அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பட்னாவிஸ் துணைமுதல்வர் - பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 76 - தேவியின் பாடல்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   06 , 2018  12:16:12 IST


Andhimazhai Image
இது ஒரு நிமித்தத்தின் பின்னதான எபிஸோட். நடிகை ஸ்ரீதேவி தண்ணீரில் மூழ்கி துபாயில் காலமானார் என்ற சேதி கேட்டதும் உடம்பெல்லாம் ஒரு கணம் நடுங்கிற்று. ஸ்ரீதேவிக்குமா மரணம் வாய்க்கும் என்றெல்லாம் பிதற்றிய படி என் வாழ்வில் ஸ்ரீதேவி எனும் பிம்பத்தை எப்படியெல்லாம் நோக்கியிருக்கிறேன் என்று மனம் முழுக்க நினைவுகள். முகப்புத்தகத்தில் முதல் நாள் ஸ்ரீதேவி எனும் பிம்பத்தை வழிபட்டு முடித்தார்கள். அடுத்த தினம் குடித்துவிட்டு இறந்தார் என்பதைத் தொடங்கித் தத்தமது அறக் கண்ணாடிகளால் அவர் வாழ்வின் முடிவை அளந்து மதிப்பெண் வழங்கி வகுப்பெடுக்க ஆரம்பித்தார்கள்.
 
 
ஸ்ரீதேவி ஒரு புன்னகையின் பெண் உரு. தனக்கான புன்னகையை தனித்துவமாக உருவாக்கிக் கொள்கிற பெண்மணிகள் வரலாற்றில் சிறக்கிறார்கள். குழந்தை நட்சத்திரமாக கேமிரா பற்றிய பயம் வெகு சிறுவயதிலேயே விலகியதன் நற்பலனாக கேமிரா பற்றிய ஞானம் கைவரும். கூடவே எப்படி நிற்பது நடப்பது எங்கே எப்படி என்ன செய்தால் திரையில் என்னவாய்த் தோன்றுவோம் என்கிற மாயசமன்பாடுகளைப் புரிந்துகொள்வது ஆகியன அப்படி சிறுவயது நடிகவருகையின் மேலதிக நலன்கள். ஸ்ரீதேவிக்கு முதல் ஐம்பது படங்களில் அவர் பெயரும் தோற்றமும் ரசிக மனங்களில் ஆழப் பதிய ஒரு ஆதாரமாய்ப் பெருக உதவின. பிற்பாடு தன் ஒவ்வொரு அசைவையும் தானே நிர்வகித்துக் கொண்டார்.
 
 
பதின்ம வயதிலேயே காதல் ததும்புகிற காட்சிகளிலும் குடும்ப சமூக சிதறல்களும் உணர்வுச் சமர்களும் நிரம்பிய வீர்யமான கதைநிகழ்வுகளிலும் மிளிரவே செய்தார் ஸ்ரீதேவி. அவரறியாமலேயே அவர் தோன்றுகிற காட்சிகளில் ஒரு சிறிய வசனம் கூடப் பேசாத சிற்சில சட்டகங்களில் கூடப் பார்வையாள மனதைத் தன்வயப்படுத்துவதை நிகழ்த்த ஆரம்பித்தார். இது ஒரு நடிகரை அல்லது நடிகையைப் புகழ்வதற்காகச் சொல்லப்படுகிற எளிய வாக்கியம் போலத் தோன்றும். வரலாற்றில் இப்படியான சிறப்பைப் பெற்ற நடிகர்கள் மிகமிகக் குறைவே. எம்.ஆர்.ராதா எஸ்.வி.சுப்பையா, ரங்காராவ், சந்திரபாபு போன்ற குணக்கலவை நடிகர்கள் வரிசையில் இடம்பெறத் தகுந்த சொற்பமான நடிகைகளில் ஸ்ரீதேவியும் ஒருவர் என்பது மகாகனம் பொருந்திய சிறப்பு. இந்த இடத்தில் இன்னொரு நடிகையை அப்படிச் சொல்ல முடியும் எனில் சாவித்ரி என் நினைவின் நிழலில் ஆடுகிறார். ஸ்ரீதேவிக்குப் பிறகு அப்படி ஒரு நடிகையின் வருகை இன்னமும் நடந்துவிடவில்லை என்பது ரசமான வேதனை.
 
