???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சக்திவாய்ந்த குரல்கள் அமைதியாக இருப்பது ஏன்? ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி 0 தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் 0 பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம் 0 ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் 0 கீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு! 0 மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் 0 டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 0 தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை 0 தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் 0 மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது 0 ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். 0 இதுதான் புதிய இந்தியாவா?: குலாம் நபி ஆசாத் கேள்வி 0 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது! 0 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 98 - முன்பிருந்த வானம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   04 , 2018  01:13:47 IST


Andhimazhai Image

மயக்கவியல் என்ற பெயரே எனக்கு மயக்கத்தைத் தந்தது.திருமணத்திற்குப் பிறகு மருத்துவத் துறையை நெருக்கமாய்ப் பார்ப்பதற்கான வாய்ப்பு உருவானது தற்செயல்தான்.மனையாள் மருத்துவர் என்பதால் அதற்கே உண்டான மணம் கமழும் தினங்கள் வாழ்வெலாம் வந்து கொண்டிருக்கின்றன.அனெஸ்தீஷியா என்ற துறையை தமிழில் மயக்கவியல் என்று சொல்வதே அமுதரசம்.சம்மந்தமே இல்லாமல் புகைச்சுருள் வளையங்களோடு வேறொரு காலத்திற்குள் சென்று அமர்ந்து கொள்கிறது மனம்.அவனைப் பற்றிய நினைவுகள் அடங்கிய பெட்டியைத் திறந்து கொடுத்திருக்கிறது.ஞாபகம் கொல்ல ஞாபகம் கொள் என்றபடியே மறைந்தோடுகிறான் மனசுக்கிழவன்.

 

எப்போதும் மயக்கத்திலேயே இருக்க முடியுமா..?முட்ட முட்டக் குடிப்பவர்களை விடவும் காலையில் தொடங்கி இராத்திரி வரைக்கும் அவ்வப்போது சிறிது சிறிதாக டாப் அப் செய்து கொள்வது தான் குடியின் க்ரூரமான உச்சம். இப்படியானவர்கள் பெரும்பாலும் திரும்பி வர விருப்பமற்ற பாதாளப் பாதையில் தங்களுக்கான விளக்குகளைத் தாங்களே அணைத்தவண்ணம் பயணிப்பார்கள். உயிரைத் திரவத்துக்கு ஈடாய்க் கொடுத்துக் கிறக்கத்தைப் பெறுவதோடு முடிவடையும் பூர்த்தியற்ற சரிதங்கள் எக்கச்சக்கம்.

 

 

அப்படித் தான் மாதவமூர்த்தி இறந்து போனார். அவரது மரணத்துக்கு மொத்தமே ஏழெட்டு பேர்கள் தான் வந்திருந்தார்கள். தெரு முனை அபுபாய் சலிப்பாகச் சொன்னார். இனிக் கணக்கில் எழுதிக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கடனுக்கு டீ கேட்பதற்கு மூர்த்திக்கு பதிலாய் இன்னொருவன் வரும் வரைக்கும் தொந்தரவில்லை. தேநீர்க் கடை நடத்துவதும் கஷ்டமான வினைப்பாடு தான்.அபு பாய் சம்சாரி.பெரிய குடும்பத்தை இறைவனுக்கு அஞ்சி வாழ்வித்து விடுவதற்காக அவர் டீ பட்டறையைத் தான் உபாயமாய்க் கொண்டார்.பெருஞ்சிரிப்போடு சொல்வார் மருமகனே இது என் சர்வீஸ்ல ஒரு லட்சத்தி இருபதாயிரமாவது டீ...இந்தாங்க சாப்டுங்க என்பார்.இப்படிக் கணக்குச் சொன்னதும் சூழல் அவர் புறம் திரும்பும்.அந்தச் சலனத்துக்காகத் தான் அப்படிச் சொல்வதே.அதற்கும் சிரிப்புத் தான்.சுமைப்பொழுதுக் களைப்பின் நிச்சயிக்கப்பட்ட வருகைகளை சமாளிப்பதற்கான தந்திரமான செயல்பாடு தான் பாட்டுப்பாடுவது என்பார்.மலைச்சரிவுகளில் ஏறும் போதும் இறங்கும் போதும் சுமையாளிகள் வேலை நேரத்துடனும் சுமக்கிற பாரத்துடனும் ஒருங்கே செய்து கொள்கிற சமரசத்திற்கான வழிபாடாகவே பாடல்களைச் சுட்டுவார்.அபு பாய் கேரள தமிழக ஒட்டுப் பிராந்தியத்தில் எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்தவர்.ஊருக்கு வந்த பொழுதொன்றில் திடீரென்று திருமணம் ஏற்பாடானது.வீணையோ இல்லையோ அபுபாய்க்கு சம்சார வாழ்க்கை என்பது மலைச்சரிவுகளில் அல்ல என்று மட்டும் தெரிந்தது.ஊரிலேயே தங்கி விட்டவர் வளர்த்தெடுத்தது தான் அந்த தேநீரகம்.

