???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை! 0 சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல் 0 போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம்: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை 0 அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 7 மணிநேரம் விசாரணை! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் 0 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக நடிகை கரீனா கபூரை நிறுத்த கோரிக்கை 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 60 - ஐயா மேலே சாமி வந்து ஆடும் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   02 , 2017  04:21:55 IST


Andhimazhai Image
1975க்குப் பின் அடுத்து வந்த காலத்தில் கிட்டத்தட்ட இருநூறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இதற்கு முந்தைய காலம் வரையிலான அவருடைய இசை ஆளுமையை வேறோரிடத்தில் பார்க்கலாம். இந்த அடைப்புகளுக்குள் என்ன நிகழ்த்தினார் என்பதை இங்கே பார்க்க வேண்டியிருக்கிறது. விஸ்வநாதன் தென் திசையில் தொன்ம இசையின் தோன்றல். துல்லியத்தின் கச்சிதத்தின் வார்ப்பு. கணித்து விட முடியாத நல்லிசை. கூண்டுக்குள் அடைபட்ட சதுக்க பூதத்தின் குரோதம் பொங்கும், "என்னய தெறந்து மட்டும் விடு. ஒன்னய நா ஒரு வழி பண்ணிட்றேன்" என்று அதே புள்ளியில் நிலை கொள்ளும் ஒரு சவாலின் சதா சர்வ காலம். உச்சமும், மத்தியமமும், நீச்சமும் அற்ற பாய்ச்சல் குறையாத நன்னீர் நதி. விஸ்வநாதம்.
 
 
ரஜினிகாந்துக்கு எண்பதுகளின் பிற்பாடு விஸ்வநாதன் இசை அமைத்த முழுமையான மேலும் ஒரு ஆல்பம் போக்கிரி ராஜா. கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு  பாடலைக் கேட்டாலே போதை ஏறும். இறங்கி இறங்கி ஏறும் பெட்ரோல் விலை போலவே கிறங்கடிக்கும் அந்தப் பாடலின் எந்தத் துகளிலும் ஒச்சமேதும் இராது. முழுமையான இசையேந்தல் அந்தப் பாடல். போக்கிரிக்குப் போக்கிரி ராஜா பாடல் மலேஷியாஸ்திரம். விடிய விடிய சொல்லித் தருவேன் ஒரு ஆச்சர்யம்.
 
 
உண்மையில், 'இளையராஜாவுக்கு முன்' என்று பகுப்பது ஆவதற்காகா. விஸ்வநாதனுக்கு முன் மகாதேவன், விஸ்வநாதனுக்குப் பின் இளையராஜா, அதற்குப் பின் ரஹ்மான் என்பதே சரி. என்னுடைய ரிங் டோன் பாடலாக நான் வெகுகாலம் வைத்திருந்த ஒரு பாடல், 'சிம்லா ஸ்பெஷல்' திரைப்படத்தின், 
 
லவ்லி ஃபிகர்
லாஸ்டிங் கலர்
வெண்மேகமே ஓடிவா"
 
 
இந்தப் பாடலில் துவக்கத்திலிருந்து நிறையும் தருணம் வரை முழுவதுமாக ஆச்சரியங்களைக் கொண்டே இந்தப் பாடலை ஆக்கியிருப்பார் விஸ்வநாதன். 'எக்ஸ்பெக்டட் கட்' எனச் சொல்லத்தக்க அளவில் ஒரு சிறு துகள் கூட எதிர்பார்த்தலின் படி நிகழாது. இசை வாத்திய சங்கமமாகவே இப்பாடல் தோன்றும். ஆன்மாவின் ஓரத்தில் நிரடினாற்போல, ஒரு க்ஷண நேரத் தலைசுற்றலை இசைவழி உணர்த்தினாற்போல் இதன் துவக்கம் அமையும். 
 
 
ஞாபகத்தின் எதோ ஒரு ஆழத்தில், பெயர்க்க முடியாமல் தன்னைப் பதிய வைத்துக் கொள்ளும் இப்பாடல். நம்பிக்கை துரோகத்தின் உலகறிந்த நாதமாக இதே படத்தின் "உனக்கென்ன மேலே நின்றாய்" பாடலைச் சொல்ல முடியும். விஸ்வநாத ராட்சசம் இப்பாடல் என்றால் தகும்.
 
 
சிறகில் அடிபட்ட ஒரு பறவை, நடந்தும், தத்தியும், குதித்தும், புரண்டும், கசிந்தும், பறந்தும் கடந்து பார்க்கிற அதன் வதங்கல் கால அலைதல்களை இசைவழி சாத்தியப்படுத்தினார். ஒரு பாடலின் முன் தேவை அதன் சிச்சுவேஷனிலிருந்து தொடங்குகிறது. அது ஒரு பாடலாகையில், அந்தத் தேவையின் பூர்த்தியாக மட்டும் அல்லாமல், பன்முகம் கொண்ட இன்னொன்றாக மாறுகிறது. தன்னை உண்டுபண்ணிய முனி தின்றுவிடத் துரத்துகிற தீராப் பசி அசுரம் இசையினது.
 
