???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு! 0 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! 0 இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் 0 கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து 0 சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்! 0 மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் 0 சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை 0 வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம்! 0 அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி 0 மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 0 ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி 0 காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! 0 இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   21 , 2017  01:31:55 IST


Andhimazhai Image

இந்த முகப் புத்தகக் காலத்தில், முகத்தை மறைத்துக் கொள்ளும் வினோதத்தைப் பொதுவில் யாரும் அனுமதிப்பதே இல்லை. புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்ற நம்பகத்திலிருந்து மிகச் சரியாய் நூறு ஆண்டுகளுக்குள் எங்கு பார்த்தாலும், "எதற்கும் ஒரு செல்ஃபி எடுத்து வைத்துக் கொள்வோம்"என்றானது நல்வாழ்வு. முன்புறக் கேமராக்கள் சுயத்தின் சவுகர்யமாக, சௌந்தர்ய சோபன கம்பீரமாக, வாழ்க்கையை வண்ணமயமாக ஆக்கியிருக்கிறது.இன்று இருப்பது முகம் பாராத காதல் கோட்டையை எழுதுவதற்குக் கூட இயலாத இணையபூர்வ உலகம்.ஒருவருடைய குரலுக்கு இன்னொருவருடைய முகத்தை எனக்குள் நெடுங்காலம் பற்றிக் கொண்டிருந்திருக்கிறேன். 'இது என்ன கதை' என்பாருக்கு இதுதான் அவர் முகம் எனத் தெரிந்த பிற்பாடும் கூட, 'இல்லை இல்லை இது எனக்கு வேண்டாம்' என்று நம்பிய பழைய முகத்தையே ஓடிச் சென்று பற்றிக் கொண்டேன். இத்தனைக்கும் நான் நம்பிய அந்தப் பழைய முகத்துக்கென்று அறியப்பட்ட வேறொரு வெற்றிகரமான சொந்தக் குரலும் இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்பதுதான் ராஜமுரண். 

அந்த முகம் யாருடையதென்றால், அந்தக் குரல் யாருடையதென்றால் ஆர்.பார்த்திபன் எனும் முகமும், அருண்மொழி எனும் குரலும். இத்தனைக்கும் பார்த்திபனின் பேச்சுக் குரல் வெற்றிகரமானது. அதையும் தாண்டி, தனக்குத் தானே பார்த்திபன் பாடிக்கொள்ளுகிறார் போலும் என நம்பும்படி அருண்மொழி குரல் அமைந்தது. அருண்மொழி பற்றிய இந்த அத்தியாயத்தை பார்த்திபனிடமிருந்து தொடங்காமல் வேறெந்தப் புள்ளியிலிருந்து தொடங்கினாலும் என் மனது ஒத்துக் கொள்ளாது. "என் மனது ஒத்துக் கொள்ளாது" என்பது எனக்குள் பார்த்திபனின் குரலிலேயே ஒலிக்கிறது, புரிஞ்சுக்கங்க ப்ளீஸ்.

 

பிசிறே இல்லாத சுத்தமான குரல் அருண்மொழியினுடையது. குரல் எல்லாம் அடுத்து, முதலில் அந்தப் பெயர், அருண்மொழி. இன்னும் சிலமுறை சொல்லிக் கொள்ளலாம்

அருண்மொழி 

அருண்மொழி 

அருண்மொழி

எல்லாப் பெயர்களுமே பெயர்கள்தான் என்றாலும், சில மாத்திரம் சிறகுள்ள பெயர்கள். என் பெயரைச் சற்றே பொறாமை கலந்த விளித்தலோடு அணுகும் பலரை நான் சந்தித்துக் கொண்டே இருக்கிறேன். 

