???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா! 0 தமிழகத்திற்கு சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்! 0 சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்! 0 தமிழகம்-புதுவையில் முதல் நாளில் 23 பேர் மனுத்தாக்கல்! 0 ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற கிருஷ்ணசாமிக்கு அனுமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன்மயக்கம் - 64 – விஜய் வசியம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   28 , 2017  23:58:43 IST


Andhimazhai Image

தனக்குத் தானே பாடுகிறவர்களைப் பற்றி என்றைக்குமே ஒரு பிரமிப்பு..சொந்தக் குரலில் பாட ரொம்ப நாளா ஆசை என்று பாடிப் பார்த்த ஷாலினி சின்னவயதிலேயே தேசியவிருதெல்லாம் வாங்கிய குழந்தை நட்சத்திரம். வளர்ந்து பெரிய மனுஷியாகி கதாநாயகியாய்ச் சொக்க வைக்கும் போது அவர் சொந்தக் குரலில் அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற பாடலைக் கேட்கும் போது அப்படி ஒன்றும் தொழில் முறைப் பாடகியர் போல இல்லை என்று ஒரு எண்ணமும் இன்னொரு எண்ணம் அதுக்கென்ன வித்யாசமா இருக்குதில்ல என்றும் தோன்றியது.ஜெயலலிதா பாடிய அம்மா என்றால் அன்பு பாடலை என் அப்பா எப்போதும் சிலாகிப்பார்.அப்பாவுக்கு அதிமுக வெறி எம்ஜி.ஆர் வெறி இரண்டும் வேறாகக் கனிந்து ஜெயலலிதா விஸ்வாசமாக மாறியது.புரட்சித் தலைவி என்ற சொல்லாடலுக்கு அத்தனை பொருத்தமானவர் என்று ஆரம்பித்து பல பாயிண்டுகளைப் பேசுவார்.அவர் காலமான 1997 ஆமாண்டு வரையிலான அரசியல் நகர்வுகளில் ஏற்ற இறக்கங்களில் எதைப் பற்றிய கவலையும் இன்றி ஒரே விடாப்பிடிவாதமாக அப்பா சிரத்தையாய் பக்தி காட்டினவர்.அவரது நம்பகப் பிடிவாதங்களில் ஒன்றிரண்டைத் தவிர எனக்கு எதுவுமே ஏற்புடையதாக இருந்ததில்லை.அப்படி நானும் ஏற்றுக்கொண்டவற்றில் ஒன்று தான் ஜெயலலிதாவின் குரலில் பாடப்பட்ட அம்மா என்றால் அன்பு எனும் பாடலின் ஜொலிப்பு.என்ன ஒரு குரல்வளம்?

 

கமலஹாஸனைப் பார்த்து ரஜினிக்கும் அந்த ஆசை வந்ததா எனத் தெரியவில்லை.ஒரே ஒரு பாடலாக அடிக்குது குளிரு என்ற பாடலை அவர் தேர்ந்தெடுத்தார்.சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பான மன்னன் படத்தின் ஒரே திருஷ்டிப் பொட்டு என்றே அந்தப் பாடலை சொல்லலாம்.ஒரு முக்கியமான ரொமான்ஸ் சிச்சுவேஷனை ஏதோ பொம்மையை உடைத்து விட்டுத் தானும் அழுது வெறிக்குமே பிடிவாதக் குழந்தை அதனைச் சமாதானம் செய்து வைப்பதற்காகக் கொடுக்கப் படுகிற பொய் வாக்குறுதிகளில் ஒன்றைப் போலவே சரி நீ பாடு.நல்லா தான் பாடுறே என்று வழங்கப்பட்டதா எனத் தெரியவில்லை.ரஜினி அதனைத் தவிர்த்திருக்க வேண்டும் என்பது என் உள்பட பல்லாயிரம் ரசிகர்களின் மனக்குமுறலாகவே இருந்தது.இன்னொரு பாட்டு வேணாமே ப்ளீஸ் என்று காற்றை நோக்கிக் கரம் குவித்துக் கதறியிருக்கிறோம்.அந்த அளவுக்கு அந்தப் பாடலை வேகாத முறுக்கை விட்டேனா பார் என்று கடித்து நொறுக்கிக் கபளீகரம் செய்திருப்பார் ரஜனி.

