முதலில், இது மற்ற அத்தியாயங்களைப் போல் இருக்காது என்று தோன்றுவதைக் குறிப்பிட்டு விடலாம். இருந்தாலும், புலன் மயக்கத்தில் சில ஆளுமைகளைப் பற்றிய அத்தியாயங்களை என்னாலான அளவு ஒத்திப் போட்டபடி வந்துள்ளேன். பற்பல காரணங்கள் இருந்தபோதிலும், அதன் பெயர் தாமதமல்ல. ஒப்புக் கொடுத்தலின் ஒரு பகுதி என்றே எண்ணுகிறேன். கலையில் மாத்திரமே காலத்திற்கு முந்தையவர்களின் வருகை சாத்தியமாகிறது. அப்படியானவர்களின் வருகை ஒரு வகையில் தீர்க்கதரிசனம்தான். ஒருவகையில் கலை என்பது பிறழ்தல். சொல்லப் போனால், கலை என்பது வரிசையிலிருந்து விலகி நிற்றல். அப்படி விலகி நிற்பவர்களின் வரிசையற்ற வரிசையிலிருந்து விலகுதல் அடுத்த படி. தனித்தலும், ஓங்குதலும், உயர்தலும், இவை யாவும் கலையின் அம்சங்களே. சவுக்கின் நுனி பல உடல்களைத் தரிசிக்கும் என்றபோதும் அதன் அடிப்பகுதி இடம் மாறுவது எளிதானது அல்ல. கலைஞன் காலத்தின் சவுக்காகிறான். கரவொலிக்கும் மாந்தர்கள் நுனி தீண்டும் உடல்கள். கலை எனும் நதி பயணிக்கும் தடம் நெடியது. கலைஞர்கள் வந்தவண்ணம், போனவண்ணம் இருக்கிறார்கள். காலவஞ்சக இருளில் கலாமேன்மை தீபமாகிறது. இப்படித்தான் காலம், கலை இரண்டும் இணைந்து மேதமைகளை இனம் கண்டு, சமூகத்தின்முன் நிறுத்துகிறது. பணம், புகழ், கலை மீதான பித்து, ஆர்வம் போலப் பல காரணங்கள் ஒருவரைக் கலையின்பால் திருப்பிவிட முடியும். நட்சத்திரங்களுக்கு நடுவில் தனித்து ஓங்குகிற ஒளித்தெறல் நாயகர்கள் அபூர்வமாய்க் கிளைக்கிறார்கள். அப்படியானவர்கள் எப்போதாவது எப்போதும் தோன்றியபடியே இருக்கிறார்கள். இதன் முரண் இதன் அழகு.
காலத்துக்கு முந்தைய வருகையை எல்லோரும் நிகழ்த்துவது இல்லை. அபாரம் மதிப்பிற்குரியதுதான் என்றபோதும் அபூர்வம் இன்னும் சிறப்பு. அந்த வகையில் ஜே பி என்றழைக்கப்பட்ட ஜே பி சந்திரபாபு, அரிதினும் அரிதாய்த் தோன்றிய சகலகலா ஞானி. மேதை. பாதிப் பூரணம். ஏழாவது தின நிலவாக உறைந்து போன பிற்பாடு, எப்போதும் நினைவில் தோன்றும் அந்த ஏழாம் நிலவின் முழுமை குன்றாது குறையாது வளராது உயராது போல ஒரு ஞாபகம். ஜே பி சந்திரபாபு என்றதும் நினைவுக்கு வரும் சொற்களில் ஒன்று கனவான். அடுத்த சொல் கம்பீரம். மூன்றாம் சொல் தனித்தல். நான்காவது தோற்றமாதவம். ஐந்தாவது கலைஞானம். ஆறாவது குரலும் உடலும்.
