அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 80 - மனமென்னும் மல்டிப்ளக்ஸ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   03 , 2018  14:02:32 IST


Andhimazhai Image
மென் மெலடிப் பாடல்களுக்குள் ஒரு உலா போகலாம். எனக்கு மெலடி பிடிக்காதுங்க என்று யாராவது சொன்னால் எப்படி அவரை நிஷ்கடூரமாகப் பார்ப்போம். சாரு நிவேதிதாவின் ஒரு புத்தகத் தலைப்பு 'எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது'. வலிக்கு பயந்து குழந்தை பெற்றுக் கொள்ளத் தயங்குகிறவர்கள் தத்தெடுத்துக் கொள்ளுவார்கள். அது அழுமே என்று பயந்தால் தீர்வில்லை. பாலுக்கழும் பிள்ளைக்கு ஒரு குவளை பால் போதும். எப்போதுமே மனிதன் பாடலுக்கு ஏங்கும் பிள்ளை. அவனைத் தூங்க வைக்கிற மென் மெலடிப் பாடல்கள் கடும் அவசியம். சொற்ப சிலர் பிடிக்காது என்றாலும் அனேகரின் இஷ்டம் இப்படியான மெலடிப் பாடல்கள். 
 
 
ஒரு மிருதுவான பாடலின் லட்சணம் என்ன? ஒரு பாடல் எப்போது மிருதுவான பாடல் ஆகிறது தெரியுமா? அது சன்னதத்தில் இயங்கும்போது, அது நனவிலியில் எங்கோ ஆழத்தில் ஒலிக்கும்போது, அது ஞாபகத்தில் ஆழ்ந்த உறக்கமாகவும் உறக்கத்தின் நடுவே சிறுபொறி ஞாபகமாகவும் எஞ்சும்போது. பலரும் எண்ணுகிறாற்போல் சோகப் பாடல்கள் அத்தனையும் மெலடிப் பாடல்கள் அல்ல, மெலடி என்பது எப்போதும் சோகப் பாடல்கள் அல்ல. சோகமென்பது மெலடியின் ஒரு விள்ளல், மெலடி சோகத்தின் ஒரு முகம். இரண்டுக்குமே மற்ற ஒன்றைத் தாண்டிய பெரும் நீட்சி நிலம் உண்டு. தாழிடாமல் சார்த்தப்படுகிற கதவுகளைப் போல மிருதுவான பாடல்கள் திகழ்கின்றன. அன்பின் நிசப்தத்தில் அவை திறந்து மூடப்படுகின்றன. கண் உறுத்தாத வெளிச்சத்தை அவை நிர்ப்பந்திக்கின்றன. உறக்கம் கலைத்துவிடாத பூனைப் பாத நடைகளை அவை அனுமதிக்கின்றன. 
 
 
உண்மையில், ஒருவரது உறக்கத்தை அவரைச் சார்ந்தவர்களால் மாத்திரமே பராமரிக்க முடியும். உறக்கங்கள் நம் உலகம் நமக்கு அனுமதிக்கிற ஒரு பண்டம். பாடல் எனும் விளக்கைத் தேய்த்ததும் உறக்கன் எனும் பூதம் நம்மை வந்து தழுவிக் கொள்ளுகிறது. தாலாட்டு உள்ளிட்டப் பாடல் வகைகள் மனிதனைத் தளர்த்துபவை. இறுக்கத்தை நெகிழ்த்துபவை. மறைமுகமாக மென்மை என்பது அன்பின் பிரயோகமாக மாறுகிறது. வருடும் விரல்கள் கடவுளாய்த் தொடவல்லவை. அல்லது கரங்களின் வருடல்கள் கடவுளரின் கருணைப் பார்வை.
 
 
சோகம் சாராத மெலடியை இங்கே பார்க்கலாம். மெலடி நிகழ்வது இரண்டு வழிகளில். ஒன்று குரல்வழி, இரண்டு இசைவழி. மலேஷியாவின் "கோடை காலக் காற்றே" உள்ளிட்ட பாடல்கள், பாலுவின் "காதலின் தீபமொன்று" உள்ளிட்ட பாடல்கள், மனோவின் "தூளியிலே ஆடவந்த" போன்ற பாடல்கள், யேசுதாஸின் "அம்மா என்றழைக்காத" போன்ற பாடல்கள், இவை யாவும் இசைவழி நிகழ்த்தப்பட்ட மெலடிப் பாடல்கள். சோகப் பாடல்கள் அதிகதிகம் இசைவழி நிகழ்த்தப்படுவது வாடிக்கை. 
 