 

அந்தக் காலகட்டத்தில் வேறொரு குரல் சொல்லவேண்டியதாகிறது.எதிர்பாராத தருணத்தில் ஒரு பாடலின் மகாவரவு அந்த ஆல்பத்தையே அதிரிபுதிரியாக்கியது நிகழ்ந்தது.அமரன் என்ற படம் ஆதித்யனின் தோற்றுவாய்.அதன் எல்லாப் பாடல்களையுமே பெரிதும் விரும்பினார்கள்.என்றாலும் அந்தப் படத்தின் மகுடம் வெத்தலை போட்ட ஷோக்குல நான் கப்புனு குத்துனேன் மூக்குல அட வந்தது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம் என்ற பாடல்.அனேகமாய்த் தமிழ்த் திரையில் பெரும் வெளிச்சத்தைக் கோரிய முதல் கானா என்றும் இதனையே சொல்ல முடியும்.கானா பாடல்களின் மையத் தன்மையான எளிமையும் வாழ்விலிருந்து சமரசமற்று எடுத்துக் கோர்க்கப் படுகிற சொற்களும் இந்தப் பாடலில் அவற்றின் வண்ணம் அழியாமல் இடம்பெற்றன.கார்த்திக் பாடிய இந்தப் பாடல் எத்தனை பேர்களால் எத்தனை முறைகள் பாடப்பட்டது என்பதைக் கணக்கிட முடியாது என்னும் அளவுக்கு ஒரு மாபெரும் ஹிட்.அதன் பின்னர் கார்த்திக் ஒன்றிரண்டைப் பாடினார்.அவ்வளவு எடுபடவில்லை.

 

திரையுலகின் குரல்களில் சந்திரபாபு  கமல் வடிவேலு ஆகிய மூவருக்கும் புலன் மயக்கத் தனி பூஜைகள் உண்டு என்பதால் இங்கே தவிர்க்கலாம்.இவர்களைத் தவிர்த்து மனோரமா ஒரு அழகான குரலுக்குச் சொந்தக்காரர் டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே என்ற பாடல் தமிழ் தெரியாதவர்களையும் முணுமுணுக்கச் செய்தது.தமிழின் ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகை என எந்த சந்தேகமும் இல்லாமல் மனோரமாவைச் சொல்லமுடியும்.அதற்கு அவரது குரலும் முக்கியக் காரணி.பேசும் அதே குரலைப் பாடலுக்கு பெயர்க்கையில் எது ப்ளஸ்ஸோ அதுவே மைனஸ் ஆகும்.அந்த நெருப்புவளையத்தை அனாயாசமாய்த் தாண்டி இருப்பார் ஆச்சியம்மா.

 

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு இணைந்து ரோகிணி பாடிய(ரோகிணி இந்தப் பாடலில் இடம்பெறுகிற வசனக்குமைதல்கள் அத்தனையும் பேசி இருப்பார்.)சின்ன வாத்தியார் படத்தில் இடம்பெற்ற கண்மணியே பொன்மணியே சொல்லுவதைக் கேளு பாடல் ஒரு அபாரம்.இப்படி நடிகர்களின் வசனங்கள் இடம்பெறுகிற பாடல்கள் அதிகதிகம் உண்டு என்றாலும் அவற்றில் வெகு சில காலங்கடந்து காவியத்தன்மையோடு நிலை பெற்றன.அப்படி ஒரு பாடல் கனாக்காணும் கண்கள் மெல்ல என்று ஆரம்பிக்கும் அக்னிசாட்சி பாடல்.இதனுள் சரிதாவின் வசனங்கள் வெகு பிரபலம்.கமல்ஹாசனோடு இணைந்து கோவை சரளா பாடிய மாறுகோ மாறுகோ மாறுகயி பாடலும் அரிதாரத்தைப் பூசிக்கொள்ள ஆசை பாடலில் நாசரும் பங்கேற்றது அபாரங்கள்.அதிலும் அவதாரம் படப் பாடல்களில் எது நாசர் குரல் என்றே அறியவியலாத வகையில் தன் குரலால் மந்திரித்து இருப்பார் இளையராஜா.