சந்திரபாபு ஒரு முழுமையான நடிகர். நடிப்பின் நிபுணர். யானை தான் அமர்வதற்குக் குறைந்தபட்ச இடத்தை சமரசம் செய்து கொள்வதே இல்லை. யானைக்குத் தன் உடலைக் குறுக்கிக் கொள்ளத் தெரியாது. குறுகலான இடத்தில் இருப்பதை நிர்ப்பந்திப்பதன் மூலமாக மெல்ல மெல்ல யானைக்கு மதமேற்ற முடியும். உண்மையில் யானை ஒரு குழந்தை. அதன் இருப்பிடம் குறித்த நிர்ப்பந்தம் அச்சமாய்க் காய்த்து, ஆக்ரோஷமாய்க் கனியும். அதுபோலத்தான் நடிப்பு என்பதைத் தொழிலாய்க் கைக்கொண்ட சந்திரபாபு நடிப்பின் நிபுணர் எனலாம். அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் வசித்த எந்த ஒரு தொழில்முறை நடிகரை விடவும், சந்திரபாபு நடிப்பில் சில நுட்பமான நிரடல்களை நேர்த்தினார்.

எளிய, அடுத்தடுத்த குணாம்ச வித்தியாசங்களைத் தன் வழங்கப்பட்ட பாத்திரங்களின் மூலமாக முயன்று பார்த்தவர் சந்திரபாபு. ஸ்டைல் எனும் சொல்லைத் தமிழில் கொணர்ந்த முதல் நடிகர் சந்திரபாபு. இன்னாரெனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு அந்தக் காலகட்டத்தின் மேற்கத்திய, குறிப்பாக, ஆங்கிலப் படங்களின் உபபாத்திரங்களை ஏற்ற அத்தனை பேரையும் கலைத்தும், கலந்தும், நீக்கியும், நிராகரித்தும், எடுத்தும், தொடுத்துமாய்த் தன் பிம்பத்தின் அடுத்தடுத்த அடுக்குத் தொடர்ச்சியை அவர் உருவாக்க விழைந்தார்.
Arranging sequential continuous frames in an ascending order from left to right. A well trained flipping may give a vision of a moment of common images in the frames. The tactical magician may agree to shuffle or discontinue the order of the sequential frames, but ready to give the same experience by the way of flipping it again.
பிம்பமயமாதலின் அகச் சலனங்களைப் பாத்திரமேற்றலின் புறச்செயல்பாடுகளின் மூலமாகக் கலைத்தழித்துத் தன்னாலான அளவுக்கு உன்னதமான வித்தியாசங்களை நிகழ்த்திப் பார்த்தவர் சந்திரபாபு. தன் சுயமென்னும் நீர்மத்தைப் பல்வேறு பாத்திரங்கள் கொண்டு நிரப்பிப் பார்த்தவர் சந்திரபாபு. தொழில்முறை நடிகர் என்கிற நிலையிலிருந்து விலகி, நெடுங்காதம் நீங்கிப் பார்த்தவர் சந்திரபாபு. மிக சாமர்த்தியமாக எல்லோருடைய ஞாபகங்களிலும் புகுந்து, ஒரு நிஜ பிம்பத்துக்குப் பதிலாக ஒரு கோட்டுச் சித்திரத்தை நிரந்தரம் பண்ண முயன்றார் சந்திரபாபு. எம் ஆர் ராதா, எஸ் வி சுப்பய்யா, ரங்கா ராவ், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எம் ஜி ராமச்சந்திரன், எனத் தன் சமகாலத்தில் காணாப்பெற்ற அத்தனை நட்சத்திரங்களையும் அனாயாசமாகக் கையாண்டு தெளிந்தவர் சந்திரபாபு. இப்படியான எந்தவொரு நட்சத்திரத்தின் வெம்மயோ, ஜாஜ்வல்லியமோ, தொடர் வழிபாட்டுக்குரிய ப்ரதி அச்சமோ, வெளி செல்வாக்கோ, எதுவும் சந்திரபாபுவின் முன்னால் எடுபடவே இல்லை. தான் வாழ்ந்த காலத்தைத் தன் திறனால் கட்டித் தன் மீதான ஆதுரத்தை நிரந்தரித்துக் கொண்ட நல் நடிகன் சந்திரபாபு. ஃப்ரேமுக்குள் பாபு வந்துவிட்டால் போதும், கதையில் தொடங்கி சகலத்தையும் கொள்ளை அடித்துவிடுவார்.
