அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 83 - வாழ்க்கை எனும் ஆல்பம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   01 , 2018  15:18:54 IST


Andhimazhai Image
ன் பால்யம் எண்பதுகளின் ஆரம்பத்தில் அமைந்தது. என் பதின்மம் தொண்ணூறுகளின் உலகமயமாக்கலுக்குத் தன் அத்தனை கதவுகளையும் திறந்து விட்டபோது நிகழ்ந்தது. காலம் என்பதே தற்செயல்தானே? தற்செயல்களின் தொகுப்புதான் வாழ்க்கை எனும் ஆல்பம். அப்போதெல்லாம்  டி.வி. ஒரு அபூர்வப் பொருள். டி.வி. பார்ப்பதற்காக வீடு வீடாகப் போன அனுபவங்கள் தனித்தவை. இப்படி ஒரு பிற்காலம் வரும், ஃபோனில் படம் பார்ப்போம் என்றெல்லாம் யாருக்குத் தெரியும்? 
 
 
 
பாடல்கள் பார்ப்பதற்கு இனியவை. குழந்தைகளாக நாங்கள் இருந்தபோது, "நிலாக் காயுது" அல்லது "பொன்மேனி உருகுது" போன்ற பாடல்கள் நாங்கள் பார்த்துவிடக் கூடாது என்று அணைக்கப்பட்டது உண்டு. உறவினர் ஒருவர் தன் வீட்டுக்கு வாரப் பத்திரிகைகளை வாங்கிச் செல்லும்போது சிலுக்கு, அனுராதா போன்றவர்களின் படங்கள் இருந்தால் அவற்றைக் கிழித்து எறிந்துவிட்டுத்தான் புத்தகத்தை வீட்டுக்குக் கொண்டுபோவார். தன்னைத் தானே தன் குடும்பத்தின் கறார் சென்ஸார் அதிகாரியாக நியமித்துக் கொண்டிருந்தார் அவர். ரேடியோவில் கூட சிலுக்கின் பாடல்களை அனுமதிக்காத ஒருவராக சிலகாலம் இருந்து சிவபாதம் அடைந்தார். அந்தக் காலத்தில் ஏ.ஸி, நான் ஏ.ஸி, காரைக் கட்டிடம், இவற்றைத் தவிர, கூரை, டெண்டு தியேட்டர்கள் என சினிமாவின் ஸ்தலங்கள் அப்போது வேறு விதமாய் இருந்தன. தியேட்டருக்கு வெளியே மனசென்னும் திரை மாத்திரமே இருந்தது பிடித்த சினிமாவை நினைத்து உருகுவதற்கு.
 
 
 
டி.வி.யில், விடியோவில் எதையாவது பார்ப்பது இன்னும் அதிகம் பொருட்செலவைக் கோரியது. சினிமா எடுப்பதைப் போலவே, பார்ப்பதும் அன்று ஆடம்பரம். ஆக, பாடல்களின் கேட்பு அனுபவம் என்பது அதிகமாகவும், பார்த்தல் குறைவாகவும் இருந்ததை உணர்ந்து கொள்ள முடிகிறது. எண்பதுகளின் மத்தியில் AKAI, FUNAI PANASONIC, JVC  போன்ற விடியோ கேஸட் ப்ளேயர்கள் முற்றிலும் வெளிநாட்டுத் தயாரிப்புகளாக, வெளிநாட்டுத் தொடர்பு எதேனும் இருந்தாலொழிய வசதி படைத்தோராலேயே அவற்றை நுகர முடியாமலிருந்தது. அந்த நேரத்தில் வர்த்தகத்துக்காக இவற்றை வாங்கி வாடகைக்கு விடும் வியாபார உத்தி தொடங்கியது. எது பின்னே வரும் யானை எது முன்னே வரும் மணியோசை என்பதிலெல்லாம் குழப்பங்கள் இருந்தன. கறார் நியாயாதிபதிகளாக அவற்றை வாடகைக்கு விடுபவர்கள் நடந்து கொண்டார்கள். கரண்ட் போய்விட்டால் அரைநாள் நீட்டித்துத் தரும் பிரச்சனையில் சர்வதேச நாட்டாமைகள் பஞ்சாயத்துப் பண்ணினார்கள். 
 