 

தனுஷ் பாடுகிறார்.அவரது குரலிலும் பாடல்கள் வெளியாகி உள்ளன.அவற்றில் ஒய் திஸ் கொலைவெறி என்ற பாடல் அட்டகாச ஹிட்.,சிவகார்த்திகேயனும் பாடுகிறார்.இவர்களெல்லாம் பாடுவது தன்விருப்பம் என்ற அளவில் கடந்து செல்ல வேண்டியவையே.எஸ்.பி.பாலசுப்ரமணியம் மலேசியாவாசுதேவன் மனோ எனப் பாடகர்கள் நடிக்க வந்தபோது அவற்றையும் அவரவர் விருப்பம் என்று தானே கடந்து செல்ல நேர்ந்தது.?

 

சொந்தக் குரலில் பாடும் நடிகர்கள் (கமல் சந்திரபாபு நீங்கலாக ) ஒரே அத்யாயத்தில்...

பாடும் ஆசை ஏன் வருகிறது?அதென்ன பாடல் மீதுபெரும் ஈர்ப்பு?எஸ்பீபி ஹீரோ மலேசியா வில்லன் மனோ காமெடி கதாபாத்ரன் என்பதற்கான பழி வாங்கலா ரஜினி தனுஷ் முதலானவர்களின் பாடகாவதாரம்?

சரி....மிஸ்டர் சூப்பர் வாய்ஸ் யார்?ஒரு தொழில்முறைப் பாடகருக்கு இணையான அதிரிபுதிரி குரல் யாருடையது?

 

    விஜய்.விஜய்.விஜய்

 

அவரது குரல் செமி மெடாலிக் என்றாலும் அற்புதமான ஒரு மெல்லிசைக்கு வசப்படுகிற குரலாகவும் அமைந்தது ஆச்சர்யம்.நம்பர்ஸ்க்காக சிலபல பாடல்களை விஜய் ஆரம்ப காலத்தில் பாடினார்.அவற்றில் சிலபல எடுபட்டன என்றாலும் இவையெல்லாம் தனக்கான குவளைத் தேநீர்கள் அல்ல என்பதை உணர்ந்து பாடுவதைக் குறைத்துக் கொண்டார்.அதன் பின்னர் தனக்கு எது தகுமோ அவற்றை மாத்திரம் தேடிப் பாடிவருகிறார்.விஜய் குரலின் வகைமையற்ற தன்மையே அவரது மகாபலம்.எந்தப் பாட்டைப் பாடினாலும் ஹிட் அடிக்கும் என்று முன் தீர்மானிக்கிற அளவுக்கு செறிவான குரல் அவருடையது.

 

விஜய் பாடிய பாடல்களில் தனித்துத் தோன்றும் சிலவற்றில் இந்த பத்ரி படப் பாடலை முதன்மையானதாக மொழிவேன்.ரமணகோகுலா இசைத்து தமிழில் விஜய் பாடிய இந்தப் பாடல் என்றும் இனிக்கும் வஸ்தாதுப் பாடல். அழகான மெலடி டைப் எள்ளல் பாடல். இதன் லேசான ஜிப்ஸித் தன்மை எங்கேயோ கொண்டு சென்று விதைத்து வருகிறது கேட்கும் மனதை. ஆரம்ப டேக்கிங்கே அதிரி புதிரியாக ஆரம்பித்திருப்பார் விஜய் என்னோட லைலா வராளே மெய்லா சிக்னலே கிடைக்கலை கிடைக்கலை நெஞ்சுல கூலா ஊத்துது கோலா தாகம்மே அடங்கலை அடங்கலை என்ற வரி முடிந்ததும் ஒரு வெட்டு அபாரமாய் இனிக்கும் . வசனத்தைப் பாடலாக்கினாற் போன்ற செமி ஜிப்ஸி பாடல் இது. இதன் நடுவில் வருகிற ஆங்கில விவரணைகள் இன்னும் அமுதமாக இனிக்கும்மொத்தப் பாடலுமே நூறு தடவை கேட்டாலும் அலுக்காத சலிக்காத ஐஸ்மழை. ஒரிஜினல் தெலுங்கு மூலமான தம்முடுவில் பவன் கல்யாண் நடித்த வேடத்தில் தமிழில் விஜய் நடித்த பத்ரி ஒரு எவர் டைம் ஜாலி படம்.