ஸ்தானிலாவ்ஸ்கியில் கனவு நடிகனுக்குண்டான அத்தனை அம்சங்களையும் பொருத்திப் பார்க்கக் கூடிய தமிழ் பிம்பம் சந்திரபாபு. தன் முகபாவங்களைக் குறளி போல் பயன்படுத்தியவர் பாபு. பிறரைப் போலவே நகைச்சுவை நடிகர் என்கிற வரையறைக்குள் அவரை அடக்கப் பார்த்து, ஒரு அங்கத நிர்ப்பந்தமாகவே கோணங்கி சேஷ்டைகளை செய்து விடுவதற்காக அவரும் நிர்ப்பந்திக்கப்பட்டார். இது மறுப்பதற்கில்லை, என்றாலும், சந்திரபாபு வேடங்களின் வேதம் எனும் அளவுக்கு நடிப்பில் மிளிர்ந்தார்.
சந்திரபாபுவின் நடிப்புத் திறன் பற்றிக் குறைந்தது இவ்வளவாவது பேசிவிட்டுப் பிற்பாடு அவருடைய பாடல் மேதமை பற்றிப் பார்ப்பதுதான் இருபுறத்து நியாயமாக இருக்கக் கூடும். சந்திரபாபு ஒரு நடிகராக அவருடைய பேச்சிற்கான குரல் என்பது, வசன உரையாடலுக்கான குரல் என்பது முற்றிலுமாக அவருடைய பாடுகிற குரலுடன் அந்நியப்பட்டுத் தனித்து வேறெங்கோ இருக்கும். சந்திரபாபு ஒரு மத்தியம வயது நடுத்தர வர்க்கத்து அறிதல் அறியாமைக்கு உட்பட்ட ஒரு தெற்கத்திய கிறிஸ்தவக் குரலைத் தன் வசனத்துக்கான குரலாகப் பிரதிபலித்தார். நியாயமாக அவர் பாடுவதற்கான குரலாக மேற்சொன்ன அத்தனை தன்மைகளையும் கொண்ட குரலைத் தேர்ந்தெடுத்திருந்தால் அதுதான் பாடுவதற்கான குறைந்தபட்ச நியாயமாக இருக்கக்கூடும்.

அவருடைய குரல் ப்ளூ வகைமையைச் சார்ந்தது. நாம் முன்பே பார்த்திருக்கிறோம். செமி மெட்டாலிக் நடுக்கத்தை ஆதாரமாகக் கொண்ட அந்தக் காலகட்டத்தின் மேற்கத்திய, குறிப்பாக, லத்தீன் அமெரிக்க, ஜாஸ் மற்றும் ப்ளூ, மேலும் அந்தகாரத்திலிருந்து சுயத்தை அந்நியம் செய்து கொள்ளுகிற ஒரு பாலை பிரயாணத் தனிமையைத் தன் குரலின் பொதுத் தன்மையாக வைத்துக் கொண்டு, தன் பாடல்களைப் பாடியவர். இந்திய அளவில் கன்னட ராஜ்குமார், இளையராஜா மற்றும் சிலரை மாத்திரமே இந்த வகைமையில் கூற முடிகிறது. சற்று உன்னித்தால், எல்லாப் பாடல்களுக்குமான குரல் இது அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
லத்தீன் அமெரிக்கக் குரல்களில் எல்விஸ் ப்ரெஸ்லியை ஒரு அளவுக்குத் தன் குரலின் செல்வாக்கில் அனுமதித்தார் பாபு எனத் தோன்றுகிறது.இருவருக்கும் சொற்ப ஆயுள் அபாரப் புகழ் எனப் பற்பல ஒற்றுமைகள் உண்டு .. அராபிய, வட இந்திய, தெலுங்கு மற்றும் கன்னட இன்னபிற நிலங்களின் கதைகளை நேராகவும், மறைமுகமாகவும் சார்ந்து உருவாக்கம் பெற்ற சினிமாக்களில் ஆங்காங்கே பாபுவுக்குப் பாடல்கள் வழங்கப்பட்டன. பாபுவுக்கு முன்பாகவே என் எஸ் கிருஷ்ணன் அங்கத நடிகராக அறியப்பட்ட பாடல்களுடன் வலம் வந்து கொண்டிருந்தார். பிற்பாடு பாடத் தொடங்கிய பாபு, ஆரம்பத்தில் எஸ் சி கிருஷ்ணனின் குரல் மாற்றாக சில பாடல்களைப் பாடிய பாபு, நம்ப முடியாத சந்தோஷம் மற்றும் எளிதில் ஆறாத துக்கம் ஆகிய இரு ஒவ்வா விளிம்புகளுக்கு அப்பால் அமைந்த பாடல்களை எளிதாகத் தொடங்குகிற, அனேகமாக இரட்டிக்கிற, வார்த்தைகளைக் கொண்டே ஆரம்பகால சந்திரபாபு பாடல்கள் தொடங்கின.