 
இவற்றுக்கு அடுத்தபடியாகக் குரல்வழி நிகழ்த்தப்படுகிற பாடல்கள். சில குரல்கள் மென்மைக்கெனவே படைக்கப்பட்டிருக்கும். மெலடி ராஜ்ஜியத்தின் முக்கால்வாசியைத் தங்கள் பெயரில் எழுதிக் கொள்ளும் இத்தகைய குரல்கள் மெலடி மாத்திரமே பாடும், அல்லது எதைப் பாடினாலும் அது மெலடி ஆகும். இந்த இடத்தில் கொழுக் மொழுக்கென்று இருக்கும் அஞ்சலிதேவி, மொழுக் மொழுக்கென்று இருக்கும் ஜெமினி கணேசன் ஆகிய இருவரையும் விட உற்றுப் பார்த்தாலே வெட்கத்தில் உடைகிற அதிகதிக மென்மையுடன் ஒரு முகம் வந்து போகிறது. அவர்தான் ஏஎம் ராஜா. 
 
 
ஏ.எம். ராஜாவை அவருடைய மரணத்திலிருந்துதான் நான் அறிந்து கொண்டேன். வாழ்வெனும் குதிரைத் தன் க்ரூரப் பாய்ச்சலில் பாதியில் சிதைத்த வேலிப்பூ ஒன்றைப் போல் முடித்துவைக்கப்பட்ட ஒரு வாழ்வு ஏ.எம். ராஜாவுக்குக் கிட்டியது. ரயில் நிலையத்தில் தவறித் தண்டவாளங்களுக்கிடையே விழுந்து அவர் இறந்துபோனார். ஆன்மாவிலிருந்து மாத்திரமே தன் பாடல்கள் அத்தனையையும் பாடிய அந்தக் குரல் இருந்திருந்தால் பாடியிருக்கக் கூடிய பாடல்கள் அத்தனையும் நம் யாவர்க்கும் நஷ்டம்.
 
 
ஏம்.எம்.ராஜா என்றாலே தேன் நிலவு மற்றும் கல்யாணப் பரிசு ஆகிய இரண்டு படங்கள். ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல் இங்கே மறு உபயோகத்திற்காக அழைத்து வரப்படுகிறது அது என்னவென்றால் அப்பா எம்.ஜி.ஆர் வெறியர். சித்தப்பா சிவாஜிபித்தர். இந்த இரண்டு பேருக்கு நடுவே நாடும் நகரமும் நசுங்கி விடாமல் காப்பாற்றியவர் அனேகமாக ஜெமினி கணேசன்தான். ஜென் நிலையில் ஜெமினி சிரிப்பது எங்கே பலித்ததோ இல்லையோ என் குடும்பத்தின் அமைதிக்கு வித்திட்டது. மேற்சொன்ன இரண்டு படங்கள் படங்களாக மாத்திரமல்ல அவற்றின் வசன கேஸட்டுக்களாகவும் பாடல் கேஸட்டுக்களாகவும் அப்பர் சித்தப்பர் ஆகிய இருவரும் இணைந்து தென்படுகிற நேரங்களில் எல்லாம் ஒலிக்கப்படும். அப்படிப் பல தடவை கேட்டு இவற்றின் பாடல்களை சின்ன வயதிலேயே மனப்பாடம் செய்து மனப்பரீட்சை எழுதி வென்றோம்.
 
 
ஓஹோ எந்தன் பேபி பாடலை ராஜா போலவே பாடுவதாக நினைத்துக் கொண்டு அப்பாவும் சித்தப்பாவும் அட்ராசிட்டி செய்வார்கள். நிஜத்தைக் கேட்டு ரசித்த பிறகு பாசமாவது மண்கட்டியாவது... அப்பர்..ப்ளீஸ்... நிப்பாட்டுங்க் என்று சொல்லிவிடுவோம். தாட்சண்யமே இல்லாமல் முழுப்பாடலையும் பாடிக்கொண்டே இருப்பார் சித்தப்பர். எங்கள் சொல் கேளாமல் இருப்பதற்காக அவரைக் கடிந்து கொண்டே நகர்ந்து செல்வோம்.
 
