அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 73 - பாட்டு மகேந்திரா -1- ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   07 , 2018  12:43:37 IST


Andhimazhai Image
அழகான புகைப்படங்களை யாராலும் மறக்க முடியாது. ஒரு சிறந்த புகைப்படம் என்பதற்கான காரணமாக அதன் பின்புலம், காலம், அதில் இருக்கும் மனிதர்கள் எனப் பலதும் சொல்லலாம். எனக்குத் தெரிந்த சில வீடுகளில், ஹாலில் எடுப்பதற்குத் தோதான ஒரு இடத்தில், அவர்கள் வீட்டில் நிகழ்ந்த ஒரு திருமணத்தின் ஆல்பம் இருக்கும். பெரும்பாலும், பெண்ணின் பிறந்த வீடுகளில் இப்படிச் செய்வார்கள். ஒரு கல்யாணத்தினால் திடீரென ஏற்படும் சுப வெறுமையைத் தணித்துக் கொள்வதற்கான ரகசிய ஏற்பாடாகவே இதனைச் செய்திருப்பார்கள். வருகையாளர்களின் கையில் தந்து, அவர்களைக் காணச் செய்வது போல், தாங்கள் கண்டு உருகுவதற்கான உபாயம் அது. நின்று போன கடிகாரம் ஒன்றின் முட்களை மானசீகத்தில் நகர்த்திக் கொள்ளுகிற பற்றுதலின் பலவீனம் அந்த ஆல்பமெங்கும் பெருக்கெடுக்கும். 
 
 
இதுவே, பேரன் பேத்தி எடுத்துவிட்ட பிற்பாடு, மறுபடி அந்த ஆல்பம் உள்ளே எடுத்து வைக்கப்படும் என்பது கூடுதல் தகவல். சந்ததியின் ஒரே ஒரு புகைப்படம் போதுமானதாய் இருக்கிறது, எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு. உறைகிற காட்சிகளை மானுட வாழ்வின் மறக்க முடியாத தருண சேகரங்களாக, போற்றுதலுக்குரிய ஒளிப்பட ஆல்பங்களாக, தன் திரைப்படத்தின் பல காட்சிகளைச் செதுக்கினார் பாலு மகேந்திரா. ஒப்பனையின் அதீதமோ, அலங்கார ஆடை அணியோ எதுவுமின்றி சாதாராணமானவர்களின் பிரதி பிம்பங்களாகவே தன் மனிதர்களை உலவச் செய்த பாலு மகேந்திரா, தன் கேமிரா வழியாக வேறாராலும் சாத்தியப் படுத்த முடியாத அழகியலின் உன்னதங்களாகத் தன் காட்சிகளைச் செதுக்கினார். 
 
 
உண்மையிலேயே பாலு மகேந்திராவின் காதல் கேமிராதான், என்றபோதும், கதையாடல்களிலும் அவர் ஜ்வலித்தார்.
 
 
பாலு மகேந்திரா என்ற ஒரு இயக்குனரை எனக்கு ஏன் பிடிக்க ஆரம்பித்தது என்பதே சுவையான ஒரு கதை தான்.முதன் முதலாக நீங்கள் கேட்டவை படத்தின் ஓ வசந்த ராஜா படமாக்கலைப் பார்த்துவிட்டு எனக்குள் சின்னதாய் பித்துப் பிடித்தது.அந்தப் பாடலே ஒரு ஞாபகத் தேசலாய் இருந்தும் மறைந்துமாய் எனக்குள் எங்கோ ஒளிந்து கொண்டது. என் பதினைந்தாவது வயதில் பாலு மகேந்திராவின் படங்களில் நான் முதலாவதாகப் பார்த்தது 'வீடு'. உண்மையிலேயே சொக்கலிங்க பாகவதர் போல் யாராவது எதிர்ப்பட்டால் கூட, அவர்களை நெற்றியால் முட்டியே தகர்த்து விடும் அளவுக்கு ஏனோ பாலு மகேந்திரா மீது வெறி வந்தது. நானோ ரஜினிகாந்த ரசிகன். எனக்கு விவரம் தெரிவதற்குள் நூறு படங்களைக் கடந்து விட்டார் சூப்பர் ஸ்டார். "அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது. புதுப் படத்தப் புதுசா பாக்கறோம். பழைய படத்தப் பதவிசா பாக்கறோம்" என நானும் என் சக ரஜினி மார்லன் ப்ராண்டோவும் முடிவு செய்து வைத்திருந்தோம். அப்படித்தான் திருப்பரங்குன்றம் லட்சுமி எனும் ட்யுரிங் டாக்கீஸில் 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' என்னும் படத்தைப் பார்த்துவிட்டு ஒரு குன்ஸான மனநிலைக்கு வர நேர்ந்தேன். அதாகப்பட்டது, வழக்கத்தை விட மிக அழகான ரஜினி, ஆனால் அடியெல்லாம் வாங்கிக் கொள்ளும் அப்பாவி சாமானியன் ரஜினி. எதோ ஒன்று ஒட்டவில்லை. 
 