தனியா தவிக்கிற வயசு...காதல் என்பது எதுவரை....ராக் ராக் ராக் ராக் அண்ட் தி ரோல்..ஹலோ மை டியர் ராமி...எங்கம்மா உனக்கு மாமி...ஓ மேரீ ப்யாரி.....தில்லானா பாட்டுப் பாடும்....ஜாலி லைஃப் ஜாலி லைஃப் கல்யாணம் கல்யாணம் ஓ மேரீ புல்புல்புல்... பேப்பர் பேப்பர் ராக் ராக் ராக் ஜிகுஜிகு ஜிகுஜிகு கொசரி கொசரி சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது போன்றவை சில உதாரணங்கள். சந்திரபாபுவை உண்மையாகவே உச்சத்தில் ஏற்றிய பாடல் என்று "உனக்காக எல்லாம் உனக்காக" என்கிற பாடலைச் சொல்ல முடியும்.
உனக்காக எல்லாம் உனக்காக ஒரு ஸ்பீட் ப்ரேக்கர் பாடல். படங்களில் அப்போது எல்லாம் அனர்த்தமாய் ஒரு பாடலை புகுத்துவதன் மூலமாய்க் கதையில் ஆழநுட்பத்தில் ஏற்படக் கூடிய ஒருவிதமான சன்ன சலிப்பை அகற்ற முயன்றனர். இது ஒரு காலகட்டத்தின் திரைக்கதை உத்தி என்றே கூறத்தக்க அளவுக்கு ரிபீட் செய்யப்பட்டது. அந்த இடத்தில் காமிக் என்றழைக்கப்படுகிற எடையற்ற பாடல்கள் நுழைக்கப்பட்டன. அல்லது எடையற்ற நகைச்சுவைக் காட்சிகள்.கதையின் ஓட்டத்தை எந்த விதத்திலும் ஊறுவிளைவித்து திசைமாற்றாத இத்தகைய மாற்றங்கள் நெடுஞ்சாலைப் பயணத்தின் போது மோட்டல்களில் ஐந்து நிமிடம் தேநீர் காரணத்துக்காக நிறுத்திச் செல்லுகிற வசதியைப் போல திரைப்படத்தின் வேகநகர்தலுக்கு இடையே ரசிகர்களுக்குச் செய்து தரப்பட்ட ஒரு உசிதவசதி.