 

பாடல் தேர்வு பற்றியெல்லாம் எந்தவிதமான முன் தீர்மானமும் கொண்டு இருந்தார் எனச் சொல்வதற்கில்லை.என்ன கிடைத்ததோ அதைப் பாடுவது என்பது கொள்கையற்ற கொள்கையாக இருந்திருக்கிறது..ஆரம்ப காலத்தில் விஜயை ஒரு நடிகராக முன் நிறுத்துவதற்காகத் தொடர்ந்து சொந்தப் படங்களை எழுதி எடுத்து இயக்கியபடி இருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.அதீதமான கதைக்களனும் வயதுக்கு மீறிய வசன டெலிவரிகளும் எரிச்சலூட்டுகிற தொடக்கம் என்றாலும் எல்லார் நிஜங்களினுள்ளேயும் விஜய் என்ற ஒரு விடலைவாலிபனின் தோற்றம் குரல் நடிப்பு நடை நடனம் ஆகிய யாவற்றையும் அழகாகவும் ஆழமாகவும் நிலை நிறுத்திற்று.

 

நாளைய தீர்ப்பு மாண்புமிகு மாணவன் விஷ்ணு ரசிகன் ஆகிய ஆரம்ப காலப் படங்களில் விஜய் எனும் வருங்கால சூப்பர் ஸ்டாருக்கான அடையாளம் என்று சொல்ல முடியாதெனினும் அவரது வெளித்தெரிந்த மற்றும் பிறரால் ஏற்றுக்கொள்ளப் பட்ட திறமையாக அவரது நடனம் பார்க்கப்பட்டது.இந்தப் பையன் நல்லா ஆட்றான்ல என்ற தொடர் சொல்லாடல்களைத் தாண்டித் தன் பாடல்களின் நடனம் குறித்து அவற்றைக் கம்போஸ் செய்வதிலிருந்து முழுவதுமாக திரைப்படுத்துவது வரைக்கும் விஜய் காட்டிய ஈடுபாடு இன்றைக்கு அவர் வந்து நின்று இருக்கக் கூடிய உயரத்துக்கான பாஸ்போர்ட் அல்லது விஸா இரண்டில் ஒன்று என்னும் அளவுக்கு அவர் நடனத்தில் தன்னைக் கலந்தார்.

 

அதே நேரத்தில் பாடல்கள் மீது எப்படி விஜய்க்கு ஆர்வம் வந்தது என்பதற்கான விடையை அவரது குடும்பத்திலிருந்தே எடுக்க முடிகிறது.தாய்மாமா எஸ்.என்.சுரேந்தர் தான் மோகனுக்கான பின் குரல் தந்தவர். அதைத் தாண்டி சுரேந்தர் ஒரு சிறந்த பின்னணிப் பாடகரும் கூட. அவரது சகோதரியும் விஜய்யின் அம்மாவுமான ஷோபா சந்திரசேகரும் ஒரு பாடகி தான். அவரது குரல் ஒச்சமற்ற சீரான ஓட்டத்தைக் கொண்டது.

 

ஷோபாவுடன் தன் ஆரம்ப காலத் திரைப்பாடல்களைப் பாடி இருக்கிறார் விஜய். தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பொரோட்டா நான் தொட்டுக் கொள்ளச் சிக்கன் தரட்டா என்ற பாடல் தொடங்கும் போது போல்டான எழுத்துருவில் இந்தப் பாடலைப் பாடி நடிப்பவர் உங்கள் விஜய் என்று கார்ட் போடுவார்கள்.அப்படி விஜய் சொந்தக் குரலில் பாடுவதை அந்த அளவுக்கு ஹைலைட் செய்திருக்க வேண்டுமா என்ன..?ஏனென்று சிந்தித்தால் பாடல்களுக்குத் திரைச்செவ்வகம் தாண்டி இருக்க வாய்க்கிற செல்வாக்குக் குறித்த சிறப்பான தீர்மானம் கொண்ட மனிதர்களாக விஜய் குடும்பத்தாரைக் கணிக்க முடிகிறது.உங்கள் விஜய் என்பது தான் மேட்டரே.அதை இங்கே நடனமாடுவது இங்கே சண்டை போடுவது இங்கே காதலிப்பது உங்கள் விஜய் என்றெல்லாம் போடமுடியாது.அப்படி செய்தாலும் சிறக்காது,பாடல்கள் அப்படி அல்ல.உங்கள் விஜய் என்ற வாசகத்தை பார்க்கப் பார்க்க ஆழ் மனதின் நனவிலிக்குள் இவன் நம்ம பையன் முன்னுக்கு வரக் கஷ்டப்படுறான்.நல்லவன் மேலும் சிரமப்பட்டு நடிக்கிறான்.இதோ இந்தப் பாட்டையும் பாடுறான் என்று பதிந்து கொண்டார்கள்.

