமாக கலை அலங்காரம் என்கிற திரைப்படத்தின் ஒரு துறையைப் பற்றி நாளும் கனா கண்டுகொண்டே இருந்தவன். ஒழுங்காகத் தூண்டியிருந்தால் அவனும் தன் தொழிலென அதையே கொண்டிருப்பானோ என்னவோ. விதவிதமான குறிப்புகளை நாளும் திரைப்பாடல் குறித்து நேர்த்திக் கொண்டே இருந்தான். இதுல இது வரும் அதுல அது வரும் என்றெல்லாம் சொல்லிக் காட்டுவதில் அவனுக்கு நிகர் அவனே.
 


ஒரு பழைய பாட்டு ரேடியோவில் ஒலித்தபோது அந்தப் பாட்டின் குரல், வரி, இசை என எதையும் சிலாகிக்காமல் "பெரிய பெரிய ஃபோன் மேல ஆடுவாய்ங்க தெரியும்ல?" என்றான். நாங்கள் விசாரித்து அந்த ஃபோன்களைப் பற்றி உறுதிப் படுத்திக் கொண்டோம். சில அபூர்வமான டப்பிங் திரைப்படங்களின் போஸ்டர்களைப் பார்த்துத் தன் சூட்சும் ஞான் திருஷ்டியின் மூலமாக, "இதுல நம்ம டைப்ல நிச்சயம் பாட்டு இருக்கும்" என்று சொன்னபடியே எங்களை அழைத்துச் சென்றிருக்கிறான். ஒரு சிரஞ்சீவிகாரு நடித்த டப்பிங் படம், அப்படித்தான் கூட்டிச் சென்றான் ஆராய்ச்சி, மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு கமலஹாசன்களைப் போல அந்தப் படத்தில்  நான்கு செட்டிங் பாடல்கள், சொல்லில் விவரிக்க முடியாத பேரின்பத்தில் ஆழ்ந்து பட்டாம்பூச்சியாய்த் திரிந்தான் ஆராய்ச்சி.


மறக்கவே முடியாத ஒரு படம், வெங்கடேஷ் நடித்த ஒரு  டப்பிங் படம். பெயர் நினைவில்லை. கதாநாயகனின் அம்மாவை இருதய ஆப்பரேஷனுக்காக ஒரு பெரிய மிஷினுக்குள் படுக்க வைத்து எடுத்துப் போவார்கள். இந்த உலகின் அதி குரூர இயக்குனர் அந்த இடத்தில் ஒரு ஜம்பலக்கா பாடல் டூயட் வைத்திருப்பார். வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில், "வாரே வா" என்றானே பார்க்கலாம். மாலைக் கண் கவுண்டமணி சம்சாரத்தோடு சினிமாவுக்கு சென்று சம்மந்தமில்லாமல் வில்லனுக்கு ஆதரவாகத் தான் மட்டும் கை தட்டுவாரே அதே எஃபெக்டில் எல்லோரும் அவனை முறைத்தோம்.

 

ஆராய்ச்சி ஒரு எளிய உதாரணம்.சினிமா என்னும் கேளிக்கைதெய்வத்தின் முழுமையான பேரன்பை நாளும் பெற்று உய்த்த பலகோடிப் பேரில் ஒருவன்.குழந்தையின் கண்களும் மனமும் கொண்டு வாழ்வின் பெருங்காலத்தைப் பார்க்கிற வாய்ப்பு யாருக்கு வாய்த்தாலும் வரம்.


சமீபத்தில் வெளியான காலா படத்தின் பஞ்சு வசனத்தை அதன் டீசர் பிரசவத்தின்போதே கவனித்து உடனே பரணிக்கு ஃபோன் செய்தேன். "பாத்தியா காலா டீசர்?" எனக் கேட்டேன். "ஆமாலே, நம்ம ஆராய்ச்சிதான் வேங்கையன் மவன்" என்றான். "க்யாரே, படத்ல பாட்டுல செட்டிங்கா? ஆப்பரேட்டர் வீட்டுக்குப் போனாலும் பரவால்ல, நான் பாத்துட்டுத்தான் வருவேன்" என்று ஆராய்ச்சியின் குரலில் எங்களுக்கு அது கேட்டது.


சில செட்டிங்குகளில் சில மனிதர்கள்.
 

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)


English Summary
Pulanmayakkam

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...