 

அன்றொரு தினம் பன்னாட்டு நிறுவனமொன்றின் வரவேற்பாளினி கோட் சூட் டை சகிதம் என்னை வரவேற்றாள். உள்பதவியில் உள்ள ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றபோது அவளது தாட்சண்யமும் தரிசனமும் எனக்குக் கிட்டியது. பொதுவாந்திரத்தில் கடவுளுக்கு ஒரு நன்றி சொன்னபடியே அவளது name badgeல் இருந்த ப்ளாஸ்டிக் கல்வெட்டு எழுத்துக்களில் அவளது பெயரை ஒரு தடவைக்கு இரு தடவை வாசித்து வேறு புறம் பார்த்தேன். கிளியின் குரலில் "கிளி" என்று சொன்னால் எவ்வளவு நயமாக இருக்கும்? நண்பர் வந்துவிடுவதற்குள் வெற்றியை எய்திவிட வேண்டிய அவசரத்தில் "மே ஐ நோ யுவர் குட் நேம் ப்ளீஸ்?" என்றேன். உங்களுக்கும் சேர்த்தாற்போல், லேசாய்க் கண்கள் செருகும் அளவுக்கு ஸ்டைலாகச் சொன்னாள், "அலர்மேல் மங்கை". என்ன ஒரு பெயர் பாருங்கள். பெயரே பல கோடி பெறுமே. நிற்க.

 

அலர்மேல் மங்கை ஒரு புறம் இருக்கட்டும். பேச வந்தது அருண்மொழி பற்றி அல்லவா. எக்கோலம் பூண்டாலும் ஏற்கும் திருமேனி என்பார் உலகளந்த பெருமாளின் பக்த கோடியர். அது போல இப்பேரும் யாருக்கு இட்டாலும் சிறக்கும், எட்டுத் திக்கும் புகழ் மணக்கும். சொல்லச் சொல்ல உதடுகளுக்குள் இந்தப் பெயர் தேனில் ஊறிய ஜாமூன் உருண்டையாய் கனக்கும். எனக்கும். குஷ்புவின் மகாரசிகன் நான். என்றபோதும், 

 

"வெண்ணிலவுக்கு வானத்த புடிக்கலையா என் கண்ணுமணிக்கு இந்தக் காளைய புடிக்கலையா?"

 

 

என்று இரண்டாவது வரி முடியும்போது, "please consider madam, see how much innocent he is" என்று அடுத்தவரான பார்த்திபனுக்கு சிபாரிசு செய்யும் அளவுக்கு அருண்மொழியின் குரல் எடுத்த எடுப்பிலேயே மனசைப் பிசைந்தது.

 

அருண்மொழியின் குரலில் கரடுகளோ முரடுகளோ இல்லை. இப்படிச் சொன்னால் இனிக்கும், நெளிவுகளும் சுளிவுகளும் இல்லை, இப்படிச் சொன்னால் கசக்கும். இரண்டு இரண்டுகளுக்கும் நடுவில் தனிக்கும் அபூர்வமான அக்குரல். நல்ல குரல் என்பதாலேயே பாடலுக்கு உகந்ததா என்பது நெடுங்காலக் கேள்வி. குரலின் தன்மை என்பது வேறு, குரலின் வளம் என்பது வேறு. இவை இரண்டும் இணைகிற இந்தப் புள்ளியிலிருந்துதான் ஒரு நபரின் குரல் எத்துணை பாடல்களுக்கு ஆகும், தாக்குப் பிடிக்கும், கடக்கும் என்பதெல்லாமும் தீர்மானம் ஆகும். கவனத்தில் கொள்க. எஸ்பிபி சரண் பாட வந்தபோது இருந்த அந்தக் குரலுக்குக் கிட்டத்தட்டதான் எஸ்பிபியின் ஆரம்ப காலக் குரல் இருந்தது. பிற்பாடு நான்கு விதமான வளைவு நெளிவுகளுக்கு எஸ்பிபியின் குரல் மாறி மாறித் தற்போது இருக்கும் திடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இந்தப் புள்ளிகளுக்கு நடுவே எஸ்பிபி பாடிய அத்தனாயிரம் பாடல்களையும் நினைவில் கொள்க. எஸ்பிபியை விட உறுதியான ஒரே காத்திரத்துடன் பலகாலம் பயணித்த தமிழின் பெருவிருப்பக் குரல்தான் டிஎம்சௌந்திரராஜனுடையது.