 
ஒரு பாடல் வியாபித்தலை கணிக்கச் சூத்திரம் இல்லை. அது அதனுடையது. அது அது. 
 
"கள்ளிக்கேது முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி"
 
என்கிற கண்ணதாசனின் நல்வைரத்தையும், "மல்லிகை என் மன்னன் மயங்கும்" என்கிற வாணி ஜெயராமின் மகரந்தத்தையும் இந்த இடத்தில் குறிப்பிடத் தோன்றுகிறது.
 
 
பாடல் உடனான தனி மனிதனின் உறவாடல் இங்கே தொடங்குகிறது. ஒரு பாடலை ஒருவன் விசாரிப்பதிலிருந்து எல்லையற்ற அவன் கனவுகளின் நடுவாந்திரம் அவனால் கட்டுப் படுத்த முடியாத ஞாபக உருவிலிகளில் ஒன்றாக அந்தப் பாடல் தேங்குகிறது. வாழ்வில் முன்னொளி பாய்ச்சி நமை வழி நடத்துகிற சில பலருள் ஒருவராக அந்தப் பாடல் உருக் கொள்ளுகிறது. தேவாலயத்தின் பாவமன்னிப்புக் கூண்டு, ஈரம் கனம். அந்தப் புறம் தன் செவிகளைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கும் ஒரு விருப்பு வெறுப்பற்ற துறவு மனம் ஒன்றைப் போல் அந்தப் பாடல் மாறுகிறது. ஒப்புக் கொடுக்கிற ஒவ்வொருவரையும் தனக்குள் கரைத்துக் கொள்ளுகிறது. தன்னை நிகழ்த்தியபடி அன்பின் ஆதுரம் ஒன்றைத் தோன்றச் செய்கிறது. அப்படி ஒரு பாடல் இது...
 
 
"நீ வருவாய் என நான் இருந்தேன்" ஒரு மந்திரம் செய்யும் பாடல். முன் காலத்தின், இன்னும் தீர்க்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் பெண் பாத்திரப் பாடல்களுக்கு இணையான கரிசனத்தோடு இந்தப் பாடலை உருவாக்கினார். 
 
 
எழுபத்தைந்திலிருந்து தொண்ணூறு வரைக்குமான தமிழர் வாழ்வுக்கான காலம், மிகை உணர்வுகளை, உள்ளப் பிடிவாதங்களை, நட்பின் மென் இழைகளை, மௌனத்தின் கோபத்தை, வார்த்தைகளுக்கான காத்திருத்தலை, உள்ளக் கிடக்கையை, வாழ்வினுள்ளே புகுவதற்கு முன்னால், காதலெனும் கருணையற்ற பேரவஸ்தையின் அகழியை, நுட்பமான, மத்தியம வர்க்க, பாத்திர முரண்களைக் கொண்ட திரைப்படங்கள் உருவாகலாயின. 
 
 
அது போன்றதொரு படம் தான் மேற்படி பாடல் இடம்பெற்ற படமான விஜயன் இயக்கிய 'சுஜாதா'. . இதனைப் பாடியவர் கல்யாணி மேனன். சத்தியமாய்ச் சொல்லுகிறேன், கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளாக இந்த இரண்டு பாடல்களை இன்னும் முதல் முறைதான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். மறக்க முடியாத ஒரு வெடிச்சிரிப்பின் கொண்டாட்ட கணத்தை அவ்வப்போது எழச் செய்து, ஞாபக நடனம் நேர்த்திப் பார்க்கும் ஆழ் குள மனது, இன்னும் முதல் முறையைத் தீர்க்கவே இல்லை. 
 
 
உன்னிப்பாகக் கவனித்தால் ஒரு பல்லவிக்கு உண்டான, மற்றும் சரணங்களுக்கு உண்டான லட்சணங்களில் சின்னதும் பெரியதுமாய் எக்கச்சக்க மாற்றங்களை இந்தப் பாடலில் எம்.எஸ்.வி முயன்றிருப்பது புரியும்.
 
"நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என் அனான் அறியேன்" 
 
இந்த இரண்டு மட்டும்தான் சமர்த்தாக ஒலிக்கும் வரிகள். 
 