 

மருமகனே என்று எல்லோரையும் அழைத்து விட மாட்டார்.குறிப்பிட்ட சிலரை மட்டும் விளிப்பதற்கான சொல்தான் அது. பறவைகளுக்குப் பல தலங்கள் பல கிளைகள் என்றாகிறாற் போல் குறிப்பிட்ட பருவகாலத்திற்கென்று சிற்சில தேநீரகங்கள் அமையும்.அப்படி எங்களுக்கென்று அமைந்த ஒன்று தான் அபுபாய் கடை.கடைக்குப் பக்கவாட்டில் மாபெரிய வேப்பமரம் ஒன்று இருந்தது.இயற்கையைப் போன்ற கச்சிதமான கலை இயக்குனர் கிடையாது.அந்த மரத்திற்கென்று பெருத்த ஞாபக செல்வாக்கு எங்கள் கதைகளில் உண்டு.இன்னமும் திருநகர் என்ற ஊரின் கலைந்த சித்திரங்களில் அவ்வப்போது அந்த மரம் மாத்திரமாவது வந்து வந்து போகின்றது.

 

 

மாதவ மூர்த்தியின் மனைவி தன் குழந்தைகளோடு தாய்மண்ணுக்குச் சென்றுவிட அவருக்கு சொந்தமான வீட்டை நிர்வகிக்க மூர்த்தியின் ஒன்றுவிட்ட தம்பி மணி என்று பெயர்தாங்கி வந்து சேர்ந்தார்.ஊர் ஊராகச் சென்று திரும்புகிற விற்பனை பிரதிநிதி வேலை பார்த்த மணிக்கு குடி புகை என எந்தப் பழக்கமும் இல்லை.பார்க்க அச்சு அசலாக சற்றே இளமைப்படுத்திய மாதவமூர்த்தி போலவே இருந்தபடியால் எங்களுக்கெல்லாம் அவரைப் பார்க்கும் போதெல்லாம் இனம் புரியாத வாஞ்சை தோன்றிற்று.இல்லாமற் போனவர்களின் பிரதிகளுக்குச் சொரிவதற்கென்றே தனித்த மலர்களை உற்பத்தி செய்துவிடுவது மனித மனதின் விசித்திரங்களில் ஒன்று.ஆறேழு மாதங்கள் கழித்து எங்களில் ஒருவராகவே மணி ஆகிப்போனார்.

 

மழைக்காலத்தின் தொடக்கம் அலாதியானது.மழை என்பது நீர்மயமாக பொதுப்புத்தியில் உறைந்திருந்தாலும் கூட மெல்லிய தூறல் பின் வலுத்த மழை அதன் பின் பேய்மழை எல்லாவற்றுக்கும் அப்பால் ஓய்கிற மழை என்று சொல்லிக்கொள்ளும் விதத்தில் மழையின் எல்லா வருகைகளும் புரிபடுவதே இல்லை.அந்த முறை மழைக்காலம் யூகிக்க முடியாத பேய்மழையாக எடுத்த எடுப்பிலேயே தன் ஆட்டத்தின் உச்சத்தை நோக்கி விரைகிற வித்தகனின் அவசரத்தோடு தொடங்கிற்று.அபுபாய் கடையை ஒட்டி மரம் இருந்ததால் இடி விழுந்து மரம் பற்றிக்கொள்ளுமோ என்றபயத்தை செந்தில் வாய்விட்டே சொல்லிவைக்க அதற்கப்பால் மழை தொடங்கினால் எங்களை எல்லாம் விரட்டுவதிலேயே அபுபாய் குறியாக இருந்தார்.அன்றைக்கும் கெளம்புங்க என்று பத்தி விட்டார்.சிங்கப்பூர் சென்றுவிட்ட செந்திலைக் கவுண்டமணியின் மனபாவங்களோடு மனமுழுக்க வசவாடியபடி அடுத்த இடமான நஸீம் ஒர்க் ஷாப்பின் வாசற்படியில் அமர்ந்தோம்.

