???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 0 ஜே.என்.யூ மாணவர் உமர் கலித் மீது துப்பாக்கிச்சூடு 0 திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! 0 கருணாநிதிக்காக நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த் 0 ஸ்டாலினோடு மோதல் பாதையில் மு.க.அழகிரி? 0 விராட் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்! 0 மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் 0 வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.8,316 கோடி அளவுக்கு பாதிப்பு 0 ‘உரிமைக் குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல’: திருமுருகன் காந்தி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் 0 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி 0 கேரளாவில் வெள்ளம்: திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி 0 சத்யம் திரையரங்கை வாங்கியது பி.வி.ஆர்.சினிமாஸ்! 0 கலைஞர் நினைவிடத்தில் அதிகாலையில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் 0 அஞ்சலி செலுத்த வந்த ராகுல்காந்திக்கு ஏன் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை: நாராயணசாமி 0 மேட்டூர் அணை நிரம்பியது:காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 48 - அடுத்த காலத்தின் இசை – ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   18 , 2017  07:20:42 IST

டுத்த காலத்தின் இசை என்ன..? யாரறிவாரோ கிளியே அடுத்து நம்மை ஆள வரும் ராசன் பெயர் ஏதுவென்று யாரறிவாரோ..? இது ஒன்றும் சப்டைடில்களில் கண்டெடுக்கப்பட்ட பெயரற்ற படத்தின் வசனம் அல்ல.இசையில் நாமெல்லாருமே எதாவதொரு சில அல்லது பல கருத்தாக்கங்களை வைத்துக் கொண்டே இருக்கிறோம்.ரெஸ்டாரெண்டு மெனு கார்டை விட ம்யூசிக் டேஸ்டோட மெனு கார்டு பெருஸுடா என அலுத்துக் கொள்வான் பரணி.ஆம்.மனிதர்கள் இந்த அளவுக்குப் பெருவாரியாக வேறெந்த ஒரு கலை மீதும் பரந்துபட்ட பிடிமானங்களைக் கொண்டிருப்பதில்லை.

 

 

ஒரு பாடல் ஆன்மாவிலிருந்து எழவேண்டும். அல்லது ஆன்மாவைத் தொட வேண்டும். வருடலோ கீறலோ துளைத்தலோ வெட்டுக்கத்தியின் இரக்கமற்ற கூர்மையோ ஏதோ ஒன்றை நிகழ்த்தினால் தான் அது பாடல். தமிழர்களின் வாழ்வு பாடல்களால் ஆனது. தாலாட்டுத் தொடங்கி ஒப்பாரி வரைக்கும் வாழ்க்கையின் கணங்களைப் பாடல்களால் அலங்கரித்துக் கொண்டவன் தமிழன். இத்துணை தூரம் பாடல்களுக்கு இடம் தந்து தானும் அதுவும் தாங்களாகிப் பெருகுகிற இன்னொரு சமூகத்தைச் சுட்டமுடியாது என்பது தமிழின் தனித்துவம் மாத்திரமில்லை. அது ஒரு அமோகமான உயரம்.நமக்கெல்லாம் கம்பீரம். வாழ்க தமிழிசை.

 

 

உண்மையில் எல்லா மொழிகளிலும் கவிதைக்கும் பாடல்களுக்கும் இசைக்கும் இடமில்லாமல் இல்லை. ஆனால் ரசனை வேறு வாழ்க்கை வேறு என்பதான இரண்டு கோடுகள் எப்போதும் எல்லோர்க்கும் உண்டு. இங்கே வித்தியாசம் நம் நிலத்தின் வாழ்வியலுக்குள் இருப்பதை முன்மொழிய விரும்புகிறேன். பாடல் கேட்டுக் கொண்டே பணி செய்வதை அனுமதிக்கிற மேற்கத்திய நவ உலகத்துக்குச் சற்றும் மாற்றுக் குறையாத நிசப்பொன்தான் பாடிக் கொண்டே நடவிலிருந்து மலர் பறித்தலிலிருந்து அறுவடை வரைக்குமான நம் நிலத்தில் தனித்தொலிக்கும் பாடல்கள். இங்கே பாடிக் கொண்டே நெசவு செய்பவனிலிருந்து மந்திரம் செய்பவன் வரை உண்டல்லவா..?