 
நிலவும் மலரும் பாடுது சின்னச்சின்னக் கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் போன்ற பாடல்களுமே ஐஸ்க்ரீம் பார்லர் மெனு கார்ட் பதார்த்தங்கள் தான். அதிலும் காலையும் நீயே மாலையும் நீயே என்ற பாடலை மதிய சாயந்திர மழை வெயில் மற்றாங்கே எல்லாமும் நீயே என பூத்துக் கொள்வது வழக்கம். ஒரு பாடல் எத்தனை தடவை ஒலித்தாலும் அதை அணைக்காமல் கேட்பது தான் அந்தப் பாடலுக்கான சாகாவரச் சான்றிதழ்.
 
 
பின் நாட்களில் ஆடாத மனமும் ஆடுதே.. என்றாரம்பிக்கிற களத்தூர் கண்ணம்மா பாடல் மனசை ஆற்றுப்படுத்துகிற முதலாந்தரப் பாடலாயிற்று. இந்தப் பாடல் ஒரு செமி பேதாஸ் மெலடி எனலாம். சோகம் அளவு மிகுந்து விடாமல் இருப்பதற்காக பாடலின் நகர்தலில் ஒரு விரைவுத் தன்மையை அதிகப்படுத்தி இருப்பார் இசையமைப்பாளர். அது நல்ல முறையில் இங்கே சோபித்திருக்கும்.
 
 
ராஜாவின் பாடல்களை உற்றுக் கவனிக்கலாம்.சென்ற நூற்றாண்டின் மித மிஞ்சிய மென் மெலடிப் பாடல்களைப் பாடியவர் ஏ.எம்.ராஜா. அப்படியான பாடல்களை ஒன்று அவர் உருவாக்கினார். அல்லது அவருக்காகப் பிறர் உருவாக்கினார்கள். அதிகதிகம் ஜெமினிகணேசனுக்கும் கொஞ்சம் ஏ.வி.எம்.ராஜனுக்கும் சில பாடல்களை எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிற ஸ்டார்களுக்கும் பாடினார் ஏ,எம்.ராஜா. அவரது பாடல்கள் அதிகதிகம் மெல்லிசைப் பாடல்களாகவே பார்த்துக் கொள்ளப்பட்டன. குழந்தையின் குழைதலுடனும் ஆன்மாவை உதடுகளுக்கு இடம்பெயர்த்துவிட முடியும் என்பதை மெய்ப்பிக்கும் முனைவுகளாகவும் அவர் பாடல்களைக் கையாண்டார். அவரால் இயன்ற அளவு இன்னொருவரால் போலி செய்யவோ நெருங்கவோ கூட இயலாத உச்சதூர நட்சத்திரமாய் ஜொலித்தார் ராஜா.
 
 
அருகில் வந்தாள்.. உருகி நின்றாள்.. அன்பு தந்தாளே.. என்று ராஜா பாடியபோது காண்பவர் எல்லாரும் குளமாய்க் கரைந்தனர். பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடல் ராஜாவை ரிபீட் மோடுக்கு மாற்றியது. அவர் என்ன பாடினாலும் அவை ரேடியோ ஹிட் ஆனது. தாய்க்குப் பின் தாரம் படத்தில் என் காதல் இன்பம் இதுதானா என்ற பாடலை ராஜாவும் பானுமதியும் பாடினார்கள் எம்ஜி.ஆர் பாடல்களிலேயே அழகான பாடல் இது., அல்லது இந்தப் பாடலின் பேரழகாய்த் தோன்றுவார் எம்.ஜி.ஆர். அவரது அளவைத் தாண்டிய அறியாமையை ராஜா உருவாக்கித் தந்திருப்பார் தன் குரலால். இந்தப் பாடலை முழுவதுமாகப் பார்த்து முடிக்கையில் நம்மை அறியாமல் எம்ஜி.ஆருக்காகக் கண்கள் கலங்கும். அதுதான் ராஜகுரலின் வீர்யம்.
 
 
அதிகதிகம் தொடக்க விள்ளலில் சுழற்சி நிகழும் பாடல்கள் ராஜாவுக்கு வழங்கப்பட்டன. நின்று நிதானமாகப் பல்லவி சரணத்தின் இடையிசை நோக்கி நகரக் கூடிய இப்படியான பாடல்களின் சரணங்கள் சிறுவரிகளாக சமரசம் செய்து கொள்ளப்பட்டதும் நிகழ்ந்தது. ராஜா இந்தப் பாடல்களை அனுபவித்துப் பாடினார். கண்ணாலே நான் கண்ட கணமே என்ற பார்த்திபன் கனவு படப் பாடல் ஒரு உதாரணம்.
      