 

விஜய் அளவுக்குக் கடுமையான விமர்சனத்தை எள்ளல் கிண்டலை சந்தித்த இன்னொரு டாப்ஸ்டார் இல்லவே இல்லை எனலாம்.ஆரம்பம் முதலே எரிச்சலை தோற்றுவித்து அதை வென்று அபாரம் என்று பேர் வாங்கி விடுவதான முழுமூச்சு முயல்வுகளையே அவர் செய்து வந்தார்.ஒரு சூப்பர் ஹிட் வந்து அகப்படும் வரைக்கும் கிடைத்ததிலெல்லாம் நடிக்காமல் ஒரே ஒரு சதுக்கத்தில் அடங்கி விடுகிற படங்களிலேயே தொடர்ந்து நடித்தார்.அதாவது கிடைத்தால் மலை.போனால் வெறும் உடலுழைப்புத் தான் எனும் அளவுக்கு சேஃப் கேம் ஆட்டம் அது.ரசிகன் விஷ்ணு செல்வா தேவா போன்ற படங்கள் எல்லாமும் நம்ப முடியாத அதீதங்கள்.மற்றும் விடலைத் தனமான குறும்புகள் இன்னும் அதிகம் பார்த்தால் ஹீரோயிச பிரஸ்தாபங்கள்.

 

பூவே உனக்காக வந்தது. விஜய் ஒரு நடிகராக அதுவரை ஏற்றுக்கொள்ளப் படாத யாவராலும் வேண்டாவெறுப்பாகவாவது ஏற்கப் பட்டார்.ஆனாலும் மறுபடி தன் பழைய பாணி படங்களைக் கைவிடவில்லை.குறைத்துக் கொண்டார்.ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் காலமெல்லாம் காத்திருப்பேன் எனும் படம் வெளியாகும் போது சரிதான்.விஜய்க்கு இது மட்டும் ஓடிவிட்டால் போதும் என்று தோன்றியது.எதிர்பார்த்த திசையில் நகராமல் போனது துரதிருஷ்டவசமானது.,விஜய்காந்த் உடன் விஜய் நடித்த செந்தூரப் பாண்டி அஜீத் உடன் நடித்த ராஜாவின் பார்வையிலே சிவாஜியுடன் நடித்த ஒன்ஸ்மோர் ஆகியன விஜய்க்கு ஸ்கோர்களாகின.சிலபல அடுக்குகளில் அவரைக் கொண்டு சேர்த்தன.

நிலாவே வா படத்தில் வித்யாசாகரின் இசையமைப்பில் விஜய் பாடிய நிலவே நிலவே பாடல் எனக்குப் பிடித்த அவரது பாடல்களில் ஒன்று.

 

பால சேகரனின் லவ்டுடே படம் டீஸண்டான ஹிட்.வித்யாசமான ரகுவரனுக்கும் விஜய்க்குமான அதிகம் பேசிக்கொள்ளாத உறவும் அழகுறப் படமாக்கப்பட்டிருந்த கவிதை லவ்டுடே.இந்தப் படத்தில் விஜய் எதுவும் பாடவில்லை.அடுத்து வந்த இரண்டு படங்கள் அவருக்கு மகா மெகா முக்கியப் படங்களாகின.

 

வஸந்த் இயக்கத்தில் நேருக்கு நேர். அக்னி நட்சத்திரத்தின் இன்னொரு வெர்ஷன் என்றாலும் அழகான விஷூவல் கவிதை.வஸந்த் பாடல்களைப் படப்பிடிப்பதில் ஸ்பெஷலிஸ்ட்.டான்ஸ் மீது பெருங்காதல் கொண்டவர்.கேட்கவா வேண்டும்..? நேருக்கு நேர் பாடல்கள் மனங்களைக் கொய்தன. ஊர்மிலா ஊர்மிலா என்ற ஒன்ஸ்மோர் பாடலை அத்தனை லவ்வோடும் ஈர்ப்போடும் வழங்கி இருப்பார் விஜய்.எப்போதும் சலிக்காத பாடல்களில் இதுவுமொன்று.