 
உண்மையில் 'ரெட்டை வால் குருவி' என்கிற ஒரு குருவியை நான் சந்திக்காமல் போயிருந்தால், "பாலு மகேந்திராவா? யய்யாடி ஆள விடு" என்று கணக்குப் பாடத்துக்கு அடுத்த வீக்னஸாக அவர் படங்களைப் பார்த்தும் குதித்தோடியிருப்பேன். பாலு மகேந்திரா, அலையஸ் பாடல் மகேந்திரா இளையராஜாவிடமிருந்து பாரதிராஜாவை விட ஒரு சிட்டிகை கூடுதலாக, இல்லை இல்லை, சிலபல டன்கள் கூடுதலாக இசையைத் தனக்கென வார்ப்பித்துக் கொண்டவர் பாலு மகேந்திரா. வேறு எந்த இயக்குனரை விடவும் இளையராஜாவை அள்ளி அள்ளி நமக்கு வழங்கியவர் பாலு. வெரைட்டி என்று சொல்லத்தக்க வெவ்வேறு வகையான பாடல்களை இளையராஜா வழங்கினார். 
 
 
உருகிய பொன்மேனியிலிருந்து தொடங்கலாம். காமத்தைக் கையாள்வதிலேயே விரசமெனும் சவுக்கு உடல் தீண்டுமோ என்கிற அச்சம் பெரிதும் எழும். ஆனால், சதா சர்வகாலமும் மடியில் அமர்ந்திருக்கும் நாய்க்குட்டி, தனக்கென்று ஒதுக்கிய இடம் தேடிச் சென்று உறங்குமே அந்த நாய்க்குட்டியாய்க் காமத்தைப் பழக்கிய பாடல்
"பொன்மேனி உருகுதே" - 'மூன்றாம் பிறை'. இதே பாடலின் இசைச் சாயலில், "தாலாட்டுக் கேட்குதம்மா" படத்தில் "யம்மா யம்மா லேடி டாக்டர்" என்ற பாடலை வனைந்தார் இளையராஜா. இரண்டு பாடல்களுக்கும் இடையிலான இன்னும் ஒரு ஒற்றுமை ஸ்மிதா. அளாவுக்கு மிஞ்சினால் அரசாங்கமும் நஞ்சு என்றாகிப் போன பிற்பாடு கத்தியின் மீது, இல்லை இல்லை, பிளேடு நுனியின் மீது, ம்ஹூம், பல கிலோ மீட்டர் நீளமுள்ள ராட்சத ப்ளேடின் கூர் நுனி மீது, அநாயாசமாகப் பயணிக்கிற வசந்த காலக் காற்றைப் போல் காமத்தைக் கையாண்டிருப்பார் இளையராஜா. 
 