ஆனால் நடந்தது வேறு
சந்திரபாபுவின் வருகைக்குப் பிறகு நாயகனல்லாத நடிகர் ஒருவர் ஒரு திரைப்படத்தின் கதையின் வெற்றிகரத்தின் தீர்மானப் போக்கை நிர்ணயிக்க முடியும் என்பது நிரூபணம் ஆயிற்று. அதுவரைக்கும் நாயகர்களின் பின்னால் மாத்திரமே சுழன்று கொண்டிருந்த தமிழ் சினிமா இன்னொரு புறம் எஸ்விரங்காராவ் என்.எஸ்.கிருஷ்ணன் எம்.ஆர்.ராதா ஆகிய பேருருக்களின் முன்னால் பம்மினாற் போல் பாவனை காட்டினதாகக் கொண்டால் நிசமாகவே சந்திரபாபுவின் முன்னால் அயர்ந்து நின்றது. வெற்றி எனும் குதிரையை வசப்படுத்திய முதல் நாயகனற்ற நாயகன் சந்திரபாபு என்பது அவர் வாழ்வின் உச்சமாகவும் திரும்புதலுக்கான தொடக்கப் புள்ளியாகவும் அமைந்தது சோகமே. வீழ்த்தப்பட்ட் நட்சத்திரங்களின் பட்டியலில் தான் பாபுவின் பெயரை எழுத வேண்டும். அப்படித்தான் தோன்றிய அத்தனை சினிமாக்களையும் ஆளவந்த சக்கரவர்த்தி ஒப்பிலா சந்திரபாபு.
சந்திரபாபுவின் குரல் தனித்துவம் மிக்கது.முன்னும் பின்னும் நிகழா அற்புதம்.அவரது குரலை அவர் தான் நடுக்குகிறார் என்றால் அப்படிக் கச்சிதமாய் நடுக்குவதற்காககவே தனியே பாராட்டலாம். உலக அளவில் இத்தனை நடுக்கமுறும் இன்னொரு அலைதல் குரல் சாத்தியமே இல்லை. அப்படி நடுங்கும் குரல் பாபுவினுடையது. வழக்கமாகப் பாடல் உருவாக்கத்தில் கடைப்பிடிக்கப் பட்ட ஆகமங்களைத் தன்னால் ஆன அளவுக்கு மாற்றிட முயன்றார் பாபு. உதாரணமாக பல்லவி அனுபல்லவி சரணம் என்றெல்லாம் இருப்பதில் தனக்கு உகந்த ஒரு இடத்தை ஒவ்வொரு பாடலிலும் சுழல்வதற்காகத் தேர்வெடுத்தார் பாபு. நான் ஒரு முட்டாளுங்க என்ற பாடலில் கய்தே டேய்..என்பார்..எதிரே பாராத இடம் அது. இப்படி பெருவாரி பாடல்களில் சொல்ல முடியும்.
சந்திரபாபுவின் பாடல்கள் படங்களின் டிவைடர்களாக மாத்திரம் இருந்து விடவில்லை. எந்த அம்பு எந்த இலக்கைத் தாக்கும் என்பதை வேண்டுமானால் முன் கட்டியம் கூறலாம். எந்த அம்பு எப்படிப் பிளக்கும் என்பதைத் தீர்மானிக்க இயலாதல்லவா..? அப்படித்தான் ஆகின சந்திரபாபுவின் பாடல்கள்.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்?
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
(படம் : அன்னை பாடியவர் : சந்திரபாபு பாடல் வரிகள் : கண்ணதாசன்)
இந்தப் பாடலை சந்திரபாபு பாடியதே அலாதி.எந்த வார்த்தையுமே அதற்குண்டான சிறுசொற்ப ஈரம் கூட வழங்கப்படாமல் மீவுலர் தன்மையோடு பாடி இருப்பார்.தேவாலயங்களில் கோரல் என்று கிறித்துவ மதத்தின் பாடல்கள் பாடப்பெறும் அதே தொனித்தலில் இந்தத் தத்துவப்பாடலை வழங்கினார் சந்திரபாபு.வெகு நிதானமாக செய்தி வாசிப்பவர் அந்தச் செய்தியின் சாரத்தினைத் தன் குரலில் கிஞ்சித்தும் தொனித்து விடாமல் பார்த்துக் கொள்வாரல்லவா.?அப்படித் தான் வழங்கினார் சந்திரபாபு.சொற்களை மிக மேலோட்டமாக அதுவரை வேறெந்தக் குரலும் அப்படி அணுகியதில்லை என்பதும் கூறத்தக்கது.