காதலுக்கு மரியாதை. தமிழ்த் திரை உலகத்தின் சரித்திரத்தில் ட்ரெண்ட் செட்டர்கள் சொற்பமே. இது அந்த வரிசையில் ஏன் என்றே தெரியாத அளவுக்கு தலை தெறிக்க ஓடிக் கல்லா பெட்டிகளை அவை இருந்த அறைகளை எல்லாம் பணத்தால் நிரப்பித் தளும்பிற்று. அதிரி புதிரி ஹிட். மந்திரவாதி இளையராஜா இசையில் பாடுவது விஜயின் கனவா இல்லையா எனக்குத் தெரியாது. ஆனால் ராஜா இசைத்து விஜய் பாடுவது என் கனவு காதலா காதலா படத்தில் இடம்பெற்ற மடோன்னா காதலா நீ என்ற பாடலின் அதே மைய மெட்டு ஓட்டத்தில் அமைக்கப் பட்ட ஓ பேபி பேபி பாடலைத் தன் ஆன்மாவிலிருந்து எடுத்தகழ்ந்தார் விஜய்.இந்தப் பாடலுக்கான சிறப்புகள் பல.ஒரே பாடலில் ஆழத்துக்கும் சிகரத்துக்கும் மாறிப் பயணிப்பது எல்லார்க்கும் வாய்ப்பதில்லை.இந்தப் பாடல் விஜய்க்கு வழங்கப் பட்ட வரம் என்றால் தகும்.,வேகமும் நிதானமும் கலந்து படைக்கப்பட்ட பாடல் இது. எல்லாவற்றுக்கும் மேலாக விஜய் குரலையும் தாளவோசையின் பயணத்தையும் திட்டமிட்டு இடம் மாற்றி இருப்பார் ராஜா. இந்தப் பாடலை சர்வதேச தரத்துக்குக் கொண்டு சென்றிருக்கும் இந்தச் சின்னஞ்சிறிய மாற்றம்.                           

 

அஞ்சாம் நம்பர் பஸ்ஸூல எனும் செல்வா படப் பாடலும் சிக்கன் கறி சிக்கன் கறி எனும் செல்வா படப் பாடலும் பம்பாய் சிட்டி என்ற ரசிகன் பாடலும் கோத்தகிரி குப்பம்மா என்ற நெஞ்சினிலே பாடலும் அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு என்ற தேவா படப் பாடலும் விஜய்க்குப் பாடத் தெரியும் என்பதைத் தாண்டி எந்த விதமான நல்-துர் விளைவுகளையும் ஏற்படுத்தித் தரவில்லை.என்றாலும் தொடர்ந்து பாடுவதில் ஆர்வம் காட்டி வந்த அவர்.காதலுக்கு மரியாதை படத்தின் சர்வதிசை வெற்றிக்கு அப்பால் பாடுவதைக் குறித்த தன் பாலிஸியை சற்றே மாற்றம் செய்து கொண்டார் எனலாம்.

 

 அதிகம் பாடுவதில்லை.மிக முக்கியமாகப் பாடல்களைப் பாடும் வாய்ப்பைத் தேடுவதில்லை என்று 2000ஆம் ஆண்டுக்குப் பின்னால் விஜய்க்கான நிஜ சுக்ரதிசை ஸ்டார்ட் ஆகி வேகமாய் தன் தொடர் வெற்றிகளால் இன்றைக்கு இருக்கக் கூடிய மூன்று அல்லது நாலு நம்பர் ஒன் நடிகர்களில் விஜய் முக்கியமானவர் என்ற இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.(ரஜினி கமல் அஜித் மற்றும் விஜய் நாலு பேருமே நம்பர் ஒன் தான்.நமக்கு எதுக்கு வம்பு.?)

 

சச்சின் படத்தில் பாடிய வாடி வாடி என்ற பாடல் ஒன்றும் ராங் சாய்ஸ் கிடையாது.சமீபத்தில் விஜய் பாடிய பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் ரகங்களே.அதிலும் துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் ஒரு ஸ்மாஷ் ஹிட். ஏண்டி ஏண்டி (புலி) செல்ஃபி புள்ள *(கத்தி) கண்டாங்கி கண்டாங்கி ஜில்லா