 
'நீங்கள் கேட்டவை' படத்தில்  "அடியேய் மனம் நில்லுனா நிக்காதடி" ஒரு திருவிழா காலத்தின் முதல் மனோ நிலை தொடங்குகிற தோற்றுவாயைப் போல் இந்தப் பாடல். சந்தோஷத்தின் சர்க்கரைத் ததும்பலாய், "ஓ வசந்த ராஜா..."இதன் துவக்கம் ஒரு திடீர் மழையின் புதிர் வருகை போலவே நிகழவல்லது. 
 
 
எனக்கு ஜேசுதாஸைப் பிடித்தது, பிரதாப் போத்தனைப் பிடித்தது, ஷோபாவைப் பிடித்தது, வைரைமுத்துவைப் பிடித்தது, இளையராஜாவைப் பிடித்தது, கண்ணதாசனைப் பிடித்தது, கங்கை அமரனைப் பிடித்தது, கமலஹாசனைப் பிடித்தது, அர்ச்சனாவைப் பிடித்தது, மௌனிகாவைப் பிடித்தது, சரிதாவைப் பிடித்தது, ஹீராவைப் பிடித்தது, கல்பனாவைப் பிடித்தது, மோகனைப் பிடித்தது, ராதிகாவைப் பிடித்தது, ஈஸ்வரி ராவைப் பிடித்தது, பிரஷாந்தைப் பிடித்தது, வினோதினியைப் பிடித்தது, அஸ்வினியைப் பிடித்தது, இவர்கள் அத்தனை பேரையும் பிடித்தது பாலு மகேந்திராவால்.
 
 
ஒரு மொழியினுள் இயங்கிய வட்டாரக் கலைஞராகச் சுருக்கிவிட முடியாது என்றபோதும் பாலு தமிழுக்குக் கிடைத்த கௌரவம். மற்ற எல்லோரும் திரைப்படங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, பாலு தன் படங்களை செல்லுலாய்ட் ஓவியங்களாகத் தீட்டினார். மனித வாழ்வின் பிசகுகளை, சுயநலத்தை, ஆண் மையவாதத்தின் துரோகத்தை, கோழைத்தனத்தை, செலுத்தத் துவங்கிய பயணத்தைத் தொடர முடியாத பாதி மாந்தர்களின் குழப்பத்தை, மனந்திருந்திய குமாரர்களின் வித வினோதக் கலவைக் கதைகளை நாளும் தன் படங்களில் கலைத்துப் போட்டபடி இருந்தார் பாலு. 
 
 
தன்னைத் தன் படமொன்றின் மூலமாக மிக மென்மையாகத் தண்டித்துக் கொள்ள பாலு மகேந்திரா முயன்றிருக்கக் கூடும் எனில் அது 'மூன்றாம் பிறை'. சேராமல் போகும்போது காதலுக்கு ஒரு புனிதத் தன்மை வந்துவிடுகிறது. காதலில் வென்றவர்கள் கல்யாண ஆட்டத்தில் தோற்கத் தொடங்கி விடுகிறார்கள். இருபது வருடங்களுக்குப் பிறகு, பாலு மகேந்திராவின் ஆஸ்தான சிஷ்யகோடியாகப் பின்னால் அறியப்பட்ட பாலா இயக்கிய 'சேது' எனும் திரைக் கதையை 'மூன்றாம் பிறை'யின் மறுதோன்றியாகவே சுட்ட இயலும். ஆனால், இரண்டு படங்களுக்கு இடையிலான ஒரு பெரும் பொது வித்தியாசமாக, 'சேது' ஒரு சூன்யத்தில் நிறையும் அதே நேரம், சீனுவின் வாழ்க்கை ஒரு அபத்தமாக, ஒரு அசட்டுத் தனமான உறைகணம் ஒன்றாக முடிந்தது துன்பியலின் பேருரு ஆனது. 
 