 

இந்த வரிசையில் கல்யாண், க்ருஷ்ணச்சந்தர், ஜிகே வெங்கடேஷ், தீபன் சக்ரவர்த்தி துவங்கு பின்னே ஏஎம் ராஜா, பிபி ஸ்ரீனிவாஸ் வரை, பாடல் எண்ணிக்கைக்குப் புறவயமான வேறொரு பட்டியலைத் தயாரித்தால், அந்தப் பட்டியலின் மிளிர்குரல் அருண்மொழி. பலரது இசையில் பாடியிருந்தாலும் இளையராஜாவின் ப்ரியமான ஒருவர் அருண்மொழி. 

 

மெட்டாலிக் தன்மையுள்ள சலனமற்ற நகர்தலை முன்வைக்கிறபடிப் பயணிக்கிற இந்த வகைமைக் குரல்கள் மென்சோகத்தையும் லேசான அங்கலாய்ப்பையும் இறைஞ்சுதலுடன் கூடிய சமாதானத்தையும் செய்து காண்பிக்கிற மென் மெலடிப் பாடல்களைப் பாடுவதற்கு உகந்தவை. மறுபுறம், தற்காலிகத்தின் குதூகலத்தையோ, ஏற்படுத்தப்பட்ட கொண்டாட்ட கணங்களின் மகிழ்ச்சிப் பெருக்கையோ, மெய் மறக்கிற சன்னத ஆரவாரத்தையோ, வெற்றி கணத்தின் பெருங்கூட்ட ஆர்ப்பரிப்பையோ பாடல்வசம் பெயர்த்துத் தருகிற சந்தோஷ கானங்களைப் பாடுவதற்கும் ஒத்து வரும். இந்த இருவகைக்கு முந்தைய அடுத்த நாற்காலிகளைக் கூட மடக்கித் தள்ளுமேயன்றி அமர்ந்து கொள்ளாது இத்தகைய குரல்கள். 

 

எப்போதும் மாறாத ஒரு இளைய தன்மை அருண்மொழியின் லாவகம். புழங்குகிற எல்லா சொற்களையும் சத்தியம் செய்தபடியே நமக்குள் நுழைந்து திரும்புவது அருண்மொழியின் குரல்வளம்.

 

"ஆத்துல அன்னக்கிளி..."

 

 

ரஜினிக்கு அருண்மொழி பாடியிருக்கிறாரா எனக் கேட்டபோது, "இல்ல" என்றும் "தெர்ல" என்றும் இரு நண்பர்கள் பதில் சொன்னார்கள். வீரா படத்தில் இரண்டு குறும்பாடல்கள் பாடியிருக்கிறார். உச்சரிப்பின் போது ஒரு சின்ன அழுத்தம் கூடுதலாகத் தந்து, சொற்களைத் தனதாக்கிக் கொள்வது அருண்மொழியின் ஜாஜ்வல்யம். இந்தப் பாடலிலும், "என்ன ஏன் தொரத்துன்ன" "மனச ஏன் வருத்துன்ன" இவற்றை உறுத்தாமல் வழக்கமாகச் செல்லும் பாதையில் இதுவரை இல்லாத வண்ணத்தில் ஒரு புதிய மலர் அன்று அலர்ந்தாற்போல் பாடியிருப்பார். "Singer's signature" என்போம். அப்படி ஒவ்வொரு பாடகருக்கும் ஒரு வரப்பிரசாதத் தனித்துவம் அமையும். வேறாராலும் முயன்றுகூடப் பார்க்க முடியாததாய் அது இருக்கும். அலங்காரம் ஏதுமற்ற உணவு விடுதி போல் எல்லாவற்றோடும் கலந்து, தொன்றெழல் தெரியாமல் தோன்றுகிற இந்தப் பாடல் அருண்மொழியின் கையெழுத்து.

 

 

இதே போல எல்லார் மனசையும் களவாடின இன்னொரு பாடல் என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே இள நெஞ்சத் தொட்டுத் தொட்டு நீ தாக்குறே இதன் அடுத்த வரியான கண்ணால்லே பேஸ்ஸாத்தே கையால்லே பேஸ்ஸூ என்று தனக்கே உண்டால செல்லக்கிறக்கத்துடன் ஆண்டிருப்பார் அருண்மொழியார்....இன்னமும் அழுத்தமாய்ச் சொல்வேன் ஆண்மையும் மென்மையும் சேர்ந்து கம்பீரமாய் எழுவது மும்மடங்கு அபூர்வம் அருண்மொழி குரல் அந்த ரகம்.