 
 
பின் நாட்களில், திரைப்படங்களுக்கென்றே பத்து சேனல்களும், முழுக்க நகைச்சுவைக்கென்றே நாலும், பாடல்களுக்கென்று ஏழெட்டும் வரப்போகின்றன எனும் ராஜவாழ்க்கை டீட்டெய்ல்ஸ் எதுவும் தெரியாமல் இரவும் பகலும் ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணிநேரம்தான் என்கிற எதார்த்தத்தை மீறி டெக்கும் கலர் டி.வி.யும் ஒரு நாள் வாடகைக்கு எடுத்து பத்துப் பாஞ்சு படங்களையாவது பார்த்துவிட வேண்டும் என்கிற கலைதாகம் டு த பவர் ஆஃப் இன்ஃபினிட்டி உடன் வலம் வந்தார்கள். நிஜமாகவே ஐம்பது பைசா வசூலித்துப் படம் காட்டியவர்களும் உண்டு. அதற்காக ஸ்டேட் லெவல் விசாரணை கமிஷன்களைச் சந்தித்தவர்களும் உண்டு என்பதறிக. 
 
 
ஒரு எம்.ஜி.ஆர் படம், ஒரு சிவாஜி படம் தாய் தந்தை ஸ்தானாதிபதிகளுக்காகவும், ரஜ்ஜனி கமல் படங்கள் மூத்த அண்ணன் வகையறாக்களுக்காகவும், ஜெய்சங்கர் தொடங்கி ப்ரூஸ்லீ வரைக்கும் பிற பொதுப் போட்டியாளர்களுக்காகவும் தேர்வு செய்யப்படும். நதியா ரேவதி இத்யாதிகளுக்கான படங்களோ விசு பாண்டியராஜன் படங்களோ அவற்றின் பெரும் வெற்றி காரணமாக அத்தியாய்ப் பூப்பதும் நடக்கும். இதில், மேற்சொன்ன சிலுக்கை எதிர்க்கும் கட்சியின் மானசீகத் தலைவர் சுய சென்சார் அதிகாரியாகிக் கேஸட்டு வாடகைக்கு விடுபவரிடம் இதெல்லாம் நீங்க பாத்துருக்கிங்களா, அந்த மாதிரி அல்லது வேற மாதிரி எதுவும் வந்துராதே, என்பதில் தொடங்கி வெளில எழுதிருக்குற பேர்ல இருக்குற படம்தான் உள்ள இருக்கும்னு நான் எப்புடி நம்புறது என்பது வரை தன் மனத்துக்குத் தோன்றிய அத்தனை உளவியல் விகாரங்களையும் கேள்விகளாக மாற்றி ஒரு அந்நியரை அவரது வியாபாரத்தில் வாடிக்கையாளராக ஆவதன் மூலமாக இரண்டே நிமிடத்தில் தன் நண்பராக்கிக் கொண்டு அடுத்த நான்கே நிமிடகளில் அவருடைய ஜென்ம விரோதியாக மாறுகிற ரிவர்ஸ் மேனேஜ்மெண்ட் உத்திகளில் ஒன்றை நடைமுறை மூலமாகச் செயல்படுத்திக் கொள்வதெல்லாம் நடந்தது. பொய்யல்ல ஸ்வாமி. தன் பக்கத்தில் இருக்கும் டர்க்கி துண்டை எடுத்து கஸ்டமரிடம் கொடுத்து, ரொம்ப சிம்பிள், அந்த மாதிரிலாம் வந்தா ஒங்க கண்ண இதால மறச்சுக்கங்க, துண்டு ஃப்ரீ என்று சொன்னவர்கள் உண்டு. அந்த டீலிங் முடிந்த நெடுங்காலம் ஆத்திரம் அடங்காமல் காளி, மாரி, நா என்ன நெனைக்கறேன்னா அந்தாள நீ கடத்தி கோத்தகிரி பெண்டுக்குக் கொண்டு வந்துடு, ஒரு ஒரு வாரம் கட்டிவெச்சு அவன் பேசறதையே ரெக்கார்ட் பண்ணி அவனைக் கேட்க வச்சி கொடுமப் படுத்துவோம், என்று விரல் நடிகர் படத்தை ப்ரிவ்யூவில் பார்த்த பழுத்த அனுபவம் வாய்ந்த விநியோகஸ்தரைப் போல வெகுண்ட கேஸட் கடை அதிபர்களும் உண்டு. 
 