 
'சிகப்பு ரோஜாக்க'ளுக்குப் பின் கிட்டத்தட்ட அதே ப்ளாட் கொண்ட இன்னொரு நதியில் வேறொரு மழையாய்த் தனித்த 'மூடுபனி' பிரதாப் போத்தனின் ஒப்பிலா நடிப்பும், இளையராஜாவின் பாடல்களுமாய்த் தான் வருடிய மனங்களைத் திருடியது. "என் இனிய பொன் நிலாவே" ஒரு அற்புதம். இந்திய இசையின் சரிதத்தில் மொத்தமே நூறு பாடல்களைத் தொகுத்தால் கூட இந்தப் பாடல் அதில் இடம்பெறும். தன்னைப் பிடித்து வைத்திருப்பவனிடம் வேறுவழியின்றிச் சிரித்து நடிக்க நேரிடும் நாயகிக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு மெழுகொளிரும் விருந்தின் அதிகதிகமாய், கிடாரைக் கையில் எடுக்கிறான் சந்துரு. தனக்காக ஒரு பாடலைப் பாடச் சொல்லுகிற அவளுக்காக, வரலாற்றைச் சிறப்பிக்கப் போகும் அந்தப் பாடலைத் திரையில் நிகழ்த்துகிறார்கள். 
 
 
எப்போதும் பிரேக்கை அழுத்திக் கொண்டு ஓட்ட நேரிடும் ஒரு மலையிறக்கப் பாதையின் செலுத்தற் கணங்களைக் குரல்வழி நிகழ்த்தினார் தாஸ். சேராக் காதலில் சேர வந்த அனைவரும் "புரியாதோ என் எண்ணமே" என்னும் வரியில் உடைந்து சிதறினார்கள். அதற்குப் பின்னதான "அன்பே" எனும் ஒரு சொல், ஒரே ஒரு சொல் கொண்ட ஒரு மொழியாயிற்று. தன்னைத் தானே பிரார்த்தித்துக் கொள்ளும் நிர்ப்பந்திக்கப்பட்ட கடவுளின் பெயராயிற்று. 
 
 
எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றறிகிற வரையில்தான் ஒரு பேரரசனின் போர்வழி நகர்தல்கள் அமையும். அப்படியானதொரு மறைத்து வைக்கப் பட்ட உணர்வுக் குவியல்களை ஷோபாவின் முக அசைவுகள் வெளிப்படுத்தியது அபாரம். இதே படத்தின் "ஆசை ராஜா" பாடல் ஒரு ராஜ வித்தியாசம் என்பதை ஏற்கனவே கண்ணுற்றோம். கண்ணில் என்ன கார்காலம் பாடல் ஒரு ஆச்சர்யம்.அதன் படமாக்கலை முன் கூட்டி ராஜா யூகித்தாரா அல்லது அட்சரம் பிசகாமல் அந்தப் பாடலின் துவக்கத்தில் மிக லேசாக சந்தோஷப் பிறழ்வாய்த் தொடக்க இசை வருவதை உணர்ந்து அவற்றை மாத்திரம் பாலு மாண்டேஜால் செதுக்கினாரா என்பது புதிரின் விரிதல்.வாழ்வின் நிலையாமையின் பலமான அதிர்வை ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் பெண்தவிப்பையும் ஆடவனின் ஆற்றுப்படுத்தலையும் இசையில் வார்ப்பதும் காட்சியில் கோர்ப்பதும் ஜாலங்கள்.பாருங்கள்.
 
 
மகேஷ் பட்டின் படமொன்றின் மீவுரு "மறுபடியும்" பாலு மகேந்திரா கையாண்ட பெண் பாத்திரங்களிலேயே என் ஞானம் எனக்குச் செப்பிய அளவில், இரண்டு படங்களை, அதில் வரும் இரண்டு வேடங்களை, அதை ஏற்ற இரு நடிகைகளை, அவர்களின் இருஜோடிக் கண்களை, யாரை எங்கே வைப்பது என்று தடுமாறியிருக்கிறேன். இருப்பது முதல் இரண்டு இடங்கள் என்பதால் இரண்டு முதலிடங்கள் இல்லை என்பதால் ஒரு வழியாக, அந்த முதலாவது முக்கியமான இடத்தில் ரோகிணி (மறுபடியும்). அதற்கு அடுத்த அதே இடத்தில் ஜூலி கணபதி' சரிதாவையும் சொல்வேன். 
 