 

 

கித்தாய்ப்புத் தான் தமிழ்.தத்துவமும் ஆன்மீகமும் அருகமைந்த நதிகள். ஆன்மீகத்தை மறுதலிப்பவனுக்கு அதன் பெரும்பகுதி தத்துவமாய்த் தெரிந்தேகும். உளம் என்ற ஒன்று இருந்தும் இல்லாதிருப்பதை என்னவென்று உபகூறு கொண்டு அலசுவது என்பதில் மாற்றுக் கருத்தில்லாத முரணாளர்கள் உளவியலின் சகல இருளுக்கும் வாழ்வின் வீதிகளெங்கும் விடை தேடுவதை ஒப்புக்கொள்வார்கள். நாளைய குற்றங்களை நடவாமல் கட்டுப்படுத்துவதற்கும் குறைப்பதற்கும் அகற்றுவதற்கும் உளவியலால் ஆகும் என்பது அறிவியலின் விந்தை குன்றா விள்ளல் எனக் கூறலாம் அல்லவா.?

 

 

ஒவ்வொருவர் வாழ்விலும் ஆயிரக்கணக்கான பாடல்களின் நுழைகின்றன. ஆனால் எல்லாப் பாடல்களும் தங்குவதில்லை.கலயத்தில் சேகரமான மழையின் சொற்பம் போலச் சிற்சில பாடல்கள் மாத்திரமே நிகழ்கின்றன. எந்த ஒரு மனிதனும் தனக்குள் நுழைகிற பாடல்களை எளிதாகக் கடந்து மறந்து விடுகிறான். தனக்குள் நிகழ்ந்த பாடல்களை ஒருபோதும் மறப்பதற்கில்லை. கடப்பதும் நிகழாது.

 

 

இப்படியான தனித்த பாடல்கள் அன்பின் சரடுகளில் ஒன்றை அழுத்தமாய்ப் பற்றியபடி வருகின்றன. அவற்றை முதலில் கேட்ட தருணங்கள் அழகானவையாக இருந்துவிட்டால் அந்த ஞாபகத்தோடு அப்பாடல்களும் தம்மைப் பொருத்திக் கலைத்துப் போடுகின்றன. பிறகென்ன..? எப்போதெல்லாம் அந்தத் தருணத்தின் நிகழ்வின் ஞாபகத்தைக் கைக்கொள்ள நேர்கிறதோ அப்போதெல்லாம் அப்பாடலின் ஞாபகமும் வந்து சேர்கிறது. இதன் தலைகீழ் சம்பவித்தலும் நிகழ்வது ரசம்.அதாவது ஒரு பாடலின் ஞாபகம் அடுத்த வீட்டுக் குழந்தையைத் தன் விளையாடற்காலத்துக்குள் அழைத்து வருவதைப் போல வெகு எளிதாகக் கைப்பற்றி அழைத்து வந்து விடுகிறது அன்பின் சரடுகளை. இதுவும் அதுவும் எனப் பிரித்து உணர்வதற்கான தேவையுமின்றி அப்படிப் பிரித்து விடுவதற்கான வழியும் இல்லாமற் போய் மற்றவர்களின் மற்றுமொரு பாடல் நமக்கு மாத்திரம் மந்திரம் போல மாறுகிறது. யார் யாரின் பாடல்கள் எவ்வெவை என்றறிவது பழைய கதையைத் திறந்து தருகிற நினைவின் சாவிக் கொத்தாகிறது.

 

 

இளையராஜாவின் ஆரம்ப காலம் என்பது இயக்குனர்கள் அவருக்கு அளித்த வாய்ப்புக்களா..? அவரது அறிமுகம் அன்னக்கிளியில் நடந்தது. அந்தப் படம் ஏன் அத்தனை அதிரி புதிரியாக ஹிட் அடித்தது..?

 

 

உண்மையில் அன்னக்கிளி ஒரு ஆல்பம் என்பதை அவதானிக்கையில் மர்மம் ததும்பும் மிக மெல்லிய புன்னகை ஒன்று அரும்புகிறது. ராஜா தனக்கான பாதையைத் தன் கையோடு கொண்டு வந்தவர் என்பது தான் நிஜம். அது தான் நடந்தது என்று அவதானிக்கையில் வெகு தூரம் சென்று விட்டார். ஒரு பெரு நகரத்தின் அத்தனை செல்வத்தையும் எல்லோரும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் ஒற்றை இரவில் கொள்ளை கொண்டோடிய கள்வன் உண்மையில் ஒரு மந்திர நிபுணனும் தானே..? அவனது பாண்டித்யம் போற்றுதலுக்குரியது தானே..? அப்படித் தன் காலத்தின் இசையை நிகழ்த்தியவர் இளையராஜா.