 

"ஆராரோ பாட்டுப் பாட" 

 

 

 

இந்தப் பாடல் என்றில்லை, மென் மெலடி என்றாலே அருண்மொழி எனத்தக்க அளவில் அத்தனை நம்பகத்தை எப்படி ஏற்படுத்தியது அவரது குரல்? எதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டாமா? அப்படி என்னதான் வித்தியாசம் அருண்மொழியின் குரலில்? ஒரு குரலின் குணாம்சங்களை விவரித்துக்  கொண்டே போகையில், வேறார்க்கும் வாய்த்திடாத அபூர்வம் ஒன்றை அது கொண்டிருப்பது புலப்படும். அருண்மொழியின் அப்படியான அபூர்வம் எது?

 

"ஊரெல்லாம் சாமியாகப் பார்க்கும் உன்னை" இந்தப் பாடல் அருண்மொழி பாடியது அல்ல. நிஜத்தில் இந்தப் பாடல் இதன் மூன்றாவது வரியிலேயே ஒரு ஏற்றச் சமநிலைக்கு வந்திருப்பதை ஆழ்ந்து பார்க்கையில் உணரலாம். எடுத்த எடுப்பிலேயே ஒரு வேகம், பின்னர் ஒரு நிதானம், இவை இரண்டையும் பிரித்து உணரமுடியாத பொருத்தம். இதுவே பல்லவியின் கட்டுமானம். இந்த வழமையை உடைக்கிற குரல் அருண்மொழியினுடையது. 

 

"ஆராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை" என்கிற பாடலிலும் இதே மேற்சொன்ன உச்ச-நீச்ச விளையாட்டு இருக்கும் என்றாலும் அதைப் பிரித்து உணர முடியாது. மேலும், அப்படியான உச்சத்தையும் நீச்சத்தையும் அவை பயன்படுத்தப் பட்டிருப்பதே அறிய முடியாத அளவுக்கு சமரசம் பேசுகையில் நோக்கம் கெட்டுவிடக் கூடாது எனும் ஜாக்கிரதை உணர்வோடு வேறு வழியின்றிப் போடப்படுகின்ற ஓர் அதட்டலைப் போல் அருண்மொழியின் பாடல்களின் சுழற்சி அமையும். இது அவரால் மட்டுமே இயலும் அற்புதம். அதற்கு இந்தப் பாடல் ஒரு நல்ல உதாரணம்.

 

"நீதானா நீதானா அன்பே நீதானா"

 

வாத்தியங்களைத் தாண்டி ஓங்கி ஒலித்த பாடல்கள் எளிதாகச் சோகத்தை மனித மனங்களுக்குக் கடத்தியிருக்கின்றன. இதற்கு மாற்றாக மென் மெலடிப் பாடல்கள் திரும்பத் திரும்பக் கேட்க வைப்பதன் மூலமாக துக்கத்தின் நோய்மையைக் கேட்பவருக்குள் படர்த்துவது நிகழ்கிறது. அளவாகக் கத்தரிக்கப் படுகிற துல்லியமான சோகப் பாடல்கல் அரிதானவை. இதை இன்னமும் சொல்லப் போனால், தீயின் வெப்பம் அளவான வெம்மையைத் தொடர்ந்து நேர்த்துகிறாற்போல், ஒரு துன்ப அழுத்தத்தைத் திட்டமிட்டு அளவாய்த் தருவதன் மூலமாக ஏற்படுத்த இயலுகிற அவலச் சுவை முக்கியமானது. யானைகளின் நீராடல் காலத்துப் பிளிறல்கள் ஒருபுறம், மூங்கில்கள் நெடிதுயர் வனத்தில் ஒன்றையொன்று உரசிக் கொள்ளும் சத்தம் மறுபுறம், கணிசமான கிளிஞ்சல்களை நீரில் அலசுதல் இன்னொரு புறம் என்பதான தனித்த வேறு எதனுடனும் ஒப்பிடுதற்கியலாத நல்லோசைகளின் பிரதிபலிப்பாய் அருண்மொழியின் பாடல்கள் சிறக்கின்றன.