 
 
இவற்றையெல்லாம் மீறி, புன்னகை பூத்து ஒரு கேஸட்டு எக்ஸ்ட்ரா குடுங்க சார், எதாவது ஓடலைன்னா ராத்திரி ஒங்கள வந்து தொல்லை பண்ணக் கூடாதுல்ல, அதுக்கும் வேணா நா வாடகை குடுத்துடறேன் என்று புன்முறுவல் பூத்த நற்குணக் கஸ்டமர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அப்படியானவர்களுக்கு வாடகையில் கன்செஷன், கேஸட்டுகளில் முன்னுரிமை, மேலும் உபரிக் காணொளிகள் எனப் பல சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. அந்த மாதிரியான நேரத்தில்தான் (நன்றாக இந்தக் காலகட்டத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்) நண்பன் ஹாரூண் வீட்டில் ஒரு அழகான மணிக்குட்டி போன்ற ஒரு விடியோ கேஸட் ப்ளேயரை வெளிநாட்டிலிருந்து அவனது பிதாவானவர் அனுப்பித் தந்திருந்தார். அடுத்த செண்டன்ஸ் ரொம்ப முக்கியம். வேறு யாரோடும் சேராதே, ரவி கூட மாத்திரம் சேரு என்று அவரது அங்கீகாரத்துக்குரிய ஆஸ்தான நண்பனாக என்னை நியமித்திருந்தார். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினம் ஒரு படம் என என் வாழ்வின் வீக்கெண்டு இன்பலோகம் அங்குதான் திறந்து கொண்டது.
 
 
 
ஹாரூன் குடும்பத்தினர் அடிப்படையில் உருது பேசக் கூடியவர்கள். ஆகவே இந்தி சரளம். அவ்வப்போது இந்திப் படங்களும் பார்ப்பார்கள். டேய் தமிழ்னா கூப்பிடு என்கிற அளவுக்கு நானொரு திராவிட பால்யன். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கூடவே திரியும் செவ்வாழையாகி அவர்கள் சிரிக்கும்போது நானும் சிரிப்பேன். அப்போதெல்லாம் வேறு கட்டம் போட்ட ட்ரவுசர் சட்டையோடு என்னிலிருந்து பிரிந்து ஒருவன் என்னைப் பார்த்துச் சிரிப்பான். பெருசா புரிஞ்சாப்ல சிரிக்கிறே.... உனக்கு ஹிந்தின்னு ஹிந்தில சொல்லக் கூடத் தெர்யாதேடா மண்டூ அப்டின்னுவான்.
 