 
நடிக லட்சணம் என்ன..? ஒரு கதாபாத்திரத்தின் மெய்மைத் தன்மைக்குள் தான் புகுந்து கொள்வது. ஒரு பாத்திரத்தில் நீர்மத்தை ஊற்றுகிறாற் போலத் தன்னால் அதனை நிரப்புவது. அதில் தன் சுயத்தை தேவையற்ற ஒரு துளியைக் கூடக் கலக்காமல் பார்த்துக் கொள்வது ஒரு தகுதி என்றால் அந்த பாத்திரத்தின் குணாம்சங்களை ஒரு சிட்டிகை கூட அதிகரித்து விடாமல் இயல்பின் அதே நளின எல்லைகளுக்குள் நின்றுகொள்வது இன்னொரு தேவை. மேலதிகமாகத் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதுவரைக்குமான தன் பிம்பத் தொடர்ச்சியை ரத்து செய்து தற்போதைய ஒரே ஒரு ஒற்றையாக ஏற்றிருக்கிற கதாபாத்திரத்தை மட்டும் அவர்களின் நம்பகத்தினுள் செல்வாக்குப் பெறச் செய்வது நடிகமேதமை. இவை எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்பவர்கள் புகழ் பெற்றார்கள். இவற்றைத் தாண்டிய இன்னொரு அபூர்வ ஞான முகடு உண்டு. அதுதான் அறியாமையை நடிப்பது.
 
 
எந்த அறிதலையும் கற்றுக் கொண்டு போலச் செய்வது துருத்திவிடாமல் நடிப்பதென்பது தொழில்முறை நடிகர்களுக்குக் கலையாய்க் கைவரும். சிக்கல் எதுவெனில் அறியாமையை IGNORANCE மற்றும் வெறுமையை EMPTYNESS காண்பவர் நம்பும் அளவுக்கு பரிமளிப்பது தான். இதனை ஒரு சவால் போலச் செய்பவர்கள் ஓவர் ஆக்டிங் எனப் படுகிற மிகைபரிமாணத்தின் கிணற்றினுள் விழுந்து விடுகிறார்கள். அப்படிக் கடக்க வேண்டிய சிற்றாறைத் தவிர்த்துக் கேணியுள் அலைந்தவர்கள் அனேகர். வெகு சிலரே இந்த அபூர்வமான சின்னஞ்சிறிய முகட்டைத் தன்வயப் படுத்தி வென்றவர்கள்.
 
 
காயத்ரி, மூன்றாம் பிறை, ப்ரியா, சிகப்பு ரோஜாக்கள் எனத் தன் பல படங்களில் மேற்சொன்ன அறியாமையின் பல்வேறு பரிணாமங்களை அனாயாசமாக நிகழ்த்தி இந்தியாவின் நடிகமகளாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் ஸ்ரீதேவி. எல்லோருக்கும் உரித்தான ஒரு புன்னகையும் செல்வாம்சம் குழைகிற செல்லப்ரியம் பொங்கி வழிகிற குரலும் சட்டென்று பல்வேறு இடங்களில் சிதறித் திரும்புகிற பூமராங் கண்பாவங்களும் ஸ்ரீதேவியின் தனித்த முத்திரைகளாகின. அவர் பெயர் சொல்லும் படங்கள் அதிகதிகம் வந்தன. காலகட்டத்தின் நாயகியானார் ஸ்ரீதேவி.
 
 
 
உடனாடுபவர் சாட்சாத் அந்தக் கமல்ஹாசனே ஆனாலும் ஐ டோண்ட் கேர் என்றாற் போல நடன அசைவுகளால் அவரை கையாளுகிற ஒரே நடிகையாக ஸ்ரீதேவியைச் சுட்டமுடிகிறது. கூட நடிக்கிற அனைவரையும் தன் ஆளுமையால் கட்டுப்படுத்துவதை அறிந்தும் அறியாமலும் நிகழ்த்துகிறவர் கமல். அந்த அளவில் ஸ்ரீதேவி ஒருவர் தான் கமலின் அதிர்வுகள் எல்லாவற்றையும் சமாளித்துத் தனித்துவமாய்த் தொடர்ந்து பிம்பமாய் நிலைபெற்ற நடிகை.
 