 
கண் பாடும் பொன்வண்ணமே காதல் முத்தாரமே அழகிலாடும் இருவர் பாடும் இனிய சங்கீதமே பாடல் ஒரு கானாம்ருதம். கோவர்த்தனம் இசையில் சகோதரி படத்துக்காக ராஜாவும் சுசீலாவும் பாடியது. லேசான கிறித்துவ பிரார்த்தனை பாடலின் நகர்தலை ஒத்திசைந்து இந்தப் பாடல் நிகழும்.காலத்தைக் கடந்து இன்னும் நம்மோடு ஒலித்தபடி வாழ்கிறது. மனம் என்னும் வானிலே மழை மேகம் ஆகவே ஆசைகள் மேவிடுதே என்ற பாடல் எல்லாரும் இந்நாட்டு மன்னர் படத்திற்காக ராஜா பாடியது. செந்தாமரையே செந்தேன் இதழே பாடல் இன்னொரு உற்சாக ஹிட்.
 
 
ஆயிரம் பாடல்களின் தன்னை மட்டும் தனிக்கச் செய்கிற வித்தையை ஒரு பாடலுக்குள் நேர்த்துவது எது..? அதன் இசையா வரிகளா பாடிய குரல்களா இல்லை கதையின் சூழலா என்பது விடையற்ற கேள்வி. இல்லையில்லை இந்தக் கேள்விக்கு இவை எல்லாமே விடைகள். அந்த வகையில் ராஜா பாடிய கீழ்க்கண்ட பாடல் என் மனமென்னும் மல்டிப்ளக்ஸில் கோடி முறை ஒலித்தாலும் சலிக்காத நற்பாடல். இன்புறுவதற்காகவே இயற்கை தந்த கொடைகளில் ஒன்று இசை என்றால் இது மறுசீர் போல மனிதன் உலகத்தின் மீது படர்த்துகிற மந்திர முத்தம்.
 
 
என்னய்யா கலர்ல படமெடுக்கிறான்..? அந்தக் காலத்ல ப்ளாக் அண்ட் ஒயிட் படமெல்லாம் ஓவியமாட்டம் பேசும் தெரியுமா..? என்று யாரேனும் சொல்லிக் கேட்கையில் கெக்கபுக்க என்று சிரித்திருக்கிறேன். ஆனால் இந்தப் பாடலைப் பார்க்கும்போது ஆமாம்ல என்று நான் சொன்னேன். பதிலுக்கு இந்தப் பாடல் என்னைப் பார்த்து அப்படிச் சிரிக்காமல் தாயன்போடு என்னை அரவணைத்துக் கொண்டது. ஒரு முழுமையான ஜிப்ஸி பாடல் என்றவகையிலும் கவனிக்கத் தக்க இந்தப் பாடலை ராஜாவும் பானுமதியும் பாடிய விதம் மெச்சத் தக்க மென்மலர்ச் சொரிதல். 
 
 
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்த்தை உண்மை தானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
பேசும் வார்த்தை உண்மை தானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
 
நெஞ்சிலே நீங்கிடாதோ கொஞ்சும் இன்பமே
விலகுமா இந்த எண்ணம் எந்த நாளுமே
நெஞ்சிலே நீங்கிடாதோ கொஞ்சும் இன்பமே
விலகுமா இந்த எண்ணம் எந்த நாளுமே
பேசும் வார்த்தை உண்மை தானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
 
உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாறுமோ...
       
 
ஏம்.எம்.ராஜாவின் பாடல்கள் காலத்தின் சிறகுகளின் மீது அமர்ந்து கொள்ளும் சமர்த்துக் குன்றாத இசையுரு ஆச்சர்யங்கள். என்றென்றும் ராஜாவின் குரல் ஆங்காங்கே விலாசங்களுக்குள்ளும் மேடைகளிலும் மாத்திரமல்ல ஒரு காலத்தைத் தாண்டிய அடுத்த காலத்தின் ரசிகர்கள் மனங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிற செல்வாக்கான பாடல்கள். மெலடி என்ற வகையறாவின் மாமன்னன் ராஜா. அவரது சில சங்கதிகள் மனித உருவாக்கத்தை மீறிய அற்புதங்கள். எத்தனை முறை கேட்டால் அது நம் வசமாகும் என்பது மீண்டும் மீண்டும் கரையைத் தேடி ஓடத் தலைப்படுகிற அலைகளைப் போல நம் மனங்களை மாற்றுகிற வசீகர உத்தி தெரிந்தவை அப்பாடல்கள். கேட்போர் மகிழ்வர். வாழ்க ராஜாவின் கானங்கள்.
 
 
[ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்.]
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...