வாங்கண்ணா வணக்கங்கண்ணா தலைவா கூகுள் கூகுள் துப்பாக்கி ஒரு ஃபாஸ்ட் ஹிட்.இதன் ஹாரிஸ் ஜயராஜ் இசைக்கும் விஜய் குரலுக்கும் அப்படிப் பொருந்தி இருக்கும்.முழுப் பாட்டும் முடியுமட்டும் ஒரே சீரான விரட்டலுக்கு உட்படுகிற வனமிருகத்தின் விரைதலாய் பயணித்திருக்கும்.இதற்கு நேர் மாறாக கண்டாங்கி கண்டாங்கி என்ற ஜில்லா படத்தின் பாடலை சொல்ல முடியும் இமானிசப் பாடலான இதன் தொடக்கம் முதலே லேசான கிறக்கத்தை மையங்கொண்டு நகரும் பாடலுக்கு விஜய் குரல் ஒரு பரிபூரணத்தைக் கொடுத்தது. இந்தப் பாடலின் பேரழகே இதன் சரணங்கள் தான். இத்தனை கிறக்கத்தை சமீபத்தில் இன்னொரு பாடலில் கேட்கவில்லை என்ற அளவுக்கு ஏறும் போதும் இறங்கும் போதும் ராட்டினப் பாய்ச்சலாய் இந்தப் பாடல் மனதுள் பெருகுகிறது.விஜய்வசியம் என்றால் தகும்.

 

 நான் விஜய் படங்களை அதன் பாடல்களை அவரது நடனத்தை அவர் பாடிய பாடல்களை எல்லாம் இந்த அளவுக்கு ரசித்து சிலாகிப்பேன் என்பது எனக்குத் தெரியாத உண்மை.சிந்தித்தால் அது தான் விஜய் என்று தோன்றுகிறது.தன்னை முதலில் எப்படி வேண்டுமானாலும் முடிவு செய்து கொள்ளட்டும் என்று தைரியமான முதல் ஸ்டெப்பை வைப்பது.அதாவது என்னை கவனி அது போதும் என்பது விஜய் வசியத்தின் முதல் ஸ்டெப்.இரண்டாவது படிநிலை எதுவெனில் இது யார்றா விஜய்யா இது என்று கவனிக்க வைக்கையிலேயே தன்னை மறந்து ரசிக்க வைப்பது.இதுவும் நடந்தது.மூன்றாவது முக்கியமான ஸ்டெப் அப்படிரசிக்க வைப்பதன் மூலமாகவே தொடர்ந்து தன்னைத் தொடர வைப்பது.

 

இவை எல்லாமும் எனக்கே நிகழ்ந்தன.நானே எள்ளியிருக்கிறேன்.மெல்ல மெல்ல நானே கவனித்து இன்றைக்கு விஜய் வந்து சேர்ந்திருக்கும் இந்த இடத்தைக் குறித்த எந்த ஆச்சர்யமும் எனக்கில்லை.அது அவருக்கானது என்பதை நன்கறிவேன்.ஒரு பாடகராக விஜய் பாடிய பாடல்களில் என் எவர் டைம் ஹிட் எது தெரியுமா.,.? இந்தப் பாடலைக் கேட்கும் வரை விஜய் பற்றிய என் அனுமானங்கள் அபிப்ராயங்கள் அத்தனையையும் எனக்குள் ஆங்காங்கே வைத்திருந்தேனே தவிர எடுத்துத் தொகுத்ததில்லை.இந்தப் பாடலை முதல் தடவை கேட்டதிலிருந்தே இன்று வரை எப்போதெல்லாம் கேட்பேன் என எனக்கே தெரியாது. ஆனாலொன்று கலையால் மட்டுமே வாய்க்க வல்ல உன்னதம் நிசத்தை லேசாகத் தள்ளி வைத்து விட்டு ஒத்தி வைத்து விட்டு நிழலைக் கொண்டாடச் செய்ய வல்லது.மனித வாழ்வின் ஆங்காங்கே அது தேவையுமாகிறது.அந்த வகையில் இந்தப் பாடல் அப்படியான ஒரு தன்னிலை மறக்கும் நிஜமயக்கத்தை ஒரு வள்ளலைப் போல அள்ளி வழங்கக் கூடியது.

 

விஜய் பாடிய அந்தப் பாடலின் சுட்டி இங்கே .விஜய்யின் அடுத்த படங்களுக்காகக் காத்திருக்கும் வெறி கொண்ட தளபதி ரசிகர்களுக்கு மத்தியில் அவரது அடுத்த பாடல்களுக்காகக் காத்திருக்கிற சிலபலரில் நானொருவன்.வாங்கண்ணா வணக்கங்கண்ணா! 

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர்செவ்வாய்தோறும் வெளியாகும்

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...