 
எந்த மொழியில் நடித்தாலும் அந்த நிலத்தின் அடுத்த வீட்டுப் பெண் தோற்றம் அவரது வெற்றிக்கு மாபெரிய காரணமாயிற்று. ஸ்ரீதேவி அளவுக்கு தென் நிலங்கள் அனைத்திலும் வென்றெடுத்து இந்தித் திரையுலகம் சென்று இந்திய சினிமா நிலம் முழுவதையும் தன் குடையின் கீழ் கொணர்ந்த இன்னொரு நடிகர் இல்லவே இல்லை. இது அவருக்கு மாத்திரம் சாத்தியமான அற்புதம் என்றே நம்பப் படுகிறது. ஸ்ரீதேவி தன்னை நிகழ்த்திக் கொண்ட நடிகை என்பது ஊர்ஜிதமாகிறது.
 
 
பகலில் ஒரு இரவு படம் ஸ்ரீதேவியின் திரைவாழ்வில் முக்கியமான படம்,. இளமை எனும் பூங்காற்று எனும் பாடல் ஸ்ரீதேவி என்ற சிற்பத்தினுள்ளே இருக்க வாய்க்கிற தெய்வாம்சத்தைப் பாடல்வழி தேடியலைகிற கானவலம். எத்தனை ஆயிரம் முறை கேட்டிருப்போம்தானே..? இந்தப் பாடலின் சூழல் இதன் சொற்கள் இதற்கான இசை. எல்லாவற்றுக்கும் மேலாக """"". கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழுமுன் விழுந்தாள் எந்த உடலோ எந்த உறவோ""""""" இந்த வரிகளுக்குப் பின்னே இருக்கக்கூடிய அர்த்தமற்ற அர்த்தம் ஸ்ரீதேவியின் மரணத்தோடு ஒட்டிச் செல்வதை என்னவென்பது..? இந்தப் பாடலுக்கான அமானுஷ்யம் ததும்புகிற இசையாகட்டும் பாடியவிதமாகட்டும் எல்லாவற்றுக்கும் மேலாக கோரஸ் எனப்படுகிற உடனொலிகளாகட்டும். இந்தச் சூழலில் கேட்க முடியாத ஒரு பாடலாக இதனை ஆக்குவது எது..? வருடங்களுக்கு முன்பாகவே நிகழ்ந்து இந்தத் தாரகையின் முடிவுக்காகக் காத்திருக்கிறதா இந்தப் பாட்டெனும் குறளி..? தன் குருதியைத் தானே தாகித்தலையும் தீராப்பறவை தானோ இந்தப் பாடல்..? கண்ணதாசனன்றி வேறாரறிவார் இதற்கான சூட்சுமத்தை?
 
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம் .. 
ஒரே வீணை ஒரே ராகம்
 
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம் ..
 
தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா
 
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம் ..
 
அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய்த் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழுமுன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ
 
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம் ..
 
மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ
 
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம் ..
 
 
இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது பாடல் எழுபதுகளின் மத்யமப் பெண் தன் வாழ்வின் ஆக உச்சமான தைர்யத் தேடலாகச் செய்துபார்க்க விழைகிற காதல் என்ற சுயநலக் குற்றத்தின் படபடப்புச் சாட்சியம். சபிக்கப்பட்ட பதுமை மெல்ல ஆசீர்வாதத்தின் பேரொளிக்குள் வந்து சேர்வதைப் போல இந்தப் பாடலில் ஒரு பட்டாம்பூச்சியாகவே படபடத்துத் திரிவார் ஸ்ரீதேவி.
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வாவா. ரஜினி எத்தனை அழகு என்பதை முதன்முதலில் மெய்ப்பித்தது ஸ்ரீதேவியுடன் ஜோடியாக அவர் நடித்த போது தான். அதிலும் இந்தப் பாடல் தனிமை வனாந்திரத்தில் தானும் தன் காதலுமாய்த் திரிகிற எல்லோருக்குமான உற்சாகமாலை.
 