"கண்கள் உறங்கவில்லை, இமைகள் தழுவவில்லை,
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை
வாராயோ" 
 
நிச்சயமாகப் பூர்த்தியாகும் ஒவ்வொரு வரிக்குப் பின்னும், சின்னதொரு சுழற்சியுடன் அடுத்த வரி இணைக்கப் படுவதையும், "வாராயோ" எனும்போது வில்லின் நுனியிலிருந்து அம்பு புறப்பட்டாற்போல் அந்தரத்தில் தனித்து விடப் படுவதையும்,  இந்தப் பாடல் ஒரு கோருவாரற்ற புதையலைப் போல வனாந்திரத்தில் உறைகிற ஒரு உணர்விலிருந்து தொடங்குகிறது.
 
 
இரண்டு வித்தியாசங்கள் ஒருங்கிணைவது ஒரு பாடலை அபூர்வமாக்கித் தருகிறது. முதல் வித்தியாசம் பாடிய கல்யாணியின் குரல். அடுத்தது இந்தப் பாடலில் உபயோகமாகியிருக்கிற இசைக் கருவிகள் மற்றும் இன்னிசைச் சரங்கள். எதையும் நீக்கியோ, மாற்றியோ, கூட்டிக் குறைத்தோ யோசிக்கவே முடியாது.
 
"அடி தேவி, உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று
இரவெங்கே உறவெங்கே உனைக் காண்பேனோ என்றும்
அமுத நதியில் எனை தினமும் நனைய விட்டு
இதழை மறைத்துக் கொண்ட இளமை அழகு சிட்டு
தனிமை மயக்கம்தன்னை விரைவில் தணிப்பதற்கு
வாராயோ"
 
மிச்சம் வைக்காமல் செருகப் பட்ட, பெயர் போன வாளேந்தி ஒருவனின் வாள் நுனி அருந்திய சமீபத்திய உயிரைப் போல, கேட்பவரைச் சிதறடிக்கிறது இந்தப் பாடல்.
 
"நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
ஒரு மேடை ஒரு தோகை 
அது ஆடாதோ கண்ணே
குழல் மேகம் தரும் தாகம்
அது நாடாதோ என்னை
சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகைச் சுமந்து கொண்டு
எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல
வாராயோ"
 
சம்பிரதாய இசை மெட்டில் இந்தப் பாடலின் மைய நகர்தலைப் பயணிக்கச் செய்யும் எம்.எஸ்.வி, இணைப்பிசைகளை அமானுஷ்யமான மனித நம்பகத்துக்குச் சற்றே வெளியில் நின்றொலிக்கிற தேவதைத் தன்மையை உட்புகுத்தி, பாடலின் உள் ஆழ இசை நரம்பாக வனாந்திர தாள இசையைப் படர்த்தி இருப்பார். வேறு யாராலும் இந்தக் கற்பனையின் அருகாமையில் கூட செல்வதற்காகாத அளவு உச்சபட்ச விஸ்வநாதம் இந்தப் பாடல்.
 
இந்தப் பாடலின் வேறொரு வடிவத்தை ஜெயச்சந்திரன் குரலில் உருவாக்கினார் விஸ்வநாதன். 
 
 
பூத்தெழுந்த தாமரைகள்
சந்தியிலே மலராகி
அந்தியிலே மொட்டாகி
சிந்தையிலே கோலமிட்டுத் 
திரும்பாமற் போயினவோ
விந்தையாய்க் கலந்துவிட்ட
விளையாட்டு பொம்மைகளே
கானலிலே மீன் வேட்டை
காற்றினிலே மாளிகைகள்
வானகத்து வீதியிலே
வலம்போகும் கற்பனைகள்
மானிடரின் வாழ்க்கையிலே
மயக்கமிகும் சொந்தங்கள்
ஆனவரை பார்த்துவிட்டேன்
அத்தனையும் கனவுகளே
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை, இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை
வாராயோ"
 
மேற்சொன்ன கல்யாணி மேனனின் உலகெலாம் வலம் வந்த அறியப்பட்ட பாடலின் செல்வாக்கு ஆலின் காலடியில் தழைக்கும் சிறு தளிர் போல் இந்தப் பாடலின் ஆண் குரல் வெர்ஷன் படத்தோடு அடங்கி ஒலித்தது. ஜெயச்சந்திர அட்டகாசம். 
 
 
எம்.எஸ். விஸ்வநாதன் நிறை ஞானி. அதிர்வற்ற நிறைகுடத்தின் பூரணம். குழந்தைகளை மகிழ்விப்பதற்காகவே மாயவித்தைகளை நாளும் செய்து காண்பித்த பேரரசன். உணவுப் பொழுதில் எதிர்பாராமல் வருகை புரிந்த அதிதிக்கு, நித்தியத்தின் பாத்திரத்திலிருந்து குறையாமல் அள்ளித் தர எப்போதும் இயைந்து விடுகிற நல் மனம் ஒன்றின் இசையுரு. இன்னிசைச் சரிதத்தின் பொற்பெயர். வாழ்க எம்.எஸ்.விஸ்வநாதன் புகழ்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...