 

"ஒத்த ரூபாயும் தாரேன்" 

 

முன்னரே பேசினாற்போல், ஆழ்ந்த மெலடிக்கு ஆகும் அதே குரல் உற்சாக ஊற்றுக்கும் சரிப்படுவது சிறப்பு. சந்திரபாபு வகையறா போலவே இந்த இருவேறு ஆச்சரியங்களுக்கு நடுவில் இருக்கக் கூடிய எந்த வழமையான பாடலையும் பாடற்படுத்தாமல் மரம் விட்டு மரம் தாவுகிறாற்போல் கொண்டாட்டத்தின் இத்தகைய பாடல்களைப் பாடினார் அருண்மொழி. அவையும் எடுபட்டன.

 

"அல்லி சுந்தரவல்லி" (கண்களின் வார்த்தைகள்) இந்தப் பாடல் ஒரு வசீகரவஸ்து.என்னவென்றே தெரியாத சின்னஞ்சிறிய அழுத்தத்தை எப்போது கேட்டாலும் நிகழ்த்தும்.

 

"தென்றலுக்குத் தெரியுமா" (பாரதி கண்ணம்மா) தேவாவின் இசையில் இந்தப் பாடலை நச்சென்று நகர்த்தி இருப்பார் அருண்மொழி.  சொர்ணமுகி படத்தின் "கம்மாக் கர ஓரமா"  பாடல் ஒரு முத்திரைப் பாடல் என்றால் தகும்.அரும்பும் தளிரே என்றாரம்பிக்கிற சந்திரலேகா பாடலும் ராத்திரியில் பாடும் பாட்டு என்ற அரண்மனைக்கிளி பாட்டும் ஓடைக்குயில் ஒரு பாட்டுப் படிக்கலியா ஹோய் ஹோய் பாடலும் என் ப்ரியத் தேன் துளிகள்.

 

 

இளையராஜா குரலின் அட்வர்ஸ் குரல் என்று நான் அருண்மொழியின் குரலைச் சொல்லுவேன். தனக்குள் சுழலும் வாத்திய இசையின் மேதமையைக் குரலில் பெயர்ப்பது என்பது இசையும் அறிந்து பாட்டும் கைவரப் பெற்ற சிலராலேயே சாத்தியம். வேறொரு அத்தியாயத்தில் சொன்னாற்போல், தங்கள் குரலைக் கட்டுப்படுத்த இயலுகிற இவர்களால் இயல்பாக நிகழ வேண்டிய குரல் பூர்வ அற்புதம் ஒன்றை நின்று நிதானமாகப் பார்த்துப் பார்த்து ஏற்படுத்த முடியும். தொழில்முறைப் பாடகர்களால் பாட முடியாத எதோ ஒரு பாடலைத்தான் இவர்கள் பாடுகிறார்கள் அல்லது இவர்களுக்குப் பாடக் கிடைக்கிறது என்பது ஏற்கனவே நாம் வைத்திருக்கும் ஒரு பட்டியலில் சந்திரபாபு, கன்னட ராஜ்குமார், இளையராஜா, கமலஹாசன் ஆகியோர் அடங்கிய வரிசையற்ற வரிசையில் இன்னொரு முகம், இனியொரு பெயர் அருண்மொழி.

 

சின்னஞ்சிறு தீபம் காற்றின் திசைகளெங்கும் அலையும் என்றபோதும் நெடுநேரம் ஒளிரும். அது எத்தனைகெத்தனை சிறியதாகத் தோன்றியதோ அந்த அளவுக்கு உறுதியான ஒளிர்தலையும் முன் வைக்கிறதாகிறது. அப்படியான ஒளி நுனியின் தனித்த விகசித்தலைக் கலையின் மேனியில் பெயர்த்தல் என்பது அரிதினும் அரிது. அதனைச் செய்துகாட்டிய அருண்மொழி, குழலையும் குரலையும் ஒருங்கே ஆளவாய்த்த நாயகன். வாழிய வாழியவே.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...