 

 

மழை பார்த்தல் மனிதனுக்கு இயற்கை வழங்குகிற சொற்ப கடவுள்தனங்களில் ஒன்று.,மலையுயரங்களில் பறவையாக முடியாதவன் அதற்கருகாமை வரை சென்று பார்ப்பதைப் போலவே மழைகளில் மீனாக முடியாதவன் அதற்குச் சற்றே நெருக்கமாய்ச் சென்று திரும்புகிறான்.அப்படித் தான் மனசு முழுக்க தன்னை நிரப்பி அயர்த்திக் கொண்டிருந்தது மழை.

 

 

அருண் விடலைத் தனமாக கைக்குக் கிடைத்த தகரத்தை எடுத்து டொக் டொக்கென்று தட்டினான்.ஒழுங்கான ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை என்பதால் அதை மறுபடி தரையில் விசிறினான்.அதைத் தன் கைகளில் வாங்கிய மணி அனாயாசமாக ஒழுங்கான இசைக்குறிப்பொன்றை தாளபூர்வமாக வாசித்ததும் நானும் பரணியும் அசந்து போனோம்.சரி எதோ தட்ட என்னவோ சப்தம் என்று ஒதுக்கி விட முடியாத ஒன்றாக முழு இசை லட்சணத்தோடு அந்த வாசிப்பு இருந்தது.

 

 

நண்பா உங்களுக்கு வாசிக்கத் தெரியுமா என்றான் பரணி உலர்ந்த குரலில் லேசாய் சிரித்தபடி அண்ணனோட ட்ரூப்ல நான் தான் ட்ரம்மர் என்றார் மணி. செம்பட்டை கேசமும் வெளிறிய கண்களும் கூர்மையான நாசியும் நாலு நாள் தாடியுமாக இதற்கு முன்னால் சகஜ சாதாரணமாக எடுத்துக் கொண்ட ஒருவனது தோற்றத்தை உற்று நோக்கத் தலைப்படுவது அவனது செய்கைக்கு அப்பால் என்பது இயல்பான பரிவல்லவா? முன்பிருந்த மணி யாரோவாக இருந்தான். இப்போதைய மணியை இன்னுமின்னும் அதிகதிகம் அறிந்து கொள்ள வேண்டும் என்று நானும் பரணியும் தவித்தோம்.

 

 

இப்ப ட்ரூப் இருக்கா என்றான் அருண் அதற்கு சோகையாய் சிரித்தவாறே இல்லைங்க ஆளுக்கொரு வேலைன்னு சிதறிட்டோம்.அண்ணன் செமை டாலண்டான ஆள்.பத்து இன்ஸ்ட்ருமெண்ட் வாசிக்கும்.எங்களுக்கெல்லாம் குருன்னு சொல்லலாம்.ஃப்ரெண்டு சத்யான்னு அவன் பாட்டெழுதுவான்.சினிமால வாய்ப்புக்காக கஷ்டப்பட்டுக்கிட்டே மெல்லிசைக் குழு ஒண்ணு ரன் பண்ணோம்.அஞ்சு வருசத்துக்கு மின்னாடி வைரஸ் காய்ச்சல் வந்து அண்ணன் தன்னோட வாய்ஸ் சுத்தமா இழந்துட்டாரு.முந்தி மாதிரி பேச முடிஞ்சதே தவிர பாடவே முடியாம போயிட்டது.அவர் இல்லாம நாங்கள்லாமும் வெவ்வேற ஃபீல்டுக்கு மாறிட்டம்.ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு என்னையறியாம தாளம் தட்டிருக்கேன்.என்று தன்னையே அதிசயித்துக் கொண்டவர் கண் ஓரங்களில் மிக லேசாய் இரண்டு நீர்த்துளிகள் தொடக்கத்திலேயே முடிந்துறைந்து நின்றதைப் பார்த்தேன்.

 

 

இப்ப எங்க இருக்காரு என இயல்பாகக் கேட்ட அருணை பரிதாபமாகப் பார்த்த மணி ஏங்க மாதவண்ணனைத் தெரியாதா உங்களுக்கு என்றார்.சத்தியமாக நான் உள்பட எல்லாருமே நொறுங்கிப் போனோம்.எங்கள் மத்தியில் உலவி வாழ்ந்து மெல்லத் தன்னை மதுவுக்குள் ஆழ்த்திக் கொண்டு உயிரற்றுக் கதையை முன் கூட்டி முடித்துக் கொண்ட மாதவமூர்த்தி அண்ணன் ஒரு குரல்மேதை என்று அறியக் கிடைத்த அந்தக் கணம் வரை அவரைப் பற்றிய அத்தனை மதிப்பும் பன்மடங்கு உயர்ந்து கலங்கினோம்.