 

 

அன்னக்கிளி தொடங்கி அடுத்த ஐந்து ஆண்டுகள் முதல் ஐந்தாண்டுத் திட்ட காலம் போலவே ராஜாவுக்கு இன்றியமையாதாய் இருந்தது வியப்பில்லை. அந்தக் காலத்தில் ராஜா படர்க்கையிலிருந்து தன்னைப் பார்த்தார். வழக்கத்தின் அத்தனை நகர்தல்களையும் கைவிட்டவாறே அதைவிட அதிகமாய்த் தன் மீதான தேவையை அதிகரிக்கிற பாடலிசையைத் தந்தவண்ணம் சர்வதிசைகளிலும் தன் புரவியைச் செலுத்தினார். ஒத்திகைக்கும் பரிமளிப்புக்கும் எந்த வித்யாசமும் வழங்கப்படாத ஒருவராகவே தான் நிர்ப்பந்திக்கப்பட்ட அத்தனை வாய்ப்புக்களையும் சவால்களாகவே அணுகி வென்றார்.

 

 

 1975இல் வெளியான அமானுஷ் என்றொரு படம் உத்தம் குமார் நடித்தது. இந்தி மற்றும் பெங்காலியில் வெளியான ஒரு சூப்பர்ஹிட் படம். மலையாளத்தில் மது நடிப்பிலும் தெலுங்கில் என்.டி.ராமராவ் நடிப்பிலும் மறுவுரு செய்யப்பட்டது. தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான தியாகம் என்ற படமிதுவே. எல்லாப் பாடல்களும் சூப்பர்ஹிட் பாடல்களாக அமைந்த இப்படமும் அந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலித்த படமாக அமைந்தது தியாகம் படத்தில் ஒரு பாடல் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா எனும் பாடல். கண்ணதாசனின் வரிகளுக்கு வாயசைத்து நடித்தவர் நடிகர் திலகம்.பாடியவர் டி.எம்.சவுந்தரராஜன். இதன் இசை இளையராஜா!

 

 

இந்தப் பாடல் ஆன்மீகமும் தத்துவமும் கலந்து பிசைந்து இரண்டாய்ப் பகுபட்ட பல்லவிகளைக் கொண்டிருப்பது கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசனின் திறனறிதலுக்கான இன்னுமோர் உபகரணம் என்பேன். பல்லவியில் சொல்லப்படுகிற மனசாட்சியமாக முதல் சரணமும் தெய்வத்தின் சாட்சியமாக இரண்டாவது சரணமும் ஒலிப்பது கவிமாயம்.எம்.எஸ்.விஸ்வநாதன் கே.வி மகாதேவன் போன்ற முன்னோடிகளின் இசைக்குச் சற்றும் குறைவற்ற பாடலை உருவாக்க வேண்டிய சவாலை மிக அனாயாசமாக வென்றேறி இருப்பார் இசை ஞானி. இந்தப் பாடலை உற்றுக் கவனித்தால் இதன் அமானுஷ்யம் பெருகும் துவக்க இசையும் முதல் சரணத்துக்கு முந்தைய இணைப்பிசையும் ஒரு துயரத்திலிருந்து வெளிச்சம் நோக்கி நகரும் உணர்தலை முன்மொழிவதை உணரலாம். அதே பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முந்தைய இசையானது மெல்லிய நீர்ப்பொழிதலின் உற்சாகத்தை மலர்த்தும். ஏற்றத்துக்கும் இறக்கத்துக்கும் இடையிலான ஷண வித்யாசமும் உணர முடியாத கண்கட்டு வித்தை போன்ற இசைத் தொடர்ச்சி இந்தப் பாடலின் முதல் ஆச்சர்யம். பாடிய குரல் இந்தப் பாடலின் ஆன்மாவாகவே ஒலிக்கும்.மன சாட்சி என்பதில் வரக் கூடிய "ன" முன்னர் எப்போதும் உச்சரிக்காத துல்லிய கனக்குறைவோடு பாடி இருப்பார் குரலரசன். பறவைகளே பதில் சொல்லுங்கள் மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் மனதிற்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்.

 

 

இந்த வரிகளைப் பாடும்போது தனித்த ஊசலாட்டத்தைத் தன் குரலில் கொணர்ந்திருப்பார். மொத்தப் பாடலையுமே தன் வழமையின் குரலில் இருந்து மிக மென்மையான தனக்கடுத்த நாற்காலியில் எழுந்தமர்வதைப் போன்றே பாடி இருப்பார் சவுந்தரராஜன். மொத்தப் பாடலும் முடியும் போது இந்தப் பாடலின் இசையும் வரிகளும் குரலும் எனப் பிரிப்பதற்குத் தேவையற்ற வண்ணம் மொத்தப் பாடலுமே ஒரு புத்தம்புதிய பறவையின் வருகையைப் போல் மனதின் சன்னலோர இடுக்கொன்றில் அமர்ந்து கொள்ளும். சோகம் பூர்த்தியாகி நம்பிக்கையின் மெல்லிய கீற்று புறப்படுகிற புலரியின் வருகை போன்றது இந்தப் பாடல்.

 

 

நல்லவர்க்கெல்லாம்...