 
 
அவன் சொன்னது மெய்தான். நிலத்துக்குப் பதிலாக நாம் இருப்பது ஒரு வாகனம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு இந்திப் படம் முடிவதற்குள் அந்த வாகனம் உத்திரப் பிரதேசத்தின் மத்தியிலோ மத்தியப் பிரதேசத்தின் ஓரத்திலோ நின்று கொண்டிருக்கிற ஒரு ஃபீலிங் வரும். தமிழைத் தவிர எந்த பாஷையும் தெரியாத எனக்கு ஆங்கிலம்தான் இங்கிலீஷ் என்பதே குத்து மதிப்பாகத்தான் தெரியும். இதில், எனக்குப் புரியவில்லையே என்பதைக் காட்டிலும் சுற்றி இருப்பவர்களுக்கெல்லாம் புரிகிறதே என்கிற வயிற்றெரிச்சல் என் தாழ்வு மனப்பான்மையை அதிகரித்தது. 
 
 
ஹாரூனின் அம்மா, ஏன் நேத்து வரல, என்று கேட்கும்போதெல்லாம் எதேதோ காரண லீவு லெட்டர்களை உற்பத்தி பண்ணுவேனே ஒழிய, மாதாஜி ஹிந்தி மாலும் நஹி என்று உண்மையை ஒருபோதும் நான் சொன்னதில்லை. ஆனாலும் இந்தி விதி இந்தி யாரை விட்டது? ஒரு தமிழ் கேஸட் ஓடாமல் தகராறு செய்ய அந்த இடத்தைக் கபட இந்தி கேஸட் ஒன்று ஆக்கிரமித்துக் கொண்டது. வேண்டா வெறுப்பாகப் பார்க்க ஆரம்பித்த அந்தப் படம், முதல் முறையாக எனக்கு மிகவும் புரிந்தது. மேலும், என் பதின்ம ஆரம்பத்தில் நான் பார்த்த ஷாலிமார் என்கிற அந்தத் திரைப்படம் இந்தி மீதான என் ஜென்மாந்திர கோபங்களை ஆற்றுப்படுத்தியது. இன்றைய விலையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வைரம் ஷாலிமார். அந்தத் திரைப்படத்தில்தான் கபூர் குடும்பத்தின் பேரை முதன் முறையாக அறிய நேர்ந்தது. ஷம்மி கபூர். 
 
 
 
சமீப காலத்துக்குத் திரும்புவோம். நாளிதழ்களிலிருந்து பண்டிகை தினங்களின் போது நம் கவனம் விலக்கம் கொள்வது இயல்பு. இரண்டாயிரத்துப் பதினோராம் ஆண்டு சுதந்திர தினத்தன்றுதான் அதற்கு முன் தினமே ஷம்மி கபூர் மறைவடைந்த செய்தி காண நேர்ந்தது. நல்ல பரிச்சயமுள்ள நண்பரொருவரை இழந்தாற்போன்ற ஓர் உணர்வு. சித்தப்பா ஷம்மி கபூரைப் பற்றிப் புகழ்கிறாரா எனத் தெரியாத ஒரு புதிய சொல்லாடலோடு தொடங்குவார். எதாச்சும் கிறுக்குத்தனம் பண்ணுவான் ஆனா நல்லா நடிப்பான் என்பார். நாயகத்துவமும் விதூஷகமும் எல்லோருக்கும் பொருந்தாது. மேலும் சொல்வதானால் இவை இரண்டையும் தனித்துவம் செய்ய முடியாது குணச்சித்திரம் என்கிற கடலில் தங்களைக் கலந்து கொண்ட நதிகள் அனேகம். கோமாளிகளும் ராஜாக்களும் பொருந்தாத் துருவங்கள். அவர்களில் வெகு சிலரே கோமாளி ராஜாக்கள்.
 