 
அன்பு என்பது நிர்வாகம் சம்மந்தப்பட்ட ஒரு விஷயம். ஒரு புனைவு புனிதமாக மற்றும் வாழ்வியல் நிஜமாக, இருவேறு முகடுகளுக்கிடையில் அலைவுறும் குறளியின் பேர் அன்பு. எனக்கே எனக்கான என்னுடைய நீ, உனக்கே உனக்கு மட்டுமான உன்னுடைய எனக்கு, எதை எப்படி, எங்கனம் தரவேண்டும் என்பதை சதா வரையறுத்துக் கொண்டே இருக்க விழையும் எண்பது சதவிகித சாத்தானின் பேர் அன்பு. 
 
 
உண்மையில், அன்பாய் இருப்பதென்பது மனிதன் மீன் வளர்ப்பதைப் போன்றது. தொட்டிக்கு வெளியே இருக்கும் தனக்கு, தொட்டிக்குள் இருக்கும் அத்தனையும் சொந்தம் என்று நம்புவதும், நம்ப விரும்புவதும், நம்ப வைக்க விழைவதுமாக, அன்பென்பது அபத்தக் கூத்து. இருபது சதவிகிதக் குழந்தைமை ததும்பும் செல்லத் தீவிரவாதம் அப்படியானதொரு அன்பு, போதைப் பற்றுதலின் உள்ளாழ நெடுந்தூரம் போலவே நிகழுமாயின் சர்வ தருணம் சதா ரணம். 
 
 
ஒரு பாடலில், ஒரு கருவியின் பயன்பாடு ஏன் என யோசிக்கிறோமா? ஒரு பாடலில், ஒரு இசைக் கோர்வையின் தன்மையைப் பின்பற்றிச் செல்லுகிறோமா? ஒரு பாடலில், ஒரு குரலின் போக்கை ஏன் என அறிந்து கொள்ளுகிறோமா? உண்மையில் படமும், பாடலும் பண்ணிப் பண்ணி ஒட்டவைக்கப் படுகிற இரு வேறா? இல்லையெனில், ஒரு பாடல் ஒரு படத்துக்குள் நிகழ்த்தப் படுகிறதா? 
 
 
"ஆச அதிகம் வெச்சு" பாடலின் தொடக்க இசைக்கு வாருங்கள். இந்தப் பாடலோடு நான் வேறொரு பாடலை நான் இங்கே சற்றே யோசித்துப் பார்க்கிறேன். "பறவைகள் பலவிதம்" பாடல் போக்கும் இதன் பாடல் போக்கும் மிக அழகாகப் பொருந்திப் போவதை உணர முடிகிறது. ரோகிணி கதாபாத்திரத்தின் மையத் தன்மையான பிடிவாதமாக இந்தப் பாடல் தொடக்கம் அமைந்திருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். தான் செய்வது இன்னதென்று மிக தீர்க்கமாக அறிந்த பிற்பாடு, அதன் நன்மை தீமைகள் குறித்து, தயக்கமோ ஊசலாட்டமோ இல்லாமல், மிக தீர்க்கமாக ஒரு செயலைச் செய்கிற நார்சிஸம் பொங்கும் ஒரே ஒரு ஒருத்தியின் சுய வாதங்களாக இந்தப் பாடலெங்கும் "நான் நான்" என்று வருவதை உணரலாம். "ஐம் நாட் சிங்கிள், ஐம் ஐடில்" என்று ஒரு வரி வரும். அந்த வரியைப் பெண் பாத்திரமாக்கியிருப்பார் பாலு மகேந்திரா. அந்தப் பாத்திரத்தில் தன் இசையை ஊற்றி, ஜானகி எனும் ஜாலக் குரலால் பாடலாக்கியிருப்பார். சமரசமற்ற சமரசம் ஒன்றாக இதன் ஈற்றுச் சொல்லாக ஒரு "செல்லக் குட்டி" என்று வரும். உண்மையில், தமிழ் சினிமா முன்னும் பின்னரும் பார்த்த அத்தனை செல்லக் கதாபாத்திரங்களுக்கு மத்தியில், நிதர்சனமான தன்னிகரில்லா பங்கேற்பாக ரோகிணியின் பாத்திரம் அமைந்திருக்கும். 
 