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா

அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

 

(நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு)

 

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

பறவைகளே பதில் சொல்லுங்கள்

மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்

மனதிற்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்

 

(நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு)

 

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

மனிதனம்மா மயங்குகிறேன்

தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே

தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

 

(நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு)

   

வட்டத்துக்குள் சதுரம் என்னும் படத்தின் இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.ஒன்று ஊரறிந்த சூப்பர்ஹிட் பாடல்!

 

 இதோ இதோ என் நெஞ்சிலே  ஒரே பாடல். இரண்டு பெண் பிள்ளைகளின் பால்யகாலத் தோழமையின் பாடலாகத் தொடங்கும் இப்பாடல் அவர்கள் வளர்ந்து யுவதிகளாக மாறும் காட்சிநதியோட்டத்தை உட்கொண்ட பாடல். இந்தப் பாடலின் பல்லவியின் தொடக்கத்திலிருந்தே சொல்லில் அடங்காமல் பெருகும் ஒரு ரகசியத்தின் ஏற்படுத்தப்பட்ட அமைதியின் இசைத் தன்மையை மைய இழையோடுதலாகக் கொண்டு வந்திருப்பார் ராஜா. சரணங்களுக்கு இடையிலான இணைப்பிசை பலம் மிக்க அத்யந்தத்தை தோன்றச்செய்ய வல்லது.

 

 

சொல்ல வந்த பாடல் இன்னொன்று.கீழ்க்காணும் பேரழகு மேனி கொண்டேன் ஊர் புகழ ஆடவந்தேன் பாடலை முதல் முறை கேட்பவர் மனமிழப்பது நிச்சயம். எஸ்.ஜானகி பாடிய இப்பாடல் இளையராஜாவின் ஆரம்ப காலத்தின் முன்னர் அறியா வகைமைப் புதுமுயல்வுகளில் ஒன்றென்றே கூறலாம். இந்தப் பாடலின் பல்லவி முடிந்து முதல் சரணத்துக்கு முந்தைய இணைப்பிசை முழுமையாக வசீகரித்து மயக்கும் மதுபோதையின் நடுமத்திய நகர்தல் போன்றது. மொத்தப் பாடலுமே சுழன்றேறும் மரப்படிகளில் ஏறிச்செல்வதைப் போன்ற தொனியில் இயங்கி நகர்வது சுகசவுகர்யம். ஜானகியின் இளமை துள்ளும் குரல் இதன் பலம்.

 

பேரழகு மேனி கொண்டேன்

ஊர் புகழ ஆட வந்தேன்

பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும்

காவலென்ன வேலியென்ன

 

பேரழகு மேனி கொண்டேன்

ஊர் புகழ ஆட வந்தேன்

பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும்

காவலென்ன வேலியென்ன

 

நான் சிரித்த நேரத்திலே

நான் நினைத்த வாழ்க்கையில்லை

நான் வளர்ந்த பாதையிலே

நாலு பக்கம் வேலியில்லை

பாசத்துக்கு மனதை வைத்தேன்

வாழ்வதற்கு அழகை வைத்தேன்

உன் உறவின் ஆதரவில்

காலமென்றும் மகிழ்ந்திருப்பேன்

 

பேரழகு மேனி கொண்டேன்

ஊர் புகழ ஆட வந்தேன்

பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும்

காவலென்ன வேலியென்ன

 

வட்டத்துக்குள் சதுரம் ஒன்று

சதுரத்தில் வட்டம் ஒன்று

உள்ளத்துக்குள் உள்ளம் என்று

ஒன்று பட்ட பிணைப்பும் உண்டு

கோடி மலர் வாங்கி வந்து

கூந்தல் தனில் சூட்டி வைத்தேன்

வாழ வைத்து பார்ப்பதொன்றே

ஏழை எந்தன் ஆசையம்மா

 

பேரழகு மேனி கொண்டேன்

ஊர் புகழ ஆட வந்தேன்

பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும்

காவலென்ன வேலியென்ன

 

இளையராஜாவின் ஆரம்ப காலம் என்பது தமிழ்த் திரை இசை ரசனையை அலைதலில் இருந்து தீர்க்கம் நோக்கித் திருப்பிய முதலாவது காலம் என்பேன். அந்த வகையில் அப்படியான இளையராஜாவின் ஆரம்ப காலத்தின் அதிகம் வென்ற மற்றும் கவனிக்கப்படாமல் கடந்த பாடல்களுக்கு வெவ்வேறான மதிப்புகளைக் காலம் வழங்கி இருப்பது கவனிக்கத் தக்கது. அடுத்த காலத்தின் இசை என்பது மேலும் ஒரு மலர் அல்ல அது வேறொரு மற்றொன்று.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...