 
 
திரை வரலாற்றில் மிக அபாயகரமானதொரு மேதாவரிசை உண்டு. அதாவது அங்கீகாரமோ தணிக்கையோ விருதுகளோ இவற்றையெல்லாம் தாண்டிய விமர்சனங்களை விஞ்சிய முடிவிலிகளாகக் கலா ராட்சசத்தோடு பேருருவாய்த் தங்களைக் கட்டமைத்துக் கொண்டவர்கள் இவர்கள். சார்லி சாப்ளின் தொடங்கி ஜிம் கேரி வரை ஒரு தனித்த பட்டியல். பாலையா, எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, துவங்கி ப்ரதாப் போத்தன், கார்த்திக், முத்துராமன் வரை இப்படியான தனித்துவங்களின் பட்டியல் ஆச்சரியமானது மற்றும் சூட்சுமமானது. இந்த அபாரங்களைத் தாண்டிய வேறொரு பட்டியலில் இடம்பெறுகிற ரஜினி மற்றும் கமல் ஆகிய இரண்டு பெயர்கள் எப்போதும் செரித்துக் கொண்டே இருக்கும். சர்வசதாகாலப் பசிதீராப் புலிகளாகவே பெருவிருப்ப நாயகத்தைத் தாண்டிய ராஜகோமாளிகளாகவும் அவ்விருவரையும் முன்வைக்கும். 
 
 
ஆஜா ஆஜா பாடல் ஷம்மியின் ஒரு சூப்பர்ஹிட். ஷம்மி பாணி நடனத்தை வலுவாய் வேரூன்றித் தந்த பாடலும் கூட. இப்படியான பாடல்கள் இந்திய நிலமெங்கும் படர்ந்தன. ஷம்மி செல்வந்தத்தின் வெள்ளந்தித் தன்மையை அபாரமாக வெளிப்படுத்தியவர். கண்மூடிப் பணக்கார அப்பாவிக் கதாபாத்திரங்களில் அறுபதுகளுக்குப் பின்னால் நடித்த அத்தனை மொழி அவ்வளவு நாயகர்களையும் நிறுத்திப் பார்த்தால் எல்லா நதிகளின் பொதுவாந்திரக் கடலாக ஷம்மி கபூர் தெரிவார். காதலின் தோல்வியைக் காத்திருத்தலின் பிரார்த்தனையாக மாற்றியவர் ஷம்மி கபூர். அழுகையும் சிரிப்பும் கலந்த விகசிப்பை மண்டியிடுதலின் மொழியாக மாற்றியவர். மனம் திருந்துகிற குமாரத்திகள் ஷம்மி கபூர் வசம் சரணடைகிறார்கள். தன் பேரன்பு எனும் கோட்டின் ஒரு புறத்தே அவர்களை அணைத்துக் கொண்டார் ஷம்மி கபூர். 
 
 
 
ஒரு பாடலுக்குச் சற்று முன்னால் ஒற்றை ரோஜாவை ஏந்தியபடித் தன்னுடைய அன்பைப் பாராமுகம் செய்வதை முறையிட்டுக் கொண்டு ஒரு காலை நிலத்திலூன்றி மற்றதை முழங்காலிட்டு ஆட்டக்களத்தின் எல்லையில் தோல்வியின் பூர்த்தியை ஒத்திப் போட்டபடி ஒரு பெனால்டி கார்னருக்கான பரிதவிப்பில் இருந்தவரும் அதே ஷம்மி கபூர்தான். மாயன் கொய்த மாமலர்தான் யாமும் கூந்தற் சூடினாற் போல் கண்முன் தோன்றுகிற கல்லோவியக் காட்சி ஒன்றில் ஒன்றிப் போன பித்து மனம் நம்புமாம், நம்புவதே நிசமென்று. அதுபோலவே ஷம்மி கபூர் காதல்களில் வெல்லும்போதெல்லாம் பல ஆயிரம் கண்கள் ஓரம் துளிர்த்து அவரை வாழ்த்தின. மென்மையும் கம்பீரமும் ஒருங்கமைந்த அபூர்வம் ஷம்மி கபூர். 
 