குங்குமப் பூவே கொஞ்சுபுறாவே தங்கமே உன்னைக் கண்டதும் உள்ளம் பொங்குது தன்னாலே...இந்தப் பாடலொரு டூயட்.ஜிப்சி வகையறா டூயட். சந்திரபாபுவின் ஈரப்பற்றேதும் அற்ற குரல் இதனை காலங்கடந்து நிலைக்கச் செய்தது. வார்த்தைகளுக்கு எதிரான இசையைக் கட்டுப்படுத்துவதுமான குரலாய் எழுந்தார் சந்திரபாபு. அவரது பாடல்களின் சொல்லாடல்கள் எத்தனை பெரிய கவிதையாக இருந்தாலும் மறுபுறம் எவ்வகையிலும் சிறப்பேதுமற்ற சாதாரணமான வார்த்தைக் கூட்டமென்றாலும் சந்திரபாபு தனக்குள் அவற்றைச் செலுத்தி வேறொன்றாக்கி மலர்விக்கும் மந்திரக்காரனைப் போலவே செயல்பட்டார். அவரது பாடல்களது தனித்துவமாக மற்ற எதனையும் விட அவரது குரலே மேலோங்கிற்று.
பொறந்தாலும் ஆம்பிளியா பொறக்க கூடாது அய்யா பொறந்துவிட்டா பொம்பிளியே நெனைக்கக் கூடாது என்பார் சந்திரபாபு. அவரது சூப்பர்ஹிட்களில் இதுவும் ஒன்று., தன் வாழ்காலத்தில் தான் பாடிய அத்தனை பாடல்களையுமே கிட்டத்தட்ட சூப்பர்ஹிட் பாடல்களாகவே ஆக்கிய மாண்புமிகு பாடல்ராஜன் சந்திரபாபு.
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே
கட்டான முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டான முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டுபடி ஆகலே காதல் தரும் வேதனை
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே..
பம்பர கண்ணாலே
கண்டவுடன் காதலே கொண்டாளின் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
கண்டவுடன் காதலே கொண்டாளின் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது..
திண்டாடி தவிக்கிறேன் தினம் தினமும் குடிகிறேன்
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே
பம்பர கண்ணாலே
இந்தப் பாடலை உற்று நோக்குங்கள்,மீட்டரை விட குறுகி ஒலிக்கும் குரல் அதாவது வார்த்தைகளை அவசர ஓட்டமாய்ப் பாடுவதன் மூலமாக இசைக்கு உண்டான அளவைத் தாண்டிய சொற்களை மெட்டுக்குள் அடக்கி விடும் லாவகம்.கத்தி மேல் நடக்கும் காரியம் என்றால் அது சரியே. சந்திரபாபுவைத் தவிர இன்னொருவர் ஏன் அவர் குரலைப் போலி செய்து பாடுகிற யார்க்கும் அத்தனை எளிதாக வசப்பட்டு விடாத அரும்பெருமை அல்லவா அது?
கட்டுப்படி ஆகல்லே காதல் தரும் வேதனே தங்கச்சிலை போல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே ஹேய் பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே... இந்தப் பாடல் கானாம்ருத தேன்மழை. காலத்தை வென்ற சொற்சிலை.
பிறக்கும் போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான் கவலை இல்லாத மனிதன் ஆகிய பாடல்கள் நம்மை மீறி கண்களைக் கலங்கடிப்பவை. ஒண்ணும்மே புரியல்லே உலகத்திலே என்னம்மோ நடக்குது மர்மம்மா இருக்குதூ என்று பாபுவோடு கலங்காதார் யாருமிலர்.
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது என்ற பாடலை சந்திரபாபு போலவே பாட முயற்சிப்பான் என்னோடு கல்லூரியில் படித்த ராஜநாராயணன் என்ற பையன். கடசீ வரைக்கும் அவனால் சந்திரபாபு போலப் பாட முடியவில்லை. போலவே முடியவில்லை என்பது தான் சந்திரபாபு என்னும் சக்கரவர்த்தியின் சிறப்பு.அவர் நிழலின் அடிவாரம் கூட மாவுயரம்.வாழ்க சந்திரபாபு புகழ்.