 
பேரைச்சொல்லவா அது நியாயமாகுமா என்ற பாடலும் மேற்சொன்ன அதே காந்தின் இன்னொரு காந்தப்பாடல். அண்டர்ப்ளே என்று சொல்லத்தக்க விட்டுக் கொடுத்துப் பரிமளிக்கிற நுட்பத்தை ஸ்ரீதேவியின் கண்களில் தொடங்கி உடல் மொழி வரைக்கும் உணர்த்திய படமும் பாடலும் இது.
கவரிமான் படத்தில் நடிகர் திலகத்தின் செல்வமகளாக ஸ்ரீதேவி. தன்னைப் புரிந்து கொள்வதற்காக ஏங்கி புலம்புகிற இந்தப் பாடல் மகள்களுக்கான தந்தையர்பாடல்களில் தலையாயது. பூப்போலே என் புன்னகையில் மழை தருமோ என் மேகம் என்றாரம்பிக்கிற மனிதரில் இத்தனை நிறங்களா படத்தின் பாடலை மறக்கவா முடியும்..?
 
 
தர்மயுத்தம் படத்தின் ஆகாய கங்கை பூந்தேன் மலர்ச்சோலை இந்தப் பாடலின் ஹம்மிங்கைத் தன்னாலான அளவு தனதாக்கி இருப்பார் தேவி. தேவியின் கையொப்பம் ஹம்மிங்கானால் என்ன..?ஆளவந்தது ஆண்டு தீருமல்லவா.?
 
ஒரு காதல் தேவதை ஒரு கன்னி மாதுளை ஸ்ரீதேவியின் ஆரம்ப கால ஆச்சர்யங்களில் ஒன்று., 
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ என்ற பாடலில் அலைந்த அந்த இல்லாமன்னன் இறுதிவரைக்கும் வராமற் போனான் என்பது தான் சோகம். ஒருவகையில் ஸ்ரீதேவிக்கு நிகரான மன்னன் கிடைக்காமல் இருப்பதே அப்படி ஒரு தேவிக்கான அழியாப்புகழ் என்பது சோகச்சுகம். ஹேய் பாடலொன்று மற்றும் டார்லிங் டார்லிங் ஆகியன ப்ரியா படத்தின் ஸ்ரீதேவி பாடல்களில் இரண்டு.
 
 
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா என்ற வாழ்வே மாயம் பாடல் ஒரு சந்தோஷவெல்லம்.உற்சாகவெள்ளம். என்று கேட்டாலும் சர்வாங்கமும் துள்ளும். தன் உச்சபட்ச மலர்தலை ஸ்ரீதேவி படர்த்திய பாடல் இது.  நீலவான ஓடையில் என்ற இன்னொரு அழியாப் பாடலும் ஸ்ரீதேவிக்கே சொந்தம். ஸ்ரீதேவியின் பல காதல் பாடல்கள் ஒரே காணொளியில் இங்கே கிடைக்கிறது. 
 
 
தான் செய்த சாதனைகளை அவர் அறிவார். தன்னை ஒருபோதும் இந்த உலகம் மறக்காது என்பதும் தேவி அறிந்ததே. தவிர்க்க முடியாத ஆளுமைகள் மறக்க முடியாமலும் பேருருக் கொள்வதென்பது மனித வாழ்வின் சாகசம். அதனைத் தன் பதின்ம வயதிலேயே சாதித்தவர் ஸ்ரீதேவி. ஷண நேரத்தின் பல்லாயிரம் சொற்களைப் பேசிவிட்டு ஊமையாகவே நடிக்கிற லாவகமான ஒப்புமை எதுவும் அற்ற ஏகாந்தவிழிகள் ஸ்ரீதேவியின் ஞாபகங்களாய் பல்லாயிரம் கோடி ஆண்டுகள் நிரந்தரிக்கும். வாழ்க ஸ்ரீதேவியின் புகழ்.!
 
 
(ஆத்மார்த்தி, தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி   அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)

English Summary
Pulanmayakkam - 76

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...