 
சரிதாவுக்குப் பயமுறுத்த மட்டுமே தெரியும். உலகிலேயே தன்னைப் பார்த்துத் தானே அஞ்சுகிற விழிகள் அவருக்கு மாத்திரமே உண்டு. சரிதாவின் காவியக் கருநிறமும் இந்த உலகின் மிக அழகான அவரது கண்களும், அவரது குரலும், தவிர அவரும் வேறெப்போதும் வேறார்க்கும் கிட்டாத சாத்தியங்கள். 'ஜூலி கணபதி' திரைப்படத்தை மதுரை அமிர்தம் திரையரங்கத்தில் பார்த்தேன். 
 
 
ராமன் அப்துல்லா படத்தில் எல்லாப் பாடல்களுமே தேன் கோட்டட் வகையறா தான். அந்தப் பேருக்காக மிகவும் எதிர்த்தார்கள். பேரை மாற்றுமாறு அழுத்தம் தரப்பட்டது. 'அப்துல் ராமன்' என்று வைக்கப்பட்ட பெயர், 'ராமன் அப்துல்லா'வாக மாறி வெளியானது. ஒருவனுக்குப் பதிலாக இன்னொருவன், அவனது வேடத்தை ஏற்று அதனால் ஏற்படும் சிக்கல்களையும், முடிச்சுகளையும் அவிழ்த்து சுபமாக முடியும் வெகு சாதாரணக் கதைதான். 
          "என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இள நெஞ்ச தொட்டுத் தொட்டு நீ சாய்க்குற..." இந்தப் பாடலையும் "செம்பருத்திப் பெண்ணொருத்தி..." இந்தப் பாடலையும் அடுத்தடுத்துக் கேட்கும் போதெல்லாம் ஒரு பெருவிருந்துக்குப் பின்னதான இசைமறுக்கிற அயர்ச்சியில் மனம் ஆழ்வதை எத்தனை பேர் உணர்ந்தீர்களோ நான் உணர்ந்தேன். அப்படியான சமயங்களில் இவற்றைக் கேட்ட பிறகு ஒரு சின்ன டைம் இடைவெளிக்குப் பிறகு வேறோரு காலத்தின் மற்றும் பிற பாடல்களைக் கேட்டபடி தான் இசைக்குள் நுழைய முடியும்.
 
 
சதி லீலாவதி படத்தில் ராஜ்ஜனோடு ராணி வந்து சேரும் பாடலை அதன் பின் இசையைத் தனியாக எடுக்கவும். குரல்வழி பாடலை தனியாக அகற்றவும்.இப்போது இரண்டையும் தனித்தனியே கவனித்தால் இரண்டுமே ஒரு விட்டுக்கொடுத்துபொறுமை காக்கும் சிச்சுவேஷன் டிபெண்டன்ஸியை பிரதிபலிக்கிற ஆகச்சிறந்த முரண்கள் என்பதை கண்டுணரலாம். அபூர்வமான பாடல் இது.
 
 
இரண்டு பின் குறிப்புகள்:
 
 
1 'கோகிலா,' 'யாத்ரா', ஊமக்குயில், 'அழியாத கோலங்கள்', 'ஓளங்கள்' இந்த 5 படங்களை அவற்றின் பாடலிசை மற்றும் பின்னணி இசை ஆகியவற்றோடு தனி அத்தியாயத்தில் பார்க்கலாம்.
 
2. சத்மா(ஹி), அவ்ர் ஏக் ப்ரேம் கஹானி நீரக்ஷனா ஆகிய படங்களை இன்னொரு தனி அத்தியாயத்தில் பார்க்கலாம்.
 
 
 
(ஆத்மார்த்தி, தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் 
இசையைத்தேடி   அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...