 

 

ஒருதலை ராகம் ஷங்கர் மாதிரியே இருப்பாரு ட்ரெஸ்ஸிங்க்ஸ் எல்லாமும் அப்படியே செய்வாரு. மைக்கை கையில் பற்றி மேடைல வர்ற நிமிஷம் விஸில் பறக்கும்.எங்க ஊர்ப்பக்கம் அவர் பெரிய ஸ்டார் சிங்கர்ங்க பரணி.சீட்டு வந்துகிட்டே இருக்கும்.மூணு மணி நேரம்னு தொடங்குற நிகழ்ச்சியை கெஞ்சிக் கதறி நாலரை அவர் தாண்டி முடிப்பம்.ஹூம் என்றார்.

 

 

சின்ன வயசுலேருந்து அவர் தன் உசுரா நினைச்சது பாட்டைத் தான்.எல்லாத்தையும் விட அவரு அச்சு அசலாப் பாடுற ஸ்பெஷல் பாட்டு ஒண்ணு இருக்கு.அதை அனேகமா எல்லா நிகழ்ச்சியிலயும் கடைசியாப் பாடுவாப்டி.கூட்டம் அப்டியே உறைஞ்சிடும்.அதுக்கு மேல எதுவுமே இல்லைன்றாப்ல தோணும்.அவரோட செல்லம் அந்தப் பாட்டுத் தான்.என்று லேசாய்க் கம்மிய குரலைச் செயற்கையாக செறுமிக் கொண்டே  ".அந்தப் பாட்டு தன்னை விட்டுப் போனதை அவரால ஒத்துக்கிடவே முடியலை.வேற எந்த வேலையிலயும் நிலைக்க மனசு வர்லை.தூங்கி எழுந்திருக்கிற ஒருத்தனை திடீர்னு நீ இனிமே நீ கிடையாது அப்டின்னு அவனோட அடையாள மொத்தத்தையும் அழிச்சிட்டா கூட அவனால தாங்கிக்கிட முடியும்.அவன் உசுரா நினைச்ச ஒரே ஒண்ணை மட்டும் பறிச்சுக்கிட்டா என்னா பண்வான்..?அண்ணன் தன்னைத் தானே அழிச்சிக்க ஆரம்பிச்சது அதுக்கப்பறம் தான் .சொல்றதானா அவருக்கு குடிச்சா பிடிக்காது.எத்தனையோ பேரை அதட்டிருக்காரு..கடைசியில அவரே ஆரம்பிச்சி தன்னை அழிச்சிக்கிட்டாரு.இதுல யாரை குறை சொல்றது யார்ட்ட ஞாயம் கேக்குறதுன்னு தெர்ல என்றபடியே நின்று போன மழையின் திசையில் அப்பறம் பார்க்கலாங்க என்றபடியே எழுந்து நடந்தார். அருண் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றான் நெடுநேரம் நானும் பரணியும் அங்கேயே அமர்ந்திருந்தோம்.

 

பரணி பெரிய மௌனத்தை கிழித்தபடி சொன்னான்.""""பூங்கொடிதான் பூத்ததம்மா"""""  பாட்டு ஓட்றப்பல்லாம் அதோட வார்த்தைகளை சப்தமே இல்லாம முணுமுணுத்துக்கிட்டே இருப்பார் நண்பா..எத்தினியோ தடவை பார்த்திருக்கேன். பாடத் தெரியாத சாமான்யன் செய்றாப்ல அதை ரொம்ப ஈஸியா எடுத்துக்கிட்டிருந்திருக்கேன்.இப்பத் தாண்டா தெரியுது தான் பாடுன அதே பாட்டைப் பாட முடியாமப் பாடிட்டிருந்திருக்காருன்னு..ரெக்கை ரெண்டையும் பிச்சு போட்ட பிற்பாடு பறவையோட நெனப்புல மட்டும் அவ்ளோ பெரிய வானம் மிஞ்சுறது வக்கிரம்டா ரவி..தான் யாருன்றதைக் கூட மறந்திட்டு இருந்திரலாம்.ஒருத்தன் மனசுக்குள்ளேருந்து அவனோட பாட்டுக்களை மட்டும் பிடிங்கிக்கிறது எந்த வகையிலடா நியாயம்..? பாவம்டா என்றான்.

 

மாதவமூர்த்தி ப்ரியமான பாடலைத் தொடர்ந்து தன்னைத் திறந்து கொண்டு தானே வெளியேறிச் சென்றிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.

அது தான் சரி.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...