 
 
தன் பெருமை கொண்ட குடும்பத்தில் தனக்கு முன்பின் எழுந்த யாரையும் போலியும் பிரதியும் செய்யாப் பெருமகன் ஷம்மி கபூர். பல வெற்றிகரங்களுக்குப் பின்னால் சூசகமாய் மாபெரும் திட்டமிருக்கும், இல்லாவிடில் தோல்வியின் அச்சமிருக்கும். ஷம்மி தான் தோற்றுவிடக் கூடாது என்ற அச்சத்தைத் தன் கடைசிப் படம் வரை கைக்கொண்டவர். ஒரு வகையில் கோலம் அழிவது என்பது எந்த ஒரு நடிகனுக்கும் வரமும் சாபமும் இரண்டும் ஆகும். ஒரு கதாபாத்திரத்திலிருந்து அவன் திரும்புவதற்கு ஒருமித்த ஒரு கோலம் எப்போதும் அவசியம். அப்படிப் பார்க்கையில் காணவாய்க்கிற அத்தனை வெவ்வேறுகளும் ஒரே என்கிற முரணையும் சதா நிரடிக் கொண்டே இருக்க வேண்டும்.
 
 
தன் ஆன்மாவை உருக்கி இந்தப் பாடலில் நடித்திருப்பார் ஷம்மி. அவரது ரசிகர்களுக்குப் பெருவிருப்பப் பாடல்களில் இது முக்கியமான ஒன்று.
 
 
 
ஐம்பது வருடக் காலம் மிக ஒல்லி என்பதில் ஆரம்பித்து மிகவும் பருமன் என்பது வரை எத்தனையோ உருமாற்றங்களை யாவரைப் போலவே ஷம்மியும் சந்தித்தார், என்றாலும் தான் நடித்த அத்தனை கதாபாத்திரங்களுக்கும் தன் உயிரைக் குழைத்து நியாயம் செய்தார் ஷம்மி கபூர். எண்ணிக்கையில் அதிகம் படங்கள் நடித்தவர் இல்லை என்றாலும் ஷம்மி கபூரின் படங்கள் அவருடைய ஆடல் பாடல் காதல்களுக்காக எப்போதும் நினைவு கூரத் தக்கவை. ஷம்மி தனித்த ஒரு குரலுக்குச் சொந்தக்காரர். மேலை நாட்டு நடிகர்களின் சில பாணிகளைக் குழைத்து தன்னுடையதை வகுத்துக் கொண்டவர் ஷம்மி. அதிகம் வில்ல நடிகர்களின் முகபாவங்களை, குரலோட்டங்களைப் பிரதிபலித்தார். ஷம்மியின் ஒரு நூறு பாடல்கள் என்கிற கேஸட்டை shemaroo வெளியிட்டிருக்கிறது. திகட்டத் திகட்ட கானங்கள். நளினத்தின் கலைஞன் ஷம்மி கபூர் என்பதை உணர்த்துகின்றன. சசி, ரிஷி, ராஜ்கபூர் தொடங்கி கபூர் குடும்பத்தில் நேற்று மலர்ந்தது கூட அசுர சாட்சியம்தான் என்றாலும் லேசாய் நிறம் தப்பிப் பிறழ்ந்த மலர் ஒன்று எதுவுமே செய்யாமற் மிளிர்ந்தாற்போல் தனித்தவர்களின் கூட்டத்தினுள் தனிக்கிறவர் ஷம்மி.
 
 
ஷம்மி கபூரின் பாடல்கள் காலம் கடந்து நிற்கும் வெகு சில புதினங்களின் காவியத் தன்மைக்கான காரணங்களைப் போல ஆய்வதும் அறிவதும் கடினம் என்பது அவை பற்றிய முதற்சொல்லாக இருக்கக் கூடும். ஷம்மி கபூர் என்பது ஒரு பெயரன்று, மேற்சொன்ன காரணமும் என்பது புனையத் தேவையற்றப் போதுமான நிஜம், என்பதும் உணரவாய்க்கிறது. வாழிய அவர் புகழ். 
 
 
 
[ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்.]


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...